Saturday, July 16, 2011

விளக்கம் வேண்டி.....

    விளக்கம் வேண்டி....
--------------------------
          இந்த பதிவை வெளியிட எனக்கு சற்று வருத்தமாக
இருக்கிறது. வலையுலகில் பதிவர்களாக இருப்பவர்கள்,
பலர் பல விஷயங்களில் விற்பன்னர்களாக இருக்கலாம்.
ஒருவருக்கொருவர் ஊக்கம் கொடுத்து, நல்ல விஷயங்கள்
வெளிவரும்போது, ஆதரவு கொடுத்து, கருத்து மாற்றங்கள்
இருந்தால் அதை ஆரோக்கியமான முறையில் எடுத்துரைத்து
போவதுதான் நன்மை பயக்கும் என்பது என் நம்பிக்கை.

    “ஆலய தரிசனப் பயணம் “என்ற என் பதிவில், ரத பந்தனக் கவி
பற்றி தமிழறிஞர்கள் விளக்கம் த்ரக்கேட்டு எழுதியிருந்தேன்.சங்க
காலப் பாடல்களுக்கு எளிமை வடிவம் தர விரும்புபவர்களும்
அதற்கு கோனார் நோட்ஸ் போடத்தயாராய் இருப்பவர்களும்
எனக்கு விளக்கம் தர முயல்வார்கள் என்றும், ஒரு சமயம்                           அவர்கள் என் பதிவுகளைப் படிக்காதவர்களாய் இருந்தால் , வேறு             படித்தவர்,அறிந்தவர் விளக்கம் தர முயல்வார்கள் என்றும்           நம்பியிருந்தேன்ஆனால் தமிழில் வல்லுனர்களாக நான்
மதிக்கும் யாரும், என் பதிவைப் படிக்கவோ,படித்திருந்தால்
விளக்கம் அளிக்கவோ முயலவில்லை என்பது தான் வருத்தம்
தருகிறது. ஒரு வேளை, நான் அந்தப் பாடல்களை வெளியிடாதது
காரணமாயிருந்தால், அதனை நிவர்த்தி செய்ய இத்துடன்
அவ்விரு பாடல்களையும் வெளியிடுகிறேன். எனக்குப் பொருள்
விளங்குவது கடினமாயிருக்கிறது என்று ஏற்கெனவே கூறி
இருந்தேன். மேலும் இது கவிதையின் ஒரு வரிவடிவமாக
இருக்கலாமோ என்று விளக்கம் வேண்டியும் எழுதியிருந்தேன்.
கால தாமதமானாலும் விடை கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்.
இந்தக் கவிதைகளை நான் எடுத்து எழுதும்போது ஏதாவது பிழை
இருந்தால், நானே அதற்குப் பொறுப்பு. எழுதிய நேரமும், கிடைத்த
அவகாசமும் காரணமாயிருந்திருக்கலாம். இனி அந்தப்
பாடல்கள்:-

    திருமங்கையாழ்வார் அருளிச் செய்த திருவெழுக்கூற்றிருக்கை
------------------------------------------------------------------------------------
ஒரு பேரூந்தியிருமர்த்தவிசில்
ஒருமுறையயனையீன்றனை* ஒருமுறை
இருசுடர்மீதினிலியங்கா*மும்மதி
ளிலங்கையிருகால்வளைய *ஒருசிலை
யொன்றிய ஈரயிற்றழல்வாய்வாளியி
லட்டனை*மூவடி நானிலம் வேண்டி*
முப்புரிநூலொடு மானுரியிலங்கு
மார்வினில் *இருபிறப்பொரு மாணாகி*
ஒருமுறையீரடிமூவுலகளந்தனை*
நாற்றிசைநடுங்கவஞ்சிறைப்பறவை
யேறி*நால்வாய்மும்மதத்திருசெவி
யொருதனிவேழத்தரந்தையை*ஒருநா
ளிருநீர்மடுவுள் தீர்த்தனை*முத்தீ
நான்மறை ஐவகைவேள்வி*அறுதொழி
லந்தணர்வணங்கும் தன்மையை*ஐம்புல
னகத்தினுள்செறுத்து *நான்குடனடக்கி
முக்குணத்திரண்டவையகற்றி*ஒன்றினி
லொன்றிநின்று*ஆங்கிருபிறப்பறுப்போ
ரறியும் தன்மையை*முக்கண்நாற்றோ
ளைவாயரவோடு*ஆறுபொதிசடையோ
 னறிவரும் தன்மைப்பெருமையுள் நின்றனை*
ஏழுலகெயிற்றினில் கொண்டனை*கூறிய 
வறுசுவைப்பயனுமாயினை*சுடர்விடு
மைம்படையங்கையுள மர்ந்தனை*சுந்தர
நாற்றோள் முந்நீர் வண்ணா !*நின்னீரடி
யொன்றியமனத்தால்*ஒருமதிமுகத்து
மங்கையரிருவருமலரென*அங்கையில்
முப்பொழுதும் வருடவறிதுயிலமர்ந்தனை*
நெறிமுறை நால்வகை வருணமுமாயினை
மேதகுமைப்பெரும் பூதமும் நீயே*
அறுபதமுரலும் கூந்தல்காரணம்*
ஏழ்விடையடங்கச்செற்றனை*அறுவகைச்
சமயமுமறிவரு நிலையினை*ஐம்பா
லோதிகையாகத்திருத்தினை*அறமுதல் 
நான்சுவையாய்மூர்த்திமூன்றாய்*
இருவகைப்பயனா றொன்றாய்விரிந்து
நின்றனை*குன்றாமதுமலர்ச்சோலை
வண்கொடிப்படப்பை*வருபுனல்பொன்னி 
மாமணியலைக்கும்*செந்நெலொண்கழனித்
திகழ்வனமுடுத்த *கற்போர்புரிசை
கனகமாளிகை*நிமிர்கொடிவிசும்பி
விளம்பிறை துவக்கும்*செல்வமல்குதென்
திருக்குடந்தை*அந்தணர்மந்திரமொழியுடன்
வணங்க *ஆடரவமளியிலறிதுயிலமர்ந்த 
பரம *நின்னடியினைப்பணிவன்
வருமிடரகலமாற்றோவினையே..!
---------------------------------------------

  திருஞானசம்பந்தர் அருளிச்செய்த திருவெழு கூற்றிருக்கை.
---------------------------------------------------------------------------------
ஓருருவாயினை;  மானாங்காரத்து
ஈரியல்பாய் ஒரு விண்முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும் 
படைதளித்தழிப்ப மும்மூர்த்திகள் ஆயினை;
இருவரோடு ஒருவனாகி நின்றனை;
ஓசால் நீழல் ஒண்கழல் இரண்டும்
முப்பொழுதேத்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை; நாட்டம் மூன்றாகக் கோட்டினை
இருநிதி அரவமொடு ஒரு மதி சூடினை;
ஒருதாள் ஈர் அயில் மூவிகச் சூலம்
நாற்கால் மான்மதி ஐந்தலை அரவம்
ஏந்தினை;காய்ந்த நால்வாய் மும்மதத்து 
இருகோட்டு ஒருகரி ஈடழித்து உரித்தனை;
ஒருதனு இருகால் வளைய வாங்கி 
முப்புரத்தோடு நானிலம் அஞசக் 
கொன்று தலத்துற அவுணரை அறுத்தினை;
ஐம்புலம் நாலாம் அந்தக் காரணம் 
முக்குண இருவளி ஒருங்கிய வானோர் 
ஏத்த நின்னை;ஒருங்கிய மனத்தோர்
இருபிறப்புஓர்ந்துமும்பொழுதுகுறைமுடித்து
நான்மறை ஓதி ஐவகை வேள்வி 
அமைத்து ஆறங்க முதல் எழுத்து ஓதி
வரன்முறை பயின்று, எழுவாந்தனை 
வளர்க்கும் பிரமபுரம் பேணினை;
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;
இகலியமைந்துணர் புகலி அமர்ந்தனை;
பொங்கு நாற்கடல் சூழ் வெங்குரு விளங்கினை; 
பரணி மூவுலகும் புதைய மேல் மிதந்த தோணிபுரத்து 
உறைந்தனை;தொலையா இருநிதிவாய்ந்த பூந்தராய்
ஏய்ந்தனை;ஒருபுரம் என்றுணர் சிரபுரத்து 
உறைந்தனை;ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்
விறல் கொடுத்து அருளினை;புறவும் புரிந்தனை;
முந்நீர் துயின்றோன் நான்முகன் அறியாப்
பண்பொடு நின்றனை; ---------அமர்ந்தனை;
ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உரைங்க் காழியமர்ந்தனை;
எச்சன் ஏழிசையோன் கொச்சையை மெச்சினை;
ஆறுபதமும் ஐந்தமர்க்கல்வியும்
மறைமுதல் நான்கும்
மூன்று காலமும் தோன்ற நின்றனை;
இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்
மறுவிலா மறையோர்
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் அறியும் 
அடைத்தன்மையை யாதலின் நின்னை
நினைய வல்லவரில்லை நீள் நிலத்தே.
------------------------------------------------------ 
 (திருக்கோயில்களில் எழுதியிருந்தவற்றை பிரதி எடுக்கவும்
  அவற்றை தட்டச்சு செய்து கணினியில் ஏற்றவும் நான் மிகவும் 
 பிரயாசைப்பட்டு விட்டேன். தமிழில் நான் அறிந்தது கடுகளவிலும் 
 சிறியது என்று என்னை உணரவைத்த அனுபவம் இது. பார்ப்போம். 
 யார் யார் சிரமப் படுகிறார்கள் என்று. )

13 comments:

  1. நிச்சயம் முயல்கிறேன் அய்யா...

    ReplyDelete
  2. வேலை பளு உள்ளது ஐயா..மன்னிக்கவும்...

    ReplyDelete
  3. நிச்சயமாக உங்களுக்குத் தேவைப்படும் விளக்கங்கள், பதிவர்களாகிய, புலவர் / கவிஞர் பெருமக்களால் வெகு விரைவில் தரப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    ReplyDelete
  4. Dear GMB, பதிவுலகை நீங்கள் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது.

    ReplyDelete
  5. இரண்டாம் பாடல் பன்னிரு திருமுறைகளில் முதலாம் திருமுறையில் உள்ளது. முதலாம் பாடலையும் தேடி பதிவிடுகிறேன்.

    ReplyDelete
  6. அருணகிரி நாதரும் திருப்புகழில்-
    ஓருருவாகிய தாரகப்பிரமத்து ஒன்றாய் ஒன்றி இருவரில் தோன்றி மூவாதாயினை முருகா-- என்று ஆரம்பிக்கும் திரு எழுகூற்றிருக்கையை அழகாகப் பாடியிருக்கிறார்.

    ReplyDelete
  7. மன்னிக்கவும் ஐயா
    நீங்களோ அல்லது வேறு தமிழ் அறிஞர்களோ
    விளக்கம் தந்தாள் படித்து ரசிக்க ஆவலாக இருக்கிறேன்

    ReplyDelete
  8. http://thirupugazh.blogspot.com/2010/07/blog-post.html
    அ.அ.திருப்புகழ்" - 33 "ஓருருவாகிய" [திருவெழுக்கூற்றிருக்கை]//

    படித்துப் பாருங்கள் ஐயா.

    ReplyDelete
  9. http://saranagathi.org/blogs/books/files/2009/11/thiruvezhu1.pdf

    திருவெழுகூற்றிருக்கை ஸ்வாமி திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருவெழுக்கூற்றிருக்கை உள்ளன. இவற்றுக்கான ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யானம், எளிய தமிழ் நடை உள்ளன.

    ReplyDelete
  10. http://www.visvacomplex.com/MaalaiMaaRRu2.html

    மாலைமாற்று
    PALINDROME
    படித்துப் பாருங்கள்.

    ReplyDelete
  11. எனக்குக் கிடைத்த விவரங்களை பதிவிட்டுள்ளேன்.
    http://somayanam.blogspot.com/2011/07/blog-post_20.html

    ReplyDelete
  12. அன்புள்ள ஐயா..

    வணக்கம். இரண்டுமாத கோடைவிடுபபிற்குப் பின் பல்கலைக்கழகம திறந்தாகிவிட்டது. தொடர்ந்த இறுக்கமான பணிகள். கிடடத்தட்ட ஒருமாதம் எந்த வலைப்பூவிற்குள்ளும் வரவில்லை. அவ்வப்போது சில முறைகள் பார்த்ததோடு சரி.
    எனவே தாமதத்திற்கு இதுதான் காரணம். மன்னிக்கவும்.
    இப்போதும் அவசரத்திலிருக்கிறேன். நிறைய வேலைகள். இருப்பினும் தங்களின் பதிவிற்கு சில குறிப்புக்களை மட்டும் எளிமைப்படுத்தித் தந்துவிட்டு விரைவில் படவிளக்கங்களோடு வருகிறேன்.

    திருமங்கையாழ்வார் அருளிச்செய்தது திருவெழுகூற்றிருக்கை என்பது. இவர் பாடிய ஆறு பிரபந்தங்களுள் ஒன்றுதான் மேற்படி திருவெழுகூற்றிருக்கை.

    ஆசிரியப்பா எனும் இலக்கணப்பாவால் இது இயற்றப்பட்டது.

    ஒன்று என எண்ணுப்பெயரில் தொடங்கி ஏழுவரையென ஒரு கணக்கில் ஏறியும் இறங்கியும் எண்ணலங்காரம் எனும் அமைப்பில் பாடப்படுவது இது.

    எழு + கூறு + இருக்கை என்பது. எழுகூற்றிருக்கையாகும். இறைவன் மேல் பாடப்பெறற்தால் திரு சேர்ந்து திருவெழுகூற்றிருக்கை என்றாயிற்று.

    இதன் வழியாக திருமங்கையாழ்வார் குடந்தை ஆராவமுதப் பெருமானிடம் சரணம் அடைந்தார் என்பது வரலாறு.

    சாரங்கபாணி கோயிலில் தேர் வடிவில் பளிங்குகல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ரதம் என்பது தேரைக் குறிக்கும். பந்தம் என்பது கட்டு எனப்பொருள்படும். ரதவடிவில் கட்டுவிக்கப்படுவது (பாடப்படுவது) ரதபந்தமாகும். இது சித்திரக்கவி எனும் பிரிவில் ஒருவகையாகும்.

    தேர்போல சித்திரத்தில் கட்டங்கள் இடப்பட்டு ஒவ்வொரு கட்டத்திற்குள்ளும் பாசுரங்களை அடக்கவேண்டும். தேரில் மேற்பகுதி கீழ்பகுதி என்பதில் ஒவ்வொரு பகுதியிலும் ஏழு கூறுகள் இருக்கும்.

    இதன் நுட்பத்தை எளிமைப்படுத்தி தற்காலச் சூழலுக்கேற்ப விரைவில் வந்து விளக்குகிறேன்.

    ஆழ்வார்களும் சரி நாயன்மார்களும் சரி தங்களின் அற்புதமான பாடல் புனையும் திறனில் பலசோதனைகளைக் கண்டவர்கள் அவற்றையெல்லாம் இறைவனுக்கே சமர்ப்பித்து உலகில் நிலையாமை பண்பை தெளிவுபடுத்தியவர்கள்.

    இது இறைவனின் கருணையே.

    நன்றி ஐயா. விரைவில் இன்னும் விளக்கமுடன் எழுதுகிறேன்.

    ReplyDelete
  13. முதலில் என் நன்றியை கலாநேசன்,இராஜராஜேஸ்வரி மற்றும் ஹரணி அவர்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். பதிவுலகில் கற்றதைப் பகிர்ந்து கொள்ளும் உள்ளம் கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்பது மிகவும் ஆறுதல் தருகிறது. நானே முற்றிலும் எதிர்பார்க்காத வகையில் ஆலய தரிசனப் பயணத்தின்போது கண்டபாடல்களின் பொருளும் கருவும் விளங்காதநிலையில் கோரிய வினாக்களுக்கு கிடைத்த பதில்களும் அதன் வீச்சும் என்னை நிறையவே சிந்திக்க வைக்கிறது. தோண்டத் தோண்ட கிடைக்கும் தமிழ்ச் சுரங்கம் அநேகமாக இளந்தலைமுறைக்குத்தெரியாது என்றே தோன்றுகிறது. ஓரளவு தமிழில் ஈடுபாடு கொண்ட நானே இந்த வயதில்தான் அதுவும் வலையுலகிற்கு வந்தபிறகுதான் நினைப்பதற்கே வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தமிழின் முத்துக்கள் ஆங்காங்கே திரட்டி எடுக்கப்பட்டு இணைய தளங்களில் கிடைக்கிறது. இவை இளையதலை முறைக்கு போய்ச் சேர்ந்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன். என் பதிவை தொடர்பவருக்கும், எனக்கு உறுதுணையாய் இருப்பவருக்கும் மீண்டும் என் நன்றி.

    ReplyDelete