திங்கள், 18 மே, 2015

செல்லியும் BUDDY- யும்


                       செல்லியும்  BUDDY-யும்
                        ---------------------------------


என் இளைய மகன் ஒரு நாய்க்குட்டி வாங்கி இருக்கிறான்கோல்டென் ரெட்ரீவர் என்னும் இனத்தைச் சேர்ந்தது. எங்களுக்கு நாயைச் செல்லமாக வளர்த்த அனுபவம் உண்டு, அது பற்றி நான் ஏற்கனவே ஒரு பதிவு எழுதி இருக்கிறேன் பார்க்க செல்லி எங்கள் செல்லம் செல்லங்களைவளர்ப்பது ஒரு வித்தியாசமான அனுபவம் அடுக்கு மாடிக்குடி இருப்பில் ஏழாவது மாடியில் வசிக்கும் என் இளைய மகனின் மகனது தொந்தரவு பொறுக்காமல் வாங்கி விட்டான் நாய்க்குட்டிகளை வளர்ப்பதில் சில பிரச்சனைகள் உண்டு,.இளையமகன் வீட்டில் பகல் பொழுதில் யாரும் வீட்டில் இருக்க மாட்டார்கள். மகனுக்கு அலுவலகம்  மருமகளுக்கு ஆசிரியப் பணி பேத்திக்கு காலேஜ் பேரனுக்குப் பள்ளி  என்று இருப்பதால் வீட்டில் செல்ல நாயுடன் யாரும் இருக்க முடியாது.இப்போது பரவாயில்லை. மருமகளும் பேரனும் விடு முறையில் இருக்கிறார்கள். இன்னும் சில நாட்கள் கழிந்து பேத்தியின் செமெஸ்டர் தேர்வு முடிந்து விடுமுறை தொடங்கும் பிரச்சனை இருக்காது என்று சொல்லி என் வாயை அடைத்து விட்டார்கள் இருந்தாலும் இன்னும் இருமாதங்களில் நாய்க்குட்டிக்கு நான்கே மாதங்கள்தான் பூர்த்தியாய் இருக்கும்  நான் சொல்வது வழக்கம் அறிவுக்கும் மனதுக்கும் போராட்டம் என்று வந்தால் மனமே வெல்லும். இப்போதும் அதுதான் நடக்கிறது.இடைப்பட்ட காலத்தில்நாய்க்குட்டியை சிசுருஷை செய்வது சிரமம் கொடுக்கும். வாயில்லா பிராணிக்கு எதுவும் தெரியாது. சில பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுக்கவேண்டும் நாய்க்குட்டி ஒரு சிறு குழந்தை மாதிரி. கண்ட இடத்தில் ஒன்றுக்குப் போகும் மலமிடும். என்னதான் பழக்கினாலும் அந்தந்த நேரத்தில் ஏழாவது மாடியில் இருந்து அதைக் கீழே கூட்டிவருதல் என்பது சிரமம் கொடுக்கும் அனுபவமாகப் போகிறது
இதனிடையில் நான்கைந்து நாட்களுக்கு என் மருமகள் அவளது தந்தையின் பிறந்த நாளுக்குக் கேரளா சென்றிருந்தாள். பேரன் பேத்தி நாய் சகிதம் என் வீட்டிற்கு வந்தார்கள். நாய்க்குட்டி கொள்ளை அழகு. சில தொந்தரவுகளை நினைக்காவிட்டால்நாய்க்குட்டி இருப்பது மகிழ்ச்சியே. இந்த நாய்க்குட்டிக்கு பட்டி ( buddy) என்று பெயர் வைத்திருக்கிறார்கள் அதற்கு எதையாவது கவ்வ வேண்டும்போல் இருந்தால் என் மனைவியின் புடவை,என் லுங்கி, என் சப்பல் என்று கவ்வ ஆரம்பித்து விடும். எங்களுக்கு வயதாகி வருவதால் அதன் விளையாட்டுக்கு ஈடு கொடுப்பது கஷ்டமாக இருந்தது. எங்காவது கடித்து விடுமோஎன்னும் பயமும் கூடவே.நன்கு பழகி விட்டால் நாயைப் போல் ஒரு நண்பன் கிடையாது. பார்ப்போம் நாய்க்குட்டியின் விளையாட்டை சிறு காணொளியாகப் பகிர்கிறேன்

    

 

  ..

வெள்ளி, 15 மே, 2015

காணொளிக் கதம்பம்



                                       காணொளிக்கதம்பம்
                                       --------------------------------

 இதோ ஒரு பகீர் காணொளி. மனசில் பயம் கொண்டவர்கள் பார்க்காமல் இருக்கலாம் என்று பயமுறுத்த மாட்டேன் திரு ஹரணியின்  வேண்டுகோளுக்கு இணங்கி இந்தக் காணொளி அகற்றப் படுகிறது



தமிழன் என்றோர் இனமுண்டு அவர்க்கே தனியே ஓர் குணமுண்டு, காணொளி கண்டு மகிழுங்கள் பாரம்ப்ரியப் புகழ் பாடியே மகிழ்ந்திருப்போம்



 அந்தரத்தில் மனிதன் மேஜிக்  கா,>




செவ்வாய், 12 மே, 2015

நீதி விழித்துக் கொண்டிருக்கிறதா..?


                     நீதி விழித்துக் கொண்டிருக்கிறதா....?
                    -----------------------------------------------------


நான் பொதுவாகவே அரசியலைப்பற்றிப்பதிவு எழுதுவதில்லை என்னும் தீர்மானத்தில் இருக்கிறேன் ஆனால்
வரவர  இந்த நீதித்துறையைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை1991-1996 வரை ஜெயலலிதா ஆட்சியிலிருந்தபோது வருவாய்க்கு மீறியசொத்துக் குவித்தார் என்று வழக்கு போடப்பட்டு அந்தவழக்கு தமிழ் நாட்டிலிருந்து கர்நாடகாவுக்கு மாற்றப் பட்டு ஒரு ஸ்பெஷல் கோர்ட் ஏற்படுத்த்ப் பட்டு பல இழுத்தடிப்புகளுக்கிடையேயும் வழக்கு விசாரிக்கப்பட்டு கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கப் பட்டது. ஜெயலலிதா வருவாய்க்கு அதிகமாய் சொத்து சேர்த்தது உண்மையே என்றும் அதற்கு தண்டனையாக நான்காண்டு சிறைதண்டனையும்  . நூறு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கபட ஜெயலலிதா தன் சட்டசபை உறுப்பினர் பதவியைத் துறக்க வேண்டி வந்ததில் முதலமைச்சர் பதவியும் போயிற்று. அவர் மேல் முறையீடு செய்ய அது முடியும் வரை உச்சநீதி மன்றம் தண்டனையைத் தள்ளி வைத்து ஜாமீனும் வழங்கியது.கர்நாடகா உயர் நீதி மன்றம் அந்த வழக்கை தினமும் நடத்துமாறும் குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்ப்பு வழங்குமாறும் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு கொடுத்திருந்தது.ஸ்பெஷல் கோர்ட்டில் அரசு தரப்பு வழக்கறிஞராக இருந்த பி. வி. ஆச்சார்யா தனக்கு இழைக்கப்படும் பல தொந்தரவுகளின் காரணமாகதான் ராஜினாமா செய்வதாகக் கூறினார் திரு பவானி சிங் அந்தப் பொறுப்புக்கு வந்தார்
கேஸ் மேல் முறையீட்டில் கர்நாடகா உயர் நீதி மன்றத்துக்கு வந்தபோது பவானி சிங் அரசு தரப்பு வழக்கறிஞராகத் தொடரக் கூடாதென்று வாதி தரப்பில் அன்பழகன் ஒரு மனு கொடுத்திருந்தார் அதன் பேரில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு கொடுக்கும் முன்பாகவே உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க ரெடியாயிருந்தது. உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்க உச்ச நீதி மன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை. ஆனால் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் முன்னே பவானி சிங் அரசு வழக்கறிஞராய் இருப்பது தவறு என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்க மீண்டும் ஆச்சார்யாவே அரசு வழக்கறிஞரானார். ஆனால் என்ன.... இவர் ஆஜரில்லாமலேயே வழக்கின் தீர்ப்பு வழங்கப் பட்டு  ஜெயலலிதா குற்ற மற்றவர் என்று விடுவிக்கப் பட்டுள்ளார்
இப்பொழுது நான் முதலில் கூறி இருந்ததற்கு வருகிறேன் நீதித் துறையைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. 18 ஆண்டு காலமாக நடந்து வந்த வழக்கு சரியான முறையில் விசாரிக்கப்பட்டு முடிவுக்கு வரவில்லையோ என்னும் சந்தேகம் எழுகிறது.விசாரணக் கோர்ட்டில் சொத்து கணக்கிடப்பட்ட விதம் சரியில்லை என்று கூறி ஜெயலலிதாவின் வருவாய்க்கு அதிகமான சொத்து  சுமார் 8 1/2 சதவீதமே என்றும் அது தண்டனை வழங்கப் போதாது என்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் கூறப் பட்டுள்ளது இந்தத் தீர்ப்புக்கு மேல் முறையீடு கர்நாடகா அரசுதான் செய்ய வேண்டும் என்கிறார்கள்.ஆனால் கர்நாடகா அரசு இந்த வழக்குக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்னும் எண்ணத்தில் இருப்பதாகத் தெரிகிறது அப்படியானால் இந்த வழக்கு உச்ச நீதி மன்றத்துக்கே வரமுடியாதா. என்னைப் போன்றவர்கள் தீர்ப்பில் பல சந்தேகங்கள் உச்ச நீதிமன்றத்தாலேயே வழங்க முடியும் என்று நினைக்கிறோம் உச்ச நீதி மன்றம் ஊழல் வழக்குகளில் ஜீரோ tolerance  என்றும் கூறி இருக்கிறார்கள்மேலும் இன்னொரு சந்தேகம் அவர்கள் உண்மைகள் தளத்தில் குறிப்பிட்டிருந்தது போல் விசாரணை நீதிபதி மேல் முறையீடு செய்து மான நஷ்ட வழக்குப் போட வழி இருக்கிறதா என்றும் கேட்கத் தோன்றுகிறது
எனக்கென்னவோ ஜெயலலிதா தன் மீது நல்லெண்ணத்தை வளர்க்கவே தனது இரண்டாம் முறையில் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்து நல்ல பெயரெடுத்திருக்கிறார் அது இந்தத் தீர்ப்பில் ஜனங்களின் முக்கியமாக அஅதிமுக வினரின் சந்தோஷப் பூரிப்பில் தெரிகிறது இரண்டாம் முறையாக சட்டத்தின் பிடியிலிருந்து ஜெயலலிதா நழுவி இருக்கிறார். உண்மையிலேயே வழக்கு விசாரணைகளும் தீர்ப்புகளும் நேர்மையாய் நடந்திருக்கிறது என்று உச்ச நீதி மன்றத் தீர்ப்பே முடிவு செய்ய வேண்டும்

ஞாயிறு, 10 மே, 2015

அன்னையர் தின எண்ண ஓட்டங்கள்


                    அன்னையர் தின எண்ண ஓட்டங்கள்
                    --------------------------------------------------------


பிரதி வருடமும் மேமாத இரண்டாம் ஞாயிறு அன்னையர் தினமாகக் கொண்டாடப் படுகிறது. சிறு வயதிலேயே அன்னையை இழந்த எனக்கு மகளிர் அனைவருமே அன்னையரே. அவர்களனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்னையைப் பற்றிய என் பேரனின் ஆங்கில எழுத்துக்களையும் அதை நான் தமிழ்ப் படுத்தி எழுதி இருந்ததையும் மீள் பதிவாக்குகிறேன்
பேரனின் ஆங்கிலக் கவிதை
--------------------------
When I was home alone
I was happy thinking about the freedom
But without you it was actually boredom
The fights we have and the love we share
I missed it all and wanted nothing but care
Time passed
Oh I never knew it was cause I was thinking only about you
Things have changed  and so have I
I don’t know whether it is good or bad
But my love  always  was you mom
You were the Sun rays that woke me up
And the moon that put me to sleep
Like that I convinced  myself that you were there within myself
You are the one and only one who is so complete and so damn sweet
You are mine and you make me shine
Mom you are the best
LOVE YOU MOM
  
என் தமிழாக்கம்
-----------------
தளைகளும் கட்டுப்பாடும் அற்ற தனிமையில்
நானிருந்தபோது விடுதலை உணர்விருந்தது.
ஆனால் நீ இல்லாதது வெறுமை உணர்த்தியது
அன்புடன் உன அதட்டலும்,அதிகாரமும் இல்லாதிருந்தது
என்னுள் ஏக்கத்தை ஏற்படுத்தியது.

உன் உதிரத்தின் உயிராய் தொப்புள் கொடி
உறவாய் உதித்தவன் நான்.காலங் கடந்து
உணர்கிறேனோஅம்மா, நீயின்றி நானில்லை என்று ?. 

என்னுள் மாற்றங்கள் நிகழ்கிறது நான் அறிவேன்
அவை நல்லதோ அல்லதோ நானும் அறியேன் -ஆனால்
அறிகிறேன் அம்மா, என் அன்பு என்றும் மாறாதது.

விடியலில் என்னை எழுப்பும் ஆதவன் நீ
அந்தியில் என்னை உறக்கும் நிலவும் நீ
என் எண்ணத்தில் உன்னை நிறுத்தி
நீயில்லா வெறுமையை விரட்டினேன்.

இனிமையின் இருப்பு நீ,பூரணத்தின் பொலிவு நீ
என்னுள் என்னை மிளிரச் செய்பவள் நீ
எல்லாம் எனக்கு நீயே அம்மா உலகில் சிறந்தவள் நீயே அன்றோ.!

.!இன்றைய அன்னையரைப் பற்றிய என் ஒரு பதிவையும் அதற்குப் பின்னூட்டமாக வந்த சுந்தர்ஜியின் எண்ணங்களையும் பதிவாக்குகிறேன்

நீ எங்கே இருக்கிறாய் அம்மா
----------------------------

நானோ உடல் நலிவுற்று
நாதியின்றி இருக்கிறேன்-ஆனால் நீ
மருத்துவ மனையில் நாடி பார்த்து
நாக்கு நீட்டச் சொல்லி சோதிக்கிறாய்.

நான் உடல் சோர்வுடன் தவிக்கிறேன்.
நீயோ ஊக்க பானங்களுக்கு பரிந்துரைக்கிறாய்.

நான் பசியால் வாடுகிறேன் நீ
நட்சத்திர ஓட்டலில் பரிமாறுகிறாய்.

கடினமான கணக்குப் புரியாமல் முழிக்கிறேன்.
நீயோ பள்ளியில் மாணவர்க்குப் பாடம் நடத்துகிறாய்.

நான் மணலில் கோட்டை கட்ட முயல்கிறேன்.
நீயோ அடுக்குமாடி பற்றி விவாதிக்கிறாய்.

நான் மனம் வாடி என்னுள் ஒடுங்குகையில்
நீயோ எங்கோ மனநலப் பாடம் எடுக்கிறாய்.

என் கணினி என் மூளையைக் கசக்குகையில்
நீ யாருக்கோ கணினி மூலம் ஆலோசனை கூறுகிறாய்.

காயப்பட்ட எனக்கு உன் அணைப்பு தேவை
நீ கூட்டத்தில் அனைவரையும் அரவணைக்கிறாய்.

தனிமையில் நான் வாடும்போது-நீ
கூட்ட ஆரவாரக் கைதட்டல் பெறுகிறாய்.

நான் எங்கே எப்படித் துவங்குவது என்று எண்ணுகையில்
நீ வாழ்க்கை ஏணியின் உச்சத்தில் இருக்கிறாய்.

என் அம்மாவாக  நீ எங்கே இருக்கிறாய் அம்மா.? 
-------------------------------------------- 

இதற்கு பின்னூட்டமாய் வந்த சுந்தர்ஜியின் கவிதை

எப்போ வருவாயோ?
அம்மாவின் வருகை
இருமணிகள் தாமதிக்க
அப்பாவுக்கோ இன்னும்
வரும்நேரம் தெரியவில்லை.
பூட்டிய கதவுகளைத்
திறந்து வைக்க யாருமில்லை.
சாப்பிட்டாயா கேட்டிடவும்
என்னெதிரில் யாருமில்லை.
இருண்டிருக்கும் வீட்டிற்குள்ளே
என்னையன்றி யாருமில்லை.
காஸ் சிலிண்டர் மாற்றிடவோ
இன்னும் நான் கற்கவில்லை.
சூடாய்ச் சாப்பிடவும்
என்றுமே வாய்த்ததில்லை.
ஹோம்ஒர்க் குழப்பங்களோ
தீர்த்துவைக்க வழியுமில்லை.
வகுப்பில் நடந்த சாகசங்கள்
கேட்க இங்கே யாருமில்லை.
பள்ளி விட்டுத் திரும்பிடவே
ஒருநாளும் பிடிக்கவில்லை.
ஞாயிறன்றி வேறொருநாள்
வாரத்திலே விருப்பமில்லை.
அப்பாவோ அம்மாவோ
எப்போது வருவாயோ?
எங்கும் இனிப் போகாமல்
என்னோடே இருப்பாயோ?

இப்படி ஒரு கவிதை 2010ல் எழுதினேன்.
http://sundargprakash.blogspot.in/2010/12/blog-post_30.html

மீண்டும் அது கிளர்ந்தெழுகிறது. என் நெஞ்சை அடைக்கிறது.

 

  ..

 

  

வியாழன், 7 மே, 2015

நீதி கேட்கிறேன்


                           நீதி கேட்கிறேன்
                           ------------------------


ஒன்றென்று சொன்னால் நினைவுக்கு வருவது
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பகரப்படுவதே
ஆனால் அறிந்தும் உணர்ந்தோர் அவ்வொருவனுக்கு
ஆயிரம் நாமங்கள் உருவங்கள் கொடுத்து உள்ளம் மகிழ்தல்
பொறுக்கலாம் அவரவர் விருப்பம் ஆனால் அவன் படைப்பினிலே
ஆயிரம் உண்டுங்கு சாதி என ஓங்கி உரைத்தல் சரியோ
இது என்ன நீதி.?
சாதி இரண்டொழிய வேறில்லை என்றார்
மேதினியில் மேவு பொருள் அனைத்தும்
இரண்டிரண்டாய் இலங்குதல் காணீரோ
உண்மை பொய், ஆண்பெண், ஒளி இருட்டு
என்றெங்கும் எதிர்மறைகள் ஒன்றுடன் ஒன்று
ஊடே இருப்பினும் ஒன்றில் ஒன்றைப் பிரித்து
உணரும் நாம் நம் செயல்களில் நன்றெது என்றும்
தீதெது என்றும் உணராதிருத்தல் கண்டிங்கு ஏதும்
கேளாதது என்ன நீதி.?
அநீதி எதிர்க்க இரு கண்போதாதென்றோ
முக்காலம் முப்பரிமாணம் என்று எங்கும்
நீக்கமற நிறைந்திருக்கும் மும்மூர்த்தியில்
ஒரு மூர்த்தி முக்கண் கொண்டு திரிபுரம் எரித்தான்
அவன் தவம் கலைத்த அனங்கவேளையும்  சுட்டெரித்தான்
அவன் படைத்த உலகில் அவலங்களுக்கெதிராய் ஒரு கண்ணும்
திறவாதது என்ன நீதி?
வாழும் நிலத்தை நால்வகைப் படுத்தினான்
வாழும் நெறி போதிக்க நான்மறை என்றான்
வர்ணங்கள் நான்கும் செய்தொழில் வகுக்க
இரு பிறப்பெடுத்தவன் உயர்ந்தவன் என்றான்
பிறப்பொக்கும் என்று உணர்ந்தும் வகுத்தது கொண்டு
பிரித்திடல் என்ன நீதி.?
புலன்கள் ஐந்து பஞ்ச பூதங்கள் ஐந்து என்று
பூவுலகில் பிறந்த அனைவருக்கும் பொது
என்று படைத்த  இறையா இயற்கையா
வாய்ப்பென்று வரும்போது வித்தியாசம் காட்டுதல்
பூர்வ ஜன்ம வாசனையின் பலன் என்று கூறல்
இப்பிறப்பில் இழைக்காத பிழைப்புக்கு  முற்பிறப்பைக்
காரணங் காட்டுதல், இது என்ன நீதி.?
பகிர்ந்துண்ணும் பறவையினங்கள் விலங்கினங்கள்
பசிக்கு உணவைத் தேடி அலையும் அவை அடுத்த வேளைக்கு
பதுக்கி வைக்காது. ஆவி பிரிந்தால் ஆறடி நிலமும் சொந்தமில்லை
என்றறிந்தவர் சேருமிடத்துக்குக் கொண்டா செல்ல முடியும்
தேவை போய் மீந்தவற்றை ஆறறிவு படைத்தும் அறுசுவை போதாதா
அவலச் சுவையும் இவர் தேடல் என்ன நீதி.?
எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்
என்றோ ஓதியது எண்ணத்தில் ஓடியது
எண்ணில் எழுத்தில் இறை புகழ் பாட என்னால்
இயலவில்லை, கண்முன்னே விரியும் அவலங்கள்
அவனும் அறிந்தவன் தானே தீயவை தலை தூக்க
தர்மம் நிலை நாட்ட யுகந்தோரும் மீண்டும் மீண்டும்
அவதரிப்பேன் என்றவன் இன்னும் அவன் வருகை
நிகழ்த்தாதிருத்தல் என்ன நீதி?


---

ஞாயிறு, 3 மே, 2015

கல்வி- இனி ஒரு விதி செய்வோம்


                            கல்வி-- இனி ஒரு விதி செய்வோம்
                             ------------------------------------------------

 எத்தனை முறை எழுதினாலும் சரியாகச் சொல்லவில்லையோ என்ற எண்ணம் அவ்வப் போது எழுகிறது. இந்தக் கல்வி பற்றிதான் கூறுகிறேன் இப்போது அளிக்கப் படும் கல்வி பலருக்கும் திருப்தி தருவதாயில்லை. .கல்வி என்பதுதான் என்ன? வெறுமே எழுதப் படிக்கக்கற்பிப்பதா? கணக்குப்போடச் சொல்லிக் கொடுப்பதா.? என்னை பொறுத்தவரை கல்வி என்பது மனிதனை சிந்திக்க வைக்க வேண்டும். ஆனால் எழுதப் படிக்கத் தெரிந்தாலே போதும் கல்வி அளித்ததாக ஆகுமென்றுதான்  பலரும் நினைக்கிறோம்

ஏனென்றால் நூற்றாண்டுகளாக அதுவே மறுக்கப் பட்டு வந்த நிலைக்கு இது முன்னேற்றம்தான் அல்லவா? இதிலும் இப்போது நூறுசதவீதம் கல்வி என்பதே அவசியமாகப் படுகிறதுமுதலில் எழுதப் படிக்கத்தெரிந்தால் பல செய்திகள் நிகழ்வுகள் அவற்றின் தாக்கம் எல்லாம் தெரிய வரலாம் எனக்கு மக்கள் கல்வி அறிவு கிடைக்கப் பெறாமல் போனதற்கு நம் நாட்டில் உலவி வந்த வருணாசிரம முறைதான் முதல் காரணம் என்று தோன்றுகிறது,இதைப் படிக்கும்போதே சிலர் மனசு படபடப்பது தெரிகிறது. நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை.
 எல்லோரும்  படித்து  முன்னுக்கு  வந்துவிட்டால், சிலருடைய  ஆதிக்கத்துக்கு  முற்றுப்  புள்ளி  வந்துவிடும் என்ற நிலையில்  ஒடுக்கி  வைக்கப்பட்ட  மக்கள்  தொகை மிகவும்  அதிகமாக  இருந்தது. ஆயிரங்காரணங்களை கூறி  அடிமைப் படுத்தப்பட்டிருந்தனர் .காரணங்களை நான் விவரிக்க  விரும்பவில்லை. ஆனால் எல்லோரும்  படிப்பறிவு  பெற்றால் சுயமாக  சிந்திக்க  துவங்குவார்கள்  என்ற பயம்  ஆண்டைகளிடம்  இருந்தது. அடிமைத்தளை  இறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு அஸ்திவாரம் பலப்பட,
அவர்களது  அலுவலகப்  பணிகளுக்கு  குமாஸ்தாக்கள்  தேவைப்பட மெகாலே  கல்வி  நடைமுறைப்  படுத்தப்பட்டது. இதெல்லாம் சரித்திரம்
இந்த வாய்ப்பை அதிகம் பயன் படுத்தி தங்கள் நிலையினை உயர்த்திக் கொண்டனர் உயர் சாதியினர்.நாம் அடிமைப் பட்டுக் கிடக்கிறோம் என்னும் எண்ணமே இல்லாமல் அடிமை வாழ்வில் இன்பம் கண்டவர் நம் முன்னோரில் பலர். இருந்தாலும், இந்த மெக்காலே கல்வி முறையில் கல்வி கற்றவரின் எண்ணங்கள் சற்று விசாலமடையத் தொடங்கியது கல்வி கற்றவர்களில் சிலர் சிந்திக்கத் தொடங்க நம் நாடு அடிமைத்தளையிலிருந்து மீண்டது.சுதந்திரம் பெற்றபோது கல்வியிலும் வாய்ப்பிலும் பின் தங்கப் பட்டவர்கள் இருக்கிறார்கள் என்று உணரப் பட்டது சுதந்திர இந்தியாவில் குறிப்பிட்ட சதவீதம் மக்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு கல்வியிலும் அரசு பணிகளிலும் ஒதுக்கீடு பெறவேண்டும் என்னும் எண்ணம் பரவலாக இருந்ததுகுறிப்பிட்ட சதவீதம் போதாதென்று பொராட்டங்கள் நிகழ்ந்ததும் அதற்கு எதிராகவும் போராட்டங்கள் நிகழ்ந்ததும் அண்மைய சரித்திரம் இந்த ஒதுக்கீட்டின் தேவை எத்தனை காலத்துக்குத் தேவைப் படும்? இதை இப்படியே PERPETUATE செய்வது சரியா என்றும் கேள்வி எழுகிறது தற்போதைய உலக மயமாக்கலின் காரணமாக இன்னொரு ஜாதியும் தலை தூக்கி இருக்கிறது அதுதான் பணக்கார ஜாதி
            நம்மை  நாமே  ஆளும்போது ,நாம் எல்லோரும்  சமம்  எனும்போது , வாய்ப்புகளும்  சமமாக  இருக்க வேண்டும். வாய்ப்பு  வேண்டிப்  போராட  கல்வி அறிவு  அவசியம். அதுவும் பரவலான  நூறு   சதவீதக்   கல்வி அவசியம்.  நாம் படித்தவற்றை
பகுத்தறிந்து   உணர்ந்தால் அறிவுள்ளவர்களாக  ஆவோம். படித்தவர்கள்  எல்லோரும்    அறிவுள்ளவர்கள்  அல்ல. படிக்காதவர்கள்  அனைவரும்  அறிவில்லாதவர்களும் அல்ல.
ஆனால் ஒருவனை  அறிவாளியாகக படிப்பறிவு மிகவும் உதவும்.
              தற்சமயம்  நிலவி வரும் சூழ்நிலையில் கேக்   ஊட்டப்பட்டு   ஊக்கப்படுத்தப்   படுபவர்கள்  முகவரி  தெரியாமல்  போய்விடுகிறார்கள்  என்ற அச்சமும்  கல்வியறிவே  காசு கொண்டு  வாங்கப்பட  வேண்டிய  அவல நிலையில் நாம் உள்ளோம்  என்ற கவலையும்  இருப்பது சகஜம்

              
மேலே குறிப்பிடப் பட்டுள்ள பிரிவில் படாமல் எந்த ஒரு உந்து   சக்தியும் இல்லாமல்  படித்துயர்ந்து  வந்தவர்களும்  ஏராளம்  உண்டு. நகரங்களில்  வசிக்கும்  நம் கண் முன்னே படுவது  கான்வென்ட்  படிப்பும்  கூடவே வரும் அதிக  செலவினங்களும்தான் .இல்லாதவன் தன  தலைமுறைக்குப்  பிறகு  தன பிள்ளைகள்  நன்றாக   இருக்கவேண்டும்  என்று பாடுபடுவதையும்  பார்க்கிறோம்.  இயற்கைதானே.  ஆனால் கான்வென்ட் படிப்பும் ஆங்கிலப்  படிப்பும்தான்  மேலானது  என்ற ஒரு மாயத் தோற்றத்துக்கு  அடிமையாகும்போதுதான்  சந்திக்கும்  இன்னல்கள்  ஏராளம்

              
எழுத்தறிவும் கல்வியறிவும்   பரவலாக்கப்பட்டால் சுயமாக சிந்திக்கும்   திறனை அவர்கள் வளர்த்துக்கொள்வார்கள்.  முனிசிபல், கார்ப்பரேஷன்  பள்ளிகளில்  படித்துப்  பெயர் வாங்கும்  சிறார்  சிறுமிகளும்  இருக்கிறார்கள்.,என்பது நமக்குத்  தெரிந்ததே. நாம் எந்த   ஒரு விஷயத்தையும்  விவாதிக்கும்போது  மிடில்  கிளாஸ்  மேன்டாலிடியைத்தான் அளவு கோலாகப்  பயன்படுத்துகிறோம். ஏழை பாழைகளின்  கருத்தைக்  கேட்கவோ  எடுத்துச் சொல்லவோ  நம்மில் பலரும்  முன்  வருவதில்லை   இந்நிலையில் நூறு சதவீத எழுத்தறிவும்  படிப்பறிவும்  இருநதால்  அவர்களை  அவர்களே  மேம்படுத்திக்  கொள்வார்கள்

               
நான் ஒரு முறை லலிதாம்பிகா   கோவிலுக்குச் செல்ல  திருமீயச்சூர்  சென்றிருந்தேன்  அங்கு  பள்ளிக்கு  சென்று வர  சீருடை  அணிந்த  சிறுவர்  சிறுமிகள்  சைக்கிளில்  செல்வதைக் கண்டபோது மனசுக்கு  கொஞ்சம்  உற்சாகமாக  இருந்தது.  பசியாற  மதிய  உணவுசீருடை, மற்றும்  சென்றுவர  இலவச  சைக்கிள்  இவை எல்லாம்  கல்வியறிவு  பரவலாகச்  செய்யும்  உந்து  சக்திகள்தானே. மேலும்   தற்போது
கல்வி உரிமைச்  சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள் . இதன்படி  எல்லாப்  பள்ளிகளிலும் ( தனியார் உட்பட ) 25% இடங்கள்  ஏழைகளுக்கு  ஒதுக்கப்படவேண்டும் .
கல்வி போதிக்கும்  முறையில் ஏற்ற  தாழ்வு  குறைந்து  சம வாய்ப்பு   கிடைக்கும்  ஒரு திட்டம் .ஆனால் இதை  நடைமுறைப்படுத்த  ஏகப்பட்ட  எதிர்ப்புகள்.  இந்த எதிர்ப்புகளுக்கு  எதிராக  குரல்  கொடுப்போம்
In a gist, எல்லோருக்கும் கல்வி போய்ச் சேரவேண்டும் தெரிந்தோ தெரியாமலோ நம் வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் நிலவுகிறது இருக்கும் நிலை போதாதென்று ஏழை பணக்காரன் எனும் பாகுபாடும் கூடிக் கொண்டே போகிறது பிறப்பொக்கும் என்று கூறும் நாம் வாய்ப்புகளையும் சமமாக்க வேண்டும் காலம் காலமாக ஒதுக்கீட்டு முறையை அமல் படுத்துவது இந்த ஏற்ற தாழ்வுகளைக் களைய முடியாது என்னும் எண்ணத்தினால் இருக்கலாம் அல்லது இந்தஏற்ற தாழ்வுகள் மறையக் கூடாது என்பதாகவும் இருக்கலாம் பூர்வ ஜன்ம காரணங்களையும் விதியையும் நம்புபவர்கள் எப்படியாவது எதையாவது சொல்லி சமாதானப் படுத்திக் கொள்ளலாம் ஆனால் அது சரியல்ல எல்லோரும் சமம் என்று எண்ணவைக்க சூழ்நிலைகள் உருவாக்க வேண்டும்  இதை எப்படித்தான் செய்வது. ஏழை பணக்காரன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்னும் எண்ணங்களை சிறு வயதிலேயே சிறார்கள் மத்தியில் வரவிடாமல் செய்ய வேண்டும் இன்றைய சிறார்கள் நாளைய குடிமக்கள் நம்மை ஆளப் போகிறவர்கள்.அவர்களுக்கு இந்தமாதிரியான பேதங்கள் தோன்றாமல் செய்யும் இடம் கல்விக்கூடமே. பள்ளியில் படிப்பவர் அனைவரும் சமம் என்னும் எண்ணம் இளம் பருவத்திலேயே விதைக்கப் பட வேண்டும் அதை எப்படிச் செய்வது எனக்கு அதிகாரமும் சக்தியும் இருந்தால் நான் கல்விச்சாலைகளை முதலில் அரசிடம் கையகப்படுத்துவேன் எல்லோருக்கும் இலவசக் கல்வி கட்டாயம் என உத்தரவு போட்டு அமல் படுத்துவேன் கல்வி மட்டுமல்ல சீருடையும் மதிய உண்வும் கட்டாயமாக  இலவசமாக்குவேன் எல்லோருக்கும் சமகல்வி உணவு சீருடை என்றாகும்போது சிறார்களிடம் உயர்வு தாழ்வு எண்ணங்கள் வராது. பள்ள் இறுதி வரை படிக்க வைத்து முன்னேற்றம் காண்பவர்களுக்கு உயர் கல்வி அளிப்பேன் இலவசமாக எல்லாம் வழங்குவது உய்ர்வு தாழ்வுகளை நேர் செய்யவே அல்லாமல் பெறப்போகிறவர்கள் எல்லாம் இல்லாதவர்கள் என்ற காரணமல்ல
கல்வியை வியாபாரமாக்கும் குடிமக்கள் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் நான் சொல்லும் வழி எளிதானதல்ல. செயல் படுத்த COURAGE AND CONVICTION மிகவும் தேவை இந்த வழிமுறைகள் ஒரு ஏற்ற தாழ்வில்லாத சந்ததியினரை உருவாக்கும் என நம்புகிறேன்
நடை முறை சிக்கல்கள் ஏராளம் இருக்கலாம் அதைஎல்லாம் தாண்டி இதை ஒரு புனித வேள்வியாக நினைத்துச் செயல் படுத்த வேண்டும்
நண்பர்களே ஒன்றுக்கு இருமுறைபடித்துப் புரிந்து கொள்ளுங்கள்/ ஒத்த கருத்து என்பது சிக்கலான விஷயம் என் உரத்த சிந்தனையின் விளைவே இப்பதிவு. மனசில் உள்ளதை உள்ளபடி கருத்திடுங்கள் 

புதன், 29 ஏப்ரல், 2015

தேவன் மஹாதேவன்


                                       தேவன் மஹாதேவன்
                                       ------------------------------------


VINGHIP   POTTIYA  HIRUTHAYAMUMAI   ஆங்கில  எழுத்துக்களில் எழுதப்பட்ட மலையாள  கடிதத்தின்  ஆரம்பம். சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது.
பழைய கடிதங்களைப் பாதுகாத்து அதைப் படித்து அந்தக் கடிதங்களின் பின்னணிகளை நினைத்து , அந்தப் பழைய வாழ்க்கையில் சில மணி நேரம் வாழ்வது வாசுவின் பொழுது  போக்கு .இந்தக் கடிதத்தை எழுதிய  தேவனைப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது  வாசுவுக்கு.  தேவனும் வாசுவும் பழகிய நாட்கள்  என்னவோ கொஞ்சம்தான்.இரண்டு  மாதத்துக்கும் சற்று ஏறத்தாழத்தான் இருக்கும். இருந்தாலும் அந்த நாட்கள் .....ஐம்பது வருடங்களுக்குப் பிறகு இரண்டு மாத நட்பை ஞாபகப்படுத்திப் பார்க்க முடியுமா.. ?ஏன்  முடியாமல் ..? பழைய கடிதங்களைப   பாதுகாத்து  வைத்திருக்கிறானே ... ஆனால் தேவனோ  ...?
பெங்களூரில்  வேலைக்குச் சேர்ந்த  அந்தக் காலத்தில் தங்க நேர்ந்த அந்த லாட்ஜில் "த்ரீ மஸ்கிடீர்ஸ் "என்று தங்களைத் தாங்களே கூறிக்கொண்டனர்  வாசுவும் தேவனும் சந்துருவும் , இதில் சந்துரு எல்லோரையும் விட மூத்தவன். ஏதோ ஒரு கம்பனியில்  குமாஸ்தாவாக  இருந்தான். தேவன் வேலை தேடி  கேரளத்திலிருந்து  வந்தவன். வாசு  அப்போதுதான்  ஒரு தொழிலகத்தில்  பயிற்சியாளனாகச சேர்ந்திருந்தான் . மற்றவரை விட  இளையவன்.
"
இப்போது தேவன் என்ன செய்து கொண்டிருப்பான்..? எப்படி இருப்பான்..பார்க்க வேண்டும்   போல் தோன்றுகிறதே..! " எண்ணியதை  சொல்லில் கூறி செயலில் காட்டாவிட்டால்  வாசுவுக்கு  தலை  வெடித்துவிடும்போல்  தோன்றியது.
"
இந்த பழைய குப்பைகளையெல்லாம்  மாய்ந்து  மாய்ந்து படிப்பதில் அப்படி என்ன சுகமோ "--வாசுவின் மனைவி  தங்கம் அவன் நினைவுகளைக் கலைத்தாள்
"இந்தக் கடிதத்தைப்  படித்துப்  பாரேன் தங்கம் .முடிகிறதா  புரிகிறதா  சொல். "

"
உங்களுக்குத்தான்  வேறு வேலை இல்லை என்றால் .. சரி  சரி ..காட்டுங்கள்   VINGHIP   POTTIYA  ...ஐயே .என்ன இது..?இங்கிலீஷில்  இங்கிலீஷுமல்லாமல்  எனக்கு முடியலைப்பா "
"
இங்கே  கொண்டா .நான் படித்துக்காட்டுகிரேன்.  விங்கிப  பொட்டிய ஹிருதயமுமாய்  நிங்களை  விட்டுப் போரேண்டி  வன்னதில் எனிக்கி  கூடுதல்  விஷமிச்சு. ..தேவனுக்குத  தமிழ்  தெரியாது.எனிக்கி மலையாளம்  கொறச்சு  அறியும். அதனால்தான் இந்த முறை.
தேவனைப்  பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறது தங்கம். அவன் இந்த விலாசத்தில் இருப்பானா.. ? போய்ப்  பார்க்கலாம்... நீயும் வாயேன் ".

"
அவ்வளவு  தூரம்  பணம்  செலவு  செய்து  போய  அவர்  அங்கே  இல்லாவிட்டால்  எல்லாம்  விரயமாகும்."

"
ஏன்  விரயமாக  வேண்டும் .? நமக்கும் பொழுது  சற்று  மாறுதலாகப்  போகும். ஏற்பாடு  செய்கிறேன். ரெடியாக  இரு. "

பெருங்கோட்டுகா ... வழி திருச்சூர்  என்று  விலாசமிருக்கிறது. எப்படியும் திருச்சூர்  போய  அங்கிருந்து  விசாரித்துப்  போய்க்  கொள்ளலாம். திருச்சூருக்கு  டிக்கெட் புக்  செய்ய வேண்டும்  என்று  எண்ணியவாறே   வாசு  ரெயில்வே   ஸ்டேஷனுக்குப  புறப்பட்டுச்  சென்றான்.
 
"
நீளமாய  கழுத்துள்ள  பெண்கள்  சந்தமாய்  இருக்கும்....அறியோ   வாசு. ?"தேவனின்  குரல்  இப்போதும்  கேட்கிறது.

"
வேலை  தேடி  ஊர்  விட்டு  ஊர் வந்து  பெண்களின்  கழுத்தைப்  பற்றி ஆராய்ச்சி  செய்யாதே. முதலில்  வேலை."

"
ஆமாம், இவன்  பேசற  பாஷை  யாருக்கும்  புரியாது.
இவனுக்கெல்லாம்  எவன்  வேலை  கொடுப்பான் ", சந்துருவுக்கு  தேவன் சொல்வது   புரியாததால்  வரும் கோபத்தில்  சபிப்பான்.

"
அது  எந்தா.. ஆரும்   பணி  தரில்லே..இன்னால்   வேண்டா. ..சந்துரு  எனிக்கி  வேண்டி  ஒன்னும் செய்யண்டா.  ஞான   எங்கனே  எங்கிலும்   ஜீவிக்கும் ".

எப்படியாவது  பிழைத்துக்கொள்வேன்   என்று  சொன்ன தேவனுக்கு  அதை நிரூபிக்க   வேண்டிய  நிர்பந்தம்  கூடிய  சீக்கிரத்திலேயே  ஏற்பட்டது. ஊரிலிருந்து  செலவுக்குப்  பணம்  வரவில்லை. லாட்ஜில்  நெருக்கினார்கள். இல்லை என்றால்  காலி  செய்யச்  சொன்னார்கள்.
தேவனும்  வேறு  வழி இல்லாமல்  அவனுடையப்  பெட்டியை  வாசுவிடம்   கொடுத்து   பத்திரமாக  வைத்துக்கொள்ளும்படியும் , பணம்  கிடைத்ததும்  அதைத்  திரும்பப்  பெற்றுக்  கொண்டு  போவதாகவும்  கூறினான்.

"
தேவா, உனக்கு  நன்றாகத்தெரியும், எங்களுடைய நிலை. சந்துருவின்  பின்னால்  அவன் சம்பாதிப்பதைக்  கொண்டு  வாழ   ஒரு பட்டாளமே   இருக்கிறது. எனக்கோ  பயிற்சி  நேரத்தில் ரூபாய்  முப்பதுதான்  ஒரு  மாதத்துக்குக்  கிடைப்பது. ..இதில் என்னதான்  செய்ய  முடியும்..?"

"
ஏய்ய் .. வாசு  விஷமிக்கண்டா.. எனிக்கி  அறியும். .என்டே  சமயம்  இங்கனேயுண்டு .எந்து  செய்யாம்..?"

அடுத்தநாள்   தேவனின் பெட்டியைப்  பறிமுதல்  செய்ய , லாட்ஜ்  முதலாளி  முயன்றதும் வாசு  அதைக்  கொடுக்காமல்  தகராறு  எழுந்து, போலீஸ்  ஸ்டேஷன்  வரை   தகராறு   போனதும்  வேறு  கதை.
 ரயிலில்  இடம்  பிடித்து   அமர்ந்து, பயணம்  செய்யும்போது அந்த  வாலிப   நாட்களே  வந்தது  போலவும்  நிகழ்ச்சிகள்  எல்லாம்  நேற்று   நடந்தது  போலவும்   வாசுவுக்குத்   தோன்றியது.

”தங்கம் , உன்னைக்  காதலித்துக்  கலியாணம்  செய்து   கொள்ளும்   முன்பே   எனக்கு   ஒரு    காதலி   இருந்தாள்   தெரியுமா  உனக்கு,?"

"
நீங்கள்   ஆயிரம்   பெண்களைப்   பார்த்திருப்பீர்கள் எல்லோரையும்   மனசால்   காதலிக்கவும்  செய்திருப்பீர்கள். ஆனால்  யாராவது  உங்களை  காதலித்து  இருக்கிறார்களா?”

  "என்னைக்  காதலிக்க  எந்தப்  பெண்ணுக்குத்தான்  கசக்கும்.? ஆனால்  நான்  சொல்லும்  இந்தக்  காதல்  தேவனால்  தடம்  புரண்டு  விட்டது..நாங்கள்  தங்கியிருந்த   லாட்ஜுக்கு  அருகே  ஒரு பால்  கடை   இருந்தது. அங்கு  பால்  வாங்க  ஒரு பெண்   தினமும்  வருவாள். நாங்கள்  இரவு   உண்ட  பிறகு  சில நாட்களில்  பால்  அருந்த  அங்கு   செல்
வோம். அவளை அங்கு   அடிக்கடி   பார்ப்போம் .ஹூம் .!  பார்த்தால்   எனக்கு உடம்பு  ஒரு  மாதிரியாய்  படபடக்கும் , நாக்கு  வறண்டு   பேச்சு  சரியாக  வராது. இதெல்லாம்   காதலின்   வெளிப்பாடுகள்   என்று தேவன்   விளக்கம்  சொல்லுவான். நானும்  அதை   நம்ப   ஆரம்பித்தேன். ஆனால்   அவளிடம்   எப்படிப்   பேசுவது, எங்கு   பேசுவதுஅவள்  பேசுவாளா   ஒன்றும்  புரியவில்லை. தேவன்   இதற்கு  ஒரு  வழி  செய்வதாகக்   கூறி   அபயமளித்தான். "--வாசு  கதைபோல்  விவரிக்க   தங்கத்துக்கும்    சற்றே   உற்சாகம்  பற்றிக்கொண்டது.

"
ஆமாம்.. அப்போது  உங்களுக்கு  என்ன  வயசிருக்கும், ?"
“பதினேழு பதினெட்டு இருக்கலாம்”
“அடப்பாவி...! பிஞ்சிலேயே பழுத்த கேசா.? “  
"இல்லை   தங்கம் ,.உலகத்தையே   புதிசாகப்   பார்க்கும்   வயசு.  எல்லாவற்றையும்   சோதனை   செய்து   பார்க்கும்   வயசு. யாரையும்   உடனே   நம்பும்   வயசு. சந்தர்பபங்கள்   அமைந்திருந்தால் , யார்  கண்டது, ..ஒரு சமயம்  பிஞ்சிலேயே  பழுத்திருக்கலாம்"

"
அது சரி . .அந்தப்பெண்ணுக்கு எவ்வளவு  வயசிருக்கும்   என்ன  பேர்  ஏதாவது   தெரியுமா?”
”அவளுக்கு பதினெட்டு இருபதுவயசிருக்கலாம்.பெயர் தெரியாது,ஆனால் என் மனசுகுள்நான் அவளுக்கு வைத்த பெயர் அகிலா. எனக்கு எல்லாமே இந்த அகிலமேஅவள்தான் என்று தோன்றும் “
“ சீ..! நீங்கள் இப்படிப் பட்டவர் என்று தெரிந்திருந்தால்.....”
“ ஏன்...என்னைக் காதலித்து இருக்கமாட்டாயா....கலியாணம் செய்திருக்க மாட்டாயா..?”
இப்போது அதைப் பற்றி நினைப்பது டூ லேட்.தவிர்க்க முடியாததை அனுபவிக்கத்தானே வேண்டும் . இருந்தாலும் இப்போது நோ ரிக்ரெட்ஸ். வருத்தமேதும் இல்லை”  
”எனக்கு  அதுவும்  தெரியும். தேவனைப்  பற்றி  சொல்லிக்கொண்டிருந்தேன் . எப்படியாவது  அந்தப்  பெண்ணைப்  பற்றிய  செய்திகளை  சேகரிக்கப போவதாகக்  கூறினான். வேலை  இல்லாதவனுக்கு  நல்ல வேலை  என்று சந்துரு  கிண்டல்  பேசினான். அடுத்த  நாள் பயிற்சி  முடிந்து  அறைக்குத்  திரும்பும்போது  தேவன்  அங்கு  பொறுமையில்லமல்    எனக்காகக்   காத்திருப்பது   தெரிந்தது. வாசு ..ஆ  பெண்ணின்டே  ஸ்தலம் அறிஞ்சு என்று  கூவினான். பிறகு  அந்த  வீட்டையும்  காட்டினான். வீடு  தெரிந்தவுடன் அந்தப்  பெண்ணைப்  பார்க்காவிட்டால்  தலை  தெறித்து விடும்  போல்  தோன்றும் .அந்த  வீட்டின்  முன்பாக அங்குமிங்கும்  அடிக்கடி  நடப்பேன் வீட்டு  முன்னால்  ஷூவுக்கு  லேஸ்  கட்டும்  சாக்கில்  உள்ளே  ஆராய்ந்து  பார்ப்பேன். ஆனால் என்  கண்ணில்  மட்டும்  அவள் தென்பட  மாட்டாள்

தேவன்  என்னைத்  தமாஷ்  செய்கிறான்  என்று அவனிடம்  கோபித்துக்  கொண்டேன். தேவன்  சொன்னான் , நான்  அங்கு  போகும்  நேரத்தில்  அவள்  எங்கோ  தட்டெழுத்துப்  பயிலச் செல்கிறாளோ   என்னவோ என்று. அதன் பிறகு  அடுத்துள்ள  தட்டெழுத்துப்  பயில்விக்கும்  இடங்களுக்கு  முன்பு  நின்று  நோட்டம்  விட   ரம்பித்தேன். அவள் என்  கண்களில் படவே இல்லை. பிறகுதான் அது  நடந்தது. " என்றஒரு  சஸ்பென்ஸ்  கொடுத்து  நிறுத்தினான்  வாசு.

"என்ன  பெரிய சஸ்பென்ஸ் ...ஒரு  நாள்  அவளைப்  பார்த்தீர்கள் , பல்  இளித்தீர்கள்   அவள்  உங்களைக் கண்டு   கொள்ளவே இல்லை .பிறகு  சேச்சே ...இந்தப் பழம்  புளிக்கும்    என்று  வந்து  விட்டீர்கள் ..அவ்வளவுதானே "  என்று கிண்டல் செய்தாள்   தங்கம்.
 
"
அதுதான்  இல்லை. அவளுடைய  பெயரை  அறிந்து   வருகிறேன்  என்று  சொன்ன  தேவன் , அவர்கள்  வீட்டின்  அருகே  விளையாடிக்  கொண்டிருந்த  ஒரு   சிறுவனைக்  கூப்பிட்டு ,நிறைய  மிட்டாய்களைக்  கொடுத்து   அந்தச் சேச்சியின்  பெயரைக்  கேட்டு   வா --என்று  அனுப்பி   இருக்கிறான். அந்தப்  பையன்  வீட்டிற்குள்  சென்ற   சற்று   நேரத்
தில்  அந்தப்  பெண்  வெளியே  வந்திருக்கிறாள் .அந்தப்  பையன்  தூரத்தில்  இருந்த  தேவனைக்  காட்டி  ஏதோ சொல்ல , அந்தப் பெண்  உள்ளே சென்று  மறுபடியும்  வெளியே  வந்தபோது, பெரிய  மீசை  வைத்த  இரண்டு  ஆட்களும்  கூட  இருந்தனர். தூரத்தில்   நின்று  பார்த்துக்  கொண்டிருந்த  தேவன்   மெல்ல  நழுவப்  பார்க்க    ஓடி  வந்து  அவனை
பிடித்து  நன்றாக  தர்ம  அடி  கொடுத்து  அனுப்பி  இருக்கிறார்கள் . பாவம், தேவன்  முகமெல்லாம்  வீங்கி  உதடு  காயப்பட்டு  ரத்தம்  தெரிய  வந்ததை  நிறையப்  பேர்   பார்த்திருக்கிறார்கள் . அவமானமாக  இருந்ததுஎன்று  சொல்லிச் சொல்லி   மாய்ந்தான்  பாவம், என் காதலுக்காக  அடி  வாங்கினான் " --என்று  பெருமூச்சுடன்  கூறி  நிறுத்தினான் வாசு.

“அவர் உங்களைக் காட்டிக் கொடுத்து, உங்களையும் அவர்கள் புடைக்கவில்லையா?”
“அந்த மட்டில் தேவனுக்கு நன்றி சொல்லவேண்டும்” 
 "
திருச்சூர்  சென்று  அங்கு  ஒரு  ஹோட்டலில்  தங்கி , ஒரு நாள் இருந்து  பிறகு , பெருங் கோட்டுக்கா  என்ற இடம்  எங்கு  இருக்கிறது  என்று  விசாரித்து  அங்கு  சென்றால்  வாசுவிற்கு  முதலில்  ஒன்றுமே  புரிய வில்லை. அந்த  இடத்தில் ஒரே  கூட்டமாக  இருந்தது. அது  ஒரு ஆசிரமமாம். அதன்  தலைவர்  பிரம்ம  தேவ  சுவாமிகள்  அன்று  காலையில்தான்  இந்த  பூத  உடலை விட்டு உயிர்  நீத்தாராம்.  அவருக்கு  மரியாதை  செய்ய  கூட்டம்   கூட்டமாக  மக்கள்  சென்று  கொண்டிருந்தனர்.  வாசுவுக்கு   சற்றே  ஏமாற்றமாக  இருந்தது.  சரி  வந்ததுதான்  வந்தோம்  அந்த ச்வாமிகளையாவது  வணங்கி செல்லலாம்  என்று  அருகே  சென்றால்......
 
வயதான  தேவன்தான்  பிரம்மதேவ  சுவாமிகள்.  அருகில்  இருந்தது  யார்..? வயதான  தோற்றத்தில்  அகிலாவா..?   வாசுவின்  அகிலாவா...?!





என்ன நண்பர்களே கதையைப் படித்தீர்கள் இல்லையா. இதே கதையை சற்றே நீட்டி இரு பாகங்களாகவும் எழுதி இருக்கிறேன் நேரமும் ஆர்வமும் இருந்தால் சுட்டியைச் சொடுக்கிப்பாருங்களேன்
கதை கட்டுரை பாகம் 1 
கதை கட்டுரை பாகம் 2.







'
"