Tuesday, September 30, 2014

கீதைப் பதிவு அத்தியாயம் -9


                                    கீதைப்பதிவு  அத்தியாயம் -9
                                    ---------------------------------------

                                             

ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்
ஸ்ரீ பகவான் சொன்னது
எதை அறிந்து அசுபத்திலிருந்து விடுபடுவாயோ, அனுபவத்தோடு கூடிய அந்த ஆழ்ந்த ஞானத்தைப் பொறாமைப்படாத உனக்கு நன்கு எடுத்துரைக்கிறேன்.(1)
இந்த ஞானம் வித்தைகளுள் வேந்து;. மறைபொருளுள் மேலானது.;தூய்மை தருதலில் சிறந்தது.;கண்கூடாக உணர்தற்குரியது.;தர்மத்தோடு கூடியது.; செய்தற்கு மிக எளியது.; அழிவற்றது.(2)
எதிரிகளை எரிப்பவனே, இந்த தர்மத்தில் சிரத்தை இல்லாதவர்கள் என்னை அடையாது மரண சம்சார மார்க்கத்தில் உழல்கின்றனர்.(3)
அவ்யக்த மூர்த்தியாகிய என்னால் ஜகத் யாவும் வியாபிக்கப் பட்டிருக்கிறது.பூதங்கள் என்னிடத்து இருக்கின்றன. ஆனால் நான் அவைகளிடத்தில்லை.(4)
பூதங்கள்  ( உண்மையில் ) என்னிடத்து நிற்பவைகளல்ல.என்னுடைய ஈசுவர மகிமையைப் பார்.! பூதகணங்களை ஆக்கவும் காக்கவும் செய்கிற என் சொரூபம் அவைகளிடத்தும் இல்லை.(5)
எப்பொழுதும் எங்கும் சஞ்சரிக்கின்ற பெருங் காற்று வானத்தில் நிலை பெற்றிருப்பது போன்று பூதங்கள் எல்லாம் என்னிடத்து இருக்கின்றன என்று தெரிந்து கொள்,(6)
குந்தியின் புதல்வா, பூதங்களெல்லாம் கற்ப முடிவில் என்னுடைய பிரகிருதியை அடைகின்றன. மறுபடியும் கற்ப துவக்கத்தில் நான் அவைகளை தோற்றுவிக்கிறேன்.(7)
என் பிரகிருதியை அருளுடையதாகச் செய்து, சுதந்திரமில்லாது அப்பிரகிருதியின் வசமாயிருக்கும் இவ்வுயிர்த்திரள்  யாவற்றையும் திரும்பத் திரும்ப நான் தோற்றுவிக்கிறேன்(8)
தனஞ்செயா, அக்கர்மங்களில் பற்றற்றவனும் உதாசீனனைப் போல் உட்கார்ந்திருப்பவனும் ஆகிய என்னை அவைகள் தளைக்க மாட்டா.(9)
குந்தியின் மகனே, என்னால் கண்காணிக்கப் பெற்று, பிரகிருதியானது, ஸ்தாவர ஜங்கம உலகத்தைச் சிருஷ்டிக்கிறது.இதன் காரணத்தால் ஜகத்தானது சுழல்கிறது.(10)
என்னுடைய பர சொரூபத்தையும் நான் உயிகளுக்கெல்லாம் ஈசனாயிருப்பதையும் அறியாத மூடர்கள், ஒரு மானுட வடிவம் எடுத்தவன் என்றெண்ணி என்னை அவமதிக்கின்றனர்.(11)
வீண் ஆசையுடையவர்கள், பயன்படாச் செயலாளர்கள், கோணலறிவு உடையவர்கள், விவேக மில்லாதவர்கள்.மையலூட்டுகிற ராக்ஷச, அசுர இயல்பை அடைகின்றனர்.(12)
பார்த்தா, ஆனால் மகாத்மாக்கள் தெய்விக இயல்பை அடைந்தவர்களாய், உயிர்களுக்குப் பிறப்பிடமும், அழியாதவன் நான் என்று அறிந்து, வேறு எதிலும் பற்று வைக்காது, என்னை வழிபடுகின்றனர்(13)
எப்பழுதும் என்னைப் புகழ்பவராயும், உறுதியான விரதத்தோடு முயல்பவராயும் பக்தியுடன் நமஸ்கரிப்பவர்கள் ஆகியும் நித்திய யோகிகள் என்னை உபாசிக்கிறார்கள்.(14).
ஞான  யக்ஞத்தால் வேட்பவர்களாகிய ஏனையவர்களும், என்னை ஒன்றாய், வேறாய், பலவாய்- இத்தனை விதங்களில் உபாசிக்கிறார்கள்.(15)
நானே கிரது என்ற வைதிக கருமம்;யக்ஞம் நானே; ஸ்வதாவாவது நான்;ஔஷதம் நான்;மந்திரமாவது நான்; ஹோமம் செய்யப்படும் நெய்யும் நான்; அக்கினியாவது நான்; வேட்டல் நானே.(ஸ்வதா=பித்ருக்களுக்குப் படைக்கப்படும் உணவு; கிரது=வேதத்தில் விதிக்கப்பட்டுள்ள ஒரு வ்கை கர்மம் வேட்டல்=வேள்வி வேட்டல் எனும் வினையானது ஹுதம் எனப்படுகிறது)(16)
இந்த ஜகத்தின் தந்தை,தாய்,பாட்டனாரவனும் , கர்ம பலனைக் கொடுப்பவனும், அறியத்தக்கவனும்,தூய்மை செய்பவனும்,ஓங்காரம், ரிக் சாமம் யஜுர் வேதங்கள் ஆகின்றவனும் நானே.(17)
புகலிடம், வளர்ப்பவன், உடையவன். சாக்ஷி, இருப்பிடம், அடைக்கலம். தோழன், ஒடுங்குமிடம், தங்குமிடம், களஞ்சியம்,அழியாத வித்து.(18)

அர்ஜுனா, நான் வெப்பந்தருகிறேன்; மழையைப் பெய்விக்கவும் தடுக்கவும் செய்கிறேன்; சாகாமையும் சாவும், ஸத்தும், அஸத்தும் நானே.(19)
மூன்று வேதங்களை அறிந்தவர்கள். யாகங்களால் என்னைப் பூஜித்து, சோம பானம் செய்து, பாபத்தினின்று விடுபட்டவர்களாகி, வானுலகு ஏகுதலை வேண்டுகின்றனர். அவர்கள் புண்ணியமான தேவேந்திர லோகத்தை அடைந்து சொர்க்கத்தில் திவ்யமான தேவ போகங்களை அனுபவிக்கின்றனர்.(20)
அவர்கள் அந்த அகன்ற வானுலகை அனுபவித்து, புண்ணியம் தேய்ந்தபின்பு மண்ணுலகில் புகுகிறார்கள்.இங்ஙனம் மூன்று  வேத நெறிகளைப் பின் பற்றும் போக பித்தர்கள் பிறப்பு இறப்பு எய்துகின்றனர்(21)
எனக்கு அன்னியரல்லாதவராய், என்னையே நினைந்து, யாண்டும் என்னையே உபாசிக்கும் நித்திய யோகிகளுடைய யோக க்ஷேமத்தை நான் வழங்குகின்றேன்.(22)
சிரத்தையோடு கூடிய பக்தர்கள் மற்ற தேவதைகளை வணங்குங்கால், விதி வழுவியவர்களாய் என்னையே வணங்கு கிறார்கள்.(23)
நானே சகல யாகங்களுக்கும் போக்தாவாகவும்( உண்பவன்) பிரபுவாகவும் (தலைவன்) இருக்கிறேன். ஆனால் பல தேவதைகளை வணங்குபவர் என்னை உள்ளபடி அறிகிறார்களில்லை. ஆகையால் அவர்கள் வழுவிப் பிறவியில் வீழ்கின்றனர்(24)
தேவர்களைத் தொழுபவர் தேவர்களை அடைகின்றனர்.பித்ருக்களைப் போற்றுபவர் பித்ருக்களைப் பெறுகின்றனர், பூதங்களை வணங்குபவர் பூதங்களைப் போய்ச் சேருகின்றனர், என்னைப் பூஜிக்கிறவர்கள் என்னையே எய்துவார்கள்.(25)
யார் எனக்கு இலை, மலர், கனி, அல்லது நீரைப் பக்தியோடு படைக்கிறானோ அந்த தூய மனத்தானனது அன்பளிப்பை நான் (இன்புடன்) அருந்துகிறேன்.(26)
குந்தியின் புதல்வா, நீ எதைச் செய்தாலும், யாது புசித்தாலும்,ஏது ஹோமம் பண்ணினாலும். எதை ஐயமிட்டாலும், எத்தவத்தைப் புரிந்தாலும், அதை எனக்கு அர்ப்பணமாகச் செய்.(27)
இங்ஙனம் நன்மை தீமைகளைப் பயக்கின்ற வினைத்தளைகளிலிருந்து விடுபடுவாய், சன்னியாச யோகத்தில் உள்ளத்தை உறுதியாக வைத்தவனாய், வினையினின்று விடு பட்டு என்னை அடைவாய்.(28)
நான் எல்லா உயிர்களிடத்தும் சமமாயிருக்கிறேன்.எனக்குப் பகைவனுமில்லை, நண்பனுமில்லை, ஆனால் என்னை பக்தியோடு பஜிக்கிறவர்கள் என்பால் உளர், நானும் அவர்கள்பால் உள்ளேன்.(29)
கேடு மிக உடையோனும் வேறு ஒன்றையும் எண்ணாது என்னை பஜிப்பானானால், அவன் சாது என்றே கருதப்பட வேண்டும்.ஏனென்றால் அவன் நன்கு தீர்மானித்தவன் ஆகிறான்(30)
விரைவில் அவன் அறவாளன் ஆகிறான்.நித்திய சாந்தியையும் அடைகிறான். குந்தியின் புதல்வா, என் பக்தன் நாசமடைவதில்லை என்று நன்கு அறிவுறுத்துக.(31)
பார்த்தா, கீழான பிறவியர்களாகிய பெண்பாலர், வைசியர், சூத்திரர் ஆகியவரும் என்னைச் சார்ந்திருந்து நிச்சயமாகப் பரகதி அடைகின்றனர்.(32)
புண்ணியவான்களும் பக்தர்களுமாகிய பிராம்மணர்களையும் அவ்வாறே ராஜ ரிஷிகளையும் பற்றிப் பின்பு பேசுவானேன்.? நிலையற்றதும் சுகமற்றதுமாகிய இவ்வுலகைப் பெற்ற நீ என்னைப் பஜிப்பாயாக.(33)
மனதை என்னிடத்து வைத்து, என்பால் பக்தி பண்ணி, எனக்கு யாகம் செய்து, என்னை வணங்கு.என்னைக் குறியாகக் கொண்டு உள்ளத்தை உறுதி படுத்தி என்னையே அடைவாய்.(34)
                  ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் நிறைவு.         .           



    .
                          
 

18 comments:

  1. படித்தேன். என் சிற்றறிவுக்கு எதுவும் புரியவில்லை.

    ReplyDelete
  2. குத்துமதிப்பாய் கருத்து புரிந்தாலும் சில வார்த்தைகள் கடினமாய் இருக்கின்றன. :))

    ReplyDelete
  3. தொடர்கிறேன். முனைவர் பழனி.கந்தசாமி அவர்களின் கருத்தே என்னுடையதும்.

    ReplyDelete
  4. யாவுமாகி நிற்கின்றான் - அந்த யாதவன்..

    தொடர்கின்றேன்.. ஐயா!..

    ReplyDelete

  5. @ டாக்டர் கந்தசாமி
    சிற்றறிவுக்குப் புரியாதது என்ன இருக்கிறது. பெருமான் தன்னைப் பற்றிப் பேசுவதே அதிகமாயிருக்கிறது. எதையோ எதிர்பார்த்துப் படிப்பதால் வரும் வினை என்றே எண்ணுகிறேன். வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete

  6. @ ஸ்ரீராம்
    குத்து மதிப்பாய் புரிந்து கொண்டாலும் என்கிறீர்கள். அதில் சொல்லப் பட்டிருப்பதற்கு மேல் ஏதாவது இருக்குமோ என்னும் எண்ணமே உங்களை இப்படி நினைக்க வைக்கிறது என்று நினைக்கிறேன். பொருள் புரியாத வார்த்தைகளென்று நான் எண்ணும்போது அருகிலேயே பொருளையும் எழுது கிறேன். வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  7. @ வே.நடன சபாபதி
    முனைவருக்கு எழுதிய மறுமொழி பாருங்கள் நன்றி.

    ReplyDelete
  8. ‘ @ கரந்தை ஜெயக்குமார்
    தொடர் வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  9. @ துரை செல்வராஜு
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  10. புரிந்து கொள்ள முயல்கிறேன்.

    ReplyDelete

  11. @ கீதா சாம்பசிவம்
    நீங்களுமா.? நம்பமுடியவில்லை. வருகைக்கு நன்றி. பதிவினால் வரும் ஏமாற்றம் காணொளியால் சிறிதாவது குறையலாமே.

    ReplyDelete
  12. கடந்த இரண்டாண்டுகளாக நான் தினமும் ஒரு தேவாரப்பதிகம் படித்துவருகிறேன். ஆரம்பத்தில் புரியாத பல சொற்கள் தற்போது எனக்கு புரிய ஆரம்பித்துள்ளன. அவ்வாறே தங்கள் கீதை பதிவுகளைத் தொடர்ந்து படிக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பிக்கிறது. நன்றி.

    ReplyDelete
  13. வேலைப் பளுவாலும் அடுத்தடுத்த மின்வெட்டாலும் காணொளியை இன்று தான் பார்க்க முடிந்தது. இனிமையான குரல் அந்தக் குழந்தைக்கு! இஷ்டத்துக்கு சஞ்சாரம் செய்கிறது. அருமையான காணொளி.

    ReplyDelete
  14. அவ்யக்த மூர்த்தியாகிய என்னால் ஜகத் யாவும் வியாபிக்கப் பட்டிருக்கிறது.பூதங்கள் என்னிடத்து இருக்கின்றன. ஆனால் நான் அவைகளிடத்தில்லை

    பகவானின் ஈஸ்வர ஸ்வரூபத்தை அருமையாக காட்சிப்படுத்தும் அத்தியாயம்..!

    ReplyDelete

  15. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    எழுத்தும் நடையும் பழமையாக இருக்கிறது என்னும் குற்றச் சாட்டு இருப்பது தெரியும். இருந்தும் தவிர்க்க முடியவில்லை. நான் கூறி இருந்தபடி சம்ஸ்கிருத சுலோகத்து ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருள் தரும் பதவுரை. என் இஷ்டத்துக்கு நான் வார்த்தைகளை மாற்ற விரும்பவில்லை ஓரிரு முறை படிக்க வைக்கும்படி இல்லாத்தது என் குறை அல்ல என்றே எண்ணுகிறேன் தொடர் வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  16. @ கீதா சாம்பசிவம்
    தவறாமல் மீண்டும் வந்து காணொளியை ரசித்ததற்கு நன்றி மேடம்

    ReplyDelete

  17. @ இராஜராஜேஸ்வரி
    உங்கள் வருகையும் கருத்துப் பகிர்வும் மகிழ்ச்சி அளிக்கிறது மேடம் நன்றி.

    ReplyDelete