நடந்தவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நடந்தவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஜூலை, 2013

கதையாகவும் கொள்ளலாம்


                                      கதையாகவும் கொள்ளலாம்.....
                                      -----------------------------------------



திருச்சியிலிருந்து கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் போக ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்திருந்தார்கள்.  போகும் வழியில் சில்வெர் காஸ்கேட், பின் கொடை சேர்ந்ததும் குழுக்களாகப் பிரிந்து அப்செர்வேடரி, மற்றும் பெய்ர்பெற்ற நடைபாதை( கோக்கர்ஸ் வாக்.? பெயர் நினைவுக்கு வரவில்லை.) தற்கொலை முனை என்று எங்கெல்லாமோ சுற்றி விட்டு ஏரிக்கரையோரம் வந்தோம். படகு சவாரி. அப்போதைய பிரபல ஹிந்தி நட்சத்திரம் வஹிதா ரஹ்மானும் அங்கிருந்தார். சிலர் அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கினார்கள். இரண்டு மூன்று குடும்பங்கள் படகில் ஏறினோம். சிறிது தூரம் செல்வதற்குள் நண்பர் ஒருவர் திடீரெனப் படகை கரைக்குத் திருப்பச் சொன்னார். அவர் முகம் பயத்தால் வெளிறி இருந்தது. உல்லாசமாக படகு சவாரிக்கு கிளம்பின நாங்கள் அவரை கரையில் இறக்கி விட்டு சவாரியை மகிழ்ச்சியுடனும் கும்மாளத்துடனும்  தொடர்ந்தோம்.


எல்லாம் முடிந்து நாங்கள் திரும்பி வந்ததும் நண்பரிடம் அவர் ஏன் படகு சவாரியைத் தொடரவில்லை என்று காரணம் கேட்டோம். அவருக்கு கல்லணையில் நீரில் மூழ்கி இறந்து போன நண்பர் ஒருவரின் நினைவு திடீரென வந்து ஏதேதோ எண்ணங்களை வரவழைத்து விட்டதாம். அந்த சோக முடிவு எங்கள் எல்லோரையும் வெகுவாக பாதித்திருந்தாலும் அவருக்கு அது அந்நேரத்தில் நினைவுக்கு வந்து அவருடைய மகிழ்ச்சியையே பாதித்து விட்டது. சில அசந்தர்ப்பமான நினைவுகள் வந்தால் ..... நாங்கள் ஐந்து பேர் ஒரு பூசாரி, மற்றும் துடுப்பு தள்ளும் படகோட்டி கங்கையில் பயணித்தபோது ...... நல்ல வேளை வேண்டாத எண்ணங்கள் ஏதும் வந்து எங்களை பயமுறுத்தவில்லை. ஆனால் இப்போது நினைத்துப் பார்க்கும்போது .....பயமாக இருக்கிறது. 


அப்போதுதான் புதிதாய்த் திருமணம் ஆனவர். புது மனைவியுடன் சந்தோஷமாகப் பொழுதைக் கழிக்க இன்னொரு ஜோடியுடன் கல்லணைக்குச் சென்றார் கல்லணையில் நீர் அதிகம் இல்லை. நிறையவே மணல் திட்டுக்கள். மனைவியர் இருவர் கரையில் இருக்க கணவன்மார் இருவரும் நீரில் இறங்கினர். நீர் கணுக்காலுக்கும் சற்றே அதிகமாகத்தான் இருந்தது. ஒருவர் திரும்பிப் பார்த்து பெண்களிடம் சத்தமாக ஏதோ கேட்டுக் கொண்டிருக்க. மற்றவரின் மனைவி திடீரெனக் கூவ ஆரம்பித்தார். என்ன ஏது என்று தெரியாமலேயே திரும்பிய நண்பர் அருகில் நின்று கொண்டிருந்தவரை காணாமல் தேடவும் அவரது மனைவி அதற்குள் அருகே ஓடிவந்து கணவர் நீரில் மூழ்கி விட்டார் என்று கதறவும் அப்போதுதான் நிலைமை எல்லோருக்கும் விளங்க ஆரம்பித்தது. முழங்காலுக்கும் குறைவாகவே நீர் இருந்த இடத்தில் ஒருவர் எப்படி மூழ்கி இருக்க முடியும்..? அருகில் எங்கும் காணாதவரைக் கண்டு பிடிக்க கரைக்குவந்து அழுதார்கள். பலரும் அங்கு வந்து தேடியும் எந்தப் பிரயோசனமும் இருக்கவில்லை. அநேகமாகப் புதை மணலில் மூழ்கி இருக்க வேண்டும் என்றே எல்லோரும் சொல்ல நீரில் இறங்கவே பலரும் பயந்தார்கள். என்ன சொல்லி என்ன. .. அவரிடைய உடல் கிடைக்கவே இரண்டு நாளாயிற்று.



கொடைக்கானல் ஏரியில் நண்பருக்கு நீரைக் கண்டதும் கல்லணை நண்பரின் நினைவு வந்து விட்டது. ஒரு மொட்டு மலரும் முன்பே கருகி விட்டது. தகப்பன் உண்ணும்போது இறந்து விட்டான் என்று மகன் உண்ணாமலேயே இறந்தானாம் என்றொரு கதை உண்டு. முடிவு எப்போது எந்த ரூபத்தில் வரும் என்று நிர்ணயிக்கவே முடியாத வாழ்க்கை. சாலையில் நடக்கும்போதோ, பஸ்ஸில் பயணிக்கும்போதோ, ரயிலில் போகும்போதோ விமானத்தில் பறக்கும்போதோ எப்போது வேண்டுமானாலும் மரணம் நேரலாம்.இருந்தும் எல்லோரும் நம்பிக்கையுடனே வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்