Wednesday, October 12, 2016

முருகா உன்னைக் கேட்கிறேன்


                                               முருகா உன்னைக் கேட்கிறேன்
                                                --------------------------------------------

முருகன்




         நாளும் என் நினைவிலும் நாவிலும்
    வந்தமரும் குமரா, கந்தா- எனக்குன்னைப்
    பிடிக்கும் என்றொரு முறை எழுதி இருந்தேன்..
    அதில் நமக்குள்ள சமன்பாட்டைக் கூறி,
    ஏன் பிடிக்கும் எனவும் எழுதி இருந்தேன்.
    ஐயா,  உன்னைப் பிடிக்கும் எனக்கொரு ஐயம்— நான் கேட்கிறேன்
    எனக்கென்ன செய்தாய் நீ ?

    நாளும் நெறி தவறி குணங்கெட்டு
    கோபுரம் மேலிருந்து கீழே விழுந்தவரைத்
    தாங்கிப் பிடித்தவர் நாவில் வேலால்
    “ சரவண பவ “ என எழுதி
    “ முத்தை திரு பத்தித் திரு நகை “என
    அடியெடுத்துக் கொடுத்து அவர் உன்
    புகழ் பாட அருள் புரிந்தாயே-நான் கேட்கிறேன்
    எனக்கென்ன செய்தாய் நீ. ? 

    மண்ணுலகில் வந்துதித்து ஐந்து பிராயம்
    வாய் பேசாது ஊமையாய் நின்றவருக்கு
    வாயுரைக்க மட்டுமின்றி உன் மேல்
    பக்தியில் பாடவும் அருள் புரிந்தாயே- நான் கேட்கிறேன்
    எனக்கென்ன செய்தாய் நீ. ?

    கந்தா.! உன் புராணம் பாட வந்த
    கச்சியப்ப சிவாச்சாரியருக்கு
    எடுத்துக் கொடுத்த பாடல் முதல் அடி
   “ திகட சக்கர செம்முக மைந்துளான் “
    இலக்கணப் பிழை கொண்ட தென்று
    குமரகோட்டப் புலவர் பெருமக்கள்
    எடுத்துரைக்கத் தவறேதுமில்லை என்று
    நீயே செந்தமிழ்க் குமரனாய் வந்து
    சோழ நாட்டு வீர சோழியம் என்ற
    இலக்கண நூல் ஆதாரங் காட்டி அருளினாயே-நான் கேட்கிறேன் ,
    எனக்கென்ன செய்தாய் நீ. ?

    மண்ணும் விண்ணும் தொடும் மாமரமாய் எதிர்நின்ற
    மாயையின் மைந்தன் சூர பதுமனை இரு கூராக்கி
    சேவலும் மயிலுமாய் தடுத்தாட் கொண்டாயே, மாலவன்
    மருகா, மாயையில் கட்டுண்டா -நான் கேட்கிறேன்
    எனக்கென்ன செய்தாய் நீ .?

   முன்னறிவிப் பேதுமின்றி குப்புற வீழ்ந்த
   என் கூடு விட்டு உயிர்ப் பறவை பறத்தல்
   உணர்ந்து “ ஐயோ “என்று அவன் மனையாளை
   அழைத்தவள் அஞ்சு முகம் கண்டு ஆறு முகம்
   தோற்றினாயே, நெஞ்சமதில் அஞ்சேல் என உன்
   வேல் காட்டினாயே, முருகனே, செந்தில் முதல்வனே
   மாயன் மருகனே, ஈசன் மகனே, ஒரு கை முகன்
   தம்பியே, உன் தண்டைக்கால் நம்பியே நாளும்
   பொலிவுறும் என் மனையாளுக்கு  அருளினாய்-நான் கேட்கிறேன்
   எனக்கென்ன செய்தாய் நீ..?

(ஐயோ என்பது யமனின் மனைவிக்குப் பெயர் சுட்டியைச் சொடுக்கினால் நான் வீழ்ந்து எழுந்த அனுபவம் படிக்கலாம் )
 
-----

24 comments:

  1. ஒவ்வொரு நாளுமே வெகுமதி தான். அவன் கொடுத்த பிச்சை தான்! :)

    ReplyDelete
  2. தேவாரப்பதிகங்கள் படிக்கும் சிலவற்றில் நாம் இறைவனுடன் நேரில் பேசுவது போன்ற உணர்வு ஏற்படும். இந்தப்பதிவினைப் படிக்கும்போது அதனை நான் உணர்ந்தேன், ஆத்மார்த்தமாக.

    ReplyDelete
  3. முருகப்பெருமானின் கவிதை அருமை ஐயா.

    ஐயோ... பதிவு முழுவதும் படித்தேன் ஐயா
    “ காலா, என்னருகே வாடா, உன்னை
    சற்றேமிதிக்கிறேன் என் காலால்”
    இது உங்களது ஃபேவரிட் வார்த்தையாயிற்றே....

    ReplyDelete
  4. நல்லா மாட்டிக்கிட்டாரு, இந்த முருகேசன் உங்களிடம். நறுக்குத் தெறிச்ச மாதிரி நல்லா கேளுங்க நாலு கேள்வி !

    ReplyDelete
  5. எனக்கென்ன செய்தாய் நீ......

    நல்ல கேள்வி.... அவன் பதில் ஒரு புன்னகை மட்டுமாக இருந்திருக்கும்!

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  6. அருமை!
    மனைவிக்கு அருள்வது உங்களுக்கு அருள்வதை விட சிறப்பல்லவா

    ReplyDelete
  7. அதுதானே!..

    >>> நான் கேட்கிறேன்.. எனக்கென்ன செய்தாய் நீ!?...<<<

    ஐயா அவர்கள் கேட்டிருப்பது - நியாயமான கேள்வி!..

    ReplyDelete
  8. நீங்கள் முருகனிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் உங்கள் கவிதையிலேயே இருக்கிறது. கவிதை புனையும் அளவுக்கு உங்களுக்கு திறமை இருக்கிறதே அதுதான்.

    ReplyDelete

  9. @ டாக்டர் கந்தசாமி
    /ஆஹா, நல்ல கற்பனை./ கற்பனை இல்லைஐயா படித்த கதைகளின் தாக்கமும் சில உண்மை நிகழ்வுகளும்தான் வருகைக்கு நன்றி

    ReplyDelete

  10. @கீதா சாம்பசிவம்
    எனக்கென்னவோ அப்படித் தோன்றவில்லை. வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete
  11. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    நான் எழுதும் போது படித்த கதாபாத்திரங்களின் குணங்களே அப்படி எழுத வைத்தது வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  12. @கரந்தை ஜெயக்குமார்
    நல்ல கற்பனை என்கிறீர்கள்கற்பனை அல்ல என்கிறேன் நான் கதாபாத்திரங்கள் அப்படி எழுத வைத்தது வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  13. @கில்லர்ஜி
    காலா என்னருகே வாடா என்பது என் ஃபேவரைட் வார்த்தைகள் அல்ல. அன்று அனுபவ பூர்வமாக நான் ஏன் மனைவியிடம் சொன்னது கவிதையைப் பாராட்டியதற்கு நன்றி ஜி

    ReplyDelete

  14. @ ஏகாந்தன்
    இதற்குமேல் கேட்டால் முருகனும் அவன் பக்தர்களும் தாங்க மாட்டார்கள் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  15. @ வெங்கட்நாகராஜ்
    அவனிடம் எந்த ரியாக்‌ஷனும் எனக்குத் தெரியவில்லை. நான் எதிர் பார்க்கவுமில்லை. வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  16. @ டி என் முரளிதரன்
    அதெப்படி சிறப்பாகும் நான் வேறு என் மனைவி வேறுதானே வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  17. @ துரை செல்வராஜு
    நீங்களாவது என்னுடன் உடன்படுகிறீர்களே நன்றி சார்

    ReplyDelete

  18. @ வே நடன சபாபதி
    என் திறமைக்கும் அது இன்மைக்கும் நானே காரணம் என்றுதான் நான் நினைக்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  19. கந்தனும் வருவான் காட்சியும் தருவான் கவலைகள் ஏன் மனமே என்று பெங்களூர் ரமணி அம்மாள் பாட்டு நினைவுக்கு வருகிறது.

    முருகனிடம் கேள்விகள் கேட்கிறீர்கள், அப்போது அவர் வந்தார் தானே!
    அருமை.
    உங்களையும் அழகாய் கவிதை எழுத வைத்து எங்களை படிக்க வைத்து இருக்கிறார்.

    ReplyDelete

  20. @ கோமதி அரசு
    முருகன் இதைச் செய்தார் அதைச் செய்தார் என்றெல்லாம் படிக்கும்போது(அவன் இருந்தால்தானே வர) எழுந்த கேள்விகளே அவை. எப்படிச் சொன்னாலும் அதையும் சாதகமாகவே நினைக்கும் பலரும் பதிவர்களில் இருக்கிறார்களே வருகைக்கும் பாசிடிவாக எடுத்துக் கொண்டதற்கும் நன்றிகள் மேம்

    ReplyDelete
  21. // உன் தண்டைக்கால் நம்பியே நாளும்
    பொலிவுறும் என் மனையாளுக்கு அருளினாய்//
    உங்கள் மனைவிக்கு வந்து அருளியது தெரிந்திருக்கிறது. மேலும் கோமதி அரசுவும் அவர் வந்தார் தானே, அதனால் தானே கேள்விகள் என்றே கேட்கிறார். ஆகவே அவனருள் இன்றி இதெல்லாம் ஏது? நீங்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் உங்களுக்கென்று உள்ளது உங்களுக்குத் தான் போகும். மற்றவர் என்ன முயன்றாலும் அபகரிக்க முடியாது!

    எங்க வீடுகளில் நாளைக்கு இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என்றெல்லாம் சொன்னதில்லை. பிச்சைக்காரனுக்குப் பார்த்துக்கலாம் என்பார்கள். ஏனெனில் ஒவ்வொரு நாளும் நம் கண் விழித்து உயிருடன் இருப்பதே ஆண்டவன் அருள் தான் என்பார்கள். நாளைக்கு என்று எங்க வீடுகளில் யாரும் சொல்லி நான் கேட்டதில்லை! எல்லாம் நல்லபடியாக இருந்தால் பிச்சைக்காரனுக்குப் பார்த்துக்கலாம் என்பார்கள். அதனால் தான் ஒவ்வொரு நாளும் அவன் போட்ட பிச்சை, போடுகிற பிச்சை என்றேன்.

    ReplyDelete
  22. @ கீதா சாம்பசிவம்
    மேடம் வணக்கம் எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன் எனக்குத் தெரிந்ததில் இதுவும் ஒன்று நம்பிக்கை சார்ந்த விஷயங்களை சிலர் அசைத்துப்பார்க்கக் கூட விரும்புவதில்லை மன உணர்வுகளுக்கும் அறிவுக்கும் இடையே நடக்கும் போராட்டங்களில் அறிவு தோற்று உணர்வுவெல்வது இயற்கை என்று தெரிகிறது அதற்காக அறிவு தவறு என்றாகாது. சில வழக்குப் பேச்சுகள் கேட்கத்தான் நன்றாக இருக்கும் பொதுவாக யாரும் அவ்வாறு/அதன்படி நடப்பதில்லை/ செய்வதில்லை. இதையும் என் அறிவு சொல்கிறது நீங்கள் மறுக்கலாம் எழுத்தை ரசிக்கவோ தூற்றவோ செய்வதை விட்டு எழுதுபவனைப்பற்றி பேச வேண்டாமே வருகைக்கு நன்றி

    ReplyDelete