Wednesday, December 11, 2013

அன்பெனப்படுவது.......



                               அன்பெனப்படுவது........
                                ------------------------



          அன்பெனப்படுவது யாதெனில் என்று
             எழுதத் துவங்கும் முன்பே ,முன்னே வந்து 
             நிற்கின்றன அனேக கேள்விகள் , சந்தேகங்கள்.
            அன்பே சிவம்,அன்பே  கடவுள் , அன்பே  எல்லாம்
             என்றெல்லாம்  கூறக் கேட்டாலும், அடிப்படையில்
             அன்பு  என்பதுதான்  என்ன.

அன்பு மனைவியிடம் அவளது எண்ணம் கேட்டேன்.
உடலில்,உணர்வில் ஏற்படும்  ரசாயன  மாற்றமே
உணர்ச்சிகளின்  வெளிப்பாடு, அதில்  அன்பெனப்படுவது 
உதிரம்  சம்பந்தப்படுகையில்  உயர்வாகிறது
அதுவே என் நிலைப்பாடும்  என்றாள். 
             உள்ளம்  சார்ந்த  பதில்  ஒன்றைக்  கூறிவிட்டாள். 
             அறிவு  சார்ந்த  பதிலை  நாடுதல்  தவறோ.?
தொப்புள்  கொடி  உறவு  உதிரம்  சார்ந்தது. 
ஆதலால்  ஒப்புக்  கொள்ளத்  தோன்றுகிறது. 
அந்த  உறவின்  உணர்வும்  அன்பும்  அறியப்படாமல் 
போய்  விட்டதால்  எழுகிறதோ  என் கேள்விகள்.?

   உணர்வுகள் புரிதலை  (EMPATHY)  அன்பெனக்கொள்ளலாமா?
  சார்ந்திருப்பதன்  சாராம்சமே அன்பின் விளைவா.?

           சேய்  தாயை சார்ந்திருப்பதால் அவளிடம் அன்பா.?
           பெற்ற சேயிடம்  தாய்க்கு என்ன எதிர்பார்ப்பு.
          ஆரம்பத்தில்  இல்லாதது நாள்படத் தோன்றுமோ. ?
          தாய் தந்தை மகன் மகள் கணவன் மனைவி 
          என்று எல்லோரிடமும் உணர்வுகளில் உறங்கிக்கிடக்கும் 
          எதிர்பார்ப்புகளின் மறு பெயர்தான் அன்போ.?
          எதிர்பார்ப்பில்லாத அன்பென ஒன்று உண்டா என்ன.?

கட்டிய மனைவியும்,பெற்ற  பிள்ளைகளும் 
கதறி அழும்போது வந்து விழும் வார்த்தைகள் 
எதிர்பார்ப்புகள் ஏமாற்ற மாவதைக்  காட்டுகிறதா.?
அன்பின் பிரிவால் ஏற்படும் அழுகையா, ?
அவலங்களை எதிர் நோக்கும் எண்ணங்கள் அழவைக்கிறதா?


           பாடுபட்டுக் கோடி பல விட்டுச் சென்றால் 
           பெருமையுடன் நினைப்பார்களோ.? உலகில் 
           பாடுபட விட்டுச் சென்றால் பழியேற்றுச் செல்ல வேண்டுமோ.?
           அன்புக்கும் ஒரு விலை உண்டு என்பதுதான்  உண்மையோ.?

அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ் ......
எண்ணிப்பார்த்தால் உண்டென்றே  தோன்றுகிறது. 

          எதிர்மறைக் கருத்துகள் இருக்கலாம் என்று 
          எண்ணும் இடமெல்லாம் கேள்விகளாக்கி  விட்டேன். 
          ஆன்றோரே சான்றோரே, உங்கள் கருத்துகள் 
          அறியக் காத்திருக்கிறேன்.. எது எப்படியாயினும் 
          முத்தாய்ப்பாக  நான் எண்ணுவது 


உழைத்துக் களைத்து உடலம் கிடத்தி உறங்கி எழுந்தால்
மறு நாளும்  உண்டு வாழ்வு, தொடரலாம் பணிகள். 
உறக்கத்தில் மூச்சு விட மறந்து எழாமல் போனால் 
என்னாகும்.?ஒன்றுமாகாது. பேரினை நீக்கி பிணமென்று கூறி
பாடையில் கிடத்தி கொண்டு போவார்கள் புதைக்கவோ எரிக்கவோ.

          இருந்தபோது  செய்ததன் விளைவு 
          பெற்றுத்தரும் விழி நீரோ, உமிழ் நீரோ. 


இல்லாமையின் வெறுமை உணரப்படலாம் சில நாட்கள். 
விட்ட குறை தொட்டகுறை எனப் பணிகள் 
விடுபட்டுப் போயிருந்தால். பல நாட்களாக அது மாறலாம். 
காலம் கடந்தபின் மிஞ்சுவதெல்லாம் சில நினைவுகள் மட்டுமே.

(அன்பு நேசம் பாசம் காதல் என்றெல்லாம் அறியப் படும் உணர்வு உண்மையில் என்ன?என்றோ எழுந்த கேள்வி பதிவாகி இருந்தது. இப்போது அதுவே மீள்பதிவாக)
 

         
 

 

14 comments:

  1. உறக்கத்தில் மூச்சு விட மறந்து எழாமல் போனால்
    என்னாகும்.?ஒன்றுமாகாது.

    உறங்கி விழிப்பதுபோலும் பிறப்பு ..

    ReplyDelete
  2. அருமை ஐயா... உண்மையும் கூட...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. //பாடுபட்டுக் கோடி பல விட்டுச் சென்றால் பெருமையுடன் நினைப்பார்களோ.? //

    கோடிகள், ஒருவேளை கோடியில் ஒருவரையாவது இவ்விதம் நினைக்கச்செய்யலாம்.

    //உலகில் பாடுபட விட்டுச் சென்றால் பழியேற்றுச் செல்ல வேண்டுமோ.?//

    சந்தேகமில்லாமல். அதுவும் அனாதைப்பிணத்தையும் விட கேவலமாக.

    //அன்புக்கும் ஒரு விலை உண்டு என்பதுதான் உண்மையோ.?//

    நிச்சயமான நிதர்சனமான உண்மைதான்.

    ஏதேதோ அன்பைப்பற்றி நாமும் வாய்கிழியப் பேசலாம்.

    அனுபவிப்பவர்களுக்கே இதில் உள்ள உண்மையும் கசப்பும் புரியும்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. இதற்கும், இதற்கு முந்திய பதிவும்
    மனதைத் தொடும் பதிவுகளாகவே வெளியிட்டு வருகிறீர்கள்.

    ReplyDelete
  5. உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில்
    எதுவும் இருக்காது
    இருப்பது போலத் தெளிவு கொண்டால்
    குழப்பம் தொடராது

    ReplyDelete
  6. " எதிர்பார்ப்பில்லாத அன்பென ஒன்று உண்டா என்ன.?" என்கிறீர்களே, அது சரியான விளக்கமே. ஒவ்வொரு அன்பும் ஒவ்வொரு எதிர்பார்ப்பை உள்ளடக்கியதே. சுயநலம் இலாத அன்பு என்பது உலகில் கிடையாது.


    ReplyDelete

  7. @ இராஜராஜேஸ்வரி
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.
    @ திண்டுக்கல் தனபாலன்
    உண்மை என்று உணர்வதையே எழுதினேன். மாறுபட்ட சிந்தனைகள் இருக்கலாமென்று நினைத்தே கேள்விகளாக்கினேன். வருகைக்கு நன்றி
    @ கோபு சார்
    உங்கள் எண்ணமும் எனதை ஒட்டியே இருப்பது கண்டு மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்டுப் பதிவுக்கும் நன்றி.
    @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    என்ன செய்வது. சில சமயம் அப்படி நேர்கிறது. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி
    @ ரமணி.
    வாழ்க்கையே வெங்காயம் உரிப்பது போல் இருந்தால் கவலையே இல்லையே. அநேகமாக ஒரு சிலருக்கே நீங்கள் சொல்லும் தெளிவு இருக்கும். வருகைக்கும் மேலான கருத்துப் பதிவுக்கும் நன்றி.
    @ செல்லப்பா யஞனஸ்வாமி
    THERE IS A PRICE FOR EVERYTHING என்று சொல்வார்கள். அன்பும் ஒரு commodity ஆகி விட்டதே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    @ கரந்தை லெயக்குமார்
    பாராட்டுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  8. இல்லாமையின் வெறுமை உணரப்படலாம் சில நாட்கள்.
    விட்ட குறை தொட்டகுறை எனப் பணிகள்
    விடுபட்டுப் போயிருந்தால். பல நாட்களாக அது மாறலாம்.
    காலம் கடந்தபின் மிஞ்சுவதெல்லாம் சில நினைவுகள் மட்டுமே.//

    இது மீள்பதிவுதான் என்றாலும் மீண்டும் மீண்டும் இடப்பட வேண்டியது பதிவுதான்...

    அன்பு என்றால் என்ன என்பதை பைபிளில் மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள். அதை ஒரு தனி பதிவாக எழுதுகிறேன்.


    ReplyDelete

  9. @ டி.பி.ஆர்.ஜோசப்
    என்னவோ தெரியவில்லை. புதிதாக எழுத முனைப்பு வருவதில்லை. ஆகவே பழையபதிவுகளில் சிலவற்றை மீண்டும் பதிவிடுகிறேன். அன்பு குறித்த உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன். வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  10. அதுவா இதுவா என்று பலவித யூகங்களுக்குள் சிந்தனையைச் செலுத்தி முத்தாய்ப்பாய் உங்கள் சிந்தனையைச் சொல்லிமுடித்தவிதம் அருமை. யோசித்துப் பார்க்கையில் நீங்கள் சொன்னதில் இருக்கும் உண்மை தெளிவாகப் புரிகிறது. பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  11. கவிஞர் கண்ணதாசன் சொல்லுவார். ‘பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா சோதனையை பங்கு வைச்ச சொந்தமில்லே பந்தமில்லே’ என்று.

    கட்டிய மனைவியும்,பெற்ற பிள்ளைகளும் கதறி அழும்போது வந்து விழும் வார்த்தைகள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாவதைக் காட்டுகிறதா.? என்ற வரிகள் சிந்திக்க வைக்கிறது. ஆனாலும் Blood is thicker than water என்பதுதானே உண்மை.

    ReplyDelete
  12. காலம் கடந்தபின் மிஞ்சுவதெல்லாம் சில நினைவுகள் மட்டுமே.//

    அது தான் உண்மை.

    ReplyDelete