வியாழன், 25 செப்டம்பர், 2014

கீதைப் பதிவு அத்தியாயம் -8


                                    கீதைப் பதிவு  அத்தியாயம் - 8
                                     ----------------------------------------



அக்ஷரப்ரஹ்ம யோகம்
அர்ஜுனன் சொன்னது
ஓ புருஷோத்தமா, அந்தப் பிரம்மம் யாது, அத்யாத்மம் எது, கர்மம் என்பதுயாது, அதி பூதம் என்று சொல்லப் படுவது எது, மேலும் அதிதெய்வம் என்று எது அழைக்கப் படுகிறது.?(1)
மதுசூதனா, இந்த தேகத்தில் அதியக்ஞன் என்பவர் யார்.?அவர் எப்படி இருக்கிறார்,? தன்னடக்கம் பழகியவர்களால் மரணகாலத்திலும் நீர் எங்ஙனம் அறியப்படுபவர் ஆகின்றீர்.?(2)
ஸ்ரீபகவன் சொன்னது
அழிவற்றதாயும் மேலானதாயும் இருப்பது பிரம்மம். அதன் ஸ்வபாவம் அத்யாத்மம் ( தன்னைத் தானே தோற்றுவித்துக் கொள்ளும் குணம்) என்று சொல்லப் படுகிறது உயிர்களை உண்டு பண்ணி, நிலைத்திருக்கச் செய்தலாகிய வேள்வி கர்மம் எனப்படுகிறது.(3)
உடல் எடுத்தவர்களுள் உயர்ந்தவனே, அழியும் பொருள் அதிபூதம் என்று சொல்லப் படுகிறது. புருஷன்(அகிலாண்டத்தையும் தன் இருப்பிடமாகக் கொண்டு இருப்பவன்)அதி தெய்வம் (ஹிரண்ய கர்ப்பன், எல்லோருக்கும் முன்பே உடலை எடுத்தவன், சுயம்பு) எனப்படுகிறான்.இனி நானே ஈண்டு தேகத்தினுள் அதியக்ஞமாகிறேன். (ஜீவன் தன்னை அடியோடு இறைவனிடத்து ஆஹுதியாகக் கொடுக்கும்போது யக்ஞம் உச்சஸ்தானம் பெறுகிறது.(4)
 மரண காலத்திலும் என்னையே நினைத்துக் கொண்டு, உடலைத் துறந்து, யார் போகிறானோ அவன் என் சொரூபத்தை அடைகிறான்,இதில் ஐயமில்லை.(5)
குந்தியின் புதல்வா, இறுதிக் காலத்தில் எப்பொருளை எண்ணிக்கொண்டு ஒருவன் உடலை உகுக்கிறானோ எப்பொழுதும் அப்பொருளைப் பாவிப்பவனாகிய அவன் அதையே அடைகிறான்.(6)
ஆகையால் சர்வகாலமும் என்னை நினைத்துக் கொண்டே போர் புரி., மனம் புத்தியை என்னிடத்து அர்ப்பணம் செய்வதால் சந்தேகமின்றி என்னையே அடைவாய்.(7)
பார்த்தா, வேறு விஷயங்களில் செல்லாது அப்பியாசம் எனும் யோகத்தோடு கூடிய சித்தத்தால் தேஜோமயமான பரமபுருஷனை சிந்திக்கிறவன் அப்புருஷனை அடைகிறான்.(8)
முற்றும் உணர்ந்தவனை, தொல்லோனை, அனைத்தையும் ஆள்பவனை, அணுவுக்கும் நுண்மையனை, அனைத்தையும் தாங்குபவனை, சிந்தனைக்கு எட்டாத வடிவுடையோனை, கதிரவனைப் போன்று ஒளிர்பவனை, அக்ஞான இருளுக்கு அப்பாற்பட்டவனை, பக்தியோடும் உறுதியான மனத்தோடும் யோக பலத்தோடும் புருவத்தின் மத்தியில் பிராணன் முழுதையும் வைத்து மரண காலத்தில் யார் நினைக்கிறானோ அவன் அத்திவ்விய பரம புருஷனை அடைகிறான்.(9, 10)
வேதத்தை அறிந்தவர்கள் எதை அழிவற்றது என்கின்றனர், பற்று நீங்கிய துறவிகள் எதனுள் புகுகின்றனர், எதை விரும்பி அவர்கள் பிரம்மசரியத்தைக் கடை பிடிக்கின்றனர், அந்த நிலையை உனக்குச் சுருக்கமாகச் சொல்கிறேன்(11)
பொறி வாயில் யாவையும் அடக்கி, மனதை ஹிருதயத்தில் நிறுத்தி, தன் பிராணனை உச்சந்தலையில் வைத்து, யோக தாரணையில் நிலைத்திருந்து, “ஓம்என்கிற ஏகாக்க்ஷரமாகிய பிரம்ம மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு, என்னை ஸ்மரித்துக் கொண்டு, யார் உடலை நீத்துப் போகிறானோ, அவன் பரமகதியைப் பெறுகிறான்.(12,13)
பார்த்தா,வேறு எண்ணமின்றி யார் என்னை நெடிது இடையறாது ஸ்மரிக்கிறானோ, அந்த ஒரு நிலைப்பட்ட யோகிக்கு நான் எளிதில் அகப்படுகிறேன்.(14)
பரம பக்குவப்பட்ட மகாத்மாக்கள் என்னை அடைந்து, துன்பத்துக்கு இருப்பிடமும் நிலையற்றதுமாகிய மறுபிறப்பை எடுப்பதில்லை.(15)
அர்ஜுனா, பிரம்ம லோகங்கள் வரையில் உள்ள உலகங்களுக்கு மறு பிறப்புண்டு,குந்தியின் மைந்தா, மற்று என்னை அடைந்தவனுக்கு மறுபிறப்பில்லை.(16)
ஆயிரம் யுகம் பிரம்மாவுக்கு ஒரு பகல் என்றும், ஆயிரம் யுகம் அவருக்கு ஒரு இரவு என்றும் அறிபவர், இராப்பகலின் தத்துவத்தை அறிப்வர் ஆகின்றனர்.(17)
(பிரம்மாவின்) பகல் வரும்போது, தோன்றா நிலையிலிருந்து தோற்றங்கள் யாவும் வெளிப்படுகின்றன. இரவு வரும்போது ஒடுக்கம் என்பதனுள் அவைகள் மறைகின்றன.(18)
அர்ஜுனா, அதே இந்த உயிர்த்தொகை பிறந்து பிறந்து இரவு வரும்போது தன் வசமின்றி ஒடுங்குகிறது.பகல் வரும்போது வெளிப்படுகிறது.(19)
ஆனால் அந்த அவ்யக்த்ததைக்(தோன்றும் அனைத்தும் தோன்றாநிலைக்குப் போவது) காட்டிலும் மேலான, நிலைத்துள்ள அவ்யக்தம் ஒன்று உளது. உயிர்களெல்லாம் அழியும்போதும் அது அழிவதில்லை.(20).
அவ்யக்தம் ,அக்ஷரம் என்று சொல்லப் படுவதை பரமகதி என்று சொல்லுவர். எதை அடைந்து (உயிர்கள்) திரும்பி வருவதில்லையோ, அது என்னுடைய பரமபதம்.(21)
அர்ஜுனா, உயிர்கள் எவனுள் இருக்கின்றனவோ, எவனால் இவை யாவும் வியாபிக்கப் பட்டும் இருக்கின்றனவோ அந்த பரம புருஷன் அனன்ய பக்தியால் (ஒரே குறியுடைய ) அடையப் படுகிறான்.(22)
பரதகுலப் பெருமகனே, எக்காலத்தில் உடலை விட்டுப் போகின்ற யோகிகள் முக்தி அடைகின்றனரோ, எக்காலத்தில் போகின்றவர்கள் பிறக்கின்றனரோ அக்காலத்தைச் சொல்லுகிறேன் (23)
தீ, ஒளி ,பகல், சுக்கில பக்ஷம் , உத்தராயணத்தின் ஆறு மாதங்கள் இவைகளில் உடலை நீத்துப் போகின்ற பிரம்ம ஞானிகள் பிரம்மத்தை அடைகின்றனர்.(24)
புகை, இரவு கிருஷ்ணப்க்ஷம், தக்ஷிணாயணத்தின் ஆறு மாதங்கள்-இவைகளில் போகின்ற யோகி, சந்திரனது ஒளியைப் பெற்றிருந்து மறு பிறவி அடைகிறான்.(25)
ஒளியும் .இருளும் ஆகிய இவ்விரண்டு வழிகள் இயற்கையில் என்றென்றும் உள்ளவை என்று எண்ணப் படுகின்றன.ஒன்று பிறவாமைக்குப் போவது, மற்றொன்று பிறப்பைத் த்ருவது.(26)

இவ்விரண்டு வழிகளையும் அறிகிற எந்த யோகியும் மோகத்தை அடைகிறதில்லை.ஆகையால் அர்ஜுனா, எப்பொழுதும் யோகத்தில் நிலைத்தவனாய் இரு..(27)
இதை அறியும் யோகியானவன் வேதம், வேள்வி, தவம், தானம் ஆகியவைகளின் நற்பலனைக் கடந்து ஆதியாம் பர நிலையை அடைகிறான்(28)
               அக்ஷரப் பிரம்ம யோகம் நிறைவு.  
 

 

12 கருத்துகள்:

  1. படிக்கவும் சிந்திக்கவும் பரவசம்..
    தொடர்கின்றேன்.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  2. புரிந்தது போலவும் உள்ளது. புரியாதது போலவும் உள்ளது. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. @ துரை செல்வராஜு
    ஐயா வணக்கம் நான் பதிவிட்டு முடிப்பதற்குள் உங்கள் பின்னூட்டம்(நான் பதிவிட்ட நேரம் மாலை 5-41. உங்கள் பின்னூட்டம் 5-44) காணொளியோடு படிப்பதற்கே அந்த நேரம் போதுமா தெரியவில்லை. உடன் பின்னூட்டமிட்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  4. @ வே.நடனசபாபதி.
    ஐயா அவை கடவுளின் மொழியல்லவா. அப்படித்தான் இருக்குமென்று நினைக்கிறேன் ...! வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. காணொளி நல்ல தேர்வு. பாட்ல் அருமை, அதற்கு படங்கள் எல்லாம் மிக அழகு.
    அழிவற்ற பரபொருள் பிரம்மத்தை அறிய தானே வாழ்வில் முயற்சிகள் நடக்கிறது. இறைவனின் பாதாரவிந்தங்களில் சரண் அடைவோம்.

    கீதையை படிக்க தருவதற்கு நன்றி.


    பதிலளிநீக்கு

  6. @ கோமதி அரசு
    வருகை தந்து ரசித்ததற்கு நன்றி மேடம்

    பதிலளிநீக்கு

  7. @ ஸ்ரீ ராம்
    தொடர்பவர்கள் பலரும் காணாதபோது , உங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது .நன்றி

    பதிலளிநீக்கு
  8. //மனம் புத்தியை என்னிடத்து அர்ப்பணம் செய்வதால் சந்தேகமின்றி என்னையே அடைவாய்//

    காணொளியில் வருவது போல் மனம் தான் அலை பாய்கிறதே! என்ன செய்ய முடியும்! :(

    நவராத்திரி என்பதால் கொஞ்சம் பிசி. :)

    பதிலளிநீக்கு
  9. வித்தியாசமான சொற்றொடர்களின் அமைப்பின் காரணமாக தொடர்ந்து வருவது என்பது சற்றுச் சிரமமாக உள்ளது. இருப்பினும் உங்களது ஆர்வம் எங்களையும் அழைக்கிறது. நன்றி.

    பதிலளிநீக்கு

  10. @ டாக்டர் ஜம்புலிங்கம்.
    புரியாத தமிழில் இல்லையே. தொடர்ந்த வர வேண்டி நன்றியுடன்

    பதிலளிநீக்கு
  11. //பார்த்தா,வேறு எண்ணமின்றி யார் என்னை நெடிது இடையறாது ஸ்மரிக்கிறானோ, அந்த ஒரு நிலைப்பட்ட யோகிக்கு நான் எளிதில் அகப்படுகிறேன்.//

    ரொம்பவும் கஷ்டமான விஷயம் - பாடலில் சொல்வது போல மனம் ஒரு நிலையில் இல்லாது அலைபாய்கிறது!

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு