Monday, February 29, 2016

ஒரு உரத்த சிந்தனை சிலதேடல்கள்


                           ஒரு உரத்த சிந்தனை-- சில தேடல்கள்
                          ------------------------------------------------------------
நான் இரண்டு மூன்று நாட்களாக மும்முரமாய் இருந்ததில் இதை எழுதத் தாமதயிற்று. பொருத்தருள வேண்டுகிறேன்

 சாதாரணமாக வயதானவர்கள் எல்லோரும் ' நான் போய்ச்சேர காத்திருக்கிறேன் ' என்று கூறுகிறார்கள் .what do you know about that ..place/living..?Do you expect to meet/see those who predeceased you..what else do you know about post-mortam status...As you are a man of deep thoughts , i am sure what you share on this subject will make for interesting read..

மேலே குறிப்பிட்டிருப்பது என் பதிவு ஒன்றுக்கு வந்த பின்னூட்டம் எனக்கு என்ன தோன்றுகிறதென்றால்  பொதுவாக “நான் போய்ச் சேரக் காத்திருக்கிறேன் “ என்று சொல்வதெல்லாம் வெறும்  உதட்டளவில்தான் என்றானாலும் ஒரு நாள் பிறந்தவர் இறக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும்  இறப்பை யாரும் விரும்பி வரவேற்பதில்லை. கைகால் விளங்காமல் ஏதும் செய்ய இயலாதவர் கூட இன்னும் வாழத்தான் விரும்புகிறார்கள் அடிப்படையில் இறப்பைப் பற்றிய பயமே இதன் காரணம் என்று தோன்றுகிறது
 ஏன் நான் கூட என் பதிவு வீழ்வேனென்று நினைதாயோவில் மயங்கி விழுந்து எழுந்ததும் இறப்பையே வெற்றி கொண்டேன் என்று நினைத்துவிட்டேன்  போலும் அதனால்தான் எழுந்தவுடன்  I JUST KICKED HIM என்று கூறினேனோ  அதே பதிவில் /                                                                      நம்மால் வீழாமல் இருக்க முடியுமா.?அவனே வீழ்ந்தவன் தானே.
 காலனை காலால் என்றும் எப்போதும் உதைக்க முடியுமா? (இப்
போது நான் உதைத்து விட்டாலும் )தவிர்க்கப்பட முடியாதது
தானே மரணம்.?அனுபவிக்கப்பட வேண்டியதுதானே என்று
கூறும்போது  அனுபவம் பகிர்ந்து கொள்ள்க் கூடியதா?வீழ்ந்தவன்
நான எழாமல் போயிருந்தால் நான் பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து
 கொண்டிருக்க முடியாதே. இந்த அனுபவம் ஒன்று தெரிவிக்கிறது.

மரணம் நிகழ்வது நொடி நேரத்துக்குள். வலி என்று ஏதும் கிடை
யாது.அப்படி  இருந்தாலும் யாரிடமும் தெரிவிக்க இயலாது.
நினைத்து ஏற்படும் பீதியும் பயமும்தான் அதிகம்.
மரணிப்பவனால் அவனுக்கு எந்த பாதகமும் இல்லை.
நோய் நொடியால் கஷ்டப்படுபவர்கள் அந்த வேதனை தாங்காமல் இறப்பது மேல் என்று நினைக்கலாம் ஒரு சொல்வழக்கு நினைவுக்கு வருகிறது மனோதிடம் உள்ள தைரியசாலி ஒரு முறைதான் இறக்கிறான் ஆனால் கோழையோஇறந்து  இறந்து வாழ்கிறான்
வயதாகும் போது மரணம் பற்றிய சிந்தனைகள் அதிகம் வரலாம் அந்த பயத்திலிருந்து எழ  கடவுள் என்றும் நம்பிக்கை என்றும் ஏதோ ஒன்றில் மனதை லயிக்க விடலாம் நம் கலாச்சாரத்தில்தான் இந்த மாதிரி நம்பிக்கைகளுக்குக்  குறைவில்லையே சொர்க்கம் என்றும் நரகமென்றும்  ஜீவாத்மா பரமாத்மா  என்று என்னவெல்லாமோ கூறிக் குழப்பி வைத்திருக்கிறார்களே. ஒரு வகையில் இந்த பயமே நாம் கெடுதல் நினைக்காமலும்செய்யாமலும் இருக்கவும் உதவுகிறதோ என்னவோ  வாழ்க்கையில் வால்யூஸ் என்று நினைப்பவர்கள் பொய் சொல்லக் கூடாது திருடக் கூடாது போன்ற வற்றைக் கடை பிடிக்க இந்த நம்பிக்கையும் பயமும் தேவை என்று நினைக்கிறார்கள் ஆனால் நான் நல்ல ஒழுக்கங்களை பேணி வளர்க்க இவையெல்லாம் தேவை என்று நினைக்க வில்லை. நல்ல ஒழுக்கங்கள் நம்மைச் செம்மைப் படுத்தும் சீராக சிந்திக்க வைக்கும்  அதுவே மனோதிடமும்  தைரியமும் கொடுக்கும்  இறப்பு பற்றிய எண்ணத்தையும் ஒதுக்கிவிடும் என்று நினைக்கிறேன்
எனக்கு மட்டும் இறப்பு பற்றிய எண்ணங்கள் தோன்றுவதில்லையா என்ன.? ஆனால் அது குறித்து நிறையவே சிந்திக்கிறேன்  அதுவே என்னை  இந்த ஜீவாத்மா பரமாத்மா பற்றி வித்தியாசமாக நினைக்க வைத்தது
ஒவ்வொரு மூச்சுக்கும் நடுவே ஒரு இறப்பு இருக்கிறதுஅந்த இடைப்பட்ட நேரம்போதும் கனவு  காண அதில் என்னவெல்லாமோ  நினைக்க முடியும்
கனவுக்கு நேரக் கணக்கு ஏதும் கிடையாது .அதிகாலையில் எழுந்திருக்கிறேன்.
 என்ன ஆச்சரியம் .! நான் கட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கிறேன். என்னால் என்னையும் என் அருகில் படுத்திருந்த மனைவியையும் நன்றாகப் பார்க்க முடிந்தது. உருவமில்லாமல் நான் உயரே சஞ்சரிக்கிறேன். என்னை ஒரு குரல் கூப்பிடுகிறது. எனக்கு ஒரு முறை கனவில் கடவுளிடம் உரையாடிய அனுபவம் இருந்தது.
“ யார் என்னைக் கூப்பிடுவது.?கடவுளாயிருந்தால் முன்பு வந்தது போலென் முன்னே வா “ என்றேன்.
“ எங்கும் வியாபித்திருக்கும் நான் உன் முன்னே வந்தேனா.? என்ன உளறுகிறாய்.? ஏதாவது கனவு கண்டிருப்பாய். “
“ அதுபோல் இது கனவில்லையா.? குரல் மட்டும் கேட்கிறதே.
“ குரல் என்பது உனது பிரமை. உண்மையை உணர்ந்து கொள்ளாமல் நீயே என்னவோ நினைத்துக் கொள்கிறாய். உருவமே இல்லாத எனக்கு ஆயிரம் உருவங்களும் பெயர்களும் கொடுத்து உண்மை என்று நம்பும் கற்பனைத் திறன்தான் உங்களுக்கெல்லாம் இருக்கிறதே. “
“ சரி. உண்மைதான் என்ன.? “
“ உன் ஆழ்மனதில் , ஜீவாத்மா பரமாத்மாவிடம் ஐக்கியமாகத் துடிக்கிறது.உண்மை நிலையைப் புரிந்து கொள்ள மனம் விழைகிறது.
ஜீவாத்மா பரமாத்மா என்று ஏதோ புரியாமல் சொன்னால் எப்படி.? 
“ பரமாத்மா என்பது எங்கும் வியாபித்திருக்கும் பிராண வாயு.ஜீவாத்மா என்பது ஒருவனை இயக்கும் பிராணவாயு..அது அவனை விட்டு வந்தால் பரமாத்மாவுடன் ஐக்கியமாகி விடும்.
“ அனாதி காலம் முதல் தேடிவரும் கேள்விக்கு மிக எளிதாகப் பதிலாக ஏதோ கூறுகிறாயே.
“ மக்கள் மத்தியில் ஒரு கதை உலாவுவது தெரியுமா.? ‘ அமாவாசை இரவில் ,விளக்கில்லா அறையில், கருப்புப் பூனையைத் தேடும் குருடன் போல ‘என்று. அதுபோல்தான் அவரவர் கற்பனைக்கு  ஏற்றபடி கதைகள் புனைகிறார்கள். “
“ கொஞ்சம் விளக்கமாகத் தெரியப் படுத்தலாமே.
“ ஒருவன் உயிரோடு இருக்கிறான் என்று எப்போது கூறுகிறாய்.? “
“ அவன் மூச்சு விட்டுக் கொண்டிருக்கும்போது.
“ அவன் மூச்சுவிட மறந்தால்.... தவறினால்... ?
“ இறந்தவனாகக் கருதப் படுவான்.
“ மூச்சு என்பது என்ன.?
“ சுவாசம். ஒருவன் காற்றை உள்ளிழுத்து வெளிவிடுவது சுவாசம். “
“ எந்தக் காற்றையும் உள்ளிழுத்து வெளி விட்டால் சுவாசிப்பதாகுமா.?
“ இல்லை. ஆகாது. காற்றில் இருக்கும் பிராணவாயுவைத்தான் சுவாசிக்கிறான். அது இல்லாத நச்சுக் காற்றை சுவாசித்து ஆயிரக் கணக்கானவர்கள் போபாலில் இறந்திருக்கிறார்களே.
“ ஆக இந்தப் பிராணவாயுதான் உடலின் எல்லா பாகங்களையும் இயங்கச் செய்கிறது. உடலின் இரத்தத்தை சுத்திகரிக்கிறது. அது உடலின் எல்லா பகுதிகளுக்கும் பாய்ந்து இயக்குகிறது. உடலில் ஏதாவது பாகம் ரத்தம் இல்லாமலிருக்கிறதா. ? இருப்பது 
நகமோ முடியோ ஆக இருக்கலாம். சுத்திகரிக்கப் பட்ட ரத்தம் மூளைக்குச் சேரவில்லையானால் அவனை இறந்தவன் என்றே கூறுகிறார்கள். மூளைக்குச் செல்லும் ரத்தத்தில் பிராணவாயு இருக்கிறது.
“ ஜீவாத்மா பரமாத்மா பற்றி விளக்கம் கேட்டால் உடற்கூறு பற்றி விளக்கம் தேவையா.? “ அடிப்படை அறிவை கோட்டை விடுவதால் நேராக மூக்கை பிடிக்காமல் தலையைச் சுற்றி அதை அணுகுகிறீர்கள் என்றுகூற வந்தேன்.
”  பிராண வாயு இல்லாமல் இயக்கம் இல்லை என்பது நிச்சயமா.?
“ சந்தேகமில்லாமல். வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இல்லை என்றால் அதற்குக் காரணம் அங்கு பிராணவாயு இல்லை என்பதால்தான். சந்திரனில் நீர் இருக்கிறதா, செவ்வாயில் நீர் இருக்கிறதா என்ற ஆராய்ச்சிகள் அதைத்தானே கூறு கின்றன. “
“ உலகில் உயிரினங்களை இயக்க பிராணவாயு இருப்பதுபோல வேற்று கிரகங்களை இயக்குவது எது..?
“ வேற்று கிரகங்கள் எங்கே இயங்குகிறது.? அவை இருக்கின்றன அவ்வளவுதான்.
இந்த பேரண்டத்தையே இயக்குபவன் கடவுள் என்கிறார்களே. அதெல்லாம் பொய்யா.?
“ தெரியாதவற்றைப் பொய் என்று கூறமுடியாது. அனுமானங்கள் என்று வேண்டுமானால் கூறலாம். “
“ குழந்தை பிறக்கும் போதே சுவாசித்துக் கொண்டே பிறக்கிறதே . அது எப்படி.? “
“ உயிருடன் இருக்கும் ஆணின் விந்து உயிருள்ளது. பெண்ணின் கரு முட்டை உயிருள்ளது ( மூன்றோ நான்கோ நாட்கள் )இரண்டும் இணையும்போது உயிர் 
இருக்கிறது . பின் வளரும்போது தாயின் உடலுடன் தொப்புள் கொடி பிணைப்பால் உயிருடன் இருக்கிறது. வெளிவரும்போது ஒரு ஜீவாத்மாவாகிறது. இறக்கும்போது பரமாத்மாவுடன் இணைகிறது.
“ நான் இப்போது ஜீவாத்மாவாகவும் அல்லாமல் பரமாத்மாவுடன் இணையாமல் அனாந்திரத்தில் இருக்கிறேனே . இதை என்ன சொல்ல. ? “
 ஒவ்வொரு முறையும் சுவாசிக்கும்போது மனிதன் ஒரு மாத்திரையோ, குருவோ (உபயம் சுந்தர்ஜி ) இறக்கிறான். பின் உயிர்க்கிறான்.இந்த மாத்திரையோ குருவோ போதும், கனவு காண. நேரம் கணக்கு எல்லாம் கடந்து நிற்கும். உன் ஜீவாத்மா அனாந்திரத்தில் நிற்காமல் உன் கூட்டுக்குள் செல்லட்டும்.. சிறிது தாமதித்தாலும் உன்னைத் தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள். பரமாத்மாவுடன் இணையாமல் அனாந்திரத்திலேயே இருக்க வேண்டியதுதான் “

திடுக்கிட்டு விழித்தேன். வியர்த்துக் கொட்டியது. நான் இன்னும் இறக்கவில்லை. பரமாத்மாவுடன் இணையவில்லை இதுவும் கனவா.? கனவில் கற்ற பாடமா.?
( சொல்ல வந்தது சொல்லி முடியவில்லை ஆகவே இது தொடரும் )


   .                                                                                                                                               
               
  
   











Thursday, February 25, 2016

கடன் பட்டார் நெஞ்சம்


                            கடன் பட்டார் நெஞ்சம்
                             -----------------------------------
என்ன எழுத என்று சிந்தித்துக் கொண்டிருந்தபோது  கடன் பட்டார் நெஞ்சம் போல என்னும் வரி நினைவுக்கு வந்தது. அதுவே பதிவின்  தலைப்பு என்று முடிவு செய்தேன்
கடன் பட்டவர் நெஞ்சம் எல்லாம் கலங்குமா என்னும்  அடிப்படைக் கேள்வி எழுந்தது கடன் வாங்காதவர் இருக்கிறார்களா நாடே கடன்  பட்டு நாம் எல்லோருமே கடனாளியாகத்தானே இருக்கிறோம் நாடு கடன்  பட்டால் நமக்கேன்ன  அரசாங்கம் நோட்டடித்து சமாளிக்கும்

 காப்பிப்பொடி முதல் சர்க்கரை வரை அடுத்த வீட்டில் கடன்வாங்குதலும் கொடுத்தலும் ஒரு அன்னியோன்யத்தை ஏற்படுத்துகிறது அதில் அதிக பாதகமில்லைகடன் வாங்கியதைத் திருப்பிக் கொடுக்கவேண்டும் எனும்போதுதான்கடன் பட்ட நெஞ்சம் எல்லாம்  வருகிறது. கடன் ஏன்  வாங்குகிறோம் நம்மிடம் இல்லாதபோது. வாங்கியதை நம்மால் திருப்பிக்கொடுக்க முடியும் என்றுநம்பிக்கை இருக்கும் போது. ஆனால் ஒரு முறை கடன் வாங்கிவிட்டால்  எந்த ஒரு பொருளும் இல்லாமல் நம்மால் இருக்க முடிவதில்லைகடனோ உடனோ வாங்கி சமாளிக்கலாம் என்று தோன்றிவிடும் ( கடனோ சரி அது என்ன உடனோ ?.புரியாமலேயே எழுதிவிட்டேன் )

திருமணம் ஆன புதிதில் மனைவி கேட்கும் போது இல்லை என்று சொல்ல முடியாதபோது எப்படியும் திருப்பிக் கொடுக்கத்தானே போகிறோம்என்ற எண்ணம் வரும்போது கடன் வாங்குகிறோம். ஆனால் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கஎண்ணும்போது அதற்கான ரிசோர்ஸ் இல்லாதபோது பிரச்சனை வருகிறது
திருமணம் ஆன புதிதில்சென்னையில் குடி போனோம்  வில்லி வாக்கம்  நான் அப்போது பணி புரிந்த லூகாஸ்  டிவிஎஸ் நிறுவனம்  அடுத்து இருந்ததால் அங்கு வீடு வாடகைக்கு எடுத்தேன் நான் அலுவலகத்துக்குச் சென்றுவிட்டால் என்மனைவி தனியே இருக்கவேண்டும் நிறைய குடித்தனங்கள் இருந்த இடத்தில் கடன்கொடுத்து வசூலிக்க பட்டாணியர் என்று சொல்லப்படும் மீசை தாடி வைத்துத் தலைப்பகையுடன்  ஆஜானுபாகுவான ஒருவர் அடிக்கடி வருவார் அவரைப் பார்த்தே என் மனைவி அச்சமுறுவாள் அப்படிப்பட்டவர்களிடம் கடன் வாங்கி கொடுக்காமல் எப்படி இருக்க முடியும் அவர்களும் அன்னிய தேசத்தில் கடன் கொடுத்து அதில் வரும் வட்டியில் எப்படித் துணிந்து வாழ்கிறார்களோ என்று தோன்றும்ஒரு முறை கடன் வாங்கிப் பழக்கப்பட்டால் எதையும் இல்லை என்று நினைக்கத் தோன்றாது

ஒரு வீட்டை வாங்க வேண்டுமென்றால்  இப்போது யாரும் கை இருப்பைப் பற்றி நினைப்பது இல்லைபத்துலட்சம் பெறுமானம்  உள்ள வீடு தவணை முறையில்  பதின் மூன்றோ பதினாலோ கூட கொடுக்க வேண்டி இருக்கும் இ எம் ஐ மாதாந்திரமாகக் கட்டும் போது உயரும் மதிப்பு தெரிவதில்லை  தவணைகளை கட்டாமல் பணத்தை இழந்தோரும் உண்டு

 சிலருக்கு கடன் கொடுத்து மற்றவரை வசப்படுத்தும் குணமும் உண்டு / திருச்சியில் பணியில் இருந்த போது ஒருவர் வட்டி எனும் அடைமொழியுடன் அவர் பெயர் அநேகமாக எல்லோருக்கும் தெரியும் அவர் ஒரு இன்ஷூரன்ஸ் ஏஜெண்டும் கூட ஆவார். புதிதாகப் பணியில் சேருபவரை மடக்கி பாலிசி எடுக்க வைப்பார் எப்படியாவது ஒருவரைக் குறிவைத்தால்  பாலிசி விற்காமல் விடமாட்டார் . அதற்கு அவரிடம் இருந்த ஒரு உபாயம் பாலிசி கொடுக்க வேண்டியவருக்கு எப்படியாவது  கடன் கொடுத்து விடுவார் அதைத் திருப்பிக் கேட்கவும் மாட்டார் கடன் கொடுப்பது என்பது அவருக்கு பாலிசி விற்க  தூண்டில் போடுவது போல் அவரைக் கடனாளியாக்கி  அதையே சாக்காக வைத்து பாலிசி விற்றுவிடுவார் ஒரு முறை அவரிடம் இன்னாருக்குப் பாலிசி விற்க முடியாதென்று பந்தயம் கட்டித் தோற்றிருக்கிறேன்

கடன் பற்றி எழுதும்போதுஇன்னொரு உண்மைச் சம்பவம் நினைவுக்கு வருகிறது அப்போது நான்  விஜயவாடாவில்  இருந்தேன்
வேண்டப்பட்டவர் ஒருவரிடமிருந்து உருக்கமான கடிதம் ஒன்று வந்தது. அதில் அவரது வேலை போய்விட்டதாகவும்  அவசரத் தேவைகளைச் சமாளிக்கத்  திண்டாடுவதாகவும் போன வேலை இன்னும்  பதினைந்து நாட்களில்  திரும்பக் கிடைக்கும் என்றும் அப்படிக் கிடைத்தவுடன் என்னிடம் வாங்கும்  கடனைத் திருப்புவதாகவும்  எழுதி இருந்தார்  இல்லாமையின் கொடுமை எனக்குத் தெரியும் ஆகவே  கடிதம்கிடைத்தவுடன் ரூ500/-உடனே ட்ராஃப்ட் எடுத்து அனுப்பினேன்

ஆயிற்று ஏறத்தாழ நாற்பது வருடங்கள்  கடன் பற்றிய பேச் மூச் எதுவும் இல்லை நானும் இதுவரைக் கேட்கவில்லை.  ஆனால் ஓரோர் சமயம்  அந்தக் காலத்து ரூ 500/ -ன் மதிப்பு இப்போது எவ்வளவு என்று நினைத்துப் பார்ப்பதுண்டு

என் இளவயதிலேயே பொறுப்புகளைக் கொடுத்துவிட்டு மறைந்துவிட்டார் என் தந்தை.  ஒரே ஆறுதல் என்னவென்றால் எந்தக் கடனும்  இல்லாமல் போய்ச் சேர்ந்து விட்டார்  நிச்சயமாக கடன்  பட்ட நெஞ்சத்தோடு போயிருக்க மாட்டார்  என்பதே மனசுக்கு நிம்மதி                                                                                                                                                                                                                  
               
  
   
/


Monday, February 22, 2016

பயணங்கள் முடிவதில்லை


                                                      பயணங்கள் முடிவதில்லை
                                                      --------------------------------------------
ஏறத்தாழ எட்டு ஒன்பது பதிவுகள் தொடர் பயணம் பற்றி எழுதி பதிவிட்டிருக்கும் வேளையில் இன்னும் ஒரு பதிவு பயணங்கள் முடிவதில்லை என்னும் தலைப்பில் எழுதக் கோரி திரு தி தமிழ் இளங்கோ  கேட்டிருந்தார்  உண்மையிலேயே என் பயணங்கள் முடியவில்லை என்றே தோன்றுகிறது. என்ன ஒரு வித்தியாசம் என்றால் இதில் நான் எழுதுவது கட்டுப்படுத்தப் படுகிறது கேள்விகளுக்குப் பதில் என்னும்  முறையில்  இருந்தாலும் என்னை அத்தனை எளிதில் கட்டுப்படுத்த முடியுமா  என்  வழியில் தொடர் கட்டுரையைத் தொடர்கிறேன் பிறரால் அழைக்கப் படாத முதியவன் என்னையும் அழைத்த திரு தி தமிழ் இளங்கோ சாருக்கு நன்றி  இனிகட்டுரைக்குப் போவோமா.?
1.பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?
இந்த 77 வயது காலத்துக்குள் எத்தனையோ பயணங்கள் மேற்கொண்டாயிற்று. அவற்றில் முதல் ரயில் பயணம் என்று கேட்டவுடன் எனக்கு நினைவுக்கு வருவது என் மாமா ஒருவரின்  திருமணம் கேரளா நம்மாரையில் நடந்தது  நாங்கள் கோவையில் இருந்தோம் அப்போது என் தந்தையின் சார்பாக என்னைத் திருமணத்துக்கு தனியே அனுப்பினார்கள் அது நான் தனியே மேற்கொண்ட பயணம்  என்பதால் நினைவுக்கு வருகிறது எனக்கு சுமார் 11 வயதிருக்கும்
2.மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது?
இதற்கு பதில் சொல்வது சற்று தடுமாற்றம் ஏன் என்றால் அது பதிவின் நீளத்தைக் கூட்டிவிடும்
என் சின்ன அண்ணா காசி ஹரித்வார் எல்லாம் செல்லலாமா என்று கேட்டார்  நானும் சரி என்று கூறி விட்டேன் நானும் என் மனைவியோடு  அண்ணா அண்ணியையும் கூட்டிக் கொண்டு போகும் வழியில் பெரிய அண்ணாவையும் அண்ணியையும் சேர்த்துக் கொண்டு பயணிக்கலாம் என்று திட்டமிட்டோம் காசி ஹரித்வார் தவிர வட மாநிலப் பயணமாக்கலாமே என்றேன் சரி என்று அண்ணா கூறினார். அது 2003-ம் ஆண்டுமுதலில் போகவேண்டிய இடங்கள் எத்தனை நாள் தங்குவது எந்த ரயிலில் போவது என்று எல்லாவற்றையும் தீர்மானிக்கும்  பொறுப்பை என்னிடமே விட்டார்கள் அகில இந்திய ரயில்வே அட்டவணை ஒன்றை வாங்கினேன் அப்போது சர்க்குலர் பயணத்திட்டம் பற்றித் தெரிந்தது அதன் படி நாம் போக வேண்டிய இடங்களையும்  தேதிகளையும்  முதலிலேயே குறிப்பிட்டு பயணச் சீட்டு வாங்கி ஒவ்வொரு ரயிலுக்கும் முன்  பதிவு செய்து கொண்டால் பயணம் சீராக அமையும்  ஆனால் எல்லாவற்றையும்  துல்லியமாகக் குறிப்பிட வேண்டும்  இம்மாதிரி பயணச் சீட்டு வாங்கும்  போது நாம் போனவழியில் மீண்டும் வரக் கூடாது என் திட்டப்படி பயணம் சுமார் 22 நாட்கள். எல்லாவற்றையும்  செய்து வந்தால் சின்ன அண்ணா அவரால் பயணத்துக்கு வர இயலாது என்று கூறி விட்டார் வாங்கின டிக்கட்டுகளைக் கேன்சல் செய்து  எனக்கும்  என் மனைவிக்கும் மட்டும் மீண்டும் டிக்கட் வாங்கினேன் இந்த சர்க்குலர் பயணத்தில் ஒரு அனுகூலம்  மொத்த தூரத்தையும் கணக்கிட்டு அதற்கான பணத்தை மட்டுமே டெலெஸ்கோபிக் ரேட்டாக வசூலிக்கிறார்கள் மொத்த செலவில் கணிசமாகக் குறையும்
முதலில் பெங்களூரில் இருந்து ஜெய்ப்பூர்  அங்கிருந்து மதுரா ஆக்ரா வாரணாசி அலஹாபாத் ஹரித்வார்  டெல்லி பெங்களூர்  என்று திட்டமிட்டு ஒவ்வொரு ரயிலுக்கும் முன் பதிவும் செய்து விட்டேன் எங்கள் பயண நிரலை என்  பெரிய அண்ணாவுக்கும் தெரியப்படுத்த அவரும் அதற்கேற்ப அவருக்கும்  பெரிய அண்ணிக்கும் பயணச் சீட்டை அந்தந்த நாட்களில் முன் பதிவு செய்துகொள்வதாகக் கூறினார் முன் பின் தெரியாத இடங்களுக்கு மிகவும் கவனமாகத் திட்டமிட்டு செய்த பயணம் என்பதால் மறக்க முடியாதது இதில் தங்குமிடங்களை போகும் போது ஆங்காங்கே பார்த்துக் கொண்டோம் இந்தப் பயணம்  பற்றி என் பதிவுகளில் ஏற்கனவே எழுதி இருக்கிறேன்  இந்தப் பயணத்தின் போது ஒட்டகவண்டி  டோங்கா தொங்கு வண்டி ( WINCH)  மெட்ரோ பயணம் என்று பலவிதப் பயணங்களும்  அடங்கும் ஆடம்பரமில்லாத எளிய பயணம்
3.எப்படி பயணிக்கப் பிடிக்கும்?
பொதுவாகவே எனக்குப் பயணிக்கப் பிடிக்கும் சாதாரணமாக சாமான்யமானவர்கள் பயணிக்கும் செகண்ட் க்லாஸ் அல்லது பேரூந்துப் பயணம் பிடிக்கும்  ஆனால் இப்போதெல்லாம் அம்மாதிரிப்பயணம் செய்ய என் மனைவியும் மக்களும் விடுவதில்லை குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் அடைக்கப் பட்டு பிரயாணம் செய்வதே அமைந்துவிடுகிறது
4.பயணத்தில் கேட்க விரும்பும் இசை
பயணத்தில் இசை கேட்கவேண்டும் என்றில்லை.  என் மகனுடன் காரில் பயணிக்கும்போது  அவனுக்குப் பிடித்த இசையைப்போடுவான் நானும் கேட்பேன்
5.விருப்பமான பயண நேரம்
ரயில் ஆனால் இரவிலும் கார் ஆனால் பகலிலும் பயணிக்கப் பிடிக்கும்
6.விருப்பமான பயணத்துணை.
சந்தேகத்துக்கு இடமில்லாமல் மனைவி மக்களுடன்தான்
7.பயணத்தில் படிக்கவிரும்பும் புத்தகம்?
பயணத்தின் போது இயற்கைக் காட்சிகளை ரசிக்கவே பிடிக்கும்  பயணிக்கும்போது படிக்கப் பிடிக்காது
8.விருப்பமான ரைட் அல்லது டிரைவ்?
இப்போதெல்லாம் மகனுடன் காரில் பயணிப்பது  பிடிக்கும் நானாக வண்டி ஓட்டி ஆயிற்று பல வருடங்கள்
9.பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?
பாடல்களைப் பிறர் பாடக் கேட்பதுதான்  பிடிக்கும்
10.கனவுப் பயணம் ஏதாவது ?
ஒரு முறையாவது அமெரிக்கா சென்று வர வேண்டும் என்பது ஆசை. என் நண்பன் அவனே டிக்கட் எடுத்து எல்லா ஏற்பாடுகளையும்  செய்கிறேன் என்றான்  ஆனால் மனைவி தடா போட்டுவிட்டாள்ஆனால் தடையை மீறி ஒரு முறை அமெரிக்கப் பயணம் மேற்கொள்ள ஆசை …கனவு…?

 எழுதுவது என்பது அவரவராகவே செய்ய வேண்டியது  ஒருவரிடம் இன்ன பொருளில் எழுது என்று கேட்பது எனக்கு அவ்வளவாக விருப்பமில்லை. இருந்தாலும் பதிவுலகில் நண்பர்களின் வேண்டுகோளைத் தட்ட முடியவில்லை. நான்  யாரிடமும் எழுதச் சொல்ல மாட்டேன் 
 
                                                                      
                                                                                                                                            
               
  
   
/



Friday, February 19, 2016

எண்ணத் துணுக்குகள்


                            எண்ணத் துணுக்குகளா எண்ணிய துணுக்குகளா?
                            ------------------------------------------------------------------------------
    பழைய புகைப்படங்களை அவ்வப்போது புரட்டுவதும் ஒரு பொழுது போக்கு அப்படி செய்கையில் எப்படி இருந்த நான் இப்படியாகி விட்டேனே என்று எண்ணாமல் இருக்கமுடியவில்லை. 
1955-ல் நான்        

1962-ல்  நான் 
2015-ல் நான் 
சில எண்ணங்கள் உடல்நலம் குறையும் போது வந்து மோதுகின்றன. பழைய இடுப்புவலி சில நாட்களாய்ப் படுத்துகிறது. இந்த இடுப்பு வலி இப்போதெல்லாம் யாருக்கெல்லம் வராது என்று கூற முடியவில்லை. உடலின் எந்த ஒரு பாகமும்  தன் இருப்பைத் தெரிவித்துக் கொண்டிருக்கக் கூடாது. கையோ காலோ கண்ணோ  காதோ தான் இருப்பதைத் தெரிவிக்காமல் இயங்கினால் நலமாக இருப்பதாக எண்ணலாம்  அம்மாதிரி இல்லாமல் இருக்கும்  போது பல நினைவுகளும்  வருகின்றன. எனக்கானால் இதை மூப்பின் குணம் என்று எடுத்துக்கொள்ள முடியும்  மூப்பின் குறைபாடுகளைக் குறித்து எழுதிய பதிவொன்று நினைவுக்கு வருகிறது
செய்யாத   குற்றம்.
-----------------------------
தொலைகாட்சி   நிகழ்ச்சிகள்
நிறையவே   பார்த்து  விட்டு,
நித்திரை  செல்லப் போகுமுன்,
அன்றைய   நிகழ்வுகள் 
நினைவினில்  நிழலாடும்.

 
என்னென்னவோ   செய்ய  எண்ணியவை
செய்தே   முடிக்காமல்   மறக்கப்பட்டிருக்கும்.
மறந்தாலும்   பாதகமில்லை
முக்கியமானதாய்   இல்லாதவரை.

கண்ணயர  சில நேரம்   பிடிக்கும்
பின் கண்   மூடி உறங்கிவிட்டால்
கலர்கலராய்க்  கனவுகள்அலை அலையாய்
கதை போல  விரிந்து  பரவும்
எழுத்தில்   கொண்டு வந்தால்
இனிதே   ரசிக்கலாம்,
இடுகையில்   பதிக்கலாம்
என்றெல்லாம்   கனவினூடே  
நினைவுகளும்   கூடவே   வரும்,

விடியலில்   எழுந்து  இனிய   கனவுகளை
அசை   போட  முயன்றால், மசமசவெனத்
தெளிவின்றித்  தோன்றுவதை  எழுத்தில்
வடிக்க  வார்த்தைகளும்  வராது,
கற்பனையும்   கை  கொடுக்காது.
     
அதிகாலை   நடை பயிலுகையில்
 
எழுதுவதற்கு   விஷயங்கள்  யோசிக்க
 
நடையினூடே   வார்த்தைகளும்
அழகாக  வந்து   வீழும்.

சற்றே  மலர்ந்து  வீடு  வந்து,
பேனா   பிடித்தால்   என்னதான் 
எழுதுவதுஒன்றும்   தோன்றாது
நினைப்பது   ஏன்  மறக்க  வேண்டும்..?
 பார்த்த   முகம்  பரிச்சயமானது , பேர்மட்டும் வேண்டும்போது   நினைவுக்கு   வராது.
ஆடும்   சிறார்  கண்டு  மனம்  மகிழும்
கூடவே   ஓடியாட  உடல்   மறுக்கும்.
எண்ணங்களில்   இளமை  என்றுமிருக்கும்
 
உடல் உபாதைகள்  முதுமையை  நினைவூட்டும்.
வேண்டியதை  விரும்பிச்  செய்ய  விழையும் மனமே, உன்னால்  முடியாது  என்று  கூடவே உடல்  கூறும்.

உலகோரே   உங்களிடம்   கேட்கிறேன்
வயோதிகம்   என்பது  செய்யாத   குற்றத்துக்கு
விதிக்கப்பட்ட   தண்டனையா..?
------------------------------------------------------------------
கூடவே மூப்பு என்பதை ஒரு வரமாகப் பார்க்க வேண்டும் என்று  எழுதி இருந்தேன் ஒரு நெகடிவ் அண்ட் பாசிடிவ் அப்ரோச். வாசகர்களுக்கு எப்போதும் பாசிடிவ் அப்ரோச் தான் பிடிக்கும் 
முதுமை ஒரு வரம்..?
-------------------------------
சுருங்கிய தோலும்,சரிந்த தொப்பையும்,
நீர் கோத்த பை போன்ற கண்களுடன்,
கண்ணாடியில் காணச் சகிக்காத தோற்றம்
காணுமுன்பே,கண்களை உறுத்தும் பிம்பம்.,
முதுமை அளிக்கும் பரிசா.? இருந்தால் என்ன.?

செய்யாத குற்றத்துக்கு தண்டனையா
என்றே கேள்வி கேட்ட எனக்கு உருவம்
அன்றி முதுமை அளிக்கும் பரிசு-வாழ்வில்
நான் நானாக இருக்க ஒரு வாய்ப்பல்லவா

பெற்றோருக்காக வாழ்ந்ததும்- நான்
பெற்றவற்றுக்காக வாழ்ந்ததும்- நான்
பெற்ற கூலிக்காக உழைத்ததும் போதுமடா
சாமி. இது எனக்காக நான் வாழும் வாழ்க்கை.

.கருத்த முடிக்கும் இருகிய இடுப்புக்கும்
என் இப்போதைய இருப்பை நான் பணயம்
வைக்க மாட்டேன்.வயது முதிர்ந்து,அறிவும்
வளர்ந்த என்னை முன்னைவிட நேசிக்கிறேன்.


என் குறைகள் மறந்து முன்னை விட
என்னை நான் நேசிக்கிறேன்..விரும்பும்
இனிப்பை உண்ணும்போதும் படுத்த
படுக்கை சுருட்டாதபோதும் வேண்டாத
பொருள் ஒன்று வாங்கும்போதும் யாருக்கும்
பதில் சொல்லத் தேவையில்லாத இருப்பும்
கிடைத்த விடுதலை உணர்வின் வெளிப்பாடல்லவா?.

.சில சுற்றமும் உற்றாரும் இம்மாதிரி
வாழ்வாங்கு வாழ்வது காணாது சென்றது
கண்டவன் நான்.கிடைத்த வாய்ப்பை விடுவேனா
உறங்கச் செல்வதோ விழித்து எழுவதோ,
புத்தகம் படிப்பதோ கணினியில் ஆடுவதோ
என் விருப்பம்.-இனிய அறுபது எழுபதுகளின்
இன்னிசைப் பாடல்களை கண்மூடி ரசிப்பேன்,
தோன்றினால் துள்ளி எழுந்து ஆடவும் செய்வேன்.
சில நேரம் இளமையில் தொலைத்த காதலுக்கு
கண்ணீர் வடிக்கவும் செய்வேன்.யாருக்கு என்னைக்
கட்டுப் படுத்தவோ கேட்கவோ முடியும்?

கடலோரம் நடப்பேன்,நீரில் கால்கள் நனைப்பேன்
மணலில் மல்லாந்து கிடப்பேன்.- எனைக் கடந்து
ரசித்துப் போகும்,எள்ளி நகையாடும்
பார்வைகளை அலட்சியம் செய்வேன்.

தஞ்சாவூர் ஓவியம் தீட்டுவேன் கண்ணாடியில்
கடவுளர்களை வரையவும் செய்வேன். அதை
சட்டமிட்டு மாடத்தில் வைத்து அழகு பார்ப்பேன்
எனக்குப் பிடித்த என்னைப் பிடித்தவர்களுக்கும்
பரிசாகக் கொடுத்து மகிழ்வேன், மகிழ்விப்பேன்


சில நேரங்களில் மறதி வந்து அவதிப் படுத்தும்.
மறக்க வேண்டியதை மறந்துதானே ஆகவேண்டும்
நான் வளர்ந்த விதம்,இருந்த இருப்பு,இருக்கும் நிலை.
என்றும் என் மனம் விட்டு அகலாது.

ஆண்டுகள் கழியும்போது சில நேரம்
மனமுடைந்து போயிருக்கிறேன்.- உற்றார்
இழப்பும்,சிறார்களின் தவிப்பும்,அன்பின்
புறக்கணிப்பும்,போதாதா மனமுடைக்க?.
நிலவும் ஏற்ற தாழ்வு கண்டு இதயம்
நொருங்காதவர் வாழ்வின் நிலை உணராதவர்.

நரையோடிக் கிழப் பருவம்வரை வாழக்
கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
என் இளமையின் சிரிப்பே என்
முகச் சுருக்கத்தின் அடையாளம்
சிரிக்காமலும் தோல் சுருங்காமலும்
இருந்து இறந்தோர் ஏராளம்.

வயதாகும்போது உள்ளதை உணர்வது
எளிதாகிறது. ஏனையோர் நினைப்பேதும்
என்னை பாதிக்க விடுவதில்லை.
என்னை நானே ஏதும் கேள்வி கேட்பதில்லை.
தவறு செய்யும் உரிமையும் எனக்குண்டு
முதுமை எனக்களித்த சுதந்திரம் எனக்குப்
பிடித்திருக்கிறது. என்றும் நான் இருக்கப்
போவதில்லை.- இருந்த காலம் இருக்கும்
காலம் இப்படி அப்படி இருந்திருக்கலாமோ
இருக்க வேண்டுமே எனக் கவலைப் பட்டுக்
கழிப்பதில் எனக்கேதும் உடன்பாடில்லை.
உள்ளத்து உணர்வுகள் உண்மை பேசுகின்றன.
அடி மனத்தின் ஆழத்தில் இருந்து வருகின்றன.
அனைவரும் இன்புற்றிருக்கவும் வானவில்லின்
நிறங்கள் முகத்தில் தோன்றி ஒளிர் விடவும்
வேண்டுதல் செய்வதன்றி வேறொன்றும் வேண்டேன்.

அப்போது என்னையே நான் எண்ணிப்பார்த்து எழுதியதும் மீண்டும் உங்கள் பார்வைக்கு
 .
எண்ணிப்பார்க்கிறேன்
 --------------------------------
அன்றொரு நாள் பதிவொன்றில் குப்புற வீழ்ந்தெழுந்தபோது
முண்டாசுக் கவிஞனின் வரிகளை எண்ணி,
காலா, அருகினில் வாடா, சற்றே மிதிக்கிறேன் உனை என்
காலால் என்றே எழுதினேன். காலன் யானையின் காலாக
வந்து அவனையே மிதித்து விட்டான். நான் எம்மாத்திரம்.?

காலனுக்கென்ன பைத்தியமா பிடித்தது என் காலருகே வர.?
என் தோளில் தொற்றி ஏறி,காதருகே முணுமுணுக்கிறான்,
உன் நாட்களை எண்ணிக்கொள்”.எண்ணிப் பார்க்கிறேன்
இருக்கும் நாட்களை அல்ல, இருந்து வந்த நாட்களை.

பாலனாம் பருவம் செத்தும்,காளையாந் தன்மை செத்தும்,
காமுறும் இளமை செத்தும்,மேல் வரும் மூப்புமாகி,
நாளும் நான் சாகின்றேன்..எனக்கு நானே அழலாமா.?

ஏன் இங்கு வந்தேன்.? நான் இருந்த இடமும் ஏது.?
கானாறோடும் கதியே போல் கண்டபடி வாழ்ந்தேனா.?
வானோக்கிய பாழ் நிலமீது வழங்கும் வாடைக் காற்றெனவே
நானோர்க்கால் வெளியேறில் எங்குதான் ஏகுவேனோ.?
கண்ணிற் காணா சொர்க்கமும் ஒரு கனவேயன்றி,
மண்ணிற் காணாத தொன்றாமோ.?
யாரும் சிறியர், நானே பெரியோன்,எதிலும் சிறந்தது
என் செயலே,பாரினில் யாரும் எனக்கீடில்லை எனப்
பயனிலா சொற்கள் பகர்ந்தேனா.?
காணும் பொருளை எல்லாம் நன்றாய்த் தெரிய நோக்கி
தன்னையே நோக்கா சீரின் அமைந்த கண்மணி
போன்றே வாழ்ந்த வாழ்வும் நிஜமன்றோ..

பொல்லான் என்பரோ,புனிதன் என்பரோ,
கல்லான் என்பரோ,கலைஞன் என்பரோ,
சொல்லா வசைகள் சொல்வரோ,
சூழ்ந்து நின்று புகழ்வரோ
எல்லாம் சொல்லித் தூற்றிடினும்,
ஏதும் சொல்லாது வாழ்த்திடினும்,
மண்ணில் நானோர் ஒளிவட்டம்.
மற்றவ் வட்டம் நோக்கிடுவோர்,
கண்ணிற் காண்பது அவரவர்தம்
காட்சி அன்றி வேறாமோ.?
-----------------------------------
என் எண்ணத் துணுக்குகள் சில மீள்பதிவுக்கு வழிவகுத்துவிட்டன முழுவதும் படியுங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள்





   





.