வலைப்பூவொன்று தயார் செய்து எழுதத் துவங்கின போது, ஏற்கெனவே என் ஆத்ம திருப்திக்காக எழுதி வைத்திருந்த சில கதைகள் ,கவிதைகள்( ? ) கட்டுரைகள் என்று பதிவிடத் துவங்கினேன். நினைக்கும் கருத்துக்களை வெளியிட ஒரு வடிகால் போல் இருந்தது வலைப்பூ. ஆரம்ப காலத்தில் என் பதிவுகளை படித்தவர்கள் மிகவும் குறைவு. முதலில் நான் ஒருவன் பதிவிடுகிறேன் என்பதைப் பலருக்கும் அறிவிக்க வேண்டி தமிழ் மணத்தில் இணைத்தேன். நானே பலரது பதிவுகளைப் படித்து என் கருத்துகளைக் கூறத் தொடங்கினபோது சிலர் ரெசிப்ரொகேட் செய்தனர். அப்போது நான் படித்த சில பதிவுகள் காழ்ப்புணர்ச்சியில் மிதந்தது கண்டு என் பதிவு ஒன்றில் பதிவுகள் எப்படி இருக்கலாம் என்று எழுதினேன்.
ஆரம்பத்தில் என் திருப்திக்காக எழுதியிருந்தேன். பிற்பாடு என் எண்ணங்களைக் கடத்த் என் வலையை உபயோகிக்கத் துவங்கினேன். நான் என் பதிவுகளில் கூறும் கருத்துக்கள் விமரிசிக்கப் பட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் பதிவுலகில் மாற்றுக் கருத்துக்கள் கூறுவது தவிர்க்கப் பட்டே வருகிறது. எந்த சாரமும் இல்லாத பதிவுகளுக்கெல்லாம் புகழாரங்கள் இருப்பது பார்த்தேன். நான் கருத்து கூறும்போது என் மனதில் பட்டதை மனம் நோகாமல் தெரிவித்து வருகிறேன். அது அப்படி உணரப் பட்டும் வந்திருப்பது தெரிய வருகிறது. ஒரு முறை ஒரு நண்பர் என் பதிவுகளுக்கு பதில் இடுவது , :” வீட்டில் லுங்கியுடன் இருந்து விருந்தாளிகளை வரவேற்பதுபோல் எந்தக் க்லக்கமும் இல்லாமல் சொல்ல முடிகிறது ” என்ற பொருளில் எழுதி இருந்தார். படித்தபோது நிறைவாக இருந்தது. எந்த போலித்தனத்தையும் நான் விரும்புவதில்லை என்று அவர் புரிந்து கொண்டது சரியே. புகழ்ச்சிக்கு மயங்காதவர் இல்லை. நானும் உண்மையான புகழ்ச்சி என்று தோன்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நிறையவே மாறுபட்ட கருத்துக்கள் பல எழுதி இருக்கிறேன். சடங்குகள், சம்பிரதாயங்கள், மனிதரிடையே ஏற்ற தாழ்வுகள் , அதற்கான காரணங்களாக நான் நினைக்கும் வர்ணாசிரம நியதிகள், , அதில் குளிர் காயும் பல ரக மனிதர்கள் என்று எழுதி இருக்கிறேன். ஒரு வேளை என் வயதை கருதியோ என்னவோ என்னுடன் கருத்து0 மோதல்களை பலரும் தவிர்க்கின்றனர்.
நான் நமது இறை இலக்கியங்கள் குறித்தும் எழுதி இருக்கிறேன். அவதாரங்களை கதைகள் என்று நான் குறிப்பிட்டது சிலர் அவ்வளவாக விரும்பவில்லை. அது என் கருத்து. நான் யாருடைய நம்பிக்கையையும் கேள்வி கேட்பதில்லை. கேள்வி கேட்டு தெரிந்த பின் நம்பிக்கைகள் பலப்படுத்தப் படவேண்டும் நம்பிக்கை என்னும் பெயரில் புற்றுக்குப் பால் ஊற்றுவதையும் எந்தக் கேள்வி கேட்டாலும் நம்பிக்கையை குறை கூறுகிறேன் என்று நினைப்பதையும் நான் விரும்புபதில்லை. .
ஒன்று மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. கருத்துக்கள் கூறாவிட்டாலும் பலரும் என் பதிவுகளைப் படிக்கிறார்கள். எந்த விதமான பதிவுகள் அதிகம் படிக்கப் படுகின்றன, என்று பார்த்தால் கொஞ்சம் சென்சேஷனலாக இருந்தால் .( அதுவும் தலைப்பில் தெரிய வேண்டும்) , படிக்கிறார்கள். இப்போதும் என் பழைய பதிவுகள் தேடிப்பிடித்து படிக்கப் படுகின்றன. இதையெல்லாம் பார்க்கும்போது நான் பலரும் படிக்கிறார்கள் என்று அவர்கள் விருப்பமறிந்து எழுத வேண்டுமா. இல்லை எனக்கு திருப்தி தருவதை எழுத வேண்டுமா. A MIX OF BOTH SHOULD BE THERE. அப்போதுதான் என்னைப் புரிந்த வாசகர்கள் தொடர்வார்கள் என்று நம்புகிறேன்.
கடைசியாக, கிட்டத்தட்ட ஆயிரம் வாசகர்கள் படித்தும் ஒரு பின்னூட்டம் கூட இல்லாத பதிவும் கண்டு என்ன நினைப்பது புரியவில்லை.