Thursday, September 4, 2014

கீதைப் பதிவு- அத்தியாயம் 4


                                  கீதைப் பதிவு -அத்தியாயம் 4.
                                  ---------------------------------------

கீதாச்சாரியன்



ஞானகர்மஸந்யாஸ யோகம்
ஸ்ரீ பகவான் சொன்னது.
அழிவற்ற இந்த யோகத்தை நான் விவஸ்வானுக்குப் (சூரியனுக்கு) பகர்ந்தேன். விவஸ்வான் மனுவுக்கு மொழிந்தான். மனு இஷ்வாகுவுக்கு உரைத்தான்(1)
இவ்வாறு பரம்பரையாக வந்துள்ள இந்த யோகத்தை ராஜ ரிஷிகள் அறிந்திருந்தார்கள்.பரந்தப, காலக்கிரமத்தில் அந்த யோகம் இவ்வுலகில் நஷ்டமடைந்தது.(2)
என் பக்தனாகவும் தோழனாகவும் இருக்கிறாய் ஆதலால், இப்பழைய அதே யோகமானது இன்று என்னால் உனக்கு இயம்பப் பட்டது.(3)
அர்ஜுனன் சொன்னது
உன் பிறப்புப் பிந்தியது விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது. தாம் அன்று அவருக்குப் பகர்ந்தீர் என்பதை யான் அறிவது எங்ஙனம்?(4)
ஸ்ரீபகவான் சொன்னது
எனக்கும் உனக்கும் அர்ஜுனா,பிறவிகள் பல கழிந்து போயின.பரந்தபா அவற்றையெல்லாம் நான் அறிகிறேன்; நீ அறிய மாட்டாய்.(5)
நான் பிறப்பற்றவன் அழிவற்றவன், உயிர்களுக்கு எல்லாம் ஈசன் எனினும் என் பிரகிருதியை வசப்படுத்தி ஆத்ம மாயையினால் அவதரிக்கிறேன்.(6)
பாரதா, எப்பொழுதெல்லாம் அறம் அழிந்து போய் மறம் மேலெழுகிறதோ,அப்பொழுதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக் கொள்கிறேன்(7)
நல்லாரைக் காப்பதற்கும் கெட்டவரைக் கரந்தொடுக்குவதற்கும் , தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் நான் அவதரிகிறேன்(8)
அர்ஜுனா, இஙஙனம் எனது திவ்வியப் பிறப்பையும் செயலையும் உள்ளபடி அறிபவன் உடலை நீத்து மறு பிறப்பு எய்துவதில்லை. என்னையே அடைகிறான்(9)
ஆசை, அச்சம் சினம் நீங்கியவர்களாய், என் மயமாய், என்னை அடைக்கலம் புகுந்து ஞான தபசால் புனிதர்களாய்ப் பலர் என் இயல்பை எய்தினர்(10)
யார் என்னை எப்படி வழிபடுகிறாரோ அவருக்கு நான் அப்படியே அருள் புரிகிறேன். பார்த்தா,மக்கள் யாண்டும் என் வழியையே பின் பற்றுகின்றனர்.(!!)
வினைப்பயனை விரும்புபவர்கள் இம்மையில் தேவதைகளைத் தொழுகின்றனர்.ஏனென்றால் வையகத்தில் வினைப்பயன் விரைவில் வாய்க்கிறது.(12)
குணத்துக்கும் கர்மத்துக்கும் ஏற்ப நான்கு வருணங்களை நான் படைத்தேன். அதற்கு கர்த்தா எனினும் என்னை நிர்விகாரி  என்றும் கர்த்தா அல்லாதவனாகவும்  என்றும் அறிக(!3)
கர்மங்கள் என்னைத் தீண்டா.எனக்குக் கர்ம பலனில் ஆசையில்லை இஙஙனம் என்னை அறிபவன் கர்மங்களில் கட்டுண்டு இருக்க மாட்டான்14)
முன்னாளைய முமுக்ஷுக்களும் (முக்தியை நாடியவர்கள்) இங்ஙனம் அறிந்து கர்மம் செய்தனர்.ஆகையால் நீயும் முன்னாளில் முன்னோர் செய்தபடி வினை ஆற்றுவாயாக. (15)
கர்மம் எது, அகர்மம் எது என்பதில் ஞானிகளே தடுமாற்றம் அடைகின்றனர்.எதைக் கர்மம் என்று அறிந்து ,கேட்டினின்று விடுபடுவாயோ அதை உனக்குப் பகர்வேன்(16)
கர்மத்தின் போக்கைத் தெரிய வேண்டும்.விலக்கப் பட்ட கர்மம் எது என்பது தெரிய வேண்டும்.கர்மத்தைக் கடந்த நிலையையும் தெரிய வேண்டும். கர்மத்தின் போக்கு அறிதற்கு அரியது.(17)
கர்மத்தில் அகர்மத்தையும் , அகர்மத்தில் கர்மத்தையும் காண்போன் மக்களுள் மேதாவி.அவனே யோகி, அவனே எல்லாம் செய்து முடித்தவன்(18)
எவனது கர்மங்கள் எல்லாம் ஆசையும் சங்கற்பமும் அற்றனவோ, எவனது கர்மங்கள் ஞானத் தீயால் எரிக்கப்பட்டனவோ.அவனைப் பண்டிதன் என்று ஞானிகள் பகர்கிறார்கள்.(19)
வினைப்பயனில் பற்றற்றவனாய், நித்திய திருப்தனாய். எதையும் சாராதவனாய் இருப்பவன் கர்மத்தில் ஈடுபட்டாலும்  அவன் கர்மம் செய்கிறவன் அல்லன்.(20)
ஆசையற்றவன், மனதையும், உடலையும்  அடக்கினவன், உடைமைகளைத் துறந்தவன், வெறும் உடலால் வினையாற்றுபவன் பாபத்தை அடைவதில்லை.(21)
தற்செயலாய்க் கிடைப்பதில் திருப்தி அடைபவன், இருமைகளைக் கடந்தவன், பொறாமை இல்லாதவன், வெற்றியிலும் தோல்வியிலும் நடுவு நிற்பவன் கர்மம் செய்தாலும் கட்டுப்படுவதில்லை (22)
பற்றிலனாய், முக்தனாய், ஞானத்தில் மனதை உறுதிப் படுத்தினவனாய் கடமையை யக்ஞமாகச் செய்பவனுடைய கர்மம் முழுதும் கரைந்து போகிறது.(23)
அர்ப்பணம் செய்தல் பிரம்மம்:;நெய் முதலிய ஹவிஸும் பிரம்மம்; பிரம்மமாகிய அக்னியில் பிரம்மத்தால் கொடுக்கப் படுகிறது. பிரம்மமாகிய கர்மத்தில் மனம் குவிந்து உள்ளவனால் பிரம்மமே அடையப் படுகிறது.(24)
சில யோகிகள் தேவதைகளுக்கு யாகம் செய்கிறார்கள்,இன்னும் சிலர் பிரம்மம் ஆகிய அக்னியில் ஆத்மாவைக் கொண்டு ஆத்மாவை ஹோமம் செய்கின்றனர்.(25)
அடக்குதல் என்ற அக்னியில் சிலர் செவி முதலிய இந்திரியங்களை ஹோமம் செய்கிறார்கள். மற்றும் சிலர் சப்தம் முதலிய விஷயங்களை இந்திரியங்கள் என்ற அக்னியில் ஹோமம் செய்கிறார்கள்(26)
இன்னும் சிலர் இந்திரிய கர்மங்களையும் , பிராண கர்மங்களையும். மனதை, ஆத்மாவின் கண் அடக்குதல் என்ற ஞான ஒளி வீசும்  யோகத் தீயில் ஆகுதியாகக் கொடுக்கின்றனர்.(27)
திரவிய யக்ஞம், தபோ யக்ஞம், யோக யக்ஞம் செய்வர் சிலர். தன்னடக்கமும்  உறுதியான விரதமும் உடைய மற்றவர் கற்றல் அறிதல் ஆகியவைகளை யாகமாகச் செய்வர்.(28)
அபான வாயுவில் பிராணனையும், பிராண வாயுவில் அபானனையும் (நாசியில்உட்கொள்ளும் வாயு அபானன் வெளிப்படுத்தும் வாயு பிராணன்) ஆகுதி செய்யும் சிலர், பிராண அபான வாயுக்களின் போக்கைத் தடுத்து பிராணா யாமத்தில் ஈடுபடுகின்றனர்.(29)
முறையாக உண்பவர் சிலர் பிராணனில் பிராணனைப் படைக்கின்றனர் .யாகத்தை அறிந்த இவர்கள் எல்லோரும் யாகத்தால் பாபத்தைப் போக்கியவர்களாம்.(30)
குருகுல சிரேஷ்டா, யக்ஞத்து எஞ்சும் அமுது உண்போர் அழியாப் பொருளாகிய பிரம்மத்தை அடைகிறார்கள். யக்ஞம் செய்யாதவருக்கு இவ்வுலகே இல்லையென்றால் அவ்வுலகேது.?(31)
இப்படி வேதத்தில் பல வித யாகங்கள் விவரிக்கப் பட்டிருக்கின்றன.அவை யாவும் கர்மத்தில் உண்டானவைள் என்று அறிந்து விடுதலை அடைவாயாக.(32)
பரந்தபா,(எதிரிகளை வாட்டுபவன்)பொருளைக் கொண்டு செய்யும் யக்ஞத்தை விட. ஞானயக்ஞம் மேலானது. பார்த்தா, கர்மம் முழுவதும் ஞானத்தில் முற்றுப் பெறுகிறது..(33)
பணிந்தும் கேட்டும் பணிவிடை செய்தும் நீ அதை அறிக. உண்மையை உணர்ந்த ஞானிகள் உனக்கு அந்த ஞானத்தை உபதேசிப்பார்கள்.(34)
பாண்டவா, அந்த ஞானத்தைப் பெற்ற பின் நீ இப்படி மயக்கமடைய மாட்டாய். அந்த ஞானத்தால் எல்லா உயிர்களையும் உன்னிடத்தும் என்னிடத்தும் காண்பாய்.(35)
பாபிகளில் எல்லாம் நீ பெரும்பாபியாய் இருப்பினும், பாபங்களை எல்லாம் ஞானத் தெப்பத்தால் நீ கடந்து செல்வாய்.(36)
சுடர் விட்டெரியும் தீயானது விறகுகளைச் சாம்பல் ஆக்குவது போன்று, அர்ஜுனா,ஞானக் கனல் கர்மங்களை எல்லாம் சாம்பலாக்குகிறது.(37)
ஞானத்துக்கு ஒப்பானது, தூய்மை தரும் பாங்குடையது இவ்வுலகில் ஏதுமில்லை. யோக சித்தன் நாளடைவில் தன்னகத்தே இந்த ஞானத்தை பெறுகிறான்.(38)
சிரத்தை உடையவன் ,பரத்தைச் சார்ந்திருப்பவன்,புலன்களை வென்றவன், ஞானத்தைப் பெறுகிறான்.ஞானத்தைப் பெற்று விரைவில் மேலாம் சாந்தி அடைகிறான்.(39)
அறிவிலி, சிரத்தை இல்லாதவன் ஐயமுறுபவன் அழிவடைகிறான் .ஐயமுறுபவனுக்கு இவ்வுலகும் இல்லை, அவ்வுலகும் இன்பமும் இல்லை.(40)

யோகத்தால் கர்மத்தை விட்டு, ஞானத்தால் சம்சயத்தை அகற்றி, ஆத்ம சொரூபத்தில் திளைத்திருப்பவனை கர்மங்கள் தளைக்க மாட்டா(தளும்ப விடாது) தனஞ்செயா.(41)
ஆகையால், அக்ஞானத்தில் உதித்த  உள்ளத்திலுள்ளா ஆத்மாவைப் பற்றிய ஐயத்தை ஞான வாளால் வெட்டி, யோகத்தைக் கைக்கொண்டு பாரதா எழுந்திரு.(42)
                ஞான கர்ம ஸந்யாஸ யோகம் நிறைவு             
 

 
   

24 comments:

  1. நல்லாரைக் காப்பதற்கும் கெட்டவரைக் கரந்தொடுக்குவதற்கும் , தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் நான் அவதரிகிறேன.//

    கீதையின் சாரம் .. !அருமையாகப்பகிர்ந்திருக்கிறீர்கள் . பாராட்டுக்கள்.1!

    ReplyDelete
  2. படிக்கப் படிக்க மனம் பரவசம் ஆகின்றது..

    நன்றி ஐயா!..

    ReplyDelete
  3. //பாரதா,//

    பார்த்தாவோ?

    //பாரதா, எப்பொழுதெல்லாம் அறம் அழிந்து போய் மறம் மேலெழுகிறதோ,அப்பொழுதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக் கொள்கிறேன்(7)//

    பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய ச துஷ்க்ருதாம் இந்த வரிகள்தான் இங்கு வரும் தமிழ் வரிகளோ? :)))

    ReplyDelete

  4. @ இராஜராஜேஸ்வரி
    முதல் வருகைகும் பாராட்டுக்கும் நன்றி மேடம்

    ReplyDelete

  5. @ துரை செல்வராஜு
    வருகைக்கும் பரவசப் பகிர்வுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  6. @ ஸ்ரீராம்
    அது பாரதா தான் பார்த்தா அல்ல.பாரதா=பாரதவம்சத்தில் பிறந்தவன் .”எப்பொழுது அறம் அழிந்து.....”என்பது
    ”யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத,
    அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்” என்னும் சுலோகத்தின் தமிழ் வரிகள். அதற்கு அடுத்த சுலோகம் “பரித்ராணாய....” என்பதன் தமிழ் வரிகள். வருகைக்கு நன்றி ஸ்ரீ.

    ReplyDelete
  7. எல்லா உயிர்களையும் உன்னிடத்தும் என்னிடத்தும்... எமன் நசிகேதனிடம் சொன்னதாகவும் வருகிறது. கீதையின் பல இடங்களில் கடோபநிஷத் கருத்துக்கள் அப்படியே. கடவுள் சொல்லவில்லை அல்லது சொன்னவர் கடவுள் இல்லை என்பதற்கு ஒரு ஆ.

    இது உங்கள் மொழிபெயர்ப்பா? நன்றாக இருக்கிறது.

    ReplyDelete

  8. @ டாக்டர் கந்தசாமி
    குறித்துக் கொண்டேன் ஐயா. நன்றி

    ReplyDelete

  9. @ கரந்தை ஜெயக்குமார்
    வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  10. @ அப்பாதுரை,
    அப்பாடா இப்போது மனப் பாரம் இறங்கினாற்போல் உணருகிறேன். நான்கைந்து பதிவுகளாகக் காணோமே என்றிருந்தேன் கீதை பற்றி நிறையவே பேசப் படுகிறது. இருந்தாலும் அதை ஒரு முறையாவது முழுவதும் படிக்க வைக்கும் ஒரு சிறிய முயற்சியே
    இது. என்கருத்துக்கள் ஏதுமின்றி தமிழில் கீதையை எழுதும் முயற்சி. எனக்கு சம்ஸ்கிருதம் தெரியாது.என் மொழிபெயர்ப்பல்ல. படித்ததையும் கிரகித்ததையும் எழுதுகிறேன் கீதைப் பதிவுக்கு ஒரு முன்னுரை என்னும்பதிவில் விளக்கி இருக்கிறேன் வருகைக்கு நன்றி சார். தொடர்ந்து வாருங்கள். எல்லா புகழும் சித்பவாநந்தருக்கே.

    ReplyDelete
  11. பரந்தப,//

    பார்த்திபா தான் இங்கே பரந்தபா ஆகி இருக்கா?

    அவரவர் இயன்றதை ஆகுதியாகக் கொடுக்கும் பகுதி நன்கு ரசிக்க முடிந்தது. நம்மால் முடிந்தது அறியாமையையும் மூட நம்பிக்கையையும் கொடுக்கலாம். :)

    ReplyDelete

  12. @ கீதா சாம்பசிவம்
    பரந்தப, அடைப்பான்களில் எதிரிகளை வாட்டுபவன் என்று எழுதி இருக்கிறேனே.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்

    ReplyDelete
  13. விளக்கத்திற்கு நன்றி. நீங்கள் எழுதி இருப்பது எனக்குத் தெரியலை. :(

    ReplyDelete
  14. நான் கூட ‘பார்த்திபா’ வைத்தான் ‘பரந்தப’ என்று எழுதியிருக்கிறீர்களோ என நினைத்தேன். திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு நீங்கள் அளித்த விளக்கம் எனது ஐயத்தையும் போக்கிவிட்டது. நன்றி!

    ReplyDelete

  15. @ கீதா சாம்பசிவம்
    நீங்கள் என் எழுத்துப் பிழையைச் சுட்டிக் காடிய பிறகு தட்டச்சுவதில் என் கவனம் கூடி இருக்கிறது.நன்றி.

    ReplyDelete

  16. @ வே நடன சபாபதி
    சம்ஸ்கிருதத்தில் இம்மாதிரியான பிரயோகங்கள் என்னையும் சில நேரங்களில் குழப்புகிறது. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  17. @ கீதா சாம்பசிவம்
    பார்த்தீர்களா ... எத்தனை கவனமாயிருந்தாலும் சில நேரங்களில் பிழைகள் தப்பித்து வந்து விடுகின்றன. மேலே ”சுட்டிக்காட்டிய” என்னும் இடத்தில் ”சுட்டிக்காடிய” என்று தட்டச்சாயிருக்கிறது சாரி..!

    ReplyDelete
  18. சித்பவாநந்தருக்கேவா? யாரந்த ஆனந்தர்?

    ReplyDelete

  19. @ வெங்கட் நாகராஜ்
    தொடர்வதற்கு நன்றி

    ReplyDelete

  20. @ Durai A
    நடுவில் படிக்கத் துவங்கினாதால் வந்த சந்தேகம்......! ? வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  21. சில கருத்துக்களைப் பார்க்கும்போது சைவ சித்தாந்தத்தில் வருவன போல் உள்ளது. படிக்கப் படிக்க நன்றாக உள்ளது.

    ReplyDelete