Saturday, October 31, 2020

வெங்கடேச சுப்ரபாதம் தமிழில்

சுப்ரபாதம் தமிழில் 

1. வந்துதித்தாய் ராமா நீ கோசலை தன் திருமகனாய்
சிந்து மொழிச் சிறுகாலை திசையெங்கும் புலர்கிறது
மந்திரங்கள் வாய்மொழிந்து வந்தனைகள் புரிந்தருளச்
செந்திருக்கண் அருள்பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய் (2)

2. எழுந்தருள்வாய் வெண்கருடக் கொடியுடையாய் எழுந்தருள்வாய்

எழுந்தருள்வாய் திருக்கமலை விழைமார்பா எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் மூவுலகும் காத்தருள எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் கோவிந்தா வேங்கடவா எழுந்தருள்வாய் (2)

3. போர்புரிந்து மதுகைடபர் தமையழித்தான் உளத்தொளியே

பாரனைத்தும் காத்தளிக்கும் பேரழகின் அருள் உருவே
பாரகத்தார் விழைந்தேத்தும் சீர்சீலப் பெருந்தாயே
கார்வண்ண வேங்கடத்தான் திருத்தேவி எழுந்தருள்வாய் (2)

4. திங்கள் மொழி திருமுகத்தில் பொங்கும் அருளி புரிபவளே

இந்துகலை வாணியுடன் இந்திராணி அம்பிகையாம்
மங்கையர்கள் தொழுதேத்தும் மாண்புடைய தனித்தலைவி
செங்கமல வேங்கடத்தான் திருத்தேவி எழுந்தருள்வாய்

5. தொலைவிடத்தும் பலவிடத்தும் சுழன்று திரி ஏழ்முனிவர்

சலித்தறியாத் தவமியற்றிச் சந்தியா வந்தனம் முடித்து
நிலைபெறு நின் புகழ் சொல்லி நின்பாதம் சேவித்து
மலையடைந்து காத்துளர் காண் வேங்கடவா எழுந்தருள்வாய்

6. ஆங்கந்த பிரம்மாவும் அறுமுகனும் தேவர்களும்

ஓங்கி உலகங்களந்த உயர் கதைகள் பாடுகின்றார்
ஈங்கிந்த வியாழமுனி பஞ்சாங்கம் ஓதுகின்றார்
தீங்கவிகள் செவிமடுக்க வேங்கடவா எழுந்தருள்வாய்

7. நன் கமுகு தென்னைகளில் பாளை மணம் மிகுந்தனவால்

பல வண்ண மொட்டுகள் தாம் பனித்தேனோடு அலர்ந்தனவால்
புல்லரிக்கும் மெல்லீரப் பூந்தென்றல் தவழ்கிறதால்
எல்லாமும் அணிந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்

8. நின் திருப்பேர் பல கேட்டு நின்னடியார் மெய்மறக்க

நின் கோயில் பைங்கிளிகள் தீங்கனியாம் அமுதருந்தி
நின் திருப்பேர் ஆயிரத்தால் நெடும் புகழை விளக்கிடுமாய்
நின் செவியால் கேட்டருள வேங்கடவா எழுந்தருள்வாய்.

9. எவ்விடத்தும் நிலையாக நின்றறியா நாரதரும்

இவ்விடத்து()ம் பெருமைகள் தாம் ஈர்ப்பதனால் நிலைகொண்டார்
செவ்விய தன் வீணையில் உன் திருச் சரிதை மீட்டுகின்றார்
அவ்விசையை கேட்டருள வேங்கடவா எழுந்தருள்வாய்

10. வெண்கமல ஒண்மலர்கள் விளைத்த மது மிக அருந்தி

கண் மயங்கி மலர் முகட்டுள் காலைவரை சிறைகிடந்த
வண்டினங்கள் ரீங்கரித்தே வந்தனவா நினைத் தொழவே
தண்ணருளால் சேவைதர வேங்கடவா எழுந்தருள்வாய்

11. தனதனங்கள் நிமிர்ந்த செயற் கைவளைகள் ஒலியெழுப்ப

மன மகிழ்ந்து தயிர்கடையும் மத்தொலியும் திசை ஒலியும்
சிறந்தனபோல் எதிர் ஒலிக்க நெடுந்துதிகள் முழங்கிடுமால்
நினைத்துவிதாம் கேட்டிலையோ வேங்கடவா எழுந்தருள்வாய்

12. பெருமாள் நின் திருநிறத்தை பெற்றுளதாய் குவளை சொலும்

கருங்குவளைக் காட்டிடையே களித்துலவும் வண்டுகள் தாம்
பெருமாள் நின் திருநிறத்தை பெற்றுளம் யாம் பெரிதெனுமே
வருதரும் பேர் பகை தவிர்க்க வேங்கடவா எழுந்தருள்வாய்

13. வேண்டுபவர் வேண்டுவன விழைந்தருளும் பெருவரதா

மாண்புடையாள் மலரமர்ந்தாள் மகிழ்ந்துறையும் திருமார்பா
ஈண்டுலகம் அனைத்தினொடும் இயைந்தமைந்த உறவுளயோய்
காண்பரிய கருணையனே வேங்கடவா எழுந்தருள்வாய் (2)

14. மின் தவழும் சடையானும் பிரம்மாவும் சனந்தனரும்

இன்றுனது கோலேறி திருத்தீர்த்தம் தலை மூழ்கி
நின்னருளைப் பெற விழைந்தே நெடுவாயில் நிலைநின்றார்
நின்றவர்க்கும் அருள் பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய்

15. திருமலையாய் சேடத்தாய் கருடத்தாய் வேங்கடத்தாய்

திரு நாராயண மலையாய் விருடபத்தாய் இருடத்தாய்
பெருமானே எனப்புகழ்ந்து தேவரெலாம் திரண்டனர்காண்
திரண்டுளரைப் புரந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்

16. அருளிடு நின் செயல் முடிப்பான் அட்டதிக்கு பாலர்களாம்

பெருநெறிய அரன் இந்திரன், அக்னியான் பேரியமன்
வருணனொடு நைருதியான் வாயுவோடு குபேரனும் நின்
திருவடிக்கு காத்துளரால் வேங்கடவா எழுதருள்வாய்

17. திருமலைவாழ் பெருமானே திருஉலாவுக்கு எழுகையில் நின்

கருட நடை சிம்ம நடை நாக நடை முதலாய
திருநடைகள் சிறப்பு()ணர்ந்து திருத்தமுறக் கற்பதற்கு
கருட சிம்ம நாகருளார் வேங்கடவா எழுந்தருள்வாய்

18. சூரியனார் சந்திரனார் செவ்வாயாம் புதன் வியாழன்

சீர்மிகுந்த சுக்கிரனார் சனி ராகு கேது இவர்கள்
ஆர்வமுடன் நின் தொண்டர்க்கு அடித்தொண்டு புரிந்துனது
பேரருளைப் பெற நின்றார் வேங்கடவா எழுந்தருள்வாய்

19. நின் முக்தி விழையாமல் நின்னையொன்றே மிகவிழைந்து

நின் பாத தூளிகளைத் தம் தலையில் தான் தரித்தோம்
சென்றிடுவாய் கலிமுடிந்தால் இங்கிருந்தும் பரமபதம்
என்பதற்கே அஞ்சினர்காண் வேங்கடவா எழுந்தருள்வாய்

20. எண்ணரிய தவமியற்றிய இன்சொர்க்கம் முக்திபெறும்

புண்ணியர்கள் செல்வழி நின்புகழ்க் கோயில் கலசங்கள்
கண்டனரே நின் கோயில் காட்சிக்கே பிறப்பெடுப்பார்
புண்ணியனே அவர்க்கருள வேங்கடவா எழுந்தருள்வாய்

21. மண்மகளின் திருக்கேள்வா மாக்கருணை குணக் கடலே

திண்புயத்துக் கருடனுடன் நாகனுமே சரண்புகுந்தார்
எண்ணரிய தேவர்களில் ஈடு இணையில் பெருந்தேவா
மண்ணுலகோர் தனிப் புகலே வேங்கடவா எழுந்தருள்வாய்

22. பத்மநாபா புருடோத்தமா வாசுதேவா வைகுண்டா

சத்தியனே மாதவனே ஜனார்தனனே சக்ரபாணி
வத்சலனே பாரிஜாதப் பெருமலர் போல் அருள்பவனே
உத்தமனே நித்தியனே வேங்கடவா எழுந்தருள்வாய்

23. திருமகள் தன் திருஅணைப்பில் திருத்துயில் கொள் திருஅழகா

திருவிழியால் பெரு உலகில் அருள் பொழியும் பெருவரதா
திருவுடையாய் தீக்குணத்தாய் திருத்தூயாய் திருப்புகழாய்
பெருவயிரத் திருமுடியாய் வேங்கடவா எழுந்தருள்வாய்

24. மச்சநாதா கூர்மநாதா வராகநாதா நரசிம்ஹா

நச்சி வந்த வாமனனே பரசுராமா ரகுராமா
மெச்சு புகழ் பலராமா திருக்கண்ணா கல்கியனே
இச்சகத்து வைகுந்தா வேங்கடவா எழுந்தருள்வாய்

25. ஏல முது நடு லவங்க கணசார மணங்கமழும்

சீலமிகு தெய்வீகத் திருதீர்த்தம் தலை சுமந்து
ஞாலமுய்ய வேதமொழி நற்றுணர்ந்த வேதியர்கள்
கோலமிகு கோயிலுற்றார் வேங்கடவா எழுந்தருள்வாய்

26. அருணனுந்தான் வந்துதித்தான் அலர்ந்தனவால் தாமரைகள்

பெருவியப்பால் புள்ளினங்கள் பெயர்ந்தெழுந்து சிலம்பினகாண்
திருமார்பா வைணவர்கள் மங்களங்கள் நிற மொழிந்தார்
அருள் திருவே அருள்விருந்தே வேங்கடவா எழுந்தருள்வாய்

27. நாமகள்தன் நாயகனும் தேவர்களும் மங்களமாம்

காமரியைக் கண்ணாடித் தாமரைகள் சாமரங்கள்
பூமருது பொன் விளக்குப் புகழ்க் கொடிகள் ஏந்தினர்காண்
தே மருவு மலர் மார்பா வேங்கடவா எழுந்தருள்வாய்

28. திருமார்பா பெருங்குணங்கள் சிறந்தோங்கப் பொலிபவனே

பெரும்பிறவிக் கருங்கடலின் கரைபுனர்க்கும் சேர்க்கும் இணையே
ஒரு வேதத்து உட் பொருளே மயர்வு அறியா மதி நலத்தார்
திருத் தீர்ப்புக்கு உரியனே வேங்கடவா எழுந்தருள்வாய் (2)

29. விழித்து எழுந்தக் காலையில் இத்திருப்பள்ளியெழுச்சிதனை

விழைந்துணர்ந்து படிப்பவரை கேட்பவரை நினைப்பவரை
வழுத்துகின்றார் எவரவர்க்கு வரங்களொடு முக்தி தர
எழுந்தருள்வாய் எழுந்தருள்வாய் வேங்கடவா எழுந்தருள்வாய் (2)



 

 

 

 

  

30 comments:

  1. சனிக்கிழமைக் காலைக்குப் பொருத்தமான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. என் வீட்டில்எல்லாகிழமைகளிலும் சம்ஸ்கிருதத்தில் ஒலிக்கும் பாட்டு

      Delete
    2. எங்கள் வீட்டிலும்தான்!

      Delete
    3. தினமும் கேட்கும் பாட்டு மொழி புரிந்தால் நலமென்று தோன்றியதால்எழுந்தது இப்பதிவு

      Delete
  2. இங்கே இருக்கும் நீயூஜெர்ஸி பாலாஜி கோயிலில் ஒரு சுவாமி இதை மிக அருமையாக சொல்லுவார்.. அவர் குரல் மட்டுமல்ல அவர் கூட மிக கம்பீரமாக இருப்பார். மற்றவர்களை இவர் ஸ்லோகங்கள் சொல்லுவது எனக்கு பிடிக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஆனால் இப்போது அவரை காணவில்லை ஒருவேளை இந்தியாவிற்கு சென்று இருக்கலாம் என நினைக்கின்றேன்

      Delete
    2. எனக்கும் சுப்ரபாதம் கேட்கப்பிடிக்கும் ஒருமாற்றத்துக்கு தமிழில் ஒலிப்பதை பதிவாக்கி உள்ளேன்

      Delete
    3. சிலர் சொல்லக்கேட்க மிகவும் நன்றாயிருக்கும்

      Delete
  3. இந்த கோயிலில் நடக்கும் பூஜைகளை இப்போழுது ஆன்லைனில் பார்த்து கொண்டு இருக்கிறேன்,, இன்று கூட சத்தியநாராயாண பூஜை நடந்தது அதை ஆன்லைனில் ஷேர் செய்துள்ளேன்.. பேஸ்புக் கணக்கு இருந்தால் என் பக்கத்தில் இதை பார்க்கலாம்

    ReplyDelete

  4. இல்லையென்றால் இங்கே சென்று பார்க்கலாம் https://www.facebook.com/SriVenkateswaraTempleBridgewater

    ReplyDelete
    Replies
    1. நான் யூ ட்யூபில் காண்பதுதான்வழக்கம் மற்றப்டி அன்லைன்சமாச்சாரமே புரிவது கஷ்டம்

      Delete
  5. சுப்ரபாதம் தமிழில் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. ஆக்கியவர் ஆரென எழுதவேண்டாமா!

    ReplyDelete
    Replies
    1. ஆக்கியவர் செனை மாநிலக்கல்லூரி முனைவர் ச பார்த்தசாரதி என்று இணையத்தகவல்

      Delete
  6. கேட்க இனிமை...
    மற்றபடி மனிதர்க்கு என்னவிதத்தில் பயன் தரும் ஐயா...?

    ReplyDelete
    Replies
    1. தெரிந்த மொழியில் கேட்பது இன்னும் இனிமை

      Delete
  7. உங்களின் நம்பிக்கைக்கு எதிரான கருத்துரை அல்ல...

    எதையும் வித்தியாசமாக சிந்திக்கும் உங்களிடம் ஒரு கேள்வி...!

    இதை பதிவு செய்து சிந்தித்ததற்கு ஒரு சான்று... அதாவது ஒரு உறுதிப்பொருள் வேண்டும்... அது இல்லாமல் சிந்திப்பதே தவறு...! இல்லை தப்பு....!

    இதற்கும் மறுமொழியாக ஏதேனும் எனது மேற்கண்ட இந்த கருத்துரையில் சொல் எடுத்து, மறுமொழி கூறுவது குழந்தைதனம்... ! அதையே செய்க... நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தெரிந்த மொழியில் எல்லோரும் கேட்டு பயனேதாவது இருந்தால் கிடைக்கட்டுமெ என்று தான்

      Delete
  8. தங்களின் முயற்சி போற்றுதலுக்கு உரியது

    ReplyDelete
    Replies
    1. அண்மைக்காலத்தில் சில சம்ஸ்கிருத பாடல்களை தமிழில் பதிவிட்டு வருகிறேன் வருகைக்கு நன்றி சார்

      Delete
  9. இந்த தமிழ் மொழிபெயர்ப்புப் பாடலை நான் 89களிலிருந்து கேட்டிருக்கிறேன். அந்த கேசட்டும் என்னிடம் இருந்தது. அதுவும் இனிமைதான்.

    ஆனால் என்னவோ, மொழிபெயர்ப்புப் பாடலில் அந்த சாந்நித்தியம் குறைவதாகத் தோன்றுவது என்னுடைய குறைந்த அறிவினால்தான் என நினைக்கிறேனோ?

    ReplyDelete
    Replies
    1. முதலில் சாந்நித்தியம் என்றால் என்னமனதை ன்னவோ செய்ய வைப்பது என்று புரிந்து கொள்ளலாமா தெரியட யத்ச மொழியில் கேட்டு பழகிய நமக்கு நம் மொழொயில்கேட்கும்போது நிறைவாய் இருக்கவேண்டும்அல்லவா

      Delete
    2. //சாந்நித்தியம் என்றால் என்னமனதை ன்னவோ செய்ய வைப்பது என்று புரிந்து கொள்ளலாமா// - அட... ஆமாம். ஆனா வருடங்களாக கேட்ட சமஸ்கிருத ஸ்லோகத்தை, தமிழில் கேட்கும்போது அர்த்தம் புரிகிறது..ஆனால் மனதில் அதே உணர்வு வருகிறதா என்று கேட்டால் 'சந்தேகம்தான்' என்பது என் பதில். ஆனால் அர்த்தம் புரிகிறது என்பது மனதுக்கு நிறைவுதான்.

      Delete
    3. ஆனால் அது ஒரு பிரமை என்றே தெரிகிறது எல்லாக் கோவில்களிலும் விக்கிரகங்களே ஆனல் திருப்பதி சபரிம்லைபழனி போன்ற கோவில்களில் தரிசனம்சிறப்பு என்று மனம் ஏனோ நினைக்கிறது

      Delete
  10. மொழிபெயர்த்தவர் தமிழ்ப் பேராசிரியரும் முனைவருமாகிய திரு. ச. பார்த்தசாரதி தாம்பரத்துக்குத் தெற்கில் 45 கி.மீ. தொலைவிலுள்ள மறைமலைநகரில் வாழ்ந்தார்; பணி ஓய்வுக்குப் பின்பு இதய நோயால் தாக்கப்பட்டு மருத்துவ வசதிக்காக வீட்டை விற்றுவிட்டு சென்னைக் கோயம்பேடு பள்ளிக்கூடத் தெருவில் குடிபுகுந்து சில ஆண்டுகள் வாழ்ந்து 19-3-2006 இல் காலமானார். வடமொழி நாடகமாகிய சாகுந்தலத்தைச் செய்யுள் நடையில் மொழிபெயர்த்துக் காளிதாச சாகுந்தலம் என்னுந் தலைப்பில் 2001 இல் நூலாய் வெளியிட்டார்; வைணவம் என்ற மாத இதழை நடத்தினார் .
    ஒரே மகன் சென்னையில் வாழ்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. முன்பே நீங்கள் குறிய நினைவு அனால் விவரங்கள் நினைவுக்கு வரவில்லை ச பார்த்த சாரதி உங்களுக்கு மிகவும் தெரிந்தவரோ

      Delete
    2. ஆமாம் , நான் 1988 முதல் 2006 வரை நான் மறைமலைநகரில் வாழ்ந்தபோது நெருங்கிப் பழகினோம் .இறுதிச் சடங்குக்குப் போயிருந்தேன் .

      Delete
    3. தமிழ் ஆசான்களின்நெருக்கம் உடையவர் நீங்கள் வணக்கம்

      Delete
  11. சார் முன்னரே இதைக் கேட்டிருக்கிறேன். இதுவும் நன்றாக இருக்கும் கேட்பதற்கு.

    மொழிபெயர்ப்பும் நன்றாக இருக்கிறது நீங்கள் சொல்லியிருப்பது போல் அர்த்தம் புரியும் போது அது இன்னும் அழகு கூடுதல் ஒரு க்ளோஸ்னெஸ்.

    கீதா

    ReplyDelete
  12. இதுவும் என்று சொல்லி இருப்பதுதான் நெருடுகிறது

    ReplyDelete