வியாழன், 15 மார்ச், 2012

நினைவில் நீ (அத்தியாயம் பதினான்கு.)


                                 நினைவில் நீ.( நாவல் தொடராக.)
                                -----------------------------------------------

                                                      -----  14  -----

        பாபு வந்த பிறகும்,அவனது பேச்சுகளைத் தான் கேட்ட பிறகும், சியாமளாவுக்கு அவன் மேல் ஒரு அலாதியான மதிப்பு ஏற்பட்டிருந்தது. அவள் கல்யாணி அம்மா வீட்டுக்கு வருவதை மிகவும் குறைத்துக் கொண்டிருந்தாள். அப்படியே வந்தாலும் பாபு இல்லாத சமயம் பார்த்து வருவாள். அவளுக்கு பாபுவின் வீட்டில் நடந்த விவகாரங்கள் எல்லாம் ஓரளவுக்குத் தெரிய வந்தது. ஒன்றிரண்டு முறைகள் அவள் இருக்கும்போது பாபு திரும்பினால், அவளுக்கு பேச்சு வராது, நிலை கொள்ளாது மனம் அடித்துக் கொள்ளும் .இந்த மாதிரியதான ஒரு உணர்ச்சி அவளுக்கே புதுமையாக இருந்தது. இதற்கு காரணங்காணத் தன் உள்ளத்தை வெகுவாக ஆராய்ந்தவளுக்கு விடை ஏதும் கிடைக்க வில்லை.


    வீட்டில் அம்மை வந்திருந்தபோது ,கல்யாணி அம்மா அவள் வருவதை தற்காலிகமாக நிறுத்திக் கொள்ள வேண்டி இருந்தாள். அது மிகவும் சரியானதென்றே அவளுக்குத் தோன்றியது. இருந்தாலும் பாபுவுக்கு உடல் நிலை சரியில்லை என்று கேட்ட போது, அவனைப் பார்க்க வேண்டுமென்று ஒரு ஆசை அவள் மனதில் ஆல விருட்சமாய்ப் படர்ந்தது. சந்துரு, ரவியிடம் அவ்வப்போது விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டவள் பாபு தேறிவிட்டான் என்று அறிந்ததும் அடக்க முடியாத ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ள அவர்கள் வீட்டுக்குச் செல்வதென்று முடிவு செய்தாள்


    பாபுவுக்கு தமிழ் மன்றம்,மக்கள் மன்றமாக மாறும் பணி தன்னால் தடை பட்டுக் கொண்டிருக்கிறதே என்ற ஏக்கம் அதிகரித்து வந்தது. உடல் நிலை சரியானதும், செய்ய வேண்டிய காரியங்களில் முழு மூச்சுடன் இறங்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான். துவக்க வேண்டிய பள்ளியில் பணியாற்ற வேண்டிய ஆட்களை சேகரிப்பது அவ்வளவு கடினமாகத் தோன்ற வில்லை.அவனுக்கு. தன்னுடன் கானும் வருவான், இன்னும் ஒருவர் கிடைத்தால் போதும் என்று எண்ணிக் கொண்டிருந்தவனுக்கு சியாமளாவின் நினைவே எழுந்தது. அவளைப் பார்த்து நாட்கள் ஆகிவிட்டன என்று அறிந்த போது அவளைக் காண வேண்டும் என்ற ஒரு உத்வேகம் அவனிடம் ஏற்பட்டது. சியாமளாவுக்கும் பாபுவுக்கும் ஒருவரை ஒருவர் அறியாமலேயே மற்றவர் மீது அன்பேற்பட்டது. அது எந்த அள்வுக்குச் சரியானது என்று இருவருமே தீவிர மாக சிந்திக்கவில்லை. சிந்திப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்க வில்லை.

      பாபுவுக்கு சியாமளாவைக் காண வேண்டும் என்ற நினைவு வந்ததும் சியாமளாவே அவன் வீட்டுக்கு வருகை தந்தது அவனுக்கு மிகவும் இதமாக ஆறுதலாக இருந்தது.

     “ டேய், இந்த லெட்டரை உங்க டீச்சர்கிட்டக் கொடு, “என்று பாபு ஒரு உறையை ரவியிடம் கொடுத்ததும்.லீவ் லெட்டரா அண்ணா என்று அவன் கேட்டான்..லீவ் லெட்டருமில்லை, லவ் லெட்டருமில்லை,சொன்னதைச் செய் .போநினைத்துப் பார்க்காமலேயே சொல்லப் பட்ட வார்த்தைகள் தான் என்றாலும், உண்மையிலேயே லவ் லெட்டரைக் கொடுத்தால் சியாமளா என்ன நினைப்பாள், எப்படி அதை ஏற்றுக் கொள்வாள் என்ற எண்ணங்கள் பல அவனுள் எழுந்தது. நினைத்ததைச் செயலில் காட்ட தைரியம் போதவில்லை.


    ரவி கொண்டுவந்த உறையைக் கண்டதும் சியாமளாவுக்கு எழுந்த முதல் எண்ணமும், “ ஏதடா இது. ! எதையாவது கன்னா பின்னா என்று எழுதி இருப்பாரொஎன்ற சந்தேகம் தான். பிரித்துப் படித்துப் பார்த்ததும் ஏமாற்றமாகத்தான் இருந்தது. கன்னா பின்னா என்று எழுதப் பட்டிருக்கக் கூடிய கடிதமாய் இருக்கக் கூடாது என்று படிக்கும் முன் பயந்தவள், அப்படி இல்லையே என்று வருத்தப் பட்டாள். வேண்டாம் என்று எண்ணிய மனமே இல்லை என்று அறிந்ததும் ஏங்கிற்று.

      கல்யாணி அம்மாவும் எதிர் பார்க்கவில்லை. வீட்டிற்கு வந்த ஒரு பெண்ணிடம் தன் பிள்ளை இப்படியொரு கடிதத்தை தன் முன்னாலேயே கொடுக்கச் சொல்கிறானே என்று கோபம் வந்தது. ஆனால் அதை சியாமளா பிரித்துப் பார்த்துப் படிக்கக் கேட்டதும் தன் சந்தேகமே உண்மையாய் இருந்திருக்கக் கூடாதா என்று நினைக்கத் தோன்றியது. இருவருக்கும் உள்ள பொருத்தத்தைப் பார்த்ததும் , தான் அப்படி நினைத்துப் பார்ப்பதே தவறு என்று அவளுக்குத் தோன்றியது. “ பாபு ஒரு பிராமணப் பிள்ளை.சியாமளாவோ மராத்தியப் பெண். வேண்டாமடாப்பா வெண்டாம்.! என்னால் ஏற்பட்ட புகைச்சலே பெரிசா இருக்கு. நாளைக்கு இந்த மாதிரி ஏதாவது நடந்தால் வேறு வினையே வேண்டாம். நான் தான் அப்படி நடக்கத் தூண்டினேன் என்று பழிப்பார்கள். “

          இல்லாத ஒன்று எல்லார் மனசிலும் இருப்பதாகத் தோன்றியதே, வரப் போகும் நிகழ்ச்சிகளுக்கு அறிகுறி என்று யாருக்குமே சந்தேகம் எழவில்லை.

     “தமிழ் மன்றத்தின் சார்பில் துவங்கப் பட இருக்கிற பள்ளிக்கு மாலை நேரத்தில் ஊதியமில்லாமல் உங்களால் உழைக்க முடியுமா, என்பதைத் தெரிவிக்கவும். சாதாரணமாக நடத்தப் படும் பள்ளிகளிலிருந்து முற்றிலும் மாறு பட்டதாக விளங்கப் போகும் இப்பணியில் பணியாற்ற ஒப்புதல் தெரிவிக்கும் முன், அது துவக்கப் படும் நோக்கத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா என்று உங்கள் உள்ளத்தை அலசி ஆராய்ந்து முடிவைத் தெரியப் படுத்த விரும்புகிறேன். இப்படிக்கு பாபு.

     பாபுவால் தொடங்கப் படும் எதுவும் சிறந்த தாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் “ ஒப்புதல். நம்புகிறேன். சியாமளா.என்று ஒரே வரியில் அதே கடிதத்தில் பதிலையும் அப்போதே எழுதிக் கொடுத்து விட்டாள்.

         என்னவோம்மா.! ஆண் பிள்ளைகள் ஆரம்பித்திருக்கிற காரியங்களிலே பெண்கள் கலந்துக்கிற போது கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருக்கணும். “

     “ஆரம்பிக்கிறது ஆண்பிள்ளைகளாக இருந்தாலும் படிக்கப் போறதென்னவோ பச்சைப் பிள்ளைகள் தானே மாமி. ஒரு நல்ல காரியத்துலெ பங்கு எடுத்துக்கிறோம்  என்கிற நிறைவு ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமாய் இருக்குமா என்ன..?

     “ சரியாகச் சொன்னீர்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் சம பங்கு உண்டு என்பது பேச்சோடு மட்டும் இருக்கக் கூடாது. செயலிலும் இருக்க வேண்டும்.பெண்களெல்லாம் பாரதி கண்ட பெண்களாயிருந்தால் நம் நாடு எவ்வளவு முன்னேறி இருக்கும்.”-எதிர் பார்க்காத முறையில் பாபுவும் பேச்சில் பங்கு கொண்டான்.

             அம்மா, ரஷ்யாவிலே எல்லாம் நாங்க இங்கே செய்யற கஷ்டமான இயந்திர வேலைகளை எல்லாம் பெண்களும் ரொம்பத் திறமையாகச் செய்யறாங்களாம்.

    அப்படியானா, பெண்களுக்கே சொந்தமான ஒரு நளினம் கெட்டுப் போயிடுமேடா.

    “அதுவும் சரிதான். அதனால்தானோ மேல் நாட்டுப் பெண்களை அடையாளம் கண்டு பிடிப்பதே கஷ்டமாயிருக்கு. “

    “இங்கு சியாமளா அக்காவைச் செய்யச் சொல்லும் வேலை டீச்சர் வேலைதானே அண்ணா.அதனால் அவங்க பயப்பட வேண்டாம் இல்லையா.?விசுவும் பேச்சில் கலந்து கொண்டான்.

    மேலை நாடுகளுக்கு எதுக்கண்ணா போகணும். இந்த பெங்களூரிலேயே ,கஷ்டப்பட்டு  வேலை செய்யாத எவ்வளவோ நம்ம நாட்டுப் பெண்களையே அடையாளம் கண்டுக்க முடியலை. அதுதான் இப்போ ஃபாஷன். ஆண் பெண்ணைப் போல இருக்கறதும் பெண் ஆணைப் போல இருக்கறதும்....ராஜுவும் விட்டு வைக்க வில்லை.

      சியாமளாவுக்குத் தன் கருத்துக்களை எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் ஏதோ ஒன்று அவளைப் பேச விடாமல் தடுத்தது. பாபுவுக்கு சியாமளா என்ன சொல்லுவாள் என்ற ஆர்வம் அதிகரித்தது. இருந்தாலும் பலனிருக்க வில்லை.

     நாம் முதன் முதலில் ஆரம்பிக்கப் போகும் பள்ளிக் கூடம் இது. இதற்குப் பிறகு வாழ்வாதாரக் கைத் தொழில்கள், கூட்டுறவு டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் இத்தியாதி, இத்தியாதி வகைகளை நடத்த நிறைய ஆட்கள் தேவைப் படும்

          “ அண்ணா, நீங்க சொல்வது சரியில்லை.தமிழ் வளர்க்கும் மன்றத்தின் காவலன் ஆங்கிலச் சொற்களைப் பயன் படுத்தலாமா.? கைத் தொழிலகம், கூட்டுறவு பண்டக சாலை என்றல்லவா கூறி இருக்க வேண்டும்..விசு நாடக பாணியில் நீட்டி முழக்கியதைக் கேட்டதும் எல்லோரும் சிரித்தனர்.

      “ இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. முத்தமிழ் விழா நடந்து முடிந்த கையோடு, செய்ய வேண்டிய வேலைகள் ஏராளமிருக்கிறது. சியாமளா நீங்கள் ஆசிரியைத் தொழில் துவங்க உங்கள் வீட்டில் ஏதாவது ஆட்சேபணை இருந்தால், அம்மாவை கொண்டு அவர்களை கேட்கச் சொல்கிறேன். “- பாபு சீரியஸாக மறுபடியும் சியமளாவைப் பேச வைக்க முயன்றான்.

     “ ஆட்சேபணை இருக்கோ இல்லையோ நான் எதுக்கும் அவ அம்மாகிட்ட ஒரு வார்த்தைக் கேட்டுட்டு வருவதுதான் முறை. நீ என்ன சொல்றே சியாமளா “
என்று கல்யாணி அம்மா கேட்டாள். சியாமளாவும் சரியென்று தலை ஆட்டியது தவிர எதுவும் பேசாதது பாபுவுக்கு மிகவும் ஏமாற்றமாயிருந்தது.

             அடிக்கடி சியாமளா வருவதும், அவள் வரும் சமயத்தில் பாபுவும் தன்னை ஆஜராக்கிக் கொள்வதும் சகஜமாகப் போய்விட்டது. கல்யாணி அம்மாவுக்கு மட்டும் ஒரு சந்தேகம் இருக்கத்தான் செய்தது. இருந்தாலும் தானாக விஷயம் வெளிப்படாத வரை தான் வீணாக எதையும் அனுமானித்துக் கொள்ள வேண்டாமென்றே அவளுக்குத் தோன்றியது.

    சியாமளாவைக் காணும்போதும் ,அவள் பேச்சைக் கேட்கும்போதும் ,பாபுவுக்கு ஒரு அலாதியான இன்பம் கிடைக்கும். தான் அவளைப் பற்றி எண்ணுவது போல அவளும் தன்னைப் பற்றி சிந்திக்கிறாளா என்றறிய அவன் உள்ளத்தில் அடக்க முடியாத ஆசை எழுந்தது. கண்டதும் காதல் என்பதில் பாபுவுக்கு நம்பிக்கையே கிடையாது. காதல் என்பது ஒரே சமயத்தில் இருவர் உள்ளத்திலும் ஒருவருக்காக மற்றவர் தோற்றுவிக்கும் அன்பின் எழுச்சியே என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். அவன் மட்டும் அவளிடம் அன்பு கொண்டு ஏங்குவது, அவளுக்கு அந்த எண்ணமே இல்லாமல் இருந்தால் பைத்தியக்காரத்தனமானது என்று எண்ணியதால்தான அளிடம் அவன் அன்பு கொள்வது முறையா என்ற கேள்வி அவன் உள்ளத்தில் அடிக்கடி எழுந்தது.

       எந்தப் பெண்ணையும் காணும்போது ஏற்படாத நெகிழ்ச்சி, ,பரிதவிப்பு, ஏக்கம் ,ஆதங்கம் எல்லாம் ஒரே சமயத்தில் சியாமளாவைக் காணும்போது மட்டும் எழுவது அவனுக்குப் புரியாததாக , வேடிக்கையாக இருந்தது..அவள் அவனிடம் அன்பாகப் பேசுகிறாள் என்று கனாக் காணும்போது கூட உள்ளம் வெட வெடக்கும், மூச்சுத் திணறும் , பேச்செழும்பாது. இன்பமான மௌன நிலையில் ஒருவரை ஒருவர் கண்டு மகிழ்வதே  காதலின் பேரின்பம் என்றெல்லாம் எண்ணுவான். எண்ணத்திலேயே இன்புறுவான்.உண்மையில் அனுபவிப்பது எப்போது என்று ஏங்குவான்.

    இந்த மாதிரி நினைவுகள் எழும்போதெல்லாம் பாபுவுக்கு பயமாய் இருக்கும். அவனை அறியாமலேயே அவன் உள்ளத்தில் அவன் அதிக நாட்கள் வாழ மாட்டான் என்ற எண்ணம் சிறுகச் சிறுக அடிக்கடி எழுந்து, நிரந்தரமானதாகவெ குடி கொண்டு விட்டது..அதுவே உண்மையானதாகவும் நடக்கும் என்று தீவிரமாக நம்பினான். அதனால்தான் சியாமளாவைப் பற்றி எண்ணுகையிலேயேதான் அவளுக்கு ஒரு சமயம் இன்பத்துக்குப் பதில் துன்பத்தை கொடுத்து விடுவோமோ என்று அஞ்சினான்.

     விளக்க முடியாத இந்த உணர்ச்சி ஒரு சமயம் தனக்கு வாழ்க்கையில் உள்ள பற்று இல்லாத தன்மையைக் காட்டுகிறதோ,,அது ஒருக்கால் மாறி, அன்பு துணை கிடைக்கப் பெற்றால் தன்னுடைய இந்த அர்த்தமற்ற கற்ப்னை உணர்ச்சி, வாடி சருகாகலாமோ என்றும் அடிக்கடி அவன் சிந்தித்தான்.

     எப்படி இருந்தாலும் சியாமளா அவனைப் பற்றி என்ன நினைக்கிறாள்,அவன் மீது அவளுக்கு அன்பு உண்டா என்றெல்லாம் அறியத் துடித்தான் பாபு..உறங்கினால் கனவில் உருவாகவும், விழித்திருந்தால் நினைவில் உருவாகவும், எங்கும் எதிலும் சியாமளாவை கண்டான் பாபு. வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிகளை வெள்ளைத்தாளில் எழுதி ஓரளவு வெளிப்படுத்த முயன்றான்..இலக்கணமே இல்லாத கவிதைகள் பல உருவாயின. அவற்றுள் ஒன்றை அவனுக்கு சிறந்தது என்று தோன்றியதை ஒரு நாள் சியாமளாவிடம் சேர்ப்பித்தும் விட்டான்.

    வாங்கும்போதே உள்ளிருக்கும் செய்தி இதுதான் என்று யூகித்து அறிந்து கொண்டாள் சியாமளா..மனம் வேண்டாம் தவறு என்று தடுத்தாலும், அதைப் பெற்றுக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. பள்ளி சம்பந்தப்பட்ட ஏதாவது இருக்கும் என்றுதான் போலியாக நம்பிக்கொண்டே, நொண்டி சமாதானம் கூறிக் கொண்டு அதை பத்திரப் படுத்திக் கொண்டாள். நடுங்கும் கைகளையும், நிலம் நோக்கும் பார்வையையும் கண்ட பாபு, அவள் மேல் இரக்கம் கொண்டு தான் அவளைப் புண் படுத்தி விட்டோமோ என்று தன்னையே நொந்து கொண்டு அவ்விடத்தை விட்டகன்றான். முடிவு தெரியாத மாணவனின் மனக் குழப்பத்தைவிட அதிக மாயிருந்தது பாபுவின் சஞ்சலம். உடனே படித்துப் பார்த்து பதிலையும் கூறி விடுவாள் என்று முதலில் எண்ணினாலும்,அவள் ஒரு மென்மையான பெண், அவளால் அப்படிக் கூற முடியாது என்றுதான் திடமாகத் தோன்றியது.அவளது முடிவை அறிய கடிதத்தில் அவன் குறிப்பிட்டிருந்த தேதி வர வேண்டும்.

    கடிதத்தைப் பெற்றுக் கொண்டவளுக்கு அது மறைத்து வைக்கப் பட்டிருந்த இடத்தில் மிகவும் உறுத்தியது. வழக்கத்தைவிட சீக்கிரமாகவே வீடு திரும்பி விட்டாள். யாரைப் பார்த்தாலும் எல்லோரும் சந்தேகக் கண்களோடு தன்னைக் காண்கிறார்களோ என்ற அச்சம் அடிக்கடி எழுந்தது. யாராவது தன்னைக் கண்காணிக்கிறார்களோ என்று அச்சம் ஏற்பட்டது. தூரத்தில் யாராவது வந்து கொண்டிருக்க அது பாபுவாக இருக்குமோ, அவர் ஏதாவது தன்னைக் கேட்பாரோ என்றெல்லாம் எண்ணி அல்லல் பட்டவள்.,அருகில் வந்த அந்த மனிதனைக் கண்டு, பாபு அல்ல என்று தெரிய வந்ததும், நிம்மதியும், கூடவே அது பாபுவாக இருக்கவில்லையே என்ற ஏக்கமும் கொண்டாள்.

     ஒரு வழியாக தனிமையில் அந்தக் கடிதத்தைப் பிரித்தவளொரு வரிதான் படித்திருப்பாள் ;வேர்த்துக்கொட்டத் தொடங்கியது. அதை அப்படியே மடித்து வைத்து  தன் சிந்தனைக் குதிரைக்குக் கடிவாளம் இட்டு, மனதை ஒரு நிலைக்குக் கொண்டு வருவதற்குள், போதும் போதும் என்றாகி விட்டது. கடிதத்தை நடுங்கும் கைகளால் பிரித்தவள் முகத்தில் செம்மை படர்ந்தது.இமை படபடத்தது.நாக்கு உலர்ந்து விட்டது போன்ற உணர்ச்சி. ஒரு முறை படித்து முடித்தாள். ஒரு கூஜா தண்ணிரைக் குடித்து முடித்த பிறகுதான்,ஓரளவு சுய நிலைக்கு வரப் பெற்றாள்.இந்த முறை படிக்கும்போது  நிதானம் இருந்தது.
                  நிலவைப் பழிக்கும் முகம்
                  நினைவைப் பதிக்கும் கண்கள்
                  நிலமடந்தை நாணும் எழில்-முத்துச்
                  சரம் விரித்த முல்லைச் சிரிப்பு-சிந்தக்
                  கமலமலர் செவ்விதழ் விரிப்பு-கொண்டு
                  படர்கொடி வெல்லும் துடியிடை-என்
                  இடர் சேர்க்க இடையிடையாட-மென்னடை
                  நடந்தென்முன் நிற்கும் இன்பக்
                  கனவினை நனவாக்க எண்ணி-வந்தக்
                  கற்பனைக் கண் கண்ட கன்னி,

நீயென்றால்,அன்பு சியாமளா, டபுள் ரோட் காஃபி பார் அருகே காத்திருப்பேன் ,சந்திப்பாயா.?( வருகிற ஞாயிற்றுக் கிழமை மாலை 4-30 மணிக்கு )----பாபு.

      சமாச்சாரம் இதுதான். தனியாக சந்திக்க வேண்டுமாம். நான் அங்கு போக வேண்டுமாம். என்னை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.? ஒரு ஆடவன் என்னை வந்து பார் என்று சொல்வதற்குள் போக வேண்டுமா. ? நன்றாகக் கேட்கப் போகிறேன். அட....அப்படிக் கேட்கக் கூடப் போகத்தானே வேண்டும்.? போகிறேன். கேட்கிறேன். கேட்டுத் திரும்பி வந்து விடுகிறேன்.இல்லை நான் போகாமலெயே இருந்து விட்டால்......தன் மேல் அன்பில்லை என்று தவறாக நினைத்துக் கொள்வாரோ.? எண்ணினால் எண்ணிக் கொள்ளட்டும். சேச்சே.! அது மட்டும் கூடாது. பாவம் .எவ்வளவு நல்லவர்..ஹும்.! போய்ப் பார்க்கலாமே. எதற்குப் பயப்பட வேண்டும். ? கரடியா. புலியா.?ஆனால் நிச்சயம் இதுதான் முதலும் கடைசியும் ஆன தனிச் சந்திப்பு. என்பதை மட்டும் திட்டமாகத் தெரிவித்து விட வேண்டும்..அது பிறகுள்ள பிரச்சினை. போவது என்று முடிவு செய்தாகி விட்டது. என்ன பேசுவது.? எந்த உடை அணிந்து கொள்வது.?அவருக்கு எப்படிப் போனால் பிடிக்கும்.?.....எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தேட இன்னும்தான் நாட்களிருக்கிறதே. “
-----------------------------------------------------------------                          

                 .                                      ( தொடரும். ) 

       




     


     



   







செவ்வாய், 13 மார்ச், 2012

ஜாக்கி மணியும் பந்தயக் குதிரையும்.


                              ஜாக்கி மணியும் பந்தயக் குதிரையும்
                             ---------------------------------------------------
                               ( நிஜமான கதை கற்பனை கலந்து.)
.
          தலைப்பைப் பார்த்துவிட்டு இது ஒரு நகைச்சுவைக் கதை என்று யாராவது நினைத்தால் அதற்கு இவன் பொறுப்பல்ல. இவர்களைப் பார்த்ததனால் வந்த ஒரு திடீர் உந்துதலே இதற்குக் காரணம். எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கிறார்களே இவர்கள் வாழும் வாழ்க்கையா இது.? எப்படி முடியும்.? முடிகிறதே. .என்ன ரகசியம்..?

     மணிக்கு ஜாக்கி மணி என்று பெயர் கொடுத்தபோது, அவரது குடும்பப் பின்புலம்
தெரியாது. குதிரைப் பந்தயத்தில் குதிரை மீதமர்ந்து விரட்டும் ஜாக்கிகளைப் பார்த்தீர்களானால் ஒரு ஒற்றுமை புலப்படும்.அநேகமாக அனைவரும் குள்ளமாக இருப்பார்கள். மெலிந்திருப்பார்கள். அவர்களது எடை குதிரையின் வேகத்தைக் குறைக்கக் கூடாது என்ற அக்கறையே அம்மாதிரியான ஆட்களைக் பந்தயத்தில் குதிரை ஓட்டிகளாக பங்கேற்க வைக்கக் காரணம். ஆனால் ஜாக்கி மணி குதிரை ஓட்டுபவரல்ல. இவனோடு சேர்ந்து பணியாற்றியவர்.எப்பொழுதும் (புன்)நகை முகம். வாழ்க்கையை முழுதும் அனுபவிப்பவர் போல ஒரு தோற்றம். இவன் வீட்டுக்கு வருவார். நன்றாகப் பேசுவார். கலகலப்பாக இருப்பார். ஆனால் மறந்தும் கூட அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றிப் பேச மாட்டார். ஒரு நாள் இவன் கேட்டே விட்டான்.

      என்ன மணி, ஒரு முறை என்னை உன் வீட்டுக்குக் கூப்பிட்டு ஒரு வாய் காப்பி தர மாட்டாயா.?

      “ தந்தால் போச்சு.ஒரு முறை கூப்பிட்டால் மறு முறை கூப்பிடுவதையோ, வருவதையோ எதிர் பார்க்க மாட்டாயே என்றுதான் யோசிக்கிறேன்.”-மணி பேசும்போது சற்றே கண் கலங்கின மாதிரி இருந்தது. இவனுக்கு மணியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம். “ ஒரு முறைக் கூப்பிட்டால் மறுமுறை கூப்பிடாமலேயே வருவேனாக்கும்.என்றான்.

        ஒன்றிரண்டு முறை இவன் வற்புறுத்தல் தாங்காமல் மணி இவனை வீட்டுக்கு அழைத்தார்.மணி, நான் இதுவரை உன் பர்சனல் லைஃப் பற்றிக் கேட்டதுமில்லை. நீயும் சொன்னதும் இல்லை. இன்று கேட்கிறேன். சொல்லேன். “

       “ நீதான் வந்து பார்க்கப் போகிறாயே.எல்லாம் ஒரு சர்ப்ரைஸாக இருக்கட்டுமேஎன்று சிரித்துக் கொண்டே சொன்னார் மணி.

      அலுவல் முடிந்ததும் ஒரு நாள் இவன் மணியுடன் அவர் வீட்டுக்குச் சென்றான். வெளியில் இருந்து பார்க்க சுமாராக இருந்தது வீடு. வீட்டில் போனதும் ஒரு வெராந்தா. தாண்டி நுழைந்தால் ஓரளவு பெரிய ஹால். ஹாலின் இரண்டு பக்கத்திலும் அறைகள்.. ஹாலை ஒட்டி உட்புறம் நடைவழியின் ஒரு புறம் சமையல் அறையும் மறுபுறம் குளியல் , டாய்லெட் அறை. ஹாலில் ஒரு திவான் இருந்தது. படுக்கையாகவும் உபயோகிப்பது போலிருந்தது. மற்றபடி மினிமம் தேவையான மேசை நாற்காலி இத்தியாதிப் பொருட்கள் தென்பட்டன. இவன் வீட்டுக்குள் நுழைந்ததும் இவனை எதிர்கொண்ட மாது, மணியின் மனைவி போல் தோன்றவில்லை. எதிர் பாராத ஒரு புது முகம் கண்ட திகைப்பு முகத்தில் தெரிந்தது.

      “ என் நண்பன். ஒரு காப்பி போட்டுத் தர முடியுமா.?என்று பவ்யமாகக் கேட்டார் மணி. கொஞ்சம் இருப்பா. எல்லோரையும் அறிமுகப் படுத்துகிறேன் “ என்றார்.

      சற்று நேரத்தில் காப்பி வந்தது. குடித்து முடிக்கும் வரை ஒன்றுமே பேசாமல் மௌனம் காத்த மணி, முடித்தவுடன் ஒரு FLOURISH-உடன், வேகத்துடன்.ப்ளீஸ் மீட் மை ப்ரின்ஸ் சார்மிங் நம்பர் ஒன்.என்று கூறி இடப்புறம் இருந்த அறைக் கதவைத் திறந்து, இவனை அழைத்தார். இவன் அங்கே கண்ட காட்சி இவனை விக்கித்து விட்டது.படுக்க வைத்த நெடுமரம் போல் ஒரு வாலிபன்,விழித்துக் கொண்டு படுத்துக் கிடந்தான். எந்தக் குறையும் காண முடியாத உடல் ஆரோக்கியம். ஆனால் உணர்ச்சியற்ற முகத்தில் கண்கள் மட்டும் இமைத்துக் கொண்டு இருந்தது. தவிர வேறு எந்த சலனமுமில்லை.

      இவன் கையைப் பிடித்துக்கொண்டு, வலப் புற அறைக்குக் கூட்டிச் சென்ற மணி,
“ஹியர் ஈஸ் மை ப்ரின்ஸ் சார்மிங் நம்பர் டூஎன்று காட்டினார். இவனுக்குக் கண்கள் குளமாகி விட்டது. அந்த அறையிலும் இன்னொரு வாலிபன் முன்னவனைப் போலவே படுத்துக் கிடந்தான். இவனுக்கு வார்த்தைகள் வரவில்லை.என்ன மணி.? எப்படி இது.? உன்னால் எப்படி இப்படி இருக்க முடிகிறது.?என்றெல்லாம் கேட்கத் தோன்றி, ஒன்றுமே கேட்க முடியாமல் வாயடைத்து நின்றான்.

    ” மை டியர் ஃப்ரெண்ட், இவர்கள் இரண்டு பேரும், ஆண்டவன் எனக்குக் கொடுத்த சொத்து. இரட்டையர்கள். ஒரேபோல் தோற்றம் மட்டுமல்ல, குறைபாடுகளும் ஒரே மாதிரிதான். இருபத்திரண்டு வயதாகிறது. இவர்களை ஐந்து வருடங்கள் வரை வளர்த்த என் மனைவி துக்கம் தாங்காமல் போய்விட்டாள். வீட்டோடு இருக்கும் இந்த அம்மாதான் ஒத்தாசையாய் இருக்கிறார். வேளா வேளைக்கு இவர்களுக்கு சமைத்து உணவு கொடுப்பது, இவரது வேலை. மற்ற தேவைகளை நான் காலையிலும், மாலையிலும் வந்து கவனித்துக் கொள்வேன். நீ எதற்கு கலங்குகிறாய்.? எனக்கு இது பழகி விட்டது. தெரிந்தோ தெரியாமலோ, இரண்டு உயிர்களுக்கு நான் பொறுப்பு. வாழ்க்கை எனக்குக் கற்றுக் கொடுத்த பாடம் தவிர்க்கப் பட முடியாதவை அனுபவிக்கப் பட்டே ஆகவேண்டும் “


     அன்றைக்கு ஜாக்கி மணியால் ஏற்பட்ட தாக்கம்,  மறுபடியும் நினைவுக்கு வந்து இவனை கலங்க வைக்கிறது. காரணம் நேரில் இவன் கண்ட இன்னொரு அனுபவம். ஆனால் இப்போது காண்பது ஒரு பெண். ஜாக்கி மணிக்கு ஒரு பெயர் காரணம் இருந்ததுபோல் இந்தப் பெண்ணை கண்டதும் , இவன் வழக்கம்போல் ஒரு பெயர் சூட்டிவிட்டான். =பார்ப்பதற்கு மதமதவென்று இருந்தவளைக் கண்டதும் நினைவுக்கு வந்தது பந்தயக் குதிரையே. அதையே அடையாளப் பெயராகச் சூட்டிவிட்டான்.ஆனால் பின்னர் அறிமுகமாகி,அவள் கதையைக் கேட்டதும்,இவன் வாய்க் கொழுப்பிற்காக இவனையே கடிந்து கொண்டான்.பெயர் சூட்டுவதில் எந்த OFFENCE-ம் இருக்கவில்லை.சட்டென்று மனதில் தோன்றுவதுதான். இதில் இன்னொரு அட்வாண்டேஜ். இவர்களது உண்மை ஐடெண்டிடி காக்கப் படும். ஆனாலும் அப்படியே அழைப்பதற்கு மனம் இடங்கொடுக்காததால்,இனி அவளைப் பெண் என்றே இவன் குறிப்பிட முடிவெடுத்து விட்டான்.

      முதன் முதலில் காணும் யாரும் அந்தப் பெண்ணின் பின்னணியில் அப்படி ஒரு சோகம் இருக்கும் என்று நம்ப முடியாது. எப்போதும் சிரித்த முகம். எங்கு போவதானாலும் கூடவே ஒரு பையனும். அவள்து மகன்தான். அவனுக்கு இருபதிலிருந்து இருபத்திரண்டு வயதிருக்கும். பார்த்த உடனே தெரிந்து கொள்ளலாம், ஏதோ ஒரு குறை இருக்கிறதென்று.. பேச்சு வராது. கண் பார்வை தீர்க்கமாய்த் தெரியாது. அவ்வப்போது வலிப்பு வந்து விடுமாம். தாயைப் பிரிந்து இருக்க மாட்டானாம். இவனுக்கு ஒரு அண்ணன். அவனும் குறைபாடு உள்ளவன்.பார்த்தால் எந்தக் குறையும் இருப்பது தெரியாது. அவனுக்கும் பேச்சு வராது. தம்பியைப் போல் நடக்கவும் முடியாது. சுற்றி நடப்பதைப் புரிந்து கொள்வானாம். இருவரும் ஒரு வித அமானுஷ்யக் குரல் எழுப்புவார்கள்.அந்தப் பெண்ணின் கணவர், வாரத்தில் ஒரு முறை வீட்டுக்கு வருவார்.ஞாயிறு காலை வந்தால், மாலையில் திரும்பி விடுவார். வீட்டில் தங்குவதே கிடையாதாம். ஏதோ பிசினஸ் செய்கிறார். பணி செய்யும் இடத்திலேயே இருந்து விடுவாராம். அந்தப் பெண்தான் வீடு குறித்த எல்லா வேலைகளுக்கும் பொறுப்பு. உடல் வளர்ச்சி உள்ள, ஆனால் மனம் வளராத, பேச முடியாத , நடக்க முடியாத பிள்ளைகள்.

      கணவனும் மனைவியும் சேர்ந்திருந்தால், இன்னும் இது மாதிரிக் குழந்தைகள் பிறந்து விடுமோ என்ற பயத்தில்,நெடுங்காலமாகப் பிரிந்து வாழும் தம்பதிகள்.சொந்தத் தாய் மாமனையே மணந்து கொண்ட அந்தப் பெண், கூடவே தன் பாட்டியும், மாமியாருமான மூதாட்டியையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

       எப்போதும் சிரித்து மகிழ்ச்சியாகக் காணும் அந்தப் பெண், ஒரு நாள் கண்ணீருடன் நின்றாள். விசாரித்தால், கணவனுக்கு ஒரு புறம் வசமில்லையாம். ஸ்ட்ரோக் என்று சொல்கிறார்களாம். இதைத்தான் பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்கிறார்களோ. ! வாழ்க்கை உறங்கிக் கனாக் காணும்போது, இன்ப மயமாகத் தெரிகிறது. விழித்து உணர்ந்தால் கடமைக் கடலாகத் தோன்றுகிறது.. இவனுக்கு அண்மையில் இதற்கான காரணங்களைக் கண்டு பிடிக்க முடியுமா என்ற அறியாமையில் பிறந்த ஆர்வமும் அச்சமும் எழுகிறது. யாரைக் குறை கூற முடியும். பதில் அறிய முடியாத கேள்விகள். இம்மாதிரி நிகழ்வுகளுக்கு உறவில் மணமுடிப்பது ஒரு காரணம் என்று கூறப் படுகிறது. ஆனால் நம் சமூகத்தில் காலங்காலமாக நடந்து வருவதுதானே இது..எல்லோரும் குறைபாட்டுடனா பிறக்கிறார்கள்.?

அன்று ஜாக்கி மணி கூறியது இவனுக்கு மீண்டும் நினைவுக்கு வருகிறது. தவிர்க்கப் பட முடியாதவைகள் ,அனுபவிக்கப்பட்டே தீர வேண்டும். இருந்தாலும் கூடவே ஒரு சமாதானம். இதுவும் கடந்து போகும். எதுவும் கடந்து போகும். நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையே வாழ்வின் ஆதாரம்.
-----------------------------------------------------------------------------
(நெருடலான நிகழ்ச்சிகளை கூறியதால்,மனம் வாடுபவர்கள் சற்றே மகிழ )

   . 
.





    

     


-

ஞாயிறு, 11 மார்ச், 2012

நினைவில் நீ ..( அத்தியாயம்- பதின்மூன்று )


                                   நினைவில் நீ..( நாவல் தொடராக. )
                                   -------------------------------------------------

                                                 --------  13  -------

      பட்டகாலிலே படும், கெட்ட குடியே கெடும் என்று தெரியாமலா சொல்லி இருக்கிறார்கள். .அனுபவ பூர்வமாக உணர்ந்து கூறப்பட்ட வார்த்தைகள் அல்லவா.. .ஆஷாவின் மரணமும், -கொலையென்று எண்ணவே நடுங்கியதுமகனுக்குக் கிடைத்த தண்டனையும் பாட்டியை ஒரேயடியாக ஆட்டிவிட்டிருந்தது, என்பதோடு கூட தன்னுடைய மற்ற இரு பிள்ளைகளின் அலட்சியமும் அவளை வெகுவாக பாதித்தது. கல்யாணமான பிறகு கண்ணனும் கூட பாட்டியை லட்சியம் செய்து ஆதரவு காட்ட வில்லை. நல்ல விளை நிலத்திலே புல்லும் பூண்டும் தன் காலத்திலேயே விளைந்து மண்ணின் வளத்தையே கொள்ளை கொண்டு போகிறதே. ஒரு சமயம் தான் விளைத்ததே இந்தக் கள்ளியும் காளான்களும்தானோ. என்றெல்லாம் உள்ளம் உருகத் துவங்கிய பாட்டி, நாளாவட்டத்தில் படுத்த படுக்கையாகி விட்டாள். செல்வாக்கும் பதவிசும் இருக்கிற காலத்திலேயே அவள் எதிர்பார்க்காத ஏகப்பட்ட எதிர்ப்புகளிருந்த தென்றால், எல்லாம் இழந்த நிலையில் அவளை சீந்தக் கூட ஒரு ஜீவன் இல்லாமல் போய் விட்டது. துயரத்தால் உருகி, உடலில் வலுவிழந்து பாதிக்கப் பட்ட பாட்டிக்கு , பேசவோ நடக்கவோகூட முடியாதபடி,உடலின் அங்கங்கள் எல்லாம் கட்டுப் படுத்தக்கூட திராணி இல்லாமல் முடங்கிப் போயிற்று. இந்த நிலையில் ஒடுங்கிக் கிடந்தவள் அடுத்துள்ளவர்கள் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி இருந்தபோது, வாய்விட்டு  ஆண்டவனை துணைக்கு அழைக்கவும் முடியாத துன்பத்தில் துவண்டு போனாள். தன் அந்திம காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது என்ற எண்ணம் தனக்குச் சீக்கிரம் விடிவு ஏற்படும் என்ற நம்பிக்கையை வளரச் செய்தது. வாழ்வின் பல கோணங்களை தன் நிலையில் இருந்து தான்  ரசித்து அனுபவித்த விதம் அடிப்படையிலேயே தவறு அவள் எண்ணும்போது, தன்னை அறியாமலே கண்களில் நீர் வழிய ஆண்டவனை மனசால் துணைக்குக் கூப்பிடுவாள். அப்போது ஒரு அலாதியான அமைதி கிடைப்பதையும் உணர்வாள். கடைசி காலத்தில் இந்த நிலையில்தான் ஆண்டவனை உளங்கனிந்து வழிபடுகிறோம் என்று தெரிய வந்தபோது  ஆயுட்காலம் பூராவும் வீணாக்கப் பட்டு விட்டதே என்று குமுறி மனம் நொந்தாள். அவள் செய்த குற்றங்களுக்கும்,கொண்டிருந்த எண்ணங்களுக்கும் தகுந்த தண்டனை கொடுத்தாகி விட்டது என்றே கடவுளுக்குத் தோன்றி இருக்க வேண்டும். ஒரு நாள் யாரும் அறியாமலேயே அவளுடைய உயிர்ப் பறவை சிறகடித்துச் சென்றிருந்தது. கண்கள் திறந்த நிலையில் நாக்கு உலர்ந்திருந்த முறையில் யாரும் கவனிப்பார் இல்லாது கிடந்த அந்த சடலத்தை முதன் முதலில் கண்ட சரஸ்வதிக்கு பயமாகவே இருந்தது. அவளது மரத்துக் கிடந்த உணர்வுகளுக்கு இன்னுமொரு உயிர் போயிற்று என்றே சாதாரணமாகவே எண்ணத் தோன்றிற்று.

         பாட்டியின் சவ அடக்கத்துக்குச் சென்று திரும்பி இருந்த பாபு அவள்து முடிவை எண்ணி மனம் வருந்தித் திரும்பும்போது கல்யாணி அம்மா கூறிய செய்தி அவனை ஆத்திரத்தின் எல்லைக்கே அழைத்துச் சென்றது..ராஜுவுக்கும் விசுவுக்கும் சிக்கென் பாக்ஸ் போட்டிருந்தது. முத்துமாரி அம்மன் விளையாடுகிறாள்; சுத்தமாக இருக்க வேண்டும். என்று பாபுவிடம் கல்யாணி அம்மா கேட்டுக் கொண்டாள். பாபு சாவு வீட்டிலிருந்து வந்தவன் குளிக்காமல் தன் தம்பிகளைக் காணவும் கூடாது என்று தடை போட்டாள். பாபுவுக்கு அது பைத்தியக் காரத்தனமாகத் தோன்றியது. கிருமிகளாலும் உடல் வெப்பத்தாலும் ஏற்படும் வியாதியை ஆண்டவனின் முத்து என்று மரியாதையுடன் அழைக்கும் மூடத்தனம் கண்டு மனம் வெம்பினான். சொல்லிப் புரிய வைக்கலாம் என்றால் சொல்லவே இடம் கொடுக்க வில்லை கல்யாணி அம்மா. பாபு தீவிரமாகத் தம்பிகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றான்.அதை கல்யாணி அம்மா மூர்க்கமாக எதிர்த்து, தன் பிள்ளைகளைக் கவனிக்கும் முதல் பொறுப்பு தன்னுடையது, பிறகுதான் மற்றவருக்கு என்ற முறையில் பேசியது பாபுவை மிகவும் வருந்தச் செய்தது/ தனக்குத் தம்பிகளின் நலனில் அக்கறை கொள்ள அருகதை இல்லை என்று ஏசிவிட்டார்களே என்று வெதும்பினான். தடுக்க முடியப் பெறாதவைகள் அனுபவிக்கப் பட வேண்டியது தானே. என்று சமாதானம் செய்து கொண்டான். தன் மனக் குறைகளையும் சஞ்சலங்களையும் தன் உற்ற நண்பன் கானிடம் கூறி நிம்மதியடைய அவனைக் காணச் சென்றான்.ஒரு எதிர்பார்க்காத நிகழ்ச்சி அவனை எதிர் கொண்டழைத்தது. கானும் அம்மை வாய்ப்பட்டிருந்தான். அதுவும் அநாதரவான நிலையில்.பாபுவுக்கு சட்டென என்னதான் தோன்றியதோ நண்பனை வற்புறுத்தித் தன் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான். “ அம்மா, என் கூடப் பிறக்காத ஒரு சகோதரன் கான்..அவனையும் கவனிப்பது உன் பொறுப்புஎன்று கூறி கல்யாணி அம்மாவைத் திகைக்கச் செய்து விட்டான். அம்மனின் ஆட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப் படும் ஆட்களும் நல்லவர்களே என்று எண்ணிய படியே கானையும் கவனிக்கத் தொடங்கினாள்.

    அம்மா ,எனக்கு மட்டும் இந்த வியாதி வரட்டும் அப்போது தெரியும். சுத்த முட்டாள்தனமாக ஒரு வியாதியைக் கடவுளாகக் காண மாட்டேன். நீங்கள் நினைப்பதுபோல் இந்த வியாதி கடவுளானால் அது எனக்கும் வரட்டும். நான் எதிர்க்கிறேன். வியாதிதான் என்றால் அதை விரட்டி வெற்றி காண்பேன். இல்லையென்றால் நான் அழிக்கப் படட்டும். என்று பலமுறை கட்டுப்படுத்தியும் கட்டுக்கடங்காத எண்ணச் சுமைகளை வெளிப் படுத்தினான்.

        அடுத்த நாள் காலையிலேயே உடலில் குறு குறுப்பான ஒரு உணர்ச்சி. மூட்டுகளெல்லாம் குடைச்சல்.இதையெல்லாம் பொருட்படுத்தாமல் வேலைக்கும் சென்றான். வேலை செய்ய முடியாதபடி ஒரு சோர்வு. அசதி தன்னை ஆட்கொள்ளுவதை உணர்ந்தான். தன் எண்ணங்களே சரி என்று நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்று விட்டதாக எண்ணிக் குதூகலித்தான். வியாதியா, கடவுளா பார்க்கலாம் ஒரு கை. என்று சவால் விட்டுக் கொண்டான்.மாலை வீடு திரும்பொயதும் முதல் வேலையாக பாத் ரூமுக்குச் சென்று தன் உடலை நன்றாக சோதனை போட்டான். சிவப்பு முத்துக்கள் பரவிக் கிடந்தன.சட்டை செய்யாமல் குளிர்ந்த நீரை வாரிக் கொட்டிக் கொண்டு குளித்தான்.உடற்சோர்வு அவனை அடக்கி ஆண்டது.

   கல்யாணி அம்மாவுக்கு மிகவும் கவலையாகிவிட்டது. “ தாயே என் பிள்ளையை மன்னித்து விடம்மா. அறியாமல் செய்யும் பிழைகளைப் பொறுத்துக் கரை தேற்றம்மா.என்று மனம் உருகி வேண்டிக் கொண்டாள். ராஜுவும் விசுவும், கானும் குணமடைந்து வர வர பாபுவின் உடல் நிலை மோசமாகிக் கொண்டு வந்தது. அவனும் விநாடிக்கு ஒரு முறை அம்மனின் ஆட்டம் என்றழைக்கப் படும் அம்மை வியாதியிடம் சவால் விட்டுக் கொண்டிருந்தா.ன். தான் பேசப் பேச தன் தாய் மனம் வாடுகிறாளே என்ற உணர்வே இல்லாமல் வியாதியை அருவருத்துப் பழித்துப் பேசினான்

   .      ஒரு நாள் மாலை அடக்கமுடியாத எரிச்சல், தாங்க முடியாத தலைவலி இவற்றால் தாக்கப் பட்ட பாபு இறுதி வெற்றி யாருக்கு என்று தெரியும் நிலை வந்து விட்டது என்று உணர்ந்து, தன் சக்தியெல்லாம் ஒருங்கே திரட்டிக் கொண்டு போராட்டத்துக்கு தயாராகி விட்டான். வேதனைகளின் உபாதைகளோடு கூட, உள்ளத்துப் போராட்டத்தின் வேகம் போட்டி போட்டது. கட்டுப் படுத்த முடியாத நிலையில் பாபு “ ஆண்டவனே, மூடப் பழக்கங்களை எதிர்த்து, அன்பே கடவுள் என்று நான் வணங்கும் நிலை சரியானால்,இந்த வியாதி என்னைவிட்டு ஓடட்டும். இல்லை ஒன்றே குலம் ,ஒருவனே தேவன் என்ற வாக்கு பொய்யாகி, வியாதியும் ,வீம்பும், அகங்காரமுமே ஆண்டவன் வடிவென்றால், நான் சாகத் தயாராயிருக்கிறேன் “ என்று வேண்டிக்கொண்டான்.மற்ற மூவரும் கூட அம்மையால் பாதிக்கப் பட்டார்கள். ஆனால் கஷ்டம் சிறிதுமே கூட இல்லாமல் தேறி விட்டார்கள். யாரும் உடல் எரிச்சல் என்று ஒரு முறை கூடக் கூறவில்லை. தனக்கு மட்டும் எரிதணலில் இருப்பது போன்ற எண்ணம் ஏன் என்று பாபுவுக்குப் புரிந்து அனுமானித்துக் கொள்ள முடியவில்லை. 

        நேரம் செல்லச் செல்ல, தலைவலி மண்டையைப் பிளந்தது. உடல் எரிச்சல் உச்சஸ்தாயிக்குப் போய்க் கொண்டிருந்தது. திடீரென்று பாபு தான் தோற்றுக் கொண்டிருப்பதாக எண்ணினான். தோல்வியடையக்கூடாது, தான் சாகக் கூடாது என்ற உத் வேகத்தில் தன்னைச் சுற்றிப் பின்னப் படும் இருளுக்குள்ளிருந்து வெளியே வர முயன்றான். தன்னால் முடியவில்லை, இனி முடியாது என்று எண்ணும்போது பாபுவுக்குக் காது கேட்கவில்லை, கண் தெரிய வில்லை,நாக்கு எழவில்லை உடல் லேசாவது போன்ற உணர்ச்சி.உண்மையில் சாவு இதுதான் என்ற நினைவு. கண்களில் நீர் வழிய கீழே விழுந்து அதல பாதாளத்தில் உருண்டு போவது போன்ற உணர்ச்சி. “நான் செத்துப் போய்க் கொண்டிருக்கிறேன், ...நான் செ..த்..து........

       கண் விழித்த போது கல்யாணி அம்மா பாபுவுக்கு உப்பில்லாத கஞ்சி புகட்டிக் கொண்டிருந்தாள்.அந்த இரவு நேரத்தில் கெம்பம்மா கோவிலுக்கு உப்பும் தயிரும் கொண்டு சென்று அங்கிருந்து விபூதி கொண்டு வந்திருந்தாள். அதைப் பூசியவுடன் பாபு விழித்துக் கொண்டான். விளக்கம் கேட்டு விளங்கப் பெற்றவன் தன் தாயின் நம்பிக்கை தன்னைக் காப்பாற்றியது என்று உணர்ந்தான். சாவின் பயங்கரத்தை தெரிந்தவன், இன்னுமொரு முறை அந்த உணர்வுகளுக்கு தன்னால் ஈடு கொடுக்க முடியாது என்று அறிந்தான். ஆண்டவனைப் பல கோணங்களில் கண்டாலும் நம்பிக்கைதான் முக்கியம் என்று தெரிந்து கொண்டவன், அசாதாரண முறையில் ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்தான்.
-----------------------------------------------------------------------------

                                                          ( தொடரும் )        .                                      .        .                                   



  


வெள்ளி, 9 மார்ச், 2012

சொல்லாமல் விடுவதே நன்று,



                                     சொல்லாமல் விடுவதே நன்று.
                                     ------------------------------------------

             வெங்காயச் சருகுச் சேலை வெண்பட்டு மேனி தழுவ
       சீயக்காய் ஷாம்பு கண்ட செம்பொன்முடி காற்றில் படபடக்க,
       அழகை இன்னும் ஆராதிக்கச் சிந்தையில் எழுந்த கவிதை ஒன்று,
       அகக் கண்ணில் வரிகளாய் ஓட, எண்ணுகையில்
       மென்னகை தேங்கிற்று என் உதடுகளில்


      ---நிலவைப் பிடித்து அதன் கறைகள் துடைத்து
         குறு முறுவல் பதித்த முகம்---


        வட்ட நிலவின் கறைகள் துடைத்தால்
       ஒரு வெண் தட்டுபோலத் தோன்றலாம்.
        அதன் கறைகள் துடைத்து முறுவல் பதிக்க
       தற்காலக் கணினியில் காணும் ஸ்மைலி போல் தோன்றலாம் .!


கற்பனைச் சிறகுகள் கண்டபடி சிறகடித்தால்
கிடைக்கலாம் சில அபத்தக் கவிதைகள்.
தவறிப் போய் எழுத்தினைக் கணித்து விட்டால்
எண்ணாத எதிர்ப்புகள் ஏராளம் கிடைக்கலாம்.

          
      எண்ணியதெல்லாம் கருத்தில் தேக்கி

      சிந்தனைக் கடிவாளம் இறுக்கிப் பிடிக்காமல்

      சொல்லெல்லாம் சொல்லி நாட்டி

      சொன்னது அத்தனையும் நன்றென்று நம்பி

      நாமெல்லாம் படிக்கப் பல காதல் கவிதைகள் வடிக்க

      கருத்திட விழையும் போது, சொல் நயம் காக்க

      சொல்லாமல் விடுவதே நன்று ,சிறந்தது.
---------------------------------------------- .

        





     

புதன், 7 மார்ச், 2012

நினைவில் நீ ( அத்தியாயம் பன்னிரெண்டு )


                                    நினைவில் நீ ( நாவல் தொடராக )
                                    ----------------------------------------------

                                                   -------  12   -------

         கண்ணன், பாபு தன்னை வேண்டுமென்றெ அவமானப் படுத்திவிட்டதாக எண்ணிப் பொறுமினான். பாபுவின் வாதப் பிரதி வாதங்கள் கவைக்குதவாதது என்று திடமாக எண்ணினான். செய்யப் பட்ட செயலின் .குற்றத்தை மறைக்க, ஏமாற்றுகிறவர்கள் எழுப்புகிற குரலில் உண்மை உள்ளதென்று பாபு தவறாக எண்ணுகிறான் என்றும் வேதனைப் பட்டான். ஆண்டவன் வழிபாடு, அர்ச்சகம் செய்வது இவற்றுக்கென்றே ஏற்படுத்தப் பட்டதுதான் பிராமண குலம் என்றல்லவா பாபு கூறுகிறான்.!அப்படிச் செய்யாதவர்களெல்லாம் சூத்திரர்களாம். ! நாக்கில் நரம்பில்லாமல் பெரியவன் என்ற பேதமில்லாமல் என்னையே எடுத்தெறிந்து பேசிவிட்டானே. சே..! இதெல்லாம் இந்த புத்தி கெட்ட மாலதியின் பேச்சைக் கேட்டதால் வந்த வினையல்லவா,! தான் கஞ்சி குடிக்க தன் கணவன் மட்டும் ஒன்றும் அறியாமல் வேளா வேளைக்கு தின்று போகிறானே என்ற வேதனையில் அவள் என்னிடம் ஏதாவது சொல்லியிருந்தால், அவளுக்குச் சோறு போட வகையிருக்கிறதா என்று பார்ப்பது, இல்லையென்றால் நானும் கஞ்சி குடித்துவிட்டுப் போகிறேன் என்றிருக்காமல், அவள் பேச்சைக் கேட்டு அங்கு போனதே என் மடத்தனம் “


              கண்ணனுக்கு ஏற்பட்ட மனப் புகைச்சல் எளிதில் அடங்குவதாக இல்லை. என்னென்னவோ எண்ணித் தன்னையே குறை கூறிக் கொண்டான்.. பிராமணீயத்தை எதிர்க்கும் அந்த அற்பனுக்கு,அதன் மகத்துவத்தைக் காட்டியே தீருவது என்று சங்கல்பித்துக் கொண்டான்.

    இன்றைக்கு வந்து வேறு உயிரை வாங்கப் போகிறான்..என்னென்னவோ சொல்லிக் குழப்புகிறான். நானாவது பேசாமல், ஒன்றாக வாழ விரும்பி வந்திருக்கிறோம் என்பதோடு நிறுத்தி இருக்கலாம். பிறகு நடப்பவற்றைப் பிறகு கவனித்திருக்கலாம். சே.!அதைவிட அவன் குணம் இப்போது தெரிந்ததே எவ்வளவோ மேல். ! இல்லையென்றால் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்திருக்கும். ஹூம்.! வரட்டும். என்னதான் சொல்கிறான் பார்ப்போம்.பாபு வரும் நேரம் நெருங்க நெருங்க கண்ணன் குட்டி போட்ட பூனை மாதிரி அமைதி இழந்து தவித்தான்.பாபுவும் வந்து சேர்ந்தான்.

   ” பெரிய துரை.! லெட்டர் எழுதிப் போடறானாம்,நான் காத்திருக்க வேணுமாம். .தெரியப்படுத்தாம வரக்கூடதோ.?சரி, வந்த விஷயம் என்ன,?கண்ணன் மன நிலை மாறியிருக்கவில்லை என்று பாபு கணக்கெடுத்து விட்டான். தன் மன உறுதியைக் காட்டுபவன் போல ,ஒன்றுமே இதற்கு முன்பு நடக்காத மாதிரி மிகவும் சகஜ பாவத்தில்,இல்லையண்ணா. நான் வர சமயத்தில் ஒரு சமயம் நீ வீட்டில் இல்லாது போனால்... அதுவுமில்லாமல் நான் வரேன்னு தெரிஞ்சிருந்தால் அண்ணியும் எனக்காக ஏதாவது ஸ்பெஷ்லாகச் செய்திருப்பார்கள்என்றான். “ இல்லையா அண்ணி.என்று கேட்டு மாலதியும் மனமாற்றம் அடைந்திருக்கிறாளா என்று அறிய விரும்பினான். மாலதிக்கு தர்ம சங்கடமாக இருந்தது. என்பதன் கூட, பாபுவை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லையே என்ற எண்ணமும் கலந்திருந்தது. மெல்லச் சிரித்து மௌனமாக இருந்தாள். அந்தச் சிரிப்பே அவளுடைய நிலையை எடுத்துக் காட்டியது. பாபுவுக்கு என்னதானிருந்தாலும் தான் ஒரு அன்னியப் பெண்ணிடம் அன்றைக்குக் கடிந்து பேசியது தவறு என்றே தோன்றியது.ஆத்திரத்தை அடக்கி அவ்ளை அலட்சியம் செய்திருக்கலாம்..ஆனால் இந்தப் பாழாய்ப் போன,நல்லது கெட்டது, சரி தவறு முதலியவற்றை ஆராயும் குணங்கள் எல்லாம் நடந்து முடிந்து போன பிறகல்லவா தெரிய வருகிறது.,என்று தன்னையே நொந்து கொண்டான். 


     கண்ணன் எப்படியாவது பாபுவைத் தாக்க வேண்டும், அவனை அவமானப் படுத்த வேண்டும், என்று சதா எண்ணிக் கொண்டிருந்தான்.எண்ணிக் கொண்டிருந்தவன் கிடைத்த வாய்ப்பையும் நழுவ விடத் தயாராயிருக்கவில்லை. ஒன்றுமே நடக்கவில்லை என்பதுபோல நடிக்கத் தனக்கும் தெரியும் என்று காட்டிக் கொள்ளும்.பாபுவை வார்த்தைகளால் தாக்கவும், தன் இருப்பிடத்தில் தான் வைத்ததே சட்டம் என்பதை நிரூபிக்கவும்,” ஸ்பெஷ்லாகச் செய்து போட வேண்டும் என்ற ஆசை இருந்தால் போதுமா பாபு.? அதை அனுபவித்து உண்ணுபவர்களும் அன்புக்குப் பாத்திரமானவர்களாகவும் இருக்க வேண்டும் அல்லவா.? நீ என் தம்பி. அதனால் என் அன்பு உனக்குண்டு. குளித்து பூஜை முடித்த பிறகுதான் இங்கு சாப்பாடு. நீ தயாரானால் குளித்து விட்டு ஸ்பெஷ்லாகச் சாப்பிடலாம்..ரெடியானால் வா சாப்பிடலாம் “என்று கூறினான்.    

    ”.ஓ.! நான் குளித்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். பூஜைகள் முடித்துக் கொள்ளுங்கள். நான் அதுவரை வெண்டுமானால் காத்திருக்கிறேன்”---பாபு இடக்காகப் பேசி தன்னை மடக்குவதாக கண்ணனுக்குப் பட்டது. அவனுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற ஆத்திரத்தில் ,சரி.கொஞ்ச நேரம் இரு பூஜை முடியட்டும்என்று கூறி , விபூதியைக் குழைத்துப் பூசிக்கொண்டு, விளக்கேற்றி ஸ்வாமி படத்தின் முன்னால் போய் அமர்ந்தான். தன் அண்ணனுக்கு இவ்வளவு பக்தியா என்று எண்ணி பாபு ஆச்சரியப் படட்டும் என நினைத்து, சாதாரணமாகப் பத்து வினாடிகள் ஆண்டவனைத் துதி செய்யும் நேரத்தை அன்று வேண்டுமென்றே ஒரு மணி நேரமாக நீட்டினான். பாபுவுக்கு கண்ணன் வேண்டுமென்றே காலத்தைக் கடத்துவது நன்றாகத் தெரிந்தது. இருந்தாலும் அதை வெளிக் காட்டாமல், பொறுமையாக அங்கிருந்த பத்திரிகைகளிலும், புத்தகங்களிலும் கவனத்தைச் செலுத்தினான்.ஒரு வழியாகக் கண்ணன் பூஜையை முடித்துக் கொண்டு, அதே சமயத்தில் மாலதிக்கு சைகையால் “ ஒன்று “ என்று தெரிவித்து முன் அறைக்கு வந்தான். சிறிது நேரத்தில் ஒரு தட்டில் உப்புமாவும், ஒரு க்ளாசில் பாலும் மாலதி கண்ணன் முன் வைத்துவிட்டு உள்ளே சென்றாள். பாபு பத்திரிகையிலிருந்து தன் தலையைச் சற்றே தூக்கி நோக்கியவன், ஒருவருக்கு மட்டும் கொண்டு வரப் பட்ட உண்டியைக் கண்டு, தன்னைக் கண்ணன் நன்றாக அவமானப் படுத்த திட்ட மிட்டிருக்கிறான் என்பதை யூகித்துக் கொண்டான். கண்ணனின் இந்த அற்ப சந்தோஷத்துக்கு தான் ஈடு கொடுக்க வேண்டும் என்று எண்ணியவன், மனம் வேதனையால் வாடியது..கண்ணன் பாபுவை ஒப்புக்குக்கூட அழைக்காமல் கொண்டு வரப் பட்டிருந்த சிற்றுணவை முடித்துக் கொண்டு, “பாபு வந்த விஷயத்தைச் சொல் என்றான். அவன் முகத்தில் வெற்றிப் பெருமிதம் தாண்டவமாடியது.பாபுவின் வேதனை அடைந்த முகம், அவமானத்தின் சாட்டையடி பட்டு துவண்டு போய் விட்டது என்று நினைத்து சந்தோஷப் பட்டான்.

   ” அண்ணா, வந்த விஷ்யமிருக்கட்டும்.எனக்கொரு சந்தேகம்..அதை முதலில் தெளிவித்துக் கொள்கிறேன் ‘என்று பாபு கூறியதைக் கேட்டதும் ,அவன் சற்று முன்பு நடந்த நிகழ்ச்ச்க்கு விளக்கம் கேட்கப் போகிறான் என்று நினைத்துக் கண்ணனும் தன்னை போருக்கு ஆயத்தப் படுத்திக் கொண்டான். :ஆண்டவன் வழிபாட்டை இப்படி படத்தின் முன்னால் உட்கார்ந்து ஒரு மணி நேரம் புரியாத வார்த்தைகளைச் சொல்லுவதன் மூலம் தானா வெளிப் படுத்த முடியும்.?

       “ அது சுத்த நாஸ்திகக் கேள்வி. தூணிலும் இருப்பவன் துரும்பிலும் இருப்பவன் கடவுள். அவன் புகழ் பாடவே ஏற்படுத்தப் பட்ட மொழி சம்ஸ்கிருதம். புரிவதும் புரியாததும் அவனவன் ஞானத்தைப் பொறுத்தது. பிராமணன் ஞானி. ! நான் ஒரு பிராமணன் . பூஜை புனஸ்காரங்களில் எனக்கு நம்பிக்கை உண்டு செய்கிறேன். உன்னை மாதிரி நாஸ்திக சர்ச்சைகளில் ஈடுபட எனக்கு நேரமில்லை. “

        ‘அண்ணா, ஆண்டவன் என்றழைக்கப்படும் ஒரு அத்யந்த சக்தியை வழிபட பூஜை புனஸ்காரங்களே வேண்டாமே. மலர்மாலை அணிவிப்பதும், மங்கலப் பொருட்களை நைவேதனமாகப் படைப்பதும், மந்திரங்களை உச்சாடனம் செய்வதும்தான் பூசனையா.? நான் சொல்லுகிறேன். ஆண்டவனின் படம், பலனை மனதில் கொண்டு, அதையடைய ,தன் புலன்களை அடக்கி, சிந்தனையைக் கட்டுப் படுத்தி சக்தியின் உருவில் லயிக்கச் செய்ய உதவும் ஒரு சாதனம். THAT IS AN OBJECT TO CONCENTRATE YOUR THOUGHTS. பிரதிபலனை அடைய விரும்புபவனும், பரம்பொருளும், மலர் மாலைகளாலும் மங்கலப் பொருட்களாலும் உள்ளத்தின் எண்ணத்தில் இரண்டறக் கலப்பதே பூஜையின் முக்கிய நோக்கம். அர்ச்சிப்பவனின் உள்ளத்திலேயே, அர்ச்சனைப் பொருட்களே இல்லாமல் ஆண்டவனின் சக்தியை ஒருங்கே கொண்டு வந்து, பலனை எதிர்பார்க்காது, உண்மையில் மனம் உருகி கண்ணீர் சிந்துவதே முன்னதை விட உயர்ந்தது.ஆனால் அதற்கு நல்லெண்ணம் கொண்ட தூய்மையான எண்ணம் வேண்டும். இதைத்தானே அன்பே சிவம் என்கிறார்கள். இல்லாதவர்களுக்குத்தானே படமும் ,சிலையும், பக்திப் பிரசாதங்களும்.இதுவும் கூட என் நாஸ்திக வாதம் என்று நினைத்து விடாதே. இது ஞானிகளையும் ,மறைகளையும் நான்புரிந்து கொண்ட வரை தான் எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறது.

     உனக்கும் கூடக் கடவுள் பக்தி உண்டு என்று நீ சொல்லித்தான் மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். முடியும். பாபு உன்னுடைய விதண்டா வாதங்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. பிறரை தூஷிப்பதற்கென்றே பிறந்துள்ளவர்களில் என் தம்பியும் ஒருவன் என்று எண்ணும்போது தான், எனக்க மிகவும் மனக் கஷ்டமாக இருக்கிறது. “

      உண்மையிலேயே தன் பேச்சும் போக்கும் கண்ணனுக்குப் புரியவில்லை, அதனால் பிடிக்கவுமில்லை. அந்த விதத்தில் கண்ணன் தன்னிடம் வருத்தப் பட்டதும் அதை எடுத்துக் காட்ட , எடுத்துக் கொண்ட முறையும் சரியோ தவறோ தன்னிடம் கண்ணனுக்கு அன்பு இருந்தது என்பதை நிரூபிக்கிறது என்றே பாபு எண்ணினான். அந்த அன்பிலேயே கண்ணனை வென்றுவிட முடியும் என்று பாபு மனக் கோட்டை கட்டினான்.

   ” அதிருக்கட்டும் அண்ணா. ! அன்றைக்கு நான் பெசிய பேச்சுகளால் உங்கள் மனம் புண் பட்டிருக்குமானால் அது என் தவறல்ல.நான் கொண்டுள்ள கொள்கையின் தவறாயிருக்கலாம். ஆனால் அது தவறு என்றுதான் எனக்குத் தோன்ற மாட்டேன் என்கிறது.மேலும் அன்றைக்கு நீங்கள் கடைசியாக வரும்போது கூறிவிட்டு வந்த “உறவுக்கு முழுக்குப் போடுவது “ என்ற வார்த்தைகள். என்மனசை மிகவும் வருந்தச் செய்தது. உலகில் உறவு என்பது நாம் விரும்பிக் கிடைக்கப் பெறும் ஒன்றல்ல. நாம் வேண்டாமென்றால் விட்டுப் போகக் கூடியதும் அல்ல. நமக்குள் அபிப்பிராய பேதங்கள் இருக்கிறது “

      “ அதுதானே உறவையே வெறுக்க வைக்கிறது.

        “அதைத்தானே வேண்டாமென்கிறேன், விளக்க வந்தேன். அபிப்பிராய பேதங்கள் இருப்பது இயற்கை. நம் கையில் இருக்கும் விரல்களும் கூட வேறுபட்டுத்தானே இருக்கிறது. அதற்காக விரல்களை வெட்டிப் போடுகிறோமா என்ன..வித்தியாசப் பட்டாலும் நம் கை விரல்கள் என்றுதானே எண்ணுகிறோம். உண்மை இது அல்லாதது இது. என்று வரையறுக்கப் பட்டு எல்லோரும் ஒப்புக் கொள்ளும் நிலை வரும்வரை, எண்ண வேறுபாடுகள் இருப்பது சகஜம். கொள்கையை எதிர்த்தாலும் அதைக் கொண்டுள்ளவரை வெறுப்பது என்பது என்னவோ எனக்குச் சரியாகப் படவில்லை. நமது கொள்கைகள் ஒத்து வர வில்லை என்ற எண்ணத்தில் மட்டுமே நமக்குள் ஒற்றுமை இருக்கிறது. உன்னை என் கொள்கைகளிலும் என்னை உன் பக்கம் இழுத்துக் கொள்ளவும் போட்டி போடுகிறோம். இது அன்பினால் ஏற்படுவது. அந்த அன்பும் அதற்குக் காரணமாயிருகிறதென்று நீ நினைக்கும் நமது உறவும் பிட்டுப்பிரித்துத் தள்ளப் பட வேண்டாம் என்று உன்னிடம் வேண்டிக் கொள்ளவே வந்தேன். சொல்லியும் விட்டேன் இனி உன்னிஷ்டம். நான் இங்கு அடிக்கடி வருவேன். உனக்கும் நம் வீட்டில் என்றும் வரவேற்பு உண்டு. .வருகிறேன்.

        விடை பெற்றுக் கொண்டு சென்று விட்டான் பாபு. அவன் இவ்வளவு தூரம் வந்து பேசிப் போனதே அவனுடைய பண்புக்கு எடுத்துக் காட்டு என்று மாலதி நினைக்கத் தொடங்கவும் “  “அடிபட்ட புலி சீறுது. அடிக்கடி வேறு வருவானாம். ! யார்தான் வரவேற்கத் தவங்கிடக்கிறார்களோ.தெரியலை “ என்று கண்ணன் உறக்கவே தன் ஆத்திரத்தைக் கொட்டிக் கொள்ளவும் “ தாயே என் கணவனுக்கு நல்ல வழி காட்டு, அவரை நல்ல எண்ணங்களுக்கு உறைவிட மாக்கம்மா.என்று தியானிக்கவும் வேண்டிய தாயிற்று.
-------------------------------------------------------------------- 

                                                        ( தொடரும் )        

  





 . 
       

திங்கள், 5 மார்ச், 2012

செயல் திட்டம் ( PROJECT WORK ) வழிகாட்டி.

                             
                                   செயல்திட்டம் -வழிகாட்டி
                                  ------------------------------------

     
( டாக்டர் கந்தசாமி அவர்கள் எழுதி இருந்த செயல் திட்டம் பற்றிய பதிவு படித்ததும் ,எண்ண அலைகள் பின்னோக்கிப் பாய, எழுந்தது இந்தப் பதிவு. )


        திருச்சி பாரத மிகுமின் கொதிகலன் தொழிற்சாலைக்கு முதுநிலை பட்டப் படிப்பு
படிக்கிறவர்கள் பலரும், தாங்கள் செய்ய வேண்டிய ப்ராஜெக்டுக்கு வருவார்கள். அங்கு பணியிலிருக்கும் மேலதிகாரிகள் அவர்கள் படிப்புக்கான செயல் திட்டம் ( PROJECT ) கொடுத்து வழிகாட்டிகளாகவும் பணி புரிவார்கள்..MCA பட்டப் படிப்பு படிக்கும் இரு வேறு கல்லூரிகளிலிருந்து ஒரு மாணவனும் ஒரு மாணவியும் என்னிடம் அனுப்பப் பட்டனர். நான் அவர்களது ப்ராஜெக்டுக்கு வழிகாட்டியாக இருக்கக் கேட்டுக் கொள்ளப் பட்டேன். எனக்கு இது ஒரு இக்கட்டான பணியாகத் தோன்றியது. கணினியில் இன்ன பணி செய்து, இன்ன பலன் பெறலாம் என்பது எனக்குத் தெரியும்.. ஆனால் கணினி இயக்க அடிப்படை விஷய ஞானமோ, தேவைப் பட்ட மொழியறிவோ எனக்குக் கிடையாது. நான் முதலிலேயே அந்த மாணவர்களிடம் சொல்லி விட்டேன். நான் கொடுக்கும் பணியை அவர்கள் செய்ய வேண்டும். எப்படி செய்வது என்று எனக்குத் தெரியாது. ஆனால் செய்து வந்த பலன்களை (RESULTS ) எனக்குக் காண்பிக்க வேண்டும். கிடைக்கும் பலனை வைத்து, அவர்கள் செயல் திட்டம் சரியா இல்லையா என்று நான் கூறுவேன். இதனை அவர்களும் ஒப்புக் கொண்டார்கள்.

      நான் இருந்த வால்வ் டிவிஷனில், உற்பத்தியாகும் ஒவ்வொரு வால்வுக்கும் தர சான்றிதழ் தரப் பட வேண்டும். அது தமிழக அரசின்  BOILER INSPECTORATE  இடம் ஒப்புதல் பெற வேண்டும். சுருங்கச் சொன்னால் BHEL-ம்  BOILER INSPECTORATE-ம் தரும் சான்றிதழ் அது. அந்த சான்றிதழில் கொடுக்கப் பட்டுள்ள தகவல்கள், ஒரு வால்வ் செய்யத் தேவையான RAW MATERIALS- ன் உற்பத்தி முதல் வால்வாக மாறும்வரை நடத்தப் படும் எல்லா சோதனைகளையும் ஒருங்கிணைத்து இருப்பதாக இருக்க வேண்டும். வால்வ் தயாரிக்க ஏற்படும் கஷ்டங்களைவிட, சான்றிதழ் தருவது அதிக நேரம் எடுக்கும் பணியாக இருந்தது.. ஆயிரக் கணக்கான வால்வுகள், பல்வேறு அளவுகளில் பல்வெறு உபயோகத்துக்காகத் தயாரானவை ஆகும். ஆனால் ஒவ்வொரு சான்றிதழிலும் எல்லா விவரங்களும் இருக்க வேண்டும். அப்போதெல்லாம் இது ஒரு HERCULEAN TASK – ஆகும். இந்த சான்றிதழ்கள் ஒவ்வொன்றும்,எல்லா விவரங்களும் கொண்டு தனித் தனியாக, டைப் செய்யப் பட்டு கையெழுத்தாக வேண்டும்.இதை எளிமைப் படுத்த, இதற்காக BHEL-ல் இருந்த சிஸ்டம் எஞ்சினீர்களுடன் கணினி மூலம் சான்றிதழ்கள் பெற ஏற்பாடுகள் செய்திருந்தேன். அவை நடைமுறையில் புழக்கத்துக்கு வந்து கொண்டிருந்த நேரம்.

      
      இதே பணியை MCA  ப்ராஜெக்ட் வொர்க் செய்ய வந்தவருக்குக் கொடுத்து செய்யச் சொன்னேன். தேவையான விவரங்களை சேகரித்துக் கொண்டு அவர்கள் சான்றிதழ் உருவாக்கப் பணி செய்ய வேண்டும். அவர்களும் என்னென்னவோ செய்து, ( என்ன செய்வார்கள் என்று எனக்குத் தெரியாது.) பலன்களை எனக்குக் காண்பிப் பார்கள். திருப்தி ஏற்பட்டால் அடுத்து ஒருங்கிணைப்பு என்று செயல் திட்டம் நடக்கும். சரியாக வர வில்லை என்றால் மறுபடியும் செய்யச் சொல்வேன். இப்படியாக ப்ராஜெக்ட் வொர்க் வெற்றிகரமாக முடித்துப் பட்டம் பெற்றார்கள்.

      இந்த செயல் திட்டம் செய்ய வந்த மாணவி ஒரு முறை சரியாக இல்லை என்று மறுமுறை செய்ய அனுப்பிய போது, அழுது , கலவரப் படுத்தி விட்டாள். அவளை சமாதானப் படுத்தி, எங்கு தவறு என்று சுட்டிக் காட்டத் தெரியாது, ,ஆனால் எதிர்பார்த்த பலன் இல்லை என்று நன்றாக விளக்கினேன் பிறகு சரி செய்து வந்தபோது நான் பாராட்டியதும், அந்தப் பெண் முகம் மலர்ந்தது என்னை மகிழச் செய்தது.

     இப்படியாக நான் வழிகாட்டியாக இருந்து பட்டம் பெற்ற இருவரும், பிறகு வெளி நாட்டில் நல்ல பணியில் இருப்பதைக் கேட்டு மகிழ்ந்தது நிஜம்.
-------------------------------------------------------------------.                        
  
 .



வெள்ளி, 2 மார்ச், 2012

நினைவில் நீ...(அத்தியாயம்--பதினொன்று.)


                             நினைவில் நீ ( நாவல் தொடராக )
                            ------------------------------------------------

                                                   ----  11  -----

      பாபு இரண்டு மூன்று நாட்களாக வேலைக்குப் போகவில்லை. உடல் நிலை சரியாயிருந்தாலும் மன நிலை சரியாக இருக்கவில்லை.. இரவில் வெகு நெரம் விழித்து உறங்கப் போவது, காலையில் மிகவும் தாமதமாக எழுந்திருப்பது, பகற்பொழுதில் வெறிச்சென்று உட்கார்ந்திருப்பது, என்று பார்க்கப் பார்க்க கல்யாணி அம்மாவுக்குப் பொறுக்கவில்லை. “ என்னடா இது, ..நானும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நீயே இப்படி மனசு ஒடிஞ்சு போயிட்டா, வீட்டிலே எப்படிடா சந்தோஷம் இருக்கும்.? குழந்தைகள் வேறு உன்னைப் பார்த்தாலே பயந்து சாகிறதுகள். இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒரு நாள் எல்லோருக்கும் சரியெது தப்பெது என்று தெரியத்தான் போகுது. நீ வேலைக்குப் போய் சாதாரணமாய் இரு. எல்லாம் சரியாயிடும்.,“ என்று தான் மிகவும் பயந்து சொல்ல வந்ததை ஆறுதல் அளிக்கும்படிக் கூறினாள். பாபுவுக்கும் அதுதான் சரியெனப் பட்டது. மேலும் சும்மா இருக்கும் நேரத்தில் மன உளைச்சல் படுவதைவிட, அதை ஏதாவது ஆக்க வழியில் பயன் படுத்தினால், அதுவும் லாபகரமானதாய் இருக்கும் என்று தோன்றியது. கலை இலக்கியங்களுக்கு என்று ஏற்படுத்தப் பட்ட தமிழ் மன்றத்தை தற்கால இயல்புகளுக்கு ஏற்றபடி மாற்றலாம் என்ற எண்ணம் ஏற்பட்டதும், மன்றத்து காரியக்குழு உறுப்பினர்கள் தேர்வு அன்று மாலை நடக்க இருப்பதும் நினைவுக்கு வந்தது. தானும் போட்டி போடுவது, தேர்ந்தெடுக்கப் பட்டால் தன் எண்ணங்களை செயல் படுத்த ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது.

     ஆதவனின் கிரணம் பட்டு விலகும் பனி போல பாபுவின் கவலைகள் அவனை விட்டு சற்றே விலகியது. பழைய பாபுவாக தன்னம்பிக்கை மிகக் கொண்டவனாக மாறினான்.

    காரியக் குழு உறுப்பினர் தேர்தலில் பாபு போட்டியிடுகிறான் என்ற செய்தி தெரிய வந்ததும், அமோகமான வெற்றியைத் தேடித் தந்தனர் பாபுவின் நண்பர்கள். அதோடு மட்டுமல்லாமல் குழுவின் தலைவனாகவும் ஏக மனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டான்.

     பாபுவின் பேச்சுத் திறமையை மட்டுமே அறிந்திருந்த மன்றத்து உறுப்பினர்கள், மன்றத்தின் வருங்கால செயல் முறைகளை பாபு விளக்க முற்பட்டதும், பாபுவே எதிர்பார்க்காத முறையில் எதிர்ப்பைத் தெரிவித்தனர். கலை இலக்கியம் சம்பந்தப்பட்ட முத்தமிழின் வளர்ச்சிக்கென்று உருவாக்கப்பட்ட மன்றத்தை அன்றாடம் நடக்கும் வயிற்றுப் பாட்டு விவகாரத்தில் முக்கிய பங்கு ஏற்க வேண்டும் என்று பாபு கூறியதே எதிர்ப்புக்குக் காரணம்.

    ” கலையை வளர்க்கிறோம், தமிழ்ப் பணி புரிகிறோம், என்று சொல்லிக் கொண்டு, பழைய கம்ப ராமாயணச் சர்ச்சையிலும், வள்ளுவத்தின் மகத்துவத்தை மற்றவர் அறியச் செய்வதிலும், பாரதியின் பாட்டுப் புலமையை சிலாகிப்பதிலும் நேரத்தை செலவிடும் நம் மன்றம், உண்மையில் தமிழை வளர்க்கிறதா.? கலையை வளர்க்கிறதா,? இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. பொழுது போக்கு மன்றமாகவே செயல் புரிகிறது. கம்பனும் வள்ளுவனும், இளங்கோவும் பாரதியும் தமிழுக்குத் தொண்டாற்றினார்கள். அதை அனைவருக்கும் உணர்த்த வேண்டியது அவசியம். ஆனால் அதுவே தமிழை வளர்க்கும் பணியென்று சொல்வது முறையா,?
இன்னொன்று கேட்கிறேன் நண்பர்களே, ! சற்று முரண்பாடாகத் தோன்றினாலும் உண்மை தெரிய வரும். தமிழ்ப் பணி என்று கூறி, மன்றம் நடத்தி, வளர்ந்த தமிழை வளர்க்கிறோம் என்று பெருமைப் படுவதைவிட , சற்றே பரந்த மனங்கொண்டு தமிழ் சமுதாயத்துக்குத் தொண்டாற்றும் மக்கள் மன்றமாக இதை மாற்றினால் இன்னும் நன்றாகத்தானே இருக்கும். மன்றம் நிறுவப் பட்டிருக்கும் இந்தப் பகுதி, பெங்களூருக்கே சிற்ந்த உதாரணமாகத் திகழ, வழி வகுக்கப்படக் கூடாதா,?ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு குடும்பத்துப் பிள்ளைபோல் பணி ஆற்றக்கூடாதா.? எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை நாடாமல் நம் தேவைகளை நாமே ஓரளவுக்காவது பூர்த்தி செய்யக் கூடாதா. ? அந்த முறைக்கு அந்த வழியில் பணியாற்றும் மக்கள் மன்றமாக இது திகழக் கூடாதா.? இதுதான் என் கேள்வி. தனி மனிதனால் ஆகாத விவகாரங்கள் இவை. இவற்றுக்கு எல்லோருடைய ஒத்துழைப்பும் நல்லெண்ணமும்  ஆசிர்வாதமும் தேவை. நான் கொண்ட எண்ணங்களில் தவறிருந்தால் திருத்தப்படத் தயாராயுள்ளேன். “ பாபு அஸ்திவாரத்தையே மாற்ற விரும்புவதாக எல்லோரும் எதிர்த்தார்கள்.

      ‘தலைவர் கூறுவதுபோல் மக்கள் மன்றமாக மாற்றப் பட்டால் நாம் என்னதான் சாதிக்க முடியும். ?பசித்தவனுக்குச் சோறு போடும் அன்னதான மண்டபமாகக் காண்கிறாரா நம் மன்றத்தை. அப்படியானால் ஒவ்வொரு உறுப்பினரும் பிச்சை எடுத்துத்தான் மன்றம் நடத்த வேண்டி இருக்கும்.”

     பொழுதுபோக்கு மன்றமா இது என்ற பொருள் தொனிக்கக் கேட்கிறார் தலைவர். நான் கூறுகிறேன். ஆம்.! ஆயிரக்கணக்கான குடும்ப விவகாரங்களைக் கொஞ்ச நேரமாவது மறந்திருக்கலாமே என்றுதான் இந்த மன்றத்தின் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் வருகிறார்கள். சமூகத் தொண்டாற்றுகிறோம் என்று நாம் துவங்கினால், எள்ளி நகையாடப் படுவோம். நான் இதை வன்மையாக எதிர்க்கிறேன். “

     “சமூகத் தொண்டாற்றும் மன்றமாக மாறலாம் என்று சொல்வதைக் கேட்க என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது.ஆனால் அது என்ன என்று வரையறுக்கப் படாத வரையில் நாம்புரிந்து கொண்டு வருவதும் சமூகத் தொண்டுதான் என்பது என் அபிப்பிராயம். “

     எல்லாவிதமான எதிர்ப்புக் கருத்துக்களும் தெரியப் படுத்த்ப் பட்டன. பாபுவுக்கு, ஏன் என்னைப்போல் நினைக்கும் ஒருவராவது இங்கில்லையா.? இல்லை ,நான் நினைக்கும் விதமே இயற்கைக்கு முரண்பாடாக உள்ளதா.?என்ற ஐயமே மேலிட்டது. கடைசியாக விட்டுக் கொடுக்கும் எண்ணத்திலும், ஒரு சிலவற்றையாவது மன்றத்தின் முன் வைத்து செயல் படுத்தக் கடைசி முயற்சி என்ற விதத்தில் “ சமூகத் தொண்டென்பது இன்னதுதான் என்று வரையறுக்கப் பட வில்லை என்றார் ஒரு நண்பர். பிச்சை யெடுக்க வேண்டி இருக்கும் என்றார் இன்னொருவர். யாருமே நிகழ்ச்சிகளுக்கு வர மாட்டார்கள் என்றார் மூன்றாமவர். நான் கூற வந்ததென்னவோ, தமிழ் மன்றத்தின் பணியில் ,இன்னும் சிலவற்றை சேர்க்கலாம் அதுவும் சமூகத் தொண்டு என்ற பரந்த நோக்கத்தில் இருக்கட்டும் என்பது தான். பாரதியைப் பற்றிப் புகழ்கிறோமே தனி ஒருவனுக்கு உணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடினவன், ஆஹா என்கிறோமே , அந்தக் கள்ளிகளையும் களான்களையும் அழிக்கும்வகையில் ஒரு முயற்சி நாம் செய்யக் கூடாதா என்றேன். அதற்காகப் பிச்சை எடுத்து அன்னதான மண்டப மாக்கவும் வேண்டாம்.பள்ளிகள் துவக்குவோம். அங்கு பிஞ்சு உள்ளங்களில் பாரதியின் இனி ஒரு விதி செய்வோம்என்ற ஊக்கத்தை புகட்டுவோம். ஏமாற்று காரர்களும் எத்தர்களும் நிறைந்த நம் சமூகத்தில் ஏய்த்துப் பிழைப்பவர்களை காட்டிக் கொடுக்கும் வகையில் கூட்டுறவு பண்டக சாலைகள் நிறுவுவோம்.  இதற்கான முதலுக்கு இருக்கவே இருக்கிறது நமது முத்தமிழ். நாடகங்கள் நடத்துவோம், நல்லதை உணர்த்துவோம். ஆயிரக்கணக்கானவர்களில் ஒரு பத்து பேராவது நம்மோடு சேர மாட்டார்களா. ? நமது மன்றம் வலுக்காதா.? மக்கள் குரல் ஓங்காதா.? நம்மைப் பிடித்திருக்கும் சோம்பலை ஒழிக்க ,மூட நம்பிக்கைகளை தகர்த்தெறிய, இந்த மன்றம் வழி வகுக்கக் கூடாதா.?அஸ்திவாரத்தையே நான் மாற்ற விரும்புகிறேன் என்றால் அது ஓரளவுக்குத்தான் உண்மை.அந்த அளவுதான் நம் சக்தி என்று எண்ணுகிறேன். பாரதியோ ஒழித்துக் கட்டு என்றல்லவா முழங்கினான்.

   .இந்த எண்ணங்க்ளுக்கு உயிர் கொடுக்கவே நான் போட்டியிட்டேன். உணர்த்தப் படாத எண்ணங்களும் உணர்ச்சிகளும் இலை பழுத்து உதிர்ந்து சருகாகிப் போகும் நிலைமை போலாகி விடக் கூடாதே என்றுதான் என் எண்ணங்களை உங்கள் முன்னிலையில் வைத்தேன். எதிர்ப்பு இருந்தாலும் அது இப்போது மறைந்திருக்கும் என்றே நம்புகிறேன் “என்று அழுத்தமாக ,ஆணித்தரமாகக் கூறினான்.

     மொத்தத்தில் பாபு தமிழ் மன்றத்தை வலுவுள்ளதாகச் செய்யத்தான் மக்கள் மன்றமாக மாற்றச் சொல்லுகிறான், என்று உணர்ந்த மன்றத்து உறுப்பினர்கள், பாபுவின் தீர்மானத்தை ஆதரித்தார்கள் இது பாபுவுக்குக் கிடைத்த வெற்றிகளில் ஒன்று என்று அவனே எண்ணினான். அந்த எண்ணம் அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்ற பழமொழியை நிரூபிக்கச் செய்யும் வகையில் இருந்ததால், பாபு முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்று உறுதியாக நம்பினான்.

     ஏற்படுத்திய மாற்றத்தை வெள்ளோட்டம் விட ஒரு நிகழ்ச்சி நிரலைத் தயாரித்தார்கள். முத்தமிழும் இடம் பெற்ற நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க பெரிய மனிதர் ஒருவரைத் தேடி அலைய வில்லை. அவர்கள். உள்ளூரில் நல்லவர் என்று பெயரெடுத்த ஒரு சாதாரணமான வரையே அழைத்தனர். அலசூரிலேயே நிகழ்ச்சிகளைக் கொண்டாட திட்டமிட்டனர். ஏற்பாடுகளைக் கண்டும் கண்காணித்தும் வந்த பாபுவுக்கு ஒரு புது வேகமும் உற்சாகமும் ஏற்பட்டது. நிகழ்ச்சியை மிகப் பெரிய அளவில் நடத்தி கணிசமான தொகையைத் திரட்டி ஆரம்பத்தில் ஒரு பள்ளிக்கூடம் நடத்துவதென்பதும், அதில் பணியாற்ற ஊதியம் பெற விரும்பாத நல் உள்ளத்தவரைத் தேடிக் காண்பதும் பாபுவின் சுமையாகி விட்டது.
------------------------------------------------------------------

                                                           ( தொடரும் )