Thursday, April 24, 2014

சிறு வியாபாரம் -எண்ணச் சரடுகள்


                             சிறு வியாபாரம் -எண்ணச் சரடுகள்.
                             --------------------------------------------------



எனக்கு பணிமாற்றம் வ்ந்தபோது முதலில்மிகவும் கலங்கி விட்டேன். மாநிலம் விட்டு மாநிலம் என்று மாற்றங்கள் தொடர்ந்து வர வாய்ப்பிருந்தது. ஒரு சமயம் வேலையை ராஜினாமா செய்து ஒரு பெட்டிக்கடை போடலாம் என்னும் அளவுக்குபோயிருந்தேன் பணிமாற்றம் வந்தால் பிள்ளைகளின் படிப்பு மிகவும் பாதிக்கப் படும் என்ற அச்சம்தான். இப்போது நான் வேலையை ராஜினாமா செய்து வியாபாரம் என்று இறங்கி இருந்தால்  எப்படி இருந்திருக்கும் என்னும் கற்பனை நான் இப்போதுகாணும் சிறு வியாபாரிகளிடம் பேச வைத்தது. சிறு வியாபாரி என்றால் பெட்டிக்கடை போன்று கடை வைத்திருப்பவர்கள் என்று முதலில் நினைத்தேன் என்றைய நிலவரத்திலும் வியாபாரம் ஆகும் பணத்தில் 20% லாபம் கிடைக்கும் என்று கணக்கிட்டால் ஒரு நாளைக்கு டெர்ன் ஓவராக ரூ. ஆயிரத்துக்கும் மேல் ஆகவேண்டும் . அப்படி ஆகும் பட்சத்தில் சுமார் ரூ.200-/லிருந்து 300-/ வரை நம் செலவுக்குக் கிடைக்கலாம் . ஆனால் வியாபாரிக்கு உரிய எந்த குணமும் சாமர்த்தியமும் எனக்குக் கிடையாது. ஆகவே அன்று தொடர்ந்து நான் வேலையில் இருக்க எடுத்த முடிவே சரி என்று படுகிறது.
என் வீட்டின் முன் சிறு வியாபாரிகள் பலரைப் பார்க்கிறேன்  அவர்கள் தள்ளு வண்டியில் சீசனுக்கு ஏற்றாற்போல் பழவியாபாரம் செய்கிறார்கள். ஆரஞ்சு, திராட்சை. நுங்கு, தர்பூஸ் மாம்பழம் போன்ற பழங்களை வியாபாரம் செய்கிறார்கள். அதிகாலையில் சிடி மார்க்கெட், எசவந்தபுரா மார்க்கெட்போன்ற இடங்களுக்குச் சென்று ரூபாய் ஆயிரமோ அல்லது கூடக் குறைவோ அவர்கள் சக்திக்கேற்றபடி முத்லீடு செய்து மொத்த வியாபாரிகளிடம் இருந்துசரக்கு எடுக்கிறார்கள். உதாரணத்துக்கு தர்பூஸ் கேஜி பத்திலிருந்து பதினைந்துக்கு என்று வாங்கி அதை கேஜி ரூ,20/ -வரைக்கும் விற்கிறார்கள். என் வீட்டின் முன் விற்பவர் கூறிய தகவல்கள் இது. முதலீடு செய்த பணத்துக்கான மொத்த சரக்கும் விற்றுத் தீர்ந்தால் கையில் கணிசமான பணம் மிஞ்சும். இதில் இவர்கள் தள்ளுவண்டிக்கு தினம் ரூ.50-/ வாடகையாகத் தரவேண்டும் . போலிஸ் கெடுபிடிக்கும் பணிந்து போய் பணமாகவோ பொருளாகவோ கொடுக்கவேண்டும்
இன்னொருசிறு வியாபாரி நுங்கு விற்பவர். இவர் சீசனுக்கு சீசன் வியாபார்ம் செய்பவர். இவரது ஊர் ஆம்பூர் என்றார். இவர்கள் ஐந்தாறு பேர் கூட்டாக தொழில் நடத்துகிறார்கள். ஊரில் பனந்தோப்பை குத்தகைக்கு எடுக்கிறார்களாம் ஒரு மரத்துக்கு ரூ.நூறிலிருந்து நூற்றைம்பது வரை கொடுக்க வேண்டுமாம் . ஒரு பனை மரத்தில் ஏறி நுங்குகளைக் குலையோடு எடுக்க மரத்துக்கு ரூ. 50-/தரவேண்டுமாம்.. அப்படி தோப்பில் இருக்கும் மரங்களிருந்து கிடைக்கும் காய்களை லாரியில் ஏற்றி பெங்களூர் கொண்டு வந்து நண்பர்கள் பங்கு போட்டுப் பிரித்துக் கொண்டுபல இடங்களில் வியாபாரம் செய்கின்றனர். இந்தக் கணக்கில் ஒரு நுங்கு ஐந்து அல்லது ஆறு ரூபாய் கொள்முதலாகும். இவர்கள் அதை ரூ.15/லிருந்து ரூ.20-/ என்று விற்பனை செய்கிறார்கள் இப்படியான வியாபாரத்தில் சீசனுக்கு ஆளுக்கு  ரூ 10,000-/ வரை கிடைக்கலாமாம். ஆனால் நுங்கு சீவி விற்பது எளிதாகத் தெரியவில்லை.

என் வீட்டில் இருந்த இரண்டு தென்னை மரங்களில் ஒன்றைக் கருணைக் கொலை செய்து விட்டேன் . அது பற்றி ஒரு பதிவும் எழுதி இருந்தேன் . என் வீட்டில் இருக்கும் ஒரு தென்னை மரத்தில் இருந்த காய்களைப் பறிக்க யாரும் கிடைக்காத நிலையில் இருவர் வந்தனர். அவர்கள் குறி மரத்தில் இருந்த முற்றிய காய்கள் அல்ல. இளநீர்க் காய்களே என்பது பின்னர்தான் தெரிந்தது. ஒரு இளநீர் ரூ.8-/ என்று கணக்கிட்டு எடுத்துக் கொள்வதாகக் கூறினர். இரண்டு மணிநேரத்தில் இளநீர்க் காய்களும் முற்றியகாய்களும் என குலைகளாகவும் தனிக்காய்களாகவும் பறித்துக்கீழே இறக்கினர். அதற்குள் ஒரு தள்ளுவண்டியுடன் ஒருவன் வந்தான் . முற்றிய காய்களை எனக்குக் கொடுத்துவிட்டு இளநீர்க் காய்களை வண்டியில் ஏற்றினர். இள நீர்க் காய்களை எண்ணுவது போல்பாவனை செய்து நூறு இளநீர்க் காய்கள் என்று கூறி ரூ. 800-/ கொடுத்தனர். எனக்குத் தெரியும் அதில் 125-/ காய்களுக்கு மேல் இருந்தது என்று, தேங்காய்களாக சுமார் ஐம்பது காய்களும் ரூ.800/- ம் கிடைத்தது, பெங்களூரில் ஒரு இளநீர் ரூ.20-/ க்கும் மேல் விலையில் விற்கப் படுகிறது அந்த வியாபாரிகளுக்கு மரம் ஏறி காய்களை வெட்டிச் சாய்ப்பதும் இளநீர்க் காய்களை விற்பதும் வேலை. ஒரு மரத்தில் இருந்து செலவே இல்லாமல் ரூ. 1200-/ க்குக் குறைவில்லாமல் சம்பாதிக்க முடிகிறது என்றால் ஒரு தென்னந்தோப்பைக் குத்தகைக்கு எடுத்தால் என்ன லாபம் என்று என் மனசு கணக்குப் போட்டது. கூடவே உள்மனசு கையாலாகாதவன் கணக்குப் பார்க்கக் கூடாது என்றது.
இது இன்னொருவிதமான கடை. நான் முடிதிருத்திக் கொள்ளப் போகும் சலூனுக்கு சொந்தக் காரர் ஒருவர். சலூனுக்கு வாடகையாக மாதம் ரூ.5000-/ கொடுக்கிறார், காலை ஏழுமணிமுதல் கடை திறந்திருக்கும் மாலை எட்டு மணிவரை பணி செய்கிறார் என்று எடுத்துக் கொண்டால்சாப்பாடு காஃபி நேரம் போக சுமார் 12 மணிநேரம் பணி. ஒரு மணி நேரத்தில் நான்கு பேர் கடைக்கு வந்து முடி வெட்டிக் கொள்கிறார்கள் என்றால் ஒரு நாளில் 48பேர் என்று கணக்கிடலாம் அவர் முடிவெட்ட ரூ50-/ அதிகபட்சமாக வசூலிக்கிறார். அப்படியானால் ஒரு நாளில் ரூ.2400-/ சம்பாதிக்க வாய்ப்புண்டு. ஆனால் தினம் 48 பேர் வருவார்களா என்பது கேள்விக்குறியே. இவருக்கு மனைவி இரண்டு பெண்குழந்தைகள் இருக்கிறார்கள்.
இதுவன்றி என் கண்களில் தென்படும் காய்கறி வியாபாரிகள் காலையில் மார்க்கெட் சென்று சரக்கெடுத்து வந்து வியாபாரம் செய்ய வேண்டும் . இவர்கள் கொள்முதல் செய்யும் காய்கறிகள் ரூ.1000-/ தாண்டாது. கொள்முதல் செய்யப் பணம் இல்லாதவர்கள் காலையில் கந்து வட்டிக்காரனிடம்கடன் வாங்கி மாலையில் அப்பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என் வீட்டின் முன்னே நான் ஒரு ஆயாவைப் பார்க்கிறேன் காலை ஏழு மணிக்கு கடை பரப்பினார் என்றால் மாலை எட்டு மணிவரை வெயிலில் அமர்ந்திருப்பார். ஒரு கோணிப்பை மறைப்புக்கு வைத்துக் கொள்கிறார். அவரிடம் பேச்சுக் கொடுத்து விஷயம் தெரிய ஆவல் இருக்கிறது. மொழிப்பிரச்சனையும் ஒருவேளை அது அவருக்கு விருப்பபடாமல் போனாலோ என்னும் ஐயம் இதுவரை என்னை தடுத்து வந்திருக்கிறது சில வகைச் சிறு வியாபாரிகள் பற்றி எழுதிவிட்டேன். ஆனால் இந்த வியாபாரம் மூலம்குடும்பம் ரட்சிக்கப் பட்டு குழந்தைகள் படிக்க வைக்கப் பட்டு , வீட்டு வாடகை கொடுக்கப் பட்டு அப்பாடா. இவர்களால் எப்படி சமாளிக்க முடிகிறது. பிலோ பாவர்டி லைன் என்று இப்பேர்ப் பட்டவர்களுக்கு அரசு சலுகைவிலையில் அரிசி போன்ற அத்தியாவசியப் பண்டங்களைக் கொடுப்பதால் ( அரிசி ஒரு கேஜி ஒரு ரூபாய் என்று மாதம் முப்பது கேஜி )அவர்கள் பிழைப்பு நடப்பதாக எண்ணுகிறேன்
சரி தாய் தந்தை இரு குழந்தைகள் என்று இருக்கும் ஒரு குடும்பம் மானத்தோடு வாழ மாதம் எவ்வளவு ரூபாய்த் தேவைப்படும் ?  

என் வீட்டின் முன் 
  
என் வீட்டின் முன்

 




   

28 comments:

  1. நீங்கள் சிறு வியாபாரியாகி இருந்தால் நானும் அதே ஆகியிருக்கலாம். ஏனெனில் எனக்கும் வியாபாரத் திறமை கிடையாது. .... ஆனால் வங்கிப்பணியிலும் பின்னாளில் வியாபாரத் திறமை தேவைப்படும் கட்டாயம் வந்தபோது துறை அநுபவம் கை கொடுத்தது.எனினும் சிறு வியாபாரிக்கு வருடம் முழுதும் வருமானம் இல்லை என்பதும் அவர் நோயில் படுத்தால் வேறு நாதியில்லை என்பதும் கொடுமையான உண்மைகள்.

    ReplyDelete
  2. சிறு கடைகளைப் பார்க்கும்போது, குறிப்பாக சலூனைப் பார்க்கும்போது எனக்கும் இதேபோலத் தோன்றும். இங்கு சலூன்களில் 50 ரூபாய் இல்லை, 70 அல்லது 80 வாங்குகிறார்கள். நாம் எப்போது போனாலும் இரண்டு அல்லது மூன்று பேர்களுக்குக் குறையாமல் காத்திருக்கிறார்கள். அவர்கள் முடி மட்டும் வெட்டிக் கொள்வதில்லை. ஷேவிங், ப்ளீச்சிங் என்று எப்போதடா முடிப்பார்கள் என்று நம் பொறுமையைச் சோதிப்பார்கள். அதற்குக் கட்டணமும் கூட.

    செல்லப்பா ஸார் கடைசி வரிகளில் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை.

    ReplyDelete
  3. நீங்கள் சொன்னவர்கள் திருப்தியாக வாழ்பவர்கள் பலரும் உண்டு... அரசு சலுகைவிலை அரிசி அவர்கள் வாங்குகிறார்களோ இல்லையோ, வசதி படைத்தவர்கள் வாங்கும் பலரும் இருக்கிறார்கள்...

    ISO வாங்கிய சலூன் கடைகளும் உண்டு... மானத்தோடு வாழ பணம் என்பது முக்கிய விசயமில்லை என்பது என் கருத்து...

    ReplyDelete
  4. சில்லறை வியாபாரம் ஆனாலும் உழைத்து வாழும் அவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்!

    ReplyDelete
  5. நீங்கள் இப்படி புள்ளிக் கோலம் போட்டு கணக்கு பார்ப்பதால் – நீங்கள் அதுக்கு (சிறு வியாபாரத்திற்கு) சரிப்பட்டு வர மாட்டீர்கள்.

    ReplyDelete
  6. ஒரு மாதம் மானத்தோடு வாழ எவ்வளவு தேவை? # விரலுக்கேத்த வீக்கம் !

    ReplyDelete
  7. சிறு வியாபாரம் செய்வதற்கு அதீத திறமையும் கொஞ்சம் ஏமாற்றும் தந்திரமும் தேவைப்படும். இவை இல்லாத காரணத்தால் நம் போன்றவர்களுக்கு ஒயிட் காலர் வேலை தான் சரிப்படும்...

    ReplyDelete

  8. @ செல்லப்பா
    நான் எழுதியது சிறு வியாபார்கள் பற்றி. அதைப் புரிந்துகொண்டு பின்னூட்டம் எழுதியதற்கு நன்றி

    ReplyDelete

  9. @ ஸ்ரீராம்
    நான் எழுதியது ஒரு சாதாரண நாவிதன் பற்றி. green trends போன்ற இடங்கள்பற்றி அல்ல. நிறைய வசதிகளுடன் இருக்கும் பார்பர் ஷாப்களில் அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள். ஒரு நாவிதர் தொடர்ந்து 12 மணிநேரம் வேலை செய்வது பற்றியும் அதிக பட்ச வாடிக்கையாளர் எண்ணிக்கை பற்றியும் எழுதி இருக்கிறேன்

    ReplyDelete
  10. எந்த தொழிலையும் வெளியிலிருந்து பார்க்கும்போது அதில் கிடைக்கும் ‘இலாபம்’ மட்டும் தான் தெரியும். அந்த தொழிலில் இறங்கினால் தான் அதிலுள்ள கஷ்ட நஷ்டங்கள் தெரியும். அலுவலகப் பணி புரிவோரால் சரியாக வர்த்தகம் செய்ய இயலாது என்பதை நேரில் பாத்திருக்கிறேன்.

    ReplyDelete

  11. @ திண்டுக்கல் தனபாலன். சிறு வியாபாரிகள் சந்தோஷமாக இல்லை என்று நான் கூறவில்லை. உழைப்பையும் ஊதியத்தையும் ஒப்பிட்டிருக்கிறேன் வாழ்வதற்கே பணம் அவசியம் என்னும் கருத்துள்ளவன் நான். அரசின் சலுகைகளை அதற்கு உரிமை இல்லாதவர்கள் பயன் படுத்துவது சரியல்ல என்பது என் கருத்து.

    ReplyDelete

  12. @ தளிர் சுரேஷ்
    உழைத்து வாழ்பவர்கள் சரியாகச் சொன்னீர்.

    ReplyDelete

  13. @ தி. தமிழ் இளங்கோ
    அது எனக்கும் தெரிந்ததே. அதையே எழுதி இருக்கிறேன் வியாபார நெளிவு சுளிவுகள் எனக்கு சுட்டுப் போய்யாலும் தெரியாது.

    ReplyDelete

  14. @ உமேஷ் ஸ்ரீநிவாசன்
    ஒரு மாதம் மானத்தோடு வாழ எவ்வளவு பணம் தேவை விரலிக்கேத்த வீக்கம் என்று சொல்லி நழுவுகிறீர்கள். அது தெரியாமல் வறுமைக் கோட்டை நிர்ணயம் செய்வதெப்படி

    ReplyDelete

  15. @ ஸ்கூல் பையன்
    நீங்களும் நம் கட்சியா.?

    ReplyDelete

  16. @ வே. நடனசபாபதி
    உங்கள் கணிப்பு சரியே.

    ReplyDelete
  17. //சிறு வியாபாரம் செய்வதற்கு அதீத திறமையும் கொஞ்சம் ஏமாற்றும் தந்திரமும் தேவைப்படும்.//

    அன்பின் ஸ்கூல் பையன் அவர்கள் கூறுவது சரியே..

    சாலையோர சிறு வியாபாரிகள் அனைவரும் நேர்மையானவர்கள் அல்ல.. இங்கே கும்பகோணம் தஞ்சாவூர் பகுதிகளில் நேரில் காணலாம்.

    ஒரு கிலோ சப்போட்டா பழம் பொறுக்கி எடுத்து கொடுத்தால் - அதை மேலும் கிண்டி கிளறி நாலு நாறப் பழங்களைப் போட்டுத் தரும் சாமார்த்தியம் அவர்களுடையது.(முடிவில் எடையும் குறைவாகத் தான் இருக்கும் . அது வேறு கொடுமை)

    நேர்மையாக வியாபாரம் செய்பவர்களும் இருக்கின்றனர். எண்ணிக்கையில் குறைவு..

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. வியாபரம் செய்ய வேண்டும் என்பது ஒரு மன நிலை. அந்த மன நிலையில் இருக்கும் என் போன்றவர்களால் வேலைக்குச் செல்ல சிரமமாக இருக்கும். வேலைக்குச் செல்வதில் இருக்கும் கட்டுப்பாட்டுக்காக அல்ல. தங்களுடைய திறமைகள் மீதுள்ள அபாரமான நம்பிக்கையும் தங்களுடைய சுதந்திரத்தின் மீதுள்ள தனியாத காதலும், ஒரு சிலருக்காவது வாழ்வாதரம் தரமுடிகிறது என்ற மனத் திருப்தியும் எங்களைச் சொந்த வியாபரத்தில் தள்ளி விடுகிறது. அதிக நாட்கள் வியாபாரத்தில் இருப்பவர்கள் திருட்டுத் தனமான செயல்களில் ஈடுபடுவதில்லை.விதிவிலக்குகள் அதிகநாட்கள் வியாபரத்தில் நீடிப்பதுமில்லை. டர்ன்ஓவர் என்றைக்கும் லாபமாகாது. நம் கல்விக்கூடங்கள் நம்மை எல்லாம் உத்தியோகத்திற்குத் தான் தயார் படுத்துகின்றன. இதனால் 99 சதவிகிதம் படித்தவர்களுக்கு வியாபரம் செய்யும் எண்ணம் பயத்தைத் தான் கொடுக்கும்.

    தண்ணீரில் குதிக்கும் வரைதான் பயம். நீந்தப் பழகிவிட்டால் தண்ணீர் ஒரு சுகம். பழகும் போது உதவ சரியான நபரை நம் புத்தியே தேர்ந்தெடுத்துவிடும்-நீந்த வேண்டும் என்ற ஆசையிருந்தால்.

    "நல்லதோர்வீணை செய்தே அதை நலம்கெட புழுதியில் எறிவதுண்டோ
    சொல்லடி சிவசக்தி எனை சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய் .......
    .............நசையறு மனங்கேட்டேன் நித்தம் நவமென சுடர்தரும் உயிர் கேட்டேன்
    அசைவறு மதி கேட்டேன் இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?

    ..பில்கேட்ஸ் முதல் தெரு ஓர வியாபாரிவரைக்கும் இந்தப் பாரதியார் பாடல் தங்களுடைய சொந்த மன ஓட்டமாகப் பார்க்கக்கூடும்.

    ReplyDelete
  20. தெரு ஓரங்களில் சிறிய கடைகளில் வணிகம் செய்து தங்கள் குழந்தைகளை மருத்துவம், பொறியியல் படிப்புவரை படிக்க வைத்தவர்களும் உள்ளனர். முறையாக வணிகம் செய்தால் சிறு வணிகம் நல்ல லாபகரமான வணிகம் என்பதை என்னுடைய வங்கி அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்.

    ReplyDelete

  21. @ துரை செல்வராஜு
    ஐயா நான் பொதுவாக சிறு வியாபாரிகளின் நிலை பற்றி விளக்கினேன் அவர்கள் நிலையில் இருந்து பார்த்தால் அவர்களின் செயலின் நியாயம் தெரியும்/ வாழைப்பழம் சப்போட்டா போன்ற பழங்கள் பெரிஷபிள்.எல்லாவற்றையும் விற்கமுடியாவிட்டால் நஷ்டம். ஆகவே எல்லாவற்றையும் கழித்துக் கட்டப் பார்ப்பார்கள்.அது ஒரு வியாபார தந்திரமோ என்னவோ. வருகைக்குக் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. வியபாரம் என்பது குறைந்த தெகைக்கு பொருள் வாங்கி நம் திறமைக்கும் மற்றவர்கள் தேவைக்கும் ஏற்றபடி விலை வைத்து சம்பாதிப்பதுதான் வியாபாரம்..விலை நிர்ணயம்,வாங்கும் பொருளின்தரம் விற்பவரின் பேச்சுதிறமை!ஆமங்க பேசத்தெறியனும்..நல்லாபழகனும்.வியபார உத்திகள். ஏதோதோழில்செய்யனும்எனபொருளை வாங்கினோம் கடை போட்டு விற்கலாம் என வியபாரம் கடமையாகதான் முடியும்..முதலிடு போட்டதுமே வருமானம் வருமான்னா..வராது எற்றம் இறக்கம் இருக்கும்..என்ன காசு போடாம நம்ம அறிவை பயன் படுத்தி உட்கார்ந்த இடத்திலேயும் சம்பாதிக்கலாம் தரகுவேலை என்பார்கள் புத்தி வேண்டும்..அதிலும் 10000 கொடுத்த 20000. என்றால் மக்கள் கண்ணமமூடிதருவாற்கள் இதர்க்கும் புத்திசாலிதனம் வேண்டும்.ஆக வியபாரம் என்பதே மற்றவர்களிடம் நம் பொருளை கொடுக்க நாம் பல உத்திகளை பயன் படுத்தி அவர் சம்பாதியத்தில் அதிகபட்சம் பெறுவதே.,வியபாரம்.. ஒரே ஏரியாவில் ஒரேமாதிரி கடைகள் ஆனாலும் ஏற்ற இறக்கம் விலைகள் வாங்குபவர் எந்த கடைக்கு செல்கிறாறோ அந்த கடைகார்ருக்கு வியபாரம் தள்ளுவண்டியானாலும் ,பஞ்சுமிட்டாய் விற்றாலும்..மேலும் அடிகடி வாங்கிட்டு அக்கவுன்டு அதாவது வாரம்அல்லது மாதம் ஒருதடவை என வாங்குபவர்களும் சரி விற்பவர்களும் சரி ஏதாவது சலுகை என்ற பெயரில் சிறுதொகையை எமற்றத்தான் செய்கிறார்கள் ..வியபாரத்தில் இதெல்லாம் சகஜம்ப்பா..ஒருநாள் வாழ்கைக்கு சரி ஓரு 15 நாள் வாழ்கை ஓட்ட எவ்வளவு சம்பாதிகனும்...இந்த பஞ்சுமிட்டாய்விற்பவர்கள்,ஊசி பாசி விற்பவர்களால் எவ்வளவு தூரம் தினம் நடந்து விற்று சம்பாதித்து வாழ்கையைநடத்துகிறார்கள் ..இதில்போதைக்கு வேற செலவு செய்கிறார்கள் ..யோசித்து பாருங்கள் கஷ்டபட்டு சம்பாதிப்பவரால் எப்படி போதைக்கு செலவு செய்கிறார்கள்..போதை என்பதே சுயநலத்தின் உச்சம்தான் ..வாழ்க்கை வாழ எல்லோரும் ஒருவருடைய உழைப்பை பகிற்ந்துகறதில் தான் உள்ளது..மற்றவர்உழைப்பை எப்படி
      சுலபமா திறமையா சுரண்டுவது என்பதே இன்றைய வாழ்கை போர் ஆகிவிட்டது சுயநலம் எல்லாவற்றிலும்...

      Delete

  22. @ வெங்கட்
    வெகுநாட்களுக்குப் பின் உங்கள் பின்னூட்டம். நன்றி நீங்கள் கூறுவது பெரிய பிசினஸ் செய்பவர் பற்றி எனஎண்ணுகிறேன் எல்லோரும் வியாபாரம் செய்ய முடியாது என்பதும் என் கருத்து. சிறு வியாபாரம் பெருகி அபிவிருத்தியானால் நல்லது. அநேகம் பேர் அன்றாடப் பிழைப்புக்கு அல்லாடுகிறார்கள் என்று தோன்றுகிறது மீண்டும் வருகைக்கு நன்றி

    ReplyDelete

  23. # டி.பி.ஆர்.ஜோசப்
    சிறு வியாபாரம் லாபகரமாக அபிவிருத்தியடைய you must plough back the money in the business. கந்து வட்டிக்காரரிடம் கடன்வாங்கி வியாபாரம் செய்பவர்கள் நிலை நினைத்துப் பார்க்க முடியவில்லை, வருகைக்கு நன்றிசார்

    ReplyDelete
  24. வணக்கம்
    ஐயா.

    சிலருக்கு விருப்பமான தொழில் சிலருக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம்....இருந்தாலும் நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள்... ஐயா..


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

  25. @ ரூபன்
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி

    ReplyDelete
  26. http://blogintamil.blogspot.fr/2014/04/blog-post_26.html

    ReplyDelete
  27. தலைநகரில் சீசனுக்கு சீசன் மாறுபடும் சிறு வியாபாரிகள் வியாபாரம் - குளிர் காலத்தில் வேக வைத்த முட்டை விற்பவர், கொஞ்சம் வெயில் வரும் வேளைகளில் நாவல் பழமோ, இல்லை சுட்ட மக்காச் சோளமோ விற்பார். இவர்களைப் பார்க்கும்போதெல்லாம் உழைத்து சம்பாதிக்க நினைக்கிறார்களே என்று பாராட்டத் தோன்றும். பல சமயங்களில் இவர்கள் வாழ்வு கடினமான ஒன்று தான்....

    ReplyDelete