திருவெழுக்கூற்றிருக்கை...என் பாணியில்
----------------------------------------------------------
திருவெழுக்கூற்றிருக்கை என்பது
ரதபந்தனக் கவி எனப் படும் ஒன்று. கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி கோயிலிலும்,
கும்பேஸ்வரர் கோயிலிலும் இது எழுதி இருப்பது கண்டு, முன்பே ஒரு முறை விளக்கம்
கேட்டு இடுகை இட்டிருந்தேன். சோமாயணம் கலாநேசனும் திருமதி. இராஜ ராஜேஸ்வரி
அம்மாவும் இது குறித்து எழுதிய பின்னூட்டங்கள் மிகவும் உதவியாய் இருந்தன.
எனக்குள் நானும் ஒரு
திருவெழுக்கூற்றிருக்கை எழுதினால் என்ன
என்று ஆசை எழுந்தது. என் தமிழ் தேர்ச்சி குறித்து எனக்கு உயர்வான எண்ணம் கிடையாது.
இருந்தாலும் ஊர்க்குருவியாக வாவது பறக்க முடியுமா என்றும் ஒரு ஆசை. கடைசியில் கான
மயிலாடக் கண்ட வான்கோழி போல் நானும் ஆட முடிவெடுத்தேன். அந்த முயற்சியே இது.
முதலில் திருவெழுக்கூற்றிருக்கை பற்றி
சில குறிப்புகள்.
1 முதல் 7 வரை படிப்படியாகக்
கீழிருந்து மேல்,பின்பு மேலிருந்து கீழ் என அடுக்கடுக்காக ஒரு தேர்த் தட்டுபோல்
மேலே செல்வதும் கீழே செல்வதுமாக அமைந்திருக்கும் பாடல் பொதுவாக ஆண்டவனைப் போற்றி
பாடுவதாகவே இருக்கிறது. வேறு விதமாகப் பாடக் கூடாதா என்று தெரியவில்லை.நான்
முயன்றிருக்கிறேன். இலக்கண விதிகள் குறித்த குறிப்புகள் தெரியவில்லை. ஆகவே இதுவும்
என் பாணியில் அமைந்திருக்கிறது..
ஒவ்வொரு எண் அதிகமாகும்போதும் ,
மீண்டும் கீழிறங்கி , மேலே வந்து அடுத்த எண்ணைக் கூட்டிச் செல்லும். 121, 12321,
1234321, 123454321, 12345654321, 1234567654321, என ஏழு வரைச் சென்றதும் இது
தேரின் மேலடுக்கு போல் ஆகிறது. அதன் பின் ஒரு இடைத் தட்டு ,பீடம் பின்னர் மீண்டும்
முன் சொன்ன வரிசையை அப்படியே திருப்பி தேரின் கீழ் அடுக்காக அமைத்து இறுதியில்
தொடங்கிய அதே எண்ணிலேயே முடிவடையும் வகைக்கு திருவெழுக்கூற்றிருக்கை எனப் பெயர்.
இந்த வகையில் திருஞானசம்பந்தரும் ,அருணகிரியாரும் , திருமங்கை ஆழ்வாரும் பாடி
இருக்கிறார்கள்.
இனி அடியேனின் பாடல்
குலம் ஒன்று,
சாதி இரண்டொழிய வேறில்லையென முக்காலமும் ஓதி, சக்தி சிவம் ஒன்றென்றே
சாற்றுகின்றீர்.
சொல்
ஒன்றே,நன்றெனக் கூறி, எதிர்மறை இரண்டாய் இருத்தல் இயல்பென முத்தமிழிலும் நாற்றிசை
ஒலிக்க மும்முறை சொல்லும் இருகுணம் கொண்ட ஒருவனும் நீயோ.
குருதி நிறம் ஒன்று,பிறப்பிறப்பு
இரண்டும் உண்டு எனப் படைப்பின் முத்தொழில் புரிவோர் நானிலத்தில் ஐம்புலன்களில்
நால்வகை வர்ணங்கள் மூவுலகில் எங்கேனும் இரண்டில் ஒன்றாய்ப் படைத்தனரா.
ஓருயிர் பெற்று, இரு பிறப்பெடுத்து,
முத்தீ வளர்த்து,நான்மறை பயின்று, ஐவகை வேள்வி மூட்டி, அறுதொழில் செய்து ஐம்புலன்
செறுத்து, நான்குடனடக்கி, முக்குணத்தில் இரண்டை அகற்றி ஒன்றுடன் ஒன்றுவோர் இன்றும்
உண்டோ.
ஒன்று இரண்டாகி மூன்றுக்கு வழி
வகுக்கும் இந்நானிலத்தில் ஐம்புலம் ஆளும் அருகதை ஆறறிவு படைத்த அனைவருக்கும்
பொதுவன்றோ. ஏழு ஸ்வரங்களில் பேதம் கொணர்வது இகவாழ்வில் சரியோ. அறுசுவையுடன் அவலச்
சுவையும் வேண்டுமோ.. வாய்ப்பென்று வரும்போது கையின் ஐ விரலும் சமம் என்றே உணராது
வர்ணபேதம் முக்காலமும் மேடு பள்ளமென இரண்டுக்கும் காரணம் என்ற ஒன்றாவது சரியோ.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்
...என்றோ ஓதியது.எண்ணத்தில் ஓடியது. எண்ணால் எழுத்தால் இறை புகழ் பாட என்னால்
இயலவில்லை. கண்முன்னே விரியும் அவலங்கள் அவனும் அறிவான்தானே.சம நீதி கிடைக்க
இன்னும் அவன் அவதரிக்காதது என்ன நீதி.?
சக மனிதனிடம் கேள்வி கேட்பது போல்
எழுத முயன்றிருக்கிறேன். சில அரும்பதங்கள்
பொருள் கூற வேண்டும் எனத் தோன்றியது . அவை.
முத்தீ = கார்ஹபத்தியம் , ஆஹவநீயம்
,தக்ஷிணாக்கினி போன்ற மூன்று வகை அக்னிகள்.
இரு பிறப்பு = முப்புரி நூல்
இடுவதற்கு முன்னும் பின்னுமானது.
நான்மறை = ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள்.
ஐவகை வேள்வி = தேவ யக்ஞம், பித்ருயக்ஞம்,
பூத யக்ஞம், மனுஷ்ய யக்ஞம், ப்ரஹ்ம்மயக்ஞம்
அறுதொழில், = யஜனம் ( யாகம் இயற்றுதல்
), யாஜுகம் ( மற்றவர்களை யாகம் செய்வித்தல் ) அத்யயனம் ( வேதம் ஓதுதல் ),
அத்யாபக்ஞம் ( மற்றவர்களை வேதம் ஓதுவித்தல் ) தானம் ( மற்றவர்களுக்கு அளித்தல்
)ப்ரதிக்ரஹம் ( மற்றவர்களிடமிருந்து பெறுதல்)
ஐம்புலன் செறுத்து = கண் முதலான ஐந்து
புலன்களையும் அவற்றின் விஷயங்களில் செலுத்தாமல் நிறுத்தி
நான்குடனடக்கி = மனம் ,புத்தி,
சித்தம் அஹங்காரம் ஆகிய நான்கையும் அடக்கி,
அல்லது ஆகாரம் , உறக்கம் ,பயம்
உடலுறவு ஆகியவற்றை அடக்கி
என்றும் கொள்ளலாம்
முக்குணத்தில் இரண்டை அகற்றி, = ரஜஸ்
மற்றும் தாமஸ குணங்களை அகற்றி
ஒன்றுடன் ஒன்றுவோர் = மீதமுள்ள ஒன்றான
ஸத்வ குணத்தில் நிலை நின்று.
வித்தியாசமான பகிர்வு... அறிந்து கொண்டேன்... நன்றி...
பதிலளிநீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குஆழ்ந்த அறிவு..தேர்ந்த புலமை. எம் வாழ்த்தும் வணக்கமும் .
பதிலளிநீக்குதிருவெழுக்கூற்றிருக்கை எழுத நினைத்து எழுதிய முதல் முயற்சியே நன்றாக அமைந்து விட்டது.
பதிலளிநீக்குஉங்களுக்கு வாழ்த்துக்கள்.
பிரமாதம் சார்.
பதிலளிநீக்குஇது பற்றி எதுவுமே தெரியாது. உங்கள் படைப்பு நல்ல் உதாரணத்தோடு விளக்குகிறது. இதைப் பரவலாகப் படிப்பார்கள் என்று நம்புகிறேன்.
வர்ணபேதம் - நாலா?
நீங்கள் சொன்ன பின்பே தெரிந்து கொண்டேன். அருமையாக அமைத்திருக்கிறீர்கள். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குஅருமையான முயற்சி..
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்,
@ டாக்டர் கந்தசாமி,
@ காளிதாஸ்,
@ கோமதி அரசு,
@ அப்பாதுரை,
@ கவிநயா,
@ ரிஷபன்.
உங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்களுக்கும் என் நன்றி. அப்பாதுரை சார் இதைப் பரவலாகப் படிப்பார்கள் என்றுதான் நானும் நம்பினேன். படித்து குட்டு வைத்திருந்தாலும் தேவலாம். தலைப்பைப் பார்த்ததும் காத தூரம் ஒடுகிறார்கள் போலும். வர்ணபேதம் பற்றி ஏதாவது தவறாகக் கூறிவிட்டேனா. ?VSK என்ற பெயரில் ஆத்திகம் வலைப்பூவில் தற்சமயம் எழுதியது ஏதும் காணாததால் அம்மன் பாட்டு தளத்துக்கு வந்து எழுதியது கவினயாவின் அறிமுகம் கிடைக்க உதவியது. மீண்டும் நன்றி.
சீரியதொரு முயற்சி! முடிந்தவரையில் நன்றாகவே செய்திருக்கின்றீர்கள், ஐயா!
பதிலளிநீக்குமுதல் வரியில் மட்டும் இன்னும் சற்று கவனம் தேவை என எண்ணுகிறேன்.
1 முதல் 7 வரை படிப்படியாகக் கீழிருந்து மேல், பின்பு மேலிருந்து கீழ் என அடுக்கடுக்காக ஒரு தேர்த்தட்டு போல மேலே செல்வதும், கீழே செல்வதுமாக அமைந்த இந்தப் பாடல் சுவாமிமலை குருநாதனைப் போற்றிப் பாடும் அற்புதப் பாடல்.
ஒவ்வொரு எண் அதிகமாகும் போதும், மீண்டும் கீழிறங்கி, மேலேவந்து அடுத்த எண்ணைக் கூட்டிச் செல்லும்.
1, 121, 12321, 1234321, 123454321, 12345654321, 1234567654321
என 7 வரை சென்றதும் இது ஒரு தேரின் மேலடுக்கு போல் ஆகிறது.
அதன்பின், இறைவனை அமரச் செய்ய ஒரு இடைத் தட்டு, பீடம்!
பின்னர் மீண்டும் முன் சொன்ன வரிசையை அப்படியே திருப்பி தேரின் கீழ் அடுக்காக அமைத்து, இறுதியில் தொடங்கிய அதே 1 என்னும் எண்ணிலேயே முடிவடையும் வகைக்கு திரு எழு கூற்று இருக்கை எனப் பெயர்.
ஒன்று என முதலில் தொடங்கியபின், மீண்டும் ஒன்று, இரண்டு, ஒன்று என வந்திருக்க வேண்டும். அதாவது ,..
ஒருவராய்ப் பிறந்து, ஈருடல் சங்கமித்து ஓருயிர் ஈன்றனை. என்னும் வரியில்,
ஒருவராய்ப் பிறந்து ஒருவரை மணந்து ஈருடல் சங்கமித்து ஓருயிர் ஈன்றனை என வந்திருந்தால் இன்னும் சிறக்கும்.
இதையொட்டி, மற்ற வரிகளையும் கவனியுங்கள். அடுத்த முயற்சி இன்னும் சிறப்பாக அமையும்.
அதேபோல, ஒருசில வார்த்தைகளிலேயே ஒரு எண்ணுக்கான பொருளை விவரிக்க முயன்றால், இன்னும் அழகு கூடும்.
வாழ்த்துகள்.
தகவலைச் சொல்லி இன்னை இங்கு வரத் தூண்டிய அன்புச் சகோதரி கவிநயா அவர்களுக்கு என் அன்பான வணக்கம்.
முருகனருள் முன்னிற்கும்.
பதிலளிநீக்கு@ VSK இப்போதுதான் மனதுக்கு ஒரு திருப்தி கிடைத்தது. உங்கள் மூலம் கற்றுக் கொண்டு நான் என் பாணியில் எழுதிய திருவெழுக்கூற்றிருக்கை உங்களால் படிக்கப் பட்டு கருத்திடப் பட்டிருப்பது மகிழ்வளிக்கிறது.உங்களை என் தளத்துக்கு வரவழைத்த சகோதரி கவிநயாவுக்கும் நன்றி மீண்டும்.
//தலைப்பைப் பார்த்ததும் காத தூரம் ஒடுகிறார்கள் போலும்
பதிலளிநீக்கு:-) தலைப்பு பயமுறுத்துறது என்னவோ உண்மை தான். கொஞ்சம் வேகமா சொல்லக்கூட முடியலியே?
வர்ணபேதம் தான் நான்காம் எண்ணிக்கையா என்ற சந்தேகம், அவ்வளவுதான். (ஒரு அவசரத்தில வேதம்னு படிச்சுட்ட்டேன் :-)
பதிலளிநீக்குபுதுமையாக இருக்கிறது
திருவெழுக்கூற்றிருக்கை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். ஆற்றொழுக்காய் ஓடும் வரிகள் ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளதாகவும் பாடலின் விதியைப் பொதிந்ததாகவும் இருப்பது சிறப்பு. எல்லோராலும் இப்படி இலகுவாக எழுத இயலாது. எதையும் முயற்சி செய்து பார்த்துவிடும் முனைப்பே தங்களுக்கு வெற்றியை ஈட்டித்தந்துவிடுகிறது. பாராட்டுகள் ஐயா.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு# கில்லர்ஜி
எழுதியபோது எனக்கும் புதுமையாக இருந்தது ஜி. வருகைக்கு நன்றி
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ கீதமஞ்சரி
இதை இப்போது படித்துப் பார்க்கும் போது presentationஇன்னும் நன்றாகச் செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.நான் எழுதி இருப்பது என் பாணியில் இலக்கண மரபு குறித்து ஏதும் தெரியாது. ஆண்டவனைக் குறித்து பலரும் எழுதி இருக்க நான் எழுதி இருப்பது சற்றே வித்தியாசமாய்.எழுத கொஞ்சம் சிரமப்பட்டேன் என்பது நிஜம் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேடம்
நல்லதொரு முயற்சி. துளசி டீச்சர் தளத்தில் உங்கள் கருத்துரை பார்த்து இங்கே வந்தேன்.
பதிலளிநீக்குகலாநேசன் தில்லி வலைப்பதிவர். சில வருடங்களாகவே எழுதுவதில்லை. இப்படி எழுதாமல் இருக்கும் எத்தனை வலைப்பதிவர்கள். கலாநேசனை சில முறை சந்தித்து இருக்கிறேன். இப்பதிவு மூலம் அவரது நினைவுகளையும் மீட்டெடுத்தேன். நன்றி.
// எதையும் முயற்சி செய்து பார்த்துவிடும் முனைப்பே தங்களுக்கு வெற்றியை ஈட்டித்தந்துவிடுகிறது. //
பதிலளிநீக்குநம்ம கீதமஞ்சரி சொன்னதை அப்படியே வழிமொழிகின்றேன்!
வழிமொழிகின்றேன்
நீக்குநன்றி சார்
நீக்கு
பதிலளிநீக்கு@ துளசி கோபால்
எதையும்முயற்சி செய்யவும் அடிப்படை ஞானம் வேண்டுமல்லவா. என்ன என்றே தெரியாமல் தெரிந்து கொள்ளும் முயற்சியே மிகுதியாய் இருந்தது எனக்கு விளங்கிக் கொள்ளும்படி கூறிய VSK அவர்களுக்கெ என் நன்றி. நான் பார்த்தவரை திருவெழுக்கூற்றிருக்கைகள் எல்லாம் கடவுளை முன் வைத்தே இருந்தது. எனக்கு அது சாத்தியம் என்று தோன்றவில்லை. ஆகவேதான் என் பாணியில் என்றேன் வருகைக்கு நன்றி மேம்
நல்ல முயற்சி. இதனை 'திருவெழுக்கூற்றிருக்கை' வைத்து ஒப்பு நோக்கிப் பார்க்கணும். ஆனாலும் முயற்சி பாராட்டுதலுக்குரியது.
பதிலளிநீக்கு"ஓருயிர் பெற்று, இரு பிறப்பெடுத்து, முத்தீ வளர்த்து,நான்மறை பயின்று, ஐவகை வேள்வி மூட்டி, அறுதொழில் செய்து ஐம்புலன் செறுத்து, நான்குடனடக்கி, முக்குணத்தில் இரண்டை அகற்றி ஒன்றுடன் ஒன்றுவோர் இன்றும் உண்டோ" - இதை பெரிய எழுத்திலேயே சொல்லலாம். எனக்குத் தெரிந்தவரை யாரும் கிடையாது என்று. எப்போது 'ஆசை' என்ற ஒன்று அந்தணர் இடத்தில் வந்ததோ (அதாவது.. தனக்கு என்று ஒன்றைச் சேர்த்தல் அல்லது எடுத்துவைத்துக்கொள்ளுதல்) அப்போதே இது இல்லாமல் போய்விட்டது. சமூகக் கட்டமைப்பு எப்போது நியாயமான விதத்தில் அமையாமல் போய்விட்டதோ, அப்போதே வர்ணங்களுக்கும் அர்த்தமில்லாமல் போய்விட்டது.
“அந்தணன் என்போன் அறவோன் மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான்”
சமூக அவலங்களில் என் கருத்தை திருவெழுக்கூற்றிருக்கை மூலம் வடித்திருக்கிறேன் இந்தவகை எழுதுதல் குறித்து எனக்கு தெளிவு படுத்திய VSK அவர்களுக்கெ இதை சமர்ப்பிக்கிறேன் ஒப்பு நோக்குங்கள் என் முதல் முயற்சி கூடியவரை சொல்லிக் கொடுத்தபடி எழுதி இருக்கிறேன் வருகைக்கு நன்றி சார்
நீக்குஅர்த்தமில்லாத வர்ணங்களை இன்னும் கட்டிக் கொண்டு அழுகிறோமே இந்த எண்ணங்கள்தான் என் எழுத்துகளில் பிரதி பலிக்கும்
நீக்குஇப்போது வர்ணங்களே இல்லை ஐயா. வெறும் ஜாதி மட்டும் தான் இருக்கு! :) ஜாதிக்கும், வர்ணத்திற்க்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உண்டு. :)
நீக்குஜாதிகளின் மூலமே வர்ணங்கள் தானே மேம்
நீக்குஇல்லை. வர்ணத்தின் உட்பொருளைப் புரிஞ்சுக்காமச் சொல்றாங்க! வர்ணம் வேறே! ஜாதி வேறே!
நீக்குமுதல் முயற்சி என்று நம்பமுடியாமல் உங்கள் திருவெழுக்கூற்றிருக்கை முயற்சி பிரமிக்கத் தான் வைக்கிறது. அதிலும் உற்ற நண்பர் திரு விஎஸ்கே என்னும் எஸ்கே அவர்களும் கவிநயா அவர்களும் இதைப் பாராட்டி இருக்கையில் அவர்கள் மூலம் நீங்கள் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிகையில் மனம் மகிழ்ச்சி அடைகிறது. இந்த வயதிலும் உங்கள் கற்கும் ஆர்வமும் வியக்க வைக்கிறது. என்னை வெட்கம் அடையவும் வைக்கிறது.
பதிலளிநீக்குஎன் ஆசான் விஎஸ்கே அவர்கள் கற்பதெல்லாம் கவைக்கு உதவுமா. பாராட்டுக்கு நன்றி மேம்
நீக்குபடித்தேன். ரசித்தேன்! மிக்க நன்றி ஐயா!
பதிலளிநீக்குரசித்தது மகிழ்ச்சி தருகிறது
நீக்குபுதுமை !! ... இன்றே தெரிந்து கொண்டேன் .. நன்றி !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
பதிலளிநீக்குarumai
பதிலளிநீக்கு