ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

அத்வைதம்... சில சந்தேகங்கள்...?


                                   அத்வைதம் சில சந்தேகங்கள்....?
                                   ------------------------------------------


சிலநாட்களுக்கு முன் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதைப் படித்துப் பார்த்தபிறகு எனக்கு நானே ஒரு ஷொட்டு கொடுத்துக் கொண்டேன். அத்துவைதக் கருத்துக்களுக்கு அது வேறு ஒரு வியாக்கியானமாகத் தோன்றியது. இம்மாதிரி சிந்திப்பதற்கும் எழுதுவதற்கும் என்ன காரணமிருக்கும் என்று யோசித்தேன். தெரியாத ஒன்றைத் தெரிந்து கொள்ள நினைக்கும் மனமே காரணம் என்று புரிந்தது. இந்தக் கேள்வியும் தேடலும் ஒன்றும் புதிதல்ல. பலருக்கும் பதில் கிடைத்து விட்டது போலவும் அதை புரிந்துகொண்டு அனுஷ்டிக்கத் தெரியாததாலோ, முடியாததாலோதான் மீண்டும் மீண்டும் இக்கேள்வி எழுகிறது போலவும் தோற்றமும் இருக்கிறது. இவற்றைப் பற்றியெல்லாம் சிந்திக்கத் தொடங்கினால் கீழ்ப்பாக்கம் போன்ற இடத்துக்குத்தான் போக வேண்டும் என்றும் ஒரு அபிப்பிராயம் இருக்கிறது.

முதலில் நான் என்பது யார்.?கண்ணும் , காதும் , மூக்கும் இன்ன பிற உறுப்புகளும் கொண்ட உடலா.? அப்படியானால் இறந்தவுடன் பேரென்ற ஒன்று இருந்ததையெ மறந்து பிணம் என்று அழைப்பார்களா.?நான் இருக்கிறேன் இல்லை இறந்துவிட்டேன் என்று தெரியப் படுத்துவதேநான் விடும் மூச்சுக் காற்றுதான் அல்லவா?அதையே நான் ஜீவாத்மா என்றும் இறந்தபிறகு அது பரமாத்மாவுடன் கலக்கிறது என்றும் வியாக்கியானித்தேன். அண்மையில் சங்கராச்சாரியாரின் தெய்வக் குரல் எனும் நூலை படித்துக் கொண்டிருந்தேன்

.ஜீவனும் பிரம்மமும் ஒன்றுதான் என்கிறார் சங்கரர். அதாவது நாம்தான் கடவுள் என்கிறார். தன்னைத் தவிர வேறு கடவுளே கிடையாது என்ற ஹிரண்யகசிபு அகங்காரத்தில் சொன்னான்.ஆனால் கடவுள் தவிர வேறெதுவும் கிடையாது என்பதால் நாமும் கடவுளே என்கிறார். ஜீவன் ஆனது “ நான் “ என்னும் எண்ணத்தைவிட்டுவிட்டு  பிரம்மத்துடன் கலந்தால் அதுவும் பிரம்மமாகிவிடும் என்கிறார். நாம் இப்போது உத்தரணி ஜலத்தைப் போல் கொஞ்சம் சக்தியுடன் இருக்கிறோம். ஆண்டவன் அகண்ட சக்தியுடன் சமுத்திரம்போல் இருக்கிறார்.அந்த சமுத்திரத்திலிருந்துதான் இந்த உத்தரணி ஜலம் வந்தது. இந்த உத்தரணிஜலம் தான் தனி என்னும் அகங்காரம் நீக்கிசமுத்திரத்துடன் கலந்து சமுத்திரமே ஆகிவிட வேண்டும்என்கிறார்.( கவனிக்கவும்: நான் மூச்சுக் காற்று என்றேன், அவர் உத்தரணிஜலம் என்றார். நான் அகண்டவெளிக் காற்று என்றேன். அவர் சமுத்திரம் என்றார். நான் ஜீவாத்மா பரமாத்மாவுடன் கலந்துவிடும் என்றேன். அவர் சமுத்திரமாக மாற வேண்டும் என்கிறார்.) இப்படி எழுதுவதன் மூலம் நான் என்னை அவருடன் ஒப்பிடுகிறேன் என்று தயவு செய்து எண்ண வேண்டாம். There was a striking similarity which prompted me to compare


நாம் ஸ்வாமியாக இல்லாவிட்டால், ஸ்வாமியைத் தவிர வேறான ஒன்றாக இருக்க வேண்டும். அவ்வாறெனில் பரமாத்மாவுக்கு வேறான வஸ்துக்களுக்கு உண்டு என்றாகிவிடும். அதாவது, பல வஸ்துக்களில் பரமாத்மாவும் ஒன்று என்றாகி விடும். அவருடைய சம்பந்தமில்லாமல் அந்தப் பல வஸ்துக்கள் உண்டாகி இருக்கின்றன என்றாகும். இப்படி இருப்பின் அவர் பரமாத்மா, ஸ்வாமி என்பதே பொருந்தாதே எல்லாமாக ஆன ஒரே சக்தியாக இருக்கிற மட்டும்தானே அவர் ஸ்வாமி எல்லாம் அவர் என்னும்போது நாம் மட்டும் வேறாக இருக்க முடியுமா? எனவே, 'ஸ்வாமியே நாம்' என்று வெளிப்பார்வைக்கு அகங்காரமாகப்பேசுகிற அத்வைதிகள், ஸ்வாமியின் மகிமையைக் குறைக்கவில்லை. மாறாக, 'ஜீவன் ஸ்வாமி அல்ல: இவன் அல்பன், அவர் மகா பெரிய வஸ்து: இவன் வேறு: அவர் வேறு' என்று அடக்கமாகச் சொல்கிறவர்கள்தான், தாங்கள் அறியாமலே அவரைப் பல சாமான்களில் ஒன்றாக்கி அவருடைய மகிமையைக் குறைத்து விடுகிறார்கள். அவரே சகலமும் என்றால் நாமும் அவராகத்தான் இருந்தாக வேண்டும்.

அவர் எல்லாப் பொருட்களிலும் இருந்தாலும் மனிதனாக இருக்கும்போது மனம் என்ற ஒன்றைக் கொடுத்து அதை பாப புண்ணியங்களில் ஈடுபடுத்தி பலனை அனுபவிக்கச் செய்கிறார்.

கடவுள் என்னும் தத்துவத்துக்கு எல்லா சக்திகளும் உண்டென்று எண்ணி பாப புண்ணியங்கள் அதன் பலன்கள் கொடுப்பவர் என்று நம்பினால் அவர் ஏன் நம்மில் இருந்து கொண்டே அந்தத் தவறுகளைச் செய்ய வேண்டும்.?கடவுளுக்கு நிர்க்குணன் என்றொரு பெயருண்டு, எந்த குணமும் இல்லாதவன் என்று பொருள். ஒரு நிர்க்குணன் மனிதரில் ஏன் பலரையும் சற்குண , துர்குணராகப் படைக்க வேண்டும் அல்லது இயக்க வேண்டும்?இதற்குப் பதிலாக கர்ம வினைகள் என்று காரணம் கூறுவொருமுண்டு.,

ஜீவன் என்பது பரம் பொருளின் ஒரு பாகமே என்றால் இவ்வுலகில் ஏற்ற தாழ்வுகள் ஏன்.? மனிதனின் ஆதிக்கக் குணமே இம்மாதிரியான ஏற்ற தாழ்வுகளுக்குக் காரணம். இகமும் பரமும் ஒன்றானால் அப்படி இருக்கக் கூடாதே, ஆக நம்மைக் கடவுள் இப்படி இப்படிப் படைத்தார் என்றெல்லாம் கூறும் நாமே கடவுளைப் படைத்து விட்டோம் என்றே தோன்றுகிறது.

நம் மனம்தான் நாம் படைத்த கடவுளிடம் சேர்க்கிறது, இல்லாவிட்டால் பிரிக்கிறது. அழிந்து போகப் போகும் உடலே சாசுவதம் என்பதுபோல் எண்ணுகிறோம். வாழ்க்கையின் மதிப்பீடுகளைத் தொலைத்துக் கொண்டு வருகிறோம். எல்லா நிகழ்வுகளுக்கும் காரணம் இருக்க வேண்டும் அதுவும் சமமாகவும் நேர் எதிராகவும் இருக்க வேண்டும் என்பதுதானே விஞ்ஞானவிதி..அப்படி என்றால் எல்லோர் உள்ளும் இருக்கும் கடவுளுக்குள்ளும் ஏற்ற தாழ்வு இருக்கக் காரணம் என்ன..

நான் முன்பெ எழுதி இருந்தேன். கடவுளும் கதைகளும் ஏதோ ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட புனைவுகளே.ஆதியிலிருந்தே மனிதன் தன்னைக் காத்துக் கொள்ளவும் தன் செயல்களுக்கு காரணங்கள் கூறவும் விளைவுகளுக்கு பொறுப்பைத் தட்டிக் கழிக்கவும் கடவுளைப் படைத்து அவனே எல்லாவற்றுக்கும் காரணம் என்று கூறவும் கண்டுபிடித்த வழிதான் இம்மாதியான புனைவுகள்

என்னுடைய எண்ணங்களும், கேள்விகளும், ஏற்ற
தாழ்வில்லா சமுதாயம் மலர்ந்து, அதற்கான விளக்கங்களும்
காரணங்களும் கிடைக்கப் பெறும்போதுதான் முற்றுப்பெறும்
என்று நம்புகிறேன். இந்த நம்பிக்கை அபத்தமானதுஎன்பதும்
எனக்குத் தெரியும். ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவிடை
இல்லாமல் மயக்கத்தில் இருக்கும் வாழ்க்கை நியதிகளுக்கு
விடை காண இயலுமா. ? “ பரித்ராணாய  ஸாதூனாம்
விநாசாய  ச துஷ்க்ருதாம்.....தர்ம-ஸம்ஸ்தாபனார்த்தாய
சம்பவாமி யுகே யுகே சாதுக்களை காத்தற்கும் துஷ்டர்களை
அழித்தற்கும் தருமத்தை நிலை நாட்டுதற்கும் யுகந்தோறும்
வந்துதிப்பேன்என்று மக்களுக்கு நம்பிக்கை நிலைநாட்ட
பகவான் கூறியது  உண்மையாக்க அந்த ஆண்டவனுக்கு
நேரம் இன்னும் வரவில்லையா.?இந்த யுகம் முடியும்
தருவாயில் கல்கி அவதாரமாக வந்து காத்தருள்வார்  என்று நம்பிக்கையோடு காத்திருக்க வேண்டுமா. ?

மனதில் தோன்றும் எண்ணங்கள் பகிரப் படுகின்றன. இவை யாருடைய நம்பிக்கையையும் கேள்வி கேட்க அல்ல. ஒரு அறிவு பூர்வமான விவாதத்துக்கு வழிவகுக்கலாம் என்னும் நம்பிக்கையே காரணம்.




.











  
 compare.


10 கருத்துகள்:

  1. எல்லாம் புரிந்த மாதிரியும் இருக்கு ஒன்னுமே புரியாதது போலவும் இருக்கு. மனசு என்ற ஒன்று என்னல்லாம் நினைக்கிரது.

    பதிலளிநீக்கு
  2. நல்லாப் படிக்கவேணும். அப்புறம் புரிஞ்சுக்கோணும். எத்தனை நாள்/மாதம் ஆகிறதோ? அப்புறம் பொழச்சுக்கிடந்தா, விவாதம் செய்ய முயற்சிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  3. எனக்குப் புரிஞ்சு போச்சு. இனிமேற்கொண்டு இந்த மாதிரி பதிவுகளைக் கண்டால் காத தூரம் ஓடணும் அப்படீங்கறது நல்லாப் புரிஞ்சு போச்சு.

    பதிலளிநீக்கு
  4. என்ன சார் முன்னுக்கு பின் முரணா பேசுரீங்க.முதல் பின்னூட்டத்ல என்ன சொல்லி இருக்கீங்க பாருங்க ரெண்டாவது பின்னூட்டத்ல எப்படி சொல்ரீங்க.எல்லாத்தையும் படிச்சு ஓரளவாவது தெரிஞ்சுக்கனும்னுதானே எல்லார் தளத்துக்கும் போயிட்டு இருக்கோம்.

    பதிலளிநீக்கு
  5. சிந்திக்க வைக்கும் பதிவு...

    தன்னை முழுவதும் உணர்த்தவர்கள், அதனால் தான் "பிறவாத வரம் வேண்டும்" என்று சொல்கிறார்களோ...?
    (திருநாவுக்கரசர் தவிர)

    வாழ்த்துக்கள்... நன்றி ஐயா ...

    பதிலளிநீக்கு
  6. பிறவாத வரம் வேண்டும், சரி. பிறக்காவிட்டால் நாம் யார்? ஒரு வஸ்து என்று வைத்துக் கொள்வோம். அதற்கு உயிரும் உடலும் இருந்தால் தானே எதையும் உணர முடியும்? உயிரும் உடலும் வந்து விட்டால் பிறப்பாகி விடுமே? ஜடப் பொருளாகி விட்டால் வலியும், இன்பமும் வராது. ஆனால் அதனால் எதையும் உணர முடியாதே?

    என்னமோ ஒண்ணும் வெளங்களே சார்.

    பதிலளிநீக்கு

  7. @ லக்ஷ்மி,
    @ டாக்டர் கந்தசாமி,
    @ திண்டுக்கல் தனபாலன்,
    @ ரங்குடு
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. புரிந்தும் புரியாதது போல் தோன்றும். நிறைய சிந்திக்க வைக்கும். அதிகம் சிந்தித்தால் கீழ்பாக்கக் கேஸ் ஆகிவிடும்.அந்தபயம் காத தூரம் ஓடவைக்கும். இருந்தாலும் தெரியாதவற்றைத் தெரிந்து கொள்ள மனம் விழையும். நானே ஒரு பதிவில் அறியாமை இருளில் இருப்பதே சுகம் என்று எழுதி இருக்கிறேன். எதையும் கேள்வி கேட்காமல் கண்மூடித்தனமாக நம்பினால் எந்த பாதகமும் இல்லை. ஆனால் பாழும் மனது கேள்வி கேட்கிறதே. விடை தேட முயல்வது தவறில்லையெ. அதற்காக பிறவா வரம் என்று நான் எங்கும் சொல்லவில்லை. முதன் முதலில் (?) வருகை தரும் ரங்குடு எதற்காகப் பிறவா வரம் கேட்கிறார். அதுதான் பிறந்து விட்டோமே. பின் பிறப்போம் என்பது ஏதோ நம்பிக்கையின் அடிப்படை அல்லவா. இதெல்லாம்தான் கேள்வியாக உருவாகிறது. மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. இன்னும் ஐநூறு ஆண்டுகளுக்குள் நடக்கும்.

    பதிலளிநீக்கு
  9. படிச்சேன். நீங்க கடவுளைப் புனைவு னு சொல்றீங்க. இன்னொரு நண்பர் ஒரு குழுமத்தில் தியானம் செய்து உள்ளுக்குள்ளே கடவுளைத் தேடும் யோகிகளையும், சித்தர்களையும், ஞானிகளையும் சோம்பேறித்தனத்தை வளர்ப்பவர் எனச் சொல்லி இருந்தார். ஆக மொத்தம் புரிதலில் தான் வித்தியாசம். :)))) இதுக்குப் பதில் எழுதும் அளவுக்கு எனக்குத் தகுதியோ, பயிற்சியோ இல்லை. என்றாலும் ஏதோ ஒரு சக்தி அனைவரையும் இயக்குகிறது. அந்த கண்ணுக்குப் புலனாகாத சக்தியைத் தான் கடவுள் என்கிறோம். நம்பினவருக்குக் கடவுள். நம்பாதவருக்கு எதுவும் இல்லை. ஆனாலும் எல்லாரும் தங்களை மீறிய ஒரு சக்தி இருப்பதை ஒவ்வொரு கணமும் உணர்ந்தே இருப்பார்கள். :)))))பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  10. @ கீதா சாம்பசிவம் நமக்குப் புரியாத ஒன்றை கடவுள் என்று நம்புவதில் தவறில்லை. ஆனால் இந்த நம்பிக்கைகளைத் தவறாகப் புரிந்து கொண்டு அதுவே மூட நம்பிக்கைகளுக்கு வழி வகுப்பது காணும்போது கேள்விகள் கேட்கத் தோன்றுகிறது. பலரையும் சிந்திக்க வைப்பதே பதிவின் நோக்கம். வருகை தந்து கருத்து இட்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு