Thursday, June 19, 2014

இனிதான ஒரு காலை வேளையில்


                                இனிதான ஒரு காலை வேளையில்
                                  --------------------------------------------------


(உண்டு உறங்கி எழுவது தவிர வேறுவேலை இல்லை. வேறெதுவும் செய்யவும் இயலாது ஆனால் எண்ணங்கள் சிறகு விரிக்கத் தடையேதும் இருப்பதில்லையே. அம்மாதிரியான விளக்க முடியாத எண்ணங்களை ஓரளவு எழுத்தில் வடிக்க முயன்றேன் எனக்கேத் தெரிகிறது .முக்காலும் abstract என்று. என் வலையின் முகப்பில் உள்ள வாசகங்கள் துணை நிற்கின்றன).  

பொழுது விடியும் நேரம் கீழ்த் திசையில்
செக்கர் வானம் நிறம் மாறிக் கண் கூசும் வெளிச்சம்
உயிர்த்தெழலும் இனிதே நிகழ இன்றொரு நாளும்
புதிதாய்ப் பிறக்க எண்ணச் சிறகுகள் விரிக்கின்றன.
கேள்விகள் கேள்விகள் கேள்விகள்...!

பதில் அறியாக் கேள்விகள்.
பதில் கூற முயன்றாலும் பதிலும் கேள்விகளே

ஏன் இங்கு வந்தாய் நீ இருந்த இடம் ஏது?.
ஏதோஒரு குயவனின் கைவினையோ நீ
அன்றவன் கை செய்த பிழைக்கு நீயோ பொறுப்பு
எவரது கைவினையும் அல்ல நீ
உந்தை தாயின் மகிழ்வின் விபத்து நீ
யாரும் உனை வேண்டி வந்தவன் அல்லநீ

இருள் நீங்கி விடியும் நேரம் எண்ணச் சிறகுகளே
அசைந்துன்னை அலைக்கழிப்பதேனோ...?
எண்ணச் சிறகசைப்பில் அன்றோ உன்னிருப்பு
உன் உயிர்ப்பு எல்லாம் தெரிகிறது

எத்தனை விடியல் எத்தனை காலை
என்றெல்லாம் மதிமயங்கிக் கழித்துவிட்டாய்
பாலனாம் பருவம் செத்தும் காளையாந்தன்மை
செத்தும் காமுறும் இளமை செத்தும் மேல் வரும்
மூப்புமாகி உனக்கு நீயே அழலாமா.?

கானாறோடும் கதியே போல் கண்டபடி வாழ்ந்தாயோ?
நீயும் ஓர்க்கால் வெளியேற எங்குதான் ஏகுவையோ.?
கண்ணிற் காணா சொர்க்கமா இங்கில்லாத நரகமா?
காணும் பொருளை எல்லாம் நன்றாய்த் தெரிய நோக்கி
தன்னையே நோக்காச் சீரின் கண்மணி போல்
வாழ்ந்த வாழ்வின் முடிவில் என்னதான் காண்பையோ?

இன்று விடிந்தது, புதிதாய் உயிர்த்தாய்
எங்கும் எதிலும் காணும் காட்சியில் எதிலும் இன்பம்
நினைப்பினில் இன்பம் எனவே பொங்கி வழிந்தால்
இன்று நீ பிறந்ததே இவற்றைத் தூய்க்கவே
என்று உணர் போதும் எண்ணச் சிறகுகள் அசையட்டும்
திசை நோக்கிச் செலுத்துவது உன் கையில். 

( குயவன் = கடவுள் என்று நினைக்கப் படுபவர்)  

25-ல்
  
75-ல்

  





52 comments:

  1. நல்லா இருக்கு கவிதை, 25 மற்றும் 75 எல்லாமும்.

    ReplyDelete
  2. முடிஞ்ச வேலையைத் தான் செய்யலாம். :)

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா.

    கவிதையின் வரிகள் நெஞ்சை அள்ளிச்சென்றது அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. எண்ணச் சிறகுகள் அசையட்டும்
    இனிய கவிதைகள் பறக்கட்டும்..

    வாழ்த்துகள்..

    ReplyDelete
  5. இவ்வளவு ஆழமான கவிதை எழுதத் தெரிந்தவர், ஏன் கட்டுரைகள் எழுதி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்குகிறீர்கள்? இந்த ஆண்டு உங்களின் கவிதைத் தொகுப்பை வெளியிட்டே ஆகவேண்டும் என்று உங்கள் பிள்ளைகள் ஆர்வத்துடன் இருப்பது உங்களுக்குத் தெரியாதா?

    ReplyDelete
  6. வாழ்வின் அர்த்தம் - இதுதான்..

    //இன்று விடிந்தது..
    புதிதாய் உயிர்த்தாய்!..//

    வாழ்க்கையை வரவேற்போம்..
    வாழ்க நலம்!..

    ReplyDelete
  7. கவிதை நன்றாக இருக்கிறது. 25 ஐ விட 75 அழகு.

    ReplyDelete
  8. //இன்று நீ பிறந்ததே இவற்றைத் தூய்க்கவே
    என்று உணர் போதும் எண்ணச் சிறகுகள் அசையட்டும்
    திசை நோக்கிச் செலுத்துவது உன் கையில். //

    கவிதையின் ஒவ்வொரு வரியும் அருமை என்றாலும் முத்தாய்ப்பான வரிகள் உண்மையில் முத்துக்கள்! இந்த கவிதை அனைவருக்கும் பொருந்தும்.

    ReplyDelete
  9. வணக்கம் ஐயா!

    இன்று பிறந்ததும் இன்பத்தைத் துய்க்கவே
    என்றிதை நன்றே இயம்பினை! வென்றும்
    வீழ்ந்தும் விரைவாக ஓங்கியும் முயன்றே
    வாழ்வினை வெல்கவென வரைந்தீரே மகிழ்ந்து!

    ஆழ்மனச் சிந்தனை அழகிய கருத்தாழமிக்க கவிதையாகப் பிறந்துள்ளது ஐயா!

    மிக மிக அருமை!

    தொடருங்கள் இன்னும் இன்னும்...

    வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  10. கவிதை-கட்டுரை நல்லாருக்கு :)

    ReplyDelete

  11. @ கீதாசாம்பசிவம்
    கவிதையை(?)புகைப்படங்களுடன் சேர்த்து பாராட்டியதற்கு நன்றிமுடிஞ்ச வேலையைத்தான் செய்யலாம் செய்கிறோம் நன்றி.

    ReplyDelete

  12. @ ரூபன்
    வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  13. @ ராஜராஜேஸ்வரி
    இனிய கவிதைகள் என்றா சொல்கிறீர். வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete

  14. @ செல்லப்பா யக்ஞசாமி
    கவிதைத் தொகுப்பு என்னவோ ரெடிதான் . புத்தகமாக வெளியிட நேரம் இன்னும் அமையவில்லை என்றே எண்ணுகிறேன் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்

    ReplyDelete

  15. @ துரைசெல்வராஜு
    ஒவ்வொரு நாளும் புதிதாய்ப்பிறக்கிறோம் எனும் நினைப்பே வாழ்வி சுவை சேர்க்கிறது. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  16. 25 ம் 75 ம் நன்றாக இருக்கின்றன.

    ReplyDelete
  17. மனத்தில் தோன்றும் எண்ணங்களை எல்லாம் அழகுற கவிநடையில் பகர்தல் அனைவருக்கும் சாத்தியமில்லை. ஆனால் தங்கள் கவி வரிகளோ ரசிக்கவும் சிந்திக்கவுமாய் அமைந்த சிறப்பான வரிகள். பாராட்டுகள் ஐயா. அரைநூற்றாண்டு அனுபவ வித்தியாசம் காட்டும் இரண்டு புகைப்படங்களும் அருமை.

    ReplyDelete

  18. @ ஸ்ரீராம்
    கவிதையைப் (?) பாராட்டியதற்கு நன்றி. 25-ம் 75-ம் சும்மா ஒரு மாறுதலுக்கு. 25-ல் எடுத்த black and white படத்தை மீண்டும் காமிராவில் எடுக்க முயன்றது. தொழில் நுட்பம் போதவில்லையோ.?

    ReplyDelete

  19. @ வே.நடனசபாபதி
    /கவிதையின் ஒவ்வொரு வரியும் அருமை என்றாலும் முத்தாய்ப்பான வரிகள் உண்மையில் முத்துக்கள்! இந்த கவிதை அனைவருக்கும் பொருந்தும்./ பாராட்டுக்கு நன்றி ஐயா.


    ReplyDelete

  20. @ இளமதி.
    வாழ்த்துக்களும் கவிதை வடிவில். நன்றி மேடம்

    ReplyDelete

  21. @ டி.பி.ஆர் ஜோசப்
    / கதை கட்டுரை நல்லா இருக்கு /எனக்கும் அந்த சந்தேகம் எழுந்தது. மனசில் பட்டதைக் கூறியதற்கு நன்றி சார்

    ReplyDelete

  22. @ டாக்டர் கந்தசாமி
    25 பற்றிய யூகம் வேண்டாமென்றுதான். கருத்துக்கு நன்றி சார்.

    ReplyDelete

  23. @ கீதமஞ்சரி
    எழுத்தில் தடம் பதிக்கும் உம் போன்றோரின் பாராட்டுக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது.

    ReplyDelete
  24. அன்புள்ள ஐயா.


    வணக்கம்.

    ஆழமான சொற்செட்டுடன் தத்துவமும் உளவியலும் கலந்து
    தெளிக்கப்பட்டிருக்கும் கவிதை. வாசமாக உள்ளது, அதேசமயம் சிந்தனையின் கதவுகளைத் தட்டுகின்றன. தொடரந்து எழுதுங்கள் ஐயா.

    ReplyDelete
  25. அழகிய கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி...

    படத்தில் மிடுக்கான போலிஸ் ஆபீசர் போல் உள்ளீர்கள் ஐயா...

    ReplyDelete
  26. கடவுள் இல்லையென்பதைவிட
    கடவுள் ஒருவேளை இருந்துவிடுவாரோ என்கிற
    அச்சம் அதிகம் இருப்பதால் அவர் குறித்தே
    அதிகம் சிந்திக்கிறீர்களோ ?

    குயவன் கடவுள் என நினைக்கப்படுபவர்
    என வலிந்து சொன்ன விளக்கம்
    நிச்சயம் குழப்பத்தின் விளைவே
    என்பது என் கருத்து

    ReplyDelete
  27. கவிதை அருமை
    25 ஐவிட
    75 இல்
    கம்பீரம் கூடியிருக்கிது ஐயா
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

  28. @ ஹரணி
    என்னிலிருந்து விடுபட்டு என்னையே நான் கேட்டுக்கொள்ளும்படியான பதிவாக எழுதி உள்ளேன். உங்களைப் போன்றோர் வாழ்த்துக்கள் என் எழுத்துக்கு வலிமை சேர்க்கட்டும் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா

    ReplyDelete

  29. @ இல.விக்னேஷ்
    பிறரது பின்னூட்டங்களையும் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் அபிப்பிராய பேதங்கள் தெரியுமே. வருகைக்கு நன்றி விக்னேஷ்.

    ReplyDelete

  30. @ ரமணி
    நமக்கு மீறிய செயல்கள் நடக்கும்போது எழும் சிந்தனையில் நிறையவே abstract ஆனஎண்ணங்கள் எழுகின்றன. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றி நான் எண்ணுவதில்லை. எனக்கு abstract ஆன சிந்தனைகள் உடன்பாடில்லை. ஆகவேதான் தெளிவாக்க விளக்கம் கூறி இருந்தேன் அறியாமல்கூட தவறாக சொல்லக் கூடாது என்பதை உங்களைப் போன்றோர் இடும் பின்னூட்டங்கள் வலியுறுத்துகின்றன. வருகைக்கும் தெளிய வைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி ரமணி சார்.

    ReplyDelete

  31. @ கரந்தை ஜெயக்குமார்
    வருகைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  32. தங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன் ஐயா. நேரம் அமையும்போது தொடரவும். நன்றி.
    http://geethamanjari.blogspot.com.au/2014/06/blog-post_22.html

    ReplyDelete
  33. அருமையான கவிதை.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    கவிதைத் தொகுப்பு எப்போது?

    ReplyDelete
  34. இங்கிலாத நரகமா.. கேட்ட கேள்வி.
    இங்கிலாத சொர்க்கமா... கேட்காத கேள்வி?

    ReplyDelete
  35. ரமணியின் பின்னூட்டமும் உங்கள் பதிலும் ரசித்தேன்.

    ReplyDelete
  36. அறியாமல் கூடத் தவறாகச் சொல்லக்கூடாது... முரண். அறியாமல் எப்படிச் சரியாகச் சொல்ல முடியும்?

    ReplyDelete
  37. //உண்டு உறங்கி எழுவது தவிர வேறுவேலை இல்லை. வேறெதுவும் செய்யவும் இயலாது ஆனால் எண்ணங்கள் சிறகு விரிக்கத் தடையேதும் இருப்பதில்லையே. //

    ஐயா இவ்வளவு அழகான, ஆழமான கவிதை எழுதும் போது ஏனய்யா வேறெதுவும் செய்ய இயலாது என்பதை விட்டு அடுத்த வரிக்கு ஏற்றாற் போலும், GNB Writes என்பதற்கு இணங்க எழுதுங்கள் கவிதைகளை! தொகுப்பாய் வெளியிடலாமே! ஐயா! மிகவும் உஊனர்வு பூர்வமாய் ரசித்தோம்!

    எங்கள் கணினிக்கும் வயதாகிவிட்டது! ஊசலாடுகின்றது! தற்காலிக கணினிக்கு மெமரி பிரச்சினை! நெட்டும் பிரச்சினை. எனவே எல்லாமே மிகவும் தாமதமாகின்றது! அதனால் தங்கள் வலைப்பக்கம் வர தாமதாமாகிவிட்டது ஐயா! மன்னிக்கவும்!

    பகிர்வுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  38. //உண்டு உறங்கி எழுவது தவிர வேறுவேலை இல்லை. வேறெதுவும் செய்யவும் இயலாது ஆனால் எண்ணங்கள் சிறகு விரிக்கத் தடையேதும் இருப்பதில்லையே. //

    ஐயா இவ்வளவு அழகான, ஆழமான கவிதை எழுதும் போது ஏனய்யா வேறெதுவும் செய்ய இயலாது என்பதை விட்டு அடுத்த வரிக்கு ஏற்றாற் போலும், GNB Writes என்பதற்கு இணங்க எழுதுங்கள் கவிதைகளை! தொகுப்பாய் வெளியிடலாமே! ஐயா! மிகவும் உஊனர்வு பூர்வமாய் ரசித்தோம்!

    எங்கள் கணினிக்கும் வயதாகிவிட்டது! ஊசலாடுகின்றது! தற்காலிக கணினிக்கு மெமரி பிரச்சினை! நெட்டும் பிரச்சினை. எனவே எல்லாமே மிகவும் தாமதமாகின்றது! அதனால் தங்கள் வலைப்பக்கம் வர தாமதாமாகிவிட்டது ஐயா! மன்னிக்கவும்!

    பகிர்வுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  39. அழகிய கவிதை, ஆக்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  40. @ கீதமஞ்சரி
    கேள்விகள் நிறையவே சுற்று வலம் வந்துவிட்டன, இரண்டு விதமாகப் பதில் கூறலாம். உண்மை மொழிவது. பிறரைக்கவர என்று கற்பனையாக பதில் கூறுவது. நாட்கள் செல்லட்டும். பிறிதொரு நாளில் எழுதுகிறேன்

    ReplyDelete

  41. @ வெங்கட் நாகராஜ்
    சிறுகதைத் தொகுப்பே வலையில் இருக்கும் பலராலும் படிக்கப் படவில்லை. இந்நிலையில் கவிதைத் தொகுப்பு சிந்திக்க வேண்டிய விஷயம் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.

    ReplyDelete

  42. @ அப்பாதுரை.
    ஊன்றிப் படிப்பதற்கு நன்றி. Even by mistake one should not make a mistake இப்படிச் சொன்னால் சரியாக இருக்குமா.?

    ReplyDelete

  43. @ துளசிதரன் தில்லையகத்து.
    சிரமங்களுக்கிடையிலும் வந்து பின்னூட்ட மிட்டதற்கு நன்றி எனக்கும் இண்டெர்நெட் பிரச்சனை. மூண்ரு நாட்களுக்குப் பின் இப்போதுதான் சரியாயிற்று. கவிதைத் தொகுப்பாய் வெளியிடலாம்தான். சிறுகதைத் தொகுப்பு எத்தனை பேர் படித்தார்கள் என்று தெரியவில்லை. கவிதையை ரசித்ததற்கு நன்றி. என்னுடைய சிலகவிதைகளின் சுட்டிகளை மின் அஞ்சலில் அனுப்புகிறேன் படித்துப்பாருங்கள். மீண்டும் நன்றி.

    ReplyDelete

  44. @ கிங் ராஜ்
    முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

    ReplyDelete
  45. possible. ஆனால் பொதுவாக கடவுளைப் பற்றிச் சொல்லும் பொழுதெல்லாம் அறியாமல் தவறாகச் சொல்லக்கூடாது என்று ஆத்திகர்கள் சொல்கிறார்கள்..

    ReplyDelete
  46. கவிதையில் தன்னம்பிக்கை அதிகம் காணப்படுகிறது. கவிதையாக எடுத்துக்கொள்ளாமல் வாழ்க்கை நெறியாக நாங்கள் இதனை எடுத்துக் கொள்வோம். தங்களின் கவிதை வரிகள் எங்களுக்கு பயன் தரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

    ReplyDelete

  47. @ அப்பாதுரை
    பின் எப்படித்தான் சொல்வது.?எழுத்தில் எல்லோரையும் திருப்தி படுத்த இயலும் என்று தோன்றவில்லை.நன்றி

    ReplyDelete

  48. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    சரியாகக் கணித்துள்ள உங்கள் கருத்துக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  49. எண்ணச் சிறகுகள் அசையட்டும்
    திசை நோக்கிச் செலுத்துவது உன் கையில். //

    கவிதை அருமை.
    பழைய , புதிய புகைப்படங்கள் இரண்டும் அருமை.

    ReplyDelete