நல்லவன் எனக்கு நானே நல்லவன்
-------------------------------------------------------
எழுபதுடன் எட்டிலும் நல்ல பையன் நான்
கண்முன்னே கார்குழல் விரித்த கன்னியர்(இப்போதெல்லாம் பின்னிய கூந்தல் காண்பதரிது)
பத்மினி,சித்தினி,சங்கினி, அத்தினிப் பெண்டிர்
பவிசாக வந்தாலும் பத்திர காளியாய் நின்றாலும்
பயமாய் இருக்கிறது.. தலை தூக்கிக் கண்டாலே
காவலரிடம் புகார் செய்வரோ, என்றே அச்சம்.
அவர்களுக்கென்ன ..பாரதியே கூறிவிட்டான்
நிமிர்ந்து நடக்கவும்
நேர்கொண்டு பார்க்கவும்.
எனக்கேன் இந்த பயம்..?
பேதையோ, பெதும்பையோ
மங்கையோ மடந்தையோ , அரிவையோ தெரிவையோ
இல்லை பேரிளம்பெண்ணோ , பார்வையால்
துகில் உரியப்பட்டு பருவ பேதமின்றி சிதைக்கப்படும்
அச்சத்தின் உச்சத்தில் வளைய வரும் தாய்க்குலம்
யாரைப் பார்த்தாலும் பாம்பா பழுதையா என்றறியாது
தற்காப்புக்காக எதுவும் செய்யலாம்தானே
பாரதிதாசன் கூறியதுபோல் “ கிளையினில் பாம்பு தொங்க
விழுதென்று குரங்கு தொட்டு விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கென குதித்ததைப் போல் கிளைதோறும் குதித்துத் தாவி
கீழுள்ள விழுதையெல்லாம் ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி
உச்சிபோய்த் தன் வால் பார்க்கும்.”
பாவிகள் பலரது செயல்கள்
பூவையரிடையே அச்சத்தை விளைவிக்க நானிருக்கிறேன்
எழுபதுடன் எட்டிலும் நல்ல பையனாக.
--------------------------------