Sunday, May 20, 2012

எழுதியது கடிதம்.....கடிதம் அல்ல.


                               எழுதியது கடிதம்....கடிதம் அல்ல.
                               -----------------------------------------------
                                   



















                                       ( நண்பனுக்குக் கடிதம் )
அன்பு நண்பா,

              சில விஷயங்கள் நேரில் பார்க்கும்போது பேச முடிவதில்லை. எண்ணங்களை ஒருமுகப் படுத்தவோ, எண்ணுவதைக் கோர்வையாகக் கூறவோ முடிவதில்லை. செயல்களினாலும் நிகழ்வுகளாலும் தாக்கப் பட்டு , அதிலிருந்து மீளவே நேரம் இருக்கவில்லை. இருந்தாலும் இப்படி எழுதுவதன் மூலம் மனதளவில் பாதிக்கப் பட்டதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

உனக்கும் எனக்கும் எத்தனை ஆண்டு பரிச்சயம். ஐம்பது வருடங்களுக்கும் மேலிருக்கும். என் திருமண நாளில் மேடையில் தோழனாக நின்று ஆதரவு கொடுத்தபோது நீ எந்த பணியிலும் இருக்கவில்லை. சில நாட்கள் கழித்து பணி தேடி நீ ஒரு வளைகுடா நாட்டுக்குச் சென்றிருப்பதைக் கேள்விப்பட்டேன்.
நீ பெரிய படிப்பு படித்து பட்டம் பெற்றவனல்ல என்று எனக்குத் தெரியும். இல்லாவிட்டால் என்ன.? உழைக்கத் தயங்காதவன், வாழ்வில் உயர்வதை தடுக்க முடியுமா.? நானும் என் அல்லல்களுக்கிடையில் உன்னைப் பற்றிய செய்திகளை தேடிப் பெறவில்லை..கிடைத்த செய்திகள் நீ வெகுவாக வளர்ந்து ஒரு மிகப் பெரிய பொறுப்பில் இருப்பதைத் தெரிவித்தன. நீ எந்த அளவு வளர்ந்திருக்கிறாய் என்பதை ,நான் என் நண்பன் , உன் தம்பியின் மகனுடைய திருமணத்துக்கு வந்தபோது கண்டேன். வளைகுடா வேலையை விட்டு நீ நாடு திரும்பி இருந்தாய். என்னை உன் வீட்டுக்கு அழைத்தாய். வீடா அது.? ஒரு கல் கோட்டை அல்லவா கட்டியிருந்தாய். வீட்டின் தரை எல்லாம் இரண்டு அங்குல கனத்திற்கு கம்பளம் போட்டிருந்தாய். டாய்லெட்டில் சிறு நீர் கழிக்கவே தயக்கமாய் இருந்தது..(அங்கும் கம்பளம்.)வீட்டின் முன்னால் மெர்ஸ்டீஸ் பென்ஸ் கார். மலைத்துப் போய் நின்று விட்டேன். ஆனால் நீ மட்டும் நீயாகவே இருந்தாய். செல்வ செழிப்பை எல்லாம் பறை சாற்றி கொண்டிருந்தன, அக்றிணைப் பொருள்கள். ஆனால் ஒரு வார்த்தையாவது பெருமையாக நீ பேசவில்லை. உன் எண்ணமெல்லாம் நினைவலைகள் தவறி (ALZEIMER ) ஆதரவு இல்லாமல் இருக்கும் சாதாரண மக்களுக்கு எப்படி உதவலாம் என்பதிலேயே இருந்தது.

 அன்று உன்னிடம் பேசும்போது அதில் எவ்வளவு ஈடுபாடு இருக்கும் என்று நானும் சிந்திக்கவில்லை. என்னைவிட இரண்டு மூன்று வயது மூத்தவன் நீ. உள்ளம் நினைத்ததைச் செய்ய உடல் ஒத்துழைக்குமா என்று நானே கேள்வி கேட்டுக் கொண்டேன். அப்படியே செய்ய முயன்றாலும் எதிர்கொள்ள வேண்டிய தடைகள் எவரையும் பல முறை சிந்திக்க வைக்கும்.

கடந்த வாரம் உன்னைச் சந்தித்தபோது, என்னையே என்னால் நம்ப முடியவில்லை. நினைத்ததை சாதிக்க வேண்டிய எல்லா தொடக்கப் பணிகளையும் துவங்கி, சாதனையின் படிக்கட்டில் இருக்கிறாய். என் இள வயதில் என்னென்னவோ செய்ய எனக்கும் நிறைய கனவுகள் இருந்தது, என்னால் முடிந்ததெல்லாம் கனவுகளைக் கதையாக எழுதியதுதான்.

இப்பொழுது உன் அரவணைப்பில் பத்து பேர் நினைவலைகள் தவறி ஆதரவு அற்றவர்கள்  பாதுகாப்பாக இருக்கிறார்கள். நான் அங்கு வந்திருந்தபோது ஒரு மூதாட்டி அவருக்கு தேனீர் தரவில்லை என்று புகார் எழுப்பிக் கொண்டிருந்தார். உண்டதும் குடித்ததும் கூட மறந்து விடும் பாவப் பட்டவர்கள், உன் அரவணைப்பில். உன்னை நினைத்துப் பெருமைப் படுகிறேன் நண்பா.!

வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு சம்பாதித்தது விரயமாகிறது என்ற எண்ணத்தில் எதிர்ப்புத் தெரிவித்த வாழ்க்கைத் துணைவியையும்  விட்டுக் கொடுக்க முடியாமல் , கொண்ட கொள்கைப் பிடிப்பிலிருந்தும் வழுவ முடியாமல் உன் சொத்தில் பெரும் பகுதியை அவருக்குக் கொடுத்து  நீ தனியாக வந்து, நீ நடத்தும் “ காருண்ய “ இல்லத்திலேயே ஒருவனாக வாழ்க்கை நடத்துவது எஙஙனம் சாத்தியமாகிறது நண்பா.? அன்று நீ கூறியது இப்போதும் என் காதுகளில் ரீங்கரிக்கிறது. “ கடவுள் எனக்கு சம்பாதிக்கவும் சொத்து சேர்க்கவும் உதவியது, ஆதரவு அற்றவர்களுக்கு உதவ என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதால்தான் “என்றாய்..எனக்கு காந்திஜி சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. “ தன் தேவைக்கு மேல் சேர்த்து வைப்பவன் எங்கோ ஒரு திருடனையோ, பிச்சைக்காரனையோ உருவாக்குகிறான் “

இப்போது இயங்கும் காருண்ய சிறகுகள் “ இன்னும் விஸ்தரிக்கப் பட வேண்டும் என்று அதற்கான பணிகளில் நீ ஈடுபட்டிருப்பதைக் கண்டேன். குறைந்தது ஐம்பது பேராவது தங்கும் வசதிக்காக கட்டிடப் பணிகள் துவங்கி இருக்கிறாய். உடன் மருத்துவ வசதி இருக்க வேண்டி மருத்துவர் தங்கவும்
ஏற்பாடு செய்யும் பணியில் இருக்கிறாய். என்னதான் தனி மனிதனாக முயற்சி செய்தாலும் “ தனி மரம் தோப்பாகாது “ என்று உணர்ந்திருக்கிறாய். உன் சேவையில் ஊதியமின்றி பணி புரிய அங்கிருந்த ஒரு தம்பதியினரையும் அறிமுகம் செய்து வைத்தாய். உணவு வகையறாக்களுக்கு நாள் ஒன்றுக்கு தற்சமயம்  குறைந்தது ரூ 300-/ தேவைப்படுவதாகவும் மனம் உள்ளவர்கள் விரும்பி உதவினால் ஏற்றுக் கொள்ளப் படும் என்றும் கூறி இருந்தாய்.

குடத்தில் இட்ட விளக்காய் இருக்கும் உன் பணிகளை குன்றின் மேல் விளக்காக்க நான் என்ன செய்ய முடியும் ? முதல் பணியாக வலையில் உனக்கெழுதும் இக்கடிதத்தை இடுகையாக இடுவேன். படிக்கும் நல்ல உள்ளங்கள் கை கொடுக்க மாட்டார்களா என்ன. ? எனக்கு நீ உன்னை  மற்றவர்கள் தொடர்பு கொள்ள சரியான விலாசம் தெரியப் படுத்தவும் இராமனின் பாலம் கட்டும் பணியில் அணிலின் பங்கு இருந்தது போல் என் பங்கு இருக்குமா.? காலம் தான் தெரியப் படுத்த வேண்டும் .உரிமை எடுத்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளேன்.தவறில்லையே.

உனக்காகவும் உன் பணிகள் சிறக்கவும் எல்லாம் வல்ல இறைவனை தினமும் வேண்டுவேன்.
                               இப்படிக்கு உன் அன்பு நண்பன்,
                                ஜீ.எம். பாலசுப்பிரமணியம்.  

CONTACT ADDRESS:-
                  P.Madhusudhan.
                  "SIRAKUKAL"
                  C/O "KARUNYA"
                  GERIYATRIC CARE CENTER, 
                  KARUNGKANAPPALLI POST, 
                  NEAR PALGHAT POLYTECHNIC
                  PALGHAT DISTRICT,
                  KERALA.       . 


மின் அஞ்சல் முகவரியும் தொலைபேசி எண்ணும் பின்னால் சேர்க்கப்பட்டது. 


மின் அஞ்சல்  ----- madhu37@gmail.com


தொலைபேசி எண்கள் ------- 0491/2571090


                                                              09447408252


--------------------------------------------------------------------------------------------------------------



14 comments:

  1. //“ கடவுள் எனக்கு சம்பாதிக்கவும் சொத்து சேர்க்கவும் உதவியது, ஆதரவு அற்றவர்களுக்கு உதவ என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதால்தான் “//
    நல்ல எண்ணம் !!!
    உயர்ந்த உள்ளம் !!!

    ReplyDelete
  2. உய‌ர்ந்த‌ உள்ள‌ங்க‌ள், எண்ண‌ங்க‌ள்.
    உத‌விக்க‌ர‌ங்க‌ள் நீள‌‌ட்டும், ம‌க்க‌ளின் துய‌ர் குறைய‌ட்டும்.
    ப‌ணி சிற‌க்க,‌ "ம‌ணி" கொட்ட‌ட்டும்.

    பார‌தி கேட்ட‌து போல‌,
    பண‌ம் உள்ள‌வ‌ர் பொற்குவை தாரீர்.

    ReplyDelete
  3. நெகிழ்ச்சியான பதிவு.
    தொலைபேசி எண்ணும் சில புகைப்படங்களும் சேர்த்திருக்கலாமோ?
    "தன் தேவைக்கு மேல் சேர்த்து வைப்பவன் எங்கோ ஒரு திருடனையோ, பிச்சைக்காரனையோ உருவாக்குகிறான்" - great quote!

    ReplyDelete
  4. இப்படியும் சிலர் இருப்பதால்தான்
    உலகு அச்சிலிருந்து விலகாது சுழன்றுகொண்டிருக்கிறது
    நிச்சயம் நல் உள்ளங்களின் வாழ்த்தும் உதவியும்
    உரிய காலத்தில் அவரிடம் வந்து சேரும்
    அருமையான அறிமுகம்
    பயனுள்ள பதிவு
    பகிர்வுக்கு வழ்த்துக்கள்

    ReplyDelete
  5. பணம் வந்து சேர்ந்தவுடன் தன்னை மறக்கும் மனிதர்கள் மத்தியில், தன்னை மறந்த மனிதர்களைச் சேர்த்து ஆதரவு காட்டும் உயர்ந்த உள்ளத்தை வாழ்த்தி வணங்குகிறேன். முடியும்போது என் பங்களிப்பையும் வழங்குவேன். பகிர்வுக்கு மிகவும் நன்றி ஐயா.

    ReplyDelete
  6. காருண்ய சிறகுகள் சிறப்பான
    மனிதம் மிகுந்த மனிதரைப்பற்றிய பகிர்வு நிறைவளித்தது..
    பாராட்டுக்கள் ஐயா..

    ReplyDelete
  7. @ நாகசுப்பிரமணியம்,
    @ வாசன்,
    @ அப்பாதுரை,
    @ ரமணி,
    @ கீதமஞ்சரி,
    @ இராஜராஜேஸ்வரி
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்
    நன்றி. என் இந்தப் பதிவு அந்த
    இல்லத்துக்கு நல்லது நடக்க ஓர்
    நல்ல ஆரம்பமாக இருக்கட்டும்.

    ReplyDelete
  8. அன்புள்ள ஐயா...

    தாங்கள் வரவில்லையே என்று எண்ணிக்கொண்டிருந்தேன். வநது பேருந்து நாவலின் ஐந்தாம் அத்தியாயம் குறித்து சொன்ன கருத்துரைகளுக்கு நன்றி. நாவல் என்கிற இலக்கிய வடிவம் அற்புதமானது. படைப்பாளனின் கற்பனை அங்கு பங்கு வகித்தாலும் ஒரு கதைப்பொருண்மைக்குள் அதனை சிக்கவிடாமல் எந்த முடிவுகளும் திருப்பங்களும் இல்லாமல் சராசரி ஒரு மனிதனின் பயணத் தேவையென்பது எத்தகைய இடர்களைச் சந்திக்க வைக்கிறது தினமும் என்பதான ஒரு முனைப்பே இந்த நாவலின் வேர். சரியாகப் புரிந்துகொண்டமைக்கு நன்றிகள்.

    கைபேசிகள் புற்றீசல்களைப் பெருகிவிட்ட இந்த சூழலில் கடிதம் எழுதுவது என்பது குறைந்த வருத்தம் இன்னும் இருக்கிறது. நண்பனுக்கு கடிதம் எழுதி அதுவும் உயர்ந்த நோக்கை நோக்கி இயங்கும் நண்பனை வெளிக்காட்ட எழுதிய கடிதம் கசிய வைக்கிறது. அவரது முகவரியை நான் குறிததுக்கொண்டேன், என்னால் இயன்றதை அனுப்பிவைப்பேன்.

    நன்றி. தங்கள் நண்பருக்கு உங்கள் பக்கம் வழியாக என்னுடைய மதிப்புமிகு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. புற்றீசல்களைப் போலப் பெருகிவிட்ட


    திருத்தி வாசிக்கவும்.

    ReplyDelete
  11. அன்புள்ள ஐயா...

    தாங்கள் வரவில்லையே என்று எண்ணிக்கொண்டிருந்தேன். வநது பேருந்து நாவலின் ஐந்தாம் அத்தியாயம் குறித்து சொன்ன கருத்துரைகளுக்கு நன்றி. நாவல் என்கிற இலக்கிய வடிவம் அற்புதமானது. படைப்பாளனின் கற்பனை அங்கு பங்கு வகித்தாலும் ஒரு கதைப்பொருண்மைக்குள் அதனை சிக்கவிடாமல் எந்த முடிவுகளும் திருப்பங்களும் இல்லாமல் சராசரி ஒரு மனிதனின் பயணத் தேவையென்பது எத்தகைய இடர்களைச் சந்திக்க வைக்கிறது தினமும் என்பதான ஒரு முனைப்பே இந்த நாவலின் வேர். சரியாகப் புரிந்துகொண்டமைக்கு நன்றிகள்.

    கைபேசிகள் புற்றீசல்களைப் பெருகிவிட்ட இந்த சூழலில் கடிதம் எழுதுவது என்பது குறைந்த வருத்தம் இன்னும் இருக்கிறது. நண்பனுக்கு கடிதம் எழுதி அதுவும் உயர்ந்த நோக்கை நோக்கி இயங்கும் நண்பனை வெளிக்காட்ட எழுதிய கடிதம் கசிய வைக்கிறது. அவரது முகவரியை நான் குறிததுக்கொண்டேன், என்னால் இயன்றதை அனுப்பிவைப்பேன்.

    நன்றி. தங்கள் நண்பருக்கு உங்கள் பக்கம் வழியாக என்னுடைய மதிப்புமிகு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. Sir, I'm willing to help,getting ready to go to Lanka for a family function,will get in touch after the return.TC.

    ReplyDelete
  13. உதவ விரும்பும் நண்பர்களுக்கு உதவியாக மின் அஞ்சல்முகவரி மற்றும் தொலைபேசி எண்களை பிறகு சேர்த்திருக்கிறேன். மீண்டும் நன்றி.

    ReplyDelete
  14. கடவுள் எனக்கு சம்பாதிக்கவும் சொத்து சேர்க்கவும் உதவியது, ஆதரவு அற்றவர்களுக்கு உதவ என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதால்தான் “என்றாய்..எனக்கு காந்திஜி சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. “ தன் தேவைக்கு மேல் சேர்த்து வைப்பவன் எங்கோ ஒரு திருடனையோ, பிச்சைக்காரனையோ உருவாக்குகிறான் “//

    கடிதம் மனித நேயத்தை எடுத்து வந்து இருக்கிறது.

    அருமையான நெகிழ்வான கடிதம்.

    நண்பரின் உதவும் எண்ணம் வாழ்க!

    ReplyDelete