Saturday, May 3, 2014

மஹாபாரதக் கதைகள் ----ஜயத்ரதன்


                            மஹாபாரதக் கதைகள் ---ஜயத்ரதன்
                            --------------------------------------------------


மஹாபாரதக் கதைகள் எழுதப் புகுமுன் நிறையவே சிந்தித்தேன் முதலில் கதையின் சுவை குறையக் கூடாது. என் கருத்துக்களும் எண்ணங்களும் பிரதானமாக வரக் கூடாது. ஆண்டவனின் லீலைகள் நிரம்பிய கதை. சில நடவடிக்கைகள் இந்தகாலத்துக்கு ஏற்புடையதாய் இருக்காது. இருந்தாலும் இந்தக் கதைக்கு மக்களிடையே ஒரு சாங்டிடி உண்டு. படிப்பவர் மனம் புண்படக்கூடாது. அதே சமயம் நம்பத்தகாதவைகளையும் சுட்டிச் செல்ல வேண்டும். ஜராசந்தன் பதிவு ஓரளவு தேறி இருக்கிறது. பலரும் தொடர்ந்து எழுதுங்கள் என்கின்றனர். அதிலும் நேயர் விருப்பமாக திரு. பாலகணேஷ் ஜயத்ரதன் பற்றி எழுதக் கேட்டிருக்கிறார். கதைக்கும் கருத்துக்களுக்கும் இடம் இருக்கிறதால் இப்பதிவு ஜயத்ரதன் பற்றியது,
 முதலில் இந்த ஜயத்ரதன் யார் என்று பார்ப்போம். இவன் திருதராஷ்டிரரின் ஒரே மாப்பிள்ளை. அதாவது கௌரவர்களின் ஒரே சகோதரி துச்சலையின் கணவன் சிந்து தேசத்து அரசன் அவன் தன் படைகளுடன் சால்வ தேசத்து அரசகுமாரியை மணமுடிக்கச் சென்று  கொண்டிருந்தான் போகும் வழியில் காம்யக வனத்தில் பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தனர். அவர்கள் வேட்டைக்குச் சென்றிருந்த சமயம் திரௌபதி தனியே இருந்தாள். தனியே நின்றுகொண்டிருந்த பாஞ்சாலியை ஜயத்ரதன்  கண்டான். அவள் யாரென்று அறிந்துவர என்று அவனது மகன் கோடிகனை அனுப்பினான் மகனும் விரைந்து சென்று திரௌபதி முன் நின்று அவள் யாரென்று விசாரித்தான் அவளும் விவரங்களைக்கூறி யுதிஷ்டிரர் முதலானோர் சிறிது நேரத்தில் வந்து விடுவார்கள். அதிதிகளைக் கண்டால்மகிழ்ச்சி அடைவார் என்றும்கூறினாள் கோடிகன் சிந்து தேச அரசரிடம் சென்று அவளைப் பற்றிக் கூறினான். ஜயத்ரதன் பாஞ்சாலி முன் வந்து அவளைத் தன்னுடன் வருமாறு வேண்டுகிறான். திரௌபதி கோபத்துடன் மறுக்கவே அவளைத்தேரில் ஏற்றிக் கடத்திச் சென்றான் சற்று நேரத்தில் வந்த பாண்டவர்கள் விஷயம் அறிந்து ஜயத்ரதனை துரத்திச் சென்று போரிடுகின்றனர். சால்வ அரசனுக்காக அவன் கூட வந்திருந்தவர்கள் போரிடுகின்றனர் ஜயத்ரதன் மகன் கோடிகன் உட்பட அநேகம் பேர் உயிர் துறக்கிறார்கள்.  பாண்டவர்கள் அருகில் நெருங்குவது கண்ட ஜயத்ரதன் திரௌபதியை இறக்கிவிட்டுத் தப்பிக்க முயற்சி செய்கிறான். தரும புத்திரர் அர்ச்சுனன் பீமனிடம் ஜயத்ரதன் தங்கள் சகோதரியின் கணவன் என்பதால் கொல்ல வேண்டாம் என்று சொல்கிறார்.சற்று நேரத்தில் ஜயத்ரதனைக் கைது செய்து அவன் தலையில் ஐந்து உச்சிகுடுமிகள் மட்டும் வைத்து மொட்டை அடித்து இனி நான் பாண்டவர்களின் அடிமை என்று சொல்ல வைத்து துரத்தி விடுகின்றனர். அவமானம் மேலிட ஜயத்ரதன் தன் நாடு திரும்பாது பரமசிவனை வேண்டிக் கடும் தவம் செய்கிறான். நம் கடவுள்கள் எல்லோருமே இரக்க குணம் மிகுந்தவர்கள் ஆயிற்றே. . சிவன் பிரத்தியட்சமாகி “பக்தா உன் பக்திக்கு மெச்சினேன். என்ன வரம் வேண்டும்,? என்று கேட்கிறார். இவனும் தன்னை அவமதித்த பாண்டவர்களைக் கொல்லும் சக்தி தர வேண்டும் என்று கேட்கிறான். சிவ பெருமானால் முடியாத வரம் அது. பாண்டவர்களுக்கு சகாயமாக கிருஷ்ணன் ( ஸ்ரீமன் நாராயணன் ) இருப்பதால் தன்னாலேயே அது முடியாது என்று தெரிவிக்கிறார். இருந்தாலும் பக்தனுக்குக் காட்சி அளித்த பிறகு வரம் கொடுக்காமல் இருக்க முடியுமா.?பாண்டவர்களைப் போரில் ஒரு நாள் தடுத்து நிற்கும் வரத்தை அருளி விட்டு மறைந்தார். மஹாபாரதத்தில் ஜயத்ரதன் பங்கு குருக்ஷேத்திரப் போரில்தான் மறுபடியும் வருகிறது.
குருக்ஷேத்திரப் போரின் 13-வது நாள்.துரோணர் தலைமையில் கௌரவர் சேனை. துரோணர் திட்டமிடுகிறார்   அன்றையப் போரில் சக்கிரவியூகம் அமைத்து அதில் யுதிஷ்டிரரைசிக்கவைத்தால் ஏறக்குறைய போரில் வென்றமாதிரிதான் என்று நினைத்தார். சுஷர்மன் எனும் அரசனிடம் அர்ச்சுனனை வலிய போருக்கு அழைத்து அவனை போர்க்களத்தில் இருந்து வெகு தொலைவுக்கு கூட்டிச்செல்ல பணிக்கிறார். சககர வியூகம் பார்த்ததும் யுதிஷ்டிரருக்குக் கவலையாகிறதுசக்கரவியூகத்தைப் பிளந்து சென்றுவரும் ஆற்றல் அர்ச்சுனனுக்கும் கிருஷ்ணனுக்கும் மட்டுமேதெரியும் இது தவிர அர்ச்சுனன் மகன் அபிமன்யுவுக்குவியூகத்தின் உள்ளே செல்லத் தெரியும் ஆனால் வெளியே வரும் சூட்சுமம் தெரியாதுபாண்டவர்கள் போர்முறைகளை அலசும் போது அபிமன்யு முன்னுக்கு வந்து தான் வியூகத்தை பிளந்து போவதாக கூறுகிறான் எப்படியும் தருமரைக் காப்பாற்ற வேறு வழி இல்லை என்று ஒப்புக் கொள்கின்றனர். அபிமன்யு வியூகத்தைப் பிளந்து உள்ளே செல்கையில் அவன் பின்னேயே பாண்டவரில் மற்றோரும் தொடர்வது என்று முடிவாயிற்று
துரோணர் திட்டமிட்டிருந்தபடி அர்ச்சுனனை வெகு தூரம் கொண்டு சென்றாயிற்றுசக்கரவியூகப் படையுடன் யுதிஷ்டிரரையும் தனிமைப்படுத்தி கைதுசெய்யவேண்டியதுதான் பாக்கி. சற்றும் எதிர்பாராமல் அபிமன்யு வியூகத்தைப் பிளந்து சென்று கௌரவர்களைக் கலங்கடித்துக் கொண்டிருந்தான். அவனுக்குத் துணையாக பாண்டவர்கள் செல்ல முற்பட்டபோது ஜயத்ரதன் அவர்களைத் தடுத்துப் போரிட்டான் அவனுக்கு சிவபெருமான் அருளி இருந்த வரம் உதவியாயிருந்தது அந்தநாள் போரில் பாண்டவர்களைத் தடுத்து நிறுத்தி வெல்ல முடிந்தது சிவபெருமானின் வரம் குறித்து அறியாத பாண்டவர் போரிட்டு அவனை வீழ்த்த முடியாமல் தவித்தனர்
 வியூகத்தின் உள்ளே சிக்கிய அபிமன்யுவெளியே வரும் சூட்சுமம் அறியாமல் போரிட்டுக் கொண்டிருந்தான்.
அந்தக்காலத்தில் போரில் சில நெறிமுறைகள் கடைபிடிக்கப் பட்டன. அவற்றை யுத்த தர்மம் என்று கூறினர்( EVERYTHING IS FAIR IN LOVE AND WAR என்னும் தற்காலத்திய சொல் நினைவுக்கு வருகிறது)அபிமன்யுவின் வீரமும் வேகமும் கௌரவப் போர்த்தளபதி துரோணருக்கு வியப்பூட்டியது. அவனை வெல்ல சில யுத்த தர்மங்களை மீறியே ஆகவேண்டும் என்று அவருக்குத் தோன்றி இருக்கவேண்டும்துரோணர் கர்ணனிடமும் மற்றோரிடமும் அபிமன்யுவின் பின்புறம் தாக்கி வில்லை முறிக்கச் சொன்னார். கூடவே தேர்க் குதிரைகளையும் தேரோட்டியையும் கொல்லச் சொன்னார் தேரின் சக்கரத்தையும் உடைக்கச் சொன்னார் சுருங்கச் சொன்னால் அவனை நிராயுதபாணியாக்கச் சொன்னார். இருந்தும் உடைந்த தேர்ச்சக்கரங்களையே சுழற்றி ஆயுதமாகவும் கேடயமாகவும் உபயோகித்தான் இருந்தும் அந்தோ..! சூழ்ச்சியால்  பலராலும் சூழ்ந்து கொல்லப்பட்டு உயிரிழந்தான் கௌரவர்களின் எக்காள ஒலி யுதிஷ்டிரருக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்று உணர வைத்தது. அன்றைய நாளின் போர் சூரிய அஸ்தமனம் காரணமாக நிறுத்தப் பட்டது. அர்ச்சுனன் வந்தான் . நடந்த விஷ்யங்களைக் கேள்விப்பட்டான் மனம் பதறினான் அபிமன்யுவுக்கு உதவ முன் சென்ற பாண்டவர்களைத் தடுத்து நிறுத்திய ஜயத்ரதனை மறுநாள்  சூரிய அஸ்தமனத்துக்குள் கொல்வேன் . அப்படி முடியவில்லை என்றால் தீக்குளிப்பேன் என்று சூளுரைத்தான்
அர்ச்சுனனின் சூளுரை பற்றிக் கேள்விப்பட்டதும் ஜயத்ரதன் கவலையுடன் துரோணர் முன் நின்றான். துரோணர் அவன் பயம் தெளிவிக்க என்னமாதிரி பாதுகாப்பு திட்டமிடப் பட்டிருக்கிறது என்று விளக்கினார்.மகாரதர்களான கர்ணன், அஸ்வத்தாமன் , பூரிஸ்ரவன், சல்யன், கிரிபா விருஷசேனன் இவர்களைக் கடந்துஅர்ச்சுனன் வரமுடிந்தால் ஒரு பெரிய சேனையை அரை வட்டத்தில் நிறுத்தி நான் தலைமை வகித்து உன்னைக் காப்பேன் என்று ஆறுதல் அளிக்கிறார். பயம் தெளிந்த ஜயத்ரதனை அணிவகுக்கப் பட்ட சேனையின் கடைசியில் பாதுகாப்பாக இருக்க அனுப்புகிறார். புத்திர சோகத்தில் ஆழ்ந்திருந்த அர்ச்சுனன் கிருஷ்ணரின் உதவியோடு எதிர்படும் சேனைகளைத் துவம்சம் செய்து கொண்டு முன்னேறுகிறான் அன்றையப் போரின் முடிவு நெருங்கிக் கொண்டிருந்தது. ஜயத்ரதனும் கூட்டாளிகளும் சற்றே பயம் நீங்கத் தொடங்கி இருந்தனர் மனம் ஒடியும் நிலையில் பார்த்தன் நிற்க கிருஷ்ணர் அவனிடம் காண்டீபத்தைத் தயாராக ஏந்தி அம்புதொடுக்கக் கூறுகிறார். அதற்குள் ஆதவன் மேற்குத் திசையில் மறைந்தான்.(கிருஷ்ணனின் சுதர்சன சக்கரத்தால் மறைக்கப் பட்டது) எக்காளத்துடன் பாதுகாப்பிலிருந்து ஜயத்ரதன் வெளிப்பட்டான் கிருஷ்ணன் சக்கரத்தைமீட்கவே . என்ன ஆச்சரியம் சூரியன் தகதகத்து இன்னும் மேல் திசையில் இருந்தது ஒரு நொடியில் பார்த்தனின் அம்பு ஜயத்ரதனின் தலையைக் கொய்தது. “அர்ச்சுனா அறுபட்ட தலை கீழே விழாமல் அதனை சமந்த பஞ்சக ஏரிக்கரையில் நிஷ்டையில் அமர்ந்திருக்கும் விருதக்‌ஷட்ர  என்னும் இவனது தந்தையின் மடியில் விழுமாறு செய். ஜயத்ரதனின் தந்தை விருதக்‌ஷட்ர அவனுக்கு ஒரு வரம் அருளி இருக்கிறார். அதன்படி இவன் தலையை எவர் தரையில் விழுமாறு செய்கிறாரோ அவர் தலை சுக்கு நூறாய் வெடித்துப் போகும் ஜயத்ரதனின் அறுபட்ட தலை நிஷ்டையில் அமர்ந்திருந்த அவன் தந்தையின்மடியில் விழ என்னவோ ஏதோ என்று தெரியாத அவர் அதைத் தள்ளிவிட அவர் தலை வெடித்து அவரும் மாண்டார்.
இந்தக் கதையை படிக்கும் போதும் எழுதும் போதும் மூன்றாம் சுழியில் நண்பர் அப்பாதுரை சில நாட்களுக்கு முன் ஒரு புகைப்படம் வெளியிட்டிருந்ததுநினைவுக்கு வந்தது அதில் இரண்டு சூரியன்கள் இருந்தன எது நிஜ சூரியன் என்று கேட்டிருந்தார். சூரி சிவா என்னும் சுப்புத் தாத்தா அவை இரண்டு சூரியன்களல்ல . ஒன்று ஆப்டிகல் இல்லூஷன் என்று எழுதி இருந்ததும்  நினைவுக்கு வந்தது
விக்கிபீடியாவிலும் இரண்டு சூரிய அஸ்தமனங்கள் சாத்தியமா என்று கேள்வி எழுப்பி பதிலும் கொடுத்திருக்கிறார்கள் அதை நான் வாசகர்களுடன் பகிர்கிறேன்
/ டாக்டர் வார்டெக் என்பவர் (மகாபாரத யுத்தம் கிமு.5561 அக்டோபர் 16 ஆம் நாள் தொடங்கி நவம்பர் 2 ஆம் நாள் முடிந்தது என்று ஏராளமான ஆதாரங்களுடன் எழுதியுள்ள கட்டுரை நூலில்) இரட்டை சூரியோஸ்தமனம் அறிவியல் பூர்வமாக சாத்தியமே என்று விளக்கி உள்ளார். அவருடைய விளக்கம்:
சூரியஒளி நேர்கோட்டில் பயணம் செய்தாலும், அது வளிமண்டலத்தைக் கடக்கும் போது ஒளிச் சிதறலுக்கு ஆட்படுகிறது. அதுவே தொடுவானத்துக்குக் கீழே சூரியன் இருப்பது போன்ற காட்சியைத் தருகிறது.கானல் நீர் ஏற்படும் விதம் போலத்தான் இதுவும். பூமிப் பரப்பினை ஒட்டி இருக்கும் காற்றின் வெப்பநிலைக்கும் அதனை அடுத்துள்ள காற்றடுக்கின் வெப்ப நிலைக்கும் இருக்கும் வித்தியாசமே கானல் நீர் ஏற்படக் காரணம். அதாவது பூமிப் பரப்பின் சூட்டினால் அதனை ஒட்டி இருக்கும் காற்றும் சூடடைந்து அடர்த்தி குறைந்து இருக்கிறது. அதற்கு மேலே இருக்கும் காற்றடுக்கு அடர்த்தி அதிகமாக இருக்கிறது. ஒளி அடர்த்தி அதிகமான ஊடகத்திலிருந்து அடர்த்தி குறைந்த ஊடகத்தினுள் செல்லும் போது விலகல் ஏற்படும். ஒரு பகுதி ஒளி விலகி பூமிப்பரப்புக்கு இணையாகவும், இன்னொரு பகுதி பூமியில் பட்டுத் தெரிப்பதாலும் தூரத்து மலையின் தலைகீழ் பிம்பம் பூமிப்பரப்புக்குக் கீழே மாயபிம்பமாகத் தெரியும். அதேபோல், சூடான கீழ்ப்பரப்புக் காற்றின் மீது பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளி ஒரு திரவக் கண்ணாடி போல் பூமிப்பரப்பில் விரிய அது ஒரு மாய தொடுவானத்தினைக் காட்சிப்படுத்துகிறது. நிஜமான தொடுவானம் வானத்தின் பிரதிபலிப்பில் மறைந்து விடுகிறது.
மகாபாரத யுத்தத்தின் போதும் இதே தான் நிகழ்ந்திருக்கும். நெருப்பு சார்ந்த ஆயுதங்களின் பிரயோகங்களால் யுத்த பூமி சூடாகி இருக்க, அதன் மேலான காற்று அடர்த்தி குறைவாகி எழும்பி இருக்க, மாலைச் சூரியனின் வட்டவடிவம் மாய நீள்வட்ட வடிவமாகி மாயத் தொடுவானத்தின் கீழ் மறைந்தது போன்ற தோர்றம் உருவாகி இருக்கும். அந்தக் கணத்தில் ஜயத்ரதன் வெளிப்பட்டிருக்கக் கூடும். அடுத்த கணங்களில் வெப்ப வேறுபாடு குறைய நிஜத் தொடுவானத்தில் சூரியன் தோற்றமளித்துப் பின் மறைந்திருக்கும். இந்த இடைவெளியில் ஜயத்ரதனின் வதம் நிகழ்ந்திருக்கும்./
என்ன நண்பர்களே பதிவை ரசித்தீர்களா
.         

42 comments:

  1. சுவாரஸ்யமாய் யுத்தக்காட்சிகளை கண்முன் கொண்டுவந்த அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  2. ஜயத்ரதன் பற்றியும் அவன் வீழ்த்தப்பட்ட விதத்தைப் பற்றியும் அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்.

    ReplyDelete
  3. யுத்த காட்சிகளைக் கண்முன் கொண்டு வந்த பதிவு
    நன்றி ஐயா

    ReplyDelete
  4. ஜயத்ரதன் பற்றி மகாபாரதத்தின் கதையின் நடுவில் படித்திருக்கிறேன். இன்றுதான் தனியாக ஜயத்ரதன் பற்றிப் படிக்கிறேன்.
    ஒரே ஒரு சின்ன வேண்டுகோள். பாரா பிரித்து போடுங்கள். தொடர்ந்து படிப்பது சற்று சிரமமாக இருக்கிறது. தவறாக நினைக்கவேண்டாம்.

    இரட்டை சூரியோதயம் பற்றி எழுதியிருப்பதும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

    ReplyDelete
  5. சுவாரஸ்யம்.

    அபிமன்யு தனக்கு பத்மவியூகத்தைப் பிளந்து உள்ளே செல்ல மட்டுமே கற்றிருப்பதாகச் சொல்லி, உள்ளே நுழைந்ததும் பின்னாலேயே வருமாறு பெரியப்பா, சிற்றப்பன்களைக் கேட்டுக் கொள்கிறான். ஆனால் உள்ளே நுழைந்ததும் வழியை துரோணர் மூடி விடுகிறார்!

    ஜயத்ரதனின் சத்தம் வரும் திசை நோக்கி இருளிலேயே அர்ச்சுனனை அம்பு விடப் பணிக்கிறார் கிருஷ்ணன்.

    பதிவைப் பத்தி பிரித்துப் போட்டீர்களானால் படிக்க சற்று எளிதாக இருக்கும். :)))

    ReplyDelete
  6. இரட்டை சூரியோஸ்தமனம் அறிவியல் பூர்வமாக சாத்தியமே என்று விளக்கி உள்ளார். //

    அருமையான பகிர்வு.

    ReplyDelete
  7. ரசிக்க வைக்கும் அருமையான பகிர்வு ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. கிளைக்கதைகளிலும் சுவாரசியமான நுட்பங்கள் வைத்துப் புனைந்த வியாசரின் கற்பனை வளம் என்னை எப்பொழுதுமே பிரமிக்க வைக்கிறது.

    இரண்டு அஸ்தமனம் பற்றிய உங்கள் விளக்கமும் சுவாரசியம். எல்லாவற்றுக்கும் ஒரு ப்லேன்கெட் சமாதானம் இருக்கிறதே.. க்ருஷ்ண லீலா.

    ReplyDelete
  9. பக்தா உன் பக்திக்கு மெச்சினேன். என்ன வரம் வேண்டும்,?

    கடவுள் இப்போது இம்மாதிரி வரம் கொடுத்தால் எப்படியிருக்கும்?

    அதற்குப் பதிலாகத்தான் MP சீட் கொடுக்கிறாரோ?

    ReplyDelete
  10. சுவாரசியமான கதைக்கு நன்றி.

    ReplyDelete
  11. அருமை. எளிய தமிழில் நன்கு விளக்கியுள்ளீர்கள். இரட்டை சூர்யோதயம் விளக்கம், கதைக்கு இன்னும் மெருகூட்டுகிறது. நன்றி.

    ReplyDelete
  12. இரட்டை சூரிய உதயத்தை விளக்க நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சி அருமை. கூகுளில் எல்லாமே கிடைத்துவிடுகிறது என்றாலும் அது எடுத்தெறியும் நூற்றுக்கணக்கான தகவல்களிலிருந்து நமக்கு வேண்டியதை எடுப்பதற்கு மிகவும் பொறுமை வேண்டுமே. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. ஜயத்ரதனின் கதையை இவ்வளவு எளிமையாகக் கொடுத்தமை சிறப்பு. மகாபாரதம், பல வருடங்களுக்கு முன் படித்தது. இப்போது மீளக்கொண்டுவந்து ரசிக்க முடிந்தது. மகாபாரதத்தில் ஒரு பாத்திரத்தைப் பற்றி ஆங்காங்கே வரும் பல தகவல்களைத் தொடுத்து ஒரே பதிவாக இடுவதற்கு நிறைய சிரத்தை மேற்கொள்ளவேண்டும். வாசிப்பவர்களுக்கு குழப்பம் வராதபடி அதை எழுதவும் வேண்டும். அந்த வகையில் இந்தப் பாத்திர அறிமுகமும் அருமை. பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete

  14. அறியாத கதையை சொல்லி அதற்கு ஒரு அறிவியல் விளக்கமும் தந்தமைக்கு நன்றி! இரசித்தேன்!

    ReplyDelete

  15. @ இராஜராஜேஸ்வரி
    பதிவின் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேடம்

    ReplyDelete

  16. @ துரைசெல்வராஜு
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  17. @ கரந்தை ஜெயக்குமார்
    பாரதத்தில் யுத்தக் காட்சிகள் விவரித்திருப்பதில் நான் ஒரு சதவீதம் கூடச் செய்யவில்லை/ தொய்வு ஏற்படுவதைத் தடுக்கவே. வருகைக்கு நன்றி ஐயா,

    ReplyDelete

  18. @ ரஞ்சனி நாராயணன்.
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி மேடம் . மஹாபாரதம் ஏறத்தாழ எல்லோருக்கும் தெரியும்.அதில் வரும்கதாபாத்திரங்களைமுன் நிறுத்திப் பதிவிடுகிறேன் .

    ReplyDelete

  19. @ ஸ்ரீராம்
    தெரியாத கதையைப் பதிவிடலாம்.அநேகமாக எல்லோரும் அறியும் கதையைப் பதிவுடுவதில் கவனம் தேவை பத்திபிரித்துப் போட முயற்சிக்கிறேன் எடுத்துக் காட்டியதற்கு நன்றி ஸ்ரீ.

    ReplyDelete

  20. @ கோமதி அரசு.
    சில விஷயங்கள் எழுதும்போது சாத்தியக் கூறுகள் பற்றி நம்பிக்கை எழுவதில்லை. சாத்தியம் என்னும் கூற்றைப் பகிர்ந்து கொண்டேன். வருகைக்கு நன்றிமேடம்

    ReplyDelete

  21. @ திண்டுக்கல் தனபாலன்
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி டிடி

    ReplyDelete

  22. @ அப்பாதுரை
    மஹாபாரதக் கதையில் அதன்கற்பனை வளத்தில் மனம் பறி கொடுத்தவன் நான்.சில நேரங்களில் எனக்கு அதன் நிகழ்வுகள் எனக்குள் ஒரு சினிசிசம் தோற்றுவிக்கும். அதை கதை என்று அணுகி சமாதானப் படுத்திக் கொள்வேன் இரட்டல் அஸ்டமனம் பற்றி எழுதும்போது உங்கள் பதிவு நினைவுக்கு வந்தது. The credit goes to you. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்.

    ReplyDelete

  23. @ டாக்டர் கந்தசாமி
    சுவையான பின்னூட்டத்துக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  24. @ கீதா சாம்பசிவம்
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி மேடம்

    ReplyDelete

  25. @ பக்கிரிசாமி
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா

    ReplyDelete

  26. @ டி.பி.ஆர். ஜோசப்
    பதிவு எழுதும்போது திரு. அப்பாதுரையின் பதிவு நினைவுக்குவந்து இணையத்தில் தேட வைத்தது. சுட்டிக்காடி பாராட்டியதற்கு நன்றி சார்.

    ReplyDelete

  27. @ கீதமஞ்சரி.
    அதிலும் பலரும் அறியும் கதையின் பாத்திரங்களை எழுதுவதில் கவனம் தேவை. அதை உணர்ந்து பாராட்டியதற்கு நன்றி மேடம்

    ReplyDelete

  28. @ வே.நடனசபாபதி
    அறியாத கதை என்பதற்கு பதில் அறியாத விளக்கம் என்றுதான் நினைக்கிறேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  29. அருமையாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் உழைப்பு அசர வைக்கிறது. என்னை பொருத்தவரை கதையல்ல... இப்படித்தான் நிகழ்ந்திருக்க வேண்டும் என்ற லாஜிகல் தொகுப்பு இது!

    ReplyDelete
  30. அருமையான் விளக்கம் ஐயா!

    ReplyDelete
  31. ந்தக்காலத்தில் போரில் சில நெறிமுறைகள் கடைபிடிக்கப் பட்டன. அவற்றை யுத்த தர்மம் என்று கூறினர்( EVERYTHING IS FAIR IN LOVE AND WAR என்னும் தற்காலத்திய சொல் நினைவுக்கு வருகிறது)அபிமன்யுவின் வீரமும் வேகமும் கௌரவப் போர்த்தளபதி துரோணருக்கு வியப்பூட்டியது. அவனை வெல்ல சில யுத்த தர்மங்களை மீறியே ஆகவேண்டும் என்று அவருக்குத் தோன்றி //இதை கொஞ்ச்ம எழிய தமிழில் தனிப்பதிவாக சொல்லுங்க ஐயா இன்றும் புரியவில்லை!ஈழத்து வாசகன்!ம்ம்

    ReplyDelete
  32. கருத்து பிழை என்றால் பின்னூட்டத்தை தூக்கும் உரிமை ஐயாவுக்கு உண்டு/

    ReplyDelete
  33. இந்த கேரக்டரைப் பற்றித் தெரியும். என்றாலும் விரிவாக அறிந்து கொள்ள விரும்பியே உஙகளிடம் எழுத வேண்டினேன். இப்போது டிடெய்லாக உங்களின் சுவாரஸ்ய நடையில் படித்ததும் மிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா. தொடரட்டும் இந்த மகாபாரத உலா.

    ReplyDelete
  34. @ பந்து
    ஐயா வருகைக்கும் பாராட்டுக்கும்நன்றி

    ReplyDelete

  35. @ தனிமரம்
    வருகைக்கு நன்றி.பொதுவாக எந்தப்பின்னூட்டத்தையும் நான் அகற்றுவதில்லை. கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. வரம்பு மீறாத வகையில் எல்லாக் கருத்துக்களும் கவனிக்கத்தக்கவையே.
    அந்தக் காலத்தில் போர் துவங்கும் முன் சங்கு ஊதுவார்களாம் சூரியோதயம் தொட்டு அஸ்தமனம் வரையே போர் நிகழுமாம் போர் முடிந்ததும் அவரவர் கூடாரம் சென்று விடுவார்களாம். ஒருவரைத் தாக்கும் போது அவருக்குத் தெரியாமல் பின்னிருந்த தாக்க மாட்டார்களாம் இது போன்ற சில வரை முறைகளை யுத்த தர்மம் என்றனர். ஆனால் அபிமன்யு வியூகத்தைப் பிளந்து உள்ளே வந்து போரில் எல்லோரையும் தோற்கடித்துக் கொண்டிருந்தான். பலராலும் அவனை வெல்ல முடியவில்லை. ஆகவே போர்த் தளபதி யுத்த தர்மத்தை மீறிய சில செயல்களைச் செய்ய உத்தரவிடுகிறார். அதன் படி அவனறியாமல் அவன் பின்னிருந்து அவனது வில்லை முறித்தல் தேரோட்டியைக் கொல்லுதல் குதிரைகளைக் கொல்லுதல் பிறகு அவனை நிராயுதபாணியாக்கி பலரும் சேர்ந்து அவனைக் கொல்கிறார்கள். இராமாயணத்தில் இராமன் இராவணனிடம் அவனது ஆயுதங்களை இழந்து நின்றபோது “இன்று போய் நாளை வா “என்றானாம் அதெல்லாம் யுத்த தர்மத்தினுள்வருபவை . அதுவே இன்றைய நாட்களில் all is fair in love and waar எனும் நிலைமை இருப்பது நினைவு கூர்ந்து எழுதி இருந்தேன் அது ஒரு ஒப்பீடே.

    ReplyDelete

  36. @ பாலகணேஷ்
    மஹாபாரதக் கதை பலருக்கும் தெரிந்ததே. அதனில் வரும் கதாபாத்திரங்கள் பற்றி எழுதுகிறேன் . உங்கள் ஊக்கமும் ஆதரவும் என்னை எழுதச் செய்கிறது வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  37. எங்களை போருக்கு அழைத்துச் சென்றமைக்கு மனமார்ந்த நன்றி. படிக்கும்போது களத்திற்கு சென்ற உணர்வே இருந்தது.

    ReplyDelete
  38. ஜயத்ரதன் பற்றி சில விஷயங்கள் படித்ததுண்டு. இன்று விரிவாக உங்கள் பக்கத்தில் படித்து தெரிந்து கொண்டேன்.

    தொடரட்டும் மஹாபாரதக் கதைகள்.

    ReplyDelete

  39. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    உங்களை போருக்கு அழைத்துச் சென்றிருந்தால் “போர் “ அடித்திருக்கும் நான் வெறுமே தொட்டே சென்றிருக்கிறேன் வருகைக்கு நன்றி

    ReplyDelete

  40. @ வெங்கட் நாகராஜ்
    மஹாபாரதக் கதையில் வரும் பாத்திரங்கள் மிக அதிகம் டீடெயிலாக எல்லோர் பற்றியும் தெரிந்திருப்பது கடினம் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.

    ReplyDelete
  41. வெகு ச்வரச்யமாக உங்கள் எழுத்து உள்ளது. இன்னும் பல காரக்டர்கல் மகாபாரத்தில் உள்ளது. அவையும் எழுதுவீர்கள் என எதிர்பார்கிறேன். நன்றி.கருணாகரன்

    ReplyDelete
  42. ரெட்டை சூரியாஸ்தமனம்....ஆஹா....

    ஒருமுறை எனக்கு ரெட்டை நிலவு கிடைத்தது.

    எப்படி என்று இன்னமும் விளங்கலை.

    நான் ஒன்னுமே செய்யலை, ஜஸ்ட் க்ளிக் க்ளிக்தான்!

    http://thulasidhalam.blogspot.co.nz/2013/06/blog-post_24.html

    ReplyDelete