Friday, July 18, 2014

கேள்விகளின் நாயகன்.......


                           கேள்விகளின் நாயகன் ........?
                           ----------------------------------- 


கேள்வியின் நாயகன் நான். தவறு. கேள்வியின் நாயகர்களில் நானும் ஒருவன்  திருமதி கீதாமதிவாணன் ( கீத மஞ்சரி ) என்னையும் உலகெலாம் சுற்றிவரும் கேள்விகளுக்குப் பதில் எழுதக் கேட்டுக் கொண்டபோது முதலில் பதில் எழுத ஒரு தயக்கம் இருந்தது.பலரது கேள்விக்கான பதில்களைப் படித்து வந்திருக்கிறேன் கேள்விகளெல்லாம் hypothetical  என்று தோன்றியது. இருந்தாலும் அம்மாதிரி சூழ்நிலையில் நான் எப்படி react  செய்வேன் என்பதை முடிந்தவரை உண்மையாகப் பதில் சொல்வதே நியாயம் என்று பட்டது கீத மஞ்சரி என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றவும் வேண்டும் அல்லவா.. ஆகவே இதோ என் பதில்கள்.

1.) உங்கள் நூறாவது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?
எனக்கு இப்போது என் 76-வது வயது ஓடிக்கொண்டிருக்கிறது. என்  பிள்ளைகள் என் நூறாவது வயதின்பொது அவர்களது எழுபதுகளின் தொடக்கத்தில் இருப்பார்கள். என் பேரக்குழந்தைகளும்  திருமணமாகி பெற்றோர்களாகி இருப்பார்கள். ஆகவே பிற்ந்த நாள் கொண்டாட்டம் என்பது அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதன்படியே இருக்கும் என்னைப் பொறுத்தவரை எல்லோரும் கூடி இருக்கும் ஒரு மகிழ்வான நாளாக அது இருக்க வேண்டும் என்பதே விருப்பம்
இன்றுறங்கி நாளை விழிப்பதே நம் கையில் இல்லாத போது இம்மாதிரித் திட்டமிடுதல் .......... இதையே hypothetical கேள்வி என்கிறேன்
2.) என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்.?
என்னதான் கற்றாலும் கற்றது கைம்மண் அளவு என்று தெரியும் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து தெரிந்தது இது ,தெரியாதது இது என்று பிரித்து தெரியாததைக் கற்க முயல்வேன் ஆனால் சிலவிஷயங்களைத் தெரிந்து கொள்ள எனக்கு mental block இருப்பதும் தெரியும்
3.) கடைசியாகச் சிரித்தது எப்போது ? எதற்காக.?
இப்போது. இக்கணமே. இம்மாதிரிக் கேள்விகளுக்குப் பதில் எழுதிக் கொண்டிருக்கிறேனே என்பதை நினைத்து..
4.) 24 மணி நேரம் பவர் கட்டானால் நீங்கள் செய்வது என்ன.?
இம்மாதிரி பவரே இல்லாமல் சிறுவயதில் வாழ்ந்திருக்கிறேன் நம் முன்னோர்களும் வாழ்ந்திருக்கின்றனர். அதை நினைத்து சமாதானப் படுத்திக் கொள்வேன் முன்பெல்லாம் இந்தப் பவர்கட் குறித்து பலரும் பதிவுகளில் எழுதி இருக்கின்றனர். அவர்களுக்கு பின்னூட்டமாக இயற்கையோடு இசைந்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எழுதி இருக்கிறேன் என்ன... இப்படி வாழப் பழகிவிட்டதால் சில அசௌகரியங்கள் தெரியும் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்
இந்தக் கேள்வியே clear ஆக இல்லையோ என்று தோன்றுகிறது. பவர்கட் என்பது மின் சக்தியைத்தான் குறிக்கிறதா. இல்லை நமக்கிருக்கும் சக்தியைக் குறிக்கிறதா.?ஒரு 24 மணி நேரமா இல்லை நாளும் 24 மணி நேரமா..
5.) உங்களின் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன. ?
என் இரு பிள்ளைகளுக்கும் திருமணமாகி விட்டது. அந்த நாளில் நான் அவர்களிடம் எதையும் சொன்னதாக நினைவில்லை. ஆணும் பெணும் இணைந்து வாழ்வதே திருமண வாழ்வு. வாழ்க்கை என்பது அவர்களே வாழ வேண்டியது. பிறர் உபதேசித்து பின் பற்றக் கூடியது அல்ல. திருமண வாழ்வில் மகிழ்வாக நாங்கள் வாழ்ந்து வருவதை என் குழந்தைகள் பார்த்து வந்திருக்கிறார்கள். எங்கள் வாழ்க்கையே அவர்கள் பின் பற்ற முயல வேண்டியதில் ஒன்று என்று தெரிந்து கொண்டிருப்பார்கள்.
6.) உலகத்தில் உள்ள பிரச்சனைகளில் உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்தப் பிரச்சனையைத் தீர்க்க விரும்புகிறீர்கள்.?
நான் என் பதிவுகள் பலவற்றிலும் ஆதங்கத்துடன் எழுதி வருகிற பிரச்சனை நிலவும் ஏற்ற தாழ்வுகளே. அதற்கென்று எனக்குத் தெரிந்த தீர்வுகளையும் எழுதி வந்திருக்கிறேன் முடிந்தால் நானே ஒரு அவதார புருஷனாகவந்து இவற்றைத் தீர்க்க வேண்டும் ஆனால் நான் படித்துள்ளவரை அவதார புருஷர்கள் யாரையாவது தீர்த்துக்கட்டத்தான் அவதாரம் செய்திருப்பதாகத் தெரிகிறதே தவிர வேறெதுவும் தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் ஆண்டவன் என்றைக்கோ அவதாரம் எடுத்திருக்க வேண்டுமே. ஒரு hypothetical ஆன கேள்விக்கு ஒரு சர்ச்சைக்குரிய பதில்
7.) நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்.?
எனக்கு யாரிடமும் அட்வைஸ் கேட்க தயக்கமில்லை. என்னைவிட நன்றாகத் தீர்வு சொல்வார் என்னும் நம்பிக்கை இருந்தால்தான் அட்வைஸ் கேட்பேன்.
8.) உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள் ?
என்னைப் பற்றிய தவறான தகவல் பரப்பப் படுவதாகக் கூறுபவரை முதலில் தவிர்க்க முயல்வேன் . எப்போதுமே போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரித் தூற்றுபவர் தூற்றட்டும் என்னும்கொள்கை உடையவன் இருந்தாலும் ஒரு உண்மையும் சொல்ல வேண்டும் தகவல் தவறானதாக இருந்தால் மனசின் ஒரு ஓரத்தில் வருத்தம் இருக்கும் “ சீசரின் மனைவி......என்று ஏதோ எண்ணத்தோன்றுகிறது.
9.) உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்.?
கேள்வியே சரியில்லையோ.  இறந்தவரிடம் என்ன சொல்ல முடியும் ? நண்பரிடம் என்றால்... .வார்த்தைகளை விட பரிவும் புரிதலும் மேல் என்று நினைக்கிறேன்
10.) உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்.?
இந்த ஆண்டு ஜூன் 10-ம் நாள் ஒரு பதிவே எழுதி இருந்தேன்  என்ன செய்வீர்கள் என்பதை விட என்ன செய்தேன்  என்று எழுதி இருக்கிறேன் ப்தில் தெரிய இங்கே” சொடுக்கவும்
அப்பாடா ... ஒரு வழியாக எழுதி முடித்து விட்டேன். நான் யாரையும் தொடரக் கேட்கப் போவதில்லை.      





39 comments:

  1. வாழ்த்துகள். அனைத்துக் கேள்விகளுக்கும் நன்றாகவே பதில் சொல்லி இருக்கிறீர்கள். அவதார புருஷர்கள் தீமை செய்பவர்களைத் தானே தீர்த்துக் கட்டுகிறார்கள். அதைப் போல நீங்களும் தீமை செய்பவர்களைத் தீர்த்துக்கட்டுங்கள். :)))))

    ReplyDelete
  2. எப்போ வரணும்னு கடவுளுக்குத் தெரியுமே! அப்போ சரியா வந்துடுவார். இன்னும் நேரம் இருக்கு! :)))))

    ReplyDelete
  3. சிறப்பான பதில்கள் முதன் முதலில் கேள்வியில் உள்ள பிழையை சொல்லி இருக்கிறீர்கள்.இதுவரை யாரும் கவனிக்க வில்லை அல்லது கண்டுகொள்ளவில்லை. நானும் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லியிருந்தேன்.

    ReplyDelete
  4. முதல் கேள்வியின் பதிலின் இரண்டாவது பாரா.. அருமை.

    இரண்டாவதின் கடைசி வரி - உண்மை. இது எல்லோருக்கும் பொருந்தும்.

    நான்காவத்தின் இரண்டாவது பார- சிந்திக்க வைத்தது.

    ஒன்பதாம் கேள்விக்கு பதிலைப் படித்ததும் தோன்றியது -"அதானே!" கேள்வி கிளியராக இல்லையோ?!!

    ReplyDelete
  5. அருமையான பதில்கள் ஐயா
    கேள்வியிலேயே பிழையையும் கண்டுபிடித்திருக்கிறீர்கள்
    நன்றி ஐயா

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா
    கேள்விக்கான பதில்கள் மிவும் வித்தியாசமாக உள்ளது பகிர்வுக்கு நன்றி ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. கேள்விக்குபதில் மிக அருமை.
    உங்கள் வாழ்க்கை அனுபவங்களால் அருமையான பதில்களை சொல்லமுடிகிறது.

    ReplyDelete
  8. எங்கள் வாழ்க்கையே அவர்கள் பின் பற்ற முயல வேண்டியதில் ஒன்று என்று தெரிந்து கொண்டிருப்பார்கள்.//

    அருமையான பதில்.

    ReplyDelete
  9. பவர்கட் -என்பதற்கு இப்படியும் ஒரு அர்த்தம் கொள்ளலாம் என்று தெரியாமல் போய்விட்டதே! உங்களுக்கே உரிய பாணியில் பதிசொல்லிவிட்டீர்கள்!

    ReplyDelete
  10. பதில்களில் உள்ள கேள்விகள் சிந்திக்க வேண்டியவை ஐயா...

    ReplyDelete
  11. கேள்விகளுக்கான பதில்களை தங்கள் நடையில் வெகு இயல்பாய் சொல்லியிருக்கிறீர்கள். ஒன்பதாவது கேள்வி சரியென்றே நினைக்கிறேன் நான். உங்கள் நண்பரின் மனைவி என்று ஆரம்பிப்பதால் கடைசியில் வரும் கேள்வி நண்பரைத்தான் குறிக்கிறது. அங்கே திரும்பவும் ‘நண்பரிடம்’ என சொல்ல வேண்டியதில்லை என்பது எனது கருத்து. காரணம் ‘நண்பர்’ என்பது அங்கே தொக்கி நிற்கிறது.

    ReplyDelete

  12. @ கீதா சாம்பசிவம்
    முதல் வருகைக்கு நன்றி மேடம். நான் சாதாரண மனிதனாகத்தானே அவதரித்திருக்கிறேன் அவதார புருஷனாக அல்லவே. கடவுள் வருவார் என்று காத்து நிற்போம். இன்னொரு மதத்தில் ஒரு சாரார் கடவுள் நம் செயல்களுக்குத் தீர்ப்பு சொல்வார் . ஜட்ஜ்மெண்ட் டே -யில் என்பது போல.

    ReplyDelete

  13. @ டி.என்.முரளிதரன்.
    பதில்களைப் பாராட்டியதற்கு நன்றி முரளி. கேள்வியில் பிழை என்று சொல்லவில்லை.hypothetical -என்றேன் ( தமிழில் சரியான வார்த்தை நினைவுக்கு வரவில்லை) அவ்வளவுதான்

    ReplyDelete

  14. @ ஸ்ரீராம்
    பதில்களைக் கூர்ந்து படித்ததற்கு நன்றி. எந்தக் கேள்வியையும் பிழை என்று சொல்லவில்லை. இன்னும் குறிப்பாக இருந்திருக்கலாமோ என்பதுதான் என் எண்ணம் ஸ்ரீ.

    ReplyDelete

  15. @ கரந்தை ஜெயக்குமார்
    பாராட்டுக்கு நன்றி ஐயா. கம்யூனிகேஷன் என்பது முக்கியம். இரு விதமாகப் பொருள் கொள்ளலாம் என்று இருக்கலாமா.?

    ReplyDelete

  16. @ ரூபன்
    மனதில் தோன்றியதே பதில்களாக வந்தது. வித்தியாசமாக இருக்க முயற்சி செய்யவில்லை. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  17. @ கோமதி அரசு.
    பதில்களைப் பாராட்டியதற்கு நன்றி மேடம்

    ReplyDelete

  18. @ செல்லப்பா யக்ஞசாமி
    அப்படியும் பொருள் கொள்ளலாம் என்று தோன்றியது. அதுதான் எழுதினேன். ஒருவேளை இதுதான் lateral thinking-ஓ. வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete

  19. @ திண்டுக்கல் தனபாலன்
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி டிடி.

    ReplyDelete

  20. @ வே. நடன சபாபதி
    நான் எந்தக் கேள்வியையும் தவறு என்று சொல்ல வில்லை. இன்னும் க்ளியராக இருந்திருக்கலாம் என்பதைத்தான் குறிப்பிட்டு இருக்கிறேன். வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete
  21. ஆழ்ந்த கருத்துகளுடன் பதில்கள்..!

    ReplyDelete
  22. மிகவும் அருமையான பதிலகள்! சிந்திக்க வைத்த பதில்கள்! நாங்கள் சில கேள்விகள் வேறுவிதமாகக் கேட்கப்பட்டிருக்க வேண்டுமோ, சரியான அர்த்தத்தில் என்றும் எங்களிடையே கேட்டுக் கொண்டோமே தவிர அதைச் சுட்டிக் காட்டவில்லை! தாங்கள் அதையும் அழகாகச் சொல்லி உள்ளீர்கள்!

    ReplyDelete
  23. அனைத்து கேள்விகளுக்கும் உங்களுடைய பாணியில் அருமையாக பதிலளித்துள்ளீர்கள்.

    ReplyDelete
  24. தங்களுடைய பாணி, அனுபவம் இரண்டையும் மறுமொழியில் தாங்கள் பகிர்ந்துள்ள விதம் மிகவும் அருமையாக உள்ளது. நாங்கள் உங்களிடமிருந்து நிரம்ப கற்றுக்கொள்கிறோம். நன்றி.

    ReplyDelete

  25. @ இராஜராஜேஸ்வரி
    வருகை தந்து பதிவை ரசித்தமைக்கு நன்றி மேடம்.

    ReplyDelete

  26. @ துளசிதரன் தில்லையகத்து
    பதிவை ரசித்தமைக்கு நன்றி. மனதில் இருப்பதைச் சொல்லிவிடும் இந்த குணமே என் பலமும் பலவீனமும்.

    ReplyDelete

  27. @ டி.பி.ஆர்.ஜோசப்
    கேள்விகளுக்கான பதில்களை ரசித்ததற்கு நன்றி சார். உள்ளம் சொல்வதைக் கேட்டு எழுதுவது என் பாணியாகிவிட்டது போலும்.

    ReplyDelete

  28. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  29. நீண்ட நாட்கள் கழித்து பதில்கள் எழுதினாலும் அனைத்தும் அருமையான எதார்த்தமான பதில்கள்! நன்றி!

    ReplyDelete

  30. @ தளிர் சுரேஷ்
    பலரது பதில்கள் படித்ததன் கருத்துக்கள் மறையத் தொடங்கிய பிறகு எழுதுவதால் ரெபெடிஷன் தெரியாது. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  31. தொடர்பதிவை தொடர்ந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி ஐயா. தங்களுடைய பண்பட்ட பதில்களை வாசித்து ரசித்தேன். ஒவ்வொரு பதிலிலும் தங்கள் அனுபவமும் சிந்தனையும் ஒருமித்து மிளிர்கிறது. பின்னூட்டமிட்ட பலரும் சொல்வது போல் தங்களுக்குரிய தனித்த பாணியில் சிறப்பாக வழங்கியுள்ளீர்கள். மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  32. பதில்கள் உங்கள் பாணியில் இயல்பாய் இருக்கின்றன.

    ReplyDelete
  33. ஏன் சார்.. கேள்விக்கு பதில் சொல்லச் சொன்னா கேள்வியே சரியில்லையோனு கேட்டா எப்படி?

    ReplyDelete

  34. @ கீத மஞ்சரி
    என்னையும் எழுத அழைத்ததற்கு நான் அல்லவா நன்றி சொல்ல வேண்டும். வந்து ஊக்கமூட்டும் கருத்திட்டமைக்கு நன்றி மேடம்

    ReplyDelete

  35. @ டாக்டர் கந்தசாமி.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  36. @ அப்பாதுரை.
    /ஏன் சார், கேள்விக்குப் பதில் சொல்லச் சொன்னா கேள்வியே சரியில்லையோன்னு கேட்டா, எப்படி/
    அப்பாதுரை சார் ஒருவேளை இதைத்தான் வாசகர்கள் என் பாணி என்று சொல்கிறார்களோ.? வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  37. பள்ளிக்கூடத்துல படிக்கிறப்போ ஆசிரியர் கேள்வி கேட்டா என்ன செஞ்சீங்கனு நினைச்சுப் பார்க்கிறேன்.. சுவாரசியமா இருக்கும் போலிருக்குதே?

    ReplyDelete

  38. @ அப்பாதுரை
    பள்ளிக்கூடத்தில் படிக்கிறப்போ ஆசிரியர் கேள்வி கேட்டா ஒழுங்கா நல்ல பிள்ளை போல தெரிந்தால் பதில் சொல்வேன். தெரியாவிட்டால் திரு திருவென்று விழிப்பேன். இந்த குண்டக்கா மண்டக்கா குணமெல்லாம் வாழ்க்கையில் நிறையவே அடிபட்டதால் வந்தது என்றே நினைக்கிறேன்.குறிப்பிடத்தக்க சில நினைவுகளைப் பதிவில் பகர்ந்து கொண்டிருக்கிறேன்

    ReplyDelete