திங்கள், 3 மார்ச், 2014

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே


               அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே  வந்ததே.......
                ---------------------------------------------------------



இவன் பயிற்சியில் சேர்ந்து பத்து மாதங்கள் ஆகியிருந்தது முதல் ஆறுமாதங்கள் கழிந்து மீதியுள்ள நாட்களை விடுதியில் தங்கித் தொடர வேண்டும் என்ற விதி
ஒரு நாள் அதிகாலைஎந்திரி, எந்திரி ஏந்திரிஎன்னும் வழக்கமான கூப்பாடுடன் வார்டன் இவனது  அறைக் கதவைத் தட்டினார். காலையில் எழுப்பி காலைக்கடன்களை முடித்ததும் உடற்பயிற்சிக்குச் செல்ல வேண்டும் பின் காலை உணவுக்குப்பின் தொழிற்சாலைக்குச் சென்று ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு இடத்துக்குச் சென்று பயிற்சியில் ஈடுபடவேண்டும் இந்த மாதிரிப் பயிற்சியில் தொழிற்சாலையில் அநேகமாக எல்லா இடங்களிலும் என்ன செய்கிறார்கள் என்னும் ஐடியா கிடைக்கும்.
அன்றைக்கு இவன் மனசே சரியாக இருக்கவில்லை. இன்னும் இரண்டு வருடங்களுக்கு மேல் பயிற்சிக்காலம் பாக்கி இருந்தது. நாட்கள் ஆமை வேகத்தில் கழிவது போல் தோன்றிக் கொண்டிருந்தது. இந்தப் பயிற்சிக்காலம் முடிந்து எல்லாத் தேர்வுகளும் முடிந்து பணிக்கு அமர்த்தப் படும் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தான் இவன்.  இவனுடன் பயிற்சியில் இருந்த அனைவரையும் மேலாளர் அழைத்தார். பயிற்சி முடிந்தால் உங்களைப் பணிக்கு அமர்த்தும் போது உங்களுக்கு என்ன சம்பளம் கிடைக்கும் தெரியுமா.?
“தெரியும் சார்....நாளொன்றுக்கு  ஒரு ரூபாய் பத்தணா ப்லஸ் அலவன்ஸ் “என்று கோரசாகப் பதில் சென்றது
பயிற்சி முடிந்து மெகானிக் வேலையில் அமர்வீர்கள் இல்லையா ? ஆனால் இதைவிட நல்ல பயிற்சி கொடுத்து சூபர்வைசராக வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும் . கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்என்றார்
அங்கிருந்த சுமார் எண்பது பேர்களும் கலர் கலராக விழித்துக் கொண்டே கனவு காண ஆரம்பித்தார்கள், இவன் உட்பட.
“ஆனால்.....மேலாளரின் இந்த இழுப்பு எல்லோரையும் இவ்வுலகிற்கு அழைத்து வந்தது “ இந்த வாய்ப்பு உங்களில் பனிரெண்டு பேருக்கே கிடைக்கும் உங்கள் அனைவரையும் பலவித தேர்வுக்கு உட்படுத்துவோம் பிறகு உங்களில் பன்னிரெண்டு பேர்கள் தேர்வு செய்யப்பட்டு சூபர்வைசர் பொறுப்புக்கு பயிற்சி பெற அம்பர்நாத்துக்கு அனுப்பப் படுவீர்கள் தயாரா.?என்றார். பலரது ஆர்வமும் பொங்கி வரும் பாலில் நீர் விட்டது போல் அடங்கி விட்டது. ஆணைக்கு உட்பட்டுத்தானே ஆக வேண்டும். வேறு வழி.?ஆக ஒரு சுப முகூர்த்த நாளில் அனைவரும் தேர்வுக்கு உட்படுத்தப் பட்டனர். பொறி இயலில் ட்ராயிங். கணக்கு. என்று பலவித தேர்வுகளுடன் ப்ராக்டிகல் என்னும் தேர்வும் நடந்தது தேர்வில் வெற்றி பெற்று அம்பர்நாத்துக்கு அனுப்பப் பட்டு இரண்டு ஆண்டுகள் கழிந்து வெற்றியுடன் திரும்பினால் சூபர்வைசராக வேலை. அப்போது தொழிற்சாலைக்குள் நுழைய சில்வர் பாட்ஜ் கிடைக்கும் மெயின் கேட்டில் செல்லலாம். வருகையைப் பதிவு செய்ய அட்டையில் நேரம் குறிக்கும் மெஷினில் “தண்என்று தட்ட வேண்டாம். மெகானிக்காகவே பயிற்சிமுடித்தால் சூபர் வைசர் ஆக குறைந்தது பனிரெண்டு ஆண்டுகளாவது ஆகும். தேர்வு செய்யப் பட்டால் அது ஒரு பெரிய வாய்ப்பாக அமையும் இதையெல்லாம் அந்த வார இறுதி நாளில் வீட்டுக்குச் செல்லும் போது அப்பாவுக்குச் சொல்ல வேண்டும் . அவரும் மகிழ்வார்  இருந்தாலும் தேர்வு ஆக வேண்டுமே...
இரு தினங்களுக்குப் பின் மீண்டும் அனைவரும் அழைக்கப் பட்டனர். மனம் திக், திக் “என்று அடிக்கும் சப்தம் அந்த நிசப்தமான அறையில் எங்கும் கேட்டிருக்கும். மேலாளர் “ நான் குறிப்பிடும் சிலர் முன் வந்து நான் சொல்லும்படி இட பாகத்திலோ வல பாகத்திலோ நிற்கவேண்டும் “என்றார். பூரண அமைதியான அந்த சந்தர்ப்பத்தில் என்ன சொல்லப் போகிறார். யார் யார் தேர்வு செய்யப் படுவார்கள் என்னும் எண்ணங்களின் நடுவே அனைவரும் காத்திருந்தனர். முதல் பெயரை அழைத்து வலது பக்கத்தில் நிற்கச் சொன்னார் அடுத்து இரண்டு மூன்று என்று கூப்பிடக் கூப்பிட  இவனுக்கு நெஞ்சே வாய்க்குள் வந்து விடும் போலிருந்தது . ஆறாவதாக இவன் பெயர் வாசிக்கப் பட்டது .ஆனால் இவனை இடப் பக்கம் நிற்கச் சொன்னார் அதேபோல் பனிரெண்டு பெயரும் வாசிக்கப் பட்டு ஒன்பது பேர் வலப் பக்கமும் மூன்று பேர் இடப் பக்கமும் நிறுத்தப் பட்டனர் இத்ற்குள் மீதி இருந்தவர்கள் முகங்கள் களை இழந்து போய் இருந்தது.
இந்த இடப் பக்கம் வலப் பக்க நிற்க வைக்கப் பட்டவர்கள் அடுத்து என்ன செய்தி என்றூ ஆவலுடன் இருந்தனர். முன்பே பனிரெண்டு பேர் தேர்வு செய்யப் படுவார்கள் என்று தெரிந்து இருந்ததால் தேர்வு ஆகிவிட்டோம் என்னும் மகிழ்ச்சி இருந்தாலும் இந்த இட வல வேறுபாடு எதைக் குறிக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆவல் மிகுந்திருந்தது இடப்பக்கத்தில் இருந்த மூவரும் ப்ரொவிஷனலி தேர்வு செய்யப் பட்டதாகச் சொன்னார். இவனை அழைத்து உன் பேச்சைக் குறைக்க வேண்டும். முந்திரிக் கொட்டை மாதிரி எங்கும் எதிலும் மூக்கை நுழைக்கக் கூடாது  ஒரு வார கால அவகாசம் “ என்று எச்சரித்தார் இருந்தாலும் இன்றுவரை இவனது அந்த முனைப்பு குறைந்துள்ளதா என்பது கேள்விக்குறியே. மற்ற இருவரும் அவர்களது குறைகள் எடுத்துக் கூரப்பட்டு எச்சரிக்கப் பட்டனர். தேர்வு ஆன பனிரெண்டு பேரும் cloud nine –ல் மிதந்தனர்.
அச்சமயம் இவனுடைய தந்தையார் உடல் நலக் குறைவால் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டிருந்தார். அந்த வார இறுதியில் ( வார இறுதியில் வீட்டுக்குச் செல்லலாம் )மருத்துவ மனையில் தந்தையைப் பார்த்து இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொண்டான் . தந்தையும் இவன் வாழ்வில் இன்னும் பல வெற்றிகள் பெற்று முன்னுக்குவர வாழ்த்தினார். ஒரு கொசுவலையும் காலுக்கு நல்ல ஷூவும் வாங்க வேண்டும் என்றார் அதற்கான  ஏற்பாடாக அம்மாவிடம் பணம் கொடுக்கச் சொன்னார்.

இராண்டு நாட்கள் கழிந்திருக்கும் . இவன் பயிற்சியில் இருக்கும் போது மேலாளர் அழைப்பதாகச் செய்தி வந்தது. என்ன சொல்லப் போகிறாரோ ஒரு வேளை தேர்வு ஆகவில்லை என்று கூறுவாரோ என்ற பயத்துடன் அவரது அலுவலக அறையில் இவன் நுழைந்தான். என்றும் இல்லாமல் இவனை அவர்முன் அமரச் சொன்னார். இவன் குடும்பம் தந்தை பற்றியெல்லாம் விசாரித்தார். தந்தை மருத்துவ மனையில் இருப்பதாக இவன் கூறியதும் அவரை எப்போது பார்த்தான் என்று கேட்டார். “ உன் தந்தையின் நிலை சற்று கவலைக்கிடம்  நீ உடனே போய்ப் பார் “ என்றார். ஒரு வினாடி இந்த உலகமே சுழல்வது போல் தோன்றியது இவனுக்கு. வெளியே செல்ல எத்தனித்தவனிடம் “ மருத்துவ மனைக்குப் போகாதே . அவரது உடல் வீட்டுக்கு எடுத்துச் செல்லப் பட்டு விட்டது “ என்றார் அந்த நாள் 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் தேதி.

என் தந்தையார் G.S.Mahadevan


17 கருத்துகள்:

  1. எத்தனை ஆண்டுகள் சென்றாலும் தந்தையின் இழப்பின் வலி மறையாதே..!

    பதிலளிநீக்கு
  2. தந்தையின் நினைவு நாளா? வலிமிகுந்த நினைவுகளாயிருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. ஆண்டுகள் எத்தனைக் கடந்தால் என்ன?
    அதன் வலி குறையாதல்லவா?

    பதிலளிநீக்கு
  4. சுருக்கென்று தைக்கிற மாதிரி ஒரு பதிவு.
    ஆறுதலடைய எத்த்னை வருடங்களாயின?

    நெகிழ்ச்சியான நினைவு.

    பதிலளிநீக்கு
  5. தந்தையின் நினைவு நாளில் மனமுருக எழுதிய உங்கள் நினைவுக் குறிப்பு நெஞ்சில் சுருக்கென தைக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. கண்களை பணிக்கவைத்த பதிவு. அருமையாக உணர்வுபூர்வமாக எழுதியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  7. மார்ச்,2,1957 - 57 வருடங்கள் ஓடி விட்டன. மறக்க முடியாத நாள்தான்!

    பதிலளிநீக்கு
  8. நல்ல ஞாபக சக்திதான் தங்களுக்கு!

    பதிலளிநீக்கு

  9. வருகை தந்து கருத்திட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். அவரது இழப்பு என்னில் உள்ள உறுதியை நிலை நாட்டவும் எதையும் எதிர் கொள்ளும் துணிவையும் பெற்றுத்தந்தது என்னை நானே உணர அந்த இழப்பு தேவையாய் இருந்தது போலும்.

    பதிலளிநீக்கு
  10. தந்தையாரைப் பற்றிய நினைவுகள் மனம் நெகிழச் செய்வதாய்...

    பதிலளிநீக்கு
  11. தங்களது தந்தையின் நினைவலைகள் மனம் கணக்க செய்தது ஐயா.

    பதிலளிநீக்கு