அனபெனப்படுவது..............
---------------------------
அன்பெனப்படுவது யாதெனில் என்று
எழுதத் துவங்கும் முன்பே ,முன்னே வந்து
நிற்கின்றன அனேக கேள்விகள் , சந்தேகங்கள்.
அன்பே சிவம்,அன்பே கடவுள் , அன்பே எல்லாம்
என்றெல்லாம் கூறக் கேட்டாலும், அடிப்படையில்
அன்பு என்பதுதான் என்ன.?
அன்பு மனைவியிடம் அவளது எண்ணம் கேட்டேன்.
உடலில்,உணர்வில் ஏற்படும் ரசாயன மாற்றமே
உணர்ச்சிகளின் வெளிப்பாடு, அதில் அன்பெனப்படுவது
உதிரம் சம்பந்தப்படுகையில் உயர்வாகிறது,
அதுவே என் நிலைப்பாடும் என்றாள்.
உள்ளம் சார்ந்த பதில் ஒன்றைக் கூறிவிட்டாள்.
அறிவு சார்ந்த பதிலை நாடுதல் தவறோ.?
தொப்புள் கொடி உறவு உதிரம் சார்ந்தது.
ஆதலால் ஒப்புக் கொள்ளத் தோன்றுகிறது.
அந்த உறவின் உணர்வும் அன்பும் அறியப்படாமல்
போய் விட்டதால் எழுகிறதோ என் கேள்விகள்.?
உணர்வுகள் புரிதலை (EMPATHY) அன்பெனக்கொள்ளலாமா?
சார்ந்திருப்பதன் சாராம்சமே அன்பின் விளைவா.?
சேய் தாயை சார்ந்திருப்பதால் அவளிடம் அன்பா.?
பெற்ற சேயிடம் தாய்க்கு என்ன எதிர்பார்ப்பு.?
ஆரம்பத்தில் இல்லாதது நாள்படத் தோன்றுமோ. ?
தாய் தந்தை மகன் மகள் கணவன் மனைவி
என்று எல்லோரிடமும் உணர்வுகளில் உறங்கிக்கிடக்கும்
எதிர்பார்ப்புகளின் மறு பெயர்தான் அன்போ.?
எதிர்பார்ப்பில்லாத அன்பென ஒன்று உண்டா என்ன.?
கட்டிய மனைவியும்,பெற்ற பிள்ளைகளும்
கதறி அழும்போது வந்து விழும் வார்த்தைகள்
எதிர்பார்ப்புகள் ஏமாற்ற மாவதைக் காட்டுகிறதா.?
அன்பின் பிரிவால் ஏற்படும் அழுகையா, ?
அவலங்களை எதிர்நோக்கும் எண்ணங்கள் அழ வைக்கிறதா.?
பாடுபட்டுக் கோடி பல விட்டுச் சென்றால்
பெருமையுடன் நினைப்பார்களோ.? உலகில்
பாடுபட விட்டுச் சென்றால் பழியெற்று செல்ல வேண்டுமோ.?
அன்புக்கும் ஒரு விலை உண்டு என்பதுதான் உண்மையோ.?
அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ் ......
எண்ணிப்பார்த்தால் உண்டென்றே தோன்றுகிறது.
எதிர்மறைக் கருத்துகள் இருக்கலாம் என்று
எண்ணும் இடமெல்லாம் கேள்விகளாக்கி விட்டேன்.
ஆன்றோரே சான்றோரே, உங்கள் கருத்துகள்
அறியக் காத்திருக்கிறேன்.. எது எப்படியாயினும்
முத்தாய்ப்பாக நான் எண்ணுவது
உழைத்துக் களைத்து உடலம் கிடத்தி உறங்கி எழுந்தால்,
மறு நாளும் உண்டு வாழ்வு, தொடரலாம் பணிகள்.
உறக்கத்தில் மூச்சு விட மறந்து எழாமல் போனால்
என்னாகும்.?ஒன்றுமாகாது. பேரினை நீக்கி பிணமென்று கூறி,
பாடையில் கிடத்தி கொண்டு போவார்கள் புதைக்கவோ எரிக்கவோ.
இருந்தபோது செய்ததன் விளைவு
பெற்றுத்தரும் விழி நீரோ, உமிழ் நீரோ.
இல்லாமையின் வெறுமை உணரப்படலாம் சில நாட்கள்.
விட்ட குறை தொட்டகுறை எனப் பணிகள்
விடுபட்டுப் போயிருந்தால். பல நாட்களாக அது மாறலாம்.
காலம் கடந்தபின் மிஞ்சுவதெல்லாம் சில நினைவுகள் மட்டுமே.
//இருந்தபோது செய்ததன் விளைவு பெற்றுத்தரும் விழி நீரோ, உமிழ் நீரோ//
ReplyDeleteஅன்பின் ஆணிவேர் தேடிச் சென்ற பதிவின் வேராய் இவ்வரிகள் மனதில் பாய்ந்து கிளைபரப்பின பாலு சார்.
/பாடுபட்டுக் கோடி பல விட்டுச் சென்றால்
ReplyDeleteபெருமையுடன் நினைப்பார்களோ.? உலகில்
பாடுபட விட்டுச் சென்றால் பழியெற்று செல்ல வேண்டுமோ.?/
எதிர் "மறை" கருத்துக்கள் தான் ஐயா.
வாழ்வின் உள்ளொலி தேடும் கேள்விகள்.
/இருந்தபோது செய்ததன் விளைவு
பெற்றுத்தரும் விழி நீரோ, உமிழ் நீரோ./
என்றென்றும் நினைவிலாடும் மற்றுமொரு குரல்? இல்லை,குறள்!!
அன்பெனப்படுவது..........
ReplyDeleteஅளக்கவும் முடியாத
அணைக்கவும் முடியாத
விளக்கவும் முடியாத
விசித்திரமாக
உணர மட்டுமே முடிந்த
உன்னதமான
உள்ளுணர்வு
என்பது எனது கருத்து.
அன்பெனப்படுவது யாதெனில் பிறரை துன்புறுத்தாது இருத்தல்.
ReplyDelete-என்பது என் எண்ணம் அய்யா
அன்பு மனதோடு தொடர்புடையது...அது அடுத்தவரை நம்மோடு பிணைக்கும் கயிறு. அது நூலாகவும் இருக்கலாம்...வடமாகவும் இருக்கலாம்....
ReplyDeleteஇருந்தபோது செய்ததன் விளைவு
ReplyDeleteபெற்றுத்தரும் விழி நீரோ, உமிழ் நீரோ. //
உண்மைஆன் வார்த்தைகள்.
அன்பு என்றால் என்ன என்கிற அளவுக்கு
ReplyDeleteநமது விஞ்ஞான வளர்ச்சி வந்து விட்டது ...என்ன சொல்ல
என்ன அன்பு பாசம் எல்லாம் கொஞ்சம் நாம் கொடுத்துகொண்ட பெயர்கள்தான்...
இரு நாள் அழுதுவிட்டு மறு நாள் நமது வேலைகளை பார்க்க போய்விடுகிறோம்
எதிர்பாராமல் நேசிக்கும் ஒரு ஒரு ஆத்மாவும் அன்பால் நிறைந்த கடவுள் என்பது எனது பணிவான எண்ணம்.
தவறு இருந்தால் மன்னிக்கவும் ஐயா
என் பதிவினை வாசித்து கருத்துப் பதித்த சுந்தர்ஜி,கலாநேசன் கோபு சார், வாசன், சிவகுமாரன் இராஜ இராஜேஸ்வரி, மற்றும் சிவா வுக்கும் என் நன்றி. என் பதிவிலேயே நான் குறிப்பிட்டு இருந்தேன் எதிர்மறைக் கருத்துகள் இருக்கலாமென்று. கேள்விகளுக்குப் பதில் வந்தால் தெளிவிருக்கும் என்று நம்புபவன் நான். அன்பைப் பற்றிய விளக்கம் வேண்டுவது விஞ்ஞான வளர்ச்சியால் அல்ல. அன்பிருந்தால்தான் அடுத்தவன் வேதனை புரியும்.
ReplyDeleteகாணும் இடங்களில் அன்பின் விலை உணர்த்தப்படும்போது எழுகின்ற ஆதங்கமே என் எழுத்தில் வந்தது. என்னைப் பற்றிய விவரங்களில் ஏன் மக்கள் இப்படி இருக்கிறார்கள் என்ற கேள்வி இருக்கும். ஒரு தாய் குழந்தையிடம் காட்டும் அன்பே அன்பாக உணரப்படுவது. மற்ற எல்லா அன்புக்கும் விலை உண்டோ என்ற கேள்விக்கு பதில் நாடியே என் பதிவு இருக்கிறது.
எங்கெங்கும் எப்போதும் என்னோடு - வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களின் சிறுகதை அன்பு என்பது என்ன என்று உணர்வு பூர்வமாக விளக்கியிருக்கிறது.
ReplyDeleteஇந்த வேளையில் நடந்த ஒரு யதார்தம்தானிது.
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி ஐயா
ReplyDeleteஎந்தன் பின்னோட்டம் உங்களை கஷ்டபடுத்தி இருந்ததால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்...
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
எப்பொதும் பாசத்துடன் உங்களின் ஒரு வாசகன் சிவா
This comment has been removed by the author.
ReplyDeleteஅன்பை பற்றிய
ReplyDeleteஆணித்தரமான கருத்துக்கள்
பொய் தவிர்த்து
மெய் சிலிர்க்க வைக்கின்றன ஐயா
அன்பு............
உணர்ச்சிகளின் உளறல் அல்ல
உணர்வின் உயிர்
உணர்வதிலும் உணரப்படுவதிலும்
உள்ளது உன்னத அன்பு
அன்பைப் பற்றிய விளக்கம் கிடைக்கவில்லையே! உங்கள் கேள்விகளைத் தான் சொல்லி இருக்கிறீர்கள். எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தானாகத் தோன்றுவது தான் அன்பு என நினைக்கிறேன்.
ReplyDeleteகேள்விகள் பதிலை நோக்கி எண்ண வைக்கலாம் அல்லவா
ReplyDelete