சனி, 14 மே, 2016

மலரே மலரே வாசமில்லா மலரே


                                  மலரே மலரே வாசமில்லா மலரே
                                  -----------------------------------------------


சிலரது பதிவுகளில் ஆண்டு தவறாமல் நடக்கும்  திருவிழாக்கள் குறித்து ஆண்டு தவறாமல் பதிவுகள் வெளியாகின்றன.  அதே போல் என் தளத்திலும் ஆண்டு தவறாமல் ஒரு மலர் பற்றி எழுதி வருகிறேன்
ஒரு செடி பூக்கிறது;வருடம் ஒரு முறை; ஒரே ஒரு பூ.!
ஆண்டு முழுதும் செடியே காணாது;
ஏப்ரல் முடிவில் செடி துளிர் காட்டும்.
வளரும் வேகம் நினைப்பில் அடங்காது.
மே மாதம் ஒரு பூ பூக்கும், இரு வாரம் தங்கும்
பின் வாடிச் சுருங்கி விடும்.
யார் சொல்லிக் காலம் அறியும் அச்செடி.?
யார் சொல்லி ஒரே பூ பூக்கும் அச்செடி?
காணக் கொள்ளை அழகு.மே மாதம் பூப்பதால்
மே மலரே என்றழைக்கட்டுமா.?
நான் கவனித்துப்  படமெடுத்த முதல் பூ
ஆனால் அதன் பெயர் Common name: Blood Lily, Football Lily, Powderpuff Lily 
Botanical name: Scadoxus 
என்று தெளிவு படுத்தி பின்னூட்டம் எழுதி இருந்தார் கீதா மதிவாணன்
 ஒரு செடி ஒரு பூவாக இருந்தது அதே இடத்தில் பல செடிகளாக செடிக்கு ஒரு பூவாகப் பூத்தது கண்டு  மிக்க மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்  நான் இந்தச் செடியின் இருப்பு பற்றியும் பூ பற்றியும் கவனித்து பதிவிட்டது முதலில் 2012-ம் ஆண்டுஅடுத்த ஆண்டு இச்செடிக்காக நான் காத்திருந்தேன் ஏப்ரல் முடிந்தும் செடியின் அறிகுறியே இருக்கவில்லை.  மேமாதம் முதல் வாரத்தில் எங்கிருந்தோ வந்தது போல் நான்கு செடிகள் வந்து நான்கு பூக்கள் கொள்ளை அழகுடன் வெளி வந்தன அதற்கு அடுத்த ஆண்டும் டாக்டர் கந்தசாமி என் வீட்டுக்கு வந்திருந்த சமயம் அவரை வரவேற்கும் விதத்தில் பூத்து இருந்தது செடிகள்
நான்கு செடிகள் நான்கு பூக்கள்

2015-ம் ஆண்டு மூன்று நான்கு செடிகள் தெரிந்தாலும் ஒரே செடியில் மட்டும் பூ இருந்தது
 இது குறித்து எனக்குப் பல சந்தேகங்கள் எழுந்தது அடுத்த ஆண்டு இன்னும் கவனிக்க வேண்டும் என்று நினைத்தேன் இந்த ஆண்டு ஏப்ரல் மாத முடிவிலும் எந்தச் செடியும் வரும் அறிகுறியும் தெரியவில்லை. தினம் செடி வரும் இடத்தையே உற்று உற்று நோக்கிக் கொண்டிருந்தேன்  ஒரு நாள் சிறிதாக செடியின் குருத்து தெரிந்தது ஓரிரு நாட்களில் ஒரு மட்டு மட்டும் தெரிந்தது இன்னும்  இரு நாட்களில்  மொட்டு சற்றே பெரிதாய் தெரிந்தது  பின் ஓரிரு நாட்களில்  பூ விரியத்தொடங்கியது. பின் நன்கு விரிந்தது ஆனால் இந்த ஆண்டு போன ஆண்டுகள் போல் பெரிதாகவோ சிவப்பாகவோ இல்லாமல் சற்றே சவலை போல் தெரிந்தது  ஒரு வாரம் கழிந்து வாடத் துவங்கி விட்டது செடி மட்டும் போக்குடன் இருக்கிறதுஒரு பூ மட்டுமே பூக்கும் செடியில் இன்னொரு பூவை எதிர் நோக்க இயலாது  இனி அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதத்துக்காகக் காத்திருக்க வேண்டும் 
மந்தொட்டியின் கீழ் பாகத்தில் மொட்டு தெரிகிறதா
   

சற்றே பெரிய மொக்கு
விரியும் பூ
விரிந்த பூ
வாடும் பூ
 இந்த ஆண்டு ஒரே செடி வந்து பூத்து வாடியும் விட்டது இருந்தாலும் ஒரு நப்பாசைநான்கு செடிகள் வந்த இடத்தில் ஒன்றே ஒன்றா  மனம் ஆறவில்லை. தினம் அந்த இடத்தை நோக்குவேன் வரும்  வாரம் வருகை தரவிருக்கும் என் வலை நண்பர்களை வரவேற்க ஓரிரு செடிகளின் துளிர் தெரிகிறது நண்பர்கள் வரும் முன்  பூத்து விடும் என்று நம்புகிறேன் 
       

செவ்வாய், 10 மே, 2016

ஒரு பதிவரின் மனக் குறிப்பும் நம்ம மெட்ரோ பயணமும்


                            ஒரு பதிவரின் மனக் குறிப்பும்  மெட்ரோ பயணமும்
                             -------------------------------------------------------------------------------

ஒவ்வொரு ஆண்டும் மேமாதம் 7-ம் நாள் என்மனம் அந்த நாளை நினைக்காமல் இருக்காது அந்தநாள் 07-05-1968 என் இரண்டாம் மகன் பிறந்த நாள்அந்த நாளின் நினைவுகள் மனதில் மோதி ஒரு introspection-க்கு வழி வகுக்கிறது.என் இரண்டாம் மகன் பிறந்த நாள். நாங்கள் அப்போது BHEL  குடியிருப்பில் இருந்தோம்.அன்று விடியற்காலை சுமார் நான்கு மணி இருக்கும். என் மனைவி எழுந்து குளித்து அறையில் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தாள். நான் விழித்துக் கொண்டு என்ன ஆயிற்று என்று கேட்டேன். பிரசவ நேரம் நெருங்கி விட்டது போல் தெரிகிறது என்றாள். நானும் என் நண்பனும் ( அவன் அப்போது என்னுடன் தங்கிக் கொண்டிருந்தான்)தயாராகி BHEL மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றோம். அது எங்கள் வீட்டில்இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும். நான் ஒரு புறமும் அவன் மறுபுறமும் நடந்து வர அவளைக் காலையில் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்றோம். அவளது நிலையைப் பரிசோதித்த டாக்டர் அவளை நேராக லேபர் வார்டில் அட்மிட் செய்தார். அவ்வளவு தூரம் நடந்து வந்தீர்களா என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அட்மிட் செய்த ஒரு மணி நேரத்தில் என் இரண்டாம் மகனைப் பிரசவித்தாள்.
இப்பொழுதும் ஏதாவது பேச்சின் ஊடே “ என்னைப் பிரசவத்துக்கு நடத்திச் சென்றீர்களே . ஏதாவது ஏடாகூடமாய் நடந்திருந்தால் “ என்று சொல்லிக் காட்டுவாள். என்ன செய்வது. ? சில நேரங்களில் IGNORANCE IS BLISS என்று நினைத்துக் கொள்வேன். அவளை அன்று லேபர் வார்டில் பார்த்தபோது அவள் முகத்தில் தெரிந்த வலியின் வேதனையைக் கண்டு  தீர்மானம் செய்தேன்..இதற்கு மேல் குழந்தைகள் வேண்டாம். இவள் இந்த அவஸ்தைக்கு இனி உள்ளாகக் கூடாது என்று. இரண்டாவது குழந்தை பெண்ணாக இருக்க விரும்பினாலும் ஆணாகப் பிறந்தாலும் மூன்றாவது குழந்தை என்னும் பேச்சுக்கே இடம் கொடுக்கவில்லை.

என்னவாயிருந்தாலும் அவளுக்கு என் அறியாமையை ( அலட்சியம் என்பாள் அவள் ) சுட்டிக்காட்ட அது ஒரு வாய்ப்பாக இருக்கிறது (இன்றும்) 
இந்த ஆண்டும் என் மகனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல  நானும் என் மனைவியும் அவன் வீட்டுக்குச் சென்றோம்
போகும் போது வெறுங்கையுடன் செல்லலாமா . என் மனைவியே பேக் செய்த கேக்குடன் சென்றோம் (பார்க்க  பூவையின் எண்ணங்கள்அவனின்றிகேக் பேக்கலாம் ) http://kamalabalu294.blogspot.in/2013/12/blog-post_25.html
இத்தனை வயதுக்குப் பின்  பிறந்த நாள் கொண்டாட்டங்கள் எல்லாம் வெகு சம்பிரதாயப்படி பிறந்தநாள்  வாழ்த்துக்களுடன் முடிவடையும் ஒரு சின்ன சந்தோஷத்துக்காக கேக் எடுத்துக் கொண்டு போனோம் ஒரு இனிதான மாலையில்  சிம்பிளாக  பிறந்த நாள் கொண்டாடப் பட்டது
அவனின்றி பேக்கிய கேக் 

 
பிரந்தநாள் குழந்தை


 
HAPPY BIRTHDAY SON 
 
வைக்கிங் தாத்தா ஸ்டார் வார் வாளுடன்  பேரனுடன் 
  
மெட்ரோ பயணம்
பெங்களூரில் அண்டர் கிரௌண்ட்  மெட்ரோ செயல் பட ஆரம்பித்து விட்டதுஎன் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில்  இருக்கும்  மெட்ரோ லைன் க்ரீன் லைன்  இன்னும் அண்டகிரௌண்ட்ரயிலுக்கு கனெக்ட் ஆகவில்லை  ஆனால் ஊதா லைன்  என்று அழைக்கப்படும் பையப்பனஹள்ளி ரயில் நிலையத்திலிருந்து மைசூர் ரோட் வரை ஊதா லைன்  எனப்படும் இதில் மஹாத்மா காந்தி சாலையிலிருந்து சிடி ரெயில்வே ஸ்டேஷன்  வரை நிலத்துக்கு அடியில் ரயில் இயக்கம் துவங்கி விட்டது. நான் ஜப்பானிலும் புது டெல்லியிலும் மெட்ரோ ரயிலில்  பயணித்திருக்கிறேன் . ஆனால் தென் இந்தியாவில் முதன் முதலாக  பெங்களூரில் இயக்கப் படும் மெட்ரோ ரயிலில் பயணித்ததில்லை. மகன் வீட்டுக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லச் சென்றவன் மெட்ரோ ரயிலில் பயணிக்க விருப்பம் தெரிவித்தேன் நான் எள் என்னும் முன்  எண்ணையாக  நின்றான் என் மகன் என் மகன் வீட்டிலிருந்து  மூன்று  கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பையப்பனஹள்ளி  ரயில் நிலையத்துக்கு நான் என் மனைவி என் மகன்  மற்றும் பேரன் ஆகியோர் காரில் பயணித்து ரயில் நிலையம் அடைந்தோம்

மெட்ரோ ரயில் பயணம் பேரூந்து பயணத்தைவிட  மலிவானது குளிர்சாதன வசதியுடன் பயணிக்கலாம் ஆளுக்கு ரூ 26 -/ டிக்கெட் எடுத்து  பையப்பனஹள்ளியிலிருந்து கெம்பகௌடா எனப்படும் மெஜஸ்டிக் வரை 35 நிமிடங்களுக்குள்  சேர்ந்து விட்டோம் டிக்கட் வாங்கும் இடத்தில் டிக்கட்டுக்குப் பதில் ஒரு டோக்கன்  தருகிறார்கள்அதை நடை மேடைக்குச் செல்லும் வழியில் இருக்கும் விக்கெட் கேட்  மேல் வைத்து எடுக்கவேண்டும் ஒரு கதவு திறந்து வழி விடுகிறது அதே போல் போய்ச் சேர்ந்த நிலையத்தை விட்டு வெளியே வர அந்த டோக்கனை ஒரு ஸ்லாட்டில் போட கதவு திறந்து வழி விடுகிறது
எனக்கு நிலத்தடியில் ரயிலில் பயணிப்பதே குறிக் கோள் ஒவ்வொரு நிலத்தடி ரயில் நிலையமும்  அத்தனை ஆழத்தில் பிரம்மாண்டமாய்  நிறுவப்பட்டிருக்கிறது நடைமேடைகளும்  எஸ்கலேட்டர்களும் லிஃப்டுகளும்  படிகளும்  அது ஒரு வேறு உலகம் இத்தனையும் எல்லா ஸ்டேஷன்களிலும் இருக்கிறதுநிலத்தடி பாதையே நான்கு கிலோமீட்டருக்கும் மேலாக இருக்கிறது அவ்வளவு ஆழத்தில் நிலத்தை குடைந்து ரயில் பாதைகள் போட்டு ரயில் நிலையங்கள் அமைத்து எல்லாமே பிரமிப்பாய் இருக்கிறது சொன்ன நேரத்தில் முடியவில்லை என்னும் கோபம் எல்லாம் பயணிக்கும் போது மறந்து விடுகிறதுஎங்கள் பகுதியில் இருக்கும் க்ரீன் லைனும்  இன்னும் மூன்று மாதத்தில் நிலத்தடி நிலையங்களோடு இணைக்கப்பட்டு விடும்  பிறகு பெங்களூரில் பயணங்க்கள் எளிதாகி விடும் சீப்பாகி விடும் பயண நேரமும் குறைந்து விடும்
பயணத்தின்போது அடுத்துவரும் ரயில் நிலையத்தின் பெயரும் நடை மேடை எந்தப்பக்கம் என்று அறிவிப்புகள் இருக்கிறது ரயில் நிற்கும் போது ஒரு மணிச் சத்தத்துடன் கதவு தானாகத் திறக்கிறது பின் மணிச்சத்ததுடன் கதவு மூடுகிறது  காணொளிகள் 1)பையப்பன ஹள்ளியிலிருந்து மஹாத்மா காந்தி ரோட் 2) மஹாதமாகாந்தி ரோடிலிருந்து நிலத்தடியில் 3)கெம்பகௌடா ( மெஜஸ்டிக் )ரயில் நிலையம் மேலே  



என் ஹாண்டி காமில் வீடியோ எடுத்திருக்கிறேன் இரண்டு காணொளிகளை யூ ட்யூப் இல்  இணைத்துப்பின்  பதிவாக்குகிறேன்  நாங்கள் போனது ஞாயிற்றுக் கிழமை ஆதலால்  கூட்டம் குறைவாகவே இருந்தது சில புகைப்படங்களும் காணொளிகளும் கீழே
வழிகாட்டிகள் 
 
டிக்கெட் வாங்குமிடம் 


பையப்பனஹள்ளி ரயில் நிலையத்துக்கு போகும் வழி 
 
பையப்பனஹள்ளி ரயில் நிலையம் 
   
உள்ளே போகும் வழி 
 
  
டிக்கெட் கௌண்டரில் 

மெஜஸ்டிக் ரயில் நிலையம் மேலே 
  
நடைமேடை வழிகாட்டிகள் 

வெள்ளி, 6 மே, 2016

பரீட்சித்து மஹாராஜா


                                             பரீட்சித்து மஹாராஜா.
                                             -----------------------------------
தேர்தல் வாக்குறுதிகளையும்  கட்சிகளின் சொரூபத்தையும் காண வேண்டி எழுதிய சீரியஸ் பதிவுகள் தற்சமயத்துக்குப் போதும் என்று தோன்றுகிறது இனி ஒரு கதை.
தோண்டத் தோண்ட  குறையாத கதை ஊற்றுக்களைக் கொண்டது மஹாபாரதம்  மஹாபாரதக் கதைகள் என்னும் தலைப்பில் சில பதிவுகள் எழுதி இருக்கிறேன் இப்போது பரீட்சித்து மஹாராஜாவின்  கதை
இந்தக் கதையை நான்  தேர்ந்தெடுக்கக் காரண மானவள் என் மனைவி
அவ்வப்போது கோவிலில்  பாகவத சப்தாகம் நடக்கிறது என்று கூறிக் கொண்டு கோவிலுக்குப் போவாள் எனக்கோ கோவிலில் சப்தாகமாக சொல்லும் பாகவதத்தின் கதைகளைத் தெரிந்து கொள்ள ஆசை. நான் மஹாபாரதக் கதைகளை நிறையவே கேட்டிருக்கிறேன்  படித்திருக்கிறேன். ஆனால் பாகவதம் படித்ததில்லை. என் மனைவியிடம் அவள் அப்படிக் கேட்கும் பாகவதக் கதைகளில் எனக்குத் தெரியாதது இருக்கிறதா  என்று சற்றே  ஆணவத்துடன் கேட்பேன் பாவம் அவள் முக்காலும் தெரிந்த கதைகள் தான் என்பாள் தெரிந்த கதைகளை மீண்டும் மீண்டும் கேட்கவைப்பது என்ன என்று எனக்குப் புரியத் தொடங்க நானும் பாகவதக் கதைகளை ஆங்காங்கே புரட்டிப் பார்த்தேன்  அப்போது எனக்குத் தோன்றியதுதான்  மீண்டும் மஹாபாரதக் கதைகள் பாகவதத்தில் வரும் கதைகள் சிலவற்றை அவை பாகவதத்தில் இருக்கின்றன  என்று தெரியாமலேயே பதிவிட்டிருக்கிறேன்
எல்லாஅவதாரக் கதைகளும் பாகவதத்தில் சொல்லப் படுகின்றன நானும் எல்லா அவதாரக் கதைகளையும் பதிவிட்டிருக்கிறேன் இது தவிர அசுவத்தாமன் கதையும்  ஜராசந்தன் கதையும் ஜயத்ரதன் கதையும் பதிவிட்டிருக்கிறேன் பாகவதத்தில் இரண்டாம் பாகம் முழுவதும் கண்ணனின் கதைகளே  அதையும் வெகு சுருக்கமாகக் கிருஷ்ணாயணம் என்னும்  தலைப்பில் எழுதி  உள்ளேன் கண்ணனின்  கதையில் கம்சனை வதைக்கும் வரையே பதிவு . தெரிந்தோ தெரியாமலோ அதற்கு மேலும் சொல்லிச் செல்ல ஒரு வாய்ப்பையும்  ஏற்படுத்தி இருக்கிறேன் இத்தனை சுய புராணங்களும் தேவையா என்று என் மனம் கேட்கிறது  வாசிக்காதவர்களுக்கு வாசிக்க இது ஒரு அரிய வாய்ப்பாகுமே அல்லவா(பார்க்க மஹாபாரதக் கதைகள் -அசுவத்தாமன் 
இன்னும்  ஏழே நாட்களில் முடியப் போகிறது பரீட்சித்து மஹாராஜாவின் காலம் .பிறக்கும் போதே இம்மாதிரியான ஒரு இக்கட்டான நிலையில் இருந்து மீண்டவர்அந்த கண்டத்தைக் கண்ணன்  துணையால் கடந்தார்  இம்முறை அது சாத்தியமல்ல. விதி விட்டபடி என்று சாவை எதிர்நோக்கத் துணிகிறார்
அதற்கு முன் தன் மகன் ஜனமேஜயனுக்கு  முடிசூட்டுகிறார்  அதன் பின்  அனைத்தையும் துறந்து அரண்மனையை விட்டுப் புறப்பட்டு கங்கைக் கரையை அடைந்தார் தர்ப்பைப்புல்லில் அமர்ந்து அன்னம் நீர் இல்லாமல் ஏழு நாட்களையும் வடக்கு நோக்கி இருந்துபகவானை நினைத்து உயிர் துறக்க முடிவு செய்தார் ஏராளமான முனிவர்களும் ரிஷிகளும் பரீட்சித்துவைக் காண வந்தனர்  அவர்களிடம் அவர் தான் நல்ல நிலையில் மோட்சமடைய என்னவழி என்று கேட்கிறார் அப்போது அங்கே சுகர் மகரிஷி தோன்றினார் அவரிடம்  இந்த ஏழுநாட்களையும் தான் எவ்வாறு கழிக்க வேண்டும் என்று ராஜா வினவினார் மனிதனின் வாழ்நாட்களை எப்படியும் கழித்திருந்தாலும் அந்திம காலத்தில் பகவானை நினைத்து அவனது பாதகமலங்களில் சரணாகதி அடைந்தால் முக்தி கிடைக்கும் என்று கூறுகிறார் பரீட்சித்துவும் அதை உணர்ந்து பகவானின் திரு நாமங்களையும் திருவிளையாடல்களையும்  எடுத்துரைக்கும் பாகவதத்தை தனக்குக் கூறுமாறு வேண்டுகிறார் பரீட்சித்துவின் கோரிக்கைக்கு இணங்கி சுகர் பாகவதக் கதைகளை  சொல்லத் துவங்கினார்
அதன்  நீட்சியே இப்போதும் சப்தாகமாக பாகவதம் சொல்லப் படுகிறது  அதைக் கேட்பவர்களுக்கு  முக்தி கிடைக்கும் என்னும் நம்பிக்கை

அஸ்தினாபுரத்தில் தருமன் எவ்விதக் குறையும் இன்றி அரச பரிபாலனம் செய்து வந்தான் கண்ணனால் கருவிலேயே காப்பாற்றப் பட்ட  அபின்யுவின் மனைி   உத்தரையின் கர்ப்பம் நல்ல முறையில் வளர்ந்து அவள் பத்தாம் மாதத்தில் ஒரு அழகிய ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள் பகவான் விஷ்ணுவால் காப்பாற்றப்பட்டதால் அக்குழந்தைக்கு விஷ்ணு ராதன் என்னும் பெயர் சூட்டப்பட்டது இன்னொரு கதையும் உண்டு கருவில் இறந்த குழந்தையை  கிருஷ்ணர் நீர் தெளித்து உயிர்ப்பித்ததாகவும் கருவிலேயே தன்னை உயிர்ப்பித்தவர் இவர்தானா என்று பரீட்சித்துப்பார்த்ததால் பரீட்சித்து என்னும் பெயர் வந்ததாகவும் கூறுவார்கள் ( பார்க்க மஹாபாரதக் கதைகள் –அசுவத்தாமன் )
குருக்ஷேத்திரப் போரால் மனம் வருந்தி தீர்த்த யாத்திரை மேற்கொண்ட விதுரர்  அஸ்தினாபுரம் திரும்பினார். விதுரருக்கு யாதவ குலமே கண்ணன் உட்பட அழிந்தது தெரிந்திருந்தது/ ஆனால் அவர் யாரிடமும்  அது குறித்துப் பேசவில்லை துவாரகைக்கு கண்ணனைத் தேடிச் சென்ற அர்ச்சுனன்திரும்பி வந்தபோதுதான்  பாண்டவர்களுக்குச் சேதி தெரிந்தது இதன் நடுவே திருத ராஷ்டிரரும்   காந்தாரியும் துறவு மேற்கொண்டு யாரிடமும்  சொல்லாது சென்று விட்டனர் இவற்றைஎல்லாம் கண்ட தருமர் தன் பேரன் பரீட்சித்துவுக்குப் பட்டாபிஷேகம்  செய்வித்துஅஸ்தினாபுரத்துக்கு மன்னனாக்கினார் அதன் பின் பாண்டவர்கள் துறவுகோலம் பூண்டு த்ரௌபதியுடன்  வடக்கு நோக்கிச் சென்றனர்/ ஒவ்வொருவராக மரணம் எய்தி  பூவுலகைப் பிரிந்தனர்
பரீட்சித்து விராட மன்னனின் மகள் இராவதியை மணந்துஅவர்களுக்கு ஜனமேஜயன் முதலான நான்கு மக்கள் பிறந்தனர் . பரீட்சித்து செவ்வனே அரச பரிபாலனம்  செய்து வந்தார்  குடி மக்கள் நலமாக வாழ்ந்தனர். பரீட்சித்துவின் வாழ்க்கையிலும் விதி விளையாடி  அவர் மனதில் ஒரு வேண்டாத கோபத்தை ஏற்படுத்தி ஒரு மோசமான சாபத்தைப் பெற்றுத்தந்தது
அடர்ந்த காட்டுக்குள் வேட்டையாடி தன் பரிவாரங்களைப் பிரிந்து வெகுதூரம் வந்திருந்தார் பரீட்சித்து பசியாலும்  தாகத்தாலும் சோர்ந்து போன  ராஜா தூரத்தே ஒரு ஆசிரமம் இருப்பதைக்கண்டு மகிழ்ந்தார்  அந்த ஆசிரமத்தில் ஆங்கிரஸ் என்னும் முனிவரும் அவர் மகன் சிருங்கியும் வசித்து வந்தார்கள் பரீட்சித்து சென்ற சமயம் ஆசிரம வளாகத்தில்  எவருமே தென்படவில்லை. வாசலில் நின்றபடியே பசிக்கும் தாகத்துக்கும்  ஏதாவது கிடைக்குமா என்று குரல்  கொடுத்தார்  யாரும் பதில் தரவில்லை. உள்ளே நுழைந்த ராஜா அறையின் நடுவே ஒரு முனிவர் நிஷ்டையில் இருப்பதைக் கண்டார்  இவருடைய குரலுக்கு பதில் சொல்லாமல் இருந்ததைக் கண்ட பரீட்சித்துவுக்கு கோபம் வந்தது  மீண்டும் மீண்டும் குரல் கொடுத்தும் எந்த பதிலும் வராததால் மிகவும் சினங்கொண்ட  ராஜா வெளியே ஒரு செத்த பாம்பு இருப்பதைக் கண்டார்  கோபத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அந்த செத்த பாம்பை முனிவரின் கழுத்தில் மாலையாகப் போட்டுவிட்டுச் சென்றார்
மன்னன் பரீட்சித்து சென்ற சிறிது நேரத்தில் முனிவரின் மகன் சிருங்கி அங்கு வந்து தந்தை முனிவரின் கழுத்தில் மாலையாக செத்த பாம்பு இருப்பது கண்டு மிகவும் கோபம் அடைந்தார் தன் தவ வலிமையால் இதைச் செய்தவர் பரீட்சித்து மஹாராஜாதான் என்று அறிந்து அவருக்குச் சரியான தண்டனை தர வேண்டும் என்று  எண்ணி இன்னும் ஏழுநாட்களில் தட்சகன் எனும் பாம்பரசன் தீண்டி பரீட்சித்து மரிக்கச் சாபமிட்டார்
 தியானத்திலிருந்து மீண்ட ஆங்கிர்ஸ் முனிவர் தன் மகனின் செயலுக்கு வருந்தினார் என்றாலும் இட்ட சாபம் விதியின் செயல் என்று இருந்துவிட்டார்
 அரண்மனை திரும்பிய பரீட்சித்து மன்னர் தனது செயலுக்கு வருந்தினார் முனிவரின் மகனது சாபம் பற்றியும் தெரிந்துகொண்ட பரீட்சித்து தனது மகன் ஜனமேஜயனுக்கு  முடிசூட்டி  தன் சாவை எதிர் நோக்கத் தயாரானார் மரணம் தவிர்க்க முடியாதது என்று தெரிந்து கொண்ட  பரீட்சித்துபோகும்  வழிக்குப் புண்ணியம் தேடும்  முயற்சியாக  கடைசி ஏழுநாட்களில்  சுகர் முனிவர் சொல்லப் பகவானின் லீலைகளை பாகவதம் கேட்டுத் தெரிந்து கொண்டார்  இந்த பாகவதப் புராணத்தைக் கேட்கும் பாக்கியம் கிடைத்ததால் பகவானின் தியானத்தில் ஆழ்ந்த பரீட்சித்து தட்சகன் தீண்டும் வேதனையைக் கூட அறியாமல் முக்தி அடைந்தார்        
       
  .   
              
  .   
          




 .   
          





         







   

திங்கள், 2 மே, 2016

யாருக்கு ஓட்டுப்போடுவது ?


                                            யாருக்கு ஓட்டுப்  போடுவது
                                            --------------------------------------------
         ஓட்டுப் போடுவது நமது ஜனநாயக உரிமை, கடமை. தேர்தல் 
நாளில் மட்டும் இந்நாட்டு மன்னராகி ,நம்மை ஆள்பவரை தேர்வு 
செய்யும் ஒரு மகத்தான பொறுப்பு நமக்குக் கிடைக்கிறது. நமது 
வாக்கின்  மதிப்பை நாம் உணர்ந்து வாக்களிக்க வேண்டியது நம் 
கடமை. .அது சரி, யாருக்கு வாக்களிப்பது.?வாக்களிக்கும் முன் 
நாம் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்தான்  என்ன.? நம் 
தொகுதியில் வேட்பாளராக நிற்பவரைப் பற்றி நமக்கென்ன 
தெரியும்.?வாக்களிப்பது வேட்பாளருக்கா இல்லை அவர் சார்ந்த 
கட்சிக்கா.?நம் வாக்கைப் பெறுவதற்கு வேட்பாளர்களோ 
கட்சிகளோ எந்த விதத்தில் தகுதி உள்ளவர்கள்.?நம் ஒருவரது 
வாக்கு என்ன பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்.?இருக்கும் 
நிலவரம் திருப்திகரமாக உள்ளதா.?இல்லாவிட்டால் எதில் எதில் 
மாற்றங்கள் வரவேண்டும்.?மாற்றங்களைக் கொண்டுவர நம் 
பலம் என்ன.?மாற்றம் வந்தாலும் நிலவரம் மாறுமா.?ஆயிரம் 
கேள்விகள் கேட்டுக்கொண்டே போகலாம். அரசியல் அறிவு 
நமக்கு எவ்வளவு தூரம் இருக்கிறது.?இதையெல்லாம தெரிந்து 
நாம் ஓட்டுச்சாவடியில  பத்து நொடிகளுக்குள் ஓட்டுப் போடும் 
நேரத்தில் கடைசி நொடியில் தன்னிச்சையாக நம்மை அறியாமல்
வேண்டாதவருக்கே ஓட்டு போடும் பரிதாபம் நிகழக் கூடாது. நம் 
ஓட்டு நம் தலை எழுத்தையே மாற்றும் சக்தி கொண்டது.

            தேர்தலுக்கு நிற்கும்/ நிறுத்தப்படும் வேட்பாளர்களில் நாம்
ஒருவருக்குத்தான் ஓட்டுப் போடமுடியும். வேட்பாளரை நாம்
தேர்ந்தெடுக்கும் முன் நாம் சிந்திக்க வேண்டியதில்
முக்கியமானது மாற்றம் வேண்டுமா என்பதுதான். மாற்றம்
வந்தால் இதைவிட நல்ல ஆட்சி அமையுமா என்பதும்தான்.

             தற்போதைய ஆட்சி என்னவெல்லாம் செய்திருக்கிறது
என்னவெல்லாம் செய்திருக்கக் கூடாது ;தற்போதைய ஆட்சியின்
செயல்பாடுகளில் நன்மைகள் என்ன, தீமைகள் என்ன. தமிழ்
மாநில சட்டசபைக்குத் தேர்தல் நடக்க இருப்பதால் அது பற்றிக்
கொஞ்சம் அலசலாம்.
அரசு நலத் திட்டங்கள் என்று அறிவித்து ஏதேதோ gimmicks  செய்து வருகிறது அறிவிக்கப் பட்ட அல்லது செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் மாநில மக்கள் அனைவருக்குமா இல்லை சென்னையில் வசிப்போருக்கு மட்டுமா 

           அரசாங்க நல திட்டங்களுக்கு வேண்டிய செலவுகளை 
எப்படி சமாளிக்கிறார்கள் மத்திய அரசின் பங்களிப்போடு 
டாஸ்மாக் மூலம் வருமானம், பெட்ரோல் விலையில் வரும் 
கணிசமான பங்கு,தவிர வரிவிதிப்பின் மூலம் கிடைக்கும் 
வருமானம். 

         பாட்டாளியை  நல்ல  " குடி மகனாக்கி"அதன் மூலம் வரும் 
வருவாயில் இந்த நலத் திட்டங்கள் நிறைவேற்றப் படுகிறதா. ?
நலத்திட்டங்களுக்கான செலவுகள் எல்லாம் ஊழல் இல்லாமல் 
செலவாக்கப்படுகிறதா.?
           கோடிக்கணக்கில் செலவு செய்து, பதவியில் அமருபவர்கள் 
செலவு செய்த பணத்தை எப்படி மீட்கிறார்கள்.?இதில் கட்சி 
வேறுபாடுகள் உண்டா.?

          இந்த நிறை குறைகளை அலசி ஆராய்ந்து மாற்றம் 
வேண்டுமா, வந்தால் நலமா என்றெல்லாம் யோசித்து மக்கள் 
வாக்களிக்க வேண்டும்.இன்னும் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்களில் எத்தனை சதவீதம் மக்களுக்குப் போகிறது எத்தனை சதவீதம் புறங்கையில் வழியும் தேனாகிறது
என்னதான்  நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும்கில்லர்ஜி எழுதியது மாதிரிசென்னையில் வெள்ள நேரத்தில்  சவப்பெட்டிகளிலும் தலைவியின் ஸ்டிக்கர் ஒட்டுவது முறையா?
மாற்றம் கொண்டுவருவதே சரி என்னும்  கட்சியில் நானும் ஒருவன் ஆனால் சரியான மாற்றம் இருக்கிறதா என்பதும் கேள்விக்குறி இப்போது மாற்றுக்கட்சியும்  வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறது வாக்குறுதிகளும் செயல்பாடுகளும் என்று நான் எழுதிய முந்தைய பதிவையும் நினைவில் கொள்ள வேண்டும் இவற்றுக்கும் மாறாக  மக்கள் நலக் கூட்டணி என்று கூறிக்கொண்டு சில கட்சிகள் அணிவகுக்கின்றன இந்தக் கூட்டணி வாக்குகளைச் சிதறவைக்குமோ என்னும்  அச்சம் எழுகிறது முன்பொரு திரைப்படத்தில் வரும் வசனம் போல் ஆளுக்கொரு தலைவன்  அவனவனுக்கு ஒரு பட்டினிப்பட்டாளம்  என்பதை மாற்றி  அவனவனுக்கொரு ஜாதிப்பட்டாளம்  என்று கூறத் தோன்றுகிறது
 இருக்கும்  நிலையை மாற்ற கட்சி என்றால் அதன்  தலைவரே  நினைவுக்கு வருவது நீக்கப்படவேண்டும் அண்மையில் திரு ரமணி அவர்கள் தலைவர்கள் தோற்கடிக்கப் பட வேண்டும் என்னும் கருத்தில் ஒரு பதிவு எழுதி இருந்தார்  தமிழகத்தின்  தலைவிதி மாற வேண்டும் என்றால்  இந்தத் தலைவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்  ஆக இதை நிறைவேற்றும் கடமை இத் தலைவர்கள் நிற்கும் தொகுதிகளின் வாக்காளர்களையே சாரும்  இத்தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டால் நிச்சயம் மாற்றம் வரும் 
          எது எப்படியாயினும் அனைவரும் ஓட்டுப் போடவேண்டும். 
அதன் மூலம் ஆட்சிக்கு வருபவர்கள் மக்களின் ஆதரவு உள்ளவர் 
என்று கருதலாம். வாக்களிக்காமல் வீட்டில் இருந்து அரசியல் 
பேசுவது நல்ல அறிகுறி அல்ல. இருந்தாலும் இந்திய சாமானியன் 
விவரமானவன். 
            அரசியல் ஆதாயத்துக்கு கட்சி மாறும் அல்லது ஆதரவை 
மாற்றும் பச்சோந்திகளை வாக்காளன் அடையாளம் கண்டு 
கொள்வான். 
            ஜனநாயகம் என்பது ஓட்டுப் போடுபவர்களில்
மிகையானவர் கழுதையைக்  குதிரை என்றால் கழுதை
குதிரையாகத்தான் இருக்க வேண்டும். இது சாபமா வரமா புரிய  
வில்லை. நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.