இனிதான ஒரு காலை வேளையில்
--------------------------------------------------
(உண்டு உறங்கி எழுவது தவிர வேறுவேலை இல்லை. வேறெதுவும்
செய்யவும் இயலாது ஆனால் எண்ணங்கள் சிறகு விரிக்கத் தடையேதும் இருப்பதில்லையே.
அம்மாதிரியான விளக்க முடியாத எண்ணங்களை ஓரளவு எழுத்தில் வடிக்க முயன்றேன் எனக்கேத்
தெரிகிறது .முக்காலும் abstract என்று. என் வலையின் முகப்பில்
உள்ள வாசகங்கள் துணை நிற்கின்றன).
பொழுது விடியும் நேரம் கீழ்த் திசையில்
செக்கர் வானம் நிறம் மாறிக் கண் கூசும் வெளிச்சம்
உயிர்த்தெழலும் இனிதே நிகழ இன்றொரு நாளும்
புதிதாய்ப் பிறக்க எண்ணச் சிறகுகள் விரிக்கின்றன.
கேள்விகள் கேள்விகள் கேள்விகள்...!
பதில் அறியாக் கேள்விகள்.
பதில் கூற முயன்றாலும் பதிலும் கேள்விகளே
ஏன் இங்கு வந்தாய் நீ இருந்த இடம் ஏது?.
ஏதோஒரு குயவனின் கைவினையோ நீ
அன்றவன் கை செய்த பிழைக்கு நீயோ பொறுப்பு
எவரது கைவினையும் அல்ல நீ
உந்தை தாயின் மகிழ்வின் விபத்து நீ
யாரும் உனை வேண்டி வந்தவன் அல்லநீ
இருள் நீங்கி விடியும் நேரம் எண்ணச் சிறகுகளே
அசைந்துன்னை அலைக்கழிப்பதேனோ...?
எண்ணச் சிறகசைப்பில் அன்றோ உன்னிருப்பு
உன் உயிர்ப்பு எல்லாம் தெரிகிறது
எத்தனை விடியல் எத்தனை காலை
என்றெல்லாம் மதிமயங்கிக் கழித்துவிட்டாய்
பாலனாம் பருவம் செத்தும் காளையாந்தன்மை
செத்தும் காமுறும் இளமை செத்தும் மேல் வரும்
மூப்புமாகி உனக்கு நீயே அழலாமா.?
கானாறோடும் கதியே போல் கண்டபடி வாழ்ந்தாயோ?
நீயும் ஓர்க்கால் வெளியேற எங்குதான் ஏகுவையோ.?
கண்ணிற் காணா சொர்க்கமா இங்கில்லாத நரகமா?
காணும் பொருளை எல்லாம் நன்றாய்த் தெரிய நோக்கி
தன்னையே நோக்காச் சீரின் கண்மணி போல்
வாழ்ந்த வாழ்வின் முடிவில் என்னதான் காண்பையோ?
இன்று விடிந்தது, புதிதாய் உயிர்த்தாய்
எங்கும் எதிலும் காணும் காட்சியில் எதிலும் இன்பம்
நினைப்பினில் இன்பம் எனவே பொங்கி வழிந்தால்
இன்று நீ பிறந்ததே இவற்றைத் தூய்க்கவே
என்று உணர் போதும் எண்ணச் சிறகுகள் அசையட்டும்
திசை நோக்கிச் செலுத்துவது உன் கையில்.

