Sunday, July 1, 2012

அப்பாவுக்கு........


                             அப்பாவுக்கு ..நினைவுகள்  சமர்ப்பணம்
                               ----------------------------------------------------


நீங்கள் எங்களையெல்லாம் விட்டுப் போய் 55-/ஆண்டுகளுக்கும் மேலாகிறது.நீங்கள் துவக்கிய தலைமுறையில் நான்காவது ஓடிக் கொண்டிருக்கிறது. நீங்கள் இந்தப் பூவுலகில் இருந்த நாட்களைவிட ( ஆண்டுகளை விட )எங்களைவிட்டுப் பிரிந்து போன காலம் அதிகம். இருந்தால் என்ன.? உங்களைப் பற்றிய நினைவுகள் எல்லாம் எனக்குப் பசுமையாகவே உள்ளது. நான் இந்த உலகத்தை ஆர்வத்துடன் கவனிக்கத் துவங்கும் முன் எங்களை விட்டுப் பிரிந்து விட்டீர்கள். நீங்கள் போகும்போது எனக்கு என்ன தெரியும் என்ன தெரியாது என்றே தெரியாத வயது.

உங்களைப் பற்றிய நினைவுகள் வரும் போதெல்லாம் நீங்கள் இந்த உலகில் மகிழ்ச்சியாக இருந்த காலம் என்று ஏதாவது இருந்ததா. என்று எண்ணத் தோன்றுகிறது..நீங்கள் மகிழ்ச்சியாக கழித்த காலச் சுவடுகளின் விளைவு, பதின்மூன்று ஜீவன்கள் என்று சொல்லலாமா... வாழ்வில் மகிழ்ச்சி என்பது உங்களுக்கு அது மட்டும்தான் இருந்திருக்க வேண்டும். உங்கள் வாழ்விலிருந்து நாங்கள் கற்ற படிப்பினை, அளவான குடும்பமே வளமான வாழ்வுக்கு ஆதாரம் என்பதாகும்.

இருந்தாலும் உங்களுடன் எனக்கிருந்த  மகிழ்ச்சியான/ மற்றும் உங்களை  பாதித்த தருணங்களை நினைவு கூர்கிறேன்..என்னை நீங்கள் மகனாக நினைத்ததைவிட அன்பாக நினைத்த நேரங்களே அதிகமாயிருக்கும். இன்றைக்கும் என்னை மட்டும் அரக்கோணத்திலிருந்து, மஹாத்மா காந்தியைக் காட்ட மதராசுக்கு அழைத்துச் சென்றதை பெருமையுடன் நினைவு கூறுகிறேன்..உங்களுக்கு நினைவிருக்கிறதா.?மஹாத்மா காந்தி சுட்டுக் கொல்லப் பட்ட சேதி கேட்டு அன்றிரவு முழுவதும் நீங்கள் அழுதது காந்தியின் மீதும் அவரது கொள்கையின் மீதும் உங்களுக்கிருந்த பிடிப்பை உணர்த்தியது. அகிம்சைக்கு காந்தி, நகைச்சுவைக்கு என்.எஸ். கிருஷ்ணன், என்று கூறி வந்த உங்களுக்கு என்.எஸ். கிருஷ்ணன் மேல் போடப்பட்ட கொலை வழக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த வழக்கு விசாரணையின்போது, மதராசில் கோர்ட்டுக்குப் போய் வழக்கின் போக்கை நீங்கள் கவனித்து வந்தது எனக்கு நினைவுக்கு வருகிறது. நம்முடைய பெருமைக்கு உரியவர்கள் அதற்குத் தகுதி இல்லை என்று உணரும் போது வலி அதிகம் என்பது எனக்கு இப்போது புரிகிறது.

சித்தியின் ( உங்கள் இரண்டாம் மனைவி ) தூரத்து உறவினர் ஒருவருக்கு வேலை வாங்கிக் கொடுத்து, அவர் தவறு செய்து முழித்தபோது ,ஆங்கிலம் அவ்வளவு தெரியாத அவருக்கு மனு எழுத உதவப் போய் உங்கள் அலுவலகத்தில் அவப் பெயர் வாங்கி , அதன் பயனாய் பணி இறக்கம் செய்யப் பட்ட போது நீங்கள் வருந்தியது இப்போது நினைத்துப் பார்த்து ,தகாத ஒருவருக்கு உதவப் போய் வீண்பழி சுமந்தீரே என்று வருத்தப் படுவது உண்டு. அந்த இடியின் வலியே உங்கள் மறைவுக்கும் ஒரு காரணமோ என்று இப்போது தோன்றுகிறது

உங்களுக்கு இசையில் ஆர்வம் உண்டு என்று எனக்குத் தெரியும் .ஒருமுறை நண்பர் ஒருவரை வீட்டிற்கு அழைத்து அவர் பாடக் கேட்டு மகிழ்ந்ததும் என் நினைவில் இன்னும் இருக்கிறது. “ தாயே யசோதா “ என்ற அந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் இந்த நினைவு வரும். நீங்கள் முணுமுணுக்கும் பாடல்கள் பலவும் எனக்கும் பிடிக்கும். கொள்ளுத் தாத்தாவுக்குப் பிடித்த பாடல்கள் என்று என் பேரக் குழந்தைகளுக்கு நான் சொல்வது, “ வள்ளிக் கணவன் பேரை, வழிப் போக்கர் சொன்னாலும் “ .. “ தெருவில் வாராண்டி வேலன் தேடி வாராண்டி “ போன்ற பாடல்களை.

என் தாய் இறந்தபோது மறு மணம் செய்து கொண்ட நீங்கள் அதன் பலனாக உறவினர் மத்தியில் விரும்பப் படாதவராக இருந்தீர். உங்கள் தங்கைக்கு உங்கள் மச்சினரை மணம் முடித்த பிறகு நீங்கள் மறு மணம், அதுவும் சாதிவிட்டு செய்தது பலருக்கும் உங்களிடம் துவேஷம் ஏற்படுத்தியது. அந்த மறுதார மணம் காதலினால் விளைந்த ஒன்று என்பது இன்னும் கூடுதல் துவேஷத்தையே உங்களுக்கு சம்பாதித்துக் கொடுத்தது.

யாருடைய செய்கையையும் சரி தவறு என்று கூறுவது தவறு என்று எனக்கு நானே கற்பித்துக் கொண்ட பாடம். நேரம், காலம், சூழ்நிலை, பொன்ற பல விஷயங்களே பலரது செயல்களுக்குக் காரணம் என்று எனக்குத் தெரியும். ON HIND SIGHT – தீர்ப்பு கூறுவது சரியாகாது.

உங்களுக்கு நினைவு இருக்கிறதா.? வெல்லிங்டனில்  RMDC குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளைத் தேர்ந்தெடுக்க என்னைக் கேள்வி கேட்டு தர்க்கங்களின் முடிவில் பதில் தெரிந்தெடுத்து போட்டிக் கூப்பன்களை அனுப்புவீர்கள். ஒரு முறை பரிசாக ரூ. 100-/ வந்தபோது அது நான் சொன்ன பதில்களால் வந்தது என்று பாராட்டி உற்சாகமூட்டினீர்கள். பரிசு கிடைக்காத போதெல்லாம் நான் சொன்ன பதில்களால் தவறாகி விட்டது என்று ஒருமுறை கூடக் கூறியதில்லை. ஏன் இந்தப் போட்டிகளில் பங்கேற்கிறீர்கள் என்றால் ஒரு பெரிய பரிசுத் தொகை வீழ்ந்து நமக்கு விடிவு வராதா என்பீர்கள்.

சர்க்கிள் குவார்டர்ஸிலிருந்து மாலையில் காய்கறி வாங்க வெல்லிங்டன் செல்வோம். உங்களுடன் வருவதில் எனக்கும் அலாதி மகிழ்ச்சி. அங்கு போகும் போதெல்லாம் ஒரு வெள்ளை புடவை அணிந்திருக்கும் ஒரு ஆயாவிடம் கைக்குட்டையில் வேர்க்கடலை வாங்கி கொரித்துக் கொண்டே வருவோம். ஒரு முறை வேர்க்கடலை வாங்க கைக்குட்டைக்குப் பதில் அம்மாவின் பாடியை நீட்டினீர்கள். அந்தக் கிழவி உங்களைக் கலாய்த்தபோது, என் மனைவியின் பாடிதானே என்று ஏதோ கூறி சமாளித்தீர்கள்.

உங்கள் குடும்பத்திலேயே பட்டப் படிப்பு படித்த ஒரே ஒருவர் என்று உங்களைப் பற்றிப் பெருமையாகக் கூறுவீர்கள். ஆங்கிலம் பேச என்னை ஊக்கப் படுத்துவீர்கள். ஆங்கில உச்சரிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பீர்கள். படிப்பில் எனக்கு ஆர்வம் இருப்பது கண்டும், வகுப்பில் முதல் இடங்களில் வருவது கண்டும்,என்னை மேல் படிப்பு படிக்க வைக்க வசதி இல்லாததால் முடியவில்லையே என்று நீங்கள் வருந்தியது இப்போதும் நினைவுக்கு வருகிறது. அந்த வயதில் நான் உருவத்தில் மிகவும் சிறியவனாகத் தெரிகிறேன் என்று குறை படும்போதெல்லாம், ‘ இன்னும் நீ குழந்தை தானேடாஎன்று ஆறுதல் கூறியவர், என்னை வேலைக்கு எடுத்துக் கொள்ள உங்கள் நண்பரிடம் அனுப்பியபோது, என் வயதையும் உருவத்தையும் காட்டி அவர் என்னை வேலைக்கு எடுக்க மறுத்த போது, ஒரு குழந்தையை வேலைக்கு அனுப்ப வேண்டி இருக்கிறதே என்று நீங்கள் வருந்திய போது, நான் தான் உங்களுக்கு ஆறுதல் கூறினேன்.

 உங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரிந்தும், அது அலுவலகத்துக்குத் தெரிந்தால் வேலைக்கு குந்தகம் ஏற்படலாம் என்று எண்ணி, மருத்துவப் பரிசோதனைக்கு கொடுக்க வேண்டிய உங்கள் சிறுநீருக்குப் பதில் எனது சிறு நீரைக் கொடுத்து பிரச்சனை ஏதும் இல்லாததுபோல் இருந்தீர்களே. அதன் முழுத் தாக்கமும் தெரியாமல் அறிவில்லாதவனாக நானும் இருந்தேனே என்று பிற்காலத்தில் நான் வருந்தியதுண்டு. தெரிந்திருந்தால் மட்டும் என்ன செய்திருக்க முடியும் என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொள்வேன்.

பெங்களூரில் எனக்குப் பயிற்சி. வெலிங்டனில் நீங்கள். ஒன்றாக இருக்க வேண்டும் என்ற என் விருப்பத்துக்காக வேலை மாற்றல் பெற முயன்றீர்கள். அது விஷயமாக ஒரு முறை நீங்கள் பெங்களூர் வந்தபோது நான் இருந்த அறையில் தங்கினீர்கள். ஒரு அறையில் நான்கு கட்டில்களில் ஒன்று எனது. அங்கே அசைவ உணவு செய்வார்கள். என் முகம் வாடக் கூடாதே என்று உங்களுக்குப் பிடிக்காத ,பழக்கமில்லாத இடத்தில் என்னுடன் இருந்தீர்கள். உங்களை ஒரு திரைப் படம் பார்க்கக் கூட்டிச் சென்றேன் அந்த நேரமாவது நீங்கள் மகிழ்வாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். DANNY KAYE நடித்த  THE COURT JESTER என்ற படம் என் மகிழ்வுக்காக எதையும் விட்டுக் கொடுக்கும் உங்களை மகிழ்விக்க என்னால் முடிந்தது அதுதான். 

பெங்களூரில் இருந்த போது ஒரு முறை நடந்து போகும்போது உங்கள் சித்தப்பா அவர்களைக் கண்டு குசலம் விசாரித்தீர்கள். அவர் உங்களுக்கு பதிலாக “ஏதோ நடக்கிறது. I AM IN THE EVENING OF MY LIFE "என்று பதிலளித்தார். ஆனால், LOOK AT THE IRONY. அவருக்கும் முந்தி நீங்கள் போய் விட்டீர்கள்.  WHERE AS HE LIVED WELL INTO THE NIGHT ALSO. 

உங்கள் முடிவு வருவது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் அதனால்தானோ என்னவோ மருத்துவ மனையில் இருந்தபோது என் கையைப் பிடித்து என் உடன் பிறப்புகளையும் தாயையும் நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினீர்கள். சம்பவங்களின் முக்கியத்துவம் அவை நடைபெறும்போது தெரியாமல் போவது பிற்காலத்தில் மன உளைச்சலைத் தரவல்லது. அந்த நேரத்தில் எனக்கு என் பயிற்சியில் மாற்றம் வந்து நல்ல ஒரு நிலைக்கு உயர வாய்ப்பாக இருந்தது அறிந்த பின் தான் உங்கள் மரணம் சம்பவித்தது. உங்கள் வயதான காலத்தில் எந்த கஷ்டமும் இல்லாமல் உங்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற என் ஆசை நிராசையாகி விட்டது. நீங்கள் உயிருடன் இருந்திருந்தால் என்ன செய்ய விரும்பி இருப்பீர்களோ அதை செய்த திருப்தி மட்டும்தான் எனக்குண்டு. வெள்ளி பூண்போட்ட கைத்தடி வீசி நீங்கள் நடந்துவருவதைப் பார்க்க எங்களுக்குக் கொடுத்து வைக்க வில்லை.

அப்பா உங்கள் நினைவு நாளை உங்களுக்கு அளித்த வாக்கை காப்பாற்றிய மன நிறைவோடு தான் எண்ணுகிறேன். மற்றபடி எந்த சடங்கு சம்பிரதாயமும் நான் செய்வதில்லை. நீங்களும் வெறும் சடங்கு சம்பிரதாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். உள்ள்த்து உணர்ச்சிகளுக்கு உயிர் கொடுக்கவே இந்தப் பதிவு. நீங்கள் நீங்களாக இல்லாமல் நினைவாக இருக்கும் உங்களுக்கு சமர்ப்பணமாக அளிக்கிறேன்..
--------------------------------------------------------------    



.


                                 
                  

11 comments:

  1. // நம்முடைய பெருமைக்கு உரியவர்கள் அதற்குத் தகுதி இல்லை என்று உணரும் போது வலி அதிகம்//

    அது மிகவும் தாங்க முடியாத வலி தான். இடி விழுந்ததைப்போல உணர முடிகிறது.

    =====

    தங்களின் இந்தப் பதிவிலிருந்து, என்னால் பல விஷயங்களை மிகுந்த ஆச்சர்யத்துடன் உணர முடிகிறது.

    =====

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. அப்பா உங்கள் நினைவு நாளை உங்களுக்கு அளித்த வாக்கை காப்பாற்றிய மன நிறைவோடு தான் எண்ணுகிறேன். மற்றபடி எந்த சடங்கு சம்பிரதாயமும் நான் செய்வதில்லை. நீங்களும் வெறும் சடங்கு சம்பிரதாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்.//
    ஒரு அப்பாவின் கடமைகளையும் அவருக்கு பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமைகளையும் விளக்கிப்போகும் பதிவு . இறுதியாக தங்களின் இந்த வரிகளை படிக்கும் போது தங்களிடம் பெரியாரின் சிந்தனைகளை காண்கிறேன் .

    ReplyDelete
  3. நான் எனது பிரச்சினைகளை நினைத்துக் கொண்டு இருந்த நேரத்தில் உங்களின் இந்த பதிவினைப் படிக்க நேர்ந்தது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நீறுபூத்த நெருப்பாய் எவ்வளவோ பிரச்சினைகள். உங்கள் அப்பாவைப் பற்றிய நினைவுகள் எனது நெஞ்சை கனக்கச் செய்தது.

    ReplyDelete
  4. அறையில் ஊது பத்தியிலிருந்து மெல்லிய இழையாய் கிளம்பும் புகைபோன்றும் நறுமணம் போன்றும் இருந்தது இந்தப் பதிவு!.

    மிகவும் யதார்த்தமான, ஓளிவு மறைவு அற்ற நல்லதொரு நினைவுப் பதிவு!
    வாழ்த்துகள் சார்!.

    ReplyDelete
  5. அப்பாவை அவர் குறை, நிறைகளோடு

    நினைவுகூறும் பதிவு மனதை நெகிழவைத்து விட்டது.

    குழந்தையை படிக்க வைக்காமல் வேலைக்கு அனுப்புகிறோம் என்ற வேதனை உங்கள் அப்பாவிடம் காண்ப்படுவது வருத்தமான விஷயம்.

    முன்னோர்கள் நிறைய குழந்தைகளுடன் அவதிப்பட்டது ஒரு பாடம் சிறியவர்களுக்கு சிறு குடும்பம் அமைத்துக் கொள்ள!

    நல்ல பாடல்களை உங்கள் அப்பா ரசித்து இருக்கிறார்கள்.

    அப்பா உங்களிடம்விட்டு சென்ற கடமைகளை நிறைவேற்றி அவர்களின் ஆசி பெற்று விட்டீர்கள்.

    ReplyDelete
  6. //யாருடைய செய்கையையும் சரி தவறு என்று கூறுவது தவறு என்று எனக்கு நானே கற்பித்துக் கொண்ட பாடம். நேரம், காலம், சூழ்நிலை, பொன்ற பல விஷயங்களே பலரது செயல்களுக்குக் காரணம் என்று எனக்குத் தெரியும். ON HIND SIGHT – தீர்ப்பு கூறுவது சரியாகாது.//

    Each word weigh a ton of Gold.
    Chaild is the Father of a man.

    ReplyDelete
  7. உருக்கமான நினைவு.

    ReplyDelete
  8. //யாருடைய செய்கையையும் சரி தவறு என்று கூறுவது தவறு என்று எனக்கு நானே கற்பித்துக் கொண்ட பாடம்//

    அற்புதமான வரிகள்.

    ReplyDelete
  9. @ கோபு சார்,
    @ சசிகலா,
    @ டாக்டர் கந்தசாமி,
    @ தி. தமிழ் இளங்கோ,
    @ தோழன்.மபா.தமிழன் வீதி,
    @ கோமதி அரசு.
    @ வாசன்,
    @ அப்பாதுரை,
    @ மாதங்கி,
    @ எக்ஸ்பாட்குரு.
    அனைவரது வருகைக்கும்
    உற்சாகமூட்டும் கருத்துக்களுக்கும்
    நன்றி. சில கற்ற பாடங்களும்
    நிகழ்வுகளும் பகிர்ந்து கொண்டு
    இருக்கிறேன்.எக்ஸ்பாட்குருவின் முதல் வருகை என்று எண்ணுகிறேன். தொடர்ந்து வரவும். நன்றி.

    ReplyDelete