Monday, August 1, 2011

என்ன நீதி..?


என்ன நீதி.?
---------------
-

ஒன்றென்று சொன்னால் நினைவுக்கு வருவது
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற உண்மை.
ஆனால் அறிந்தும் உணர்ந்தோர் அவ்வொருவனுக்கு
ஆயிரம் நாமங்கள்,உருவங்கள் கொடுத்து, உள்ளம்
மகிழ்தல் பொறுக்கலாம்,அவரவர் விருப்பம். ஆனால்
அவன் படைப்பினிலே ஆயிரம் உண்டிங்கு சாதி
என்று ஓங்கி உரைத்தல் சரியோ, இது என்ன நீதி.?

            சாதி இரண்டொழிய வேறில்லை என்றார்
            மேதினியில் மேவு பொருள் அனைத்தும்
            இரண்டிரண்டாய் இலங்குதல் காணீரோ.!
            உண்மை பொய், ஆண் பெண் ஒளி இருட்டு,
            என்றெங்கும் எதிர்மறைகள் ஒன்றுடன் ஒன்று
            ஊடே இருப்பினும், ஒன்றில் ஒன்றை பிரித்து
            உணரும் நாம் நம் செயல்களில் நன்றெது என்றும்
            தீதெது என்றும் உணராதிருத்தல் கண்டிங்கு
            ஏதும் கேளாதது என்ன நீதி..?

அநீதி எதிர்க்க இரு கண் போதாதென்றோ
முக்காலம், முப்பரிமாணம் என்று எங்கும்
நீக்கமற நிறைந்திருக்கும் மும்மூர்த்தியில்
ஒரு மூர்த்தி, முக்கண் கொண்டெரித்தான்,
அவன் தவம் கலைத்த இந்திரனுக்கும்
ஓராயிரம் கண்ணளித்தான். அவன் படைத்த
உலகில் அவலங்களுக்கெதிராய் ஒரு
கண்ணும் திறவாதது என்ன நீதி.?

           வாழும் நிலத்தை நால்வகைப் படுத்தினான்.
           வாழும் நெறிக்கு நான் மறையென்றான்.
           வர்ணங்கள் நான்கும் செய்தொழில் வகுக்க
           இருபிறப்பெடுத்தவன் உயர்ந்தவன் என்றான்.
           பிறப்பொக்கும் என்று உணர்ந்தும் வகுத்தது
           கொண்டு பிரித்திடல் என்ன நீதி.?

புலன்கள் ஐந்து,பஞ்சபூதங்கள் ஐந்து என்று
பூவுலகில் பிறந்த அனைவருக்கும் பொது
என்று படைத்த இறையா, இயற்கையா
வாய்ப்பென்று வரும்போது வித்தியாசம் காட்டுதல்
பூர்வ ஜென்ம வாசனையின் பலன் என்று கூறல்,
இப்பிழைப்பில் இழைக்காத பிழைப்புக்கு முற்பிறப்பை
காரணங் காட்டுதல் -இது என்ன நீதி.?

           பகிர்ந்துண்ணும் பறவையினங்கள் விலங்கினங்கள்
           பசிக்கு உணவைத் தேடி அலையும் அவை
           அடுத்த வேளைக்கே பதுக்கி வைக்காது.
           ஆவி பிரிந்தால் ஆறடி நிலமே சொந்தமில்லை
           என்றறிந்தவர் சேருமிடத்துக்கு கொண்டா செல்ல
           முடியும் ,தேவைபோய் மீந்தவற்றை
           ஆறறிவு படைத்தும் அறுசுவை போதாதா
           அவலச் சுவையும் இவர் தேடல் என்ன நீதி.?

எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்
என்றோ ஓதியது, எண்ணத்தில் ஓடியது.
எண்ணில் எழுத்தில் இறைபுகழ் பாட என்னால்
இயலவில்லை.கண்முன்னே விரியும் அவலங்கள்
அவனும் அறிந்தவந்தானே. தீயவை தலை தூக்க
தர்மம் நிலைநாட்ட யுகந்தோரும் மீண்டும்
மீண்டும் அவதரிப்பேன் என்றவன் இன்னும் அவன்
வருகை நிகழ்த்தாதிருத்தல் என்ன நீதி.?
-------------------------------------------------------------

         





7 comments:

  1. //கண்முன்னே விரியும் அவலங்கள்
    அவனும் அறிந்தவந்தானே. தீயவை தலை தூக்க
    தர்மம் நிலைநாட்ட யுகந்தோரும் மீண்டும்
    மீண்டும் அவதரிப்பேன் என்றவன் இன்னும் அவன்
    வருகை நிகழ்த்தாதிருத்தல் என்ன நீதி.?//

    மிகச்சரியான ஆதங்கம் தான் தங்களுடையது.

    யுகம் தோறும் வருவதாகச் சொல்லியிருக்கிறார், அந்த பகவான்.

    கலியுகம் ஆரம்பித்து ஒரு 5000 ஆண்டுகள் தான் இருக்கும் என்கிறார்கள். கலியுகத்தின் மொத்த ஆண்டுகளில் இது ஒரு சதவீதம் (1%) கூட இருக்காது.

    கலி இன்னும் நன்றாக முற்ற வேண்டும். அந்த அளவுக்கு இன்னும் முற்றிவிடவில்லை.

    இன்னும் ஆங்காங்கே பல நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நல்ல செயல்கள் பலவும் நடைபெற்றுத்தான் வருகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.

    அதனால் தான் அவர் அவதாரம் எடுக்கவில்லை போலிருக்கு.

    இதெல்லாம் என் சொந்தக் கருத்துகளே!

    தவறாக இருப்பின் மன்னித்தருளவும்.

    ReplyDelete
  2. கவிஞரய்யா!
    வணக்கம்
    பிறகு வந்து பார்க்கிறேன்
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  3. //இப்பிழைப்பில் இழைக்காத பிழைப்புக்கு முற்பிறப்பை
    காரணங் காட்டுதல் -இது என்ன நீதி.?//

    இழைக்காத பிழைக்கோ..?!!

    //ஆறறிவு படைத்தும் அறுசுவை போதாதா
    அவலச் சுவையும் இவர் தேடல் என்ன நீதி.?
    //
    தீயவை தலை தூக்க
    தர்மம் நிலைநாட்ட யுகந்தோரும் மீண்டும்
    மீண்டும் அவதரிப்பேன் என்றவன் இன்னும் அவன்
    வருகை நிகழ்த்தாதிருத்தல் என்ன நீதி.?
    //

    அருமையான வினாக்கள்..

    வாழ்த்துக்கள்.

    இதைக் கொஞ்சம் பாருங்கள்..

    http://vettipaechchu.blogspot.com/2010/11/blog-post_08.html


    //

    ReplyDelete
  4. நாம் வேறுபாடுகளில் வாழலாமா?

    http://vettipaechchu.blogspot.com/2010/11/blog-post_08.html

    ReplyDelete
  5. @ கோபு சார்.கருத்துக்களை அறிவதே என்பதிவின் நோக்கம். மன்னிப்பு என்ற பெரிய வார்த்தை எல்லாம் வேண்டாமே
    @புலவர் இராமாநுசம். ஐயா, என்னை வைத்து காமெடி, கீமெடி பண்ணவில்லையே. ஏன் இந்த , என்ன சொல்லுவார்கள், உயர்வு நவிர்ச்சி அணி எல்லாம். இன்னும் நீங்கள் வரவில்லை
    @ வெட்டிபேச்சு -இப்பிறப்பில் இழைக்காத
    பிழைப்புக்கு...சரியே. பார்க்க கம்ப ராமாயணம் குகன் பரதனைக் கண்டு”எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு என்றான் “
    @ரத்னவேல் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  6. மிகப் பெரிய கேள்விகள். இந்த ஒரு ஜன்மம் போதுமா விடை காண ?

    ReplyDelete
  7. சிறப்பான கருத்துகள். அனைத்தும் பல உண்மைகளை சொல்கிறது.நம் சமுகம் உணர வேண்டும்.

    அறிவென்ற ஒன்று இருந்து கொண்டு பாடாய் படுத்துகிறது. அந்த பாட்டை நீங்களும் கேளுங்கள்..

    கண் முன் நிகழும் மனிதன் இன்னொருவனுக்கு செய்யும் அநீதி கண்டு மனித பிறப்பின் மீது ஏமாற்றமாக உள்ளது.
    இவனும் மற்ற விலங்குகள் போலதான். அது இருந்து சத்து போய் சாகிறது அது போல் தான் மனிதனும், வேறு ஒன்றும் பெரிய நோக்கம் இல்லாதிருக்குமோ என்று தோன்றுகிறது. அறிவிருந்தும் மனிதன் சக மனிதனுக்கு செய்யும் இழிவு எல்லா கடவுளும் உள்ள நம் நாட்டில் அதிகம் உள்ளது.
    இந்த மனு தத்துவங்கள் வேறு நாட்டில் செல்லுபடி ஆகுமா.

    எது சரி எது தவறு என்று யார் சொல்வது? எதை வைத்து அதை நம்புவது.
    அறிவுடன் படைக்க பட்ட நாம் கேள்வி கேட்டு வாழ வேண்டும். படைப்பில் எதுவும் தேவை இல்லாமல் படைக்க படவில்லை என்று சொல்லபடுகிறது.
    அதனால் கடவுளை பற்றிய கேள்விகள் எழுகிறது. எல்லாமே யார் யாரோ மனம் போன போக்கில் தங்கள் உயர்விற்கு வரைந்த படங்களும், சிலைகளும், கதைகளும்,சாதியும், பயங்காட்டுதல்களும் தானே கடவுள் தத்துவம். (இதில் அவருக்கு இந்த மொழியில் பேசினால் தான் பிடிக்கும் என்ற புளுகு வேறு) பயத்தினாலே மனிதன் எல்லை இல்லாது இயன்றவரை குவிகின்றான். அதனால் அடுத்தவன் பசியோடிருகின்றான். இங்கு எல்லா மனிதருக்கும் உணவு உடை உண்டு. மனம் இல்லை என்று காந்தி கூறினார். தெரியாத கடவுளை பற்றி கசிந்துருகி இருப்பது, சுய நலம் தானே ? கடவுள் தத்துவமே சுய நலம் தானே. குறுக்கு வழிதானே. என்னை காப்பாற்று, அடுத்தவன் எப்படியோ போகட்டும் என்ற எண்ணம் தானே. அனைவருக்கும் கிடைப்பது நமக்கும் கிடைக்கட்டும் என்ற சம உணர்வு வர வேண்டும்.

    நமக்கு தெரியாத உணர்வுகள் உண்டு. அதன் மூலம் கடவுளின் இருப்பை தெரிந்து கொள்ளலாம் என்று கூறுகின்றனர்.
    அப்படி கடவுள் ஏன் பூடகமாக செயல் பட வேண்டும். ஆடை தேவையா. கடவுளை கேட்காமல் அறிவு கொண்டு மனிதன் தேவை என்று அறிந்தான்.
    அவனிடம் புத்தாக்க சக்தி உள்ளது. படைப்பு திறன் உள்ளது. மனிதன் தானாகவே இங்குள்ள ஏற்ற தாழ்வுகளை சரி செய்ய வேண்டும்.
    உண்மை சன நாயக அமைப்பு இதை நோக்கியே செல்லும்.

    ஒரு விவசாயியின் உழைப்புக்கு முன் இன்றுள்ள எந்த அலுவலக வேலையும் துச்சம். பல பல அலுவலகங்களில் உழைத்தாலும் விவசாயியின் உழைப்பு நிகரறற்றது.
    ஒருவன் ஓன்றை சிறப்பாக செய்வதால் மட்டும் எதற்கு பெரும் ஊதியம்(௨. மார்க் , கணக்கு). அவனும் சக மனிதன் தானே. அவனுக்கும் பசிக்கும் தானே.
    ஒரு விவசாயிக்கு, தெருவில் காய்கறி விற்பவருக்கு அடிப்படை தொழில் செய்பவருக்கு மட்டும் ஏன் ஏற்றங்கள் கிடையாது. அவர்கள் மட்டும் எக்காலமும் அப்படியே இருக்க மற்றவர்கள் மட்டும் ஒன்றுக்கு பலவாக விடுகளும், அடுக்கு மாடி குடியிருப்புகளும் வாங்கி உயர்வது சரியா. அது போல் அவர்களுக்கும் எப்போது கிடைக்கும்.

    ஒரு பிடி அரிசிக்கு விவசாயி தருவது, அவன் வாழ்வை. கடன் வங்கி, உழைத்து, விதைத்து, மழை பார்த்து, தினம் தண்ணீர் விட்டு,உரமிட்டு, பூச்சிகளிளிடமிருந்து கைப்பற்றி, நேரம் காலம் பார்க்காமல் அவனும் அவன் குடும்பமும் உழைத்து, அறுவடை செய்து, சொற்ப பணத்திற்கு விற்று ... ஐயோ நினைத்தாலே நெஞ்சம் கசிகிறது..

    ஆக நோகாமல் மனம் போனபடி வாழ பலருக்கும் விருப்பம். அதனாலே தான் எல்லோரும் நகரத்தை நோக்கி படை எடுப்பு.
    ஒரு வழியாக இந்த சிறு விவசாயத்தை முற்றிலும் மாற்றி விட்டு அரசே தொழிற்சாலை போல விவசாயத்தை நடத்த வேண்டும்.
    பல கிராமங்களை மாற்றி நகரமாக செய்திட வேண்டும். பணம் என்ற மாற்று போய் உழைப்பு மாற்றாக வேண்டும். பிறகு எதை யாரால் குவிக்க முடியும்.
    மனிதன் அறிவால் சிந்தித்து மாற்றங்களை செய்திட வேண்டும். நாம் நாட்டில் அவனால் முடியும். இன்னும் எவ்வளவோ விஞ்ஞானம் வளர்ந்து உடலே இல்லாமல் மனிதன் இருக்க முடியும் என்ற நிலை வருவதற்கு காத்திராமல் முடித்த அளவு சமத்துவம் செய்ய வேண்டும்.

    அடுத்த மனிதருக்கு துன்பம் தராமல், எளியோரும் உயர உதவி செய்து, உலகில் உள்ள இன்பங்களை அனுபவித்து செல்லுதலே சரி என்று தோன்றுகிறது.

    ReplyDelete