Thursday, July 24, 2014

சரித்திரமா ...? கலாச்சாரமா....?


                             சரித்திரமா..... கலாச்சாரமா.....?
                            ----------------------------------------


அண்மையில் இந்தியன் கவுன்சில் ஆஃப் ஹிஸ்டாரிகல் ரிசர்ச்( ICHR) –ன் சேர்மனாக திரு. யெல்லப்ப்ரகாட சுதர்ஷன் ராவ் (Y.S.Rao ) நியமிக்கப் பட்டிருக்கிறார் என்னும் செய்தியும்  அதற்கு எதிர்ப்பாக சில குரல்களும் எழுந்தது பலரும் அறிந்திருப்பீர்கள் என்று  நினைக்கிறேன் இந்த எதிர்ப்புக் குரல்களுக்கு முக்கிய காரணம் திரு.ராவ் அவர்கள் இராமாயணமும் மஹாபாரதமும் வெறும் புராணக் கதைகள் அல்ல சரித்திர நிகழ்வுகள் என்று கூறி இருப்பதுதான். இந்த சர்ச்சைக்குரிய கருத்து தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் பா.ஜ.பா. தங்கள் ஹிந்துத்வக் கொள்கையை வலியுறுத்தும் வகையில் ஒருவரை நியமனம் செய்திருக்கிறது என்ற எண்ணத்துக்கு வலு சேர்க்கிறது.

காரணம் என்னவென்று பார்க்கப் போவதற்கு முன்னால் இதிகாசக் கதைகளுக்கும்  சரித்திரத்துக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொளல் அவசியம்  இதிகாசங்கள் புராணங்கள் கலாச்சாரத்தின் அடிப்படையில் எழுந்தவை. நிகழ்வுகள் என்று நம்பப் படுபவற்றின் பின்னணியில் நம்பிக்கை மட்டும் போதும் ஆனால் சரித்திர நிகழ்வுகளுக்கு சான்றுகள் அவசியம் சரித்திர நிகழ்வுகளின் உண்மைத்தனத்தை தொல் பொருள் ஆராய்ச்சி, கல்வெட்டுச் சான்றுகள், நாணயங்கள் செப்பேடுகள் போன்றவற்றின் ஆதாரங்களோடு நிரூபிக்க முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. ஆனால் இதிகாசங்களும் புராணங்களும் அதைச் சார்ந்த கதைகளும் கற்பனை ஊற்றுகளின் பிரவாகமே.. பகுத்தறிவுக்கோ காரண காரியங்களுக்கோ உட்படுத்த முடியாதவை.

சரித்திர நிகழ்வுகளும் புராண நிகழ்வுகளும் முற்றிலும் வேறான கருத்துக்களை அடிப்படையாய்க் கொண்டவை. சரித்திரமும் புராணமும் மனித கற்பனையின் விளைவே. இருந்தாலும் சரித்திரம் ஆதார பூர்வமாக நிரூபணத்துக்கு உட்படுத்தப் படுகிறது. கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் மாற்றத்துக்கு உள்ளாவது. ஒரு ஆராய்ச்சியாளனும் இன்னொருவரும் கால நிர்ணயங்களில் மாறுபடலாம். ஆனால் புராணத்துக்கு அந்தக் கால நிர்ணயம் கிடையாது..காலமும் நேரமும் கதாபாத்திரங்களும் மனசின் உருவகமே. ( ஒரு நாவலின் உருவாக்கம்போல்)அப்படியானால் புராணம் என்பது உண்மைகளின் பிரதிபலிப்பாகாதா.?புராணம் கதை கவிதை ஓவியம் போன்றவை வேறொரு உண்மையின் வெளிப்பாடாகும். வேறு விதமாகச் சொல்லப் போனால் அவை ஒரு கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகும் இதில் மதமும் முக்கிய பங்கு ஏற்கிறது. நம் இயல்புகளைப் பிரதிபலிப்பதில் இவை முக்கிய பங்காற்றுகிறது. சொல்லப் போனால் இந்தக் கலாச்சாரத்தின் நீட்சி சரித்திரத்தைவிட அதிகமானது.

ராமரை ஒரு சரித்திர நாயகனாக உருவகப் படுத்தினால் அயோத்தி எனும் ஒரு சிறிய அரசின் காவலனாகப் பிரதிபலிக்கப் படுவார். அதையே பரந்து விரிந்த மௌர்ய சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தி அசோகரோடு இணைத்துப் பார்த்தால் சரித்திர ஏடுகளில் காணாமல் போய் விடுவார் ஆனால் ராமரின்  பெயரும் புகழும் பரவலாக எந்த சரித்திர அரசருக்கும் இல்லாத அளவு பேசப் படுகிறதென்றால்  அவர் இந்த தேசத்தின் கலாச்சார நாயகனாக இருப்பதேகாரணமாகும். ராமாயணமும் மஹா பாரதமும்  எண்ணற்ற வகையில் கூறப்பட்டிருந்தாலும் , எது உண்மையான அசல் காவியம் என்று அறியப்படாவிட்டாலும் நிலைத்து நிற்பது கலாச்சாரத்தின் கால்களில் தான் என்று புரிவது அவசியம்.
புராணங்களையும் இதிகாசங்களையும்  சரித்திர சம்பவங்களாகப் பார்ப்பதில்தான் ஹிந்துத்துவக் கொள்கையின் ஊடுருவலோ என்று எண்ணத் தோன்றுகிறது.
நமது இதிகாசங்கள் பலரால் பலவிதமாகச் சொல்லப்பட்டு வந்திருக்கும் கற்பனைக் களஞ்சியங்களே.
(இன்றும் நாளையும் கங்கை கொண்ட சோழபுரத்தில் கொண்டாடப் பட இருக்கும்  ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய ராஜேந்திர சோழனின் பிறந்த நாளே ஆடித் திருவாதிரையா மார்கழித் திருவாதிரையா என்று சரித்திர வல்லுனர்களால் அறுதியிட்டுக் கூற முடியாதபோது ராமருடைய மற்றும் கிருஷ்ணருடைய பிறந்த நாட்கள் உறுதியாகக் கொண்டாடப் படுவது நிச்சயம் சரித்திர அடிப்படையில் அல்ல. கலாச்சார அடிப்படையில்தான் இறை நம்பிக்கையில்தான். அதைக் கேள்வி கேட்டால் குறை கூறப் படுபவராகி விடுவோம்)        . . ,      .                                              




 


 

39 comments:

  1. சர்ச்சைகள் அவசியமா?

    ReplyDelete
  2. சேது பாலம் இருந்ததற்கான அடையாளங்கள் சாடிலைட் மூலம் நிரூபணமாகி இருக்கிறது என்கிறார்கள். குருக்ஷேத்திர யுத்தம் நடந்ததற்கும் சான்றுகள் இருக்கின்றன என்கிறார்கள். நேற்று கூட பத்மநாபபுரம் அரண்மனையில் இதுவரை திறக்காத ஒரு அலமாரிக்கான சாவி கிடைத்து அதில் மிகப் பழமையான ஓலைச்சுவடியில் ராமாயணமும் மகாபாரதமும் தமிழிலும் மலையாளத்திலும் எழுதப் பட்டிருக்கின்றன என்கிறார்கள். என்னவோ போங்க... கடைசியில் எதையும் நிரூபிக்கவும் முடிவதில்லை, நம்பவும் முடிவதில்லை. :)))

    ReplyDelete
  3. காலங்கள் மாறும்போது நடந்தவைகள் கூட கதையாகிப் போகலாம். இன்னும் ஒரு நூற்றாண்டு கழித்து மகாத்மா காந்தி என்பவர் ஒரு கற்பனை நாயகன் என்று கூட சொல்லலாம்.

    ReplyDelete
  4. "இந்த ஆய்வெல்லாம் தேவையா...?" என்று தோன்றுகிறது ஐயா...

    ReplyDelete
  5. இராமாயணம் பற்றி பல ஆய்வுகள் நடந்துள்ளன. எனவே வெறும் கதையாகத் தள்ளிவிட முடியாது. அதே சமயம், இராமன் என்பவன் ஒரு மாமனிதானாக, இந்தியப் பண்பாட்டுக் காவலானாக இருப்பதை யாரும் மறுக்கமுடியாது. எனவே சரித்திரத்தைவிடவும் பண்பாட்டையே நம்புவோமாக!

    ReplyDelete
  6. இப்பொழுது விஜய் டி.வி.யில் 'மஹா பாரதம்' பார்த்து வருகிறேன்.

    தொலைக்காட்சிக்காக என்று தயாரிக்கப் பட்ட கதை தான். அதற்கேற்பவான வசனங்கள் தாம்.

    இருந்தாலும் அந்த வாசுதேவ கிருஷ்ணனின் வார்த்தைகளைக் கேட்கும் பொழுது வாழ்க்கை நடப்புகளோடு உரசிப் பார்த்து அசை போட வைக்கிறது.

    தனிப்பட்ட வாழ்க்கையில் சில முடிவுகளை மேற் கொள்ளவும் கண்ணனின் வாசகங்கள் துணையாக இருந்ததையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

    ReplyDelete
  7. இந்த அறிவியல் யுகத்தில், இதுபோன்ற சர்ச்சைகளை எழுப்புவது, நம்மை பின்னோக்கிச் செலுத்தும் செயலாகவே படுகிறது ஐயா

    ReplyDelete
  8. படித்தேன். ஏதோ கொஞ்சம் புரிந்த மாதிரி இருக்கிறது.

    ReplyDelete
  9. எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்; படிச்சவன் பாட்டைக் கெடுத்தான் என்பார்கள். அது போல தலை முறை தலை முறையாக சொல்லப்பட்டு வரும் இதிகாசங்களில் அதைச் சொன்னவர்களும் அதனை ஏட்டில் எழுதியவர்களும் தாங்களாகவே சேர்த்த இடைச் செருகல்களும் உண்டு. எனவே வரலாறு என்றால் ஆதாரங்கள்தான் முக்கியம். இதன் அடிப்படையில்தான் தமிழர் வரலாறு சரியாக எழுதப்படவில்லை என்கிறார்கள். எனவே நமது ராமாயணம், பாரதக் கதைகளை தொன்ம இலக்கியக்கங்களாகவே (MYTHOLOGY) கருத முடியும்.

    ReplyDelete
  10. கட்ச் வளைகுடா கடலில் அடியில், துவாரகை இருந்ததற்கான தடயங்கள் இருக்கின்றன என்று செய்தித்தாளில் வெளிவந்தனவே படங்களோடு....சிந்து சமவெளி நாகரீகமும் அப்படி அகழ்வாராய்சியில் வெளிவந்ததுதானே அதை நாம் வரலாற்றில் படித்து பல ஆராய்சிகளுக்கும் உட்படுத்திவரும் போது இதுவும் இரு வரலாற்று ஆய்வாக எடுத்துக்கொள்ளலாமே. ஸ்ரீ ராம் அவர்கள் சொல்லி இருப்பது போல இராமேஸ்வரம்/ தனுஷ்கோடியில் கடலில் சேது பாலம் இருந்ததற்கான சான்றுகள் சாடிலைட் மூலம் தெரியவந்ததே. குருஷேத்திரப் போர்....ஜாலியன் வலாபாக்கும் அப்படித்தனே வரலாற்றில் பதிந்துள்ளது. அதைப் போல குருஷேத்திரப் போர் நடந்ததையும் கலாச்சார ரீதியில் பார்க்காமல் வரலாற்று ஆய்வாக எடுத்த்க் கொள்ளலாமே.

    புத்தர் வாழ்ந்த சான்றுகள் தவறில்லையே! விவேகானந்தர் சொன்னது, அவரது தத்துவங்கள் பொய்யா? விவேகானந்தர் வாழ்ந்தது பொய்யாக முடியாதே! காந்திஜி வாழ்ந்ததும் பொய்யாக முடியாதே...அவை எல்லாம் ஒரு சில வருடங்களுக்கு முன்பு என்பதால் சான்றுகள் எளிதாக உள்ளன. மற்றவை எல்லாம் பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்ததால், பல வேறு மாறுதல்களுக்கும், கருத்துக்களுக்கும், இடைச்செறுகல்களுக்கும் உள்ளாகி இருக்கலாம். தாங்கள் சொல்லியிருப்பது போல் வரலாறும் அப்படித்தான். எனவே ஆய்வுகளோ, சர்ச்சைகளோ தேவையா என்று தோன்றுவது மட்டுமல்ல.....னமக்கு கேள்விகள் தோன்றினால அதற்கான விடைகளை நாமே ஆய்ந்து அறிந்து கொளல் தானே நல்லது? பறர் சொல்லுவது அவரது கோணத்தில்தானே இருக்கும்?

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. இதிகாசங்கள் மக்களை நல்வழிப்படுத்த புனையப்பட்டவை என்றாலும் நாளடைவில் அது மக்கள் மனதில் உண்மை நிகழ்வுகளாக பதிந்துவிடுகின்றன. இவற்றை சரித்திர ஆதாரங்களோடு நிரூபிக்க வேண்டும் என்கிற எவ்வித கட்டாயமும் இல்லை. மதங்களுக்கு அடிப்படை நம்பிக்கை மட்டுமே. ஆனால் அதே சமயம் அவற்றை உண்மை நிகழ்வு என்று பகிரங்கமாக அறிக்கை விடுவது எந்த அளவுக்கு சரி என்பது விவாதத்திற்குரிய விஷயம்.

    ReplyDelete

  14. @ இராஜராஜேஸ்வரி
    / சர்ச்சைகள் அவசியமா/ இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லப்போனால் அதுவே இப்பதிவை விட நீண்டுவிடும். சில சர்ச்சைகளின் அடிப்படையில் தான் பல உண்மைகள் தெரியவரும் . மேலும் எழுதி இருப்பது யாருடைய நம்பிக்கையையும் கேள்வி கேட்டு அல்ல.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்

    ReplyDelete

  15. @ ஸ்ரீராம்
    எதையும் நிரூபிக்கவோ நம்பச் சொல்லியோ இப்பதிவு எழுதப் படவில்லை.சரித்திரச் சான்றுகளைக் காட்ட காலங்கள் உறுதிப்படுத்தப் படவேண்டும் ராமாயணமும் மஹாபாரதமும் இணையில்லாத காவியங்கள். அதில் கருத்து வேறுபாடு இல்லை.சில ஓலைச் சுவடிகள் கிடைத்து இருப்பது காலங்களை நிரூபிக்க உதவுமா.? இதிகாசங்களும் புராணங்களும் நம் வாழ்வோடு ஒன்றிப்போன விஷயங்கள். அவை நம் கலாச்சாரத்தின் வெளிப்பாடுகள். இதையே சரித்திர சம்பவமாகக் கூறி அதன் மூலம் சில கருத்துக்களைத் திணிக்க முயல்வதைக் காணும்போதுதான் கேள்வி எழுகிறது.வருகைக்கும் மேலான பின்னூட்டத்துக்கும் நன்றி ஸ்ரீ.

    ReplyDelete

  16. @ வே.நடனசபாபதி
    /காலங்கள் மாறும்போது நடந்தவைகள் கூட கதையாகிப் போகலாம். இன்னும் ஒரு நூற்றாண்டு கழித்து மகாத்மா காந்தி என்பவர் ஒரு கற்பனை நாயகன் என்று கூட சொல்லலாம்/ என் பதிவின் உட்கருத்துப் புரிந்து கொள்ளப் படவில்லை என்றே நினைக்கிறேன்.சில விஷயங்கள் பற்றிச் சிந்திக்கும் போது நம் அடிமனதில் பதிந்துவிட்ட எண்ணங்கள் அழிக்கப் பட்டால்தான் வித்தியாசமாக சிந்திக்க முடியும் We have to unlearn sometimes to learn something different. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    J

    ReplyDelete

  17. @ திண்டுக்கல் தனபாலன்
    /இந்த ஆய்வெல்லாம் தேவையா.?/
    அவை அவரவர் கொண்டுள்ள கோட்பாடுகளைப் பொறுத்தது என்றுதான் பதில் சொல்ல முடியும்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டிடி.

    ReplyDelete

  18. @ செல்லப்பா யக்ஞசாமி
    /சரித்திரத்தைவிட பண்பாட்டையே நம்புவோம்/ இதை வலியுறுத்துவதைவிட்டு பொறுப்பில் இருப்பவர்கள் சரித்திர நிகழ்வு என்று கூறி எதையோ திணிக்க முயல்கிறார்கள் என்றே தோன்றுகிறதுவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete

  19. @ ஜீவி
    பகவத் கீதையோ இன்னும் பிற புராண இதிகாசக் கதைகளோ வாழ்க்கை நெறியை பரப்புகின்றன. நம் வாழ்க்கையின் அடித்தளமே இவற்றின் பலம்தான்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete

  20. @ கரந்தை ஜெயக்குமார்
    /இந்த அறிவியல் யுகத்தில், இதுபோன்ற சர்ச்சைகளை எழுப்புவது, நம்மை பின்னோக்கிச் செலுத்தும் செயலாகவே படுகிறது ஐயா/ இந்தக் கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை ஐயா. இந்த அறிவியல் உலகத்தில்தான் நாம் தெளிவு பெற முடியும் இவை எப்படி நம்மை பின்னோக்கி செலுத்தமுடியும்.?வருகைக்கு நன்றி ஐயா.

    J

    ReplyDelete

  21. @ டாக்டர் கந்தசாமி
    /படித்தேன்.ஏதோகொஞ்சம் புரிந்த மாதிரி இருக்கிறது/ நம்பமுடியவில்லை ஐயா, வந்து கருத்திட்டதற்கு நன்றி.

    ReplyDelete

  22. @ தி.தமிழ் இளங்கோ
    இதிகாசங்களும் புராணங்களும் நம் வாழ்வோடு ஒன்றிப் போன கருத்துக் கருவூலங்கள். நம் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு. மிகவும் தொன்மையானவை என்பதே அவற்றின் பலம் வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  23. @ துளசிதரன் தில்லையகத்து.
    எந்த ஒரு கதைக்கும் ஒரு களம் இருக்கும் அந்தப் பெயருள்ள இடங்கள் அவை நடந்ததை நிரூபிக்க முடியாது. புத்தர் விவேகாநந்தர், காந்தி போன்றவர்கள் சரித்திர புருஷர்கள். என்றைக்கும் நிரூபிக்க முடியும் இதிகாச புராணக்கதைகளை சரித்திர ஆய்வுக்கு உட்படுத்தட்டும் ஒரு தீர்மான முடிவு வரும் முன்னேஅவை சரித்திர நிகழ்வுகள் என்று முடிவெடுப்பது சரியல்ல என்பதே என் கருத்து. இந்த புராண இதிகாசங்களை நான் குறைவாகக் கூறவில்லை. அவை நம் கலாச்சாரத்தின் அடித்தளம் என்றுதான் கூறி இருக்கிறேன் வருகைக்கும்கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete

  24. @ டி.பி.ஆர்.ஜோசப்
    /இதிகாசங்கள் மனிதனை நல்வழிப்படுத்தப் புனையப் பட்டவை என்றாலும் நாளடைவில் மக்கள் மனதில் உண்மை நிகழ்வுகளாகப் பதிந்து விடுகின்றன. இவற்றை சரித்திர ஆதாரங்களோடு நிரூபிக்கத் தேவை இல்லை நம்பிக்கையே அடிப்படை/ இதைத்தானே நானும் எழுதீருக்கிறேன். பொறுப்பில் இருப்பவர் சரித்திர சாயம் பூசுவதன் உள்நோக்கம் என்ன.?வருகைக்கும்கருத்துப் அதிவுக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  25. அன்பின் ஜி எம் பீ அவர்களே !

    நல்லதொரு பதிவு - இறுதிப் பத்தியினை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம் - அருமையான பதிவு

    இன்றும் நாளையும் கங்கை கொண்ட சோழபுரத்தில் கொண்டாடப் பட இருக்கும் ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய ராஜேந்திர சோழனின் பிறந்த நாளே ஆடித் திருவாதிரையா மார்கழித் திருவாதிரையா என்று சரித்திர வல்லுனர்களால் அறுதியிட்டுக் கூற முடியாதபோது ராமருடைய மற்றும் கிருஷ்ணருடைய பிறந்த நாட்கள் உறுதியாகக் கொண்டாடப் படுவது நிச்சயம் சரித்திர அடிப்படையில் அல்ல. கலாச்சார அடிப்படையில்தான் இறை நம்பிக்கையில்தான். அதைக் கேள்வி கேட்டால் குறை கூறப் படுபவராகி விடுவோம்) . . , .

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  26. அன்பின் ஜீ எம் பீ அவர்களே !

    பதிவு அருமை - இறுதிப்பத்தி அப்படியே ஏற்றுக் கொள்ளலாம்.

    //

    இன்றும் நாளையும் கங்கை கொண்ட சோழபுரத்தில் கொண்டாடப் பட இருக்கும் ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய ராஜேந்திர சோழனின் பிறந்த நாளே ஆடித் திருவாதிரையா மார்கழித் திருவாதிரையா என்று சரித்திர வல்லுனர்களால் அறுதியிட்டுக் கூற முடியாதபோது ராமருடைய மற்றும் கிருஷ்ணருடைய பிறந்த நாட்கள் உறுதியாகக் கொண்டாடப் படுவது நிச்சயம் சரித்திர அடிப்படையில் அல்ல. கலாச்சார அடிப்படையில்தான் இறை நம்பிக்கையில்தான். அதைக் கேள்வி கேட்டால் குறை கூறப் படுபவராகி விடுவோம்) . . , .

    //


    கலாச்சார அடிப்படையில் இறை நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் -

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete

  27. @ சீனா
    ஐயா வணக்கம். இரண்டு முறை பின்னூட்டமிட்டு வாழ்த்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  28. அவரவருக்கு அவரவர் நம்பிக்கை. திரு நடனசபாபதி சொல்வதை முற்றிலும் ஆமோதிக்கிறேன்.

    ReplyDelete

  29. @ கீதா சாம்பசிவம்
    வாருங்கள் மேடம் திருநடனசபாபதிக்கு இட்ட மறு மொழியை மீண்டும் உங்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் நன்றி.

    ReplyDelete
  30. 74 வயதில் இவ்வளவு திறந்த மனதுடன் இதை நீங்கள் அனுகியிருப்பதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது.

    இதில் வரும் பின்னூட்டங்கள் சில என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

    ****வே.நடனசபாபதி said...

    காலங்கள் மாறும்போது நடந்தவைகள் கூட கதையாகிப் போகலாம். இன்னும் ஒரு நூற்றாண்டு கழித்து மகாத்மா காந்தி என்பவர் ஒரு கற்பனை நாயகன் என்று கூட சொல்லலாம். ****

    ஆனால், இந்த வாதம் இதிகாசத்தை உண்மைக்கதை ஆக்கிவிடாது பாருங்கள்! :)

    ReplyDelete

  31. @ வருண்
    முதல்(?) வருகைக்கு நன்றி. என் வலைப்பூவின் முகப்பில் எழுதியதைப் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். எண்ணங்களுக்கும் வயதுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ன.?

    ReplyDelete
  32. தாங்கள் விவாதிக்க எடுத்துக்கொண்ட பொருண்மை மிகவும் தேவையானது. கோயில் தல புராணங்கள் பற்றியும் இவ்வாறான விவாதங்கள் எழுகின்றன. புராணங்கள் என்ற நிலையில் வாய்மொழிக்கதைகளும், நாட்டுப்புறக் கதைகளும் பெரும் பங்கு வகிக்கின்றன. கல்வெட்டு, செப்பேடு, நாணயம், இலக்கியச் சான்றுகளின் பங்களிப்புகள் இதுபோன்ற நிலைகளில் உதவும் என்பது என் நம்பிக்கை.

    ReplyDelete
  33. ராமனும் கண்ணனும் நிச்சயம் அரசர்களாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. கடவுள்தனம் யார் யாரோ கட்டிவிட்டது.

    ReplyDelete
  34. முதல்முறையாக அப்பாதுரையை முழு மனதோடு ஆதரிக்கிறேன்.

    ஆதரிக்கிறேன்
    தரிக்கிறேன்,
    ரிக்கிறேன்

    க்கிறேன்
    கிறேன்
    றேன்
    ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

    கீழே உள்ளவை எல்லாம் என்னோட எதிரொலி. அவ்வளவு சத்தமா ஆதரிச்சிருக்கேனாக்கும். :)

    ReplyDelete

  35. @ அப்பாதுரை
    ராமனும் கிருஷ்ணனும் அரச்ர்களாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்பதைப் போலவே கற்பனை வளம் மிகுந்தவர்களால் உலாவ விடப்பட்ட கதாபாத்திரங்களே என்று நினைப்பதற்கு இன்னும் அதிகம் வாய்ப்பிருக்கிறது. கடவுள்தனமும் எழுதியவர்களின் கற்பனை வளமே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete

  36. @ கீதா சாம்பசிவம்
    முதலில் திரு.நடன சபாபதியை ஆதரித்தீர்கள். இப்போது திரு. அப்பாதுரையை எதிரொலிக்கிறீர்கள்.. புரியலையே. மீள்வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  37. ஜிஎம்பி ஐயா, திரு நடனசபாபதியும் இவை எல்லாம் நடந்திருக்கலாம் என்கிறார். அப்பாதுரையும் அதுவே சொல்கிறார். அதோடு காந்தியை இப்போது மஹாத்மா எனக் கும்பிடுவது போல் ராமனும், கிருஷ்ணனும் மறைந்த பின்னர் அவர்களைக் கடவுளராக்கி இருக்கின்றனர் என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு.

    ReplyDelete
  38. நிலைத்து நிற்பது கலாச்சாரத்தின் கால்களில் தான் என்று புரிவது அவசியம்.அதனாலேயே கம்பர் இராமாயணத்தை எழுதும்போது தமிழர் கலாச்சாரத்திற்கு ஏற்ப மாற்றியமைத்தார். இலக்கியங்களோ தற்கால நாவல்களோ சில உண்மைச்சம்பவங்கள் தடயங்களை வைத்து எழுத்தாளர்களால் புனைந்து எழுதப்படுவன ஆகும். இதில் உண்மையும் உண்டு பொய்யும் உண்டு.

    ReplyDelete

  39. @ சந்திர கௌரி சிவபாலன்
    சில கதைச் சம்பவங்கள் மற்றும்(portrayal)உருவகங்கள் அவை உண்மையாய் இருக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறது. கற்பனை வளங்கொழியும் அற்புதப் படைப்புகளை இறை நம்பிக்கை என்னும் பெயரில் உண்மையாக்க முயல்வதும் அதன் பலனாய் சிலரது கொள்கைகளைப் பரப்ப முயல்வது கண்டும் எழுதிய பதிவு. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி மேடம்

    ReplyDelete