சனி, 6 செப்டம்பர், 2014

திருவோணம் நல் வாழ்த்துக்கள்.


                                        திருவோணம் நல் வாழ்த்துக்கள்
                                         -----------------------------------------------


ஓணம் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப் படும் போது இந்த வேளையில்முதலில் அனைவருக்கும் “ ஓணாஷம்ஷகள்
கடவுளின் தேசம் என்று கொண்டாடப்படும் கேரளத்தில் , முன்பு அங்கு சுபிட்சமாக ஆட்சிநடத்திய மகாபலிச் சக்கரவர்த்தி இந்த நாளில் மக்களைக் காண வருவதாக ஐதீகம் இந்த நாளை மக்கள் மகிழ்ச்சியுடன் ஒன்று சேர்ந்து மன்னனை சந்தோஷப்படுத்த கொண்டாடுவதாகவும் ஐதீகம்  
 இந்த மகாபலிச்சக்கரவர்த்தி யானவரை பகவான் வாமன ரூபம் எடுத்து வந்து கர்வம் அடக்கினார் என்பது கதை..மலையாளத் தொலைக் காட்சிகளில் மகாபலியின் வேடமணிந்து பலரும் வருவதாக நிகழ்ச்சிகள் காண்பிக்கப் படுகின்றன. அவர்களில் பலரும் நகைச் சுவை நாயகர்களாக ஏதேதோ சொல்லிப் போகிறார்கள். மகாபலியை கேலிக் கூத்தாக்குகிறார்கள் ஏன் என்று தெரியவில்லை. சுபிட்சமாக ஆண்ட ஒரு சக்கரவர்த்தியை நினைவு கூறும்போது கேலிச் சுவை ஏன்? அப்படி சுபிட்சமாக ஆட்சி புரிந்த அரசனின் அகந்தையை அடக்க மஹாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்தாராம் இதோ அந்தக் கதை( முன்பு கடவுளின் அவதாரங்களை “அவதாரக் கதைகள்” என்னும் தலைப்பில் எழுதி வந்தேன் அதில் வாமனாவதாரக் கதை) 
.அவதாரக் கதை...பாகம்.....5.....வாமனனாக.

-----------------------------------------------------------

         ஆதிசிவனால் மூவுலகாள  வரம் பெற்ற, 
         திரி தூண்டி விளக்கணையாது காத்த கோயில் எலி,
         இரணியன் மகன், பிரஹலாதன் மகன், விரோசனன் 
         மகன் மகா பலியாகப் பிறந்தான்.( தது )

பெற்றவரம்  பலிக்க, வானவரையும் ஏனையவரையும் 
வென்று, மூவுலகாளும் பலி சக்கரவர்த்தி ஆனான். 

          வானவர்களின் தாய் அதிதி, அது கண்டு
          தன் மக்கள் நிலை கண்டு வருந்தி, 
          கச்சியப்ப  முனிவரிடம்  முறையீடு செய்ய,
          அவர் நோன்பு நோற்று, திருமாலை வழிபடு, 
          வழி ஒன்று பிறக்கும் என்றார்.அவளும் வழிபட,

திருநீலகண்டன்  அருள் பெற்று, மூவுலகாளும் பலி,
ஆணவத்தில் திளைக்கும்போது, அவனை நான்
அடக்குவேன், அதற்கென நாள் வரும்போதுன்
வயிற்றில் நான் வந்துதிப்பேன், என்றுரைத்த திருமால்,
அதிதி மகனாக வாமனாவதாரம் எடுத்தார்.

           வரம் மூலம் பெற்ற ஆட்சி நிலைக்க,
           அசுவமேத  யாகம் நடத்தி, யார்
           எதைக் கேட்பினும் நான் அதனைத் தருவேன்,
           என்று கூறி ,அதனைச் செய்தும் வந்தான்  பலி.

தக்க தருணம் வேண்டி நின்ற வாமனரூப
மகாவிஷ்ணு மகாபலியின் யாகசாலை வர,
வணங்கி வரவேற்கப்பட்டு , வேண்டியது
கேட்டுப்பெற, , வேண்டிக்கொள்ளப் பட்டான்.

           தான் ஒரு பிரம்மசாரிப்  பார்ப்பனன்,
           அவன் வாழ மூன்றடி நிலம் தந்தால்
           அதுவே போதும் நலமாயிருக்க என்ற,
           வாமனனுக்கு அது அளிக்க வேண்டாம்
           வந்திருப்பவன் பெருமாள் , அவனுன்னை
           அழிப்பான் என்று அறிவுரை  வழங்கினார்
           குல குரு சுக்கிராச்சாரியார்.

சொன்ன சொல் தவறேன், திருமாலுக்கே என்
தானம் என்றால் எனக்கது பெருமை, என்
குலம் தழைக்கும் என்றே  கூறிய  மகாபலி,
தானம் தர, நீர் வார்த்துத் தர  தயாராக
கிண்டி நீரை எடுக்க, வண்டாக மாறி,
அதன் துவார மறைத்தார், சுக்கிராச்சாரி .

            கிண்டி அடைப்பை நீக்க, எல்லாம்
            அறிந்த மாலும் தருப்பையால்  அதன்
            துவாரம் குத்த ,கண்ணொன்று  குருடாகி
            அலறியடித்து வெளியே வந்தது வண்டு.

மூன்றடி நிலம் பெற,
வரம் பெற்ற வாமனன்
நெடிதுயர்ந்து  ஓரடியாய்
வான மளந்து ,மறு அடியாய்
பூமி அளந்து ,மூன்றாம் அடிக்குக்,
கால் எங்கே வைக்க என்று
மகாபலியிடம்  வினவினான்.

           கைகூப்பித் தலை வணங்கி
           சொன்ன சொல் தவற மாட்டேன்
           தங்கள் மூன்றாம் அடி  என் தலை மேல்
           வைக்க , யான் பெருமை கொள்வேன்
           என்று கூறிய பலிச்சக்கரவர்த்தி
           பாதாளம் ஆள வரம் ஈந்து அவன்
          தலை மேல் கால் வைத்தான் பெருமான்.
        
   =================================
   ( அங்கும் இங்கும் கேட்டதையும், படித்ததையும் பகிரும் வண்ணம் 
        அவதாரக் கதைகள் எழுதுகிறேன். எழுதும்போது யாராவது  ஏதாவது 
      கேட்டால் என்னால் பதில் கூற இயலாது. என்பதையும் உணர்ந்து 
       இருக்கிறேன். எனக்கே உள்ள சந்தேகம் :--ஜெயன், விஜயன் இருவரும், 
       இரணியாட்சகன், இரணியன் என்ற இரட்டைப் பிறவிகளாக, கச்சியப்ப 
       முனிவருக்குப  பிறந்தனர். இரணியகசிபுவின் மகன் பிரகலாதன் 
       பிரகலாதனின் பேரன் மகாபலி சக்கரவர்த்தி. வானவர்களின் தாயான 
       அதிதியின் கணவர் கச்சியப்ப முனிவர். இந்த அதிதியின் மகனாக 
       பிறந்தவர் வாமனர். சிந்தித்துப் பார்த்தால் தலைமுறை  சார்ந்த 
       உறவுகள் நெருடலாகத்  தெரிகிறது. 
       இதற்கு  விளக்கம்  கிடைத்தால் கடமை பட்டிருப்பேன். ) .          
  

     .              



23 கருத்துகள்:

  1. படித்தேன். வேறென்ன சொல்லப் போகிறேன்?

    ஓணாஷம்ஷகள்தான்!

    பதிலளிநீக்கு
  2. திருவோணம் நல்வாழ்த்துக்கள்!..

    காசியபர் (காஸ்யபர்)என்று தான் அறிந்திருக்கின்றேன். சிருஷ்டி வித்துக்களில் காசியபரும் ஒருவர். அதனால் தான் உலகுக்கு காசினி என்றொரு பெயரும் உண்டு. காசியபர் - அதிதி தம்பதியர்க்கு தேவ கணங்களும் காசியபர் - திதி தம்பதியர்க்கு அசுர கணங்களும் பிறந்தனர்.

    அதனால் தான் உலகம் முழுதும் அண்ணன் தம்பிகளுக்குள் எப்போதும் அடிதடி!..

    பதிலளிநீக்கு
  3. இன்றைய கால கட்டத்தின் நியதிகளின்படி கடந்த காலத்தைப் புரிந்து கொள்ள முடியாது என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு

  4. @ ஸ்ரீராம்
    வாழ்த்துக்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு

  5. @ இராஜராஜேஸ்வரி
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  6. @ கரந்தை ஜெயக்குமார்
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

  7. @ துரை செல்வராஜு
    ஐயா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. நான் என் அவதாரக் கதைகள் பகுதியை ஸ்ரீ காஞ்சி காம கோடி பீடாதிபதி ஸ்ரீஜகத் குரு ஸ்ரீ சங்கராச்சாரிய ஸ்வாமிகள் அவர்களது அருளாசியுடன் பிரசுரமானதில் இருந்து எடுத்து எழுதி வந்தேன்.அதில் கச்சியப்ப முனிவர் என்றுதான் இருக்கிறது. இரணியன் இரண்யாட்சகன் கச்சியப்பரின் புதல்வர்கள் என்றுதான் கூறி இருக்கிற்து தாய் பற்றிய சேதி இல்லை. ஆனால் வாமனர் அதிதி கச்சியப்ப தம்பதிகளுக்குப் பிறந்தவர் என்றுஇருக்கிறது. காசினி என்பது தமிழ் வார்த்தை அல்லவா?
    மேலும் இரண்ய கசிபு என்று நாம் அறிந்தவரை இரண்ய காஷ்யப் என்று வடக்கே கூறுகிறார்கள்
    இருந்தாலும் உறவுகள் தலைமுறை தாண்டியவை என்னும் என் கூற்று சரிதானே. விளக்கம் அளிக்க முயற்சி செய்ததற்கு மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு

  8. @ டாக்டர் கந்தசாமி
    /இன்றைய கால கட்டத்தின் நியதிகளின்படி கடந்த காலத்தைப் புரிந்து கொள்ள முடியாது என்று நினைக்கிறேன்./
    நமக்கே புரிந்து கொள்ள முடியாததை நம் வாரிசுகளுக்கு எப்படிச் சொல்ல முடியும் வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  9. "காஸ்யபர்" தான் தமிழில் கச்சியப்பர் ஆகி இருக்காரோ? கச்சியப்ப சிவாச்சாரியார் தனி. இந்தக் காஸ்யபர் தனி. மற்றபடி துரை.செல்வராஜு எழுதி இருப்பது சரியே.

    பதிலளிநீக்கு
  10. //இன்றைய கால கட்டத்தின் நியதிகளின்படி கடந்த காலத்தைப் புரிந்து கொள்ள முடியாது என்று நினைக்கிறேன்./
    நமக்கே புரிந்து கொள்ள முடியாததை நம் வாரிசுகளுக்கு எப்படிச் சொல்ல முடியும்.//

    இதெல்லாம் கடந்த காலம் இல்லை ஐயா. உலகு தோன்றிய போது பிரஜைகளை உருவாக்கியதே காஸ்யபர் என்பார்கள். இவருக்கு நிறைய மனைவிகள். ஒவ்வொருத்தர் மூலம் ஒவ்வொரு குலம் பிறக்கும்.

    பதிலளிநீக்கு
  11. கத்ரு மூலம் நாகர்கள், அதிதி மூலம் தேவர்கள், திதி மூலம் அசுரர்கள், விநதை மூலம் அருணன், கருடன் ஆகியோரும் பிறப்பார்கள். உலகுக்குப் பிரஜைகளை அளித்ததால் இவரை பிரஜாபதி என்றும் சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
  12. திருவோணத் திருநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

  13. @ கீதா சாம்பசிவம்
    கச்சியப்ப சிவாச்சாரியார் வேறுதான். கந்தபுராணம் தமிழில் எழுதியவரல்லவா?no confusion. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  14. @ கீதா சாம்பசிவம்
    /இதெல்லாம் கடந்த காலஇல்லை ஐயா/ இல்லாமல் இப்போதைய கதைகளா? கதையைக் கதையாகவே அறிந்து கொண்டு அதில் இருக்கும் சில நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொள்பவன் நான். உண்மை என்று சாதிக்க மாட்டேன் எனக்கே மனம் ஒப்பாததை எப்படி வாரிசுகளுக்குப் புரிய வைப்பேன் என்பதுதான் என் மறு மொழி.

    பதிலளிநீக்கு

  15. @ கீதா சாம்பசிவம்
    பிரஜாபதிவின் செல்வங்களா நாம்.?பதிவில்கண்ட என் கேள்விக்கு துரை செல்வராஜு கொடுத்த விவரங்களைவிட இன்னும் அதிக விளக்கங்கள் கொடுத்ததற்கு நன்றி மேடம். நான் தலை முறை தாண்டிய உறவுகள் என்றிருக்கிறேன். இல்லை இது எல்லாத் தலைமுறையிலும் நடப்பதுதான் என்று மட்டும் சொல்லாதீர்கள்...! நன்றி.

    பதிலளிநீக்கு

  16. @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    வாழ்த்துக்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு

  17. @ வெங்கட் நாகராஜ்
    ஓணம் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. திருவோணதிருநாளை நன்றாக கொண்டாடி இருப்பீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. இன்றுதான் உங்களது இந்தப் பதிவை பார்த்தோம் சார். தாமதத்திற்கு மன்னிக்கவும். ஓணத்தன்று நாங்கள் கும்பகோணத்தில் பதிவர் குடந்தையூர் சரவணன் அவர்களின் குறும்பட ஷூட்டிங்கில் நானும், தோழியும் இருந்ததால் பதிவுகள் பார்க்க இயலவில்லை.

    தங்களது கேள்விகள் மிகச் சரியே! புராணங்களில் பல கேள்விகளுக்கு விடை இல்லை! கேட்டல் சொல்பவர்களும் இல்லை! என்ன செய்ய! அப்படியே எடுத்துக் கொள்பவர்கள் தான் அதிகம் இருக்கின்றார்கள்!

    பதிலளிநீக்கு