செவ்வாய், 29 மார்ச், 2016

FOLLOW MY WORDS NOT MY DEEDS.


                                 நான் சொல்வதைக் கவனி என் செயல்களை அல்ல
                                ----------------------------------------------------------------------------
அண்மையில் நாளை என்பதை நினைக்காதவனின் நினைவுகள் என்றொரு பதிவு எழுதி இருந்தேன் அதில் சிகரெட் புகைப்பவனின் பதிலையும் எழுதி இருந்தேன் அது பற்றி இன்னும்  சில நினைவுகள்  ஒரு இளைஞனிடம் சிகரெட் புகைப்பது உடல் நலத்துக்குக் கேடு என்று கூறினேன் அதற்கு அவன் நீங்கள் புகை பிடித்ததில்லையா என்று கேட்டான்  பொய் சொல்லக் கூடாது அல்லவா.
வெகு நாட்கள் புகை பிடித்துக் கொண்டிருந்தேன் இப்போது நிறுத்தி விட்டேன்  என்றேன்
  அதற்கு அவன் ”நானும் சில நாட்கள் புகைத்துப் பார்த்து அனுபவித்த பின்  நிறுத்துகிறேன்” என்றான்.....! நாம் ஒருவருக்கு அறிவுரை  கூற வேண்டுமென்றால் அதற்கான தகுதி நமக்கு இருக்கிறதா  என்பதை யோசிப்பதே இல்லை எனலாம்
ஒரு முறை ஒரு பெண்மணி காந்திஜியிடம் தன் மகன் அதிகம் இனிப்பு சாப்பிடுகிறான் அது தவறு என்று காந்திஜி அறிவுரை  சொல்ல வேண்டும்  என்று கேட்டுக் கொண்டாளாம்  . அதற்கு காந்திஜி ஒரு வாரம் கழித்துத் தன்னை மகனுடன் வந்து பார்க்கச் சொன்னாராம்
அடுத்த வாரம் அந்தப் பெண்ணின் மகனுக்கு இனிப்பு அதிகம் உண்பது உடலுக்குக் கேடு என்று காந்திஜி அறிவுரை  கூறினாராம் ஒரு வாரம்  கழித்து ஏன் வரச் சொன்னார் என்பது அந்தப் பெண்மணிக்குப்  புரியவில்லை. காந்திஜியிடமே கேட்டார். அதற்கு காந்திஜி ” எனக்கும் இனிப்பு அதிக விருப்பம்  சிறுவனிடம் அறிவுரை சொல்லும் முன்  முதலில் நான் அந்தப் பழக்கத்தில் இருந்து மீள வேண்டும்  என்னால் முடிந்தால்தான் எனக்கு அறிவுரை கூறும் தகுதி இருக்கும்  அதை முதலில் என்னிடமிருந்தே துவங்குவதே சரியாகும் அல்லவா “ என்றாராம்

எனக்குத் தெரிந்த ஒருவரின் மகள் கல்லூரிக்குப் போகிறாள் ஒரு முறை அவளை ஒரு பையனுடன் பார்த்தேன் நமக்குத் தெரிந்த பெண் அல்லவா இவள்.  இந்தக் காலத்துப் பையன்கள் கிடைக்கும் சைக்கிள்காப்பில் ஐ லவ் யூ  சொல்லிவிடுவார்களேஎன்று மனசு கலவரமடைந்தது. நண்பனிடம் சொன்னேன் . அவன் அதை சீரியசாக எடுத்துக் கொண்ட மாதிரி தெரியவில்லை.
 அவன் ”சார் நீங்கள் காதலித்துதானே கல்யாணம் செய்து கொண்டீர்கள் நீங்கள் காதலிக்கத் துவங்கும்போது உங்களுக்கு வயது எவ்வளவாய் இருந்தது?”
 பொய் சொல்லக் கூடாது அல்லவா. “நான்  காதலிக்கத் துவங்கிய போது எனக்கு  வயது 24 “ என்றேன்
“ உங்கள் மனைவிக்கு?” என்று கேட்டான்   ”பதினேழு “ என்றேன் “நீங்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு எத்தனை ஆண்டுகள் ஆகின்றன” என்று கேட்டான்  நான் “ பெருமையுடன்” அது ஆயிற்று  ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல்” “என்றேன்
”“நீங்கள் காதலிக்கலாம் கல்யாணம் செய்து கொள்ளலாம் ஆனால் இப்போதைய சிறிசுகள் பேசினாலேயே குற்றமா” என்று கேட்டான்
நான் “எனக்கிருந்த மன முதிர்ச்சி மசூரிடி இப்போதைய சிறிசுகளுக்கு இருக்காது” என்றேன். அவன் சொன்னான் “ இப்போதைய இளைஞர்களுக்கு  அவர்களது லிமிட் தெரியும்  நம்மை விட புத்திசாலிகள்” என்றான்
 ”தவறு நடக்கக் கூடாதே என்று நினைத்துத்தான் சொன்னேன்’ என்றேன் என் மீசையில் மண் ஒட்டிக் கொண்டு
 இருக்கிறதா  என்று பார்க்க வேண்டும்
எனக்கு நான் ஏன் இப்படி வாய் கொடுத்து  மாட்டிக் கொள்கிறேன்  என்று தெரிவதில்லை  பிறரைப் பற்றிச் சுட்டும்போது  மூன்று விரல்கள் நம்மையே சுட்டுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் 
இன்னொரு நண்பரின் மகள் சாதி மாறி மொழி மாறி ஒரு பையனைக் காதலித்தாளாம் பெற்றோரிடம் சொன்ன போது அவர்கள் எதிர்த்தனர் அதற்கு அந்தப் பெண் ஜீஎம்பி அங்கிளும்  சாதி மாறி மொழிமாறிக் காதலித்துத்தானே கல்யாணம் செய்து கொண்டு இப்போது நன்றாக வாழவில்லையா  என்று போட்டாளாம் ஒரு போடு..... ! நண்பன் என்னிடம் YOU HAVE SET A WRONG PRECEDENT என்று குறைபட்டுக் கொண்டான் அந்தப் பெண்ணின் திருமணமும் நன்கு நடந்து ஆகிறது 16 ஆண்டுகள்
 எனக்கென்னவோ  பிறருக்கு அறிவுரை கூறும் முன்  ” நான் சொல்வதைக் கவனி செய்வதை அல்ல”என்று கூறித் துவஙுவதே சரியென்று படுகிறது                     


                   

 
  

30 கருத்துகள்:

  1. நல்ல பதிவு. காந்திஜி இனிப்பு சம்பவத்தை காந்திக்கு பதிலாக ராமகிருஷ்ண பரமஹம்சர் என்று படித்திருக்கிறேன் என்று நினைவு!

    காதல் கல்யாணம் அவ்வளவு குத்தமா என்ன!

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் செய்வதைத்தான் மற்றவர்கள் பின்பற்றுவார்கள்.

    பதிலளிநீக்கு
  3. செயல்தான் அதிகம் கவனிக்கப்படும் ஐயா

    பதிலளிநீக்கு
  4. உலகில் மிகவும் எளிதில் கிடைப்பது, ஆனால் பின்பற்ற மிகவும் கடினமானது : அறிவுரை.

    பதிலளிநீக்கு
  5. நண்பரே சொல்லை கவனிக்க இது காலம் அல்ல
    செயல்களை நன்றே கவனித்துக் கொள்வார்கள்....
    தாங்கள் அறிவுரை கூறினவர்கள் எடுத்தெறிந்து
    பேசியிருக்கலாம் தீ சுடும் போதே உணர்வார்கள்
    அய்யோ இந்த தீ இவ்வளவு சுடுமா என்று....

    பதிலளிநீக்கு
  6. உண்மை. ‘ஊருக்குதான் உபதேசம்..’ எனக் கடந்து போய்க் கொண்டேயிருப்பார்கள்.

    பதிலளிநீக்கு

  7. @ ஸ்ரீராம்
    நானும் படித்த நினைவில்தான் எழுதினேன் காந்திஜியோ பரமஹம்சரோ யாராயிருந்தால் என்ன விஷயம்தான் முக்கியம் அல்லவா வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு

  8. @ ஸ்ரீராம்
    /காதல் கல்யாணம் அவ்வளவு குத்தமா/ காதல் கல்யாணத்தில் நல்லது. வெறும் ஈர்ப்பினால் தோன்றுவது அல்ல என்று புரிய மனமுதிர்ச்சி வேண்டும் அல்லவா

    பதிலளிநீக்கு

  9. @ டாக்டர் கந்தசாமி
    நான் செய்வதைத்தான் பிறர் பின்பற்றுவார்கள் என்பது தெரிந்ததே அதனால்தான் தலைப்பு அப்படி. வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  10. @ கரந்தை ஜெயக்குமார்
    செயல்தான் அதிகம் கவனிக்கப் படுகிறதுசெயலும் சொல்லும் ஒன்றாயிருந்தால் நல்லது வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  11. @ உமேஷ் ஸ்ரீநிவாசன்
    என் நண்பன் ஒருவன் கூறுவான் The best advice is not to advise. இருந்தாலும் நெருங்கியவர்களிடம் அறிவுரை கூறாமல் இருக்க முடிவதில்லை. வருகைக்கு நன்றி உமேஷ்

    பதிலளிநீக்கு
  12. அஜய் சுனில்கர் ஜோசப்
    நம் அனுபவங்களில் கற்றது சில நேரங்களில் அறிவுரையாகிறது அதுவும் நெருங்கியவர்களிடம் மட்டும்தான் வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு

  13. @ ராமலக்ஷ்மி
    ஊருக்கெல்லாம் உபதேசம் இல்லை. நெருங்கியவர்களுக்கு மட்டுமே அதுவும் எப்போதும் அல்ல .அவ்வப்போதுசொல்வது எல்லாம் செயலில் இருக்க முடியாது. தலைப்பை கவனியுங்கள் வருகைக்கு நன்றி மேம்

    பதிலளிநீக்கு
  14. // அதற்கு அந்தப் பெண் ஜீஎம்பி அங்கிளும் சாதி மாறி மொழிமாறிக் காதலித்துத்தானே கல்யாணம் செய்து கொண்டு இப்போது நன்றாக வாழவில்லையா என்று போட்டாளாம் ஒரு போடு..... ! //

    அதானே பார்த்தேன். மீள்பதிவில் கொஞ்சம் கூடுதல் விவரங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  15. உண்மைதான் பிறருக்கு அறிவுரை சொல்லும் பொழுது நாம் சரிதானா ? என்று நினைத்துப் பார்க்கத் துவங்கினால் ? உலகில் யாருமே யோக்கியர்களா இருக்க மாட்டார்கள் என்பது எமது தாழ்மையான கருத்து ஐயா

    நாம் யாருக்காக ? சொல்கிறோம் நமக்கு வேண்டியவர்களுக்காகத்தானே... அது நமது கடமை நாம் ஒழுக்கமில்லை என்பதற்காக மகன் தவறான வழியில் போகும் பொழுது பார்த்துக்கொண்டு ஒதுங்கிப் போக முடியுமா ?

    காந்திஜியின் விளக்கத்தில் அருமையான விடயம் இருப்பது உண்மை.

    ஒரு மனிதன் எப்படி எல்லாம் வாழக்கூடாதோ.. அப்படி எல்லாம் நான் வாழ்ந்து இருக்கிறேன் ஆகவே இப்படித்தான் வாழவேண்டும் என்று உனக்கு புத்தி சொல்லும் யோக்யதை எனக்கு உண்டு.
    -கண்ணதாசன்
    அர்த்தமுள்ள இந்து மதத்தில் கண்ணதாசன் இப்படித்தான் தொடங்கி இருக்கின்றார்.

    பதிலளிநீக்கு
  16. அனுபவம்.. அறிவுரை .. இதெல்லாம் எதற்கு!..

    இளையோராயினும் முதியோராயினும்(!) விரும்புவதில்லை..

    அவரவர்க்கும் தம்மைத் தாமே காத்துக் கொள்ள வேண்டிய கடமை இருக்கின்றது..

    வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்வது சில பேருடைய சுபாவம்..
    எனினும் நமக்கு விசேஷமானது..

    ஐயா - அவர்களுடைய பதிவினைத் தொடர்ந்து ஒரு பதிவு வழங்குவதாக சமீபத்தில் சொல்லியிருந்தேன்..

    அதனோடு மேலும் ஒன்று சேர்ந்து கொண்டிருக்கின்றது..

    பதிலளிநீக்கு

  17. @ தி தமிழ் இளங்கோ
    ஐயா வணக்கம் இது மீள்பதிவல்ல. எல்லா விவரங்களும் இதற்காக எழுதியது. வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு

  18. @ கில்லர்ஜி
    எதையும் பிரபலங்கள் சொன்னால்தான் மதிப்பு. நாம் சொன்னது என்றால் பொலிவில்லை. வருகைக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு

  19. @ துரை செல்வராஜு
    கில்லர்ஜியின் பின்னூட்டத்தை கவனிக்க வேண்டுகிறேன் அறிவுரைகள் விரும்புபவர்க்கல்ல. நமக்கு வேண்டப்பட்டவருக்கும் தேவையானவருக்குமே. உங்கள் பதிவைப் படிக்க ஆவலுடன் வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  20. ஐயா நீங்கள் கூறுவது சரிதான். சிந்திக்கவேண்டியது. அந்த முறையைக் கடைபிடிக்க நானும் முயற்சிப்பேன்.

    பதிலளிநீக்கு

  21. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    நான் கூறுவது பல முறைக் குட்டு வாங்கியபின் தோன்றிய எண்ணங்களே . ஆனால் நமக்கு வேண்டியவர்களுக்கு நம்மைப் பற்றியும் தெரியுமே எல்லாவற்றிலும் நம்மைப் பின் பற்றக் கூடாது என்பதைக் குறிக்கவே அந்தத் தலைப்பு. வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  22. ஐயா நீங்கள் என்னதான் சொன்னாலும் ‘கோரப்படாத அறிவுரை’யை (Unsolicited advice) யாரும் ஏற்றுக்கொள்வதில்லை.

    பதிலளிநீக்கு

  23. @ வேநடனசபாபதி
    அதுவும் சரிதான் .வருகைக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  24. இந்தக்கால இளசுகளைப் பற்றிய உங்களுடைய அவதானிப்பு சரியானதுதான். மாநகரங்களான டெல்லியிலும், பெங்களூரிலும் நானும் இதுகளை அவதானித்து வருகிறேன். வெறுப்புடன் அல்ல; மனதில் இயற்கையாக எழும் கவலையுடன், கரிசனத்துடன்.

    `ஐ ல்வ் யூ` என ஒரு யுவதியிடம்போய்ப் பல்லிளிக்கும், சீண்ட முற்படும் பசங்களில் பெரும்பாலானோருக்கு `லவ்` என்பது ஒரு வாலிபப் பொழுதுபோக்கு, ஒரு குதூகலம், வார்த்தைகளில் அரங்கேற்றவேண்டிய ஒரு சாகசம் என்கிற பிம்பம்தான் உள்ளது. பொறுப்புணர்ச்சியோ, குறிப்பிட்ட பெண்ணின்மீது உயர்வான உணர்வோ, அன்போ அதில் பொதுவாக இருப்பதில்லை. நமது சப்பையான சினிமாப் படங்களும் இதற்கு முக்கிய காரணம். (இக்காலத்திய இளைஞர்களிலும் விதிவிலக்குகள் உண்டுதான். அவர்களைப்பற்றியது அல்ல நான் மேற்சொன்னது).

    நீங்கள் வாய்கொடுத்து மாட்டிக்கொள்ளவில்லை. நல்ல நோக்கத்துடன்தான், தவறு நிகழ்ந்துவிடக்கூடாதே என்கிற பதற்றத்தில்தான் நண்பரிடம் கூறியிருக்கிறீர்கள். வலிய வரும் ஆலோசனை/புத்திமதியை யாரும் சட்டை செய்வதில்லை. சொல்வது யார், அவரே எச்சரிக்கிறாரே, நாம் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும் என்கிற உள்ளுணர்வு பெற்றொர்களுக்கே இல்லை. பிள்ளைகளைப்பற்றி என்ன சொல்வது? கவலைப்படலாம். வேறென்ன செய்யமுடியும்?

    பதிலளிநீக்கு

  25. @ ஏகாந்தன்
    கூர்ந்து வாசித்து எழுதப்பட்ட பின்னூட்டத்துக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  26. இந்த காலத்தில கருத்து சொன்னா தெறிச்சு ஓடறாங்க. தகுதியுடையவர்களின் கருத்துக்களையும் அறிவுரைகளையும் கேட்க ஆளிலில்ல.

    துஷ்டனக் கண்டா தூர விலகுன்னு நாமதான் தள்ளிப்போகணும். அவங்க கண்ணுக்கு கருத்து சொல்றவன்தான் துஷ்டனாத் தெரியறாங்க! சோ ரெண்டு பேரும் தள்ளிப்போறதுதான் சரி. எல்லாருக்கும் பட்டாத்தான் புத்தி வரும்.

    காதலிப்பது தவறல்ல ஆனா அது காதல்தான்னு எப்படி சொல்றது? இப்பலாம் பத்து வயசிலயே காதல் வருதாமா? எங்க போய் சொல்ல!!!

    உங்க நண்பர் சொன்னத முற்றிலுமா ஏத்துக்க முடியாது ஐயா ~இப்போதைய இளைஞர்களுக்கு அவர்களது லிமிட் தெரியும் நம்மை விட புத்திசாலிகள்~..புத்திசாலித்தனமெல்லாம் நல்லதுல இல்ல, தப்ப மறைக்கரதுலதான் இருக்கு!!!

    அனுபவம்தான் நல்ல ஆசான்...இது எல்லா ஜெனரேசனுக்கும் பொருந்தும்..

    பதிலளிநீக்கு

  27. @ அருள்மொழிவர்மன்
    சிலர் அனுபவப்பட்டுத்தான் தெரிந்து கொள்ள முடியும் ஆனால் நமக்கு வேண்டியவர்களை ஒதுக்குவது கஷ்டமாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  28. நான் இப்போது கவனிக்கவே விரும்புகிறேன். அதிகம் பேசுவதே இல்லை. மனமகிழ்ச்சிக்கு இதுவே முக்கியக் காரணம். நன்றி.

    பதிலளிநீக்கு
  29. வீடு குத்தகைக்கு வேண்டும்

    பதிலளிநீக்கு