எண்ணங்கள் தொகுப்பு அன்பு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எண்ணங்கள் தொகுப்பு அன்பு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 24 ஜூன், 2022

அன்பு என்பது என்ன


       அன்பெனப்படுவது யாதெனில் என்று

             எழுதத் துவங்கும் முன்பே ,முன்னே வந்து 
             நிற்கின்றன அனேக கேள்விகள் சந்தேகங்கள்.
            அன்பே சிவம்,அன்பே  கடவுள் அன்பே  எல்லாம்
             என்றெல்லாம்  கூறக் கேட்டாலும்அடிப்படையில்
             அன்பு  என்பதுதான்  என்ன.

அன்பு மனைவியிடம் அவளது எண்ணம் கேட்டேன்.
உடலில்,உணர்வில் ஏற்படும்  ரசாயன  மாற்றமே
உணர்ச்சிகளின்  வெளிப்பாடுஅதில்  அன்பெனப்படுவது 
உதிரம்  சம்பந்தப்படுகையில்  உயர்வாகிறது
அதுவே என் நிலைப்பாடும்  என்றாள். 
             உள்ளம்  சார்ந்த  பதில்  ஒன்றைக்  கூறிவிட்டாள். 
             அறிவு  சார்ந்த  பதிலை  நாடுதல்  தவறோ.?
தொப்புள்  கொடி  உறவு  உதிரம்  சார்ந்தது. 
ஆதலால்  ஒப்புக்  கொள்ளத்  தோன்றுகிறது. 
அந்த  உறவின்  உணர்வும்  அன்பும்  அறியப்படாமல் 
போய்  விட்டதால்  எழுகிறதோ  என் கேள்விகள்.?

   உணர்வுகள் புரிதலை  (EMPATHY)  அன்பெனக்கொள்ளலாமா?
  சார்ந்திருப்பதன்  சாராம்சமே அன்பின் விளைவா.?

           சேய்  தாயை சார்ந்திருப்பதால் அவளிடம் அன்பா.?
           பெற்ற சேயிடம்  தாய்க்கு என்ன எதிர்பார்ப்பு.
          ஆரம்பத்தில்  இல்லாதது நாள்படத் தோன்றுமோ. ?
          தாய் தந்தை மகன் மகள் கணவன் மனைவி 
          என்று எல்லோரிடமும் உணர்வுகளில் உறங்கிக்கிடக்கும் 
          எதிர்பார்ப்புகளின் மறு பெயர்தான் அன்போ.?
          எதிர்பார்ப்பில்லாத அன்பென ஒன்று உண்டா என்ன.?

கட்டிய மனைவியும்,பெற்ற  பிள்ளைகளும் 
கதறி அழும்போது வந்து விழும் வார்த்தைகள் 
எதிர்பார்ப்புகள் ஏமாற்ற மாவதைக்  காட்டுகிறதா.?
அன்பின் பிரிவால் ஏற்படும் அழுகையா, ?
அவலங்களை எதிர் நோக்கும் எண்ணங்கள் அழவைக்கிறதா?


           பாடுபட்டுக் கோடி பல விட்டுச் சென்றால் 
           பெருமையுடன் நினைப்பார்களோ.உலகில் 
           பாடுபட விட்டுச் சென்றால் பழியேற்றுச் செல்ல வேண்டுமோ.?
           அன்புக்கும் ஒரு விலை உண்டு என்பதுதான்  உண்மையோ.?

அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ் ......
எண்ணிப்பார்த்தால் உண்டென்றே  தோன்றுகிறது. 

          எதிர்மறைக் கருத்துகள் இருக்கலாம் என்று 
          எண்ணும் இடமெல்லாம் கேள்விகளாக்கி  விட்டேன். 
          ஆன்றோரே சான்றோரேஉங்கள் கருத்துகள் 
          அறியக் காத்திருக்கிறேன்.. எது எப்படியாயினும் 
          முத்தாய்ப்பாக  நான் எண்ணுவது 


உழைத்துக் களைத்து உடலம் கிடத்தி உறங்கி எழுந்தால்
மறு நாளும்  உண்டு வாழ்வுதொடரலாம் பணிகள். 
உறக்கத்தில் மூச்சு விட மறந்து எழாமல் போனால் 
என்னாகும்.?ஒன்றுமாகாது. பேரினை நீக்கி பிணமென்று கூறி
பாடையில் கிடத்தி கொண்டு போவார்கள் புதைக்கவோ எரிக்கவோ.

          இருந்தபோது  செய்ததன் விளைவு 
          பெற்றுத்தரும் விழி நீரோஉமிழ் நீரோ. 


இல்லாமையின் வெறுமை உணரப்படலாம் சில நாட்கள். 
விட்ட குறை தொட்டகுறை எனப் பணிகள் 
விடுபட்டுப் போயிருந்தால். பல நாட்களாக அது மாறலாம். 
காலம் கடந்தபின் மிஞ்சுவதெல்லாம் சில நினைவுகள் மட்டுமே.

(அன்பு நேசம் பாசம் காதல் என்றெல்லாம் அறியப் படும் உணர்வு உண்மையில் என்ன?என்றோ எழுந்த கேள்வி பதிவாகி இருந்தது. இப்போது அதுவே மீள்பதிவாக)
 

         
 

ஞாயிறு, 19 மே, 2013

அதீத அன்பு ( தொடர்ச்சி )



                          அதீத அன்பு ( தொடர்ச்சி.)
                          ----------------------------------




 சில ஆதங்கங்கள் என்னதான் சொல்லிப் போனாலும் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து முழுதுமாகச் சொல்ல வில்லை என்று குறை கூறுகிறது
இந்தமுறை என் அவஸ்தைகள் முன்பே கூறியவைதான் என்றாலும் கூடிக்கொண்டே போகிறது. செய்யாத குற்றத்துக்காக அனுபவிக்கும் தண்டனை என்று சொன்ன நான் , முதுமையை வரமாக எண்ணி எழுதி என்னைத் தேற்றிக் கொண்டேன். நான் நினைத்ததைச் செய்ய யாரையும் கேட்க வேண்டாம் என்று சொன்னால், அது சரியில்லை என்று உடனே நிரூபணமாகிறது. நான் தனியே எங்கும் செல்ல அனுமதியில்லை. ஏனென்று கேட்டால் எதிர்பார்க்காமல் ஏதாவது நிகழ்ந்து விட்டால் ... என்று எதிர்க் கேள்வி. அப்படி என்னவோ எதிர்பார்க்காமல் நடந்து விட்டால் யாராலாவது அதைத் தடுக்க இயலுமா.? எதிர்பார்க்காதது நிகழுமோ ,நிகழுமோ என்று எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறார்களா.? நான் என் சிறுகதை (வாழ்வின் விளிம்பில்) ஒன்றில் உடல் நலமின்றி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்ட ஒருவனை அவன் உற்றார் வந்து பார்க்கும் போது அவர்கள் , மன நிலையை ரயிலேற்றிவிட வந்தவர்களின் மனநிலையோடு ஒப்பிட்டு எழுதி இருந்தேன். “ ரயில் புறப்பட இன்னும் சில நிமிடங்கள் ....என்பதுபோல். எதிர்பார்க்காதது நிகழுமோ என்று அஞ்சி அஞ்சி இருப்பதைவிட அந்த நிகழ்வு நடந்து முடிவதே மேல் என்று தோன்றுகிறது.




எங்காவது பஸ்ஸில் பயணிக்க எனக்கும் என் மனைவிக்கும் ஒரே இடத்தில் இருக்கைகள் கிடைப்பது அரிது. அவள் முன்னால் மகளிர் இருக்கையில். நான் பின்னால் ஆடவர் இருக்கையில் . என்னை திரும்பிப் பார்த்து திரும்பிப் பார்த்தே அவள் கழுத்து சுளுக்கும். இருக்கையில் நான் சற்றே கண் அயர்ந்தால் அவள் மனம் இல்லாததை எல்லாம் நினைத்து அல்லல்படும். அதற்காகவே நான் மிகவும் முயன்று என் கண்களை அகலத் திற்ந்து வைத்திருப்பேன். என் மக்களோ பஸ் பயணத்தை அறவே தடுக்கச் சொல்கிறார்கள். எனக்கானால் என் உடலுக்கு நானே தலைவன் எனக்கு அதை என் கட்டுப்பாட்டுக்குள் வைக்க ஆசை. In fact I like to flog my body. இதைப் பதிவிடுவதே இந்த அவஸ்தைகள் எனக்கு மட்டும்தானா இல்லை என் போன்றோர் அனைவருக்கும் உண்டா என்று அறியவே.




 அதீத அன்பால் நான் படும் அவஸ்தைகளை முன்பே ஒருமுறை எழுதி இருக்கிறேன். அதை இங்கே சொடுக்கினால் படிக்கலாம். 

 இந்த ஒரு பதிவைப் படிக்க மூன்று பதிவுகளின் தொடர்பும் தெரிவது நலம். 
-------------------------------------------------------------