பதிவுலகில் மூத்த பதிவர்கள்.
----------------------------------------
என்ன பதிவு எழுதுவது என்று மண்டைக்குள் குடைந்து கொண்டே
இருந்தது. சீரியஸாகவும் இருக்கக் கூடாது;மொக்கையாகவும் இருக்கக் கூடாது.என்னைப்
போல் எழுதுவதற்கு பொருள் தேடி பதிவர்கள் சிந்திப்பது தெரியும். இன்று காலை
என்னுடைய மெயிலைப் பார்த்துக் கொண்டிருந்தபோது சுப்புத் தாத்தா, என்கிற சூரி சிவா
என்கிற சூரியநாராயண சிவா, என்னைப் போல் ஒரு இளைஞர் அமேரிக்காவில் நியூ யார்க்
சென்று செம ஜாலியாகப் பதிவு ஒன்று போட்டிருப்பது கண்களில் பட்டது. உடனே எனக்குள்
ஒரு பொறி தட்டிற்று. பதிவுலகில் ( மன்னிக்கவும்; த்மிழ் பதிவுலகில் )என் போன்றோர்
எத்தனை பேர் எழுதுகிறார்கள் என்று சிந்தனை ஓடியது. அதுவே எனக்கு ஒரு பதிவுக்கு வழி
செய்து விட்டது.
நான் ரெகுலராகப் படிக்கும் பதிவுகள் சொற்பமே.அவ்வப்போது
வலைகளில் மேய்வேன். Cross section of Tamil bloggers என் மனதில் ஓடியது. இப்போது வயது முதிர்ந்த
பதிவாளர்கள் பற்றி எழுதலாமே என்று தோன்றியது. வயது முதிர்ந்தவர்கள் என்று நான்
குறிப்பிடும் போது எழுபது வயதைத் தாண்டியவர்கள் எழுதுவதுதான் விசேஷம்.
பெரும்பாலும் பலதரப்பட்ட உடல் உபாதைகளால் சிரம மேற்படுத்தும் வயது. இதையெல்லாம்
மீறி எழுதுகிறார்கள் ( என்னையும் சேர்த்துத்தான்) என்றால் ஏதோ ஒரு உந்து சக்தி
இருக்க வேண்டும். மற்றவர்களைப் பற்றி எழுதுமுன் என்னை எழுத வைப்பது எது என்று
யோசித்தேன். பல காரணங்கள் நான் முன்னே நீ முன்னே என்று போட்டி போட்டுக் கொண்டு
வந்தன. உண்மையை பேச வேண்டும் என்று நினைப்பவன் நான். உடல் நலக் குறைவால் ( 2010-ல்ஆஞ்சியோ
ப்லாஸ்டி செய்தர்ர்கள் ) ஓய்வில் இருந்தேன். நேரம் போக வேண்டும், ஏதாவது
உருப்படியாகச் செய்யலாமே என்று தோன்ற என் சுயசரிதை எழுதத் துவங்கினேன். ( சுய
சரிதை எழுதும் அளவுக்கு நீ என்ன அவ்வளவு பிரபலமா என்று யாரும் கேட்கக் கூடாது.)ஒரு
சாதாரணன் எப்படி எப்படி வாழ்க்கையை சந்தித்தான் என்பது அந்த சாதாரணனின்
சந்ததிகளுக்கே தெரிய வேண்டும் அல்லவா, அதற்கான ஒரு முயற்சியே அது.. அப்போதுதான்
இணையத்தில் வலைப்பூவில் எழுதலாம் என்று ஆனந்த விகடன் மூலம் அறிந்தேன். என்னுள்
உறங்கிக் கொண்டிருந்த எழுத்தாளன் விழித்துக் கொண்டான். என் சுய திருப்திக்காக அன்றெல்லாம்
கொஞ்சம் எழுதுவேன். அவற்றை தூசிதட்டி படித்துப் பார்த்தபோது துவக்கத்துக்கு இவை
உறுதுணையாய் இருக்கும் என்று தோன்றியது. கணினி அறிவு சிறிதுமே இல்லாத நான்
ஆரம்பத்தில் (
ஆரம்பத்தில் என்ன இப்போதும்
கூடத்தான் ) வெகுவாகவே சிரமப் பட்டேன்.
ஏதோ ஒரு உந்துதலில் எழுத ஆரம்பிப்பேன். எழுதி முடிக்கும்வரை
என்ன எழுதினேன் என்று எனக்கே தெரியாது. பிறகு படித்துப் பார்த்தால் பல நேரங்களில்
எனக்கு நானே ( பிறர் தராவிட்டால் என்ன ) ஷொட்டுக் கொடுத்துக் கொள்வேன்.சும்மா
சொல்லக் கூடாது பல படைப்புகள் என் பெருமையை பறை சாற்றி இருக்கின்றன.பாராட்டுகளில்
மயங்கி நின்றதும் உண்டு. ஆனால் பெரும்பாலான நேரங்களில் நான் சொல்ல வருவது சரியாகப்
போய்ச் சேரவில்லையா இல்லை மற்றவர்களுடைய WAVE LENGTH-க்கு
தக்கபடி எழுதவில்லையா என்று யோசிப்பதுண்டு, நான் எனக்கு சரியென்று பட்டதை
எழுதுகிறேன். அதற்கு வலைப்பூ ஒரு வடிகால் தருகிறது.
சரி விஷயத்துக்கு வருவோம்.தமிழ்ப் பதிவுலகில் என் கண்ணில்
பட்ட எழுபது வயதைத் தாண்டியவர்கள் யார் யார் என்று பார்ப்போமா. முதலில் இந்தப்
பதிவுக்கு வழிவகுத்தவர் சூரி சிவா. அவ்வப்போது அவர் எழுதியதைப் படித்ததில் இருந்து
அவரது வயது 71 அல்லது 72 இருக்கலாம். மிகுந்த நகைச் சுவை மிகுந்தவர். இசையில்
ஆர்வம் கொண்டவர். மெத்தப் படித்தவர். பல விஷயங்களில் யாரும் எண்ணாத கோணத்தில் எழுதுபவர்.
சென்னையில் பதிவர் சந்திப்பு நிகழ்ந்தபோது அங்கே என்னை சந்திக்கலாம் என்று
எண்ணியிருந்தாராம். அவர் நினைத்தாலும் பாடுவதை அவரால் தவிர்க்க முடியாது என்று
எழுதி இருந்தார். சிவகுமாரன் கவிதைகள் பலவற்றைப் பாடி ஆடியோ வாக அனுப்புவார். ஒரு
முறை கன்னட நாட்டுப்பாடல் ஒன்றைத்
தமிழ்ப்படுத்தி ( மாத்தாடு மாத்தாடு மல்லிகே) எழுதி இருந்தேன் . அதைப் பாடி எனக்கு
ஆடியோ அனுப்ப வேண்டி இருந்தேன். எந்த ஒரு தகவலும் இருக்க வில்லை. பிறிதொரு சமயம்
நான் எழுதிய ஒரு பாட்டுக்கு மெட்டமைத்துப் பாடி அதன் ஆடியோவை அனுப்பி இருந்தார்.
முன்பு நான் கேட்டு எழுதிய பாடல் பாட மனம் ஒப்பவில்லை என்று எழுதி
இருந்தார்.அப்பாதுரையின் பதிவுகளுக்கு அவர் எழுதும் பின்னூட்டங்களை நான் ரசித்துப்
படிப்பேன்.அவர் பதிவில் படித்த ஒன்று நினைவுக்கு வருகிறது “ இன்றைய நாளை இனிதே
கழிக்க இரண்டே வழிகள். உங்கள் திறமையின் மீது நம்பிக்கை வையுங்கள் நாளை நன்றாகவே
இருக்கும் என்று நம்புங்கள்” ஏறத்தாழ இதுவே அவரை அடையாளம் காட்டும்.
அடுத்தவர் திரு.
காஸ்யபன் என்பவர். நாக்பூரில் வசிக்கிறார்.என்னைவிட இராண்டு வயது மூத்தவராக
இருப்பார் என்று தோன்றுகிறதுஇந்த வயதிலும் இவரை எழுத வைப்பது எது என்று
சிந்திக்கையில் அவர் ஒரு பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தவர். எழுத்துவது அவர்
தொழிலாக இருந்தது.இருந்தாலும் இப்போது எழுத வைப்பது அவரது கொள்கைப் பிடிப்பே என்று
தோன்றுகிறது. பொதுவுடமைவாதி. முன்பொரு பதிவில் சில நடைமுறை வழக்கங்களுக்குத்
தெளிவு கேட்டு எழுதி இருந்தேன். அதன் பின்னூட்டத்திலவர் “I am a
non believer, but I believe those who believe in God, because of the simple
reason , they are my fellow beings” என்று எழுதி இருந்தார். ஒரு முறை
பசுவதைச்சட்டம் பற்றி அவரது வலையில் வந்தது. அதற்கு நானும் பின்னூட்டம்
எழுதீருந்தேன். அந்தப் பதிவு வேறு ஒருவர் எழுதியதை இவர் பிரசுரித்து இருந்தார்.
அந்தப் பதிவருக்கு என் வலையின் முகவரியைக் கொடுத்து அவர் எனக்கு நன்றி கூறி எழுதியிருந்தார்.
என்னுடைய சில எழுத்துக்களை இன்னார் படித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும்போது
அவருக்கு அந்தப் பதிவை அனுப்பி வைப்பேன். அது மாதிரி ”கடவுள் அறிவா
உணர்வா” என்று
ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதற்கு அவரது கருத்தை கேட்டு எழுதி இருந்தேன். கடவுள்
என்பது ஒரு கான்செப்ட் என்று தொடங்கி விரிவான பின்னூட்டம் எழுதி இருந்தார்.மற்றும்
ஓரிரு பதிவுகளுக்கு கருத்து கேட்டு எழுதியிருந்தேன். எனக்கு அஞ்சலில் அந்தப்
பதிவுகள் திறப்பதில்லை என்றும் கணினிக்கு எதிராகப் பல வருஷங்கள் போராடியவர்.
இப்போது அதனுடன் மல்லுக் கட்ட சிரமமாய் இருக்கிறது என்றும் எழுதியிருந்தார்.
அடுத்து நான் கூறப்போவது கோவையில் இருந்து சாமியின் மன
அலைகள் என்ற வலைப்பூவில் எழுதிவரும் டாக்டர். பழனிச்சாமி கந்தசாமி என்பவரைப்
பற்றி. நான் வலையில் எழுதத் துவங்கிய
காலம் முதல் என் பதிவுகளைப் படித்துக் கருத்து எழுதுபவர். ஊக்கம் கொடுத்து வருபவர். பின்னூட்டங்கள்
மிகவும் க்ரிஸ்ப்பாக ஓரிரு வார்த்தைகளில் இருக்கும். எந்த விஷயமாவது யாராவது
சொல்லி விட்டால் அது பற்றி அவர் பதிவு எழுதி விடுவார். நாம் மிக எளிதாக
எடுத்துக்கொள்ளும் பல விஷயங்களைஅதன் முக்கியத்துவம் தெரிந்து எழுதுவார். போர்த்திக்கொள்ளும்
போர்வையின் தலைமாடு கால்மாடு அடையாளப்படுத்த வேண்டிய அவசியத்தை அவர் பாணியில்
எழுதி விடுவார். சில நேரங்களில் அவர் எழுதியது குறித்து சில சர்ச்சைகள்
எழுவதுண்டு. மனிதன் கவலைப்படவே மாட்டார். வாழ்க்கையை அனுபவிக்கத் தெரிந்த மனிதர்
என்பதே என் அனுமானம்.
ஒருமுறை நான் சிதம்பரம் ஆனித்திருமஞ்சனம் விழா காணச்
சென்றிருந்தேன். சிவ பெருமானைக் கைலையோடு ராவணன் தூக்குவதை சுவாமி உற்சவத்தின்
போது ரதத்தில் ஊர்வலமாகக் கொண்டு சென்றார்கள். அதில் ராவணனுக்குப் பத்து தலைகள்
இல்லாமல் ஒன்பதே இருந்தது என்று எழுதி இருந்தேன். டாக்டர் கந்தசாமி கதையுடன்
விளக்கம் கூறி எழுதி இருந்தார். புராணக் கதைகளையும் விட்டு வைக்கவில்லை அவர். கொங்கு
நாட்டுக் கல்யாண சடங்குகளையும் விலாவாரியாக எழுதி இருக்கிறார்.
வலையுலகில் எழுத்தாளர்களை மிகவும் நேசித்துப் படிப்பவர்
ஜீவி என்ற பெயரில் பூவனம் என்னும்வலைப்பூவில் எழுதி வருபவர். நான் அவரது
எழுத்துக்களை தொடர்ந்து படித்து வருகிறேன். இசை ஞானம் இருப்பவர். ராகங்கள் இசை
என்பன வற்றில் தேர்ந்தவர். தெரிந்தவற்றைக் கதையில் அனுபவித்து எழுதுபவர். செய்யாத
குற்றம் என்னும் என் பதிவுக்கு அவர் பின்னூட்டமாக”உள்ளம் உடல்
எனும் இரட்டை மாட்டுச் சவாரியில் ஒன்றுக்கு ஒன்று ஆதரவுதானே தவிர பிரிதுப் பார்க்க
முடியவில்லை “ என்று எழுதி இருந்தார். அவர் பல எழுத்தாளர்களை படித்து விமரிசனம்
செய்யும் பாங்கு கண்டு என் சிறுகதை வாழ்வின் விளிம்பில் கதையையும் அவர்
விமரிசிக்கக் கேட்டேன். எழுதியிருந்தார். ஒரு முறை நான் பின்னூட்டத்தில் ஒரு
பதிவரைக் குறித்து எழுதியதை உடன் படித்து அதை நீக்குவது நல்லது என்றார். நானும்
என் பிழை உணர்ந்து அதற்குக் கட்டுப்பட்டு நீக்கி நன்றி கூறி எழுதி இருந்தேன்.
1எனக்கு ஒரு மூத்த பதிவரின் வலைத்தளத்துக்கு கீத மஞ்சரி அறிமுகப் படுத்தினார் . அவர் பெயர் சொ.ஞானசம்பந்தன்.என்னைவிட 12 வயது மூத்தவர். இலக்கியச்
சாரல் என்னும் வலைப்பூவில் எழுதுகிறார் ஆங்கிலம் ஃப்ரென்ச், லத்தீன் போன்ற பிற
மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற தமிழறிஞர். பிறபிலேயே உயர்வு தாழ்வு பண்டைக்காலத்தில்
இருந்தது என்று பழைய பாடல்களை மேற்கோள் காட்டி எழுதியிருந்தார். பெரும்பாலும்
இலக்கியப் பதிவுகளே. மிகவும் குறைவாகவே எழுதுகிறார். இந்த வயதிலும் எழுதும் ஆர்வம்
போற்றத்தக்கது.
கடைசியாக நான் கூறப்போகும் மூத்த எழுத்தாளர் புலவர் சா.இராமானுசம்.
பலருக்கும் பரிச்சயமான மூத்த எழுத்தாள்ர். முன்பெல்லாம் என்
பதிவுகளுக்குத் தவறாமல் வருகை தந்து ஊக்கப் படுத்துவார். எனக்கு நான் எழுதுவது
கவிதையில் சேராது என்ற எண்ணம் கவிதையின் இலக்கணங்களையாவது கற்க வேண்டும் என்ற
எண்ணத்தை ஏற்படுத்தியது. கவிதை கற்கிறேன் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன்.
அதற்குப் பின்னூட்டமாக ” பாதை தெரிந்து விட்டது. பயணம் போகத் தயங்காதீர் “ என்று
எழுதி உற்சாகப் படுத்தினார். பின்னொரு பதிவின் பின்னூட்டமாக நான் புலவன்
சொல்கிறேன் நீங்கள் எழுதுவது கவிதைதான் என்று எழுதி ஊக்கப் படுத்தினார்.
பதிவுலக வாழ்வில் பலரும் அவர்களைப் பற்றிய பல செய்திகளைப்
பகிர்ந்து கொள்ள முன் வருவதில்லை. இன்னும் மூத்த பதிவர்கள் இருக்கலாம் அறிமுகப்
படுத்தினால் மகிழ்வேன். பதிவுலகில் பெண்கள் பலரும் எழுதுகிறார்கள். அவர்களைப் பற்றியும் ஒரு பதிவு எழுதலாமா.? ,
. .