கல்யாணம் ,எங்கள் வீட்டுக் கல்யாணம் ......!
------------------------------------------------------------
எனக்கு நானே சில கேள்விகள் கேட்பது வழக்கம்.
ஆண்டொன்று போக அகவை ஒன்று கூடுகிறது. அது தவிர வேறென்ன மாற்றம் உன் வாழ்வில்
நிகழ்த்துகிறாய், ? மாற்றங்கள்தானே மாறாதது. நான் என்ன புதிதாய் நிகழ்த்த. முன்பே
வாழ்க்கையின் பகுதிகளை எட்டெட்டாய்ப் பிரித்து எந்த எட்டு மகிழ்ச்சி தந்தது என்று
கேட்டு விடையும் அளித்திருந்தேன் அம்மாதிரி வாழ்க்கையின் நிகழ்வுகளை அசைபோடும்
போது அவற்றில் சில இடுகைக்கான எண்ணங்களை விளைக்கிறது. அது தவிர இந்தமாதிரி சுய
சிந்தனைகளைப் படிப்போருக்கு சில விஷயங்கள் புதிதாய் தெரிந்து கொள்ள வாய்ப்புண்டு.
சில விஷயங்கள் என் மனதை உறுத்தும். அவற்றை இடுகையாக்கினால் என் எண்ணங்களின் தீவிரம் எழுத்துக்களில்
பதிவாகாததாலோ, இல்லை ஏதோகாரணத்தால் சரியான இலக்கை எட்டுவதில்லை என்பது
பின்னூட்டங்களின் மூலம் தெரியவரும். எழுத்தைவெறும் பொழுது போக்கும் வழியாக நான் எண்ணுவதில்லை
இருந்தாலும் நானும் கலந்து கட்டி எழுதி வருகிறேன் எழுத்தின் திசை சீரியஸ்பாதையை
நோக்கிப் போகிறது. தவிர்க்கிறேன்
சில சம்பவங்களை நினைவு கூறும் போது மனதின் வேதனை கிளறப்ப்
படுகிறது. வேதனைக்குக் காரணமானவர்களின் அடையாளங்களைத் தவிர்க்கிறேன் இந்த
நினைவோட்டம் என் மூத்தமகனுக்குப் பெண்பார்த்து திருமணம் செய்வித்தவற்றின்
தொகுப்பு.
நாங்கள்
திருச்சியில் குடியிருப்பில் இருந்தோம். என் மூத்தமகன் B.Sc. MBA முடித்து பணியில் அமர்ந்திருந்தான் சீக்கிரமே
அவனுக்கத் திருமணம் செய்தால் அவனது நடுத்தர வயதுக்குள் அவனால் பொறுப்புகளை முடிக்க
முடியும் பலரும் ரிடையர்ட் ஆகி வீடு வரும்போது பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்
இருப்பதையும் அவர்களுக்கான கடமைகளை செய்ய இவர் படும் அவஸ்தைகளையும் கண்டிருக்கிறேன்
ஆகவே விரைவில் திருமணம் என்பது என் கொள்கையாக இருந்தது ஆனால் ஒன்று திருமண
சமயத்தில் அவன் சொந்தக் காலில் நிற்கும் தகுதி பெற்றிருக்கவேண்டும் வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும்
போது திருமணம் என்னும் பொறுப்பும் கூடினால் உலகியல் values புரியும். இதுஎன் கருத்து. மாறுபடுவொர் பலரும்
இருக்கலாம்
மகனுக்கு மணம்
முடிப்பது என்று தீர்மானத்துக்கு அவனது ஒப்புதலும் பெற்றோம் எனக்கு இந்த ஜாதக
ஜோதிடங்களில் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் மணம் என்பது இரு விட்டார் பங்கு
பெறுவது. பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்தேன் ஓரிரு இடங்களில் இருந்து பதில்
வந்தது. எதுவும் திருப்தி தரவில்லை
இம்மாதிரியான
நேரத்தில் என் வீட்டின் கீழ்ப்பகுதி வீட்டுக்கு (குடியிருப்பில் ஒரு ப்ளாக்கில் மேல்
இரண்டு கீழ் இரண்டு வீடுகள் இருந்தன )ஒரு பெண் சைக்கிளில் வந்து கீழ் வீட்டுப்
பெண்ணிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். நான் என் மனைவியிடம் அவள் யாரென்று கேட்டேன்
. என் மனைவிக்கும் தெரியவில்லை. அந்தப் பெண் நம் மகனுக்குச் சரியாவாளா என்று என்
மனைவியைக் கேட்டேன் அவள் யார் என்னவென்று தெரியாதபோது என்ன சொல்வது என்றாள்.எனக்கு
அந்தப் பெண்ணைப் பிடித்து விட்டது . விசாரிக்கலாம் என்றேன் கீழ் வீட்டில்
இருக்கும் பெண்ணின் தோழி அவள். பட்டப் படிப்பு முடித்திருக்கிறாள் .மலையாளி என்றும்
தெரியவந்தது. பெண்ணின் தந்தை பி.எச்.இ எல். ல் asst. foreman ஆக பணிபுரிகிறார் என்று தெரியவந்தது. நான் என் கேரள நண்பர்
ஒருவரிடம் இதைப் பற்றிக் கூறி அவர்கள் எண்ணத்தை அறிந்து வரச் சொன்னேன். நான்
பிறப்பால் ஒரு பிராமணன் என்றும் தமிழ் பேசுபவன் என்றும் என் மனைவி நாயர் வகுப்பைச்
சேர்ந்தவர் என்னும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்குத் தெரியப் படுத்தச் சொன்னேன்
.ஜாதகம் போன்ற விஷயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றும் சொல்லச் சொன்னேன் நண்பன் எல்லா விஷயங்களையும் எடுத்துக் கூற
அவர்கள் ஜாதகம் பார்க்க வேண்டும் என்றனர் எனக்கு அவர்கள் எண்ணத்தில் ஆட்சேபணை
இருக்கவில்லை. என் மகனின் ஜாதகம் ஒன்று கணினியில் தயாரானது. பெண்ணின் தந்தை
என்னைக் காண வந்தார்.நாங்கள் பெண்ணின் ஜாதகம் கேட்கவில்லை. அவர் மறுநாள் வந்து ஜாதகம்
பொருந்தி இருப்பதாகவும் ஜாதகப் படி திருமணம் விரைவில் நடக்க வேண்டும் என்றும் தவறினால்
இரண்டு மூன்று வருடங்களுக்கும் மேல் தள்ளிப் போகும் என்றும் கூறினார். நாங்கள்
முறைப்படி அவர்கள் வீட்டுக்குப் போய் எல்லா விஷயங்களையும் விவாதித்தோம்.
பெண்ணிடமும் என் மகனிடமும் இருவருக்கும் இதில் சம்மதமா என்றும் கேட்டுத்
தெரிந்துகொண்டோம் திருமணத்தேதியையும் நிச்சயப் படுத்திக் கொண்டு உறவினர்
அனைவருக்கும் திருமணத்தேதி உட்படத் தெரிவித்து நிச்சயதார்த்தம் உறவுகள் முன் நடக்க
வேண்டுமென்றும் நிச்சயதார்த்த தேதி குறித்துத் தகவல் அனுப்பினோம். உறவினர்
நண்பர்கள் என்று அயலூரில் இருந்து சுமார் 100 பேர் வந்திருந்தனர். நிச்சயம் முடிந்து
மகிழ்ச்சியுடன் அனைவரும் திருமண நாளுக்காகக் காத்திருப்பதாகச் சொல்லிச் சென்றனர்
இது நடந்து ஒரு
வாரத்தில் எனக்கு ஒரு கடிதம்வந்தது. எனக்கு மிகவும் வேண்டியவர் திருமணநாள் அன்று
என்னைப் பெற்ற தாயாரின் திதி என்றும் அந்நாளில் திருமணம் நடப்பது உசிதமில்லை
என்றும் எழுதி இருந்தார். நிச்சயதார்த்தத்துக்கு அழைப்பு விடுக்கும்போதே திருமண
நாள் இன்னது என்றும் குறிப்பிட்டிருந்தேன். நிச்சயதார்த்தத்துக்கும் வந்து முன்
நின்று நடத்திய்வர் அப்போது அது பற்றி ஏதும் கூறாமல் ஊருக்குப் போய் எனக்கு எழுதியது
மிகவும் வருத்தம் கொடுத்தது. எனக்கு இந்த திதி கொடுத்தல் போன்றவற்றில் சிறிதும்
நம்பிக்கை கிடையாது. உயிருடன் இருக்கும்போது அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்
கொள்வதும் இறந்தபின் அவர்கள் விட்டுப்போன கடமைகளை முடிப்பதுமே சிறந்த நீத்தார் நினைவு
என்று எண்ணி அதை அப்படியே செய்து வருபவன். இருந்தாலும் தாய் இறந்த நாளில் திருமண
நிகழ்வு என்பது மனதை நெருடியது. முன்பே தெரிவித்திருந்தால் மாற்று நாள் வைக்கலாம்.
அதில்லாமல் விழாவில் கலந்து கொண்டு முன் நின்று நடத்திவிட்டு ஊர் போய் இப்படி
எழுதியது சொல்லமுடியாத துயரம் கொடுத்தது. நான் பொதுவாக முக்கிய நாட்களை ஆங்கில
காலண்டர் வழியேதான் நினைவு வைத்துக் கொள்வது.
மாற்று நாள்
குறிக்க முடியாதபடி எல்லோரும் (பெண்வீட்டார் உட்பட) தயாராகிக் கொண்டிருந்தனர்.
நான் எனது மூத்த அண்ணாவிடம் இது பற்றிக் கேட்டேன். அவர் திருமணம் நிச்சயிக்கப்பட்ட
நாளில் தாயின் திதி வரவில்லை என்றார். மனசுக்கு மிகவும் ஆறுதலாயிருந்தது.
பிறகென்ன
திருமணம் ஜாம் ஜாம் என்று நடந்தேறியது தாயின் திதிநாளைப் பற்றி எனக்குத் தவறாகச்
சொன்னவரும் வந்திருந்தார். நான் அவரிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. சிலருக்கு
பிறர் மனம் வாடும்படிச் செய்வதில் எந்தவித குற்ற உணர்ச்சியும் இருப்பதில்லை என்றும்
ஒரு பாடம் கற்றேன் . .