Friday, August 14, 2015

விடுதி வாழ்க்கை


                         விடுதி வாழ்க்கை.
                         ----------------------------


இவன் எச் ஏ எல்-லில் பயிற்சிக்காகச் சேர்ந்து மேற்பயிற்சிக்காக அம்பர் நாத் சென்றது குறித்து எழுதி இருக்கிறான் அந்த அம்பர்நாதில் பயிற்சி பெற்ற பலரும் உலகின் எல்லாப் பகுதிகளிலும் இருக்கிறார்கள் சென்னை புனே ஜபல்பூர் போன்ற இடங்களில் அம்பர்நாத் ட்ரெயினிங் ஸ்கூலில் பயின்றவர் அவ்வப்போது கூடுகின்றனர்.அடுத்து பெங்களூருவில் இவ்விதம் ஒன்று கூட ஒரு எண்ணம் வந்திருக்கிறது. 2016-ம் ஆண்டு ஃபெப்ருவரியில் கூடலாம் என்னும் ஐடியா உருவாகி இருக்கும் இந்நேரம் இவனுக்கு அங்கு பயிற்சியில் இருந்த போது  ஏற்பட்ட அனுபவங்கள் நினைவுகளாய் வருகிறது.

விடுதி வாழ்க்கை என்று கூறினாலும் எல்லோருக்கும் அனுபவங்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. .மூன்று தலை முறையினரின் விடுதி வாழ்க்கை அனுபவங்களைக் உணர்ந்தும் கண்டும் கேட்டும் ஆயிற்று.. இவனுக்கு படிப்பும் பயிற்சியும் கலந்த வாழ்வுக்கு ஒரு வாய்ப்பு வந்தது. கிடைத்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தும் முன் அநேக கேள்விகள் , வாழ்வாதாரத்தை நிச்சயிப்பவை, எழுந்தது. இவன் தேர்வு செய்யப் பட்ட நேரம் இவன் தந்தை காலமாயிருந்த நேரம். இவனை நம்பி கலம், மரக்கால், படி, ஆழாக்கு என்று பலரும் பின்னால் நின்றிருந்த சமயம்.அவர்கள் கூடவே இருந்து படிப்பையும் பயிற்சியையும் தியாகம் செய்வதா, இல்லை படிப்புக்கும் பயிற்சிக்கும் செல்வதன் மூலம் ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கனவு காண்பதா என்ற மில்லியன் டாலர் கேள்வி..எழுந்த அந்த நேரமும் சந்தர்ப்பமும் உணர்ந்திருந்தால்தான் விளங்கும். மனசுக்கும் அறிவுக்கும் நடந்த பலப் பரீட்சையில் அதிசயமாக அறிவு வெற்றி பெற்று உற்றாரின் பிரிவை எதிர்கொள்ளத் துணிந்தான்

நினைவுகள் 55 வருடங்கள் பின்னோக்கிச் செல்கிறது..பம்பாய்க்கு அருகே உள்ள அம்பர்நாத், பயிற்சியும் படிப்பும் தொடர நிர்ணயிக்கப்பட்ட இடம். பெங்களூரிலிருந்து HAL-மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 50- பேர் குழுவில், இவனும் ஒருவன். ஹாஸ்டல் வாழ்க்கையைப் பற்றி எழுத இருப்பதால், மற்ற விஷயங்கள் உரிமை இழக்கின்றன
அம்பர்நாத் மெஷின் டூல் ப்ரோடோடைப் ஃபாக்டரி ராணுவ அமைச்சகத்தின் கீழ் வருவது. அதை ஒட்டிய பயிற்சிப் பள்ளியில் அகில இந்தியாவிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கிருந்தவர்களைவிட இவன் குழுவில் இருந்தவர்கள் தங்களை ஒரு படி மேலானவர்களாகக் கருதினர். இவர்களுடைய பயிற்சி ஒரு மேற்பார்வையாளர்க்குரியது.அவர்கள் தொழிலாளியாக அமர்த்தப்பட தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். இவர்களில் பெரும்பாலோர் தென் இந்தியர்கள்.அவர்கள் அகில இந்தியப் பிரதிநிதிகள். ஒட்டு மொத்தத்தில் விடுதியில் இருந்தவர்கள் ஒரு மினி இந்தியாவைப் பிரதிபலிப்பவர்களாக இருந்தனர். ஐந்து இரண்டு மாடிக் கட்டிடங்களைக் கொண்ட விடுதியில், ஒரு கட்டிடத்தில் சுமார் 100- பேர் வீதம் மொத்தம் 500- பேர். ஒவ்வொரு தளத்திலும் நான்கு டார்மிடரிகள். ஒவ்வொன்றும் 12- பேரைத் தங்க வைக்கக் கூடியது. ஒவ்வொருவருக்கும் ஒரு கயிற்றுக் கட்டில், ஒரு நாற்காலி , ஒரு சைட் ராக்-கம் மேசை.தளத்தில் இரண்டு பகுதிகளிலும் பொதுவான கழிப்பிட மற்றும் குளியல் வசதிகள். ஒரு பொதுவான பெரிய சாப்பாட்டு ஹால்.உடற்பயிற்சிக்கான எல்லா வசதிகளும் கொண்ட மைதானமும், எல்லா இண்டோர் விளையாட்டு வசதிகள் கொண்ட லாஹூர் ஷெட், என்ற ஒரு கட்டமைப்பும்  இருந்தது. 5- நிமிட நடையில் பயிற்சிப் பள்ளி இருந்தது. இவர்களது இருப்பிட வசதிக்கும் உணவுக்கும் HAL நிறுவனம் இவர்களது ஸ்டைபெண்ட் ல் இருந்து மாதம் ரூபாய் 50- பிடித்து அதை பயிற்சிப் பள்ளிக்காக செலுத்தினர். அவர்களுடைய பயிற்சி மாணவர்களுக்கு அனைத்தும் இலவசம். இதுவும் இவர்கள் தங்களைப் பற்றி உயர்வாக எண்ணிக்கொள்ள ஒரு காரணம். இந்த எண்ணத்தின் தாக்கம் இவர்கள் அங்கு போய்ச் சேர்ந்த ஓரிரு மாதங்களில் வெளிப்பட்டது..பெரும்பாலும் தென் இந்தியர்களான இவர்களுக்கு  தினமும் சப்பாத்தி, பூரி என்று சாப்பிடுவது கடினமாகத் தெரிய தென் இந்திய சாப்பாடு வேண்டி உணவைப் புறக்கணிக்கும் ஒரு போராட்டம் உருவெடுத்தது. என்னவெல்லாமோ சமாதானம் கூறினாலும் போராட்டம் நிறுத்தப் படவில்லை. நாங்கள் ஒன்றும் போட்டதை இலவசமாகத் தின்பதில்லை.பணம் கொடுக்கிறோம். அரிசி சாப்பாடு, சாம்பார், ரசம் எல்லாம் கொடுக்கப் பட வேண்டும் என்று கூப்பாடு போட்டனர். அங்கிருந்தவர்களுக்கு தென் இந்திய உணவு சமைக்கத் தெரியாது என்று கூறப்பட்டது. கற்றுக் கொடுக்கிறோம் என்று இவர்கள் முன்வர, சாம்பார், ரசம் என்ற பெயரில் ஏதோ சமைத்துப் பறிமாறப்பட்டு, போராட்டம் கை விடப் பட்டது.
பயிற்சியில் இருப்பவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவு இந்தக் காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாது. காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்யச் செல்பவர்கள் ஒரு முட்டையும் ஒரு பெரிய டம்ளர் பாலும் அருந்திச் செல்வர்.காலை உணவாக, டீயுடன் பூரி கிழங்கு அல்லது ரொட்டி கொடுக்கப் படும். அளவு ஏதும் கிடையாது. பூரிகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து, சாண் உயரம் ,முழ உயரம் என்று அளந்து, எடுத்துச் சென்று உண்பதைப் பார்த்து இவனுக்கு ஆச்சரியம். இவனுக்கோ நான்கு அல்லது ஐந்து பூரிகள் சாப்பிடுவதே பெரும்பாடு. காலை பத்து மணி அளவில் கணக்கில்லாத தேவைப்பட்ட அளவு பிஸ்கட் ( க்ரீம் உட்பட ) தேனீருடன். மதிய உணவில் சப்பாத்தி சப்ஜி, ஒரு ஸ்வீட், அசைவ உணவு உண்பவர்களுக்கு அதுவும் உண்டு. மதியம் மூன்று மணிக்கு மீண்டும் பிஸ்கட் ,டீ.மாலை ஆறு மணிக்குத் தேனீருடன் பஜ்ஜியோ பகோடாவோ. இரவு மதியம் போல் உணவு.

சமைக்கப் படும் உணவுகள் முதலில் அருகிலிருந்த ராணுவ ஆஸ்பத்திரியில் சோதிக்கப் பட்டு, சமச் சீர் உணவுதான் என்று உறுதி செய்யப்பட்டு பிறகுதான் வழங்கப் படும்.

இவ்வளவு விரிவாக உணவு பற்றிக் குறிப்பிடக் காரணம் நம் மக்களின் மனோபாவத்தை உணர்ந்து கொள்ளக் கிடைத்த வாய்ப்பை விளக்கத்தான். பயிற்சிக்கு வந்தவர்களில் பெரும்பாலோர் அடிமட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்.அவர்களுக்கு இந்த மாதிரியான சத்தான, அளவில்லாத உணவு கனவு கூடக் காண முடியாதது. நிர்வாகத்தில் சில மாதங்கள் கழிந்த பிறகு செலவு கூடிப் போவதால், எண்ணற்ற பிஸ்கட்கள் என்பதை மாற்றி தேநீருடன் இரண்டு பிஸ்கட்கள் என்று குறைத்தார்கள். கேட்கவா வேண்டும் .மீண்டும் போராட்டம். இந்த முறை சாப்பாட்டுச் செலவுக்கு ஒதுக்கப் பட்டுள்ள நிதியில் செலவு செய்ய ,பயிற்சியில் உள்ளவர்களே தேர்ந்தெடுக்கப் பட்டதோடு, அது சரிவர நடை பெறுகிறதா என்று கண்காணிக்க பிரதி தினமும் ஒருவர் நியமிக்கப் படுவார் என்றும் ஏற்றுக்கொள்ளப் பட்டது. அதன் விளைவு , தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பெட்டியில் பிஸ்கட் பாக்கெட்கள் அடுக்கப் பட்டன. பகிர்ந்துண்ணும் பிஸ்கட்களின் எண்ணிக்கை குறைந்தது , ஒரு வேளை ஊழலுக்கு வித்திட்டது என்று கூறலாமா.?
சில நாட்களில் மாலை நேரங்களில் அறிவிக்கப் படாமலேயே பாட்டுப் போட்டிகள் தொடங்கி விடும். ஒரு கட்டிடத்திலிருப்பவர் யாராவது உரக்கப் பாட ஆரம்பிக்க எதிர் கட்டிடத்திலிருந்து எதிர் பாட்டு வந்து சுவையான அந்தாக்ஷரியாக மாறிவிடும். பெரும்பாலான நேரங்களில் இவனுடைய கட்டிடத்தில் இருப்பவர் வெற்றி வாகை, சூடுவர். ஏனென்றால் இங்கிருப்பவர்கள் ஹிந்தி, தமிழ் கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் பாடுவார்கள். மற்றவர்களிடமிருந்து பெரும்பாலும் ஹிந்தியில் மட்டுமே எதிர்பாட்டு வரும்.

எல்லா விளையாட்டுகளுக்கும் வசதியான லாஹூர் ஷெட் ஒரு முறை தீயில் எரிந்தது. சாதாரணமாக விளையாட வராதவர்கள் அன்று வந்து சிகரெட் புகைத்து துண்டுகளை எங்கோ போட இரவு ஷெட் கொழுந்து விட்டு எரிந்தது. யாரையும் குறிப்பிட்டுக் குறை கூற முடியாத நிலையில், , மீண்டும் ஒரு விளையாட்டு அரங்கம் உருவாக சில காலமாயிற்று. டேபிள் டென்னிஸ் என்னும் விளையாட்டை இவன் அங்கு கற்று , ஓரளவு தேர்ச்சி பெற்று, போட்டியில் பரிசும் பெற்றிருக்கிறான்.

ஒரு முறை நண்பர்கள் ஆர்வமாக எதையோ பார்த்துக் கொண்டிருக்க, என்னவென்று கேட்ட போது, “ பைரனின் கவிதைகள் என்று எதையோ காட்டினர். படித்துப் பார்க்கும் போது, அவை உடலுறவை குறித்த பச்சையான செய்திகள் கவி நடையில் ஆங்கிலத்தில் எழுதப் பட்டவை என்று தெரிந்தது..இது நாள் வரை அதன் மூலம் என்ன, உண்மையிலேயே பைரனின் கவிதைகளா என்று இவனுக்குத் தெரியாது.

இன்னொரு முறை சில நண்பர்கள் சில ஃபோட்டோக்களை கூடி அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவற்றைக் காண அவர்கள் சொன்ன ஒரே விதி, அவற்றை நின்று கொண்டுதான் பார்க்க வேண்டும். பலரும் ஆர்வத்துடன் விதிக்குட்பட்டு படங்களைப் பார்த்துக் கொண்டிருக்க, கூடியிருந்தவர்கள் நிற்பவனின் முன் பக்கத்தை நோட்ட மிட்டுக் கொண்டிருப்பார்கள். நிற்பவன் ஒரு சில வினாடிகளில் உட்கார்ந்து விடுவான். !


சிகரெட் புகைப்பதில் போட்டி நடக்க இவன் அதில் கலந்து கொண்டு , மறுநாள் உதடெல்லாம் வீங்கி, வார்டனிடம் டோஸ் வாங்கியது மறக்க முடியாது.

அடுத்திருந்த உல்லாஸ் நகருக்கு நடந்து சென்று, சிந்திப் பெண்களை சைட் அடிக்கும் வாடிக்கையும் உண்டு

ஒரு வருடம் தட களப் போட்டியில் இவன் கலந்து கொண்டு, உயரந் தாண்டுதலில் முதல் பரிசு வென்றபோது, பலராலும் தோள் மேலேற்றிச் செல்லப் பட்டான். ஏதடா, திடீரென்று இவ்வளவு மதிப்பு என்று பார்க்கும்போது, இவன் வெற்றி பெற்றதால் இன்னொரு வீரன் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள முடிந்தது தெரிந்தது

ஹோலி பண்டிகையை அவர்கள் கொண்டாடுவது தென் இந்தியர்கள் பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தும். அதிகாலையில் எழுந்து எல்லோரையும் எழுப்பி முகத்தில் சாயம் பூசி தெருவெங்கும் கலாட்டாவுடன் உலா வருவார்கள். அடுத்திருந்த சிவன் கோவில் பழமை வாய்ந்தது. சிவராத்திரி வெகு விசேஷம். சிவ லிங்கம்  பிரதிஷ்டை செய்யப்பட்ட இடம் தரையின் சற்று அடியில் ஆழத்தில் இருக்கும். எல்லோரும் லிங்கத்தை தொட்டு அபிஷேகம் செய்யலாம். ஊரே திரண்டு பார்க்கக் கண் கொள்ளாக் காட்சியாய் இருக்கும்.

அங்கிருந்தபோது ஆங்கிலத்தில் ஒரு கையெழுத்துப் பத்திரிகை கொண்டு வரப்பட்டது. அழகான கையெழுத்துடன் பிரமாதமான படங்களுடன், விடுதி வாசிகளாலேயே எழுதப் பட்டு இர்ண்டு மாதத்துக்கு ஒன்றாக வெளியிடப்பட்டு ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றது.

.ஞாயிற்றுக் கிழமைகளில் எல்லோருக்கும் பொதுவான ஒரு வேலை உண்டு. அது கயிற்றுக் கட்டிலில் இருக்கும் மூட்டைப் பூச்சிகளை அகற்றுவது ஆகும். மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க ஒரு வழி என்று விளம்பரம் செய்யப் பட்டு,, லூதியானாவிலிருந்து வரவழைக்கப்பட்ட பார்சலில் ஒரு குப்பியும் , ஒரு சிறிய ஹாமரும், ஒரு கல் தட்டும் இருந்தது. கூடவே ஒரு செய்முறைத் தாளில் விளக்கமும் இருந்தது. மூட்டைப் பூச்சியைப் பிடித்து தட்டில் வைத்து ஹாமரால் கொன்று குப்பியில் சிறிது நீர் விட்டு அதில் போட்டால் மூட்டைப் பூச்சி போச்சு போயே போச்சு.!

விடுதியில் இருந்த போது அங்கே இரண்டு மூன்று குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து அதில் வந்த பணம் கொண்டு ஊருக்குப் போகவும் சில்லறைத் தேவைகளையும் இவன் கவனித்துக் கொண்டான்.

விடுதியில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த மக்களிடம் பழகும் வாய்ப்பு ஒரு நல்ல படிப்பினையாக இருந்தது. கடைசியாக ஒன்று சொல்ல வேண்டும். இந்தியப் பிரிவினையின் போது அகதிகளாய் நம் நாட்டிலேயே பல இடங்களில் குடி வைக்கப் பட்ட சிந்திகள் நல்ல உழைப் பாளிகள் நல்ல வியாபாரிகள். ஏதாவது பொருளில் MADE IN USA  என்று பார்க்க நேர்ந்தால் அது உல்லாஸ்நகர் சிந்தி அசோசியேஷனால் தயாரிக்கப் பட்டிருக்கலாம் கவனிக்கவும்.!
பயிற்சிக் கூடத்து நினைவுகளும் வராமல் இல்லை. தொழிற்கூடப் பயிற்சியில் பலவிதமான மெஷின்களில் பயிற்சி பெற்று தேர்ச்சிபெறவாய்ப்பளிக்கப் பட்டது. அதில் ஒரு பயிற்சி ஆசிரியர் யாராவது ஏதாவது சிறு பிழை செய்தாலுமே அனைவரையும் CALL ALL”என்று கூட்டி தவறைச்சுட்டிக்காட்டி பாடம் எடுக்க ஆரம்பித்து விடுவார். இன்னொரு ஆசிரியர் தமிழர். ஆங்கில மொழிமீது காதலே கொண்டவர். அறிமுகமே இல்லாதவருடன் கூட சகஜமாக ஒரு ஹல்லோ சொல்லிப் பேச ஆரம்பிக்கலாம் என்று சிலாகிப்பார், தொழிற்கூடப்பயிற்சி தவிர தீயரிடிகல் வகுப்புகளும் உண்டு. அதில் ஒரு ஆசிரியர் அடிக்கடி பேசும் போது “நான் இங்கிலாந்தில் இருந்தபோது “ என்று நீட்டி முழக்குவார். இவனுடன் இருந்த சிலர் பதிலுக்கு “ நாங்கள் பெங்களூரில் இருந்தபோது “என்று கூறி மடக்குவார்கள்.

அது சரி. 2016-ல் ஒன்று கூட இருக்கும் எத்தனை பேருக்கு ஒருவரை ஒருவர் நினைவு படுத்த முடியும்?அவர்களில் ஒருவரின் பேரன் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடமிருந்து பரிசும் பாராட்டும் பெற்றவனாம்,....!
                      -----------------------                         :      .               .



.






 

38 comments:

  1. பழைய்ய்ய நண்பர்களைச் சந்திக்கப் போகும் சந்தோஷம் நினைவுகளின் மோதலில் தெரிகிறது.

    இனிமையான நினைவுகள்.

    ReplyDelete
  2. எப்போதுமே பழைய நினைவுகளை அசைபோடுவதே ஒரு சுகானுபவம்தான். அதனால் தான் நான் அடிக்கடி ‘நினைத்துப்பார்க்கிறேன்’ ! தங்களுடைய பழைய அனுபவங்களை எழுதுங்கள். காத்திருக்கிறோம் படிக்க.

    2016 பிப்ரவரியில் பெங்களூருவில் கூடும் நண்பர்களின் கூட்டம் பற்றி விரிவான பதிவிடுவீர்கள் என எண்ணுகிறேன்.

    ReplyDelete
  3. நான் முதுகலை பயிலும்போது ட்யூட்டோரியல் காலேஜில் பாடம் எடுத்து பணம் சம்பாதித்திருக்கிறேன்.

    ReplyDelete

  4. பழமையான நினைவுகள் இனிமையானதே ஐயா அது மீண்டும் யாருக்குமே கிடைக்காது...

    ReplyDelete
  5. பழமை என்றுமே புதுமைதான். உங்களின் எழுத்திற்காகக் காத்திருககிறோம்.

    ReplyDelete

  6. @ ஸ்ரீ ராம்
    என்னத்த பழைய நண்பர்களை சந்திக்க. எல்லோரும் வயதாகி யாரும் யாரையும் நினைவில் கொள்ள இயலாமல் தவிக்கப் போகிறோம் .

    ReplyDelete

  7. @ வே.நடனசபாபதி
    அதுதான் என் பெரும்பாலான பதிவுகளில் வருகிற்தே ஒரு மாற்றதுக்கு 2016-க்கு முன்னாலேயே எப்படி நடக்கும் என்று வேண்டுமானால் கற்பனை செய்து பார்க்கலாம்

    ReplyDelete

  8. @ டாக்டர் கந்தசாமி
    நான் சிறார்களுக்கு ட்யூஷன் எடுத்தது என் பணப் பற்றாக் குறையைக் குறைக்க. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  9. @ கில்லர்ஜீ
    பழைய நினைவுகள் நினைத்ஹுப் பார்க்க சுவைக்கலாம் . மீண்டும் அனுபவிக்க என்றால்........

    ReplyDelete

  10. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    பதிவுகள் எழுத கற்பனைகள் வராதபோது பழையநினைவுகள் கை கொடுக்கலாம் . வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  11. பழைய நினைவுகள் அருமை. என் கண்வரிடம் உங்களின் விடுதி அனுபவம் சொன்னதும் அவர்களும் அவர்கள் விடுதி அனுபவங்களையும், (முனைவர் பட்டம் வாங்கியது வரை ) சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
    நினைத்து பார்ப்பது ஒரு சுகம் தான்.

    ReplyDelete
  12. சிறப்பான நினைவலைகள்! நன்றி!

    ReplyDelete
  13. நினைவுகள் என்றுமே இனிமையானவை
    அதுவும் பழையகாலத்து நண்பர்களைச்
    சந்திக்கப் போகிறோம் என்னும் பொழுது
    ஏற்படும் மகிழ்ச்சிஇருக்கிறதே
    அதை வெளிப்படுத்த வார்த்தைகள் போதாது

    ReplyDelete
  14. இனிமையான பழைய நினைவுகள்.

    ReplyDelete

  15. @ கோமதி அரசு
    அரசுக்கு ஆட்சேபணை இல்லை என்றால் அந்த அனுபவங்களைப் பதிவாக்குங்களேன் நன்றி.

    ReplyDelete

  16. @ தளிர் சுரேஷ்
    வந்து ரசித்ததற்கு நன்றி சார்

    ReplyDelete

  17. @ எஸ்.பி. செந்தில்குமார்
    நன்றி . உங்கள் தளத்துக்கும் வந்திருக்கிறேன்

    ReplyDelete

  18. @ கரந்தை ஜெயக் குமார்
    பழைய காலத்து நண்பர்களை சந்திக்கப் போகும் மகிழ்ச்சியில் எழுதியது அல்ல. எனது அனுபவங்களை அசை போட்டுக் கொண்டிருக்கிறேன் பழையநண்பர்களில் ஒருசிலருடந்தான் தொடர்பு. மற்றபடி யார் யாரென்றே தெரியாத நிலை. அவர்களுக்கும் அதுபோல்தானே இருக்கும் . வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  19. @ கீதா சாம்பசிவம்
    வருகைக்கு நன்றி மேம்.

    ReplyDelete
  20. நினைவுகள்.....

    விடுதி வாழ்க்கை அமையவில்லை. கல்லூரி வரை வீட்டிலிருந்து தான் சென்று வந்தேன். சில சமயங்களில் விடுதி வாழ்க்கை நமக்கு வாய்க்கவில்லையே என்று நினைத்ததுண்டு!

    ReplyDelete
  21. அற்புதமாக பழைய நினைவுகளைப்
    பதிவு செய்துள்ளீர்கள்
    2016 சந்திப்பு நிச்சயம் உங்களுக்கு
    அதிக மகிழ்வளிக்கும்
    எங்களுக்கும் அதிக அற்புதப்
    பதிவுகளைத் தரும் என்பதால்
    நாங்களும் சந்திப்பு சிறப்பாக நடைபெற
    ஆவலுடன் இருக்கிறோம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

  22. @ வெங்கட் நாகராஜ்
    மூன்று தலைமுறையிலும் விடுதி வாழ்க்கை இருந்திருக்கிறது எனது மகனது பேரனது என்று. என் மகனும் நானும் விடுதிவாழ்க்கையில் நல்ல அனுபவம் கொண்டவர்கள். பேரனுக்கு ருசிக்கவில்லை. அது ஒரு அனுபவம் என் வாழ்க்கையில் ஒரு மினி இந்தியாவில் இருந்தமாதிரி உணர்வு. எல்லா மாநிலத்தவரும் எல்லா மொழியினரும் வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  23. @ ரமணி
    2016-ல் சந்திக்கப் போகும் நண்பர்களில் வெகு சிலருடந்தான் தொடர்பு. புது முகங்களாகவே இருக்கும்வேறு வேறு பாட்ச் சில் பயின்றவர்கள். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  24. விடுதி வாழ்க்கை பற்றிய அனுபவம் எனக்குத் துளியும் கிடையாது. கதைகளிலும் திரைப்படங்களிலும் மட்டுமே பார்த்திருக்கிறேன். தங்களுடைய அனுபவங்கள் அதுவும் அந்தக்கால அனுபவங்கள் அனைத்தையும் ரசித்தேன். மூட்டைப்பூச்சியைக் கொல்ல வரவழைக்கப்பட்ட உபகரணத்தை என்னவென்று சொல்வது? அந்த வயதுக்கேயுரிய பல ரசமான ரசனையான அனுபவங்களின் தொகுப்பு. சந்திப்பு இனிதே அமைய வாழ்த்துகள்.

    ReplyDelete

  25. @ கீதமஞ்சரி
    சந்திப்பு என்பதே எழுதுவதற்கான சாக்குதானெ. அந்தக் காலத்தில் என்னுடன் இருந்தவர்களது நினைவுகள் இதுபோல் இருக்கும் என்று சொல்ல முடியாது. சந்திக்கும் போது கேட்டுப்பார்க்க வேண்டும் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  26. இனிமையான நினைவுகள் ஐயா...

    ReplyDelete
  27. Visit : http://geethamanjari.blogspot.in/2015/08/blog-post_16.html

    ReplyDelete
  28. முதன்முறையாக உங்கள் பதிவுகளை இன்று பார்த்தேன். அந்தக்கால அனுபவங்களில் ஆழ்ந்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. அவற்றை நன்றாக எழுதியிருக்கிறீர்கள். அற்பதுகளின் அம்பர்நாத்தைக் கண்முன்னே கொண்டுவந்திருக்கிறீர்கள்.
    அது சரி, சைட் அடித்த சிந்திப்பெண்களில் யார் முகமாவது நினைவில் இன்னும் உள்ளதா!
    -ஏகாந்தன்
    http://aekaanthan.wordpress.com

    ReplyDelete
  29. எல்லாம் பசுமை நிறைந்த நினைவுகள்! இன்னும் 6 மாசம்தானே இருக்கு! போய் வந்தபின் சொல்லுங்கள் எத்தனை பேர் வந்தார்கள்? யார்யாருக்கு உங்களை நினைவிருக்குன்னு!

    ReplyDelete

  30. @ ஏகாந்தன்
    முதல் வருகைக்கு நன்றி சார். என் பதிவுகள் பலதரப் பட்டவை. அவற்றில் அனுபவப் பதிவுகளும் உண்டு. எல்லோருக்கும் அவரவர் விருப்பப்படி பதிவுகள் இருக்கும்

    ReplyDelete

  31. @ துளசி கோபால்.
    இந்த மாதிரி ஒரு கூடலுக்குப் போய் வந்த அனுபவம் இருக்கிறது. என்ன செய்ய வருபவர்கள் எழுபது வயது தாண்டிய கிழவர்களாகவே இருப்பார்கள். என்னுடன் டேபிள் டென்னிஸ் போட்டியில் பார்ட்னராக இருந்தவருக்கே என்னை நினைவிருக்கவில்லை. பார்ப்போம் . மேலூம் நீண்ட நாள் திட்டங்கள் இப்போது இடுவது இல்லை.வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete
  32. பதிலுக்கு நன்றி. உங்கள் பதிவுகளை அவ்வப்போது பார்க்க ஆரம்பித்துள்ளேன்.

    ReplyDelete

  33. @ ஏகாந்தன்
    பதிவுகளைப் பார்க்கும் போது பார்த்த சுவடுகளை இட்டுச் சென்றால் மகிழ்ச்சியாய் இருக்கும் நன்றி.

    ReplyDelete
  34. சுவாரசியமான பதிவு. நிறைய விவரங்கள்.. ரசித்துப் படித்தேன்.
    சிந்திப் பெண்கள் பலர் மிக அழகானவர்கள். ம்ம்ம்.. நினைவுகளைக் கிளறியது.
    உணவுப் போராட்டம் அப்பவே தொடங்கிவிட்டதா? என்னவோ தெரியவில்லை. இந்திய 'பயிற்சி முகாம்'களில் பெரும்பாலும் வட இந்திய உணவுகளே வழங்கப்பட்டன. இப்பல்லாம் எங்கேயும் இட்லி சாம்பாராமே?

    ReplyDelete

  35. @ அப்பாதுரை
    இப்போதெல்லாம் ஹோட்டல்களில் பார்த்தால் ஆர்டர் செய்வது பெரும்பாலும் வட இந்திய உணவுகளே. அது ஒரு ஸ்டேடஸ் சிம்பல் ஆகிவிட்டது. சிந்திப் பெண்களைப் பற்றிய எழுத்து நினைவுகளைக் கிளறினால் சுவாரசியமாகத்தானே இருக்கும் .வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete
  36. இட்லி சாம்பார் 'ரோடி தால்' போல் நேஷனல் உணவாகிவிட்டதாகப் படித்தேன்.

    ReplyDelete
  37. சமீபத்தில் டார்ஜிலிங் சென்று வந்த என் நண்பன் அங்கே இட்லி சாம்பார் கிடைப்பதாகச் சொல்லிப் பெருமைபட்டான். (ஆனால், சாம்பார் சகிக்கவில்லையாம்)

    ReplyDelete
  38. @ அப்பாதுரை
    1979-ல் டெல்லி சென்றிருந்தபோது நண்பர் ஒருவரொடன் ஒரு நாள் குடும்பத்துடன் தங்கினோம். அப்போது ஒரு தென் இந்திய ஓட்டலுக்குச் சென்று இட்லி ஆர்டர் செய்தோம் . கடை முதலாளி சத்தமாக மீந்து போன வடைகளை சாம்பாரில் போட்டு சாம்பார் வடையாக்கக் கூறினார். அது முதல் அங்கே வடை சாப்பிடவே தயக்கம்தான் இட்லியை விட தோசையே பிரபலமாகி விட்டது என்றுதானே கேள்விப்பட்டேன்

    ReplyDelete