வியாழன், 20 மார்ச், 2014

மும்பை ( பாம்பே ) நினைவுச் சிதறல்கள்


               மும்பை ( பாம்பே ) நினைவுச் சிதறல்கள்
                ------------------------------------------------------------



நான் முதன் முதல் பாம்பே சென்றது அம்பர்நாத்தில் பயிற்சியில் இருந்தபோதுதான் (1957-ம் ஆண்டு வாக்கில் )என் மாமா ஒருவர் மாதுங்கா அருகே  (கோலிவாடா என்று நினைக்கிறேன்) வசித்து வந்தார். அப்போது ட்ராம் சேவை இருந்தது. மாதுங்காவில் இறங்கி ஒருவர் தமிழ்நாட்டு அந்தணர் போல் இருந்தார். எனக்கு இந்தி தெரியாததால் என் மாமாவின் விலாசம் கொடுத்து வழி கேட்டேன். அவர் என்னை மேலும்கீழுமாகப் பார்த்து இந்தியில் மாலும் நஹி என்று சொல்லிச் சென்றார்...!

அடுதத முறை எனக்குப் பல் வலி இருந்ததால் என்னை பாம்பேயில் மருத்துவ மனைக்கு ரெஃபெர் செய்திருந்தார்கள்மருத்துவமனை பெயர் ( kem ஹாஸ்பிடல் என்று நினைக்கிறேன்) சரியாக நினைவில்லை பல் மருத்துவரிடம் போனேன். பல்லைப் பிடுங்க வேண்டும் என்றார்கள். நான் எப்போது வரவேண்டும் என்று கேட்டேன். இப்போதே எடுத்துவிடலாம் என்று சொன்னார்கள். பல்லைப் பிடுங்க ஒரு ஆசனத்தில் அமர்த்தப் பட்டேன். என் கண்களையும் மனதையும் கட்டிப்போடும்படியான ஒரு பெண் டாக்டர் என் பல்லை எடுக்க வந்தார். நான் அவரது அழகில் மயங்கி பல் எடுத்ததுதெரியாமல் அங்கேயே வீற்றிருந்தேன்....!

என் சின்ன அண்ணா நேவியில் இருந்தார். அவர் கொலாபாவில் ஒரு நண்பர் வீட்டில் தங்கி இருந்தார். நானும் அங்கு தீபாவளிக்கு முதல் நாள் சென்றேன் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒற்றை அறையில் இருந்தார் அவரது நண்பர் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடினேன்வீதிக்கே வராமல் மாடியின் வெராந்தாவில் இருந்தே பட்டாசுகளும் புஸ் வாணங்களும் கொளுத்தியது காணஎனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது என் அண்ணாபணியாற்றிக் கொண்டிருந்த INS  TIR என்னும் போர்க்கப்பலுக்கு அழைத்துச் சென்று என்னை அவரது அதிகாரிகளுக்கும் நண்பர்களுக்கும் அறிமுகப் படுத்தினார் இந்தியப் போர்க் கப்பலைப் பார்த்த அனுபவம் புதிது பிறிதொரு முறை அவருக்குக் குடலில் புண்ணாகி இருந்ததால் அறுவைச்சிகிச்சைமுடிந்து நேவல் ஆஸ்பத்திரியில் இருந்தார்.சென்று பார்த்தபோது தாகம் எடுத்து நீருக்காக அவர் வேண்டிக் கொண்டபோது அங்கிருந்த செவிலியர் பஞ்சில் நீரை நனைத்து அவர் உதடு ஈரமாக இருக்கச் செய்வது கண்டு வருத்தமாக இருந்தது. அவர் ஒரு சாப்பாட்டுப் பிரியர் நன்றாக நிறையச் சாப்பிடுவார் அவரது குடலில் பாதியை எடுத்தும் இவ்வளவு சாப்பிடுபவர் முழுக்குடலும் இருந்தால் எவ்வளவு சாப்பிடுவார் என்று அவரைப் பற்றி கேலியாகப் பேசுவது உண்டு

அம்பர்நாத்திலிருந்து நண்பர்கள் சிலர் எலிபண்டா கேவ்ஸ் பார்க்கத் திட்டமிட்டனர். அதிகாலை ரயிலைப் பிடித்து பாம்பே போய் கேட்வே ஆஃப் இந்தியாவிலிருந்து போகும் படகுகளில் போய் வருவதாகத் திட்டம் . ஒரு பிக்னிக் போகிறோம் அங்கு போய் சாப்பிட விடுதியில் இருந்து ஏராளமான முட்டைகள் உபயோகித்து நிறையவே ஆம்லெட்டுகள் தயார் செய்து பாம்பே போய்ச் சேர்ந்தால் அங்கிருந்து செல்லும் கடைசி விசைப் படகும் சென்று விட்டிருந்தது. கையால் துழாவும் படகுகளில் போக பயம் உடனே திட்டத்தை மாற்றி பாம்பேயில் இருக்கும் போரிவில்லி நேஷனல் பார்க்குக்குச் செல்ல முடிவெடுத்தோம். எதிர்பாராத பிக்னிக் அது. இத்தனை முறை பாம்பே சென்றிருந்தும் எலிஃபண்டா குகை பார்த்ததில்லை( எலிஃபண்டா குகைப் படங்கள் கூகுளார் தயவ)ு

from google images

from google images
.
ஒரு குடியரசு தினத்தன்று விக்டோரியா டெர்மினஸிலிருந்து ஜனவெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டதும் வீதியெங்கும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருந்ததைக் கண்டதும் மறக்க முடியாத அனுபவம்
.
1974 என்று நினைவு பணி நிமித்தம் போபால் பிஎச்இஎல்சென்றிருந்தேன் நாங்கள் அவர்களிடm செய்யக் கொடுத்திருந்த பாகங்கள் தரமானதாக இருக்கிறதா என்று சோதிக்கவும் இன்னும் என்னென வசதிகள் அங்கிருக்கின்றன என்று அறிவதும் என் வேலை அங்கு பணி முடியும் தருவாயில் எனக்கு அங்கிருந்து ட்ராம்பேயில் பாபா அடாமிக் ரிசர்ச் செண்டருக்குச் செல்லவும் மற்றும் L&T சென்று வசதிகளைப் பார்க்கவும் உத்தரவு வந்தது. திருச்சியில் இருந்து புறப்படும்போது போபால் சென்று வரவே அட்வான்ஸ் வாங்கி இருந்தேன் ட்ராம்பே சென்று வர பணம் போதாது. போபால் BHEL –எனக்கு அட்வான்ஸ் தர ரூல் இல்லையென்று கூறிவிட்டார்கள். எப்படியும் பாம்பே போய் அங்குள்ள ரீஜினல் ஆஃபீசில் பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று பாம்பே போனேன்பாம்பே ரீஜினல் ஆஃபீசில் எனக்கு ஒரு வேலை கொடுத்தார்கள். அவர்களுக்காக ஒரு கன்சைன்மெண்டை நான் சென்னை வரை கொண்டு செல்ல வேண்டும் என்றார்கள்.கன்சைன்மெண்டின் எடை 500 கிலோவுக்கும் மேல் ரெயிலில் ஏற்றிவிட அவர்கள் உதவுவதாகவும் அதை சென்னையில் இறக்கி அங்கு வருபவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார்கள் எனக்கு வேறு வழி இல்லாததால் அந்தப் பணியை செய்யஒப்புக்கொண்டு அட்வான்ஸ் பணம் பெற்றேன்  டாம்பே அடாமிக்ரிசர்ச் செண்டரில் என் தாய் மாமா டிசைன் எஞ்சினீயராகப் பணியில் இருந்தார். அவரிடம் நான் அங்கு ஒரு மீட்டிங்க்குக்காக வருகிறேன் என்று தகவல் அனுப்பினேன். அது சிடி லிமிட்டிலிருந்து வெகு தூரத்தில் இருந்தது . உள்ளே போக அனுமதிக்கு கெடுபிடி அதிகம் என் மாமாவுக்கு ஒரே ஆச்சரியம் BHEL கம்பனியை ரெப்ரெசெண்ட் செய்யும் அளவுக்கு நான் வளர்ந்து விட்டேன் என்று. நான் வந்த வேலை முடிந்ததும் என்னை அவர்கள் ஜீப்பிலேயே நகரத்துக்கு அருகாமை வரை கொண்டுவிடச் செய்தார். அதுவரை குடும்பத்தில் எங்களை மதிப்பவர் என்று யாருமிருந்ததில்லை. அந்த பாம்பே விஜயம் எனக்கு ஒரு அந்தஸ்தைக் கொடுத்தது.

அப்போது பாம்பேயில் நான் ஏமாற்றப்பட்ட செய்தியும்சொல்லியாக வேண்டும்  வீதியில் போய்க் கொண்டிருந்தபோது ஒருவர் இறக்குமதி செய்யப்பட்ட டெரிலின் பாண்ட் துணி என்று விற்றுக்கொண்டிருந்தார். அசல் டெரிலின் என்றும் அதை நிரூபிக்க அதிலிருந்து சில இழைகளை எடுத்து நெருப்புப் பற்ற வைத்தார். அசல் டெரிலின் துணியில் நெருப்பு பற்றினால் எந்த residue வும் இல்லாமல் போகுமென்று சொன்னார். அதைக் கண்டதும் ஓரிருவர் இரண்டு மூன்று பிட்டுக்களை வாங்கிப் போனார்கள். நானும் விலை சலிசாய் இருந்ததென்று இரண்டு பாண்ட் பிட்டுகள் வாங்கினேன். திருச்சி திரும்பியதும் அதை டெய்லரிடம் தைக்கச் சொன்னபோது அவர் நான் நன்றாக ஏமாந்து போய் விட்டதாகக் கூறி அதைத் தைப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை என்றார். அந்தத் துணியை நீரில் இட்டு எடுத்தால் எல்லாம் சுருங்கி ஏதோ வியாதியுடையவர் தோல் போல் இருந்தது.

அடுத்த முறை நான் மும்பை சென்றது உறவினர் வீட்டுத் திருமணத்துக்கு. அவர்கள் வீடு உல்லாஸ் நகரிலிருந்தது,. திருமணம் மும்பையில்.. மும்பையில்  என் இரு தாய்மாமன்களுக்கும்  தகவல் அளித்தேன். மும்பையில் இரண்டு நாட்கள் தங்கி என் மனைவிக்கு ஊரைச் சுற்றிக் காடட விருப்பம் என்றும் எழுதி இருந்தேன்.அவர்களும் எங்களை வரவேற்பதாகவும் பதில் அனுப்பி இருந்தார்கள். உல்லாஸ் நகரில் இருந்து பெண்வீட்டார் ஏற்பாடு செய்திருந்த பேரூந்தில் பயணித்து மாதுங்கா ( என்று நினைவு) சென்றடைந்தோம் . திருமண நிகழ்வுகள் நன்றாக நடந்தேறியது. அப்போது என்னைக் காண ஒருவர் வந்திருப்பதாகச்செய்தி கிடைத்தது. வந்து பார்த்தால் என் தாய் மாமா. பரவாயில்லையே திருமணச் சத்திரம் வந்து எங்களைக் கூட்டிப்போக வந்திருக்கிறார் என்று நினைத்து மகிழ்ந்து அவரையும் திருமண விருந்தில் பங்கேற்கச் செய்தேன். உணவு முடிந்ததும் அவர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அவருக்கு எதிர்பாராத விருந்தாளிகள் வந்து விட்டதால் எங்களை அவர் வீட்டுக்குக் கூட்டிச் செல்ல இயலாது என்றார். மும்பையில் இரு தினங்கள் தங்கிச் செல்லவும் அது முடிந்த பின்னரே பெங்களூர் திரும்ப ரயில் பயணத்துக்கு முன் பதிவு செய்திருந்தோம். மும்பை மாதிரியான பெரிய நகரில் ஓட்டலில் அறை எடுத்துத் தங்குவது எதிர்பார்க்காதது. எங்கள் நிலைமை தெரிந்த உறவினர் அந்தேரியில் அவர் வீட்டில் நாங்கள் தங்கிச் செல்லலாம் என்று கூறி ஆறுதல் அளித்தார். பிறகென்ன..? அதற்கு மறுநாள் ஒரு டாக்சி பேசி என் மனைவிக்கு மும்பையின்  பல முக்கிய பகுதிகளைக் காட்டினேன்

அதற்கு அடுத்தமுறை சென்றது, என் மகன் மும்பையில் பணிமாற்றம் ஆகி சாந்தாக்ரூசில் இருந்தபோது  என் பேரனை ஒரு பள்ளியில் ( பொத்தார் ஸ்கூல் என்று நினைவு) சேர்த்திருந்தார்கள். அவனுடன் சில நாட்கள் மும்பையில்  இருந்தோம். நல்ல மழைக்காலம் சாலையெல்லாம் கால்முட்டு அளவுக்கு நீரோடும் அதில் பிள்ளைகள் விளையாடுவது பார்த்தது புதிய அனுபவம் அங்கிருந்து உல்லாஸ்நகருக்கு மின்சார ரயிலில் டிக்கெட் வாங்கி  எல்லோரும் ஒரே பெட்டியில் ஏறமுடியாமல் இரண்டு மூன்று ரயில்களைக் கோட்டை விட்டபின் ஒரு டாக்சி அமைத்து ஊரெல்லாம் சுற்றிப் போனதும் நினைவுக்கு வருகிறது எங்களை முதலில் வரவேற்க இயலாத மாமாவின் வீடு அருகிலிருந்தது. அவர் எங்களை அங்கிருந்த இஸ்கான் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். என் பேரனின் பிற்ந்த நாளுக்கு வர வேண்டும் என்ற என் விருப்பப்படி வந்த பாபா அடாமிக் ரிசர்ச் செண்டரில் இருந்த மாமா என் பேரனின் ஆண்டு நிறைவு என்று எண்ணியதாகவும் பள்ளிக்குச் செல்லும் சிறுவனை எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார்
.
மும்பை என்று சொன்னால்  மேலே கூறிய பல நினைவுகளும் வந்து மோதும். அங்கு மஹாலக்ஷ்மி கோவில் சித்தி விநாயகர் கோவில் மரீன் ட்ரைவ். ம்யூசியம் கேட் வே ஆஃப் இந்தியா என்று பல இடங்களுக்கும் போய் வந்தோம். சௌபாத்தி பீச், ஜுஹு பீச்  இவற்றை காணும்போது என்னவோ கடலோரத்தில் மணலைக் கொட்டி வைத்திருப்பதுபோல் உணர்ந்தோம் சென்னை மெரினா பீச்சுக்கு ஈடாகாது.

31 கருத்துகள்:

  1. உங்கள் பதிவைப் படித்ததும், பலமுறை மும்பை சென்றிருந்தாலும் நானும் எலிபெண்டா குகையை பார்க்க இயலவில்லை என்பது நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  2. முப்மை பயண அனுபவர்கள் அருமை ஐயா.
    நினைவுகள் என்றுமே இனிமையானவை

    பதிலளிநீக்கு
  3. அம்பர் நாத்தில் ஓர் புராதனமான கோவில் இருக்குமே!

    பதிலளிநீக்கு
  4. மூன்று பதிவுகள் எழுதக் கூடியதை ஒரே பதிவில் சுருக்கி எழுதி விட்டீர்கள். என்ன திடீரென்று மும்பை நினைவு?

    பதிலளிநீக்கு
  5. மலரும் நினைவுகள் என்றும் இனிமையானவை!..

    பதிலளிநீக்கு
  6. மும்பையில் இருமுறை சுமார் ஐந்தாண்டுகள் பணியாறியும் நானும் இதுவரை எலிஃபென்டா குகைகளை பார்த்ததில்லை. உங்கள் தயவிலும் கூகுளார் தயவிலும் புகைப்படங்களையாவது பார்க்க முடிந்தது. சாதாரணமாகவே நான் இடங்களைச் சுற்றிப் பார்க்க விரும்புவதில்லை. சோம்பலும், கூட்ட நெரிசல் இருக்குமே என்ற எண்ணமும்தான் இதற்குக் காரணம். தமிழ்நாட்டிலேயே பல இடங்களில் பணியாற்றியும் பல சுற்றுலா இடங்களை நான் இதுவரை பார்த்ததில்லை குற்றாலம் உட்பட. இத்தனைக்கும் தூத்துக்குடியில் கூட மூன்று வருடம் பணியாற்றியுள்ளேன்.

    பதிலளிநீக்கு

  7. @ வே.நடனசபாபதி
    நாங்கள் திருச்சியில் பல ஆண்டுகள் வசித்திருந்தும் ஒரே ஒரு முறைதான் வைகுண்ட ஏகாதசி அன்று ஸ்ரீரங்கம் சென்றிருக்கிறோம் அதுவும் உறவினர்கள் சிலரை கூட்டிக் கொண்டு போகும் சாக்கில் நீங்கள் எல்ஃபண்டா குகை காணச் சென்றதில்லை என்றதும் தோன்றியது. வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு

  8. @ கரந்தை ஜெயக்குமார்
    ஆம் பயணங்களும் அனுபவங்களும் நினைத்து மகிழ இனிமையானவையே. பருகைக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு

  9. @ செல்லப்பா யக்ஞசாமி
    அம்பர்நாதில் இரண்டு வருடங்கள் இருந்திருக்கிறேன் அங்குள்ள புராதன சிவன் கோவில் பிரசித்தி பெற்றது.சிவ ராத்திரி விசேஷம்.தரையிலிருந்து சுமார் பத்தடி கீழே லிங்கம் இருக்கும். அம்பர்நாதில் வசிக்கும் திருமதி லக்ஷ்மி இப்போதெல்லாம் பதிவுப் பக்கமே காண்பதில்லை. அவரது வெளி நாட்டுப் பயணங்கள் குறித்து விலாவாரியாக எழுதுவார்கள். யாருக்காவது தொடர்பு இருக்கிறதா. பார்த்தீர்களா ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவுகிறது நினைவுகள். வருகைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  10. @ ஸ்ரீராம்
    /மூன்று பதிவுகள் எழுதக் கூடியதை ஒரே பதிவில் சுருக்கி எழுதி விட்டீர்கள். என்ன திடீரென்று மும்பை நினைவு/
    எழுத உட்காரும்போது நினைவுக்கு வந்தவை எல்லாம் பதிவாகிவிட்டது. காரணங்கள் சொல்லியா நினைவுகள் வருகின்றன. வருகைக்கு நன்றி ஸ்ரீ.

    பதிலளிநீக்கு

  11. @ துரை செல்வராஜு
    மலரும் நினைவுகள் என்றும் இனிமையானவை. நான் அப்படி நினைக்கவில்லை. இனிமையான நினைவுகளே பதிவாகின்றன என்று தோன்றுகிறது. வருகைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  12. @ டி.பி.ஆர் ஜோசப்
    அது பொதுவாக நிகழக் கூடியதுதான். அருகில் இருக்கும் நல்ல பல செய்திகளும் விஷயங்களும் கண்ணில் படாமல் போய்விடும். பிறிதொரு சமயம் பார்க்கலாம் என்றே தள்ளிப் போய்விடும். வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. சூப்பர் பதிவு.ரொம்பவே இயல்பான பதிவு.தங்களின் மும்பை அனுபவம் என்னையும் பழைய நாட்களுக்கு அழைத்துச் சென்றது.நான் எலிபெண்டா குகை போயிருக்கிறேன் ஆனால் காந்திவிலியில்
    ஜாகை செய்திருந்தாலும் போரிவிலி பார்க் பார்த்ததில்லை .

    பதிலளிநீக்கு
  14. அருமையான நினைவுகள். நான் பாபா ஆடாமிக் ஆராய்ச்சி நிலையத்தில் இரண்டு வாரம் ரேடியேஷன் பாதுகாப்பு பற்றிய பயிற்சிக்கு போயிருக்கிறேன்.

    எலிபென்டா கேவ்ஸ் பார்த்த பிறகு அசோக் ஓட்டல் பார்த்தேன். அங்கு மகாராஜா அறை ஒன்று,தினத்திற்கு 10000 ரூபாய் என்று சொன்னார்கள். என் சொத்துக்களை எல்லாம் விற்றால் அன்றைக்கு ஒரு ஙட்சம் தேரும். அப்படி விற்று விட்டு அங்கு அந்த அறையில் பத்து நாட்கள் தங்கி விட்டு அப்படியே அரபிக்கடலில் விழுந்து விடுவது என்று முடிவு செய்தேன்.

    அந்த முடிவு இன்னும் பெண்டிங்காக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  15. நினைவுகள்.......

    ஒரே ஒரு முறை தான் மும்பை சென்றேன் - அலுவலக விஷயமாக - நாள் முழுவதும் Meeting.... காலை சென்று இரவே அங்கிருந்து கிளம்பினேன்! அதனால் ஒரு இடமும் சுற்றிப் பார்க்கவில்லை.... :(

    பதிலளிநீக்கு
  16. மும்பை நினைவலைகள் ரசிக்கவைத்தது..

    எலிஃபண்டா குகை சென்றோம்.. அற்புதமான படைப்புகள்..

    மும்பை கடற்கரைகள் ஏமாற்றம் அளித்தன..

    இந்த பீச்சில் போய் அப்படி சந்தோஷமாக பாட்டெல்லாம் பாடவேண்டுமானால் எத்தனை சகிப்புத்தன்மை வேண்டும் என பேசிக்கொண்டோம்..!

    பதிலளிநீக்கு
  17. ” மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்” என்ற பாடல் வரிகளை மாற்றி ” பம்பாய் நல்ல பம்பாய் “ என்று பாடத் தோன்றியது. அது ஒரு டெர்லின் காலம். இப்போது டெர்லின் துணியை யாரும் வாங்குவதில்லை.

    பதிலளிநீக்கு

  18. @ அபயா அருணா
    வருகைக்கு நன்றி./இயல்பான பதிவு/ பாராட்டுக்கு மீண்டும் நன்றி. நினைவுகள் அனைவருக்கும் வரும். ஆனால் முதிய வயதில் அநேகமாக நினைவுகளே வாழ்க்கையை ஆக்ரமித்துக் கொள்கிறது.

    பதிலளிநீக்கு

  19. @ டாக்டர் கந்தசாமி.
    உங்கள் பின்னூட்டம் எனக்கு இன்னொரு நிகழ்ச்சியை நினைவு படுத்தியது. அங்கும் இங்கும் சுற்றிக் களைப்பாகி ஒரு ஓட்டலுக்கு காஃபி அருந்தப் போனேன், நான் சென்றதும் வெயிட்டர் வந்து என்ன வேண்டும் என்றார். நான் காஃபி என்றேன். அரைமணிநேரம் கழித்து காலி கப் சாசர் வந்தது. இன்னும் சில நிமிடங்களுக்குப் பின் ஒருவர்காஃபி டிகாக்‌ஷன் ஒரு குவளையில் கொண்டு வந்து கப்பில் ஊற்றினார் பாலும் சர்க்கரையும் தனியாக வைத்தார். நான் ஒரு கப் காஃபி அருந்திய பிறகு பில்லுக்காகக் காத்திருந்தேன். வெயிட்டர் மீண்டும் வந்து எனி மோர் காஃபி என்று கேட்டார். நான் வேண்டாம் என்று சொன்னேன் . அவர் மறுபடி மறுபடி வந்து எனி மோர் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் நான் கடுப்பாகி பில் தர முடியுமா என்று கேட்டேன். அவர் என்னை ஒரு விதமாகப் பார்த்து சிறிது நேரத்தில் காகிஃப்க்கான பில்லைக் கொடுத்தார் எனக்கு மயக்கம் வராத குறைதான்..!

    பதிலளிநீக்கு

  20. @ வெங்கட் நாகராஜ்
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

  21. @ பானுமதி
    முதல் வருகைக்குநன்றி. திருச்சி பற்றி தனியாக எழுதாவிட்டாலும் பல்வேறு பதிவுகளில் திருச்சி நினைவுகளும் அனுபவங்களும் எழுதி இருக்கிறேன்

    பதிலளிநீக்கு

  22. @ இராஜராஜேஸ்வரி.
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

  23. @ தி, தமிழ் இளங்கோ
    /பம்பாய் நல்ல பம்பாய்/ என்று பாடத்தோன்றியது.
    மும்பையின் இன்னொரு முகம் கண்டு அரண்டு விட்டேன். பதிவிட முடியாதது வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  24. மும்பை பயண அனுபவங்கள் ருசிகரமாகவே இருக்கின்றன. எங்களோட முதல் மும்பைப்பயணம் பயங்கர சஸ்பென்ஸ், த்ரில்லிங்கான ஒன்று. :))) ஏற்கெனவே விபரமாக எழுதி இருக்கேன். :))))

    பதிலளிநீக்கு
  25. போரிவிலியிலேயே மைத்துனர் இருந்ததால் போரிவிலி நேஷனல் பார்க் பார்த்தோம். அங்கே சிங்கம் வழியிலே படுத்துக் கொண்டு எங்கள் வான் செல்ல வழி விடவே இல்லை. வெகு நேரம் காத்திருந்தோம். அப்புறமா வனத்துறை அலுவலருக்குத் தகவல் போய் அவங்க பட்டாசு வெடிச்சு சிங்கத்தை அப்புறப்படுத்தினாங்க. அது வரை திக், திக் தான். :))) எங்க பையருக்கு ஜுரமே வந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  26. எலிஃபென்டா கேவ்ஸ் நாங்களும் இன்னமும் பார்க்கவில்லை. பார்க்கணும்னு ஆசை இருக்கு! :))) மற்ற முக்கிய இடங்கள் மஹாலக்ஷ்மி கோயில், சித்திவிநாயகர் கோவில், கேட்வே ஆஃப் இந்தியா, கடற்கரை போன்றவை பார்த்திருக்கோம்.

    பதிலளிநீக்கு
  27. பொதுவாக மும்பை போன்ற பெரிய ஊர்களில் காஃபி ஆர்டர் பண்ணினால் ஒரு கப் காஃபினு சொல்வது நல்லது. இல்லைனா உங்களுக்குக் கொடுத்தாற்போல் பாட் காஃபி /பாட் டீ தான் கொடுப்பாங்க. அதிலே குறைந்த பக்ஷமாக நான்கு பேர் சாப்பிட முடியும். நாம் கேட்டுக்கணும். கப் காஃபி கிடைக்குமானு! ஷிர்டியில் கூட உட்லன்ட்ஸில் பாட் காஃபி தான் கொடுத்தாங்க. நாங்க இரண்டு பேருமாக மெதுவாகக் குடிச்சு வைச்சோம். :))))

    பதிலளிநீக்கு
  28. பெரிய ஹோட்டல்களில் எல்லாம் காஃபினு சொன்னாலே பாட் காஃபி தான்!

    பதிலளிநீக்கு

  29. @ கீதா சாம்பசிவம்.
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி /பெரிய ஹோட்டல்களில் எல்லாம் காஃபின்னு சொன்னாலே பாட் காஃபிதான்/ அந்த அனுபவங்கள் வாழ்க்கையின் முதல் படியில் இருந்தபோது நிகழ்ந்தது. அதற்குப் பிறகு நட்சத்திர ஹோட்டல் அனுபவங்கள் எல்லாம் பெற்றாய் விட்டது

    பதிலளிநீக்கு
  30. பல் டாக்டர் அனுபவத்தை படித்து விட்டு சிரித்து விட்டேன். பக்கத்துல வீட்டுக்கார அம்மா இல்லையா ஜி.எம்.பி. சார்? :))

    பல் டாக்டர் அனுபவத்தை படித்து விட்டு சிரித்து விட்டேன். பக்கத்துல வீட்டுக்கார அம்மா இல்லையா ஜி.எம்.பி. சார் :))

    பம்பாய் அனுபவங்கள் ருசிகரமாக உள்ளன.



    பதிலளிநீக்கு