Tuesday, March 29, 2016

FOLLOW MY WORDS NOT MY DEEDS.


                                 நான் சொல்வதைக் கவனி என் செயல்களை அல்ல
                                ----------------------------------------------------------------------------
அண்மையில் நாளை என்பதை நினைக்காதவனின் நினைவுகள் என்றொரு பதிவு எழுதி இருந்தேன் அதில் சிகரெட் புகைப்பவனின் பதிலையும் எழுதி இருந்தேன் அது பற்றி இன்னும்  சில நினைவுகள்  ஒரு இளைஞனிடம் சிகரெட் புகைப்பது உடல் நலத்துக்குக் கேடு என்று கூறினேன் அதற்கு அவன் நீங்கள் புகை பிடித்ததில்லையா என்று கேட்டான்  பொய் சொல்லக் கூடாது அல்லவா.
வெகு நாட்கள் புகை பிடித்துக் கொண்டிருந்தேன் இப்போது நிறுத்தி விட்டேன்  என்றேன்
  அதற்கு அவன் ”நானும் சில நாட்கள் புகைத்துப் பார்த்து அனுபவித்த பின்  நிறுத்துகிறேன்” என்றான்.....! நாம் ஒருவருக்கு அறிவுரை  கூற வேண்டுமென்றால் அதற்கான தகுதி நமக்கு இருக்கிறதா  என்பதை யோசிப்பதே இல்லை எனலாம்
ஒரு முறை ஒரு பெண்மணி காந்திஜியிடம் தன் மகன் அதிகம் இனிப்பு சாப்பிடுகிறான் அது தவறு என்று காந்திஜி அறிவுரை  சொல்ல வேண்டும்  என்று கேட்டுக் கொண்டாளாம்  . அதற்கு காந்திஜி ஒரு வாரம் கழித்துத் தன்னை மகனுடன் வந்து பார்க்கச் சொன்னாராம்
அடுத்த வாரம் அந்தப் பெண்ணின் மகனுக்கு இனிப்பு அதிகம் உண்பது உடலுக்குக் கேடு என்று காந்திஜி அறிவுரை  கூறினாராம் ஒரு வாரம்  கழித்து ஏன் வரச் சொன்னார் என்பது அந்தப் பெண்மணிக்குப்  புரியவில்லை. காந்திஜியிடமே கேட்டார். அதற்கு காந்திஜி ” எனக்கும் இனிப்பு அதிக விருப்பம்  சிறுவனிடம் அறிவுரை சொல்லும் முன்  முதலில் நான் அந்தப் பழக்கத்தில் இருந்து மீள வேண்டும்  என்னால் முடிந்தால்தான் எனக்கு அறிவுரை கூறும் தகுதி இருக்கும்  அதை முதலில் என்னிடமிருந்தே துவங்குவதே சரியாகும் அல்லவா “ என்றாராம்

எனக்குத் தெரிந்த ஒருவரின் மகள் கல்லூரிக்குப் போகிறாள் ஒரு முறை அவளை ஒரு பையனுடன் பார்த்தேன் நமக்குத் தெரிந்த பெண் அல்லவா இவள்.  இந்தக் காலத்துப் பையன்கள் கிடைக்கும் சைக்கிள்காப்பில் ஐ லவ் யூ  சொல்லிவிடுவார்களேஎன்று மனசு கலவரமடைந்தது. நண்பனிடம் சொன்னேன் . அவன் அதை சீரியசாக எடுத்துக் கொண்ட மாதிரி தெரியவில்லை.
 அவன் ”சார் நீங்கள் காதலித்துதானே கல்யாணம் செய்து கொண்டீர்கள் நீங்கள் காதலிக்கத் துவங்கும்போது உங்களுக்கு வயது எவ்வளவாய் இருந்தது?”
 பொய் சொல்லக் கூடாது அல்லவா. “நான்  காதலிக்கத் துவங்கிய போது எனக்கு  வயது 24 “ என்றேன்
“ உங்கள் மனைவிக்கு?” என்று கேட்டான்   ”பதினேழு “ என்றேன் “நீங்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு எத்தனை ஆண்டுகள் ஆகின்றன” என்று கேட்டான்  நான் “ பெருமையுடன்” அது ஆயிற்று  ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல்” “என்றேன்
”“நீங்கள் காதலிக்கலாம் கல்யாணம் செய்து கொள்ளலாம் ஆனால் இப்போதைய சிறிசுகள் பேசினாலேயே குற்றமா” என்று கேட்டான்
நான் “எனக்கிருந்த மன முதிர்ச்சி மசூரிடி இப்போதைய சிறிசுகளுக்கு இருக்காது” என்றேன். அவன் சொன்னான் “ இப்போதைய இளைஞர்களுக்கு  அவர்களது லிமிட் தெரியும்  நம்மை விட புத்திசாலிகள்” என்றான்
 ”தவறு நடக்கக் கூடாதே என்று நினைத்துத்தான் சொன்னேன்’ என்றேன் என் மீசையில் மண் ஒட்டிக் கொண்டு
 இருக்கிறதா  என்று பார்க்க வேண்டும்
எனக்கு நான் ஏன் இப்படி வாய் கொடுத்து  மாட்டிக் கொள்கிறேன்  என்று தெரிவதில்லை  பிறரைப் பற்றிச் சுட்டும்போது  மூன்று விரல்கள் நம்மையே சுட்டுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் 
இன்னொரு நண்பரின் மகள் சாதி மாறி மொழி மாறி ஒரு பையனைக் காதலித்தாளாம் பெற்றோரிடம் சொன்ன போது அவர்கள் எதிர்த்தனர் அதற்கு அந்தப் பெண் ஜீஎம்பி அங்கிளும்  சாதி மாறி மொழிமாறிக் காதலித்துத்தானே கல்யாணம் செய்து கொண்டு இப்போது நன்றாக வாழவில்லையா  என்று போட்டாளாம் ஒரு போடு..... ! நண்பன் என்னிடம் YOU HAVE SET A WRONG PRECEDENT என்று குறைபட்டுக் கொண்டான் அந்தப் பெண்ணின் திருமணமும் நன்கு நடந்து ஆகிறது 16 ஆண்டுகள்
 எனக்கென்னவோ  பிறருக்கு அறிவுரை கூறும் முன்  ” நான் சொல்வதைக் கவனி செய்வதை அல்ல”என்று கூறித் துவஙுவதே சரியென்று படுகிறது                     


                   

 
  

Thursday, March 24, 2016

நாளை என்ற ஒன்றை நினைக்காதவனின் நேற்றைய நினைவுகள்


  நாளை என்ற ஒன்றை நினைக்காதவனின்   நேற்றைய நினைவுகள்
---------------------------------------------------------------------------------------


கோவாவில் ஜுவாரி கெமிகல்ஸ்  தொழிற்சாலைக்கு ஒரு பணி நிமித்தம் செல்ல வேண்டி இருந்தது. கோவாவை நினைத்தால் நினைவுக்கு வருவது இரண்டு மூன்று
சம்பவங்களும் கோவாவின் இயற்கை எழிலும். மேற்குத் தொடர்ச்சி மலையில் தவழும் கோவா கேரளத்தையும் நீலகிரி மலையையும் நினைவு படுத்துகிறது.காற்றில் ஒருவித மீன் வாசம் இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது, மட்காவ்ங் (MADGAON )என்று அறியப்படும் மர்மகோவா கோவாவில் குறிப்பிடத்தக்க நகரம்( ? ) அங்கு ஒரு நாள் மார்க்கெட் பகுதிக்குச் சென்றேன். எந்த விலங்கின் குடலோ தெரியாது , மாலை மாலையாகத் தொங்க விட்டிருந்தனர். என்னால் அங்கு நிற்க முடியவில்லை. வெளியேறி விட்டேன். 

கோவாவின் தலைநகரம் பணாஜி ( PANAAJI ) எனப்படும் பஞ்சிம் ஆகும். மண்டோவி நதியின் தீரத்தில் அமைந்திருக்கிறது. அருகே COLANGUT  கடற்கரை. நான் போயிருந்த காலத்தில் அங்கே ஹிப்பிகள் எனப்படுபவரின் ஆக்கிரமிப்பு என்றே கூறலாம். எந்த ஒரு ஆடையும் இன்றி கடற்கரையில் ஆண்களும் பெண்களும் சூரியக் குளியல் எடுத்துக் கொண்டிருப்பது கண்டு மிகவும் கூச்சமடைந்து நான் திரும்பி வர முயலுகையில் என்னை ஒரு மேனாட்டுப் பெண் வழி மறித்தாள். ( மேலாடை ஏதுமின்றி ) நான் பயந்து ஒதுங்க முயற்சிக்க அவள் என்னிடம் ஒரு ஜோடி காது வளையங்களைக் காட்டி வாங்கி கொள்ள வற்புறுத்தினாள். என் மனைவிக்கு இட்டு அழகு பார்க்குமாறு சிபாரிசு செய்தாள். என் பாக்கெட்டில் கைவிட்டு ரூபாய் இருபதோ முப்பதோ அவள் கையில் திணித்து விட்டு ஓடி விட்டேன். இப்போது நினைத்துப் பார்க்கும்போது அவளிடம் பேச்சுக் கொடுத்து நிறைய விஷயங்களை சேகரித்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.ஏதோ வாழ்க்கையைத்தேடி எங்கிருந்தொ இங்கு வந்து அல்லல் படும் அவர்களை இப்போது நினைத்துப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது.


ஒரு ஹோட்டல் லௌஞ்சில் ஒரு நண்பருக்காகக் காத்திருந்தபோது நான் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தேன். அருகில் ஒரு முதியவர் என் சிகரெட் புகையால் அவதிப் படுவது கண்டு அவரிடம் மன்னிப்பு கேட்டு என் சிகரெட்டை அணைத்து விட்டென். எனக்கு நன்றி கூறியவர் ஒரு கதை சொல்லலாமா என்று கேட்டார். காத்திருக்கும் பொழுதைக் கதை கேட்டுக் கழிக்கலாமே என்று கேட்கத் தயாரானேன்.

முடிந்தவரை அவர் சொன்ன மாதிரியே சொல்கிறேன்
 நான் இப்போதெல்லாம் யாரிடமும் சிகரெட் புகைக்காதீர்கள் என்று சொல்வதில்லை. ஒரு முறை ரயிலில் நான் பயணம் செய்து கொண்டிருந்தபோது என் அருகில் ஒரு வாலிபன் விடாமல் தொடர்ந்து புகைத்துக் கொண்டிருந்தான். என் கணக்குப் படி ஒரு மணி நேரத்தில் அவன் குறைந்தது மூன்று சிகரெட்டாவது புகைத்துக் கொண்டிருப்பான். பொறுக்க முடியாமல் நான் கேட்டே விட்டேன் ‘தம்பி ஒரு சிகரெட் என்ன விலை இருக்கும்.?அவன் அது சிகரெட்டின் ப்ராண்டைப் பொறுத்தது என்று கூறி அவன் புகைக்கும் சிகரெட் ஒன்றின் விலை ஒரு ரூபாய் என்றான்.( இது 1960-களில் நடந்த சம்பவம் )ஒரு நாளைக்கு எவ்வளவு சிகரெட் புகைப்பீர்கள் என்று கேட்டேன். மூன்று பாக்கெட் வரை இருக்கலாம் என்று கூறினான் நான் மனதில் கணக்குப் போட்டு ‘ ஒரு நாளைக்கு முப்பது ரூபாய், ஒரு மாதத்துக்கு ரூ.900-/ , ஒரு வருடத்துக்கு ரூ.10800-/ பத்து வருஷத்தில் ஒரு லக்ஷம் ரூபாய்க்கு மேல். சிகரெட்டுக்குச் செலவு செய்யாமல் இருந்தால் சொந்தமாக ஒரு வீடு கட்டிக் கொள்ளலாமே என்று கூறி, அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். எந்த உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல் சிறிது நேரம் இருந்து விட்டு அவன் என்னிடம் ‘அங்கிள் உங்களுக்கு சொந்தமாக எவ்வளவு வீடு இருக்கிறது ?என்று கேட்டான். சொந்த வீடு ஏதும் இல்லையப்பா. பொழுதை ஒட்டுவதே பெரும்பாடாகி இருக்கிறது. இதில் வீடு எங்கே கட்டுவது என்றேன் சிறிது நேரம் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தவன் பிறகு சொன்னது எனக்குள் பதிய சிறிது அவகாசம் தேவைப்பட்டது அவன் சொன்னான் எனக்கு சொந்தமாக மூன்று வீடு இருக்கிறது 

கோவாவில் புனித சேவியருடைய உடல் வைக்கப் பட்டிருக்கும் சர்ச்சுக்கும்  புகழ் பெற்ற அம்மன் கோயிலுக்கும் போக முடியவில்லை. சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போதே அவற்றை பயன் படுத்திக் கொள்ள வேண்டும்  நாளை என்பதே இல்லாமல் போக நேரலாம்
                                                    






Sunday, March 20, 2016

பழையன புதுப்பொலிவுடன்


                                                      பழையன புதுப்பொலிவுடன்
                                                      ---------------------------------------


2014 –ம் ஆண்டு பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன் எனக்கு இருக்கும் ஹாபிகளில்  அறிந்தவர் குரல்களைப் பதிப்பித்துக்  கொள்வதும் ஒன்று. என்னிடம் இருபதுமுப்பது வருடத்து  பழைய டேப்புகளில் பலரது குரல்கள் பதிந்திருக்கின்றன. இப்போது சிலர்  உயிரோடு இல்லை  அவர்களது நினைவு வரும்போது அவர்களது குரல்களைக் கேட்பதில் ஒரு அலாதி திருப்தி ஏற்படும்  என் பேரக் குழந்தைகளின் மழலைக் குரல்களை இப்போது கேட்பதும் மிகவும் பிடிக்கும்
ஆனால் துரதிர்ஷ்டமாக என்னுடைய டேப் ரெகார்டர் பழுதாகி விட்டதாலும்  அதை ரிபேர் செய்ய யாரும் முன் வராததாலும்  அந்த மகிழ்ச்சியை இழக்க வேண்டி உள்ளது. என் வீட்டுக்கு வந்திருந்த பதிவர்கள் சமுத்ரா எனும் மது ஸ்ரீதர் திருமதி ஷைலஜா . திரு ஐயப்பன் போன்றோரது குரல்களும்  பதிவு செய்திருந்தேன் டாக்டர் கந்தசாமி ஐயா வந்தபோது அவரது குரலை டேப் செய்யவும்  அவருக்கு ஏற்கனவே பதிவாக்கி இருந்த குரல்களைப் போட்டுக்காட்டவும்  இயலாமல் என் டேப் ரெகார்டர் பழுதாகி இருந்தது செய்வது அறியாமல் புலம்பிக் கொண்டிருந்தேன்  அப்போது ஒரு நாள் என் பெரிய மச்சினனும்  அவனது மகனும் வந்திருந்தபோதும்  என்  புலம்பல் இருந்தது. என் மச்சினனின்  மகன் உடனே அமேஜான்நிறுவனத்துக்குத் தொடர்பு கொண்டு  ஒரு கருவியை ஆர்டர் செய்தான் இரு நாட்களில் அது வந்து விட்டது அதை வைத்துக் கொண்டு நான் குருடர்கள் யானையை அடையாளம் காண முயன்றது போல் சரியாக ஏதும் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன் அவனை மீண்டும் வரவழைத்து அது பணி செய்யும் முறை பற்றிக் கேட்டேன்  அவன் சொன்னது எல்லாமே எனக்கு கிரீக்  லத்தீன் போல இருந்தது மீண்டும் ஒரு முறை அவனை வரவழைத்து அதை டெமான்ஸ்ட்ரேட்  செய்யச் சொன்னேன்  ஒரு சாஃப்ட் வேர் சிடி அதில் இருந்தது. அதை முதலில் என்  கணினியில் டௌன் லோட் செய்தான் அதுவே சிரமமானபகுதி  வாக்மானுக்கு வருவது போல் டேப்பை செருக ஒரு வசிi இருந்தது. டேப்பை அதில் ஓடவிட்டு  அதில் இருப்பதை என் கணினியில் ஏற்றினான்  பிரகு அதையே எம்பி 3  ஃபைலாக மாற்றினான்  இப்போது கணினியிலிருந்து  குரல்களை கேட்க முடியும்  தேவைப் பட்டால் பென்  ட்ரைவிலும்  சேமிக்கலாம்  ஆனால் என்ன.. ஒவ்வொரு டேப்பும் ஒன்றரை மணிநேரம் ஓடும் அதைப் பொறுமையாகக் கணினியில் ஏற்ற வேண்டும்  நான் நான்க டேப்புகளை ஏற்றி விட்டேன் எம்பி 3 வடிவில் அவை என் கணினியில் . அதை என் உறவினர்கள் வந்தபோது  போட்டுக் காட்டியபோ அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்  மச்சினன் மகனது சிறு வயதுக் குரலும்  அதில் அடக்கம்  எதையோ சாதித்து விட்டது போல் ஒரு உணர்வு. அந்தக் கருவியின் விலை ரூ.2500/- கணினியில் சேமித்து எப்போது வேண்டுமானாலும் போட்டுக் கேட்கலாம் என் பழைய பதிவில் பலரும் அவர்களிடம் இருக்கும்  பழைய டேப்புகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்கள் அவை ஒரு வேளை மார்க்கெட்டில் சீடிக்களாகக் கிடைக்கலாம்  ஆனால் அது உற்றார் உறவினர் குரல்களைக் கேட்பது போல் ஆகுமா ? 
 ஒரு முறை என் பழைய டேப் ரெகார்டரை ஓரளவு ரிபேர் செய்து  டேப்பினை ஓடவிட்டு அதில் வந்த குரல்களை என் கைபேசியில் பதிவு செய்து “ மறக்க முடியுமா -குரல்கள்” என்றொரு பதிவு எழுதி இருந்தேன் பார்க்க இங்கே சொடுக்கவும்                     


                   

 


Wednesday, March 16, 2016

நாம் படைத்த கடவுள்கள்


                                         நாம் படைத்த கடவுள்கள்
                                          -----------------------------------


ஒரு காண முடியாத சக்தியை நம்மில் பலரால் கற்பனை செய்து பார்க்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் விக்கிரக ஆராதனையின் முக்கிய காரணமாய் இருந்திருக்கவேண்டும். ஆண்டவனுக்கு நம்மில் ஒருவன் போல் உருவம் கற்பித்து அவனுக்கு ஏகப்பட்ட சக்தியையும் கொடுத்து காப்பவனாகக் கருதி  வழிபடும்போது மன அமைதி கிடைக்கிறது. அழிப்பவனாகக் கருதி வழிபடும்போது   தீய செயல் செய்வதை பயத்தால் செய்யாமலிருக்கச் செய்கிறது. கடவுளுக்கு ஏராளமான சக்தி உண்டு என்று நாம் நம்ப, அவனுக்கு பிரம்மா, விஷ்ணுசிவன்  முறையே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களின் வெளிப்பாடுகளாக அறிவிக்கப்படுகிறோம். இன்னும் கடவுளை ராமனாகவும் கண்ணனாகவும், முருகனாகவும்  கற்பிதம் செய்து அவர்களின்  சக்திகளில்  நம்பிக்கை  வைத்து  அவர்களை  வழிபாடு செய்தால் நலம்  பெறுவோம் எனும்  நம்பிக்கை  சிறு  வயது  முதலே  வளர்க்கப்படுகிறதுதாயே  மனிதனின்  முதல் தெய்வம்  என்று  கருதப்படும்  நம் நாட்டில், கடவுளை அன்னையின்  வடிவத்திலும்  வழிபடுகிறோம்சரஸ்வதியாக , லட்சுமியாக , பார்வதியாகஒவ்வொரு  தெய்வமும்  ஒவ்வொரு  சக்தியின் பிரதிபலிப்பாக  வணங்க  வளர்க்கப்படுகிறோம்.
இந்தக் கடவுள்களின் சக்தியில் நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதற்காகவே  ஆயிரமாயிரம்   கதைகளும்  புனைவுகளும்   ஏற்பட்டிருக்க வேண்டும்.

சூனியமான இருண்ட அண்டத்தில் சூரியனின் ஒளியே வாழ்வின் ஆதாரமாக இருப்பதால் ஆதியில்  சூரிய  வழிபாடும்பிறகு உயிர்  வாழப்  பிரதானமான  அக்னி,ம் , காற்று , நீர் , மண்  போன்றவைகளும்  வழிபாட்டுக்கு  உரியனவாயின .

எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் வரும் வழக்கம்போல் நினைப்பதைப் பதிவில் பகிர்கிறேன் ஒரு முறை அடையாளங்கள் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன் அதில் ஊர் பேர் அங்க அடையாளங்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல கடவுளர்களுக்கும் உண்டு. குழல் வைத்துக் கொண்டிருப்பவன் கண்ணன், முருகனுக்கு வேல், லக்ஷ்மிக்கு தாமரை, சரஸ்வதிக்கு வீணை, பெருவிழிகளுடன் நாக்கைத் துருத்திக் கொண்டிருந்தால் காளி சிவனுக்கு பாம்பு சூலம், கொண்டையில் அரை நிலா இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் படுத்துக் கொண்டிருந்தால் அரங்கன் , நின்று கொண்டிருந்தால் பெருமாள், தவழ்ந்து கொண்டிருந்தால் கண்ணன், கோவணத்துடன் இருந்தால் குமரன். நமக்கு இருக்கும் அங்க லட்சணங்களை கடவுளுக்கும் வைத்து நம்மைப் போல் அவருக்கும் உருவம் கொடுத்து நம்மில் அவரைக் காணும்( அல்லது அவரில் நம்மைக் காணும்) பாங்கு வியக்க வைக்கிறது

இருந்தாலும் நம்மில் அவர்களை காணும்போது  நாம் சமமாகக் கருதப் படலாம் என்னும் காரணமே கடவுளர்களுக்கு  ஆடை ஆபரணங்களுடன்  சில பிரத்தியேக அடையாளங்களையும் சக்தியையும் நிர்ணயித்து கொடுத்திருக்கிறோம் தனியே வில்லுடன் ஒருவரை உருவகித்தால் அவர் யாராக வேண்டுமானாலும் எண்ணப்படலாம் ஆகவேதான் ராமர் என்று அடையாளப் படுத்த கூடவே இன்னொரு வில்லாளியை , லக்க்ஷ்மணனுடன் அனுமன் சீதை என்று சேர்த்து வைத்து அடையாளப் படுத்துகிறோம் அதே போல் கண்ணனைக் குழந்தையாகக் காட்டும்போது குமரனிடம் இல்லாத மயில் பீலிபோன்றவற்றுடன்  அறிகிறோம் குமரன் என்றாலேயே கையில் வேல் நெற்றியில் விபூதிப் பட்டை சில நேரங்களில் வெறும் கோவணமே ஆடை  என்று பாகுபடுத்தி வித்தியாசம் பாராட்டுகிறோம்காளி என்றாலேயே பயங்கரமானவள் என்று தெரிவிக்க துருத்திய நாக்கு எறியும் நிலையில்  சூலாயுதம் போன்றவற்றைத் தரித்திருபவளாகக் காட்டுகிறோம்
 மேலும் அங்க லாவண்யங்களைக் கற்பனை செய்து வைத்து எழுதிய இறைப் பாடல்களும் உருவங்களுக்கு மெருகூட்ட உதவி இருக்கலாம்இந்தமாதிரி எண்ணங்கள் எல்லாம் என் கற்பனையில் தோன்றுவதே கடவுளர்களின் உருவங்கள் இவால்வ்  ஆனவிதத்தைக் கற்பனை செய்து பார்க்கும்போது தோன்றுவனவே நான் எழுதுவது வாசகர்களுக்கும் இந்தமாதிரி உருவங்கள் உருவான கதையோ கற்பனையோ இருந்தால் தெரிவிக்கலாமே
 அதிக கற்பனை இல்லாமல் ஓரளவு காரண காரியங்களுடன் இவால்வ் ஆனதே லிங்கமும் ஆவுடையாரும் என்று தோன்றுகிறது  சிருஷ்டியின் காரணமான  ஆண்பெண் சேர்க்கையையே  உருவகித்துக் கடவுள் வடிவம் கொடுத்து விட்டார்களோ என்று தோன்றும் போது அதைச் சொன்னால் பலரும் தவறாக எண்ணக் காரணமாகலாம் என்று தோன்றுவதால்  அதிகம் விவரிக்கவில்லை ஆனால் அதுவே லாஜிக்கலாகத் தெரிகிறது
 அது என்னவோ தெரியவில்லை  நம் நம்பிக்கைகளும்  வழிபாடுகளும் என்னில் என்னவெல்லாமோ எண்ணங்களைத் தோற்றுவித்து பதிவெழுத வைக்கிறது.