சனி, 1 பிப்ரவரி, 2014

பதிலறியாக் கேள்விகள் நடுவே.......


                      பதிலறியாக் கேள்விகள் நடுவே.....
                      ---------------------------------------------


சில நிகழ்வுகள் பார்த்தது படித்தது அனுபவித்தது மனசில் என்னவெல்லாமோ சலன்ங்களை ஏற்படுத்துகிறது. இம்மாதிரி சலனங்களின் அழுத்தம் நம்மால் ஏதும் செய்ய முடியவில்லையே என்னும் கையாலாகத்தனத்தால் இன்னும் கூடுகிறது.

பாலு, என் மச்சினன் மணம் செய்து கொள்ள விரும்புகிறான். உனக்கு ஏதாவது நல்ல இடம் தெரிந்தால் சொல்லு.

இந்த மச்சினனுக்கு வயது நாற்பதுக்கும் மேலிருக்கும். மிகவும் சாதாரணக் குடும்பப் பின்னணியில் இருந்து பெண் எடுத்திருந்த நண்பனின் வேண்டுகோள். அப்போது இவன் குடும்பம் முழுவதும் அமெரிக்கா போய் செட்டில் ஆகி இருந்தது. நண்பனின் மாமியாரும் இந்தமூத்தமச்சினனும்மட்டும்தான் இந்தியாவில்தொடர்ந்துஇருந்தார்கள்இவர்களையும்எப்படியாவதுஅமெரிக்காவுக்குக் கூட்டிச் செல்ல வேண்டும் என்பது நண்பனின் எண்ணம். ஆனால் இவர்களுக்கு அங்கே போய் செட்டில் ஆவதில் விருப்பம் இருக்கவில்லை பல.விதமான தூண்டுதல்களுக்குப் பிறகு அமெரிக்கா போய் வர சம்மதம் தெரிவித்தார்கள். ஒரு முறை அங்கு வந்தால் தொடர்ந்து அங்கு இருக்க சம்மதம் தெரிவிக்க வாய்ப்பு உண்டு என்று நினைத்து அவர்களை அமெரிக்காவுக்குக்கூட்டிச் சென்றார்கள்.ஆனால் இவர்களுக்கு அமெரிக்கா பிடிக்கவில்லை. நான்கைந்து மாதங்களில் திரும்பிவிட்டனர், இந்த சமயத்தில்தான் மேற்கண்ட நண்பனின் வேண்டுகோள். மச்சினன் ரயில்வேயில் வேலையிலிருந்தான். சகோதரிகள் திருமணம் சகோதரர் படிப்பு என்பதிலேயே கவனமாயிருந்த மச்சினன் மணம் செய்து கொள்ளவில்லை. மாமியாரும் அதிகம் படித்திராத கட்டுப் பெட்டிப் பெண்மணி. அமெரிக்கா போய் வந்த பிறகு மச்சினன் திருமணத்துக்கு ஒப்புதல் கொடுத்திருந்தான். நாற்பது வயது தாண்டியவனுக்கு வரன் கிடைப்பது எளிதாயிருக்கவில்லை. இரண்டு சகோதரிகள் இரண்டு சகோதரர்கள் வேலையாகி திருமணம் முடிந்து அயல் நாட்டில் குடிபுகுந்த பிறகு மச்சினனுக்கு திருமணம் பற்றியப் பேச்சு வந்தது. இவர்கள்குடியிருந்தவீடுபெரிதாக்கப்பட்டது;புதுப்பிக்கப்பட்டது.ஒருநாள்,வேலையில் இருந்த மச்சினன் திடீரென்று பக்கவாதம் தாக்கிக் கீழே விழுந்திருக்கிறான். ரெயில்வே மருத்துவமனையில் சேர்ப்பிக்கப் பட்டான். அவனது தாயாருக்குச்செய்தி தெரிவிக்கப்பட்டது. ஒருவாறு எப்படியோ மகள்களுக்கும் மகன்களுக்கும் செய்தி தெரிவிக்கப்பட்டது.

உடனே ஓடிவரும் நிலையில் யாரும் இருக்கவில்லை. அவனது சகோதரியின் கணவன்   ( என் நண்பன் )இரண்டு நாள் கழித்து வந்தான். ஆனால் வந்தவன் முதலில் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான்.ரெயில்வே மருத்துவர்கள் அங்கு நாள்பட வைத்து சிகிச்சை அளிக்கத் தயங்கினார்கள். ஆனால் நண்பனுக்கு என்ன செலவானாலும் பரவாயில்லை.ஒரு நல்ல மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி நெருக்கடி கொடுத்தார்கள். மனைவியின் தம்பி. மூத்த மச்சினன். செலவுக்குப் பணம் தருவதாகச் சொல்லும் அவனது உறவுகள். சென்னையில் ஒரு பிரபல மருத்துவ மனையில் சேர்த்தான். வயதான மாமியார் ஒத்தாசைக்கு என்று முன் வர யாரும் இல்லை. என்ன செய்வது என்று மனமொடிந்து போனான் நண்பன். விஷயம் கேள்விப்பட்டு நானும் அவன் மச்சினனைப் போய்ப் பார்த்தேன். அவர்களது குடும்பத்தார் அனைவரையும் அறிவேன். நான் அங்கு சென்று பார்த்தபோது மனம் ஒடிந்து போயிற்று. நண்பனின் மச்சினனுக்கு உடல் முழுவதும் செயல் இழந்திருந்தது. எந்த ஒரு உறுப்பும் அவனது கட்டுப்பாட்டில் இல்லை. கோமா நிலைக்குப் போயிருந்தாலாவது அவனது நிலைமை குறித்து அவனுக்குத் தெரிந்திருக்காது. ஆனால் கொடுமை என்ன வென்றால் அவனது மூளை நன்கு செயல் பட்டு சுற்றி நடப்பது எல்லாம் அறிந்து கொண்டு இருந்தது. கண்கள் மட்டும் அங்கும் இங்கும் அலை பாயும். வந்தவர் யாரென்று நன்கு தெரியும் கண்களிலிருந்து தாரை தாரையாய் கண்ணீர் வரும் ட்யூப் வழியே உணவு செலுத்தப் பட்டது. நாம் அவனைப் பார்த்து ஆற்றாமையால் கலங்கினால் மேலும் அவனது மனம் சங்கடப்படக்கூடும். என் நண்பன் தினமும் காலையில் மருத்துவ மனைக்குச் செல்வான். அவனருகில் அமர்ந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டு எல்லாம் சரியாகிவிடும் என்று அடிக்கடிக் கூறி கையைத் தடவிக் கொடுப்பான். மருத்துவர்கள் ஏதும் சொல்ல முடியாது என்றனர். தேறிவரலாம் , தேறாமலேயே போகலாம்  என்றார்கள். அப்போது எனக்குத் தோன்றியது என்னவென்றால் ‘நல்ல வேளை .இவனுக்குத் திருமணம் ஆகவில்லை ஆயிருந்தால் இவனைக் கல்யாணம் செய்த பாவத்துக்கோ புண்ணியத்துக்கோ அந்தப் பெண் கஷ்டப் பட வேண்டி இருந்திருக்கும்

என்னதான் செலவு செய்து மருத்துவம் பார்த்தாலும் ஒரு நாளா இரண்டு நாளா வாரமா மாதமா தெரியாது. செலவு ஏறிக்கொண்டே போய் ஒரு நிலையில் ச்சே என்று ஆகிவிடுகிறது. அமெரிக்காவிலிருந்த வந்த நண்பன் ஒரு மாதம் முடிந்தவுடன் அவன் பிழைப்பைப் பார்க்க வேண்டாமா. அவன் சென்று விட்டான். படிப்பறியாத் தாய் தினமும் தூரத்திலிருந்து மருத்துவமனைக்கு வந்து போய்க் கொண்டிருக்க முடியுமா. சில நாட்கள் கழித்து நண்பனின் இன்னொரு மச்சினன் வந்தான் அவனும் ஓரிரு வாரங்களில்  திரும்ப வேண்டியதாயிற்று,

இதற்கு நடுவில் வீட்டில் இருந்த முக்கிய தாஸ்தாவேஜுகள் பற்றின சேதி யாருக்கும் தெரியவில்லைதெரிந்தநண்பனின் மச்சினனும் ஏதும் செய்ய இயலாத நிலையில். முக்கிய பேப்பர்கள் வைத்துள்ள இடம்தெரிய மருத்துவ மனையில் இருந்தோர் அவனிடம் communicate  செய்ய ஒரு வழியைக் கண்டனர். பேசுவது புரிந்து கொள்ளும் அவனிடம் ஒரு அட்டையில் எழுத்துக்களையும் எண்களையும் காட்டி இவர்கள் கேட்க விரும்புவதை வாய்மொழியில் கேட்டு பதிலை சொல்ல விரும்பும் வார்த்தையின் spelling ஆக கூற ஒவ்வொரு எழுத்தையும் ஆம் என்றால் கண்களை மூடித்திறக்கக் கூற பயிற்சி அளித்தனர். இவ்வாறு கேள்வி கேட்டு பதில் தெரிந்து கொண்டனர். தெரிந்து கொண்ட பதில் மூலம் விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டனர். இது எழுதியது போல் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. எதற்கும் ஒரு முடிவு உண்டல்லவா.?வயாதான தாயை என்னென்னவோ சொல்லி அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றனர். இவனை மருத்துவ மனையின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு ஆகும் செலவுகளை அமெரிக்காவிலிருந்து கொண்டே செய்தனர். இந்த மாதிரியான ஒரு வாழ்க்கையை அவன் வாழ்ந்தது ஏறத்தாழ ஐந்து வருடங்கள் இருக்கும். கடைசியில் ஒரு நாள் அவன் இவ்வுலகை விட்டு நீத்தான் எல்லோரும் இருந்தும் யாருமற்றவனாக இறந்தான்

உறவினருக்கு தங்களால் ஆனதைச் செய்த திருப்தி. அவ்வளவு செலவும் வைத்தியமும் பலனளிக்கவில்லை. இந்தக் கேஸ் இப்படி என்றால் நான் முன்பொரு முறை  ஜாக்கி மணியும் பந்தயக் குதிரையும் என்று பதிவு செய்திருந்த கேஸ் (அவசியம் பார்க்க ) அண்மையில் அப்பாதுரை எழுதி இருந்த ‘கோமதி என்றொரு அழகி ( அதுவும்  கற்பனையாய் இருந்தாலும்) மனதில் ஆயிரம் கேள்விகளை எழுப்புகிறது. பணம் இருப்பவர் வைத்தியம் பார்த்தோம் முடியவில்லை என்ன செய்வது என்று இருக்கலாம். ஆனால் என்ன செய்தாலும் எதுவும் எதிர்பார்க்கும் பலனளிக்காது என்று தெரிந்தும் ஏதோ ஒரு உந்துதலால் எல்லாக் கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு தொடரும் வாழ்க்கை ....
சில நேரங்களில் இதனால் ஏற்படும் விரக்தி வெறுப்பையே வளர்க்கும் வாய்ப்புண்டு. காரண காரியங்களை ஆராயப் போனால் பதிலேதும் கிடைப்பதில்லை. ஆனால் நம்மை நாமே சமாதானப் படுத்த ஒரு காரணமும் தேவைப் படுகிறது. பதில் சொல்லத் தெரியாக் கேள்விகள். தெரிகின்றமாதிரி ஏற்றுக்கொண்டு காலத்தைத் தள்ள வைக்கும் சில பதில்கள்.



இதை சற்றே ஊன்றி படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் ஐந்து வருடம் மருத்துவ மனையில் இருந்து உயிர் விட்ட நண்பனின் மச்சினன் இன்னும் சில வருடங்கள் உயிருடன் இருந்திருந்தால்,..... மருத்துவச் செலவு அவர்கள் கைகளையும் மீறிப் போயிருந்தால்.....இவன் இப்படி ஒரு vegetative state-ல் இருந்து கஷ்டப் பட வேண்டிய காரணம்......என்ன நினைப்பில் தொடர்ந்து வைத்தியம் பார்க்க வைக்கிறது. . இதனால் யாருக்கு என்ன லாபம். .... மருத்துவமனையில் இருந்தவனின் மனநிலை.... சிந்தித்துப் பாருங்கள். விருப்பு வெறுப்பு இல்லாமல் பதில் சொல்லவோ செயல்படவோ முடிகிறதா?.


இதிலாவது நண்பனின் மச்சினன் ஐந்து வருட மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு இறந்து விட்டான் இருக்கும் வரை முடிந்த அளவு செலவு செய்து மருத்துவம் பார்த்துவிட்டோம் என்று மனதை தேற்றிகொள்ளலாம். மருத்துவம் பார்க்க முடியாமல் போயிருந்தால் குற்ற உணர்ச்சி அவர்களை வாட்டி எடுக்குமா?. நான் குறிப்பிட்டு இருக்கும் பதிவில் வரும் ஜாக்கி மணியின் இரு மகன்களும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் படுக்க வைத்த மரம் போல் இன்னும் இருக்கிறார்களே. மணிக்கும் வயதாகிறது இயலாமை தெரிகிறது. அவரது காலத்துக்குப் பின் அவரது மகன்கள் என்னாவார்கள்......?பக்கவாதத்தால் ஏதும் செய்ய இயலாத கணவன். எதையும் தானாகச் செய்ய முடியாத இரு மகன்களுடன் அல்லல்படும் பெண்மணியை இயக்குவது எது.?அவளுக்கு வாழ்வில் ருசிக்க என்ன இருக்கிறது. ?அவளது உந்து சக்தி எது..? 



தெய்வக் குழந்தைகள் என்று மனம் தேற்றி எதையும் தானாகச் செய்ய முடியாத குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களின் மனநிலை என்ன.?அந்தக் குழந்தைகள் அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்காவது தேறினால் போதும் என்று நினைக்கும் பலரைப் பற்றிப் படித்தும் கேட்டும் இருக்கிறேன். இந்த மாதிரி இருக்கும் உயிர் பிணங்களுக்கு ( வார்தை கடுமையாய் இருந்தாலும் அதுதானே நிஜம் ) அவர்களைப் போஷிக்கும் தாய் தந்தையரின் காலத்துக்குப் பின் ( எல்லோரும் சாசுவதமா என்ன ?)என்னாகும். மருத்துவ மனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப் பட்டு எப்படியோ உயிர் பிழைத்து வந்து எதையும் செய்ய இயலாத நிலையில் மீண்டுமொரு கைக்குழந்தையாய் மனைவியால் பராமரிக்கப் படும் அவல நிலையும் தெரிந்து இருக்கிறேன். அந்த மனைவியின் காலத்துக்குப் பின் அவர் கதி என்ன?. அன்பும் ஆசையும் மட்டும் போதுமா.? கூடவே இருந்த பராமரிக்கும் எண்ணமும் தேவை அல்லவா.?நாம் பெற்றவற்றிடமிருந்து அதை எதிர் நோக்குவோம். அவர்களுக்கும் இந்தப் பராமரிப்பால் என்ன லாபம்.? மனம் வெறுத்துப் போய் விடாதா.? கேள்விகள்....கேள்விகள்....கேள்விகள்.....பதில் அறியாக் கேள்விகள் இருந்துவிட்டுப் போனால் பரவாயில்லையே. நாளை நமக்கும் இந்த மாதிரியான நிலை வராது என்று நிச்சயமாகச் சொல்ல முடியுமா. ஊழ் என்றும் விதி என்றும் சமாதானப் படுத்திக்கொள்ள முடியுமா. ? விலங்குகள் இந்த மாதிரி சூழ்நிலையை எவ்வாறு அணுகுகின்றன. ? விலங்கு நிலையே தேவலாமா.?இல்லாத ஒன்றையோ அறியாத ஒன்றையோ துணை நாடி தேற்றிக் கொள்ள வேண்டுமா.?அறியத் துடிக்குது மனசு. அறியாமையே எங்கும் விரவிக் கிடக்கிறது. பதிலறியாக் கேள்விகள் நடுவே.

நிலைமை இவ்வாறு இருக்கும் போது பராமரிக்க இயலாமல் கைவிடப் பட்டவர்களுக்கு உறுதுணையாய் ஒரு காப்பகம் நடத்தி காத்துவரும் என் நண்பன் மதுசூதனனின் செயல் எனக்கு மிகுந்த ஆச்சரியம் அளிப்பதோடு வணஙக வைக்கவும் செய்கிறது.இந்த எண்ணங்களே என்னை “அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு வேண்டுகோள் “ எனும் பதிவை எழுத வைத்தது.உதவ எண்ணம் தெரிவித்தவர்கள் “நன்றே செயினும் இன்றே செய்கஎன்றபடி உடனே உதவ வேண்டுகிறேன். என் கடந்த பதிவில் முகவரி தொலைபேசி எண் போன்றவற்றைக் கொடுத்திருக்கிறேன். 
Please follow up your donations with a e.mail so that they can know who has sent them and accordingly acknowledge Thanks. 


-------------------------------------------------------------------
 

 













.

.
      .  









.

.

19 கருத்துகள்:

  1. உங்களின் சுமையைத் தாங்கள் எழுத்தின் வழியாக பகிர்ந்து கொண்டு தங்களின் பரந்த மனதை வெளிப்படுத்தியுள்ளீர்கள். மனதைவிட்டு அகல மறுக்கும் இந்நினைவுகளைத் தாங்கள் எழுதும்போது எவ்வளவு கனத்த மனத்தோடு இருந்திருப்பீர்கள் என நினைக்கும்போது வேதனையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  2. ஆரம்ப வரிகளைப் படித்து விட்டு ஏதோ கமெண்ட் செய்ய நினைத்து, தொடர்ந்து படித்ததும் ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. பதில் இல்லாக் கேள்விகள். என்ன சொல்ல? வட நாட்டில் பல வருடங்களுக்கு முன்னால் காமுகன் ஒருவனால் தாக்கப் பட்ட செவிலியர் ஒருவரை இன்னும் இதே நிலையில் வைத்து அந்த மருத்துவமனையும், சக ஊழியர்களும் பாது காக்கிறார்கள் என்று படித்த செய்தி நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  3. மனம் கனக்கின்றது ஐயா..
    அன்பர் ஸ்ரீராம் குறிப்பிட்ட செய்தியை நானும் படித்துள்ளேன்.. அந்தக் கொடியவன் சுதந்திரமாக உலவுகின்றானாம்!..
    விடையறியாக் கேள்விகள்..

    பதிலளிநீக்கு
  4. விடையறியாக் கேள்விகளை படிக்கும் போது மனதில் பல உணர்வுகள் ஏற்படுகின்றது.

    பதிலளிநீக்கு

  5. @ Dr,Jambulingam
    உண்மைதான் ஐயா. உணர்வுகளால் உந்தப் பட்டு எழுதிய பதிவு இதுஎழுதியதற்கான பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன், வரவுக்கும் கருத்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  6. @ ஸ்ரீராம்
    எனக்கும் சில நேரங்களில் ஆரம்ப வரிகளைப் படித்துவிட்டு பகிர நினைத்த விஷயங்களின் அழுத்தம் உணரப் படாமல் போவது போல் தோன்றும். நீங்கள் குறிப்பிட்ட மருத்துவமனையில் இருக்கும் செவிலிக்கு சக மனிதனால் வந்த துயரம். அதற்கான பொறுப்பு யார் என்று தெரிகிறது. நான் கூறி உள்ள செய்திகளில் நிகழும் துயர்கள் ஏன் என்பதே என் கேள்வி. வருகைக்கும் எனக்கு என் எண்ணத்தை மீண்டும் வலியுறுத்தும் வாய்ப்பையும் கொடுத்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  7. @ துரை செல்வராஜு
    /கொடியவன் சுதந்திரமாக உலவுகிறான்/ அவனுக்குத் தண்டனை கிடைத்தால் நீதி இருக்கிறது என்று விளங்கும். ஆனால் அந்தப் பெண்ணின் துயர் நீங்குமா. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  8. @ கோமதி அரசு/
    /விடையறியாக் கேள்விகளை படிக்கும் போது மனதில் பல உணர்வுகள் ஏற்படுகின்றது./ இந்த உணர்வுகள் செயலில் பரிணமிக்கவே இந்தப் பதிவு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. என்ன சொல்றதுனு புரியலை. யாருக்கு எப்போ என்ன நேரும்னு சொல்லவும் முடியலை. :(( ரொம்பவே வருத்தமா இருக்கு.

    ஶ்ரீராம் குறிப்பிட்டிருக்கும் அருணா இறந்துட்டாங்க. மருத்துவமனையின் காவலாளியாலேயே கெடுக்கப்பட்டு, தாக்கப்பட்டுக் கோமாவில் (மும்பை ஆஸ்பத்திரி ஒன்றில்) வருடக்கணக்காய் இருந்தாங்க. :(((( என்னத்தைச் சொல்றது! :( இப்படியான கொடூரங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  10. காரண காரியங்களை ஆராயப் போனால் பதிலேதும் கிடைப்பதில்லை. ஆனால் நம்மை நாமே சமாதானப் படுத்த ஒரு காரணமும் தேவைப் படுகிறது


    மனம் கனக்கச்செய்யும் பகிர்வுகள்..!

    பதிலளிநீக்கு

  11. @ கீதா சாம்ப்சிவம்
    /அருணா இறந்துட்டாங்க/ இல்லை பிழைத்துவிட்டாள் என்றுதான் சொல்வேன். என் பதிவே இப்படி ஒரு முடிவுக்கு வருபவர் பற்றியல்ல. அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் அவஸ்தையும் பாடும் குறித்துத்தான் உதவிக்குசகமனிதர் இருந்தால் தேவலை. இல்லாதவருக்கு உதவிக்கரம் நீட்டுவோருக்கு நம்மால் ஆன உதவி செய்யவேண்டும் என்று வலியுறுத்த்ததான் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

  12. @ அப்பாதுரை.
    இப்போதெல்லாம் பதிவுப்பக்கம் வருவதே இல்லையே. வருகைக்கு நன்றி.முன்பே ஒரு மெயில் அனுப்பி இருந்தேன் “promises are to be kept"என்று நினைவுக்கு வருகிறதா.?

    பதிலளிநீக்கு

  13. @ இராஜராஜேஸ்வரி
    நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்ள காரணமும் தேவைப் படுகிறது. நம்மால் முடிந்ததைச் செய்தாலும் சமாதானமடைய வாய்ப்புண்டு. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம்
    ஐயா.

    பதிவை படிக்கும் போது மனம் கனத்துப் போனது....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  15. என்னுடைய தாய் மாமன் ஒருவரும் இப்படித்தான் நல்ல அரசு பதவியில் இருந்து ஓய்வு பெற்று அடுத்த சில வருடங்களிலேயே ஸ்ட்ரோக் ஏற்பட்டு கைகால்கள் செயலிழந்துபோய் சுமார் ஒருவருட காலம் முதியோர் இல்லத்தில் இருந்து சிரமப்பட்டார். பிள்ளைகள் அனைவருமே பொருளாதார வசதிகள் இருந்தும் வேலைக்கு செல்பவர்கள் என்பதால் அவரை மருத்துவமனையிலோ வீட்டிலோ வைத்து பராமரிக்க வழியில்லாமல் எல்லோரும் இருந்தும் யாரும் இல்லாத அனாதையாய் இறந்தார். உங்களுடைய பதிவைப் படித்தபோது நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு

  16. @ ரூபன்
    /மனம் கக்கச் செய்தது/ கதையல்ல. நிஜமே. மனம் கனத்தல் மட்டும் போதுமா? நேசக்கரம் உதவிக்கரம் நீட்டுங்கள். வருகைக்க நன்றி.

    @ டி.பி.ஆர். ஜோசப்
    / எல்லோரும் இருந்தும் யாரும் இல்லாத அனாதையாக இறந்தார்/யாரும் இல்லாதவருக்கு உதவும் நண்பருக்கு உதவிக்கரம் நீட்டுவோம். வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. விடை இல்லாத கேள்விகள்......

    எத்தனை எத்தனை பேர்கள் இப்படி பல வருடங்களாக கஷ்டத்துடன் இருக்கிறார்கள் - அவர்களுக்கும் அவர்களை பராமரிக்கும் குடும்பத்தினருக்கும் கஷ்டம். என்ன முடிவு - Mercy Killing என்பது சரியா இல்லை தவறா என முடிவு செய்வது எப்படி? கேள்விகள்.... கேள்விகள்.... பதில் தான் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு