இது என் AREA அல்ல.( பட்டினத்தார்)
-----------------------------
அவர் பிச்சை பெற்று வந்ததை கல் தரையின் மீது வைத்துச் சாப்பிட்டுக்
கொண்டிருந்தார். அவரிடமே வந்து ஒருவன் பிச்சை கேட்டான். அவர் சிரித்து கொண்டே
‘நான் ஒரு சன்னியாசி ஒன்றுமில்லாத ஆண்டி. என்னிடத்தில் உனக்குக் கொடுக்க
ஏதுமில்லை. அதோ மேலைக் கோபுர வாசலில் இருக்கிறான் என் சீடன்.சம்சாரி. சோற்றுச்
சட்டி மட்டுமல்லாமல் கூடவே ஒரு நாயையும் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான்.
அவனிடம் போய்க் கேளுங்கள்’ என்று கை காட்டி விடுகிறார்.
இதைக் கேட்ட அவர் சீடன் ஓடிவந்து ‘சுவாமி, என்னைப்
போய் சம்சாரி என்கிறீர்களே’எனக்கேட்டார். ‘உனக்கென ஒரு திருவோடும் நாயும் உடைமைகளாக
உள்ளது.எனக்கென என்ன உள்ளது .?’ என்று வினவ அந்த சீடர் ‘குடும்ப வாழ்க்கையை வெறுத்து அரசையும் இன்ன
பிறவற்றையும் துறந்து விட்டபின்னும் இந்தத் திருவோடும் நாயுமல்லவா என்னை
சம்சாரியாக்கி விட்டது’
என
வருந்தி தன் கையிலிருந்த திருவோட்டைத் தூக்கி எறிய அது நாயின் மேல் பட்டுத்
தெறிக்க திருவோடும் உடைந்தது நாயும் மடிந்தது.
இதில் முதல் ஆண்டி பட்டினத்தார் என்று அறியப்
படுபவர். அவரது சீடன் எனப்படுபவர் பத்ருகிரி என்று பெயர் பெற்ற அரசன். உஜ்ஜயினியை
ஆண்டு வந்தவர். லௌகீகம்,நீதி மற்றும் ஆன்மீக விஷயங்களில் கூர்மையான ஞானம் உள்ளவராக
இருந்தார்.
மன்னனின் மாளிகையில் பொன்னும் மணியும் ரத்தினமும்
மலிந்திருந்தன. கள்வர்கள் சிலர் இந்த அரண்மனைச் செல்வங்களைக்
கொள்ளையிடதிட்டமிட்டனர். களவுப் பணிக்குச் செல்லும் முன் காட்டுப் பிள்ளையாரை
வணங்கி விட்டுத் தம் களவுப்பணியினைச் செய்வர்.அவ்வாறாக அரண்மனைப் பொக்கிஷத்தில்
கொள்ளையடித்த பொன் பொருளையெல்லாம் எடுத்துத் திரும்பும் வழியில் நள்ளிரவு
நேரத்தில் அக்கள்வர் ஒரு முத்து மாலையை காணிக்கையாகக் காட்டுப் பிள்ளையாரை நோக்கி
எறிந்து சென்றனர். அந்த முத்து மாலை குறி தவறி அங்கு தியானத்தில் ஆழ்ந்திருந்த
பட்டினத்தாரின் கழுத்தில் விழுந்தது. தம்மை மறந்த மோன நிலையில் இருந்த
பட்டினத்தார் இதை உணரவில்லை. பிறகென்ன.? களவு போன பொருட்களைத் தேடிவந்த காவலர்கள்
பட்டினத்தாரின் கழுத்தில் இருந்த முத்துமாலையைக் கண்டு அவரது தியானத்தைக் கலைத்து
முத்துமாலை பற்றிக் கேள்விகள் கேட்க ஏதும் கூற முடியாமல் தவித்த பட்டினத்தாரே
கள்வரின் தலைவர் என்று அரசனிடம் அழைத்துச் சென்றனர். பட்டினத்தாரின் மௌனம் அரசனை
அவரே கள்வன் எனத் தீர்மானம் செய்ய வைத்தது. அவரைக் கழுவிலேற்ற ஆணையும்
பிறப்பித்தார்.
பட்டினத்தாரை விடிந்தால் கழுவிலேற்றப் போகும்
விபரத்தைத் தன் பட்டத்து ராணியிடம் தெரிவிக்கச் சென்றவர் ராணியைக் காணாததால் ஏதோ
ஒரு உந்துதலால் குதிரைலாயத்தின் பக்கம் சென்ற மன்னரின் பார்வை அங்கு அசுவபாலன்
என்னும் குதிரைக்காரன் மடியில் ராணி படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார்.மேலும்
ராணி குதிரைக்காரனிடம்தான் அவனுக்குக் கொடுத்த கனியை உண்டீர்களா என்று கேட்டார்.
அதற்கு அவன் தான் உண்ணவில்லை என்றும் அதை அவன் ஆசை நாயகிக்குக்
கொடுத்துச்சாப்பிடச் சொன்னதாகவும் கூறுகிறான். அந்தப் பெண் அந்தப்புர நாயகி என்ற
முறையில் அதை அரசனுக்குக் கொடுதிருந்தாள். அக்கனியை முனிவர் ஒருவர் தனக்குக்
கொடுத்து அதனை உண்டவர் நீண்டகாலம் இளமையுடன் இருப்பார் என்று தெரிவித்ததும், அதை
அவர் ராணிக்குக் கொடுத்திருந்ததும் நினைவுக்கு வந்தது
பட்டத்து ராணியின் வஞ்சகச்செயல் மன்னரை வெகுவாக
பாதித்தது. மேலும் பட்டினத்தாரை கழுவேற்ற அவர் போட்டிருந்த உத்தரவும் அவரை உறங்க
விடாமல் செய்தது.
விடிந்தது.கழுமரம் தயாராய் இருந்தது.
பட்டினத்தாரைக் கழுவில் ஏற்றினார்கள். உலக சிந்தனை துறந்து சதா சிவ சிந்தனையில்
இருக்கும் பட்டினத்தார் மனமுருகி சிவனை நினைத்து
‘என் செயலாவது யாதொன்றுமில்லை இனித் தெய்வமே
உன் செயலே என்று உணரப் பெற்றேன் இந்த ஊனெடுத்த
பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை பிறப்பதற்கு
முன் செய்த தீவினையோ இங்ஙனே வந்து மூண்டதுவே’
எனத் தொடங்கும் பாடலைப் பாட கழுமரம் தீப்பற்றி
எரிந்தது. அரசன் பட்டினத்த்தாரிடம் மன்னிப்புக் கேட்டான்.பட்டினத்தடிகளுக்கு
பத்ருகிரியார் ஞான வழியில் பக்குவமடைந்து இருப்பது மற்றும் அவர் குறிப்புணர்ந்த
பட்டினத்தடிகள் மன்னரின் பட்டத்து ராணி அவரை ஏமாற்றி வருவது தெரிந்தது.
வாரிசில்லாத உஜ்ஜயினி ஆட்சியை மந்திரியிடம்
ஒப்படைத்து விட்டு ‘எல்லாம் துறந்தேன் இனி நான் உங்கள் சீடன்’என்று கூறி அவரைத் தொடர்ந்தார்.
அவர்கள் நடந்து வந்து கொண்டிருந்தபோது பட்டத்து
ராணியின் சடலம் ஒருகுதிரை மேல் வந்து கொண்டிருந்தது. ராஜத் துரோகமிழைத்த
குற்றத்துக்காக மக்கள் ராணியைக் கல்லால் அடித்துக் கொன்று விட்டார்கள்.
பத்ருகிரியின் அருகில் வரும்போது அச்சடலம் அவர் காலடியில் விழுந்தது. அதை விட்டு
விலகி அவர் பட்டினத்தாருடன் நிர்விகல்பமாக சென்று கொண்டிருந்தார். இருவரும் நடந்து
செல்கையில் இரவு உஜ்ஜயினி காளி கோவிலை அடைந்தனர். அங்கு தங்கி இருந்த போது
நாய்க்குட்டியின் சப்தம் கேட்கவே இருவரும் போய்ப் பார்த்தனர். பத்ருகிரியார் அந்த
நாய்க்குட்டியைப் பார்த்ததும் ’சுவாமி, இதை எங்கோ
பார்த்தமாதிரி இருக்கிறதே’ என்றார். தன் ஞானசக்தியால் அது பட்டத்து ராணியின் மறுபிறவியே என்று
தெரிந்து கொண்ட பட்டினத்தடிகள் அதைத் தன் கையில் எடுக்கவே அது இறந்து போனது.
ஞானியின் கைபட்டவுடன் பாவப் பட்ட ஜன்மம் புனிதமடைந்து விடுகிறது. குட்டியை இழந்த
தாய் நாய் மட்டும் அவர்களைப்பின் தொடர்ந்து வந்தது.
கதைகள் கதைகள் கதைகள்...........! .ஒருவரைப் பற்றித் தெரிந்து
கொள்ள முயற்சிக்கும்போது அவர் குறித்த கதைகள் முன் வந்து நிற்கின்றன.
பட்டினத்தாரின் துறவு பற்றிக்கேள்விப்பட்டு அதை பற்றிய விவரங்களை அணுகினால் அவர்
குபேரனின் பிறப்பு என்றும் சிவபெருமான் வெள்ளிப்பனிமலை மீது உமாதேவியுடன் இருந்த
திருக்கோலத்தை குபேரனுக்கு பல இடங்களில் காட்சிதந்து வரும்போது குபேரன்
திருவெண்காட்டுக்கு அருகில் காவிரிப் பூம்பட்டினத்துக்கு வந்தபோது அதன் செழிப்பில்
மதி மயங்கிக் கிடப்பதை பார்த்ததும் சிவபெருமான் ‘நீ மானுடப் பிறவி எடுத்து
திருவெண்காட்டில் உறையும் எம்மை வணங்கி வேதியர் ஒருவரிடம் தீட்சை பெற்று உரிய
நேரத்தில் முக்தி அடைவாயாக’ என்று ஆணையிட்டார்.
‘பூவுலக மாந்தர்தம் மையலில் சிக்குண்டு அழியா வண்ணம் அடியேனைத்
தடுத்தாட்கொள்ள வேண்டும் ‘ என்று குபேரன் வேண்ட். இறைவனும்
‘மோகத்தீயில் நீ சிக்குற மாட்டாய். பூவுலகிலும்
குபேரனைப் போலவே வாழ்ந்து, அனைத்தையும் துறந்து ஞானம் பெற்று எம்மை அடைவாய்’ என்று கூறி மறைந்தார்.
பட்டினத்து அடிகளின் பாடல்களை ஆராய்ந்தவர்கள்
பத்தாம் நூற்றாண்டிலும் பதினேழாம் நூற்றாண்டிலும் இரு வேறு பட்டினத்தடிகள்
வாழ்ந்திருக்கலாம் என்று கருதுகிறார்கள். இது இப்படி இருக்க பன்னிரு திருமுறை
வரிசையில் பதினோறாம் திருமுறையில் வைத்துப் போற்றப்படும் படைப்புகளின்
நற்சிந்தனைக்காக அறியப் படுவதே நலம் என்று கருதி வாசிக்க முற்பட்டால் , மேலே சொன்ன
கதைகள் சிந்தனையை இடருகின்றன.
ஆக பட்டினத்தாரின் வாழ்க்கையை அறிய முற்படுவதை விட
அவர் எழுதிச் சென்ற பாடல்களை ரசிப்போம். அதில் இருந்து கிடைக்கும் சாரங்களை
ருசிப்போம்.
பட்டினத்தாரைப் பற்றி படிக்கத் துவங்கும் முன்
அவர் துறவு மேற்கொள்ளக் காரணமான ஒரு ஓலை நறுக்கில் கண்ட வாசகமே முன் நிறுத்தப்
படுகிறது. “காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே”என்ற இந்த வார்த்தைகளே அதிகம்
கூறப்படுகின்றன. இன்றைய சிறார்களும் அறிந்து கொண்டிருப்பதே இறக்கும் போது எதையும்
கொண்டு செல்ல முடியாது என்று. இருந்தாலும் சில வார்த்தைகள் சிந்தனைகள் ஒருவருடைய
வாழ்க்கையையே புரட்டிப் போடும் அளவுக்குச் சக்தி பெறுகின்றன என்பதையும் ஏற்றுக்
கொள்ள வேண்டும்.
அன்னை இறந்தபோது எல்லா உறவுகளையும் துறந்த
பட்டினத்தடிகளால் தாயின் உறவைத் தள்ள முடியவில்லை. பாசத்தால் ஆற்றமாட்டாமல்
அனைவரும் தேம்பி அழும்படி பத்து பாடல்களை பாடினார். அதில் இலக்கியச் சுவையும்
விஞ்சி நிற்கிறது அவையாவன:
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து
பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய
இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
முந்தித் தவம் கிடந்து முன்னூறு
நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும்
தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து
முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய
தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்
நொந்து சுமந்து பெற்று நோவாமல்
ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே
அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய
தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்
அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு
அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு
முன்னை இட்ட தீ முப்புறத்திலே
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்
வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில்
இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள்
பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே
யாம்
இங்கும் ஒரு
கதை. பட்டினத்தடிகள் இந்தப்பத்து பாடல்களில் யானுமிட்ட தீ மூள்க மூள்கவே எனப் பாடியதும்
தீ மூண்டதாம் அப்படியே இருந்தாலும் அந்நேரத்தில் பாடிய பாடல்களை படியெடுத்து
வைத்துக் கொண்டது யார். ? கடைசிப் பாடலில் பால் தெளிக்க எல்லோரும் வாருங்கள்
என்கிறார். வழக்கப்படி வெந்து நீறானவளுக்கு பால் தெளிப்பது மறு நாள்தானே. (
பாடல்களைப் படிக்கும்போது இம்மாதிரியான நெருடல்கள் என்னுள் தோன்றுவதைத் தவிர்க்க
முடியவில்லை.)
ஆன்ம சுகம் பெற
ஒருவன் எதையெல்லாம் தவிர்க்க வேண்டுமெனப் பட்டியலிட்டுக் காட்டுகிறார்
பட்டினத்தார்.
ஓடாமல் பாழுக்கு
உழையாமல் ஓரம் உரைப்பவர்பால்
கூடாமல் நல்லவர்
கூட்டம் விடாமல் வெங்கோப நெஞ்சில்
நாடாமல்நன்மை
வழுவாமல் இன்றைக்கு நாளைக்கென்று
தேடாமல் செல்வம்
தருவாய் சிதம்பர தேசிகனே..
பாராமல்
ஏற்பவர்க்கு இல்லையென்னாமல் பழுது சொல்லி
வாராமல்
பாவங்கள் வந்து அணுகாமல் மனம் அயர்ந்து
பேராமல் சேவை
பிரியாமல் அன்பு பெறாதவரைச்
சேராமல் செல்வம்
தருவாய் சிதம்பர தேசிகனே.
கொல்லாமல்
கொன்றதைத் தின்னாமல் குத்திரம் கோள் களவு
கல்லாமல்
கைதவரோடு இணங்காமல் கனவிலும் பொய்
சொல்லாமல்
சொற்களைக் கேளாமல் தோகையர் மாயையிலே
செல்லாமல்
செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே.
அவரது
பாடல்கள்நேரான ஓட்டம் கொண்டவை. கற்பவர் மனசை வசப்படுத்தும். எளிமையும் தெளிவும்
உடையவை. பட்டினத்தார் ஈசனிடம் சிந்தையை வைத்திருந்தாலும் இல்லற வாழ்க்கையையும்
வாழ்ந்தவர்தான்
கடைசியாக அவர்
பற்றிய ஒரு குறிப்பினையும் தருகிறேன். ஒரு முறை அவர் வயலொன்றின் வரப்பில் தலை
வைத்துப் படுத்திருந்தாராம் வரப்பில் நடந்து சென்ற இரு பெண்களில் ஒருத்தி ‘யாரோ
மகான், களைப்போடு படுத்திருக்கிறார் ‘என்று கூறி வணங்கிச் சென்றாளாம். கூடவே வந்த
இன்னொருத்தி ‘ இவர் பெரிய மகானா.?தலையணை வைத்துத் தூங்கும் சுகம் வேண்டி வரப்பைத்
தலையணையாக வைத்திருப்பவரையா மகான் என்கிறாய்’ என்று கூறினாளாம். அவர்கள் சென்றதும்
வரப்பிலிருந்து தலையை கீழே வைத்துப் படுத்துகொண்டாராம். சிறிது நேரத்தில் அதே
வழியில் திரும்பி வந்த அவ்விரு பெண்களுள் முதலானவள் ‘பார் வரப்பை விட்டுக் கீழே
படுத்திருக்கிறார் ‘என்றாள். அதற்கு இரண்டாமள் “ தன்னைப் பற்றி யார் என்னவெல்லாம்
பேசுகிறார்களென்று தெரிந்து கொள்வதில் பற்று வைத்திருக்கிறாரே” என்று கூறினாள் ஞான விளக்கம் பெற இன்னும் நிறைய இருக்கிறது என்று பட்டினத்தார்
தெரிந்து கொள்ள இச்சம்பவமும் எடுத்துக்காட்டாகக் கூறப் படுகிறது.
ஒருமுறை
பட்டினத்தடிகள் துறவு பூண்டதை அறிந்த அரசன் அவரை அணுகி “ நீர் துறவறம் பூண்டதால்
அடைந்த பயன் யாது .?” என வினவ இவர் “ நீர்
நிற்கவும் யாம் இருக்கவும் பெற்ற தன்மையே
அது”
என்றாராம்....!(நிறையவே பாடல்கள் கண்டேன் நீளம் கருதி என் மனம் கவர்ந்தவற்றை மட்டும் பகிர்ந்திருக்கிறேன் )
.