கல்யாண வைபவங்கள் -நினைவலைகள்.
-----------------------------------------------------------------
பல நண்பர்களது திருமணத்துக்குச்
சென்று வந்திருக்கிறேன்..அவற்றில் சில மறக்க முடியாத அனுபவங்களைப் பகிர்ந்து
கொள்கிறேன். நாங்கள் திருச்சியில் இருந்த காலம். நண்பர் ஒருவருக்கு வடுகூரில் (
வழுதூர் ?) திருமணம். நானும் இன்னொரு நண்பரும் முதல் நாள் மாலையே திருமணத்துக்குப்
போக திட்டமிட்டிருந்தோம். அலுவலகப் பணி முடிந்து மாலை ஐந்து மணி அளவில் அவருடைய
ஷெர்பா மோட்டார் சைக்கிளில் கிளம்பினோம். இரண்டு மணி நேரப் பயணம் இருக்கும் என்று
கணக்கிட்டோம். போகும் வழியில் மழை பிடித்துக் கொண்டது. மழை நிற்கக்
காத்திருக்கும்போதே இருட்ட ஆரம்பித்து விட்டது. எங்களுக்கு வழியும் சரியாகத்
தெரியாது. சமயம் பார்த்து வண்டியின் ஹெட் லைட் எரியாமல் மக்கர் செய்தது. நான்
பில்லியனில் அமர்ந்து கையில் ஒரு டார்ச் விளக்கைப் பிடித்துக் கொண்டு முன்னால்
அடிக்க நண்பன் வண்டி ஓட்டிக் கொண்டு போனான். எதிரில் வரும் லாரிகளின் வெளிச்சம்
கண்கூச வைத்து மெலே போக முடியாமல் அவன் வண்டியை நிறுத்தினான். நல்ல வேளை.! மேலே
சென்றிருந்தால் அருகிலேயே ஓடிக் கொண்டிருந்த ஆற்றுக்குள் போயிருப்போம்.கையில்
டார்ச்சுடன் நான் ஒளிகாட்ட தெய்வாதீனமாக விபத்து நேராமல் தப்பித்த அந்த நிகழ்ச்சி
மறக்க முடியாதது, அன்று ஒரு வழியாக திருமண வீட்டை அடைந்த போது இரவு பத்து
மணியாகிவிட்டது. மழையில் சகதியான சாலையில் இரண்டு கிலோமீட்டருக்கும் அதிகமாக
தள்ளிக் கொண்டே சென்றோம்.
திருவனந்தபுரத்தில் ஒரு நண்பருக்குக்
கலியாணம். ஒரு பேரூந்து ஏற்பாடு செய்து நாங்கள் சென்றோம். நண்பன் வீடு
நாகர்கோயிலில் இருந்ததுஎன் இரண்டாம் மகன் பிறந்து இரண்டு மாதம் கூட ஆகவில்லை.
போகும் வழியில் குற்றாலத்தில் குளித்துவிட்டுப் போனோம். முதன்முதல் குற்றாலக்
குளியல் அனுபவம் கைக் குழந்தை மாற்றி மாற்றி வைத்துக் கொண்டு குளித்தது மறக்க
முடியாத அனுபவம். திருமணச் சடங்காக மாப்பிள்ளைக்கு உறவினர் தலைப்பாகை
கட்டுகின்றனர். அதுவே சுமார் முப்பது நாற்பது பேர்கள் கட்டி முடிப்பதற்குள் பசியில்
பாதி உயிர் போய்விட்டது. ஒரு வழியாய் இந்த சடங்கெல்லாம் முடிந்து பந்தியில்
உட்காரப் போகும் நேரம் நாங்கள் தடுத்து நிறுத்தப் பட்டோம். முதலில் பெண்கள்
என்றனர்.பெண்ணுரிமை , முன்னுரிமை என்ன என்று அப்போது தெரிந்து கொண்டோம். நண்பனின்
உறவினர்கள் “ பெண்ணு கொள்ளாமோ “ என்று கேட்டனர். எங்கள் குழுவில் இருந்த பெண்கள் “
சேச்சே.. நாங்கள் இங்கிருந்தெல்லாம் பெண்கள் கொள்வதில்லை “ என்று பதில் கூறினர்.
அவர்கள் மலையாள வழக்கில் பெண் அழகாய் இருக்கிறாளா எனக் கேட்க அது புரியாமல் பெண் எடுப்பதில்லை
என்று பதில் கூறி இருக்கின்றனர்.நாங்கள் மணம் முடிந்த பிறகு ‘திருச்சி’ போவோம் என்றதை நாங்கள் கோபித்துக் கொண்டு திரும்பிப் போவோம்
என்று புரிந்து கொண்டு பரிதவித்தது மறக்க முடியாத அனுபவம்.
கோவையில் ஒரு நண்பன் திருமணத்தில்
அவனை கோயில் கோயிலாக அழைத்துச் சென்று வந்ததும் இப்படியெல்லாம் வழக்கங்களா என்று
நினைக்க வைத்தது.
மனைவியின் உறவினர் மகளுக்கு
மும்பையில் திருமணம். என் மனைவி அதற்கு முன் மும்பை பார்த்ததில்லை. என் நெருங்கிய
உறவினர் மும்பையில் இருந்தார். அவருக்குக் கடிதம் எழுதி நாங்கள் அவர் வீட்டுக்கு
வந்து இருக்கலாமா என்று கேட்டிருந்தேன். அவரும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும்
எங்களை எதிர்பார்பதாகவும் பதிலளித்தார். பெண் வீடு உல்லாஸ்நகர். அங்கு இறங்கி
மாதுங்காவில் திருமணம் முடிந்த பிறகு என் உறவினர் வீட்டுக்குப் போவதாக ஏற்பாடு.
திருமண வைபவங்கள் முடிந்து உணவு அருந்தப் போகும் சமயம் என் உறவினர் அங்கு வந்தார்.
எங்களை அழைத்துக் கொண்டு போகத்தான் வந்திருக்கிறார் என்று மகிழ்ந்து அவரையும்
விருந்துக்குக் கூட்டிச் சென்றேன் அவர் நாங்கள் அவர் வீட்டுக்கு வருவதை நிறுத்தவே
வந்திருந்தார். அவருக்கு வேண்டப் பட்டவர்கள் அவர் வீட்டுக்கு வந்திருப்பதால்
நாங்கள் அங்கு வருவது உசிதமல்ல என்று சொல்லவே வந்திருந்தார். முன் பின் தெரியாத
இடத்தில் எதிர்பாராத விதத்தில் சங்கடப் படுத்தப் பட்டோம். நல்ல வேளை என் நண்பன்
ஒருவன் விலாசம் என்னிடம் இருக்க சமாளித்து விட்டோம். மூன்று நாட்கள் மும்பையில்
தங்கி எல்லா இடங்களையும் பார்த்து என் உறவினர் வீட்டையும் விசிட் செய்தோம்.
உறவினர் ஒருவருடைய மகள் ஒரு
ஆங்கிலேயரைத் திருமணம் செய்து கொண்டார். எல்லாருடைய சம்மதத்துடன் நடந்த திருமணம்
ஆர்ய சமாஜ் குழுவினரால் நடத்தி வைக்கப் பட்டது. இந்திய முறைப்படி மந்திரங்கள் ஓதி
மங்கல நாண் கட்டப்பட்டது. ஒவ்வொரு மந்திரம் உச்சரிக்கப் பட்டதும் அதன் பொருள்
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டு திருமணம் நடத்தப் பட்டது. அது எனக்கு ஒரு
வித்தியாசமான அனுபவமாக இருந்தது
குருவாயூரில் நண்பர் ஒருவரின் மகனது திருமணத்துக்குச் சென்றிருந்தேன். குருவாயூரில் கோயில் சன்னதி முன்புதான் தாலி கட்டுவார்கள். திருமணத்துக்கு யார் யார் வந்திருக்கிறார்கள் என்று அறிய ஏதாவது இடம் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறதா என்று பெண்வீட்டாரிடம் கேட்டேன். இல்லையென்றால் யார் வந்தார்கள் யார் வரவில்லை என்பது தெரியாமல் போய் விடுமென்ற எண்ணத்தில் கேட்டது. அவர்கள் அதை திருமணத்துக்கு வந்தவர்கள் உண்ணாமல் போய் விடுவார்களோ என்ற எண்ணத்தில் கேட்கிறோம் என்று நினைத்து, “கவலைப் பட வேண்டாம். திருமணத்துக்கு வந்தவர்கள் எப்படியாவது தெரிந்து கொண்டு சாப்பாட்டுக்கு வந்து சேர்ந்து விடுவ்வார்கள்” என்று பதிலளித்தனரே பார்க்கலாம்.!
வேறு ஒரு முறை நண்பர் ஒருவரின் மகன் திருமணத்துக்குச் சென்றிருந்தபோது, என்னை மாப்பிள்ளையின் தந்தை என்று எண்ணிக்கொண்டு விசேஷமாக கவனித்தது மாப்பிள்ளையின் தந்தையார் என் மேல் கொஞ்சம் பொறாமைப் பட வைத்து என்னை சற்று ஒதுங்கிக் கொள்ளச் சொன்னார்.!
ஒவ்வொரு திருமணமும் ஒவ்வொரு அனுபவம்.மன்னார்குடியில் நண்பன் ஒருவன் திருமணம். திருமணம் முடிந்து என்னை அவன் மனைவிக்கு அறிமுகம் செய்து வைத்தான். பெண் கிராமத்தில் இருந்து வந்தவள். என்று தெரியும். அறிமுகம் ஆனவுடன் கை கூப்பி வணக்கம் தெரிவித்தேன். ஆனால் அந்தப் பெண் கை குலுக்கக் கை நீட்ட , அது கண்டு நானும் நீட்ட, அவள் கை கூப்ப ஒரே ஒர த மாஷாகி விட்டது.
குடும்பத்தில் நெருங்கிய உறவினர் திருமணம் குருவாயூரில் நடக்க இருக்க முதல் நாள் மாலையே அங்கு போய் சத்திரத்தில் தங்கினோம். திருமணம் காலை 7 மணிக்கு என்று கூறியிருந்தார்கள். அதற்கு முன்பாக விடியற்காலை 3 மணிக்கு எழுந்து கண்ணனின் நிர்மால்ய தரிசனம் காணச் சென்றோம். தொழுதுவிட்டு அறைக்கு வந்து இன்னும் நேரமிருக்கிறதே என்று சற்று கண் அயரலாம் என்று படுத்துவிட்டோம். காலை ஏழு மணி அளவில் எங்கள் அறை தட்டப்படும் சத்தம் கேட்டு விழித்தால் நாங்கள் இன்னும் வராதது கண்டு குழம்பி எங்களைத் தேடி வந்திருந்தனர். தாலி கட்டும் நேரத்துக்கு எப்படியோ சேர்ந்து விட்டோம்
------------------------------------------------------------------------------------------------------------- .