மஹாபாரதக் கதைகள்---- ஜராசந்தன்
------------------------------------------------------
பலவகைத்
தலைப்புகளில் பதிவுகள் எழுதியாகி விட்டது. சிலர் சில தலைப்புகளில் கண்டதையும்
கேட்டதையும் எழுதும்போது’அட, இந்தத் தலைப்பில் நாமும் எழுதி
இருக்கிறோமே; என்னும் எண்ணம் வர அதைக்குறிப்பிட்டால் “ நீ எழுதாத தலைப்பே இல்லையா” என்று கேட்கும் போது அதில் சில சமயம் ஒரு நையாண்டிச் சுவை தெரிகிறது. ஆகவே
பதிவு எழுதப் போகும் முன் என்ன எழுதுவது என்னும் எண்ணம் மேலோங்கி நிற்கிறது.
கண்ணதாசன் பாடல்கள் பலவற்றின் கருத்து நம் பண்டைய இலக்கியங்களில் இருந்தும் புகழ்
பெற்றவர் எழுத்துக்களில் இருந்தும் கையாளப் பட்டதே. கருத்து அவர்களது எழுத்து
இவரது. இப்படி எழுதியே மிக்கப் புகழ் பெற்றுவிட்டார். ஆகவே நம் இதிகாசங்களிலிருந்தும்
இலக்கியங்களில் இருந்தும் கதைகளைச் சுட்டு என் வரிகளில் எழுதுவது தவறாகாது என்று
எண்ணுகிறேன். அப்பாடா... எவ்வளவு பெரிய முன்னுரை வேண்டி இருக்கிறது . நானும்
மஹாபாரதம் போன்ற இதிகாசங்களில் சொல்லப் பட்ட ஆனால் பரவலாக அறியப் படாத சில
கதாபாத்திரங்கள் பற்றி எழுதலாம்
என்றிருக்கிறேன். இதில் எனக்கு முன்னோடியாக வலையுலகில் பிரசித்தி பெற்ற் ஒருவர் பல
ஆண்டுகளுக்கு முன் எழுதப்போவதாக அறிவிப்பு இருந்தது. ஆனால் எழுதியதாகத்
தெரியவில்லை. ஆகவே நான் மகாபாரதத்தில் இருந்து சில கதாபாத்திரங்களைத்
தேர்ந்தெடுத்து எழுதப் போகிறேன். நான் கேட்ட படித்த விவரங்களின் அடிப்படையில்
எழுதப் போகிறேன். நடு நடுவே என் கருத்துக்களையும் கூறிப் போகலாம் It all depends…!
இது
ஒன்றும் புதிதல்ல, என் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வருபவர்கள் நினைவுக்கு நான்
பதிவிட்டிருந்த “சாந்தனுவின் சந்ததிகள்” என்ற
பதிவைக் கொண்டு வருகிறேன்(சொடுக்கிப் பார்க்கவும்) சரி .கதைக்குப் போவோமா...?
உக்கிரசேனர்
என்பவர் மதுராவில் ஆட்சி செய்து வந்தார். அவரது மகன் கம்சன். கம்சனின் சகோதரி
தேவகி. தேவகியின் எட்டாவது குழந்தையின் கையால் கம்சனின் மரணம் என்னும் அசரீரி
வாக்கு கேட்டு தேவகியை அவள் கணவனுடன் சிறையில் அடைத்து வைத்தான் கம்சன் அவனையும்
ஏமாற்றி ஆயர்பாடியில் யசோதையின் மகனாக வளர்ந்தான் கிருஷ்ணன்
ஒன்றைச்
சொல்ல வரும்போது தொடர்புடைய கதைகளையும் தொட்டுச் செல்ல வேண்டி இருக்கிறது இந்த
கம்சனுக்கு தன் இரு புதல்விகளைத் திருமணம் செய்து கொடுத்திருந்தான் ஜராசந்தன். தன்
புதல்விகளை விதவைகளாக ஆக்கிய கிருஷ்ணனிடம் ஜராசந்தனுக்கு கடும் பகை. பல முறை
கிருஷ்ணனிடம் போரிட்டு வந்தவனைத் தவிர்க்க கிருஷ்ணன் மதுராவில் இருந்து துவாரகா என்னும்
தீவில் இருந்து ஆட்சி செய்து வந்தான் கிருஷ்ணன். துவாரகை ஒரு தீவானதால்
ஜராசந்தனால் கிருஷ்ணனை வெல்ல முடியவில்லை. இந்த ஜராசந்தனை தான் கடவுளின் அவதாரம்
என்று தெரிந்த கிருஷ்ணனால் ஏனோ சம்ஹாரம் செய்ய முடியவில்லை. அல்லது கதையை
நகர்த்திச் செல்ல வியாசரின் உபாயமோ விளங்கவில்லை.
இந்த
ஜராசந்தன் ஒரு பராக்கிரமசாலி. இவன் பிறந்த கதையே அலாதியானது.
ப்ருஹத்ரதா என்னும்
அரசன் மகத நாட்டை ஆண்டு வந்தான் அவன் ஒரு சிறந்த சிவ பக்தன். அண்டை அரசுகளை அடக்கி
பேரும் புகழுமாக இருந்தான் பெனாரசின் இரட்டை அரச குமாரிகளை மணந்து அரசு செய்து
வந்தவனுக்கு வெகுநாட்கள்வரை புத்திர பாக்கியமில்லாதிருந்தது மனம் வெறுத்துக்
கானகம் சென்று சந்திரகௌஷிகா என்னும் முனிவருக்குப் பணிவிடை செய்து வந்தான்.இவனது
நிலைகண்டு இரங்கிய முனிவர் பழம் ஒன்றைக் கொடுத்து அதை அவனது மனைவி உண்டால் குழந்தை
பாக்கியம்கிடைக்கும் என்றார். இரு பெண்டாட்டிக்காரன் பழத்தினை இரு சம பாகமாக்கித்
தன் இரு மனைவியருக்கும் கொடூத்தான் இருவரும் கர்ப்பமுற்றனர், குழந்தைகளும்
பெற்றனர். ஆனால் ஒரு பழத்தை இரு பாதியாக்கி அரசன் கொடுக்க அவர்கள் உண்டதால் மனிதக்
கூறின் இரு பாதிகளைப் பெற்றெடுத்தனர். அரசன் கோபமுற்று அந்த இரு கூறுகளையும்
கானகத்தில் வீசி எறிந்தான் கானகத்தில் ஜைரை என்னும் அரக்கி அந்த இருகூறுகளையும்
உண்ணப் போகும் முன் ஒன்றாக்கினாள். என்ன ஆச்சரியம்,,,,,! இரு கூறுகளும் ஓருயிராகி
சத்தமாக அழத் துவங்கிற்று. உயிருள்ள குழந்தையை உண்ண விரும்பாத அரக்கி அந்தக்
குழந்தையை அரசனிடம் கொடுத்து நடந்தவற்றைக் கூறினாள்.அரசன் அக்குழந்தைக்கு
ஜராசந்தன் ( ஜைரையால் சேர்க்கப்பட்டவன்) என்று பெயரிட்டு வளர்த்தான். ஜராசந்தனும்
ஒரு சிவ பக்தன். அவனுக்கு ஒரே குறை. ஆண்வாரிசுஇல்லாத ஜராசந்தன் தன் இரு
புதல்விகளைக் கம்சனுக்குத் திருமணம் செய்வித்தான் கம்சன்
கிருஷ்ணனால்கொல்லப்பட ஜராசந்தனுக்கு
கிருஷ்ணன் மேல் தீராத பகையும் அதன் விளைவாகப் பலமுறை போர் தொடுத்தலும் நிகழ்ந்தது.
கதையின் முன் பாகத்திலேயே சொல்லப் பட்டது. துவாரகை மீது படை எடுத்துக் கிருஷ்ண்னைவெல்ல
யாகம் செய்வதாயிருந்தான்.,இதை அறிந்த கிருஷ்ணன் ஒரு உபாயம் கண்டான் யுதிஷ்டிரன்
ராஜசூய யாகம் செய்ய வேண்டுமானால் எல்லா அரசர்களும் அவன் தலைமையை ஏற்கவேண்டும் .
பராக்கிரமசாலியான ஜராசந்தன் ஏற்க மாட்டான். ஆகவே யாகம் துவங்கும் முன்னே அவனை
ஒழித்து விட வேண்டும் ஜராசந்தன் சிவ பூஜையில் இருந்து வெளிவந்தால் யாரும் கேட்டதை
இல்லை என்று சொல்லாத வள்ளல்.அர்ச்சுனன் பீமன் கிருஷ்ணன் மூவரும் அந்தண வேடம் தரித்து பூஜையில் இருந்து
வெளிவந்த ஜராசந்தனைப் துவந்த யுத்தத்துக்கு(மல்யுத்தத்துக்கு) வருமாறு அழைத்து
மூவரில் யாருடன் வேண்டுமானாலும் போரிடலாம் என்றனர். உடல் பலத்தில் சிறந்தவனாய்த்
தோற்ற மளித்த பீமனுடம் ஜராசந்தன் பொருதத் தயார் என்றான் இரு மலைகள் மோதுவது போல் இருவரும்
பல நாட்கள் இடைவிடாது யுத்தம் செய்தனர்.
பீமன் ஜராசந்தனை
வீழ்த்தி அவன் உடலை இரு கூறுகளாக்கி எறிந்தான். ஆனால் ஜைரை கண்டதே இங்கும்
நடந்தது. இரு கூறுகளும் ஒட்டிக் கொண்டு மீண்டும் ஜராசந்தனாகி யுத்தம் தொடர்ந்தது.
செய்வதறியாது திகைத்த பீமன் கிருஷ்ணனை நோக்க அவன் உடலின் இருகூறுகளை திசை மாற்றி
வலப் பாதி இடது புறமும் இடப்பாதி வலப்புறமும் வருமாறு எறிய ஒரு குச்சியை ஒடித்து
சைகை காட்டினான் சமிக்ஞையைப் புரிந்து கொண்ட பீமன் அவ்வாறே செய்தான் திசை மாறிய
இரு கூறுகளும் மீண்டும் ஒன்றாகச் சேர முடியாமல் ஜராசந்தன் மாண்டான்.
அவனால்
சிறைபிடிக்கப்பட்ட அனைவரும் மீட்கப் பட்டனர்.
இந்தக் கதை
எழுப்பும் சில கேள்விகளும் பொதுவாகக் கூறப்படும் பதில்களும் அவதாரக் கடவுள்
கிருஷ்ணனால் வெல்ல முடியாதவனா ஜராசந்தன். ?ஜராசந்தனைப் பற்றிய கதைகளுள் அவன் தீயவன் என்றோ துர்க்குணம் படைத்தவன் என்றோ
கூறப்பட்டதாகத் தெரியவில்லை.அந்தக் கால அரசர்களுக்குள் இருந்தகுணங்கள்தான் ஜராசந்தனிடமும்
இருந்தது.
அவதாரக் கடவுள்
கிருஷ்ணன் கையால் கொல்லப் பட்டால் ஜராசந்தன் முக்தி அடைந்து விடுவான். அது நேராமல்
தடுக்க கிருஷ்ணனின் உபாயம்தான் இந்த பீம ஜராசந்த மல்யுத்தம்.
யுதிஷ்டிரன்
ராஜசூய யாகம் செய்து அதன் விளைவால் போர் நடந்து ஏற்படும் உயிரிழப்புகளைத்
தவிர்க்கவே விரும்பினான். ஆனால் பீமனையும் அர்ச்சுனனையும் உசுப்பி விட்டு நேர்
வழியில் செல்லாமல் பீமனுடன் மல்யுத்தம் செய்வித்து அவனை ஒழித்துக்கட்ட
கிருஷ்ணனின் லீலை இது என்று பக்தர்கள் கூறுவார்கள்.
ஜராசந்தன் பீமன் துரியோதனன் கீசகன் பகாசுரன் அனைவருக்கும்
நட்சத்திரம் ஒன்றே என்று கூறப் படுகிறது இதில் யாராவது ஒருவர் கையால் ஒருவர் மரணம்
நேரிட்டால் அவர் கையாலேயே மற்றவரின் மரணமும் சம்பவிக்கும் என்பதால் பீமன் கையால்
மற்ற நால்வருக்கும் மரணம் என்பது விதி என்றும் கதை உண்டு. ஜராசந்தனின் மனைவிக்கு
கிருஷ்ணன் ஜராசந்தனைத்தன் கையால் கொல்ல மாட்டேன் என்று வாக்கு கொடுத்திருந்தாகவும்
ஒரு கதை உண்டு.கதைகளைப் படிக்கும் போது பல துணைக்கதைகளும் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன.ஜராசந்தனைக் கொல்ல இரு கூறுகளும் திசை மாற்றிப் போட்டால் மீண்டும் சேராது என்பது கிருஷ்ணனுக்கு எப்படித் தெரியும்?அவர் எல்லாம் அறிந்த ஆண்டவன் அவதாரமல்லவா/?