Friday, December 24, 2010

அறிந்த அளவு

அறிந்த  அளவு.
-----------------------
                 என்னதான் எழுதுவது.?
                 எதைத்தான் எழுதுவது ?
                 ஏன் இந்த மயக்கம்,?
                 எழுதவா இல்லை சேதிகள்.

ஓடும் நதி, ஒளிரும்  நிலவு,
வீசு  தென்றல், விளையும் பயிர்,
முத்துச்சிப்பி, மோகனப் புன்னகை,
எழுதலாம்  அல்லவா,
ஏன் இன்னும்  தயக்கம்.?

                அறிந்த மொழி  அழகு தமிழில்,
                 எழுத எண்ணும்  எண்ணங்களை
                அலங்காரம் செய்யவும்,
                ஆங்காங்கே  இட்டு நிரப்பவும்,
                இல்லையா வார்த்தைகள்..
                கூவும்  குயிலே,   தோகை மயிலே,
                கண்ணே, மானே, தேனே,
                என்றொரு பாட்டில்  வருவது போல.

எண்ணங்களுக்கு   வடிவம் கொடுத்து,
என்னதான்   தயார் செய்து
எழுதத்   துவங்கினாலும்,
எழுத  முடிவதென்னவோ
என் நினைவுகளில் நீக்கமற
நிறைந்தென்னை ஆட்டுவிக்கும், 
என்  ஆதங்கங்களும்  வாழ்வின்  அவலங்களுமே.

                 நானென்ன  செய்ய   நானும் ஒரு
                 பசுமாட்டுக்  கதை   சொல்லும்  பாலகனன்றோ

பசுமாட்டுக்கதை   அறியாதவர்களுக்கு
--------------------------------------------------------
பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பரீட்சைக்கு வரும் கட்டுரை எழுத நிறையத் தலைப்புக்கள் கொடுத்து தயார் படுத்தி இருந்தார் ஆசிரியர்,கட்டுரைகள்  பல  தலைப்பிலிருந்தாலும் சிறுவன்  ஒருவன்  படித்து  அறிந்தது  பசுமாடு  பற்றிய  கட்டுரை மட்டுமே. பரீட்சையில்  தென்னை மரம் பற்றி  எழுத வேண்டி  வினா வந்தது. சிறுவனும்  அழகாக எழுதினான். " ஒரு வீட்டில்  ஒரு தென்னை  மரம்   இருந்தது. அதில் ஒரு பசுமாடு கட்டப்  பட்டிருந்தது."-என்று எழுதத் துவங்கி  பசுமாட்டைப்  பற்றிய கட்டுரை எழுதி  முடித்தான்.
===================================================



.






       
       

4 comments:

  1. பாலு சார் கை கொடுங்க.

    இன்னிக்கு ரெண்டு பேருமே ஜாலியா இறங்கிட்டோம்.

    பசுமாட்டைக்கட்டினாற் போல மனசையும் கட்டிட்டீங்க பாலு சார்.

    என் பதிவையும் பாருங்க இன்னிக்கு ப்ளீஸ்.

    ReplyDelete
  2. wish i could write like you

    ReplyDelete
  3. //சிறுவனும் அழகாக எழுதினான். " ஒரு வீட்டில் ஒரு தென்னை மரம் இருந்தது. அதில் ஒரு பசுமாடு கட்டப் பட்டிருந்தது."-என்று எழுதத் துவங்கி பசுமாட்டைப் பற்றிய கட்டுரை எழுதி முடித்தான்.//

    அந்தச் சிறுவனின் எதிர்காலம் மிகப் பிரகாசமாக இருக்கும். எதுவானால் என்ன, அதைத் தனக்கேற்ற மாதிரி வளைத்துக் கொள்ளும் சாதுர்யம்! படித்தவுடன் புன்முறுவலுடன் மிகவும் ரசித்தேன்.

    அன்பான இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், ஐயா!

    ReplyDelete
  4. ஹா ஹா. அருமை ஜி.எம்.பி. சார்.

    ReplyDelete