அறியாமை எனும் வரம்.
--------------------------------
இன்று மே மாதம் ஏழாம் நாள். சில நாட்கள் மறக்க முடியாதவை.அந்த நாளின் நினைவுகள் மனதில் மோதி ஒரு introspection-க்கு வழி வகுக்கிறது.என் இரண்டாம் மகன் பிறந்த நாள். நாங்கள் அப்போது BHEL குடியிருப்பில் இருந்தோம்.அன்று விடியற்காலை சுமார் நான்கு மணி இருக்கும். என் மனைவி எழுந்து குளித்து அறையில் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தாள். நான் விழித்துக் கொண்டு என்ன ஆயிற்று என்று கேட்டேன். பிரசவ நேரம் நெருங்கி விட்டது போல் தெரிகிறது என்றாள். நானும் என் நண்பனும் ( அவன் அப்போது என்னுடன் தங்கிக் கொண்டிருந்தான்)தயாராகி BHEL மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றோம். அது எங்கள் வீட்டில்
இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும். நான் ஒரு புறமும் அவன்
மறுபுறமும் நடந்து வர அவளைக் காலையில் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்றோம். அவளது
நிலையைப் பரிசோதித்த டாக்டர் அவளை நேராக லேபர் வார்டில் அட்மிட் செய்தார். அவ்வளவு
தூரம் நடந்து வந்தீர்களா என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அட்மிட் செய்த ஒரு மணி
நேரத்தில் என் இரண்டாம் மகனைப் பிரசவித்தாள்.
இப்பொழுதும் ஏதாவது பேச்சின் ஊடே “ என்னைப் பிரசவத்துக்கு நடத்திச்
சென்றீர்களே . ஏதாவது ஏடாகூடமாய் நடந்திருந்தால் “ என்று சொல்லிக் காட்டுவாள்.
என்ன செய்வது. ? சில நேரங்களில் IGNORANCE IS BLISS என்று நினைத்துக் கொள்வேன். அவளை அன்று லேபர்
வார்டில் பார்த்தபோது அவள் முகத்தில் தெரிந்த வலியின் வேதனையைக் கண்டு தீர்மானம் செய்தேன்..இதற்கு மேல் குழந்தைகள் வேண்டாம். இவள்
இந்த அவஸ்தைக்கு இனி உள்ளாகக் கூடாது” என்று.
இரண்டாவது குழந்தை பெண்ணாக இருக்க விரும்பினாலும் ஆணாகப் பிறந்தாலும் மூன்றாவது
குழந்தை என்னும் பேச்சுக்கே இடம் கொடுக்கவில்லை.