வெள்ளி, 29 நவம்பர், 2013

அமுத சுரபி, அட்சயபாத்திரம் இன்னும் சில எண்ணங்கள்

                                                    
        
ஸ்ரீ லலிதாம்பாள்.....
       


     அமுத சுரபி அட்சய பாத்திரம்  இன்னும் சில எண்ணங்கள்
     ----------------------------------------------------------------------------------



சூதாட்டத்தில் எல்லாம் தோற்றுப் போன பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தனர். அப்போது மிகவும் மகிழ்ச்சியில் இருந்த துரியோதனன் ராஜசூய யாகம் செய்ய விரும்பினான். மூத்தவர்களான திருதராஷ்டிரனும் யுதிஷ்டிரனும் உயிருடன் இருக்கும்போது ராஜசூய யாகம் செய்யக் கூடாது என்பதால் அதற்குப் பதில் வைஷ்ணவ யாகம் செய்யலாம் என்று எடுத்துக்கூறப்பட்டு அதை விமரிசையாகச் செய்து முடித்தான்.அவ்வாறு இருக்கையில் ஒரு நாள் துர்வாச முனிவர் தன் பதினாயிரம் சிஷ்யர்களுடன் துரியோதனனிடம் வந்தார். ரிஷியின் சாபத்துக்குப் பயந்து துரியோதனனே முன் நின்று அதிதி பூஜையை வெற்றிகரமாக முடித்தான். மிகவும் மகிழ்ச்சியடைந்த துர்வாசர் என்ன வரம் வேண்டும் என்றுகேட்க, அவன் எங்களிடம் வந்து அதிதியாக இருந்தது போலவே வனத்தில் இருக்கும் பாண்டவர்களிடமும் , பாஞ்சாலி தன் பரிவாரங்களுக்குப் போஜனம் செய்வித்து களைப்பாறிக் கொண்டிருக்கும் நேரத்தில் , அதிதியாகச் சென்று ஆசி அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தான் ஜனங்களை சோதனை செய்வதில் விருப்பம் கொண்ட துர்வாசரும் ஒப்புதல் அளித்தார்.அதிதி பூஜையை திருப்தியாகச் செய்ய இயலாமல் பாண்டவர்கள் துர்வாசரின் கோபத்துக்கு ஆளாகி சாபம் பெற வேண்டும் என்பதே துரியோதனன் திட்டம்.

அதன்படியே துர்வாசர் காட்டில் இருக்கும் பாண்டவர்களைக் காணச்சென்றார் தரும புத்திரன் தம்பிகளுடன் அவரை வரவேற்று உபசரித்தான்.அவர்கள் ஆற்றுக்குச் சென்று குளித்து வருவதற்குள் உணவு தயாராய் இருக்க வேண்டும் என்று சொல்லி முனிவர் தன் பரிவாரம் தொடரச் சென்றார்.

வனவாச ஆரம்பத்தில் யுதிஷ்டிரன் செய்த தவத்தால் சூரிய பகவான் பிரத்தியட்சமாகி ஒரு அட்சய பாத்திரத்தைப் பாண்டவர்களுக்குக் கொடுத்திருந்தார். அதன்படி அவர்களுக்குப் பனிரெண்டு ஆண்டுகளுக்கு உணவு தட்டுப்பாடின்றிக் கிடைக்க வழிபிறந்தது. தினமும் திரௌபதி அந்தப் பாத்திரத்தைக் கொண்டு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் உணவு , தேவையான அளவு உணவு படைத்துக் கடைசியில் அவள் உண்ணும் வரை அன்னம் வரும் அவளுண்ட பிறகு அந்த அட்சய பாட்திரத்தின் சக்தி அன்றைக்குக் குறைந்து விடும் எல்லோருக்கும் உணவு படைத்து திரௌபதியும் உண்டு முடித்திருந்த நேரத்தில் துர்வாச முனிவர் தம் சிஷ்யர்களுடன் உணவுக்கு வந்தபோது என்ன செய்வது என்று தெரியாமல் கவலையில் இருந்தாள். அந்த நேரத்தில் கிருஷ்ணர் வந்து திரௌபதியிடம் தனக்குப் பசி என்று கூறி உணவு கேட்டார். திரௌபதி இருந்த நிலையை விளக்கினாள். நான் பார்க்கிறேன். அட்சய பாத்திரத்தைக் காட்டு என்ற கிருஷ்ணர் பாத்திரத்தில் இருந்த ஒரு சோற்றுப் பருக்கையை உண்டார். தான் சரியாக பாத்திரத்தை அலம்பாததால் கண்ணன் சோற்றுப் பருக்கையை உண்ணும் படியாயிற்றே என்றும் பாஞ்சாலி வருந்தினாள். கிருஷ்ணர் பீமனிடம் துர்வாசமுனிவரையும் சிஷ்யர்களையும் உணவுக்கு அழைத்துவரச் சொன்னார்.அதன்படி அங்கு சென்ற பீமனிடம் துர்வாசர் நாங்கள் உண்டாயிற்று, எங்கள் தவறை மன்னிக்க வேண்டும் என்று யுதிஷ்டரிடம் கூறு என்று சொல்லி மறைந்தனர். அகில உலகமும்கண்ணனுக்குள் அடங்கி இருப்பதால் அவன் உண்ட ஒரு சோற்றுப் பருக்கை ரிஷிக்கும் சீடர்களுக்கும் பசி ஆற்றிவிட்டது
 எனக்கு இதன் ஊடே இன்னொரு கதையும் நினைவுக்கு வந்தது. மணிமேகலைக்கு மணிமேகலா தெய்வம் அவளது முற்பிறப்பை உணர்த்திச்சென்றது  தீவதிலகை என்னும் காவல் தெய்வம் அன்று கோமுகிப் பொய்கையில் ஆபுத்திரன் எறிந்த அமுதசுரபி எனும் அட்சய பாத்திரம் தோன்றும் என்றும் அதை அவள் எடுத்துச் சென்று பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடும் பிச்சையை முதன் முதலில் ஏற்றால் அளவு குன்றா அமுத சுரபியால் பசிப் பிணி ஒழிக்கலாம் என்று கூற மணிமேகலை அந்த அமுத சுரபியை ஏற்று காயசண்டிகை என்னும் தோழி மூலம் ஆதிரை என்பாளின் கதை கேட்டு இவளே முதல் பிச்சையிடத் தக்கவள் என்று தெளிந்து பிச்சை ஏற்ற கதையும் நினைவுக்கு வந்தது.
சரி, அட்சயப் பாத்திரக்கதைகள் ஏன் நினைவுக்கு வரவேண்டும்? நான் பலமுறை என் பதிவுகளில் எழுதி வந்திருக்கிறேன் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்லும் நாம் நம்மிடையே தெரிந்தோ தெரியாமலோ, கலாச்சாரக் காரணங்களால் சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுக்கு இடம் கொடுத்து விட்டோம். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்னும் எண்ணம் பலரது இரத்தத்தில் ஊறிப் போய் இருக்கிறது. இதற்கு மாற்று கொண்டு வர வேண்டுமென்றால் நாம் அனைவரும் சமம் என்னும் உணர்வு வர வேண்டும். ஆனால் நாட்பட நாட்பட ஏற்ற தாழ்வுகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. போதாததற்கு இப்போது இன்னொரு சாதியாக பணக்காரன் ஏழை என்று பாகுபாடும் அதிகரித்து வருகிறது. இளவயதிலிருந்தே அனைவரும் சமம் என்று சொன்னால் மட்டும் போதாது. அதற்கான சூழ்நிலையும் உருவாகவேண்டும் அந்த மாதிரி நிலை ஏற்பட கல்வி அவசியம். அதிலும் எல்லோருக்கும் சமமான கல்வி அவசியம் ஏழை பணக்காரனென்னும் பேதமில்லாமல் அனைவரையும் ஒரே மாதிரி பாவிக்கும் கல்வி அவசியம். கல்விக்கூடங்களில் அம்மாதிரி குழந்தைகள் உணர வேண்டுமானால் எல்லாக் குழந்தைகளுக்கும் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமில்லாமல் ஒரே மாதிரி உணவு, ஒரே மாதிரி உடை, ஒரே மாதிரி கல்வி அத்தியாவசியம் கல்வியை  மத்திய அரசாங்கம் பொறுப்பெடுத்துப் போதிக்க வேண்டும் மொத்தத்தில் கல்வி அரசுடமை ஆக்கப் பட்டு எல்லோருக்கும் இலவசமாக அளிக்கப் பட்டால் சிறார்கள் மனதில் இந்த ஏற்ற தாழ்வு பாகுபாடு வராமல் போக வாய்ப்பு அதிகரிக்கும். அரசு இதை ஓரளவு உணர்ந்து இருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது, ஏழைக் குழந்தைகளுக்கு அரசாங்கப் பள்ளிகளில் மதிய உணவு இலவசமாக வழங்கப் படுகிறது
இந்த மதிய உணவு திட்டம் பல மாநிலங்களிலும் செயல் படுத்தப் படுகிறது. இதன் செயல் முறை எந்த அளவில் இருக்கிறது என்று அண்மையில் படித்தேன். அதன் பலனே இந்த அமுதசுரபி அட்சயபாத்திர நினைவுகளுடனான இக்கட்டுரை.

தமிழ் நாட்டில் இந்த இலவச மதிய உணவுத் திட்டம் அரசாலேயே நடத்தப் படுகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் வேறு NGO-க்களும் இருக்கிற மாதிரியும் தெரிகிறது

கொல்கொத்தா அருகில் ஒரு கிராமம் ஒன்றில் எச்சில் இலைகளுக்குப் போராடும் சிறுவர்களைக் கண்டபோது பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுபாதருக்குத் தோன்றிய சிறு பொறியே அக்‌ஷ்யபாத்திர ஃபௌண்டேஷனாக உருவெடுத்ததாகப் படித்தேன் பெங்களூரில் அநேகமாக எல்லாப் பள்ளிகளுக்கும் மதிய உணவு இந்த ஃபௌண்டேஷனால்தான் செயல் படுத்தப் படுகிறது.தனியார் மற்றும் மாநில மத்திய அரசின் மானியத்தால் நடைபெறும் இப்பணியால் ஏழைக் குழந்தைகள் ஒருவேளையாவது உணவு உட்கொள்ள முடிவதால்பள்ளியில்படிக்கும் சிறார்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. ஒரு வேளை மதிய உணவு ஒரு ஆண்டு காலத்துக்கு ஒரு மாணவனுக்குக் கொடுக்க வருடச் செலவு ரூபாய் 750-/ மட்டுமே என்கிறார்கள்.
ஒருங்கிணைக்கப்பட்ட  நவீன முறை உணவு தயாரிப்பால் செலவினங்கள் குறைவதோடு ஆரோக்கியமான உணவும் வழங்கப் படுகிறது. இம்மாதிரி CENTRALISED சமையல் கூடங்கள் ஒன்பது மாநிலங்களில் இருபது இடங்களில் செயல்படுவதாகத் தெரிகிறது இதில் ஒரு இடம் சென்னையிலும் இயங்குகிறது என்று தெரிகிறது.
 அண்மையில் பத்திரிகை செய்தி ஒன்று படித்தேன். அதில் இந்த மதிய உணவு பள்ளிகளுக்கு வழங்கும் செயலில் கர்நாடகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. 77.79% கவரேஜ் ஆகி இருப்பதாகவும் அதை அடுத்து பஞ்சாப், டாமண்டையூ, ஹிமாசல் ப்ரதேஷ், பீஹார் என்று முதல் கற்றையில் வருகின்றன. குஜராத் ,தமிழ்நாடு, ராஜஸ்தான், கேரளா போன்ற மாநிலங்கள் இரண்டாவது கற்றையிலும் வருகின்றன. தமிழ் நாட்டில் 50சதவீதத்துக்கும் சற்றே அதிக மதிப்பெண் வழங்கப் பட்டிருக்கிறதுஒதுக்கப்படும் நிதி அளவு , அதில் உபயோகிப்பது , என்பன போன்ற குறியீடுகளைக் கொண்டு

கணக்கிடுகிறார்கள். இந்த அட்சய பாத்திரா ஃபௌண்டேஷன் ISCON-இன் பொறுப்பில் இயக்கப் படுகிறது. மதிய உணவு திட்டம் இன்னும் பூரணமாக செயல் பட வேண்டும்  எல்லாப் பள்ளிகளிலும் எல்லோருக்கும் உணவு கட்டாயமாக வழங்கப் படவேண்டும். குறைந்தது உண்ணும் உணவிலாவது சமநிலை ஏற்பட வேண்டும்  பள்ளிகள் எல்லாம் அரசுடமை ஆக்கப் பட வேண்டும் கல்வி வியாபாரிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப் பட வேண்டும்

கதைகளில் பசிப்பிணி போக்க அமுத சுரபியோ, அட்சய பாத்திரமோ இருப்பது போல் அறிவுப் பிணியைப் போக்க ஏதாவது கதை இருக்கிறதா.?HOW I WISH THERE IS ONE...!

புதன், 27 நவம்பர், 2013

பார்த்ததும் படித்ததும் பகிர்வு


                          பார்த்ததும் படித்ததும் பகிர்வு.
                           ------------------------------------------


சில நேரங்களில் பதிவு எழுத எண்ணங்கள் ஏதும் தோன்றவில்லையானால் , நான் படித்துப் பார்த்து ரசித்த சில விஷ்யங்களை பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்றும். இப்போது அந்தமாதிரியான பகிர்வே பதிவாகிறது. முதலில் அமெரிக்க நாசா வினர் வெளியிட்டுள்ள இரண்டு புகைப் படங்கள் என் நண்பர் ஒருவர் இ-மெயில் செய்தது

இந்தியா சாதாரண நாளிலும்  தீபாவளியன்றும்




இதுவும் ஒரு நண்பர் குறிப்பிட்டிருந்தது, ஒருவருக்கு திடீர் என்று stroke வந்து விழுந்து விட்டார் என்றால் செய்ய வேண்டிய முதலுதவி என்கிறார்.

ஸ்ட்ரோக் வந்து விழுந்தவரை உடனே இட மாற்றம் செய்யாதீர்கள். இட மாற்றம் செய்வதால் நுண்ணிய ரத்தக் குழாய்கள் பழுதாகலாம், ஸ்ட்ரோக் வந்து விழுந்தவரை அதே இடத்தில் உட்கார வைத்து, ஒரு சிறிய ஊசியால் அவரது கையின் பத்து விரல்களிலும் நகத்திலிருந்து ஒரு மில்லி மீட்டர் தூரத்தில்  சுருக் என்று குத்தி ஒவ்வொரு விரலிலிருந்தும் ஒரு சொட்டு ரத்தம் ( ஒரு பட்டாணி அளவு ) வர வழைக்க வேண்டும். அப்போதே பாதிக்கப் பட்டவரின் பார்வை தெளிவாகும், ஸ்ட்ரோக்கினால் வாய் கோணி இருந்தால் அவரது இரு காது மடல்களையும் சிவக்கும் அளவுக்குப் பிடித்திழுத்து ஊசியால் குத்தி ரத்தம் ( ஒரு சொட்டு ) வரவழைக்க வேண்டும்  சிறிது நேரத்தில் அவர் சுய நிலைக்கு வந்து விடுவார்

இது சீனாவின் ஒரு பழமையான , ஆனால் குணம் தரும் வைத்திய முறையாம் . எதிர்பாராத விதமாக யாருக்காவது ஸ்ட்ரோக் வந்தால் முதல் உதவியாக இதைச் செய்வதால் எந்த பாதகமும் ஏற்படாது. ஆனால் ஸ்ட்ரோக்கில் இருந்து குணமடைந்தால் நல்லதுதானே. குத்தும் ஊசி ஸ்டெர்லைஸ் செய்ததாய் இருந்தால் இன்னும் நல்லது.


இப்போது உங்கள் மூளையைக் கசக்கிப் பிழிந்து கீழே காணும் புதிருக்கு விடை கொடுக்க முடிகிறதா பாருங்கள்.

Can you answer all seven of the following questions
With the same word?

1. The word has seven letters....
2. Preceded God...
3. Greater than God...
4. More Evil than the devil...
5. All poor people have it...
6. Wealthy people need it....
7. If you eat it, you will eventually
die.

விடை எல்லாப் பின்னூட்டங்களையும் பார்த்த பிறகு. சரியாக பதில் தெரிவிக்கும் நபருக்கு மேதாவி என்னும் பட்டப் பெயர் தரப்படும். 

பின்னூடங்கள் பார்த்ததும் அதிகம் நேரம் கடத்தாமல் பதில்களைச் சொல்லிவிடுவதே உத்தமம் என்று தோன்றியது திரு .திண்டுக்கல் தனபாலனுக்கும் திருமதி இராஜராஜேஸ்வரிக்கும் மேதாவி எனும் பட்டம் தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்,திருமதி, இராஜராஜேஸ்வரி ஏற்கனவே என்னிடம் இருந்து GENIUS பட்டம் வாங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. THE CORRECT ANSWER IS  NOTHING and this is how.

NOTHING!

NOTHING has 7 letters.
NOTHING preceded God.
NOTHING is greater than God.
NOTHING is more Evil than the devil.
All poor people have NOTHING.
Wealthy people need NOTHING.
If you eat NOTHING, you will die.
CONGRATULATIONS DD and MEDAM...! 
    






திங்கள், 25 நவம்பர், 2013

சிந்திக்க வேண்டியபிரச்சனை


                            சிந்திக்க வேண்டிய பிரச்சனை
                            ------------------------------------------



 நான் திருச்சியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று பெங்களூர் வந்தபோது ஓய்வை அனுபவிக்க வேண்டுமானால் நம் உடல் உறுப்புக்களும் புலன்களும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். சிறுவயதிலிருந்தே கண்ணாடி அணியத் தேவையாகி விட்டது. பணியில் இருக்கும்போது எனக்கு காது கேட்பதில் கொஞ்சம் பிரச்சனை இருந்தது. வேலையில் இருக்கும் போது சரியாக கவனிக்க முடியவில்லை. ஆகவே இங்கு வந்ததும் ஒரு காது நிபுணரிடம் சென்றேன். அவர் எனக்கு stapidectomy என்னும் காது ஜவ்வு இறுக்கம் இருப்பதாகவும் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமென்றும் சொன்னார். அறுவைச் சிகிச்சை செய்தால் இருக்கும் கேட்கும் திறனும் போய் விடுமோ என்ற அச்சம் இருந்தது. நான் டாக்டரிடம் எனக்கு முழுதும் கேட்கும் திறன் கிடைக்க எத்தனை சதம் வாய்ப்பு இருக்கிறது என்று கேட்டேன். அவர் 90% என்றார். நமக்கு என்று அந்த மீதி பத்து சதத்தால் இருக்கும் திறனும் போய் விடுமோ என்ற பயம். எதற்கும் இன்னொரு நிபுணரைப் பார்க்கலாம் என்று தீர்மானித்து வேறொரு டாக்டரை அணுகினோம். அவரும் அறுவைச் சிகிச்சை வேண்டும் என்றார். பூரண குணம் கிடைக்க என்ன வாய்ப்பு என்று அவரிடமும் கேட்டேன். அதற்கு அவர், YOU WILL HEAR WELL  என்றார். அந்த உறுதி என்னை அவரிடம் அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள வைத்தது உஷ்... அப்பாடா.. ஒரு பதிவு எழுதுவதற்கு இவ்வளவு முன்னுரையா.....நான் இதுவரை எழுதியதற்கும் இனி எழுதப் போவதற்கும் சம்பந்தமில்லை. சம்பவ நிலைக்களனை விளக்க இவ்வளவும் தேவைப் பட்டது.( ? )
அறுவைச் சிகிச்சைக்கு நான் ஒரு நாள் மருத்துவமனையில்  இருக்க வேண்டும் என்றார்கள். என்னுடன் அன்று இரவு மருத்துவ மனையில் என் மனைவியும் தங்க முடிவாயிற்று.அங்கு இன்னொரு அறையில் இன்னொருத்தரும் சிகிச்சைக்கு இருந்தார். அவருக்குத் துணையாக ஒரு பெரியவரும் இருந்தார். அன்று இரவு தூங்கப் போகும்முன் அந்தப் பெரியவர் என் மனைவியிடம் தனக்கு தூங்கும் போது குறட்டை விடும் பழக்கம் இருக்கிறதென்றும் அதைப் பொறுத்துக் கொள்ளும்படியும் வேண்டினார்.
என் மனைவியும் “ஓ, அதனாலென்ன .... பரவாயில்லை என்றிருக்கிறார் அதுவுமல்லாமல் இப்படி ஒளிவு மறைவு இல்லாமல் அவர் கூறியது அவர் மேல் ஒரு தனி மதிப்பே வந்துவிட்டது அவளுக்கு. ஆனால் அது அன்றைக்கு மட்டும்தான். இரவு உறங்கப்போக  ஆயத்தம் செய்ய அவளுக்கு பயம் வந்து விட்டது. நிசப்தமான இரவில் ஒரு சிங்கம் அருகில் வந்து உறுமுவதுபோல் இருந்திருக்கிறது. பிறகு அவளுக்கு  அந்தப் பெரியவர் சொன்னது நினைவுக்கு வந்தது.. இருந்தாலும் இப்படி ஒரு குறட்டைச் சப்தம் இருக்கும் என்று அவள் நினைத்துப் பார்க்கவில்லை. என் அருகில் வந்து சப்தத்தைக் கேட்கச் சொன்னார். எனக்குத்தான் காது காதாயிருக்கவில்லையே. ஏதோ சிறு சப்தம் .அதற்குப் போய் இவ்வளவு மருள்கிறாயே என்றேன். நாளை உனக்கு ஆப்பரேஷன் முடிந்தபிறகு கேட்க வைக்க வேண்டும் என்று கருவிக் கொண்டாள்.
மும்பை அருகே இருக்கும் உல்லாஸ் நகருக்கு ஒரு உறவினர் திருமணத்துக்குச் சென்றோம். முதல் நாள் இரவு ஒரு அறையில் நாங்கள் நால்வர் தங்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அந்த இரவு அங்கு ஒரு தாளவாத்தியக் கச்சேரியே நடந்தது. என்னைத் தவிர மற்ற மூவரும் உண்மையிலேயே குறட்டை விட்டுத் தூங்கினர். அன்று சிவராத்திரியாயிருந்திருந்தால்  எனக்கு கண்விழித்த பலன் கிடைத்திருக்கும். வித விதமான ஏற்ற இறக்கங்களுடன் வெவ்வேறு சுருதிகளில் ஒரு அபஸ்வரக் கச்சேரியே இரவு முழுவதும் நடந்தேறியது.
NOW LIGHTER THINGS APART இந்தக் குறட்டை என்பது என்ன.? வியாதியா? நிறுத்த முடியுமா.?குறட்டை விட்டுத் தூங்குபவரை அவர்கள் தூக்கத்தை சற்றே குலைத்தால் ஒரு சில விநாடிகளுக்கு குறட்டை சப்தம் நிற்கலாம்
குறட்டை என்பது என்ன. ?மூச்சுப்பாதையில் ஏற்படும் சில அதிர்வுகளே குறட்டை சப்தமாகத் கேட்கிறது.நாம் உறங்கிய பின் நம் சுவாசக் குழாயில் இருக்கும் தசைகள் relax ஆகுமாம்.அந்த நேரத்தில் தொண்டை சுருங்கத் தொடங்குமாம். சுருங்கும் தொண்டையில் காற்று போய் வரும் பாதை போதுமானதாக இல்லாமல் இருக்குமாம் அழுத்தம் அடையும் தொண்டை பின் புற தசைகளை அதிரச் செய்யும்போது வெளியாகும் சப்தமே குறட்டை எனப்படுகிறது குறட்டைக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதிக உடல் எடை.தொண்டை பலமின்மை, தொண்டைப் பகுதியில் கொழுப்பு சேகரம், தாடையின் அமைப்பு, மூக்கு துவாரத்தில் தடுப்பு மல்லாக்கப் படுக்கும்போது நாக்கு பின்னோக்கி இழுக்கப் படுவதால் தடங்கல் போன்றவை காரணங்களாகக் இருக்கலாம். இதுவே OSA  எனப்படும் அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா என்னும் நோய்க்கு அடிகோலியாக இருக்கலாம் அப்னியா என்றால் தற்காலிக மூச்சு நிறுத்தம் என்று பொருள்படும் உறங்கும்போது மூச்சு நின்று நின்று தொடரும் . இதனால் பாதிப்புக்கு ஆளானவர்கள் பகல் நேரத்தில் சோர்வாகக் காணப் படலாம்
பொதுவாக வயதானவர்களுக்கு குறட்டை விடும் பழக்கம் வரலாம் குறட்டையால் வாழ்க்கை முறையே அவதிக்குள்ளாகலாம். கணவனின் குறட்டையால் உறக்கம் இழந்து விவாகரத்து கோரிய பெண்களைப் பற்றிக் கேள்விப்படும் அதே நேரத்தில் அந்த சப்தத்துக்குப் ( தாலாட்டு. ?) பழக்கப் பட்ட மனைவியர் அது இல்லாமல் உறக்கம் வருவதில்லை என்றும் கூறலாம் எதையும் எளிதாகவே எடுத்துக் கொள்ளப் பழகிவிட்ட நாம் எப்பொழுது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிந்திருப்பதும் அவசியம். ( விக்கிப் பீடியாவுக்கு நன்றி

SNORING. NOTE that the snorting sound is most often caused by the vibration of the soft palate. and the uvula
Snoring sound production is most often from the soft palate and uvula. The black arrow points to the soft palate and the grey arrow points to the uvul
நாளை பற்றிய ஒருகுறிப்பு. நாளை பார்த்துக்கொள்ளலாமா.?

 

சனி, 23 நவம்பர், 2013

பயண அனுபவங்களும் சில சந்திப்புகளும்---3



 பயண அனுபவங்களும் சில சந்திப்புகளும்---3
----------------------------------------------------------------
( இந்த பதிவுத் தொடரின் முந்தைய பதிவுகளில் வெளியிட்ட புகைப் படங்கள் திறக்க வில்லை என்று பின்னூட்டங்களில் பலரும் எழுதி இருந்தனர். அவற்றை சரி செய்துவிட்டேன். இப்போது எந்த பிரச்சனையுமிருக்காது என்று நம்புகிறேன் சரி செய்ய உதவிய திண்டுக்கல் தனபாலனுக்கு நன்றிகள். இப்போது படங்களைக் காண வாரீர்.)


சென்னைக்கு வந்தால் என் மனைவிக்கு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு அவசியம் செல்ல வேண்டும் சுவாமி தரிசனம் முடிந்து அருகில் இருக்கும் கிரி ட்ரேடிங் கடைக்குப் போனோம். கைக்கு அடக்கமான சிறு சுலோக புத்தகங்கள் அவளுக்கும்  பிறருக்குக் கொடுக்கவும் வேண்டும். அவள் புத்தகங்களைத் தேடி எடுத்துக் கொண்டிருக்கும்போது நான் வில்லிபுத்தூராரின் பாரதம் கிடைக்குமா என்று கேட்டேன். இருக்கிறது என்று கூறி தலையணை சைசில் நான்கு புத்தகங்கள் காண்பித்தார்கள். அவற்றின் விலையைக் கேட்டதும் எனக்கு தலையை சுற்றாத குறைதான் அந்த விலை கொடுத்துப் புத்தகம் வாங்கும் நிலையில் நான் இல்லை. தேவை என்றும் படவில்லை.

நாங்கள் மயிலையில் இருக்கும்போது திரு. இராய.செல்லப்பா அவர்கள் தொலை பேசியில் தொடர்பு கொண்டார்கள். நாங்கள் மதியம் மூன்று மணி அளவில் வீட்டில் இருப்போமா என்றுகேட்டார். அவரும் அவரது துணைவியாரும் எங்களை சந்திக்க வந்தனர். சென்னையில் நாங்கள் இருந்த இடத்திலிருந்து சுமார் 40-கி.மீ. தூரத்தில் இருப்பதாக என் பதிவின் பின்னூட்டத்தில் எழுதி இருந்தார். அவ்வளவு தூரத்திலிருந்து வருவது சிரமம் என்று எனக்குத் தோன்றியதால் , அவர் சந்திக்க வருவதாகக் கூறியதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவரது பதிவுகளைப் படித்தபோது எனக்கிருந்த எண்ணங்களுக்கு மாறாக எளிமையாய் இருந்தார். அவர் எழுதி இருந்த ஒரு கவிதைத் தொகுப்பினை எனக்குக் கொடுத்தார். “இனிமைக்கவிஞர் என்று அறியப்பட்டவர் என்று தெரிந்தது. அவர் புது டெல்லியில் இருந்தபோது பாரதிக்கும் பாரதி தாசனுக்கும் விழா எடுத்தபோது எழுதிய கவிதைகளின் தொகுப்பை எட்டைய புரத்து மீசைக்காரன் என்னும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டிருந்ததைக் கொடுத்தார். கவிதை எழுதி வாசித்தால் கவிஞனுக்கு என்ன கிடைக்கும்  என்று கேள்வி கேட்டு பதிலும் சொல்கிறார்
n       வந்துபோக வாகனம் இருந்தால் கொண்டு போகதுண்டுகிடைக்கலாம் (எதற்கும் அந்தஸ்து வேண்டாமா?)
n       மணிவிழா நடத்தி மலர் வெளியிட்டால்,மாலை கிடைக்கலாம். அதுவும் மாலையில் நடந்தால் மட்டுமே கிடைக்கும் ( மாலை, மாலையிலன்றோ மலிவு)
n       அரங்கம் அமைத்து அழைப்பிதழ் அச்சிட்டுவிழா நடத்தும் பெரியோர்தம்மை உரிய சொற்களால் ஓங்கிப்புகழ்ந்தால் அடுத்த நிகழ்ச்சிக்கு அனுமதி கிடைக்கலாம். மற்றபடி கவிஞனுக்கு என்ன கிடைக்கும்.?
திருமதி செல்லப்பா கருவேலி V.கிருஷ்ணமூர்த்திக்கு உறவு என்று தெரிந்தது.. அப்படியானால் ஒருவேளை திருச்சி பதிவர் திருமதி. கீதா சாம்பசிவத்துக்கும் உறவாயிருக்கலாமோ.?
நாங்களே என் மகன் வீட்டில் தங்கி இருந்தோம். என் மகன் டூரில் இருந்தான். அந்த நிலையில் அவர்களுக்கு சரியாக விருந்தோம்பி உபசரிக்க முடியவில்லை.  என் காமிராவிலும் சார்ஜ் தீர்ந்து போனதால் படம் எடுக்க முடியவில்லை. அவரது காமிராவில் எடுத்த சில படங்களை அனுப்பிக் கொடுத்தார் அவற்றில் சிலகீழே. “ வாழ்வின் விளிம்பில்” கதைத் தொகுப்பின் ஒரு பிரதியை அவர்களுக்குக் கொடுத்தேன்.

நானும் திரு.செல்லப்பாவும்
திருமதி&திரு.செல்லப்பா எங்களுடன்



அவர்கள் சென்ற பிறகு என்னைச் சந்திக்க வருவதாகக் கூறியிருந்த நண்பர்களுக்காகக் காத்திருந்தோம்.யாரும் வரவில்லை.முகப்பேரிலிருந்து என் தம்பி வந்தான்.அவனுக்கு நாங்கள் அவன் வீட்டுக்கு வரவில்லை என்று வருத்தம் பதிவுலக நண்பர்களை சந்திக்க வேளச்சேரிசௌகரியமாக இருக்கும் என்று நினைத்திருந்தோம் 
 அடுத்த நாள் (15-ம் தேதி) நாங்கள் சற்றும் எதிர்பார்க்காத இளைய பெண் பதிவர் மைத்துளிகள் மாதங்கி அவரது தந்தையார் திரு மகாலிங்கத்துடன் வந்தார். இன்னும் சில நண்பர்கள் சந்திக்க வருகிறார்கள் என்று கூறினேன். செல்வி மாதங்கி என் பதிவுகளுக்கு அடிக்கடி வருபவர். அவரது தந்தை என் பதிவுகளை தொடர்ந்து படிப்பவர் என்று தெரியும் கோவிலில் கடவுளின் உருவத்தை சரியாக தரிசிக்க முடியவில்லையே என்று ஒரு பதிவில் எழுதி இருந்தேன். அதற்கு பின்னூட்டம் எழுதி இருந்த மாதங்கியிடம் எனக்கு ஒரு மதிப்பே ஏற்பட்டு விட்டது. பல கலைகளில் ( விசேஷமாக சங்கீதத்தில்) ஆர்வம் கொண்டவர். புத்திசாலி அவர் எங்களைத் தேடி வந்து சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். திரு .மகாலிங்கம் அவர்கள். ஒரு தேர்ந்த வாசகர்(avid reader). என்னுடைய பல பதிவுகளை நினைவில் வைத்துக் கொண்டு பேசினார் அண்மையில் நான் எழுதி இருந்த அடையாளங்கள் என்னும் பதிவை சிலாகித்துப் பேசினார். மாதங்கி எடுத்து அனுப்பி இருந்த புகைப்படம் கீழே. 

 அவர்களுக்கும் “ வாழ்வின் விளிம்பில்ஒரு பிரதியைக் கொடுத்தேன்.ஐடி கம்பனி வேலையில் இருந்தவர், தற்போது ஒரு பாங்கில் அதிகாரியாக இருக்கிறார்.திரு. மகாலிங்கம் தஞ்சை கவிராயருக்கு அறிமுகமானவர் என்று தெரிந்தது. அவர் தான் ஒரு பதிவராக இல்லாவிட்டாலும் பலருடைய பதிவுகளைப் படிக்கிறார். திரு.நடன சபாபதி அவர்களுடைய பதிவுகள் நன்றாக இருப்பதாகக் கூறினார். நானும் அவரது வலைக்குச் செல்ல வேண்டும்


.  
வருவதாகக் கூறியிருந்த நண்பர்கள் வராததால் சிறிது நேரத்துக்குப் பிறகு மாதங்கியும் அவரது தந்தையும் இரு சக்கர வாகனத்தில் மாதங்கி ஓட்ட மேற்கு மாம்பலம் சென்றனர்.வருவதாகச் சொன்ன பதிவர்கள் அடுத்த நாள் நான் ஊருக்குப் போகுமுன் வந்து பார்ப்பதாகச் செய்தி வரவே, அடுத்த நாளுக்காகக் காத்திருந்தோம். 
ஆனால் அடுத்த நாள் (16-ம்தேதி) என் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக நட்பாயும் தொடர்பிலும் இருக்கும் நண்பர் ஒருவர் வந்திருந்தார். உண்மையைச் சொல்லப் போனால் என் பதிப்புகளைப் புத்தகமாக்கத் தூண்டியவரே இவர்தான். முதலில் என் புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்து கூறினார். என் புத்தகங்களை அவரது தமிழ் அறிந்த நட்புகளுக்கு அறிமுகப் படுத்துவதாகக் கூறி பத்து புத்தகங்களை விலை கொடுத்து வாங்கிக் கொண்டார். பல்வேறு செய்திகளைப் பகிர்ந்து கொண்டபோது சில பொது நண்பர்கள் பற்றிப் பேச்சு வந்தது. அப்படி ஒரு நண்பரைப் பார்க்க எங்களை அவரது காரில் கூட்டிக்கொண்டு போனார். அவர்களுக்கும் என் புத்தகம் பற்றி அறிந்தபோது மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தனர். சந்திப்பு முடிந்து எங்களை வீட்டில் சேர்த்துவிட்டு அவர் திரும்பினார். வருவதாகச் சொன்ன நண்பர்கள் கடைசிவரை வரவே இல்லை. அவர்களுக்கு என்ன பிரச்சனையோ வர முடியவில்லை. 
இப்போது மீண்டும் இப்பதிவுத் தொகுப்பு எழுதும் முன் எழுதி இருந்ததை நினைவு கூறுகிறேன். நான் சரியாகத் திட்ட மிடாததால் காஞ்சியில் எல்லாக் கோயில்களுக்கும் போக முடியவில்லை. சென்னை வருமுன்பே சந்திக்க வேண்டுகிறேன் என்ற பதிவில் எழுதியதோடு அல்லாமல் நான் யார் யாரை சந்திக்க முடியும் என்பதை சிந்திக்கவில்லை. யார் யார் சென்னை வாசிகள் அவர்களைத் தொடர்பு கொள்வது எப்படி என்று சரியாகத் திட்ட மிடாததால் சந்திப்பு என்னும் அறுவடை திருப்தியாக இருக்கவில்லை. ஆங்கிலத்தில் ஒரு சொல் கேட்டிருக்கிறேன்
“ IT IS SAID THAT GOOD JUDGEMENT COMES FROM EXPERIENCE AND EXPERIENCE YOU GET FROM BAD JUDGEMENTS"           

வியாழன், 21 நவம்பர், 2013

பயண அனுபவங்களும் சில சந்திப்புகளும் -2


   பயண அனுபவங்களும் சில சந்திப்புகளும்--2
------------------------------------------------------------------



தஞ்சைக் கவிராயரை நான் சந்திக்க விழைந்ததே முக்கியமாக என் நன்றியை நேரில் தெரிவித்துக் கொள்ள நினைத்ததாலும் முகமறியா நட்பை தக்க வைத்துக் கொள்ள விரும்பியதாலும்தான். கவிராயர் பற்றி இன்னொரு முகமறியா நண்பர் சுந்தர்ஜி மூலம் தெரிந்து கொண்டேன். பொதிகை தொலைக்காட்சியில் ஓரிரு முறை “கொஞ்சம் கவிதை, கொஞ்சம் தேநீர் நிகழ்ச்சியில் அவர் கவிதை வாசிக்கக் கேட்டிருக்கிறேன். நான் என் சிறுகதைத் தொகுப்பை புத்தக வடிவில் கொண்டு வர விரும்பிய போது அதற்கு அணிந்துரை அளிக்கச் சிறந்தவர் இவரே என்று என் மனம் சொல்லியது.என்னைப்பற்றிய எந்தவித அபிப்பிராயமும் இல்லாமல் கதைத் தொகுப்பினைப் படித்து அவர் அணிந்துரை தந்தால் காய்தலோ உவத்தலோ இல்லாமல் நடு நிலை எண்ண வெளிப்பாடாக இருக்கும் என்று நினைத்தேன். புத்தகத்தில் அவர் எழுதி இருக்கும் அணிந்துரை என் கணிப்பு சரியே என்று தெரிவிக்கிறது.
(கவிராயரை சந்திக்கும் போது சுந்தர்ஜியும் உடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சியாய் இருந்திருக்கும், ஆனால் என் துரதிர்ஷ்டம் சுந்தர்ஜி அப்போது சென்னையில் இருக்கவில்லை)



ஜி.எம்.பி.யின் கதைகளைப் படித்துப் பார்த்தேன். இக்கதைகள் எந்தப் பத்திரிகையிலும் பிரசுரம் ஆனவை அல்ல. ஆகக் கூடியவையும் அல்ல. பத்திரிகைக் கதைகளுக்கான இலக்கணமோ, உத்தியோ இன்றி எழுதப்பட்ட கதைகள் இவை. 

தற்காலம் தமிழ்ப்பத்திரிகைகளில் பிரசுரமாகும் கதைகளைப் பற்றிச் சொல்வதற்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. ஒன்றும் பிரயோசனமில்லை. அத்தி பூத்தாற்போல் அருமையான கதைகள் வரத்தான் செய்கின்றன. 

ஜி.எம்.பி. இந்த இரண்டு பிரிவிலும் அடங்காதவர். எழுத்தாளர் ஆகவேண்டும் என்ற உத்தேசமோ அல்லது அவ்வாறு ஆகியிருப்பதை அடையாளப்படுத்தும் நோக்கமோ சிறிதுமின்றித் தன் எண்ணங்களைப் பதிவு செய்திருக்கிறார். வாசகனின் சுவாரஸ்யத்துக்காக இக்கதைகள் எழுதப் படவில்லை.


இக்கதைகளில் உண்மைகள் மினுக்கட்டாம் பூச்சிகளாகப் பறந்து செல்கின்றன. இருட்டில் பறக்கும் மினுக்கட்டாம் பூச்சிகளால் இருட்டை விலக்க முடியாவிட்டால் என்ன? தம்மளவில் வெளிச்ச ரூபங்களாய் அவை வெளிப்படும்போது இருட்டு தோற்றுப் போகிறது - அவற்றிடம்.
                 =======

ஜி.எம்.பி. எழுத எடுத்துக் கொண்டிருக்கும் விஷயங்களில் நினைப்பதைச் சொல்ல முயற்சிக்கிறார். ஆனால் அவை சிறுகதை என்ற வடிவத்துக்குள் அடங்க மறுத்து விடுகின்றன. ஏன் அடங்க வேண்டும்? பத்திரிகைக் கதைகளைப் படித்துப் படித்து மழுங்கி விட்ட வாசக ரசனைக்கு இக்கதைகள் உரியவை அல்ல. வாழ்க்கையின் ரகசியங்களை, அதன் ஆழ அகல பரிமாணங்களைக் கூர்ந்து பார்த்துத் திகைத்து நிற்கும் மனிதனுடன் இக்கதைகள் பேசுகின்றன.

இந்த அணிந்துரை புகழவோ இகழவோ இல்லை. மனசில் பட்டதை எழுதி இருக்கிறார். இவர் ஒரு சுவாரசியமான மனிதராக இருக்கவேண்டும்.இவரைப் பார்த்துப் பேச வேண்டும் என்ற உந்துதலாலும் வெளிவந்த புத்தகத்தின் ஒரு பிரதியை அவருக்குக் கொடுக்கவும் ஊரப்பாக்கம் போனோம்
அவர் தினமும் நான்கு மணி அளவில் அவரது பேரனைப் பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வருவது வாடிக்கை. நாங்கள் ஏறத்தாழ அதே நேரத்தில் அவர் வீட்டுக்குச் சென்றோம். எங்களை வரவேற்று இருக்க வைத்து குழந்தையைக் கூட்டிவரப் போனார். போகும் முன் அவர் எழுதி வெளியாகி இருந்த “ வளையல் வம்சம் எனும் கவிதை நூலைக் கொடுத்துச் சென்றார். எந்த நேரத்திலும் கவிதை எழுத முடியும், ஆனால் எல்லா நேரத்திலும் படிக்க முடியாதுஎன்று எழுதி இருப்பது கண்டேன். அணிந்துரை தர அவர் எடுத்துக் கொண்ட நேர அவகாசம் நினைவுக்கு வந்தது. கிடைத்த அவகாசத்தில் பல கவிதைகள் படித்துவிட்டேன். எளிமையான வார்த்தைகளில் உணர்வுகளைச் சொல்லிச் செல்கிறார்.
அவரிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது சிலர் எழுதும் கவிதைகள் abstract-ஆக விளங்காமல் இருப்பது பற்றிக் கேட்டேன். அவர் பாரதியை மேற்கோள் காட்டினார். பாரதி சொன்னதாக அவர் கூறியது “உன் எழுத்துக்கள் சாலையில் போகும் சாதாரணனும் புரிந்து கொள்ள வேண்டியதாய் இருக்க வேண்டும் அப்படி இல்லாவிட்டால் அந்தக் கவிதையைக் கிழித்துப் போடு
குழந்தைகள் பற்றிப் பேசும்போது அவர் சொன்னார். குழந்தைகள் கடவுள் போன்றவர்கள். அவர்களுக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்துக் கெடுத்து விடாதீர்கள்.அவர்களுக்குக் கல்மிஷம் கிடையாது. அவர்களுக்குத் தெரிந்த வார்த்தைகளும் மிகக் குறைவு என்றார். நான் என் பங்குக்கு குழந்தைகள் குழந்தைகளாக இருக்கும்வரை கடவுள் போல. ஆனால் வளர வளர அந்தக் குழந்தைமை காணாமல் போவதைப் பார்க்கும்போது வருந்தக் கூடாது என்றேன். அவரது “அவதாரம் என்னும் கவிதையைப் படியுங்களேன்
“பேரனுக்காக
எவ்வளவோ அவதாரங்கள்
எடுக்க வேண்டி இருக்கிறது.
அதிலும் அந்த யானை அவதாரம்
ரொம்பக் கஷ்டம்

இல்லாத வால் ஆட்டி
ஆடாத காது அசைய
நாலு கால் நடையில்
ஒரு கை தூக்கிப் பிளிற வேண்டும்.

முதுகில் உட்கார்ந்து
முன்னேறிச் செல் என்பான்
முழங்கால் வலிக்கும்

அப்புறம் சிங்கம் போல்
உறுமு என்பான்
நான் இருமுவேன்
இருமலிலும் உறுமலின் சாயை
இருந்திருக்கும் போல
விட்டு விடுவான்
பிறகு யார் துணையுமின்றி
கனவுலகில் பிரவேசித்து
தூங்கிப் போவான்
நான் சும்மா
பார்த்துக் கொண்டிருப்பேன்
கடவுளைப் போல

கவிதையைப் படித்து விட்டீர்களா. இப்போது இதையும் படியுங்கள்
“நீங்கள் கை தட்டிப் பாராட்டும்
ஒவ்வொரு கவிதையும்
ஏற்கனவே உங்களால்
நிராகரிக்கப் பட்ட  வாழ்க்கையிலிருந்து
சேகரிக்கப் பட்டதுதான்

தஞ்சாவூர்க் கவிராயர் ஒரு சுவாரசியமான மனிதர். பேசும் போது அவருக்கு அவரது தந்தையின் நினைப்பு அடிக்கடி வருகிறது அவருடைய தந்தையை பற்றி ஒரு சம்பவம் பகிர்ந்து கொண்டார். கேட்பவருக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் அவர் இயல்பை விளக்கச் சொன்ன சம்பவம். தந்தையின் கையில் சில ரூபாய்கள் வீட்டுச் செலவுக்காக  இருந்தது. அதில் செலவு போக ரூ.20/- மிச்சமிருக்க அவரது மனைவி மக்கள் இவர் குணம் தெரிந்து அதை யாருக்கும் கொடுத்து விடாதீர்கள் என எச்சரித்திருந்தனர். அச்சமயம் நண்பர் ஒருவர் வந்து தம் கஷ்டங்கள் சிலதைக் கூறி பணம் கேட்டிருக்கிறார். உறவினர் இல்லை யென்று சொல்லச் சைகை காட்டி இருக்கிறார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் இவர் எழுந்து போய் அந்த ரூ20-ஐயும் அந்த நண்பரிடம் கொடுத்தார். அவர் போனபிறகு உறவினர்கள் இல்லையென்று சொல்வதற்கென்ன என்று கேட்டபோது “இருக்கே எப்படி இல்லை என்று பொய் சொல்வது என்றாராம். தன் தந்தையைப் பற்றிப் பேசும் போது நெகிழ்ச்சி தெரிகிறது. வீட்டின் முன் நிற்கும் புங்கை மரம் தந்தை வைத்தது, இப்போது வளர்ந்து நிழல் கொடுக்கிறது என்று சொல்லி உருகுகிறார்.இனிய எழுத்தாள நண்பர் ஜீஎம்பிக்கு அன்புடன் என்று “வளையல் வம்சம் “ கவிதைத் தொகுப்பினை பரிசளித்தார்.

அவருடன் நிறைய புகைப் படங்கள் எடுக்க் நினைத்தது இயலாது போயிற்று. நான் கொண்டு சென்ற காமிராவில் பாட்டரி தீர்ந்து போய் அதை ரீ சார்ஜ் செய்ய சார்ஜர் இல்லாததால் அதன் பிறகு புகைப் படங்களே எடுக்க முடியாமல் போயிற்று. நல்ல வேளை ஓரிரு புகைப் படங்கள் எடுக்க முடிந்ததே மகிழ்ச்சி.
தஞ்சாவூர் கவிராயர், பேரன், மற்றும் நான்
கவிராயர், பேரன் நான், என் மனைவி



கவிராயரிடம் இருந்து விடை பெற்றபோது மணி ஆறாகி இருந்தது.நண்பர் உமேஷ் ஸ்ரீநிவாசன்  என் இருப்பிடம் வந்து என்னைக் காணமுடியாமல் திரும்பி இருந்தார். அவருக்கு ஈரோடு போகும் வேலை இருந்ததால் சந்திக்க இயலாமல் போயிற்று.ஒன்றைப் பெரும்போது ஒன்றை இழக்க வேண்டியதாயிற்று.   


.......
            
 

புதன், 20 நவம்பர், 2013

பயண அனுபவங்களும் சில சந்திப்புகளும்-1


 பயண அனுபவங்களும்  சில சந்திப்புகளும்--1
-----------------------------------------------------------------



திட்டமிட்டுச் செய்; திட்டமிட்டதைச் செய். இது நான் கற்றபாடம். எனக்கு மிகவும் வேண்டியவர்களுக்கும் கூறும் அறிவுரை.சில நேரங்களில் திட்டமிடும்போது சிலவிஷயங்கள் சரியாக கணிக்கப் படாததால் திட்டமிட்டுச் செய்த வேலைகளும் எதிர்பார்க்கும் விளைவுகளைத் தருவதில்லை சென்னைக்கு நான் சென்று வருவதே அரிதாகிக் கொண்டிருக்கும்போது திட்டங்களில் சில குறைபாடுகள் (?) இருந்ததால் விளைவுகள் சரியாக அறுவடையாகவில்லை
.
12-ம் தேதி  பெங்களூரில் இருந்து டபிள் டெக்கர் தொடர்வண்டியில் பயணப் பட்டு இரவு எட்டே முக்கால் மணிக்கு சென்னை வந்தடைந்தோம். குளிரூட்டப்பட்ட ட்ரெயினில் பயணம் செய்யும்போது பயணத்தின் அனுபவங்கள் பலவற்றை இழக்க நேரிடுகிறது. தொடர் வண்டியின் ‘கட, கடாசப்தமும் பிரயாணிகளின் பேச்சுச் சப்தமும் கேட்க வழியின்றி ஏதோ கூண்டுக்குள் அடைத்து வைத்தது போன்ற உணர்வு. நாங்கள் நலமாகப் பயணப்பட வேண்டும் என்ற அதீத அன்பின் விளைவாக குளிரூட்டப்பட்ட வண்டிப் பயணம். சென்னையில் என் மைத்துனன் ஸ்டேஷனுக்கு வந்து எங்களை அழைத்துச் சென்றான்.
அடுத்த நாள் 13-ம் தேதி ஊரப்பாக்கத்தில் வசிக்கும் தஞ்சாவூர்க் கவிராயரைப் பார்த்து பிறகு காஞ்சீவரம் கோவில்களுக்குச் செல்ல முதலில் திட்டமிட்டபடி வாடகைக் காரை என் மகன் ஏற்பாடு செய்திருந்தான். காலை ஒன்பது மணி சுமாருக்குப் புறப்படலாமென்று திட்டம் அதன்படி.முதலில் ஊரப்பாக்கம் சென்று அங்கிருந்து கவிராயரைச் சந்தித்துவிட்டுக் கோவில்களுக்குச் செல்லலாம் என்றால் , நாங்கள் காஞ்சீவரம் செல்வதற்குள் கோவில்கள் நடை சாத்திவிடுவார்கள் என்னும் ஞானோதயம் அப்போது ஏற்பட்டு முதலில் கோவில் தரிசனம் பிறகு கவிராயர் சந்திப்பு என்று நிகழ்ச்சி நிரலில் மாற்றம் செய்யப் பட்டுகாலை ஒன்பது மணி அளவில் காஞ்சீவரம் பயணப் பட்டோம்.இந்த ஞானோதயம் முன்பே ஏற்பட்டிருந்தால் இன்னும் முன்பே கிளம்பி, எல்லாக் கோவில்களுக்கும் சென்று இருக்க முடியும்

சென்னையில் இருந்து செல்லும்போது முதலில் எதிர்படும் ஸ்ரீவரதராஜஸ்வாமி கோவிலுக்குச் சென்றோம். சுமார் இரண்டு மணி நேரம் கழித்துக் கோவிலை அடைந்தோம். முதலில் பெருந்தேவியார்  பிறகு ஸ்வாமி தரிசனம் அதன் பிறகு வெளியில் இருக்கும் நூற்றுக்கால் மண்டபத்தில் இருக்கும் சிற்ப தரிசனம் என்று திட்டப்படி போனோம். நாங்கள் இதற்கு முன்பே காஞ்சீவரம் மூன்று நான்கு முறை போயிருக்கிறோம் என்றாலும் எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்துவது என்பது இயலாததாகி விடுகிறது. கோவிலில் அநேக ஓவியங்கள் உருக்குலைந்து போய் இருப்பதைப் பார்க்கும் போது மனம் கனமாகிறது மக்களுக்கு சிரத்தை இல்லையா, பராமரிப்பு போதாதா என்னும் கேள்விகள் மனசைக் குடைகிறது. ஸ்வாமியைத் தரிசிக்கப் போகும் படிகளில் உலோகப் பதிப்பு கால்களுக்கு அக்யுப்ரெஷர் தரும் வகையில் இருக்கிறது. இப்போதெல்லாம் கைப் பிடிப்பு இல்லாமல் படிகள் ஏறுவது சிரமமாயிருக்கிறது. நல்ல வேளை அங்கு ரெயிலிங் இருந்தது. ஆண்டவன் தரிசனம் கட்டணம் கொடுக்காமல் கிடைத்தாலும் தங்கப் பல்லி தரிசனம் செய்யக் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. பல்லியை ஏற்கனவே கண்டிருப்பதால் நாங்கள் போக வில்லை. எனக்குப் பழைய கோவில்களைக் காணும்போது என்னை அறியாமல் காலச் சக்கரம் ஏறி பின்னோக்கிப் பயணித்து அந்தக் கால சூழ் நிலையை கற்பனை செய்வது பழக்கமாகப் போய் விட்டது. மின்சாரம் இல்லாத அந்தக் காலங்களில் இம்மாதிரிக் கோவில்களில் வெளிச்சம் ஏற்படுத்த தீபங்கள் ஏற்ற வேண்டி அதற்காக பொது மக்கள் எண்ணை 


கொடுக்கும் முறை இருந்திருக்க வேண்டும். ஆனால் இன்றைக்கும் பல கோவில்களில் ஆண்டவன் கருவறையை இருட்டில் வைத்திருக்கும் நிலையை சீரணிக்க முடியவில்லை. தீப ஆராதனையின் போது அந்த சிறு ஒளியில் தரிசனம் செய்வது சிலாக்கியமாகக் கருதப் படுகிறது.ஆனால் இந்தக் கோவில்கள் பண்டையக் கலாச்சாரத்தின் மிச்சங்களை பறை சாற்றுகிறது என்பது மறுக்க முடியாதது.

கோவிலில் பிரசாதம் என்று விற்பனையாகும்  புளியோதரை , பொங்கல் என்று வாங்கி உண்டு பசியை அடைத்தோம்

வெளியில் இருக்கும் நூற்றுக் கால் மண்டபம் அழகான சிற்ப கூடமாக இருக்கிறது.முன்பு வந்தபோதும் கூட வந்தவர்களுக்கு அதில் நாட்டமில்லாததால் கவனம் செலுத்த முடியவில்லை.இந்த முறை ஓரளவு நிதானமாக ( still running against time) பார்வையிட்டேன். சில புகைப் படங்களும் எடுத்தோம்.
DSC02083.JPG
ஸ்ரீவரதராஜஸ்வாமி கோவில் கோபுரம் விஷ்ணு காஞ்சி
  
ஸ்ரீவரதராஜஸ்வாமி கோவில் நூற்றுக்கால் மண்டபம்

நூற்றுக்கால் மண்டபத்துள்


நூற்றுக்கால் மண்டபத்துள்

ஸ்ரீகாமாட்சியம்மன் கோவில் முன்

ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோவில் முன்

ஸ்ரீஏகாமபரேஸ்வரர் கோவிலில் ஓவியம்

கைலாசநாதர் கோவில் சுற்றில்
கைலாசநாதர் கோவில் சுற்றில்

கைலாசநாதர் கோவில் சுற்றில்

கைலாசநாதர்கோவில் சுற்றில் கிளி ( தபஸ்/.?)






அங்கிருந்து ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலுக்குச் சென்றோம்.நேரம் பனிரெண்டு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. உள்ளே போனால் அன்னைக்குப் பூஜை நடந்து கொண்டிருக்க பெரிய வரிசையின் பின்னால் நின்று கொண்டோம்.அப்போது பார்த்து ஏன்தான் சில தவிர்க்க வேண்டிய நினைவுகள் வந்ததோ? தினசரியில் 27-ம் தேதி காஞ்சி ஸ்ரீஜெயேந்திரர் வழக்கில் தீர்ப்பு சொல்லப்படும் என்று படித்தது என்னென்னவோ எண்ணங்களைக் கிளறிவிட்டது .மஹாப் பெரியவர் இருந்த இடத்தில் இருப்பவர் சந்தேகங்களுக்கு அப்பால் அல்லவா இருக்க வேண்டும். “ஹூம்”என்று பெருமூச்சுதான் வந்தது.

முன்பே இங்கு வந்து போனபோது அம்மன் சந்நதிக்கு நேர் எதிரே இருந்த மண்டபத்தில் நின்று தரிசிக்க முடியும் என்று தெரிந்ததால் அங்கு போய் காத்திருந்தோம். என் மனைவிக்கு இந்த நேரம் சுலோகங்கள் சொல்ல ஏதுவாயிருந்தது. அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்த என் கண்ணில் சன்னதி வாசலின் மேலே எழுதி இருந்த பாடல் கவனத்தை ஈர்த்தது. சும்மா இருந்த வேளையில் அந்தப் பாடலை எழுதி எடுத்துக் கொண்டேன் அதனைக் கீழே காணலாம்.

பத்துவிரல் மோதிரம் எத்தனைப் பிரகாசமது,
பாடகம் தண்டை கொலுசும் பச்சை வைடூரியம்
இச்சையா யிழைத்திட்ட  பாத சிலம்பின் ஒலியும்
முத்து மூக்குத்தியும் இரத்தினப் பதக்கமும் மோகன மாலையழகும்
முழுதும் வைடூரியம் புஷ்பராகத்தினால் முடிந்திட்ட தாலி அழகும்
சுத்தமாயிருக்கின்ற காதினிற் கம்மலும் செங்கையின் பொன் கங்கணமும்
ஜெகமெலாம் விலை பெற்ற முகமெலாம் ஒளியுற்ற சிறு காது கொப்பின் அழகும்
அத்திவரதன் தன் தங்கை சக்தி சிவ ரூபத்தை அடியனால் சொல்லத் திறமோ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே. ! 

அன்னையின்  தரிசனம் முடிந்து வெளியில் வரும்போது மணி ஒன்றைத் தாண்டி இருந்தது. ஏகாம்பரேஸ்வரர் கோவில் மூடியிருக்க  எல்லாக் கோவில்களும் திறக்க நான்கு மணிக்கு மேலாகும் என்று தெரிந்ததும் நேராகக் கைலாச நாதர் கோவில் சென்றோம். எனக்கு கோவிலில் இருந்த சிற்பங்களைக் காணக் கிடைத்த இன்னொரு வாய்ப்பு அது. முன்பு கோவிலுக்குச் சென்றபோது நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வர அதனை என் மைத்துனனிடம் பகிர்ந்துகொண்டேன்.

கைலாசநாதர் கர்ப்பக் கிருகத்தைச் சுற்றி ஒரு குகை மாதிரியான பாதை உண்டு. சந்நதியின் வலப் புறம் இரண்டுக்கு இரண்டு அடியில் ஒரு திறப்பு உண்டு. தரையிலிருந்து சுமார் மூன்றடி உயரத்தில் இந்தத் திறப்பு இருக்கும் . அதன் வழியே உள்ளே நுழைந்துசுற்றிலும் இருக்கும் பாதையில் ஏறத்தாழ தவழ்ந்து வந்தால் சந்நதியிம் இடது பக்கம் இருக்கும் துவாரம் வழியே வெளியே வரலாம். அப்படி வந்தால் மறு பிறவி இல்லை என்று ஒரு ஐதீகம். சென்றமுறை நாங்கள் போனபோது நான் முதலில் கால்களை துவாரத்தில் இறக்கி பின் அங்கிருந்து மூன்றடி கீழே தரையில் கால் வைத்து அந்தக் குறுக்குப் பாதையைச் சுற்றி வலப் புறமாக வந்து எனக்கு மறு பிறவி இல்லை என்று உறுதி செய்து கொண்டேன். எங்களுடன் வந்திருந்த என் சகலை முதலில் காலை விட்டு  கீழே இறங்கத் தெரியாமல் துவாரத்தில் இறங்கவும் முடியாமல் வெளியே வரவும் முடியாமல் தவித்தது , பிறகு எல்லோரையும் சாடியது எல்லாம் நினைவிலாடியது கோவில் சந்நதி மூடி இருந்ததால்  என் மைத்துனனுக்கு அதைக் காட்ட முடியாமல் போயிற்று.

கைலாச நாதர் கோவிலைக் காணும்போது எனக்கு பூசலார் அடிகள் இறைவனுக்கு தன் உள்ளத்தில் அஸ்திவாரம் முதல் ஒவ்வொரு கல்லாக எழுப்பிக் கோவில் கட்டி கும்பாபிஷேகத்துக்கு ஒரு நாளும் குறித்து இறைவனைக் குடியேற வேண்டியதும் , அதே நேரத்தில் பல்லவ அரசன் கலை நுணுக்கங்களுடன் ஒரு கற்கோவில் எழுப்பி கும்பாபிஷேகத்துக்கு நாள் குறித்ததும் , இறைவன் அரசன் கனவில் வந்து தான் பூசலாரின் கோவிலுக்கே முன்னுரிமை அளிப்பதாகக் கூறியதும் , அரசன் திருநின்றவூர் வந்து பூசலாரைக் கண்டு அவர் எழுப்பிய கோவில் பற்றிக் கேட்டதும் . பூசலார் தம் மனக் கோவில் பற்றிக் கூறியதும் அரசன் அவர் கால்களில் விழுந்த வணங்கியதாகவும் கூறப் படும் கதை நினைவுக்கு வந்தது. அந்த அரசன் கட்டிய கோவில் இந்தக் கைலாச நாதர் கோவிலா என்பது சரியா என்று தெரிய வில்லை. எப்படி இருந்தாலும் ஒரு இறைக்கதை பகிர்ந்து கொள்ள இது உதவுகிறது.

இந்தக் கோவில் இந்தியத் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களால் பராமரிக்கப் படுகிறது. கைலாச நாதர் கோவிலைச் சுற்றிலும் நிறைய சிறிய கோவில்கள் காணப் படுகின்றன. இவை எல்லாம் ஸாண்ட் ஸ்டோன் எனும் மணல் கல்லால் ஆனது. காஞ்சிவரத்திலேயே இதுதான் மிகவும் தொன்மையான கோவில் என்கிறார்கள்.
கைலாச நாதர் கோவிலைப் பார்த்துவிட்டு நாங்கள் கிளம்பும்போது மணி மூன்றரை ஆகியிருந்தது. அங்கே மதிய உணவு முடித்துவிட்டு ஊரப் பாக்கம் செல்லத் துவங்கினோம் தஞ்சைக் கவிராயரை தொலை பேசியில் அழைத்து எங்கள் வருகையைத் தெரிவித்தோம். அவர் வீட்டைச் சென்றடைந்தபோது மாலை நான்கு மணிக்கும் மேலாகி இருந்தது. அவரைச் சந்தித்தது பற்றி அடுத்த பதிவில்.
                       ==========================
       


.......