Tuesday, May 8, 2012

தரம்....வாழ்க்கைத் தரம்.

                                                 
                                                 தரம் ....வாழ்க்கைத் தரம்.
                                                 ---------------------------------

ஒரு நிலைக் கண்ணாடி முன் நகர்ந்து செல்பவர்கள், தங்களை ஒரு முறையேனும் பார்க்காமல் நகர்கிறார்களா என்பது சந்தேகமே.இப்படி இருக்கும்போது, நம்மைச் சுற்றிலும் கண்ணாடிகள் பதித்திருக்க நம் முக, வடிவ அழகை ஆராதிக்காமல் இருக்க முடியுமா என்ன.? இன்று காலை நான் முடி வெட்டிக்கொள்ள ஒரு முடி திருத்தும் அழகு நிலையத்துக்கு ( பார்பர் ஷாப் ) சென்றிருந்தேன். எனக்கு முன்னே இன்னும் இருவர் காத்திருந்தனர். என் முறை வரக் குறைந்தது அரை மணி நேரமாவது ஆகும். சும்மா உட்கார்ந்திருக்கும்போது ஏகப்பட்ட எண்ணங்கள். முடி திருத்தகங்களில் எத்தனை வகைகள். இருந்தாலும் கடைசியில் நாம் இழக்கப் போவது என்னவோ நம் முடியும் சில ரூபாய்களும். இழக்கும் முடி வேண்டுமானால் ஒரே அளவு இருக்கலாம்.ஆனால் அதற்கு நாம் கொடுக்க வேண்டிய பணம் இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. நான் என் வீட்டருகே இருக்கும் பார்பர் ஷாப்புக்கு வாடிக்கையாகச் செல்வேன். வெறுமே முடி வெட்ட ரூபாய் 30-/ வசூலிப்பார். முக ஷவரமும் சேர்த்து ரூ. 50-/ எப்போதுமே நான் செல்ஃப் ஷேவிங்.ஆதலால் வெறுமே முடி மட்டும் திருத்திக் கொள்வேன்.கவனித்து நன்றாகச் செய்யுங்கள்என்று மட்டும் கூறுவேன். வேறு ஏதாவது சொல்ல முனைந்தால் அவர் என்ன அர்த்தம் எடுத்துக் கொள்வாரோ, இருக்கும் நான்கு முடிகளும் பார்க்க சகிக்காமல் போய்விடும். முடி திருத்தப் போகும் போது சாதாரணமாகவே என் ஒரு பக்கத்தில் அதிக முடி வளர்ந்திருப்பதுபோல் இருக்கும் .போனதடவை போனபோது சரியாகச் செய்யாததன் விளைவே என்று நமக்குத் தெரியும். இதை அவரிடம் ( மொழி சரியாகத் தெரியாத நிலையில் )சொல்லப் போனால் அவருடைய திறமையை நாம் குறை கூறுகிறோமோ என்று நினைத்துக் கொள்வார்.அதன் பலனாகத் திருத்தப் பட்ட உடனேயே அந்த வித்தியாசம் தெரியும்படி முடி வெட்டி இருப்பார். ஆகவேதான் பொதுவாக நன்றாகச் செய்யுங்கள் என்று கூறுவேன். சரி இவர்தான் இப்படி என்றால் ஒரு முறை என் மகனுடன் அவனிருக்குமிடத்தில் முடி திருத்தப் போனேன்.எப்போதும் போல்தான் திருத்திய பிறகு என் தலையும் முடியும் இருந்தது.ஆனால் என் மகன் அதற்குக் கொடுத்தது ரூ.100-/.
இந்த அளவு வித்தியாசம் ஏன் என்று யோசித்தபோது உண்மையிலேயே எனக்குத் திருப்திகரமான பதில் கிடைக்க வில்லை. அங்கும் சுழலும் நாற்காலி, கண்ணாடி, கத்திரி, சீப். வகையறாக்கள். இங்கும் அதுதான். அங்கும் துணி சுற்றி, ஆடாது அசையாது உட்கார வேண்டும். இங்கும் அதுதான். என் மகனோ, என் பேரனோ, இங்கு வந்து முடி திருத்த மாட்டார்கள். ரூ. 30-/ வாங்கித் திருத்தப் படுவதால் அது சரியாக இருக்காது என்ற எண்ணம். தரம் என்பது வாடிக்கையாளரின் திருப்தி என்று சொல்லிக் கொடுக்கப் பட்டவன் நான். அதிக பணம் கொடுத்து சேவை பெறுவதுதான், திருப்தி அளிக்கிறதோ.?

எனக்கு சாதாரணமாகப் பிடித்த நிறத்தில் நல்ல துணி வாங்கித் தைத்து உடுத்துவது பிடிக்கும். சாதாரணமாக உடுத்த மீட்டர் ரூ.200-/ லிருந்து ரூ.250-/க்குள் துணி கிடைக்கும். ஒரு ஷர்ட் தைக்க என்னுடைய வாடிக்கை டைலர் அதிக பட்சமாக ரூ75=/ ம்.ஒரு பேண்ட் தைக்க ரூ.150-/ ம் வாங்குவார். நம் அளவுக்குத் தைத்துக் கொடுப்பார். இதையே ஆயத்தக் கடையில் வாங்கினால், ஒரு ஷர்ட்டுக்கு ரூ. 200-/ க்கு மேலும் ஒரு பேண்ட்டுக்கு ரூ.250-/ க்கு மேலும் செலவு செய்ய வேண்டி வரும். என் மக்கள் ஆயத்த உடைகளையே விரும்புகிறார்கள்.அதிலும் ப்ராண்டெட் உடைகள் இன்னும் விலை அதிகம். அதிக பணம் கொடுத்து பொருளை வாங்குவதுதான் திருப்தி தருகிறதோ.?

நாம் சாதாரணமாக உண்ணும் இட்லி, தோசை போன்றவற்றை வீட்டில் செய்து சாப்பிட்டால், ஐந்து ஆறு என்று உள்ளே போகும். ஒரு மாற்றத்துக்கு ஓட்டலில் போய் உண்டால் இரண்டு இட்லியுடனோ, ஒரு தோசையுடனோ திருப்தி அடைந்து திரும்பி விடுகிறார்கள்.  மத்திய தர ஓட்டல்களில் ஒரு தோசை ,காப்பி குடித்துரூ.200-/ ( நான்கு பேருக்கு ) கொடுத்து திருப்தியடைந்து வயிறு நிறைந்தவர்கள் போல் வருகிறார்கள். இதுவே சற்று POSH ஆன ஓட்டல்களுக்குப் போனால் நம் சொத்தின் கையிருப்பு குறையும். ஒரு முறை வலைப்பூவில் ஒருவர், சென்னையில் உணவு மிகவும் சீப் என்றும் ஒரு வேளைச் சாப்பாடு இருவருக்கு ரூ.600-/க்குள்தான் என்றும் எழுதி இருந்தார்.அதற்கு நான் பின்னூட்டமிடும்போது, ஒரு நாளைக்கு ஒருவருக்கு சராசரியாக வருமானமே ரூ.300-/ க்கும் குறைவு எனும்போது ,அது எப்படி சீப்பாகும் என்று எழுதினேன். அதற்கு பதில் கூறும் வகையில் நான் குறிப்பிடும் ஏழைகள் ஒரு நாளைக்கு டாஸ்மாக்கில் ரூ.600-/ க்கு மேல் செலவு செய்கிறார்கள் என்று பதிலடி இருந்தது. அதிக பணம் கொடுத்து சேவை பெறுவதுதான் திருப்தி தருகிறதோ.?

ஒரு கிலோமீட்டர், இரு கிலோமிட்டர் தூரத்தை நடந்து செல்வதை விட ஆட்டோவில் அல்லது காரில் போவதே திருப்தி தருவதாக எண்ணுகிறார்கள்.

ஏறத்தாழ ஒரே வித சேவைக்கும் அதிகப் பணம் கொடுத்துப் பெறுவதே, தங்கள் தரத்தை உயர்த்திக் காட்டும் என்று எண்ணுகிறார்களோ. ? ஆரம்பக் கல்விக்கு ஆயிரக் கணக்கில் செலவு செய்வதைப் பெருமையுடன் எண்ணும் இவர்கள்தான் அரசு நடத்தும் பள்ளிகளை உதாசீனப் படுத்துகின்றனர். அரசு நடத்தும் பள்ளிகளில் படிப்பவர்கள் எல்லாம் தரக் குறைவானவர்கள் என்று எண்ணுகிறார்களா.?

ஏதாவது சொல்லப் போனால், உனக்கு வயதாகிவிட்டது, புரியாது. இது தலைமுறை இடைவெளி என்று ஒதுக்குகிறார்கள்.

வாடிக்கையாளரின் திருப்தியே தரம் என்று ஓங்கி உரைக்கும் எனக்கு திருப்தியின் CRITERIA புரிய மாட்டேன் என்கிறது. 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------  .


( 2010-ம் ஆண்டு நவம்பரில் “ தரம் எனப்படுவது யாதெனில் “ என்ற பதிவும் நான் எழுதியதே.! )




  

17 comments:

  1. ஏதாவது சொல்லப் போனால், உனக்கு வயதாகிவிட்டது, புரியாது. இது தலைமுறை இடைவெளி என்று ஒதுக்குகிறார்கள்.// பிறரை விரல் சுட்டி கூறப்படும் இதே வார்த்தைகளை கேட்டவர்களும் திரும்பப்பெறுவார்கள்.


    வாடிக்கையாளரின் திருப்தியே தரம் என்று ஓங்கி உரைக்கும் எனக்கு திருப்தியின் CRITERIA புரிய மாட்டேன் என்கிறது. //திருப்தியின் அடிப்படை அநேகருக்கு புரிவதில்லைதான்..:)

    ReplyDelete
  2. ஏறத்தாழ ஒரே வித சேவைக்கும் அதிகப் பணம் கொடுத்துப் பெறுவதே, தங்கள் தரத்தை உயர்த்திக் காட்டும் என்று எண்ணுகிறார்களோ. ?

    எனக்கு என் குழந்தைகள் மூலம் அந்த எண்ணம் வரத் துவங்கிவிட்டது
    இதைத் தவிர்க்க இயலாதோ என பயமாக இருக்கிறது
    வசதி உள்ளவர்கள் எப்படியும் மாறிக் கொள்ளலாம
    இதையே கொஞ்சம் வசதி குறைவானவர்களும் தொடர நினைக்கையில்தான்
    பிரச்சனைகள் பூதாகரமாகக் கிளம்புகின்றன என நினைக்கிறேன்
    காலத்திற்கேற்ற பயனுள்ள தரமான பதிவு
    சிந்திக்கத் தூண்டும் பதிவைத் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  3. ஆரம்பக் கல்விக்கு ஆயிரக் கணக்கில் செலவு செய்வதைப் பெருமையுடன் எண்ணும் இவர்கள்தான் அரசு நடத்தும் பள்ளிகளை உதாசீனப் படுத்துகின்றனர். அரசு நடத்தும் பள்ளிகளில் படிப்பவர்கள் எல்லாம் தரக் குறைவானவர்கள் என்று எண்ணுகிறார்களா.?// மிகவும் சரியான கருத்து என் மனதிலும் இப்படிப் பட்ட எண்ண ஓட்டங்கள் உண்டு எனது ஆதங்கத்தை தங்கள் எழுத்துக்களில் கண்டேன் உணருபவர்கள் தான் இல்லை . பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  4. ஒரு கிலோமீட்டர், இரு கிலோமிட்டர் தூரத்தை நடந்து செல்வதை விட ஆட்டோவில் அல்லது காரில் போவதே திருப்தி தருவதாக எண்ணுகிறார்கள்

    நிறைய விஷயங்களை.. மதிப்பீடுகளைத் தொலைத்து விட்டோம்..

    ReplyDelete
  5. காலங்கள் மாற மாற சிந்தனைகளும் பழக்க வழக்கங்களும் மாறுகின்றன.

    "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே." என்று நன்னூலில் அந்தக்காலத்திலேயே எழுதி வைத்திருக்கிறார்கள்.

    நாம்தான் நம் சிந்தனைகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  6. தங்கள் வரிகளில் இருக்கும் உண்மை மனம் நெருடுகிறது. தங்கள் அந்தஸ்தையும் பதவிசையும் காட்டிக்கொள்ள கொடுக்கப்படும் விலை தேவைக்கு மேல் மிக அதிகம் என்னும்போது, பல இடங்களில் நடப்பது புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதைதான்.

    ReplyDelete
  7. எண்ணமும் அனுபவமும்
    வரிகளை பளிச்சிடுகிறது
    எத்தனை அனுபவம்.

    பதிவிட்ட எல்லா உண்மைகளும்
    இங்கே கொஞ்சம் நெருடத்தான் செய்கிறது

    மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  8. @ ஸாதிகா,
    @ ரமணி,
    @ சசிகலா,
    @ ரிஷபன்,
    @ டாக்டர் கந்தசாமி,
    @ கீதமஞ்சரி,
    @ சிவ சங்கர்
    என் எண்ணங்களுடன் ஒத்துப் போகும்
    பலரது கருத்துக்களைக் காணும்போது
    ஆதங்கங்கள் எனது மட்டுமல்ல என்று
    தெரிகிறது.வரவுக்கும் கருத்துப்
    பகிர்வுக்கும் நன்றி.
    நான் எங்கள் ஊர் கோயில் விழாக்
    களில் பங்கு பெறச் செல்வதால் சில
    நாட்கள் பதிவு பக்கம் வர முடியாது.

    ReplyDelete
  9. சிந்திக்கத் தூண்டும் பதிவைத் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  10. தங்களுக்கு திருவிழா செல்ல விடுமுறை வழங்குகிறோம்
    நல்ல படங்களுடனும் சுவாரஸ்யமான பதிவுகளுடனும்
    வரவேண்டும் என்கிற கோரிக்கையோடு...
    பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. சில மதிப்பீடுகளும் உடையைப் போன்றவை. அடிக்கடி மாறுகின்றன. மாறாவிட்டால் தான் அதிர்ச்சி?

    ReplyDelete
  12. ஆயத்த உடை = அருமையான வழக்கைத் தெரிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  13. தரம் எனப்படுவது யாதெனில் வாடிக்கையாளரின் திருப்தியே தரம் என்று ஓங்கி உரைக்கும் திருப்தியின் CRITERIA ......nice

    ReplyDelete
  14. Some technical problems in my computer sir. I will post my comments in this regard soon sir.

    ReplyDelete
  15. நம்முடைய செயல்கள் நம்முடைய பழக்க வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் அடிப்படையிலிருக்கும். ஆனால் நம்முடைய பழக்கங்களில் பலவும்,நம்பிக்கைகளில் பலவும், உலகம் போகும் போக்கிலிருக்கும்.

    நம் உலகம் வேறு, நம் குழந்தைகளின் உலகம் வேறு.

    இந்த மனப்போராட்டம் அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் இருக்கத்தான் போகிறது.

    சிறந்த பதிவு.

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. தங்கள் பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருகை தருமாறு அன்போடு அழைக்கிறேன் .

    ReplyDelete