Sunday, June 17, 2012

நேர் காணல்........


                                                    நேர் காணல்.......
                                                      ---------------- 


சில பிரபலங்களை சந்திக்கும்போது பேட்டிக்காக காணும் நேர்காணல் பற்றியது அல்ல இப்பதிவு. வேலை வேண்டி மனு செய்திருந்து அவர்களிடம் இருந்து அழைப்பு வந்து அவர்கள் மனுதாரரிடம் அவரை தேர்வு செய்யவா வேண்டாமா என்று சோதித்து அறிய நடத்தும் நேர்காணல் பற்றிய சில அனுபவ டிப்ஸ்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

மனு செய்யும் விதமே இப்போது முற்றிலும் மாறியிருக்கிறது. அந்தக் காலத்தில் மனு செய்பவர் தங்கள் குடும்ப சூழ்நிலையை விளக்கி, இவர் வேண்டும் அந்த வேலை எவ்வளவு முக்கியமானது என்று கண்ணீர் வருத்தாத குறையாக எழுதி கடைசியில் “ I WILL TRY MY LEVEL BEST TO SATISFY MY SUPERIORS AND REMAIN FAITHFUL FOR EVER “ என்று முடிப்பார்கள். இப்போதெல்லாம் அவரவர் தகுதிகளைக் கூறி RESUME என்ற பெயரில் ஒரு அல்லது சில தாள்களை அனுப்புகிறார்கள் அல்லது மின் அஞ்சல் செய்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் தேர்வு செய்பவர் ஒரு நேர்காண்ல் அல்லது க்ரூப் டிஸ்கஷன் மூலமே தேர்வு செய்கிறார்கள். நேர்காணலுக்குச் செல்லும்போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்து நிறையவே கைடன்ஸ் புத்தகங்கள் அல்லது குறிப்புகள் வந்திருக்கின்றன


நேர்காணலுக்குச் செல்பவர்களை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். முதன் முதலில் வேலை தேடி செல்பவர் தன் இப்போதிருக்கும் நிலையை மேம்படுத்திக் கொள்ள செல்பவர் முதன் முதலில் வேலை தேடிச் செல்பவர் அதிகம் நெர்வஸாக இருக்க சாத்தியக் கூறுகள் அதிகம். நேர்காணலில் தங்கள் அறிவை சோதனை செய்கிறார்கள் என்று மட்டும் எண்ணக் கூடாது. கால்மணி முதல் அரை மணிக்குள் ஒருவரது அறிவை சோதித்து தெரிந்து கொள்ள முடியாது. அவர்கள் நோக்கமும் அதுவல்ல. உங்கள் அறிவை தெரியப் படுத்தும் சான்றிதழ்கள் அவர்களிடம் கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் ஆட்டிட்யூட்  மற்றும் பிறரை எப்படி எதிர் கொள்கிறீர்கள் என்பதை அறிய அவர்களது முயற்சியே. நேர்காணல். எந்த நிறுவனத்துக்கு வேலைக்கு மனு செய்திருக்கிறீர்களோ அந்த நிறுவனம் பற்றி சில விவரங்களாவது தெரிய வேண்டும். நான் முதன் முதலில் என் பதினேழாவது வயதில் பள்ளி இறுதி முடித்து HAL-ல் மெகானிக் பணிக்கான பயிற்சிக்குத் தேர்வு செய்ய நேர்காணலுக்கு அழைக்கப் பட்டிருந்தேன். நான் இருந்தது வெல்லிங்டனில். நேர்காணல் மதராசில். திரும்பி வருவதற்கான பணம் மட்டும்தான் என்னிடம் இருந்தது. ஆனால் உலகை வெல்லும் தைரியம் நிறையவே இருந்தது. நான் பட்ட பாடுகள் பற்றிக் கூறப் போவதில்லை. நேர்காணலுக்கு வந்திருந்தவர்களில் காலில் செருப்புடன் டை அணிந்து வந்தவன் நான் மட்டுமே. தமிழ்வழிக் கல்வியே படித்திருந்தாலும் ஆங்கிலத்தில் ஓரளவு சரளமாக என்னால் பேச முடிந்தது. என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றியும் கேட்டவர்கள் நான் காம்பொசிட் மாத்ஸ் படித்தவன் என்று தெரிந்து என் அறிவை சோதிக்க பித்தாகோரஸ் தீரம் பற்றிக் கேட்டார்கள். நான் தமிழ் வழிக்கல்வியில் படித்ததால் தமிழிலேயே பித்தாகோரஸ் தேற்றம் கூறினேன்.தமிழ்வழிக் கல்வி படித்தும் ஆங்கிலத்தில் என்னால் உரையாட முடிவது கண்டு அவர்கள் அதே தீரத்தை ஆங்கிலத்தில் சொல்ல முடியுமா என்று கேட்டார்கள். நான் ஒரு தாள் கேட்டு வாங்கி முடிந்தவரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறினேன். அவர்கள் அப்போதே கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். இதை எதற்கு கூறுகிறேன் என்றால் நாம் படிப்பது தேர்வில் பாஸ்செய்ய மட்டுமல்ல. படிப்பதைப் புரிந்து கொண்டால் அதை விளக்கவும் முடியும். என்ன.. என்னால் அது முடியும் என்ற நம்பிக்கை வேண்டும் அந்த நேர்காணலில் நான் தேர்வு பெற்றேன் என்று கூறவும் வேண்டுமா. ?

தேர்வுக்குச் செல்பவர்களுக்கு முக்கிய தேவை, நம்மால் முடியும் என்ற நம்பிக்கை. அதுவே ஓவர் கான்ஃபிடன்ஸாக மாறி விட்டால் சொதப்பலாகி விடும். அதற்கு என்னிடமிருந்தே ஒரு உதாரணம் கூறுகிறேன். நான் HAL-ல் வேலையிலிருக்கும்போது  மதராஸ் ப்ரேக்ஸ் இந்தியா நிறுவனத்துக்கு எஞ்சினீரிங் இன்ஸ்டரக்டர்ஸ் என்ற பணிக்காக வந்த விளம்பரம் கண்டு மனு செய்தேன். என் மனுவில் நான் பயிற்சியின்போது சென்ற இடங்களிலெல்லாம் தேர்ச்சி உள்ளவன் போல் எழுதி இருந்தேன். என்னை நேர்காணல் செய்ய வந்தவர் ஒரு ஆங்கிலேயர். என் மனுவைப் படித்த அவர் எனக்கு டூல் டிசைன் செய்ய வருமா என்று கேட்டார். இரண்டே வாரம் அங்கு பயிற்சியில் இருந்தவன் நான். டூல் டிசைன் என்றால் என்ன செய்கிறார்கள் என்று தெரியும் அவர் கார் எஞ்சினின் ஒரு பாகத்தைக் காட்டி அதற்கு என்னால் டூல் டிசைன் செய்ய முடியுமா என்று கேட்டார். நேர்காணல் நடக்கும் நேரத்தில் எந்தக் கொம்பனாலும் டூல் டிசைன் செய்ய முடியாது என்று எனக்குத் தெரியும். என்னை டிசைன் செய்யச் சொல்ல மாட்டார்கள் என்றும் தெரியும். ஆகவே வீராப்பாக என்னால் முடியும் என்றேன். எவ்வளவு நேரமாகும் என்றார்கள் நான் குத்து மதிப்பாக பதினாறு மணி நேரம் ஆகும் என்றேன். அந்த ஆங்கிலேயருக்கு நான் புருடா விடுகிறேன் என்று
நன்றாகத் தெரிந்து விட்டது. ஒரு வாரம் எடுத்துக் கொண்டாலும் என்னால் முடியாது என்று கூறியவர் முகம் சிவக்க எனக்கு எந்த பணியும் தர முடியாது என்று கூறினார். முகத்தில் அடித்தாற்போல் எந்த வேலையும் கிடையாது என்று சொன்னது எனக்கு பெருத்த அவமானமாக இருந்தது. நானும் என் பங்குக்கு எந்தப் பணியாவது கேட்டு நான் வரவில்லை, எஞ்சினீரிங்.இன்ஸ்ட்ரக்டர்  பதவிக்கு மட்டுமே மனு செய்திருந்தேன். அது மட்டும் இல்லை என்றுதான் அவர்கள் கூறலாம் என்று கோபமாகக் கூறி வெளியே வந்து விட்டேன். நேர்காணலில் தவறான அணுகு முறைக்கு இது ஒரு சாம்பிள்.

மைகோ MICO நிறுவனத்துக்கு ஒரு நேர்காணலுக்குச் சென்றிருந்தேன். மிகவும் மரியாதையுடன் வரவேற்றார்கள். ஒரு நாள் முழுவதும் தேர்வு. காலையில் ஒரு வினாத்தாளைக் கொடுத்து பதில் எழுதச் சொன்னார்கள். கொஞ்சம் டெக்னிகல் விஷயங்கள் பின் நிறையவே முதளாளி தொழிலாளி உறவு பற்றிய கேஸ் ஸ்டடீஸ். உதாரணத்துக்கு ஒன்று. ஒரு நிறுவனத்தில் இருக்கும் மேலாளர் வீட்டில் வேலை செய்யும் தோட்டக் காரனை அவர் தொழிற்சாலையில் வேலைக்கு அமர்த்துகிறார். மேலாளருக்கு வேண்டப் பட்டவன் என்ற காரணத்தால் ஒரு பகுதியின் மேற்பார்வையாளர் அந்த தோட்டக் காரனை தன் கீழ் பணியில் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் அதே காரணத்துக்காக இன்னொரு மேற்பார்வையாளர் அந்த தோட்டக் காரனை தன் கீழ் பணியில் அமர்த்தியதோடு மட்டுமல்லாமல் அவனுக்கு நிறையவே சலுகைகள் கொடுத்து ப்ரொமோஷனும் கொடுக்க ஏற்பாடு செய்கிறார். இந்த கால கட்டத்தில் மேலாளர்  ஓய்வு பெறுகிறார்.அதற்குப் பிறகு அந்த தோட்டக்காரனுக்கு எந்த சலுகையும் வழங்கப் படவில்லை. இரண்டாம் பதவி உயர்வும் தடுக்கப் படுகிறதுஅவன் இதை யூனியனிடம் முறையிட அந்தக் கேஸ் விசாரிக்க உங்களிடம் வருகிறது . நீங்கள் எப்படி பிரச்சனையைத் தீர்ப்பீர்கள்.?

மதியம் நேர்காணலில் கேள்வி பதில்களை அலசுகிறார்கள் கேள்வித்தாளில் இல்லாத கேள்வி ஒன்று. உன் பகுதியில் வேலை செய்யும் தொழிலாளி அரை நாள் லீவ் கேட்கிறான். நிலைமை உங்களால் லீவ் கொடுக்க முடியாத சூழ்நிலை.அந்தக் கோபத்தில் நீங்கள் ஒரு திருப்பத்தில் வரும் போது அந்த தொழிலாளி உங்களுக்குத் தெரியாமல் உங்களைத் தாக்குகிறான் நீங்கள் என்ன செய்வீர்கள்.?

எனக்கு ஒன்றும் புரியவில்லை. தாக்குதலுக்கு உள்ளான பிறகு  நான் என்ன செய்ய
 முடியும்.? நான் அவர்களிடம் சொன்னேன். எனக்கு இந்த மாதிரி பணி வேண்டாம். அடியும் உதையும் பெற எதிர்பார்க்கும் அந்த நிறுவனத்தை நான் நிராகரிக்கிறேன் என்று கூறி வந்து விட்டேன். ( அந்த காலகட்டத்தில் தொழிலாளர் பிரச்சனை உச்ச கட்டத்தில் இருந்து நாளொரு கலவரமும் கதவடைப்பும் நிகழ்ந்து கொண்டிருந்தது.)

விளம்பரங்கள் மூலம் தெரிய வந்து மனு செய்யும் காலம் மாறிக்கொண்டிருக்கிறதோ என்னும் சந்தேகம் எனக்கு வருகிறது. எந்தக் காலத்திலும் நேர்காணலுக்குச் செல்பவர் தன்னிடம் கேள்விகள் கேட்பவர் தன்னை சோதிக்க அல்ல, அவருக்கே தெரிந்து கொள்ள என்னும் எண்ணத்துடன் அணுகினால் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம். முன்பிருந்த மாதிரி ஒரே நிறுவனத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு பணி புரியும் காலம் மலை ஏறிவிட்டது. வேலைக்கு எடுத்துக் கொள்பவர்களும் வேலை தெரிந்தவர்களையே அதிகம் விரும்புகிறார்கள். இல்லையென்றால் அவர் வேலை கற்றுக் கொண்டுவிட்டுப் பிறகு வேறு நிறுவனத்துக்குப் பறந்து விடுகிறார். இண்டக்‌ஷன் லெவலில் சேர்ந்தால் வேலைகற்றும் கொள்ளலாம். நேரம் வரும்போது மாற்று வேலைக்கும் செல்லலாம்.    ,                            





11 comments:

  1. எனக்கு இந்த அனுபவம் கிட்டினதில்லை. நான் படித்து விட்டு வீட்டில் இருந்தேன். ஒரு மாதத்தில்அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர் வந்துவிட்டது. அந்தக்காலத்தில் விவசாயப் பட்டதாரிகளுக்கு அவ்வளவு டிமாண்ட்.

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள பகிர்வு .போகும் வேலைக்கான விவரம் பற்றிய அறிவு,நேர் காணலில் கண்ணோக்கி பேசுதல்,தெரியாததை பணிவுடன் ஒப்புக் கொள்ளுவது,வேலை செய்யும் ஆர்வத்தை வெளிப் படுத்துவது நிச்சயம்.வெற்றி தரும் ..

    ReplyDelete
  3. அருமையான பயனுள்ள பதிவு. இன்றைய தேவையை நிறைவிக்கும் பதிவு.

    ReplyDelete
  4. விளம்பரங்கள் மூலம் தெரிய வந்து மனு செய்யும் காலம் மாறிக்கொண்டிருக்கிறதோ என்னும் சந்தேகம் எனக்கு வருகிறது. எந்தக் காலத்திலும் நேர்காணலுக்குச் செல்பவர் தன்னிடம் கேள்விகள் கேட்பவர் தன்னை சோதிக்க அல்ல, அவருக்கே தெரிந்து கொள்ள என்னும் எண்ணத்துடன் அணுகினால் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்.//

    தன்னம்பிக்கை இருந்தாலே
    இந்தக் குணம் தானாக்வந்து விடுமல்லவா
    அனைவருக்குமான அருமையான
    பயனுள்ள பதிவிது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. தங்கள் அனுபவம் எங்களுக்கு பாடம்
    நன்றி அய்யா

    ReplyDelete
  6. அருமையாக சொல்லி உள்ளீர்கள் ! நன்றி சார் !

    ReplyDelete
  7. // தமிழ்வழிக் கல்வியே படித்திருந்தாலும் ஆங்கிலத்தில் ஓரளவு சரளமாக என்னால் பேச முடிந்தது //

    வாழ்க்கையில் உங்கள் மீது நீங்களே கொண்டு இருந்த தன்னம்பிக்கையையும் வெற்றியையும் இந்த பதிவு அடுத்தவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக காட்டுகிறது

    ReplyDelete
  8. @ டாக்டர் கந்தசாமி,
    @ காளிதாஸ்,
    @ ஹரணி,
    @ ரமணி ,
    @ சிவகுமாரன்,
    @ திண்டுக்கல் தனபாலன்,
    @ தி.தமிழ் இளங்கோ
    உங்கள் வரவுக்கும் பின்னூட்டங்
    களுக்கும் நன்றி.

    ReplyDelete
  9. நேர்மையாக உங்கள் உங்கள் அனுபவங்களைச் சொல்லி இருக்கிறீர்கள்.உங்கள் தவறான அணுகுமுறையை ஒப்புக்கொண்டது. பாராட்டுக்குரியது.

    ReplyDelete
  10. @ T.N.MURALIDHARAN,
    திரு. முரளிதரன், உங்கள் முதல்
    வருகை என்று எண்ணுகிறேன்
    உங்கள் பாராட்டுக்கு நன்றி. சில
    அணுகுமுறைகள் பற்றி சொல்லும்
    போது நம் அனுபவம் உண்மையை
    உரத்து ஒலிக்கச் செய்யும்.

    ReplyDelete
  11. Nice article. There are so much to learn from others experience as well. But the thing is that they need to share their valuable experience.
    Personally I would like you to share your views and experience about the marriage system of those days and today.

    ReplyDelete