விளக்கம் வேண்டி....
--------------------------
இந்த பதிவை வெளியிட எனக்கு சற்று வருத்தமாக
இருக்கிறது. வலையுலகில் பதிவர்களாக இருப்பவர்கள்,
பலர் பல விஷயங்களில் விற்பன்னர்களாக இருக்கலாம்.
ஒருவருக்கொருவர் ஊக்கம் கொடுத்து, நல்ல விஷயங்கள்
வெளிவரும்போது, ஆதரவு கொடுத்து, கருத்து மாற்றங்கள்
இருந்தால் அதை ஆரோக்கியமான முறையில் எடுத்துரைத்து
போவதுதான் நன்மை பயக்கும் என்பது என் நம்பிக்கை.
“ஆலய தரிசனப் பயணம் “என்ற என் பதிவில், ரத பந்தனக் கவி
பற்றி தமிழறிஞர்கள் விளக்கம் த்ரக்கேட்டு எழுதியிருந்தேன்.சங்க
காலப் பாடல்களுக்கு எளிமை வடிவம் தர விரும்புபவர்களும்
அதற்கு கோனார் நோட்ஸ் போடத்தயாராய் இருப்பவர்களும்
எனக்கு விளக்கம் தர முயல்வார்கள் என்றும், ஒரு சமயம் அவர்கள் என் பதிவுகளைப் படிக்காதவர்களாய் இருந்தால் , வேறு படித்தவர்,அறிந்தவர் விளக்கம் தர முயல்வார்கள் என்றும் நம்பியிருந்தேன்ஆனால் தமிழில் வல்லுனர்களாக நான்
மதிக்கும் யாரும், என் பதிவைப் படிக்கவோ,படித்திருந்தால்
விளக்கம் அளிக்கவோ முயலவில்லை என்பது தான் வருத்தம்
தருகிறது. ஒரு வேளை, நான் அந்தப் பாடல்களை வெளியிடாதது
காரணமாயிருந்தால், அதனை நிவர்த்தி செய்ய இத்துடன்
அவ்விரு பாடல்களையும் வெளியிடுகிறேன். எனக்குப் பொருள்
விளங்குவது கடினமாயிருக்கிறது என்று ஏற்கெனவே கூறி
இருந்தேன். மேலும் இது கவிதையின் ஒரு வரிவடிவமாக
இருக்கலாமோ என்று விளக்கம் வேண்டியும் எழுதியிருந்தேன்.
கால தாமதமானாலும் விடை கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்.
இந்தக் கவிதைகளை நான் எடுத்து எழுதும்போது ஏதாவது பிழை
இருந்தால், நானே அதற்குப் பொறுப்பு. எழுதிய நேரமும், கிடைத்த
அவகாசமும் காரணமாயிருந்திருக்கலாம். இனி அந்தப்
பாடல்கள்:-
திருமங்கையாழ்வார் அருளிச் செய்த திருவெழுக்கூற்றிருக்கை
------------------------------------------------------------------------------------
ஒரு பேரூந்தியிருமர்த்தவிசில்
ஒருமுறையயனையீன்றனை* ஒருமுறை
இருசுடர்மீதினிலியங்கா*மும்மதி
ளிலங்கையிருகால்வளைய *ஒருசிலை
யொன்றிய ஈரயிற்றழல்வாய்வாளியி
லட்டனை*மூவடி நானிலம் வேண்டி*
முப்புரிநூலொடு மானுரியிலங்கு
மார்வினில் *இருபிறப்பொரு மாணாகி*
ஒருமுறையீரடிமூவுலகளந்தனை*
நாற்றிசைநடுங்கவஞ்சிறைப்பறவை
யேறி*நால்வாய்மும்மதத்திருசெவி
யொருதனிவேழத்தரந்தையை*ஒருநா
ளிருநீர்மடுவுள் தீர்த்தனை*முத்தீ
நான்மறை ஐவகைவேள்வி*அறுதொழி
லந்தணர்வணங்கும் தன்மையை*ஐம்புல
னகத்தினுள்செறுத்து *நான்குடனடக்கி
முக்குணத்திரண்டவையகற்றி*ஒன்றினி
லொன்றிநின்று*ஆங்கிருபிறப்பறுப்போ
ரறியும் தன்மையை*முக்கண்நாற்றோ
ளைவாயரவோடு*ஆறுபொதிசடையோ
னறிவரும் தன்மைப்பெருமையுள் நின்றனை*
ஏழுலகெயிற்றினில் கொண்டனை*கூறிய
வறுசுவைப்பயனுமாயினை*சுடர்விடு
மைம்படையங்கையுள மர்ந்தனை*சுந்தர
நாற்றோள் முந்நீர் வண்ணா !*நின்னீரடி
யொன்றியமனத்தால்*ஒருமதிமுகத்து
மங்கையரிருவருமலரென*அங்கையில்
முப்பொழுதும் வருடவறிதுயிலமர்ந்தனை*
நெறிமுறை நால்வகை வருணமுமாயினை
மேதகுமைப்பெரும் பூதமும் நீயே*
அறுபதமுரலும் கூந்தல்காரணம்*
ஏழ்விடையடங்கச்செற்றனை*அறுவகைச்
சமயமுமறிவரு நிலையினை*ஐம்பா
லோதிகையாகத்திருத்தினை*அறமுதல்
நான்சுவையாய்மூர்த்திமூன்றாய்*
இருவகைப்பயனா றொன்றாய்விரிந்து
நின்றனை*குன்றாமதுமலர்ச்சோலை
வண்கொடிப்படப்பை*வருபுனல்பொன்னி
மாமணியலைக்கும்*செந்நெலொண்கழனித்
திகழ்வனமுடுத்த *கற்போர்புரிசை
கனகமாளிகை*நிமிர்கொடிவிசும்பி
விளம்பிறை துவக்கும்*செல்வமல்குதென்
திருக்குடந்தை*அந்தணர்மந்திரமொழியுடன்
வணங்க *ஆடரவமளியிலறிதுயிலமர்ந்த
பரம *நின்னடியினைப்பணிவன்
வருமிடரகலமாற்றோவினையே..!
---------------------------------------------
திருஞானசம்பந்தர் அருளிச்செய்த திருவெழு கூற்றிருக்கை.
---------------------------------------------------------------------------------
ஓருருவாயினை; மானாங்காரத்து
ஈரியல்பாய் ஒரு விண்முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைதளித்தழிப்ப மும்மூர்த்திகள் ஆயினை;
இருவரோடு ஒருவனாகி நின்றனை;
ஓசால் நீழல் ஒண்கழல் இரண்டும்
முப்பொழுதேத்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை; நாட்டம் மூன்றாகக் கோட்டினை
இருநிதி அரவமொடு ஒரு மதி சூடினை;
ஒருதாள் ஈர் அயில் மூவிகச் சூலம்
நாற்கால் மான்மதி ஐந்தலை அரவம்
ஏந்தினை;காய்ந்த நால்வாய் மும்மதத்து
இருகோட்டு ஒருகரி ஈடழித்து உரித்தனை;
ஒருதனு இருகால் வளைய வாங்கி
முப்புரத்தோடு நானிலம் அஞசக்
கொன்று தலத்துற அவுணரை அறுத்தினை;
ஐம்புலம் நாலாம் அந்தக் காரணம்
முக்குண இருவளி ஒருங்கிய வானோர்
ஏத்த நின்னை;ஒருங்கிய மனத்தோர்
இருபிறப்புஓர்ந்துமும்பொழுதுகுறைமுடித்து
நான்மறை ஓதி ஐவகை வேள்வி
அமைத்து ஆறங்க முதல் எழுத்து ஓதி
வரன்முறை பயின்று, எழுவாந்தனை
வளர்க்கும் பிரமபுரம் பேணினை;
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;
இகலியமைந்துணர் புகலி அமர்ந்தனை;
பொங்கு நாற்கடல் சூழ் வெங்குரு விளங்கினை;
பரணி மூவுலகும் புதைய மேல் மிதந்த தோணிபுரத்து
உறைந்தனை;தொலையா இருநிதிவாய்ந்த பூந்தராய்
ஏய்ந்தனை;ஒருபுரம் என்றுணர் சிரபுரத்து
உறைந்தனை;ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்
விறல் கொடுத்து அருளினை;புறவும் புரிந்தனை;
முந்நீர் துயின்றோன் நான்முகன் அறியாப்
பண்பொடு நின்றனை; ---------அமர்ந்தனை;
ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உரைங்க் காழியமர்ந்தனை;
எச்சன் ஏழிசையோன் கொச்சையை மெச்சினை;
ஆறுபதமும் ஐந்தமர்க்கல்வியும்
மறைமுதல் நான்கும்
மூன்று காலமும் தோன்ற நின்றனை;
இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்
மறுவிலா மறையோர்
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்
அடைத்தன்மையை யாதலின் நின்னை
நினைய வல்லவரில்லை நீள் நிலத்தே.
------------------------------------------------------
(திருக்கோயில்களில் எழுதியிருந்தவற்றை பிரதி எடுக்கவும்
அவற்றை தட்டச்சு செய்து கணினியில் ஏற்றவும் நான் மிகவும்
பிரயாசைப்பட்டு விட்டேன். தமிழில் நான் அறிந்தது கடுகளவிலும்
சிறியது என்று என்னை உணரவைத்த அனுபவம் இது. பார்ப்போம்.
யார் யார் சிரமப் படுகிறார்கள் என்று. )