Sunday, November 16, 2014

பெங்களூரு to மதுரை via சென்னை


                                   பெங்களூரு to மதுரை via சென்னை
                                    -----------------------------------------------


அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் எனக்கு ஒரு மெயில் வந்தது. திருமதி துளசி கோபால் அனுப்பி இருந்தார்கள். அவர்கள் பெங்களூர் வர இருப்பதாகவும் என்னை சந்திக்க விரும்புவதாகவும் எழுதி என் தொலை பேசி எண் மற்றும் முகவரி கேட்டிருந்தார்கள். நான் உடன் பதில் எழுதினேன் என் வீட்டுக் கதவு எப்போதும் திறந்திருக்கும் என்றும் என் வீட்டில் மதிய உணவு உண்ண வருமாறும் அழைப்பு விடுத்திருந்தேன் அவர்கள் 18-ம் தேதி இரவு வருவதாகவும் 19-ம் தேதி அவர்கள் மைத்துனர் வீட்டில் உணவு என்றும் கூறி அவர்கள் தங்கப் போகும் ஹோட்டலில் இன்னும் சில பதிவர்களை அழைத்திருப்பதாகவும்  தொலை பேசிவிட்டு என் இல்லத்துக்கு வருவதாகவும் பதில் போட்டிருந்தார்கள், அயல் நாட்டில் இருக்கும் ஒரு பதிவர் என்னைப் பார்க்க வருவதாகச் சொன்னதும் சிறு பையனின் ஆவலில் காத்திருந்தேன் அக்டோபர் 19-ம் தேதி மதியம் என் இல்லத்துக்கு அவர் கணவர் கோபால் ,மைத்துனர் பூபாலன் அவர் மனைவி சாந்தி சகிதம் வந்திருந்தார்கள். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.திருமதி துளசியின் வலைத்தளத்துக்கு நான் அதிகம் போனதில்லை. அவரைப் பற்றிய என் முதல் நினைவே கடந்த ஆண்டு அவர் கணவருக்கு சஷ்டியப்த பூர்த்தி நடந்தபோது அவர்கள் அளித்த விருந்தை சுப்புத் தாத்தா அவர்கள்சிலாகித்து எழுதி இருந்ததும், மதுரை பதிவர் விழாவை நவம்பர் முதல் வாரத்தில் வைக்க முடியுமா என்று அவர்கள் எழுதி இருந்ததும்தான். இன்னொரு முறை நான் ஜயத்ரதன் பதிவில் இரு சூரியர்கள் சாத்தியம் என்று எழுதி இருந்ததும் அவர்கள் இரண்டு சந்திரன்களைப் புகைப்படம் எடுத்து அது எப்படி சாத்தியாமாயிற்று என்று எழுதி இருந்ததுமே. அவர்கள் இன்னும் இந்தியாவில் இருக்கிறார்கள். நியூ ஜிலாந்து சென்றதும் அவர்கள் இடும் பதிவுகளைப் படிப்பேன்.
நாங்கள் பெசிக்கொண்டிருந்தபோது  மதுரைக்கும் பதிவர் விழாவுக்கு வருகிறார்கள் என்றும் தெரிந்தது. நான் பதிவர் விழாவில் கலந்து கொள்வது அப்போது
நிச்சயிக்கப் படவில்லை. போகும் சாத்தியக் கூறுகள் உண்டு என்று மட்டும் தெரிவித்தேன் மகிழ்ச்சியான சில நேரத்துக்குப் பின் எங்களிடம் விடை பெற்றார்கள்
திரு கோபால் திருமதி துளசி

GMB,GOPAL,BHOOPAALAN SHANTHI, THULASI

 எனக்கோ பதிவர் விழாவுக்குப் போக வேண்டும் என்னும் ஆவல். ஆனால் என்னை எங்கும் தனியே அனுப்ப விருப்பமில்லாத என் மனைவியும் மக்களும். என் மூத்த மகன் பெங்களூரு வந்து தீபாவளி 22- ம் தேதி கொண்டாடிவிட்டு இங்கிருந்து குடும்பத்தவர் அனைவரும் மதுரை ராமேஸ்வரம் போன்று சில இடங்களுக்குப் போகலாம் என்று கூறினேன். மக்களுடன் ஆலய தரிசனத்துடன் பதிவர் விழாவிலும் கலந்து கொள்ளலாம். ஒரே கல்லில் இரண்டு மூன்றுமாங்காய்கள் என்று கணக்குப் போட்டேன். என் இளைய மகனுக்கு இரண்டே நாட்கள்தான் விடுமுறை. எல்லோரும் போக இயலாதபோது பெரியவனை இங்கு வரச் சொல்வது சரியாகத் தோன்றவில்லை. இருந்தாலும் நான் மதுரை போக வேண்டுமே...! எல்லோரும் தீபாவளியை பெரியவன் வீட்டில் சென்னையில் கொண்டாடுவது என்று முடிவாயிற்று. எனக்கு அரைக் கிணறு தாண்டியதுபோல் இருந்தது. 21-ம் தேதி மதியம் என் இரண்டாம் மகன் குடும்பத்தாருடன் மதியம் 12 மணி அளவில் காரில் சென்னை நோக்கிப் பயணம் துவங்கினோம் மதியம் வரை என் மருமகள் பள்ளி வேலைக்குப் போயிருந்தாள் லீவுப் பிரச்சனை. போகும்போதே சென்னையில் நல்ல மழை என்ற செய்தி. போகும் வழியிலும் மழை.போகும் முன் மதிய உணவருந்திவிட்டுச் சென்றதாலும் கையில் தின்பண்டங்கள் எடுத்துச் சென்றதாலும் நடுவில் ஹோட்டலை எதிர் நோக்கி இருக்கவில்லை. ஆனால் வழியில் ஒரு KFC உணவகம் கண்டதும் என் மகன் காரை நிறுத்தி எங்களை அழைத்துச் சென்றான் அன்று வாழ்வில் முதன் முதலாக பர்கர் (burger) சாப்பிட்டேன்..சும்மா சொல்லக் கூடாது .ருசியாகவே இருந்தது. கொடுத்த பணமும் கொழுத்திருந்தது. மாலை ஐந்து மணி அளவில் சென்னையின் எல்லைக்குள் வந்துவிட்டோம்.ஆனால் என் மகன் வீட்டுக்குப் போய்ச் சேரும்போது மாலை ஏழரை மணி ஆகி இருந்தது. ட்ராஃபிக் நெரிசல்பெங்களூருவிலா சென்னையிலா  என்னும் கேள்வி எழாமல் இல்லை


மகன் வீட்டில் தீபாவளிப் பண்டிகைக்கு, காலையில் எண்ணை ஸ்நானம் செய்விப்பதற்குள் அதிகாலை எண்ணை ஸ்நானம் என்பதெல்லாம் பழைய நினைவுகளாகி விட்டது. அதேபோல் பலகார வகைகள் வீட்டில் செய்வதும் அருகி வருகிறது. என்ன ...எல்லோரும் புத்தாடை அணிந்து சேர்ந்து மகிழ்வாய் இருப்பதே போதும் என்றாகி விட்டது. என் மகன் வேளச்சேரியில் பத்து மாடி அடுக்குக் குடியிருப்பில் ஏழாவது மாடியில் இருக்கிறான். குழந்தைகள் பட்டாசு வெடிக்கக் கீழே போக வேண்டும். பட்டாசு சப்தமும் புகையும் எனக்கு ஒவ்வாது என்று நான் கீழே போவதற்கு தடை விதித்து விட்டார்கள். இருந்தாலும் கெஞ்சிக் கூத்தாடி சில நிமிடங்கள் கீழே இருந்தேன். நான் சிறு வயதில் என் பாட்டி வீட்டில் பாலக்காட்டில் கொண்டாடிய தீபாவளி பற்றி Nth time என் மக்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன் மூவாயிரம் ரூபாய்க்கு பட்டாசு வகைகள் என் மகன் வாங்கி வைத்திருந்தான். பாதுகாப்பு கருதி வாண வேடிக்கைகள் நிகழ்த்த முடியவில்லை. அந்த மாலை சென்னை முழுவதும் கந்தகப் புகை மூட்டமாகவே இருந்தது.எனக்கு என்னை மதுரைக்குக் கூட்டிப்போவார்களா என்னும் சந்தேகம் இருந்தது. அதற்கேற்றாற்போல் தமிழகம் முழுவதும் மழை என்று செய்தி வந்த வண்ணம் இருந்தது. 23-ம் தேதி சின்னவனும் குடும்பத்தாரும் பெஙகளூரு திரும்ப ஆயத்தமாகிப் புறப்பட்டனர். அவர்கள் போகும் வழியெல்லாம் நல்ல மழை என்று தொலை பேசியில் கூறிக் கொண்டே  இருந்தார்கள்மாலை ஏழு மணி அளவில் பத்திரமாகப் போய்ச் சேர்ந்தார்கள் என்பது ஆசுவாசமாக இருந்தது.  ஆனால் இந்த நிலை நீடித்தால் என் மதுரை போகும் எண்ணம் தடைபடுமே என்னும் கவலையும் இருந்தது 24-ம் தேதி திண்டுக்கல் தனபாலனை தொலைபேசியில் அழைத்து மழை நிலவரம் குறித்துக் கேட்டேன். மழையால் பதிவர் திருவிழா நடை பெறாமல் போகுமோ என்ற ஐயம் இருந்தது. டிடி, ஆறுதலாக விழா நடக்கும் . மழையால் பாதிப்பு இல்லை என்றதும் நாங்கள் வருவது பற்றி அவரிடம் உறுதி செய்தேன் என் மகனுக்கு 27-ம் தேதி அலுவலகத்தில் இருக்க வேண்டிய கட்டாய மிருந்ததால்26-ம் தேதி மதியமே திரும்ப வேண்டி இருக்கும் என்றான். 25-ம் தேதி காலை சுமார் ஆறு மணிக்கு விட்டை விட்டோம். சும்மாச் சொல்லக் கூடாதுசென்னை திருச்சி சாலை வழுக்கிக் கொண்டு போனது . சராசரியாக நூறு கிலோமீட்டர் வேகத்தில் நாங்கள் திருச்சியைக் கடக்க நான்கு மணி நேரத்துக்கும் குறைவாகவே ஆயிருந்தது. திருச்சி to மதுரையைஒன்றரை மணி நேரத்தில் கடந்து சுமார் பதினொன்றே முக்கால் மணிக்கு மதுரையில் முன்பே ஏற்பாடு செய்திருந்த ஹோட்டல் அரசன் சப்தகிரியில் செக் இன் செய்தோம்.
தீபாவளியன்று எங்கள் குடும்பம்

தீபாவளிக்கு முன் தினம் பேரன் பட்டாசுகளுடன்

மதுரை வந்து விட்ட செய்தியை டிடியிடம் தெரிவித்தோம். ஒன்று சொல்ல மறந்து விட்டது. சென்னையில் இருந்து மதுரை செல்வதற்குள் ஏழோ எட்டோ டோல் கேட்டுகள் வருகின்றன. அதற்காகவே ரூபாய் ஐநூறு வரை ஆகிறது.செல்லும் நேரத்தையும் கூட்டுகிறது. மதியம் உணவு உண்டு சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டோம். மாலை மீனாட்சி அம்மனைப் பார்க்கப் போனோம். மதுரையில் மீனாட்சி கோவிலில் என் மகனின் நண்பருக்குத் தெரிந்த பட்டர் ஒருவர் இருக்கிறார். அவர் மூலம்தான் நாங்கள்சென்ற முறை மதுரை போயிருந்தபோது தரிசனங்கள் கிடைத்தது. இப்போது அவரைத் தொடர்பு கொண்டபோது வீட்டில் ஏதோ விசேஷம் ஆதலால் வர நேரம் ஆகும் என்றார். மீனாட்சி அம்மன் சன்னதிக்குப் போக ஆளுக்கு நூறு ரூபாய் டிக்கட் வாங்கி உள்ளே நுழைந்தோம். பட்டரின் பெயரைச் சொல்லி சற்று விஸ்தாரமாக அம்மனை தரிசிக்கலாம் என்று எண்ணி விசாரித்தோம் . நாங்கள் தேடிப்போன பட்டரின் மகன் என்று ஒருவரைக் காட்டினார்கள். அம்மனே ஆணுடை அணிந்து வந்தது போல் ஒரு அழகு. பேச்சுக் கொடுத்தோம். அவர் பெங்களூருவில் பட்டம் படித்தவர் என்று ஆங்கிலத்தில் பேசி அறிமுகப் படுத்திக் கொண்டார் அவர் அர்ச்சனை செய்ய அம்மனை தரிசித்தோம். அன்று கோவிலில் கூட்டம் அதிகம் போலிருந்தது. இல்லை தினமும் இப்படித்தானா தெரியாது.சுந்தரேஸ்வரரை தரிசிக்காமல் வந்து விட்டோம். கூட்டத்தில் என்னைக் கஷ்டப் படுத்தக் கூடாது என்ற எண்ணம்தான் என்று மகன் சொன்னான். நான் ஏற்கனவே பல முறைகள் கோவிலுக்குச் சென்றிருப்பதால் அது எனக்குக் குறையாகத் தெரியவில்லை. திரும்பி வரும்போது பதிவர் திரு விழா நடக்கப் போகும் இடம் பற்றியும் விசாரித்துக் கொண்டோம் அடுத்த நிகழ்ச்சிகள் எல்லாம் நான் ஏற்கனவே பதிவில் எழுதி இருக்கிறேன் 26 -ம் நாள் விழாவில் மதிய உணவு உண்ட பின் சென்னை நோக்கிப் பயணித்தோம். சென்னையை அடையும் போது மாலை ஏழரை ஆகி இருந்தது.

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் ஒரு கோபுரம்
மதுரை மீனாட்சி கோவிலில் நானும் மனைவியும்
              

38 comments:

  1. வணக்கம்
    ஐயா

    மலரும் நினைவுகள் எப்போதும் தங்கள் நெஞ்சை விட்டு அகலாது... சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ஆர்வத்துடன் வலைபதிவர் திருவிழாவிற்கு வருகை தந்ததில் மிக்க மகிழ்ச்சி. தங்களை சந்தித்துப் பேசியதில் கூடுதல் மகிழ்ச்சி

    ReplyDelete

  3. இந்த வயதிலும் தாங்கள் இவ்வளவு சிரமத்துடன் பதிவர் விழாவில் கலந்து கொண்டது தங்களின் தமிழ் ஆர்வத்தை காட்டுகிறது,

    ஐயா தொடர்பதிவு ஒன்றை ஆரம்பித்து வைத்திருக்கிறேன் தாங்கள் வருகை தர அன்புடன் அழைக்கிறேன்

    இணைப்பு கீழே.

    http://www.killergee.blogspot.ae/2014/11/1.html

    ReplyDelete
  4. துளசி கோபால் அவர்கள் வ்ருகை,குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகை,பதிவர் திருவிழா வருகை என்று பதிவு அருமை.

    ReplyDelete
  5. பயண அனுபவங்களைப் பதிவாக்கி விட்டீர்களா? நான் ஜூன் மாதத்தில் மதுரை சென்றிருந்தபோது தெப்பக்குளம் ஒட்டியுள்ள மண்டபச் சுவரைப் பிரித்து வைத்திருந்தார்கள். இப்போது சரி செய்து விட்டார்களா?

    ReplyDelete
  6. பதிவர் விழாவில் கலந்துகொண்டதோடு மட்டுமன்றி சந்தித்த நண்பர்களைப் பற்றியும், பயணங்களைப் பற்றியும் உள்ள தங்களின் பதிவு எங்களை மென்மேலும் எழுதத் துணை செய்கிறது. நன்றி.

    ReplyDelete
  7. நீங்கள் கண்டிப்பாக கலந்து கொள்வீர்கள் எனும் நம்பிக்கை ஆரம்பம் முதலே எனக்கு இருந்தது ஐயா... சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி... நன்றி ஐயா...

    ReplyDelete
  8. நல்ல வர்ணனை. சென்னை டு மதுரை ரோடுகள் வழுக்குகின்றனவா? விபத்து இல்லாமல் போய் வந்தது கடவுள் அனுக்கிரஹந்தான்.

    ReplyDelete
  9. சார்! முதலில் இந்த வயதிலும் ஒரு இளைஞனைப் போன்ற ஆர்வத்துடனும், துடிப்புடனும் விழாவில் கலந்து கொள்ளப் பிரயாணித்தீர்களே! அதற்காகவே இந்த இளமை இன்னும் நீடிக்க நாங்கள் இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்!

    அருமையான பயணக் கட்டுரை. படங்கள் அருமை! மட்டுமல்ல தீபாவளி கொண்டாட்டம் தங்கள் குடும்பத்தினருடன்....அருமையான பகிர்வு....தங்கள் அன்பான இனிய குடும்பத்தினைக் கண்டு மிகவும் மகிழ்ந்தோம். ஒரு நேர்மறை எண்ணம் கிடைக்கின்றது! (பாஸிட்டிவ் எனர்ஜி)

    பலரும் தங்களைச் சந்தித்து விட்டனர். பதிவர் துளசி கோபால் அவர்கள், மற்றும் மதுரையில் பதிவர்கள்....

    நாங்கள்தான் எப்போது தங்களைச் சந்திக்க முடியும் என்று தெரியவில்லை! சீக்கிரமே நடக்க இறைவனை வேண்டுகின்றோம் சார்!

    தங்கள் எண்ணங்களும் இளமையுடனும், துடிப்புடனும், சக்தியுடனும் இருப்பதால்தான் தங்கள் எழுத்துக்களும், பேச்சும் துடிப்புடனும், இளமையுடனும் இருக்கின்றன.

    அதற்காக பிரார்த்தனைகளுடன்...

    ReplyDelete
  10. தங்களை இருமுறை சந்திக்க முடிஞ்சது மனசுக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கு.

    உடலுக்குத்தான் வயசு. உள்ளத்திற்கு இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டு இருக்கின்றீர்கள்!

    (ஆமாம்..... அதான் மாடுரேஷன் (!) இருக்கே. அப்புறம் வேர்ட் வெரிஃபிகேஷன் எதுக்காம்?)

    ReplyDelete
  11. நீண்ட பயணம் செய்து ஆர்வத்துடன் பதிவில் திருவிழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா
    நன்றி

    ReplyDelete

  12. @ ரூபன்
    ஐயா வணக்கம். ஒரு பயணத்தின் ஆயத்தங்கள் அதை மறக்க முடியாததாகச் செய்து விடுகிறது.வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  13. @ டி என். முரளிதரன்
    மதுரையில் சென்னைக்குப் பின் மீண்டும் சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சியே. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  14. @ கில்லர்ஜீ உங்கள் தளத்தை இணைத்தும் இந்தப் பதிவு வரவில்லை
    norply என்று முகவரி பார்த்த நினைவு. தொடரில் எழுத நாளாகும். வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  15. @ கோமதி அரசு
    வருகைக்கும் கருத்த்ப் பதிவுக்கும் நன்றி மேடம். நலம்தானே.?

    ReplyDelete

  16. @ ஸ்ரீராம்.
    நான் மதுரைக்குச் சில முறைகள் சென்றிருந்தாலும் மதுரையின் landmarks எதுவும் தெரியாது. எழுதுவதற்கான விஷயங்கள் என்று தோன்றியது. எழுதிவிட்டேன். வருகைக்கு நன்றி ஸ்ரீ.

    ReplyDelete

  17. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    தங்கள் மேலான கருத்துப் பதிவு உற்சாகமூட்டுகிறது. நன்றி ஐயா.

    ReplyDelete

  18. @ திண்டுக்கல் தனபாலன்
    எனக்கு ஆர்வமிருந்தது. இருந்தாலும் கடைசிவரை நிச்சயம் இருக்கவில்லை என்பதே நிஜம் வருகைக்கு நன்றி டிடி.

    ReplyDelete

  19. @ டாக்டர் கந்தசாமி
    சாலைகள் நன்றாக இருந்ததால் பயண நேரம் குறைந்தது, என் மகன் நன்றாகவே கார் ஓட்டுவான். வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete

  20. @ துளசிதரன் தில்லையகத்து.
    பெங்களூருவுக்கு தங்களை அழைக்கிறேன் வரக் காரணம்வேண்டுமென்றால் உங்கள் குறும்பட ஷோ வைக் கருத்தில் கொள்ளுங்கள். என்னால் முடிந்ததைச் செய்தேன். இனி உங்கள் கையில் வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete

  21. @ துளசி கோபால். பயணங்கள் இனிதே நிறைவேறியது மகிழ்ச்சி தருகிறது. என் தளத்தில் மாடெரேஷனும் இல்லை வேர்ட் வெரிஃபிகேஷனும் இல்லை. இருந்தும் சிலர் வெரிஃபிகேஷன்கேட்பதாகச் சொல்கிறார்கள் . புரியவில்லை. தொடர்பில் இருக்க வேண்டுகிறேன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  22. @ கரந்தை ஜெயக் குமார்
    உங்கள் வருகையும் கருத்துப்பதிவும் மகிழ்ச்சி தருகிறது .நன்றி ஐயா.

    ReplyDelete
  23. கண்ணாடி இப்போது தான் வந்தது. ஃப்ரேம் என்னைக் கேட்காமல் மாற்றி இருக்காங்க. செட் ஆகலை. :) கொஞ்சம் பிரச்னை! :)

    மதுரைப் பயணமும், துளசியோடு சந்திப்பும் குறித்த பகிர்வு அருமை. துளசி இங்கேயும் வந்திருந்தார். :))))

    ReplyDelete
  24. தங்களின் மகிழ்ச்சி பதிவெங்கும் கொட்டிக் கிடக்கின்றன.

    துளசி டீச்சர் இங்கேயும் வந்திருந்தார்.

    ReplyDelete

  25. @ கீதா சாம்பசிவம்
    மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன். துளசி நியூ ஜிலாந்த் போய்ச் சேர்ந்ததும் மெயில் அனுப்பி இருந்தார்.அதெப்படி உங்களைக் கேட்காமல் ஃப்ரேம் மாற்ற முடியும்.? மீண்டும் மாற்ற வேண்டி இருக்குமா.? வருகைக்கு நன்றி மேடம்.

    ReplyDelete

  26. @ ஆதி வெங்கட்
    துளசி திருச்சிப் பயணம் பற்றிச் சொல்லவில்லை. என் மகிழ்ச்சியின் வெளிப்பாடே இந்தப் பதிவு. அத்தி பூத்தாற்போல் வருகை தந்ததற்கு நன்றி மேடம்.

    ReplyDelete
  27. பதிவர்களைச் சந்திப்பது அவர்களோடு உரையாடுவது எல்லாம் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள். மதுரையில் சந்தித்தது போலவே புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பிலும் உங்களை சந்திக்க ஆசைப்படுகிறேன்.

    ReplyDelete
  28. பிள்ளைகளை சந்திப்பதற்கு நிகராக பதிவுலகத்தினரையும் சந்திக்க ஆவல் கொண்ட தங்களது உற்சாகம் பதிவில் தெரிகிறது. தங்களை மதுரைக்கு அழைத்துச் செல்வார்களோ மாட்டார்களோ என்று தாங்கள் பட்ட கவலையை வெளியிட்டதே தங்கள் உற்சாகத்தைக் காட்டுகிறது. துளசி மேடம் அவர்கள் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் என்பது அவரது பதிவுகளிலேயே விளங்கும். அவருடனான சந்திப்பு நிச்சயமாய் மனத்துக்கு இதம்தான்.

    ReplyDelete

  29. @ தி.தமிழ் இளங்கோ
    நீங்கள் கூறுவது சரிதான். புதுக்கோட்டை சந்திப்பு. பார்ப்போம் எதையும் திட்டமிட்டுச் செய்யும் நான் திட்ட மிட முடியாமல்...பார்ப்போம்
    வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  30. @ கீதமஞ்சரி.
    வருகைக்கு நன்றி மேடம். உற்சாகம் இருக்கிறது. கூடவே அதீத கண்காணிப்பும் இருக்கிறது. துளசி மேடம்பழகுவதற்கு இனிமையானவர்தான். அது போகட்டும். நீங்கள் எப்போது இந்தியா வருகிறீர்கள்? நான் சந்திக்க விரும்புபவர்களுள் நீங்களும் ஒருவர்.

    ReplyDelete
  31. நேரடியாகப் பார்ப்பதைப் போன்று
    படங்களுடன் அருமையாகச் சொல்லிப்போனவிதம்
    மனம் கவர்ந்தது.
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

  32. @ ரமணி
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார். இப்போதெல்லாம் அவ்வப்போதே வருகிறீர்கள்.

    ReplyDelete
  33. பெ-செ ஆறு மணி நேரம் கூட ஆகவில்லையா, நல்ல வேகம் தான். அதே போல் செ-ம செம வேகம் தான் :).

    எப்படியோ சமாளித்து ஒரு ட்ரிப் அடித்து எல்லாவற்றையும் பார்த்து விட்டீர்கள் அதான் விசேஷம்.

    ReplyDelete
  34. எத்தனை வயதானாலும் பட்டாசு வெடிக்கும்/ பூவாணம் வைக்கும் ஆசை போகாது என்பதை காணொளியில் கண்டேன். இரசித்தேன்.

    ReplyDelete
  35. பயணங்களையும் ,
    பதிவர் சந்திப்புகளையும் ,
    தீபாவளிக்கொண்டாட்டங்களையும் அருமையாகப் பகிர்ந்த்கொண்டதற்குப் பாராட்டுக்கள்.!

    ReplyDelete

  36. @ A.Durai
    பெ-செ தூரம் சுமார் 360 கிமீ
    செ-ம தூரம் சுமார் 450 கிமீ. கடக்கும் நேரம் சாலை+ ட்ராஃபிக் பொறுத்தது. வருகைக்கு நன்றி

    ReplyDelete

  37. @ வே. நடனசபாபதி. இன்னும் என்னவெல்லாமோ ஆசைகள். முடிந்ததை அனுபவிப்போம். வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  38. @ இராஜராஜேஸ்வரி.
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேடம்

    ReplyDelete