ஒருபுராணக் கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒருபுராணக் கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 6 ஜனவரி, 2016

மழை வேண்டுமா கூப்பிடுங்கள்........


                                     மழைவேண்டுமா  கூப்பிடுங்கள்..........
                                     ----------------------------------------------------------


 பதிவு எழுத விஷயங்களே புலப்படாத வேளையில் என் பழைய பதிவுகளில் மேய்ந்து கொண்டிருந்தேன் 2014 –ம் ஆண்டு ஃபெப்ருவரி மாதம் மீண்டும் பதிவுகளில் தொடர என்னும் பதிவில் நான் சென்னைக்குச் சென்றிருந்ததையும் பதிவுலக நண்பர்கள் பலரையும்  சந்தித்தது பற்றியும் எழுதி இருந்தேன்  அது என்ன ராசியோ நான் சென்னை போகும்போதெல்லாம்  மழை வருகிறது என்று எழுதி இருந்தேன்  அதன் பின்னூட்டத்தில் அப்பாதுரை அவர்கள்மழை வேண்டும் என்றால் ரிஷ்ய சிருங்கரை  அழைப்பார்களாம்  என்று எழுதி இருந்தார்.  நான் எனது மறு மொழியில்  யார் அந்த ரிஷ்ய சிருங்கர் என்று கேட்டு எழுதி இருந்தேன்  இப்போது அதைப் படித்ததும் எனக்குத் தெரிந்த ரிஷ்ய சிருங்கர் கதையை எழுதலாம் என்று தோன்றவே இதோ துவங்கிவிட்டேன்

 அங்க தேசத்து  அரசர் ரோமபாதரும் தசரத மஹாராஜாவும் நண்பர்கள் ஒரு முறை ரோமபாதர் தசரத ராஜாவைச் சந்திக்க வந்திருந்தார்  தசரத ராஜாவுக்கு மூன்று மனைவிகள் கௌசல்யா சுமித்திரா கைகேயி என்று யாவரும் அறிந்ததே. ஆனால் பலரும் அறியாதது தசரதருக்கும் கௌசல்யாவுக்கும் ஒரு பெண்குழந்தை இருந்தது என்றும் அவள் பெயர் சாந்தா என்பதும் . அவள்  ராமலக்ஷ்மண சகோதரர்களுக்கும் மூத்தவள் என்பதுமாகும்
 அங்க தேச ராஜா ரோமபாதருக்கும் மக்கட் செல்வம் இல்லை. அவர் தசரதரிடம் அவரது பெண்ணை  தத்துகொடுக்க வேண்டிக் கேட்டுக் கொண்டார் தசரதரும் தமக்கு மூன்று மனைவிகள் இருப்பதாலும் இன்னும் குழந்தைகளைப் பெற வாய்ப்பு இருந்ததாலும்  மிகுந்த யோசனைக்குப் பின் தன் மகள் சாந்தாவை தத்து கொடுக்க சம்மதித்தார்அங்க அரசர் மிக்க மகிழ்ச்சியுடன் சாந்தாவைத் தத்து எடுத்துக் கொண்டார்
அங்க தேச அரசகுமாரியாக சாந்தா வளர்ந்துவந்தாள்
ஒரு முறை அங்கதேசம் மழையின்மையால் மிகவும் வரண்டு போய் இருந்தது. அரசரும் என்ன செய்வது என்று தெரியாமல் கவலையுடன் இருந்தார்  அப்போது அவரிடம் முனி குமாரன் ரிஷ்ய சிருங்கரை வரவழைத்தால் மழைபெய்யும் என்று ஆலோசனை கூறப்பட்டது யார் இந்த ரிஷ்ய சிருங்கர்?
அங்க தேசத்து வனாந்திரத்தில் காஷ்யப முனிவரின் மகன்  விபாந்தகருக்குப் பிறந்தவர்தான் இந்த ரிஷ்ய சிருங்கர். மான் கொம்பைத் தலையில் தாங்கியதால் அப்பெயர் பெற்றார்.  சிருங்க என்றால் மான் கொம்பு என்னும் பொருள் உண்டாம்  விபாந்தகருக்கும் ஒரு மானுக்கும் பிறந்தவர். முனிவரின் ஆசிரமத்தில் வேற்றுலக மக்களின் கண்படாமல் வளர்ந்து வந்தவர். தவவலிமை மிக்கவர். இவரை அங்க தேசத்துக்கு வரவழைத்தால் மழைபெய்து வரட்சி நீங்கும் என்று கூறப்பட்டது ஆனால் அவரை எப்படி வரவழைப்பது?நேரில் சென்று கூப்பிட்டால்  விபாந்தக முனிவரின் கோபத்துக்கு ஆளாகி சாபம் கிடைக்கப் பெறலாம் வேற்று மனிதரின் வாடையே தெரியாத ரிஷ்யசிருங்கரை ஏதாவது யுக்தி செய்துதான் வரவழைக்க வேண்டும்  அங்க தேசத்து அழகு மிகு வேசிகள் சிலரை அழைத்துஎப்படியாவது ரிஷ்ய சிருங்கரை மயக்க்கி அங்க தேசத்துக்கு கூட்டிவர பணித்தார் ஆனால் இது விபாந்தக முனிவருக்குத் தெரியக் கூடாது என்றும் தெரிந்தால் சாபத்துக்கு ஆளாகக் கூடும்  என்றும் எச்சரிக்கப்பட்டனர். அவர்களும் ஒரு அழகிய கப்பலைத் தோப்புபோல் அலங்கரித்து  ஆசிரமம்  ஒன்றமைத்து இவர்களும் முனிவர்கள் போல் வேடமணிந்து கானகம்  சென்றனர். விபாந்தக முனிவர் இல்லாத நேரத்தில்  ரிஷ்ய சிருங்கரை சந்தித்து நட்பைப் பெற்றனர் சிறிது நேரம் கழித்து திரும்பி விட்டனர். ரிஷ்யசிருங்கருக்கு அது புது அனுபவம்  மறு நாள் வந்தபோது  அவரை நாட்டியமாடி மயக்கி அவர் மனதில்  ஆவலை உண்டு பண்ணினர்  மறுபடியும் அவர்கள் திரும்பும் போது அவர்களுடன் வந்தால் இன்னும் அழகிய மக்களைச் சந்திக்கலாம் என்று கூறி ஆசையை வளர்த்தனர் விபாந்தக முனிவருக்குத்தெரியாமல் அடுத்தமுறை ரிஷ்ய சிருங்கரை அங்க தேசத்துக்கு
கூட்டி வந்தனர்  அங்கதேசத்தில் இவரது கால் பட்டதும் மழை பெய்தது ரோமபாதர் நன்றி மிகுதியால் அவருக்கு சாந்தாவை மணமுடித்து ரிஷ்யசிருங்கரை  அரச பீடத்தில் அமர்த்தினார்
 விபாந்தக முனிவர் திரும்பி வந்து பார்த்தபோது  ரிஷ்ய சிருங்கரைக் காணாமல்  கோபமடைந்து அங்க தேசத்துக்கு வந்தார். வந்தவரை எல்லா மரியாதைகளுடனும் ரோமபாதர் வரவேற்றார். முனிவரின் கோபம் சற்றே தணிய  அவரை மேலும் மரியாதைகளுடன் அரச மண்டபத்துக்குக் கூட்டி வந்தார் .அங்கு ரிஷ்ய சிருங்கர் அரச குமாரனாகவும் அரச குமாரி சாந்தாவின்  கணவனாகவும் இருந்தது கண்டு கோபத்தை அறவே ஒழித்து அவர்களை ஆசிர்வாதம் செய்தார் இந்தக் கதையைத்தான் திரு அப்பாதுரை குறிப்பிட்டு இருந்தார் என்று நினைக்கிறேன் 
ரிஷ்ய சிருங்கரின் கதை இதோடு முடியவில்லை.
கௌசல்யாவின் மகளை ரோமபாதருக்குக் கொடுத்த தசரதருக்குஅதன் பின் புத்திர பாக்கியம் இருக்கவில்லை. தனக்குப் பின் அரசாள வாரிசில்லையே என்னும் கவலை மிகுந்து வாடிய தசரதரிடம் வசிஷ்ட முனிவர் ஒரு புத்திர காமேஷ்டி யாகம் செய்யவும் அதை நடத்திக் கொடுக்க ரிஷ்ய சிருங்கரே தகுந்தவர் எனவும் கூறினார். அதன் படி தசரதர்  ரிஷ்ய சிருங்கரை வேண்டி அழைக்க அவரும் மனமுவந்து வந்து புத்திரகாமேஷ்டி யாகத்தை நடத்திக் கொடுக்க  அந்த யாகத்தில் மகிழ்ச்சியடைந்த அக்னி பகவான் யாகத் தீயில் வந்து பாயசம் கொடுத்ததும்  தசரதருக்கு நான்கு குழந்தைகள் பிறந்து ராம லக்ஷ்மண பரத சத்துருக்கனர் ஆக வளர்ந்தது அநேகமாக அனைவரும் அறிந்ததே