புதன், 8 ஆகஸ்ட், 2012

வஞ்சம்....



                                                            வஞ்சம்.
                                                            -----------


காஞ்சனா திருச்சியில் பிறந்து வளர்ந்தவள். கனவொன்று இருந்தது அவளுக்கு. அமெரிக்கா செல்ல வேண்டும்;கை நிறைய சம்பாதிக்க வேண்டும். வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை கண்ணின் மணிபோல் காக்க வேண்டும். கனவின் முதற்கட்டமாக பெங்களூரில் பணிக்கு அமர்ந்தாள். பெங்களூர் பெண்களூர் என்று சொல்லுமளவுக்குக் கன்னியரின் கனவு ஊர்..அவளை அடியோடு மாற்றியதில் ஆச்சரியமில்லை. இருந்தாலும் கனன்று கொண்டிருந்த கனவு அவளை உழைக்கவும் வைத்தது.மேலை நாட்டுக் கலாச்சாரம் என்று அவள் நினைத்திருந்த விஷயங்களிலும் அவளை ஈடுபட வைத்தது. இதோ ஆயிற்று அவளது கனவு கனியும் காலம் நெருங்கி விட்டது. ஓரிரு மாதங்களில் டிக்கட்டும் வீசாவும் வந்துவிடும்.

சிரில் பாசு. அறிவுள்ள ஆணழகன். காஞ்சனாவின் குழுவில் இருந்தவன்.அவனுடன் அலுவலகத்திலும் வெளியிலும் பழகுவது காஞ்சனாவுக்குக் கற்கண்டாய் இனித்தது. எப்போதும் ஜோடியாய் திரிந்தனர்.அவர்களுக்கிடையில் இருந்தது நட்பா அதற்கும் மேலா என்று தெரியாமலேயே இருந்தது. தனித்திருக்கும் இளசுகள். எதையும் பரிசோதித்துப் பார்க்க எண்ணும் வயசு. எல்லாவற்றுக்கும் ஈடு கொடுக்கும் நகரம். கேட்கவா வேண்டும்.? பெங்களூர் வாழ்க்கை ஒரு பாம்பு போன்றது. உன் பணியில் மட்டும் நீ இருந்தால் அது உன்னை ஒன்றும் செய்யாது.. மீறி ஏதாவது ஆராய்ச்சி செய்ய முனைந்தால் அது உன்னைத் தீண்டி அழித்துவிடும். கேளிக்கைகள் பார்ட்டிகள், என்று அமெரிக்கா போகுமுன் பாசுவும் காஞ்சனாவும் காலம் கழிக்கத் துவங்கினர். இளமை வனப்பு வயசு ஊர், எல்லாம் சேர்ந்து இலக்கினை மறக்கடித்தது. காஞ்சனாவுக்குக்  குடிக்கவும் கற்பித்தான் பாசு. இன்னும் இன்னும் வேண்டும் என்னும் ஆவல் அவனுக்கு அசாத்திய தைரியம் கொடுத்தது. இன்னும் இரண்டு நாளில் அவள் போய்விடுவாள். அதற்கு முன்.....

.அவளுக்கு ஒரு பரிசு கொடுக்க விரும்பி அவளை அழைத்தான். ஷாம்பேய்ன் ஸ்பெஷல் என்று ஊற்றிக் கொடுத்தான். அடுத்த வினாடி அவள் தரையில் சாய்ந்திருந்தாள். கீழே வீழ்ந்து இருப்பது தெரிகிறது. ஏதோ பேச முயன்றால் வார்த்தைகள் வரவில்லை. அவன் அவள் மேல் படர்ந்து வருவது புரிந்தது. அவனது கைகள் அவளுடைய அங்கங்கள் மேல் எல்லாம் நகர்வதும் புரிந்தது. நடப்பது தவறு என்று புரிகிறது. நடக்க விடாமல் தடுக்க இயல வில்லை. சிறிது நேரத்தில் தான் சூரையாடப் பட்டது புரிந்தபோது அவளால் ஏதும் செய்ய இயலாத நிலைமைக் கண்களில் நீரைக் கொண்டு வந்தது. . தன் கனவு என்ன, தன் பெற்றோரின் கதி என்ன, உலகம் நாளை எப்படியெல்லாம் தூற்றும் என்றெல்லாம் எண்ணிக் கலங்கினாள்.பழி தீர்க்கும் எண்ணம் மனசெல்லாம் வியாபித்தது.

அடுத்த நாள் அவன் குடியிருக்கும் ஏழாம் மாடிக் குடியிருப்பு அறைக்கு  வந்தாள். முடிந்தவரை முகத்தை இனிமையாக வைத்துக் கொண்டு அவனை நெருங்கினாள். வினாடி நேரத்தில் கூரான கத்தியால் அவன் நெஞ்சை சரமாரியாகக் குத்தினாள், அவனது மரண வேதனை இவள் இதழ்களில் ஒரு குரூர முறுவலை வர வழைத்தது.பால்கனிக்கு வந்து அலை பேசியை எடுத்தாள். சில எண்களை ஒற்றினாள். மறு முனையில் அவள் தம்பி. தம்பி என் வாழ்க்கை முடிகிறது. என் கனவுகள் சரிகிறது. வஞ்சிக்கப் பட்டு விட்டேன். பழி தீர்த்துவிட்டேன். பெற்றோரை நீதான் கவனித்துக் கொள்ள வேண்டும். ஆ ஆஆஆஆ .. கண்ணாடி உடையும் சப்தத்துடன் தொடர்பு துண்டிக்கப் பட்ட தான செய்தி தம்பிக்கு அலை பேசியில் வந்தது,  

( A STORY BY M.B.VIBHU. ஆங்கிலத்தில் என் பேரன் எழுதிய கதை தமிழாக்கம் செய்துள்ளேன். ).   .  


..



8 கருத்துகள்:

  1. ம்ம்ம்.. நல்ல கதை!

    நம் வாழ்கையை நாமே தான் தீர்மானிக்கிறோம் என்ற கருத்தை நான் எடுத்துக்கொள்கிறேன் இக்கதையிலிருந்து!

    பதிலளிநீக்கு
  2. நல்ல கதை...

    உங்களின் பேரனுக்கு எனது வாழ்த்துக்களை சொல்லிடுங்க ஐயா...

    நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. மனதைக் கட்டுப்படுத்தி ஆளத்தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  4. உன் பணியில் மட்டும் நீ இருந்தால் அது உன்னை ஒன்றும் செய்யாது.. மீறி ஏதாவது ஆராய்ச்சி செய்ய முனைந்தால் அது உன்னைத் தீண்டி அழித்துவிடும். //


    அழித்து விட்டதே!

    உங்கள் பேரனுக்கு வாழ்த்துக்கள். கதை படிப்பினை ஊட்டுவது போல் நன்றாக அமைந்து உள்ளது.

    பதிலளிநீக்கு
  5. இன்றைய தலைமுறையினரின் அவசர அதிரடி வாழ்க்கையையும் அதன் விளைவுகளையும் துளியும் பிசகாமல் பதிவு செய்த கதை. அதை இன்றைய தலைமுறை சார்ந்த ஒருவரே எழுதியிருப்பது சிறப்பு. இக்கதையின் ஆசிரியரான தங்கள் பேரனுக்கும் அழகாய் தமிழில் மொழிபெயர்த்து வழங்கிய தங்களுக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  6. பாலு சார், பேர‌ன் விபுவின் வ‌ய‌து என்ன‌?
    மது எப்ப‌டி ம‌ன‌துக்கு ஒவ்வாதை தவிர்க்க‌ விய‌லாது நம்மைச் செய‌லிழ‌க்க‌ச் செய்கிற‌து என்ப‌தையும். சிரில்பாசு,அறிவ‌ழ‌க‌னாக‌ இருந்தும் ஒழுக்க‌மின்மையால் பிழைசெய்து கொலையாகிறான். நெக‌டிவ் பார்வையில் சொல்ல‌ப்ப்டும் க‌தை, இன்றைய‌ இள‌ம் த‌லைமுறையின‌ரின் பார்வையை (அமெரிக்க‌ வேலை, ப‌ண‌ம், பொருளாதார‌ நிலை)
    பார்க்க‌ இந்த‌ க‌தையும் ஒரு த‌ள‌மாய்.

    வாழ‌த்துக்க‌ள் விபுக்கு. தாத்தாவின் வ‌ழியில் ம‌ன‌தில் ப‌ட்டதை ப‌ட்ட‌வ‌ர்த்த‌ன‌மாய் எழுத்துக்கு கொண்டுவ‌ந்திருக்கிறாரே.

    பதிலளிநீக்கு
  7. ஆச்சரியமாக இருக்கிறது
    கதையின் கருவும் முடிவும் அருமை
    பேரனுக்கு எங்க்கள் வாழ்த்துக்களைச் சொல்லவும்
    மனம் கவர்ந்த கதை
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு