பயணம் சந்திப்பு அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணம் சந்திப்பு அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 ஜூலை, 2015

ஒரு குதூகலப் பயணம்-3


                              ஒரு பயணமும் பேருவகையும் -3
                             ------------------------------------------------

சென்றபதிவில் எனக்கான ஒரு நாள் பயணம் இனிதே முடிந்தது என்று எழுதி இருந்தேன் என் மனைவியையும் என்னுடன் பயணத்தில் வரச்செய்ய ஆலய தரிசனங்களும் உண்டு என்று சொன்னேன். அவளுக்குக் குருவாயூர் செல்ல எந்த சந்தர்ப்பம் கிடைத்தாலும் விடமாட்டாள் என்று எனக்குத் தெரியும் ஆகவே இந்தப் பயணத்தில் குருவாயூரும் இடம் பெறும் என்று தெரிந்ததும் மகிழ்ச்சியோடு வந்தாள். 18-ம் தேதி காலையில் அவளது குலக் கோவில் பரியானம்பத்தைக் காவுக்கு முதலில் சென்று பின் அங்கிருந்து குருவாயூர் செல்லத் திட்டமிட்டோம் . பாலக் காட்டில் இருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் அந்தக் கோவில் இருந்தது. காலையில் காப்பி அருந்தி கோவிலுக்குப் பயணப் பட்டோம் ஏற்கனவே பலமுறை அந்தக் கோவிலுக்குப் போய் வந்ததில் கோவில் அருகே இருந்த டீ ஸ்டாலில் காலை உணவு எடுத்துக் கொள்ளலாம் என்றும் முடிவாயிற்று. அந்த இடத்தில் சுவையாகவும் விலை மலிவாகவும் இருக்கும் எங்கள் நால்வருக்கும் காலை உணவுக்கு ரூ150 மட்டுமே ஆயிற்று, பிறகென்ன கோவில் தரிசனம்தான் கர்க்கடக மாதம் ஆனதால் கோவிலில் கூட்டமும் அதிகம். ஆனால் வளாகம் பெரிதாக இருந்ததால் தெரியவில்லை. நம் ஊரில் அம்மனுக்கு ஆடிக் கூழ் ஊற்றுவது போல் அங்கும் கர்க்கடகக் கஞ்சி வினியோகிக்கப் பட்டது. வீட்டில் இருந்த அனைவர் பெயரிலும் அர்ச்சனை செய்யப் பட்டது.
அங்கிருந்து குருவாயூருக்கு சுமார் எண்பது கிலோமீட்டர் தூரம்  போகும் வழியில் எங்கள் கார் சிலரால் வழிமறிக்கப் பட்டது.  காரை நிறுத்தியதும் சில இஸ்லாமிய நண்பர்கள் எங்களுக்குப் பாயசம் கொடுத்து ரம்சான் பண்டிகை அன்று என்பதை நினைவு படுத்தினார்கள் பஞ்சாபிலும் தீவிர வாதிகளின் தாக்கம் அதிகமாயிருந்த போது நான் போனதும் அங்கும் எங்கள் கார் சீக்கியர்களால் வழிமறிக்கப் பட்டதும் அவர்கள் எங்களுக்கு ரோட்டி சப்ஜி கொடுத்து உபசரித்ததும் நினைவுக்கு வந்தது. இது பற்றி “பஞ்சாபில் நான்என்னும் பதிவு எழுதி இருக்கிறேன் 
கேரளத்தில் பெருவாரியானவர்கள் ஏதாவது கேட்டால் சைகையிலேயே பதில் சொல்கிறார்கள் இன்ன இடத்துக்குப் போகும் வழி கேட்டால் திசை நோக்கிக் கை காட்டுகிறார்கள் அவர்களது செய்கை நாம் போக வேண்டிய இடம் வெகு அருகில் இருப்பதுபோல் நினைக்கத் தோன்றுகிறது ஒரு மலையாளத் திரைப்படம் நினைவுக்கு வருகிறது:இதோ இவிடம் வரை “ என்று சொல்லியே அதிக தூரத்தையும் கடக்க வைப்பார்கள். போகும் வழியில் என் மாமனாரின் ஊர் அருகே சென்ற போது அங்கிருந்த மாங்கோட்டுக்காவுக்கும் போகலாம் என்று மனைவி அபிப்பிராயப் பட்டாள். நானும் மச்சினனும் பேண்ட் போட்டிருந்ததால் அனுமதி இருக்கவில்லை, அவளுக்கென்ன  கோவில் உள்ளே போய் தொழுது வந்தாள்.

அங்கிருந்து வழி கேட்டு கேட்டு குருவாயூர் வந்து சேர்ந்தோம்.ஏற்கனவே ஹோட்டல் நியூ ஹொரைசன்  இண்டர் நேஷனல் ல் அறைகள் முன் பதிவு செய்திருந்தோம் அன்று ஒரு இரவு அங்கு தங்கி மறு நாள் பெங்களூர் திரும்பத் திட்டம்
 அங்கு மதிய உணவு உண்டபின் ஷாப்பிங் பிறகு மாலை சீனியர் சிடிசன் வரிசையில் நின்று தரிசனம் என்று ப்ளான் நாங்கள் அனைவரும் மச்சினன் மனைவி தவிர்த்து சீனியர் சிடிசன்களே. கேட்டால் நிரூபிக்க ஏஜ் ப்ரூவ் செய்யவேண்டி இருந்தால் காண்பிக்க தேவைப்பட்டபேப்பர்கள்.என வரிசையில் நிற்கும் போது மச்சினன் மனைவிக்கு ஒரே சந்தேகம்  தன்னை அங்கு அனுமதிப்பார்களோ என்று. . வயதானவர் தனியாக வர முடியாது , கூடத் துணை என்று சமாளிக்கலாம்  என்று சொன்னோம் . இருந்தும் நிம்மதி இல்லாமல் வரிசையில் நின்றாள். வரிசையில் அவளை விட இளையவர்கள் நின்றிருந்தது தெம்பு கொடுத்தது. நான்கரை மணிக்கு நடை திறப்பார்கள் என்று கூறி பலத்த சோதனைகளுக்குப்பின் கோவில் வளாகத்துக்குள் அனுப்பப் பட்டோம் வரிசையில் நின்றிருக்கும் போது சீவேலி எனப்படும் கிருஷ்ண விக்கிரகத்தை யானைமேல் வைத்து மூன்று முறை வலம் வரும் சடங்கு நடை பெறு கிறது. அதன் பின் கோவில் கர்ப்பக்கிரகம் திறக்கப் பட்டு சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கிறார்கள். ஒரு வரிசை சீனியர்களுக்கு என்றால் மறுபக்கம் எல்லோருக்கும் ஆன வரிசையும் இருக்கிறது. வரிசை ஒன்று மூன்று நான்காக மாறுகிறது. இருந்தாலும் கூட்டத்தை முண்டி அடித்து குருவாயூர் கிருஷ்ணனை தரிசித்தோம்  சின்ன விக்கிரகம் ஊன்றி கவனித்தால் மட்டுமே உருவம் தெரியும் நடையைக் கடக்கும் போது பக்தர்கள் நடையில் பணத்தை வைக்கிறார்கள். அவை அங்கு பூசை செய்யும் நம்பூதிரிகளுக்கு நல்ல வருமானமாகிறது. ஒவ்வொரு நடையிலும் பணம் வைத்தோருக்கு இலையில் சந்தணப் பிரசாதம் கொடுக்கப் படுகிறது. ஏனையோர் வெளியே பிரசாத வினியோகம் செய்யும் இடத்தில் தூக்கிப் போடுவதைப் பிடித்துக் கொள்ளவேண்டும்  என் மனைவிக்கு மிகவும் சந்தோஷம் திவ்ய தரிசனம் என்று மகிழ்ந்து கொண்டாள்.
மதிய உணவுக்கும் தரிசன வரிசையில் நிற்கும் நேரத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் சில புகைப் படங்கள் எடுத்தோம் என் மச்சினன் ஒரு யானைப் பட்டம் வாங்கினான் இம்மாதிரிப் பொருட்கள் வாங்க நாங்கள் எப்போதும் ஐயப்பன் ஸ்டோர்ஸ் எனப்படும் கடைக்குச் செல்வது வழக்கம் இம்முறையும் அப்படியே.

பரியானம் பத்தக் காவு -முகப்பு

 
பரியானம் பத்தக்காவில்

வரும் ஆகஸ்டில் நடக்க இருக்கும் விசேஷ  வழிபாடுகள்
கோவில் அலுவலகம்
மாங்கோட்டுக்காவு -முன்பு எடுத்தபடம் 
குருவாயூரில் தங்கிய ஹோட்டல் 
ஹோட்டல் முகப்பு
ஹோட்டல் வரவேற்பில்
வரவேற்பில் பிள்ளையார்
ஹோட்டலில் ஒரு ஓவியம் 
ஐயப்பன் ஸ்டோர்ஸ் 
ஹோட்டல் அருகே -சிவனும் யானையும் பின்னே
தரிசனம் முடிந்து  இரவு உணவு உண்டு ஓய்வாக ஓட்டல் வராந்தாவில் அமர்ந்திருந்தோம் எதிரே ஒரு திரை அரங்கம், ரம்சான் பண்டிகை முன்னிட்டு ரசிகர்கள் கூட்டம் தெரு முழுதும் நிரம்பி வழிந்தது. வராந்தாவில் அமர்ந்து இருந்த இடத்தில் தலை தூக்கிப் பார்த்தபோது கண்ட ஓவியம் வெளிச்சம் சரியாக இல்லாததால் சரியாக வரவில்லை.
வளைந்த ஓட்டுப் பிறையின் கீழ்கண்ட ஓவியம்
 மறுநாள் காலையிலேயே கிளம்பி விட்டோம் மாலை ஆறு மணி அளவில் பெங்களூரு வந்து சேருவோம் என்று கணித்தோம் சீரான வேகத்தில் வரும் போது சேலம் ஐந்து ரோட் அருகே இருந்த ஹோட்டல் சரவண பவானில் மதிய உண்வு.வரும் வழியில் மனம் குதூகலத்தில் ஆழ்ந்திருந்தது. ஒன்று பயணம் சுமூகமாக முடிந்தது. இரண்டு நான்கு நாட்கள் பயணத்திலும் என் உடலில் தெம்பு நன்றாகவே இருந்தது. உள்ளம் மகிழ்ச்சியில் இருக்க உடலும் ஒத்துழைத்ததுதான் நிம்மதி. வரும்வழியில் இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டே வந்தோம் மலை முகட்டில் மேகங்கள் தவழ்வது கண்டதும் என் கைப்பேசியில் சிறை பிடித்தேன் 
 இப்பயணப் பதிவுகளில் என் கூடவே பயணித்த வாசக நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
மலையில் தவழும் மேகங்கள்
    

சனி, 25 ஜூலை, 2015

ஒரு குதூகலப் பயணம் -2


                        ஒரு பயணமும் பேருவகையும் -2
                        ----------------------------------------------------


17-ம் தேதி ----இந்த பயண நிகழ்ச்சி நிரலில் எனக்காக ஒதுக்கப் பட்ட நாள். அன்று நாங்கள் போக வேண்டிய இடங்கள் சந்திக்க வேண்டிய நண்பர்கள் என்று துல்லியமாகத் திட்டமிட்டுக் கொண்டோம் போக வேண்டிய ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு திசையில் பழக்கப்படாத இடத்தில் வழி கேட்டுப் போவதென்றால் நேரம் அதிகமாகும் ஆகவே பாலக்காட்டு  டௌனில் உள்ள இடங்களுக்கு ஆட்டோவில் போய் வந்து  பிற இடங்களுக்குக் காரில் போகத் தீர்மானித்தோம். பெங்களூரை விடும்பொது என் அண்ணாவிடம் பாலக்காடு போவதாகச் சொன்னேன். குலதெய்வக் கோவிலுக்கும் சென்று வருமாறு அண்ணா கூறி இருந்தார். என் மனைவியும் முதலில் அங்கு போய் வரலாம் என்று சொல்லிவிட்டாள். மணப்புளிக் காவு பகவதி கோவிலே எங்கள் குலதெய்வக் கோவில் 
குலதெய்வக் கோவில்
நாம் ஆடி மாதம் என்று சொல்வதைக் கேரளாவில் கர்க்கட மாதம் என்கிறார்கள். இந்தக் கர்க்கட மாதத்தில் கள்ள மழை பொழியும் என்றும் சொல்கிறார்கள். கள்ள மழை என்றால் திடீரென்று பெரிய மழை வரும். ஒரு சில நிமிடங்களிலேயே பளிச் சென்று நின்றுவிடும் இதை நாங்கள் அங்கிருந்த மூன்று நாட்களிலும் அனுபவித்தோம் நாங்கள் கோவிலுக்குப் போன நாள் கர்க்கடக மாத முதல் நாள். கோவில்களில் எல்லாம் நல்ல ‘தெரக்கு(கூட்டம்) கோவிலில் தரிசனம் முடிந்ததும் அங்கிருந்து என் நண்பன் மதுசூதனன் நடத்தும் காருண்யா இல்லத்துக்குச் சென்றோம்

காருண்யா இல்லத்தின் முகப்பு.


நாங்கள் போனநேரம் அங்கே இருப்பவர்களுக்கு ஒரு யோகா ஆசிரியர் வந்து பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார்சிறிது நேரத்தில் அங்கிருந்து மது அவர்கள் வந்து எங்களை வரவேற்றார். என் மச்சினன் அங்கு வருவது முதல் தடவை. காருண்யா இல்லம் முதலில் துவங்கப் பட்டபோது நினைவலை தவறியவர்களுக்காகவே இருந்தது. அப்படி ஒரு இல்லம் நடத்த பணபலம் மட்டுமல்லாமல் ஆள் பலமும் தேவை. ஏறத்தாழ ஒரு அல்ஜிமர் நோயாளிக்கு ஒருவர் தேவைப்படும் என்பதால் அந்த இல்லம் இப்போது கைவிடப் பட்ட முதியோர்களுக்காகவே நடத்தப் படுகிறது இப்போது அங்கு சுமார் இருபது பேர்கள் இருக்கிறார்கள் இவர்களில் ஓரிருவர் ஆல்ஜிமர் நோயாளிகள்.  இவர்கள் உடல் நலம் பேண ஒரு மருத்துவ மனையும் பூர்த்தியாகும் நிலையில் இருக்கிறது பணம் படைத்தோர் பெற்றோரைப் பேணமுடியாமல் இங்கு விட சிலர் வந்தபோது மது மறுத்து விட்டார்.ஆதரவற்றோரையும் பணம் கொடுப்போரையும் ஒரேமாதிரி ட்ரீட் செய்ய முடியாது என்பதே முதல் காரணம்  இவர்களைப் பராமரிக்க நாள் ஒன்றுக்கு குறைந்தது ரூ. 1500/- தேவைப்படுகிறதாம்  வயதானவர்கள் பலரும் குழந்தைகள் போல் பராமரிக்கப் படுகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு பதிவு எழுதி இருந்தேன் அதன் லிங்க் இதோ  
நானும் மதுவும்
அன்று காலை உணவு தோசையும் ப்ரெட்டும் அவர்களுடனேயே உண்டோம் என் மாமியாரின் நினைவு நாள் அன்று ஆகும் ஓரு நாள்செலவை என் மச்சினன் கொடுத்தான்  நானும் என்னால் இயன்ற தொகையைக் கொடுத்தேன் நாங்கள் வந்த ஆட்டோ ரிக்‌ஷாவிலேயே அறைக்குத் திரும்பினோம் 

முதியோர்கள் காலை உணவு
மெடிகல் செண்டர்முடிவடையும் நிலையில்
அங்கிருந்துஅடுத்ததாக என் தம்பி இருக்கும் ஆலத்தூருக்குப் போனோம் சுமார் 20கி.மீ. தூரம் மதிய உணவுக்கு அங்கு இருப்போம் என்று சொல்லி இருந்தோம் ஆலத்தூரில் இருக்கும் க்ரெசெண்ட் ஆஸ்பத்திரியில் தரப் பிரிவின் பொது மேலாளராக என் தம்பி இருக்கிறான்  குடியிருப்பில் அந்த வளாகத்திலேயே இருக்கிறான் அவனது இரண்டாம் மகள் தன் மகனுடன் ஸ்வீடனிலிருந்து வந்திருந்தாள அவளது திருமண நாளில் பார்த்தது, ஐந்து வருடங்களுக்கும் மேலாகி விட்டது. அயல் நாட்டில் வசிப்போரின் குழந்தைகளை போலவே அவளது மகனுக்கும் ஆங்கிலம் தவிர வேறு மொழி தெரியவில்லை.சிறிது நேரம் குடும்ப விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தோம் தம்பியின் மனைவி வடை பாயசத்துடன் சமையல் செய்திருந்தாள். அவன் அங்கிருந்து மூன்று கி.மீ. தூரத்தில் ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறான் முதலில் எங்கள் கேரளப் பயணத்தை அந்த வீட்டுக் கிரகப் பிரவேசம் போது வைத்துக் கொள்ளலாம் என்றிருந்தோம் ஆனால் வாய்ப்பு வந்தபோது எனக்கு நழுவ விட மனசிருக்கவில்லை. கிளம்பி வந்து விட்டோம்

உணவு முடிந்ததும் புதியங்கம் எனப்படும் இடத்தில் அவன் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டைப் பார்க்கப் போனோம் கேரளத்தில் நினைத்த மாதிரி எதுவும் செய்ய முடிவதில்லை என்றும் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதே பாடாக இருக்கிறது என்றும் குறை பட்டுக் கொண்டான் 


தம்பி என் மனைவி தம்பி மகள் என் மச்சினன் மனைவிஎன் தம்பி மனைவி
தம்பியின் பேரனுடன்

 
கட்டப் படும் தம்பியின் வீடு
  
அடுத்து என்னுடன் பி.எச்.இ. எல்-ல் பணி புரிந்து கொண்டிருந்த வேணுகோபாலன் ஆலத்தூரிலிருந்து 15-16 கி.மீ தூரத்தில் வல்லேங்கி எனும் இடத்தில் இருக்கிறார், இவர்தான் திடீரென்று தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு என்னை இந்தப் பயணம் மேற்கொள்ள முதல் காரணமாயிருந்தவர் கள்ளமழையில் இடம் தேடி ஒருவாறு அவர் வீட்டுக்குச் சென்றோம்  பலரும் மனதளவில் வயதை உணரத் தொடங்கினால் ஆன்மீகப் பக்கமும் பக்தி மார்க்கம் தேடியும் செல்கின்றனர். என் நண்பரும் விதி விலக்கல்ல. ஏதோ சாமியாரிடம் தீட்சை எடுத்துக் கொண்டிருப்பதாகக் கூறினார். என் வழக்கம் போல் அவரது சிந்தனைகள் எதிர்மறையாய் இருப்பதால்தான் இப்படியெல்லாம் செய்கிறார் என்றேன் உடல் நலம் குறையும் போது பயம் வந்து விடுகிறதோ என்னவோ. இவர் என்னிலும் ஒரு ஆண்டு மூத்தவர் நிறையவே பேசினோம் அவரது கணினியை உறவினர் வீட்டில் மறந்து விட்டு வந்ததாகக் கூறினார். கணினி வந்தபின் எனக்குச் சொல்லச்சொல்லிக் கேட்டிருக்கிறேன் நான் எழுதி உள்ள சில பதிவுகளை அவருக்கு  அனுப்பிக் கொடுக்கலாம் என்றுதான் ‘ இதனிடையில் என் மனைவி பல்ல சேனா என்னும் இடம் எங்கிருக்கிறது என்றும் அதற்குப் போகும் வழியையும் விசாரித்துக் கொண்டிருந்தார் பல்லசேனா மீன் குளத்துக் காவு பற்றி முன்பே என்னிடம் சொல்லி இருக்கிறாள் வாய்ப்பு கிடைத்தால் போகலாம் என்றும் சொல்லி இருந்தேன் இப்போது அந்த நினைவில் விசாரித்துக் கொண்டிருந்தாள் அங்கிருந்து சுமார் பனிரெண்டு கி.மி தூரத்தில்தான் அந்தக் கோவில் என்றதும் அங்கு  போக முடிவு செய்தோம்  

நண்பர் வேணு கோபாலுடன்

. 
என் மச்சினன் மனைவி என் மனைவி திருமதி வேணு. வேணு கோபால் என் மச்சினன்
கள்ள மழை நன்கு பெய்யத் துவங்கி விட்டது. மாலை ஆறு மணி அளவில் கோவிலுக்குச் சென்றோம் நானும் மச்சினனும் பேண்ட் அணிந்திருந்ததால் எங்களுக்கு அனுமதி இல்லை. என் மனைவியின் நீண்டநாள் ஆசை நிறைவேற அவளும் மச்சினன் மனைவியும் கோவிலுக்குச் சென்று தொழுதனர். மழை காரணமாக குளத்துக்குச் செல்ல இயலவில்லை 

மீன் குளத்துக்காவு
  
மீன் குளத்துக்காவு  இன்னொரு படம்
கோவிலில் தொழுகை முடிந்ததும் காரை நேராகப் பாலக் காட்டுக்கு விடச்சொன்னேன் ஹோட்டல் அறைக்குப் போய்ச்சேரும்போது மணி ஏழரை ஆகி இருந்தது. ஆக எனக்கான ஒரு நாள் பயணம் இனிதே முடிந்தது. அடுத்தநாள் 18-ம் தேதி மனைவியின் குலக் கோவில் பரியானம்பத்தக் காவுக்கும் அங்கிருந்து குருவாயூருக்கும் போக திட்டம் இட்டிருந்தோம் ( குதூகலப் பயணம் தொடரும்)