ஞாயிறு, 20 ஜனவரி, 2013

சமூக வலைத் தளங்கள்


                                  சமூக வலைத் தளங்கள்
                                 -----------------------------------



டெல்லியில் சீரழிக்கப்பட்ட பெண்ணைப் பற்றிய சில தகவல்கள் வெளிப்படுத்தக் கூடாது என்பதால் பெயரோ முகவரியோ வேறு எந்தவிதமான பெர்ஸொனல் விவரங்களோ பத்திரிகைகளில் முதலில் வெளிவராமல் இருந்தது. ஆனால் எனக்கு வந்த சில மின் அஞ்சல்கள், அந்தப் பெண் மருத்துவ மனையில் அவளது தாயிடம் கூறிய விஷயங்கள் என்றும், அவளது பெயர் இன்னது என்றும், கடைசியாக அவளது புகைப்படம் என்றும் வந்திருக்கின்றன. பொதுப்படையாக சீரழிக்கப் பட்டு உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் அபிப்பிராய பேதம் இருக்காது. ஆனால் அவளது ஐடெண்டிடி தெரிவதிலும் , அவளது வேறு அந்தரங்க செய்திகளைத் தெரிவதிலும் , வெளியிடுவதிலும் நியாயம் இருக்கிறதா தெரியவில்லை. மேலும் வரும் செய்திகள் உண்மையானவையா என்றும்  தெரியாத போது அதை வெளியிடுவது சரியா என்றும் தெரியவில்லை. இப்படியிருக்க சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவுவது சரியா என்பதே என் கேள்வி.


ஆனால் சமூக வலைத்தளங்களில் வந்த ஒரு செய்தி பகிர்ந்து கொள்வதில் நன்மை விளையலாம் என்னும்நம்பிக்கையால் இதனை வெளியிடுகிறேன். ஒரு உணவு விடுதிக்கு வந்த ஒருவர் இரண்டு காஃபிக்கு ஆர்டர் செய்கிறார். ஒன்று அவருக்கு என்றும்  மற்றது பலகைக்கும்  என்கிறார். காஃபி அவருக்குக் கொடுக்கப் பட்டு , அருகே இருந்த பலகையில் ஒரு காஃபி என்று எழுதப் படுகிறது. அவர் இரண்டு காஃபிக்குப் பணம் கொடுத்துச் செல்கிறார். இன்னொருவர் இரண்டு ப்ளேட் இட்லி என்றும், இரண்டு ப்ளேட் பூரி என்றும் ஆர்டர் செய்து ஒரு ப்ளேட் இட்லியும் ஒரு ப்ளேட் பூரியும் பலகைக்கு என்கிறார். ஆனால் இரண்டு ப்ளேட்டுக்கும் பணம் செலுத்துகிறார்.  சிறிது நேரம் கழிந்து ஒரு ஏழ்மையாகத் தோற்றம் அளிக்கும் ஒருவர் அந்த உணவு விடுதிக்கு வந்து அமர்ந்து பலகையைப் பார்க்கிறார். அவருக்கு செர்வ் செய்ய வந்த பணியாளிடம் பலகையிலிருந்து ஒரு காஃபி , ஒரு ப்ளேட் இட்லி என்று ஆர்டர் செய்கிறார். அவருக்கு செர்வ் செய்தவுடன் பலகையில் இருந்த ஒரு ப்ளேட் இட்லியும் ஒரு காஃபியும் அழிக்கப் படுகின்றன. வந்தவர் உண்டு பணம் ஏதும் கொடுக்காமல் செல்கிறார். பகிர்ந்துண்டு வாழ நினைப்பவரும் எவரிடமும் தன் மானத்தை விட்டு இரக்காமல் இருப்பவரும் ஒருவரை ஒருவர் அறியாமலேயே உதவிக் கொள்கின்றனர். இதே கதையை அண்மையில் ஒரு பட்டிமன்றத்தில் திரு. இறையன்பு அவர்களும் பகிர்ந்துகொண்டார். இதை ஏன் நம் உணவு விடுதிகள் பின் பற்றக் கூடாது.?

                ------------------------------------

இனி ஒரு குட்டிக்கதை ( நகைச்சுவைக்காக.)ஒரு நண்பருக்குக் குழந்தை பிறந்த சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள தன்னுடன் பணி புரிபவர்களுக்கு இனிப்பு கொடுத்தார். ஒவ்வொருவருக்கும் இனிப்பு கொடுக்கும்போது “எனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. செக்கச் செவேல் என்று வெள்ளைக்காரக் குழந்தை போலவே இருக்கிறது “ என்று மகிழ்ச்சியுடன் கூறிக் கொண்டிருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் அவரது வேறொரு நண்பர் அதை அடிக்கடி சொல்லாதே ஐயா. குழந்தை உனக்குத்தான் பிறந்திருக்கிறதா என்ற சந்தேகம் வந்து விடப் போகிறதுஎன்றாரே பார்க்கலாம்.!
  -----------------------------------------------------------------------------------

வியாழன், 17 ஜனவரி, 2013

நினைவடுக்குகளிலிருந்து...


                                    நினைவடுக்குகளிலிருந்து.
                                    -------------------------------------



சீரியஸாக ஏதாவது எழுதுவதை விட எதையும் உள்வாங்கிக் கொள்ளத் தேவையில்லாத பதிவுகளே அதிகம் படிக்கப் படுவதாகத் தெரிகிறது. அதிலும் யாரையும் பாதிக்காத சில நிகழ்வுகளை அசை போடலாம் என்று தோன்றுகிறது. என் நினைவுகள் எல்லாம் மிகவும் பழைய நிகழ்வுகள். அதில் சம்பந்தப் பட்டவர்கள் யாராவது இருந்தால் அவர்களின் நினைவுகளில் இவை இருக்கும் என்று சொல்ல முடியாது. முன்பே நான் நாடகங்கள் போட்டது பற்றி எழுதி இருந்தேன். அவற்றிலிருந்து சில நினைவுத் துளிகள்.


முரசொலி சொர்ணம் என்பவர் எழுதி இருந்த ‘விடை கொடு தாயேஎன்ற நாடகத்தை பெங்களூர் குப்பி தியேட்டரில் நடத்தினோம். ( 1960-களின் முற்பகுதியில்)நாடகம் நடத்துவதில் எங்களுக்கு அப்போது இருந்த பிரச்சனை பெண் கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க நடிகைகள்தான். சில ப்ரொஃபெஷனல் நடிகைகள் இருந்தனர். பெங்களுரில் தமிழ் தெரிந்த நடிகைகள் கிடைப்பது மிகவும் கடினமானதாக இருந்தது. பெரும்பாலும் நடிகைகளின் எண்ணிக்கையை குறைத்து விடுவொம். ஆனால் விடை கொடு தாயே நாங்கள் எழுதியது அல்ல. மூன்று நடிகைகள் தேவைப் பட்டனர். அவர்களை ரிகர்சலுக்கு ஒன்று சேர்ப்பதோ  அதிலும் ஒன்றாகச் சேர்ப்பதோ  மிக மிக கடினம். அவர்கள் தொழில் முறை நடிகைகள்,இரண்டு மூன்று ரிகர்சலுக்கு மேல் வர மாட்டார்கள். எல்லோரையும் ஒன்று சேர்த்து ரிகர்சல் நடத்துவது ஒரு திருவிழா நடத்துவது போல் இருக்கும். அவர்களுக்கு கதை சொல்லிப் புரிய வைத்து. அவர்களிடம் நாம் எதிர்பார்ப்பதை செய்ய வைப்பது, இப்போது நினைத்தாலும் மலைப்பாக இருக்கிறது. நாடகங்களில் பாட்டு நடனம் என்று எல்லாம் இருக்க வேண்டும் என்று எங்களில் சிலர் அபிப்பிராயப் பட்டனர்.கதாநாயகன் வேஷத்தில் நடிக்கப் பலருக்கும் ஆசை. ஆனால் வசனம் சொல்லும் போது ஏகப்பட்ட எக்ஸ்ப்ரெஷன்கள் கொடுக்கும் நடிகர்கள் மற்றவர் பேசும்போது சிலை மாதிரி நின்று விடுவார்கள். கை கால் உடல் எல்லாம் விறைப்பாக வைத்துக் கொள்வார்கள். முதலில் இவர்களை டென்ஷன் இல்லாமல் இருக்க வைப்பதே பெரிய பாடு. இருந்தாலும் கதாநாயகனாக நடித்தவனுக்கு ஒரு காதல் பாட்டுடன் நடனமும் வேண்டும் என்று ஆசை. அவனுக்காகவே “ அன்பே, அமுதே அணங்கே.! ஆறாத காதல் நான் கொண்டதாலே...என்று ஒரு பாட்டு எழுதி ம்யூசிக் அமைத்து என்னவெல்லாமோ செய்தும் திருப்தியாகாததால் அதைக் கைவிட்டோம்.
சில நல்ல வழக்கங்கள் வேண்டும் என்று கருதி, ரிகர்சலுக்கு வந்ததும் எல்லோருக்கும் வணக்கம் சொல்ல வேண்டும் முடிந்து போகும்போது எல்லோரிடமும் விடை பெற்றுப் போக வேண்டும் என்றும் சொல்லி
இருந்தோம். எல்லோரும் கடை பிடித்தனர். அதை கடைப் பிடிக்கும் நடிகை ஒருத்தி ( தமிழ் தெரியாதவள் ) போகும் போது எல்லோருக்கும் வரேங்க “ என்று சொன்னபோது ( அதன் உட்பொருள் விளங்கியதும்), எல்லோரும் சிரிக்க அந்த நிலைமையை சமாளிக்க மிகவும் பாடுபட்டேன் என்பது உண்மை. இன்னுமொரு முறை ஒரு நடிகை வேறு ஒரு நாடகத்தில் “உன்னைப் பதம் பார்க்காமல் விட மாட்டேன் என்று வில்லன் கூறுகிறான் , அதற்கு “அர்த்தம் என்னங்க “ என்று கேட்டபோது எனக்கு வியர்த்து விட்டது. அதில் ஒரு நடிகை. நிறம் குறைவு. கருப்பு என்று சொன்னால் வருத்தப் படுவாள். நாடகம் முடிந்து எல்லோரும் மேக் அப்பை கழுவி சாதாரணமாய் இருக்க . இவள் மட்டும் அப்படியே வீட்டுக்குப் போனாள்

நாடகம் நடத்த செலவுகளை சமாளிக்க , ஏதாவது தியேட்டரை ஒரு காட்சிக்கு வாடகைக்கு எடுத்து,ஒரு பழைய சினிமாவின் ஃபிலிமை வாடகைக்கு வாங்கி , அதைப் பார்க்க டிக்கெட் விற்றுப் பணம் தேற்றுவோம். விடை கொடு தாயே நாடகம் அப்போது கர்நாடகாவில் கல்வி அமைச்சராக இருந்த திருமதி .GRACE TUCKER தலைமையில் நடந்தது. நாடகத்தோடு வீரமணி என்பவரை அழைத்து அவர் உயிருடன் தவளை மீன் எல்லாம் உண்டு அவற்றை வெளியில் எடுக்கும் நிகழ்ச்சியையும் சேர்த்திருந்தோம். ஒரு wholesome entertainment.!

.திருச்சியில் நாடகம் போட்டபோது நடிகையை ரிகர்சலுக்குக் கூட்டிவர, விடியற்காலையில் அவள் வீட்டுக்குப் போய் காத்திருந்த கொடுமையை எளிதில் மறக்க முடியாது. அந்த காலத்தில் இதை எல்லாம் ஸ்போர்டிவ்-ஆக எடுத்துக் கொண்டோம். எல்லாம் நினைவலைகளின் இடுக்குகளிலிருந்து அவ்வப்போது தலை காட்டும்.

திருச்சியில் ‘ வாழ்ந்தே தீருவேன்நாடகம் ( இதைப் பதிவிட்டிருக்கிறேன் ) போட்டபோது அதில் கதாநாயகி கருவுற்றிருக்கிறாள் என்று கூற ஒரு டாக்டர் தேவைப்பட்டார்.அந்த ரோலில் என் மனைவியே வந்து பேஷியண்டை உள்ளே போய் சோதித்து கர்ப்பம் ஆகி இருப்பதாகக் கூறுவார். அதைச் செய்ய வைக்க நான் மிகவும் பிரயத்தனப் பட வேண்டி இருந்தது.
            ----------------------------

இது விஜயவாடாவில் நடந்தது. என் நண்பர் ( அவரும் ஒரு அதிகாரி ) ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை சினிமாவுக்குப் போகலாமா என்றார்.. சொந்த வேலை 
          
என்பதால் நிறுவனத்தின் காரை உபயோகப் படுத்த வேண்டாம் என்று கருதினோம். என் வீட்டிலிருந்து டாக்சியில் போய் மதியம் ஒரு பெரிய ஓட்டலில் உணவருந்தி பிறகு மாட்டினி ஷோவுக்குப் போவது என்று தீர்மானித்தோம். திட்டமிட்டபடி டாக்சி வந்தது. ஓட்டலில் உணவருந்தினோம். சினிமா தியேட்டருக்குப் போய் படம் பார்த்தோம். இடைவேளையின் போது சமோசா. பாப்கார்ன் கூல் ட்ரிங்க்ஸ் எல்லாம் உட்கொண்டோம். மாலை வெளியில் வந்ததும் தியேட்டருக்கு முன்னால் பஸ் நிறுத்தத்துக்கு என் நண்பர் கூட்டிப் போனார் ‘ பாலு, இதுவரை எல்லாச் செலவுகளுக்கும் நீங்களே பணம் கொடுத்தீர்கள். இனி என் செலவு  என்று கூறி அங்கு வந்த பஸ்ஸில் ஏறி நாங்கள் போகும் இடத்துக்கு பஸ் டிக்கெட் வாங்கினார்.!
                   --------------
ஒரு முறை திருச்சியிலிருந்து விடுமுறை நாட்களில் பெங்களூர் வந்திருந்தேன். மிகவும் வேண்டப்பட்ட ஒருவர் எங்களை மதிய உணவுக்கு அழைத்திருந்தார். நாங்கள் இருந்த இடத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் அவர் வீடு இருந்தது. பஸ் நிறுத்தம் அருகில் கிடையாது. குறைந்த தூரம் என்பதால் ஆட்டோகாரர்கள் வரவில்லை. அழைப்பை ஏற்று லொங்கு லொங்கென்று மதியம் அவர் வீட்டுக்கு நடந்தே சென்றோம். அங்கே போனால் ஏதோ நாங்கள் எதிர்பாராத வகையில் சென்று விட்டதைப் போன்ற பாவத்துடன் எங்களை வரவேற்றனர். மதிய உணவு பரிமாறும் எந்த ஆயத்தமும் இருக்கவில்லை. போதாததற்கு “மாமியார் வீட்டில் விசேஷ விருந்தா என்ற கேள்வி வேறு. சிறிது நேரம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்துவிட்டு  ஓட்டலில் மதிய உணவை முடித்துக் கொண்டு வீடு திரும்பினோம். விருந்துக்குப் போகிறோம் என்று சொல்லி விட்டல்லவா வீட்டைவிட்டுக் கிளம்பி இருந்தோம்.!
                   ----------------------------
 
 


 


 



செவ்வாய், 15 ஜனவரி, 2013

எனக்குத் தமிழ் தெரியாது.


                                       எனக்குத் தமிழ் தெரியாது.
                                       -------------------------------------



அந்தக் காலத்தில் நான் பள்ளியில் படித்தபோது, தமிழில் ஒரு பாடம். ‘இறையனார் அகப் பொருளுரைஎன்ற தலைப்பில் இருந்தது. அதில் சில வரிகள் அவ்வப்போது மனத்திரையில் ஓடும். முழுவதும் நினைவுக்கு வரவில்லை
பண்டைக் காலத்தில் பாண்டிய நாடு  பன்னீரியாண்டு வற்கடஞ் சென்றது. செல்ல பசிகடுகுதலும், அரசன் சிட்டரை எல்லாங் கூவி , வம்மின் யான் உங்களைப் புறந்தரகில்லேன். நீவீர் நுமக்கறிந்தவாறுபுக்கு, நாடு நாடாயின ஞான்று என்னையுள்ளி வம்மின் என்றான்,என அரசனைவிடுத்து எல்லோரும் போயின பின்றைக் கணக்கின்றி பன்னீரியாண்டு கழிந்தது. கழிந்த பின்னர் நாடு மலிய மழை பெய்தது பெய்தப்ன்னர் அரசன் நாடு நாடாயிற்றாதலின் நூல் வல்லாரை கொணர்க என எல்லாப்பக்கமும் ஆட்போக்க,எழுத்ததிகாரமும் , சொல்லதிகாரமும் , யாப்பதிகாரமும் வல்லாரை........ “இதற்குமேல் எதுவும்

ஓடவில்லை. இந்த உரைநடை நக்கீரனார் எழுதியது என்று படித்ததாக நினைவு. இப்போது அதன் முழு பகுதியையும் படிக்கும் ஆவலில் கணினியின் உதவியுடன் உலா வந்தேன். மேலும் சில விவரங்கள் படித்தேன். படித்தபிறகு ஒரு முடிவுக்கு வந்தேன், எனக்குத் தமிழ் தெரியவில்லை என்பதுதான் அது.

சொல்லதிகாரம், எழுத்ததிகாரம், யாப்பதிகாரம் இவற்றில் வல்லவர்கள் திரும்ப வந்தனர் என்றும் முக்கியமாக பொருளதிகாரம் வல்லார் எவரும் கிடைக்கவில்லை என்றும் அரசன் அறிந்து வருந்தியபோது மதுரை ஆலவாயிற்கடவுள் அரசனுக்குதவ அறுபது சூத்திரங்களை  செப்புப் பட்டயத்தில் எழுதி பீடத்தின் அடியில் இட.அடுத்த நாள் தேவர் குலம் வழிபடுவோன் தேவர் கோட்டத்தை எங்குந்துடைத்து நீர் தெளித்துப் பூவிட்டு எங்கும் அலகிட்டான். இட்டாற்கு அவ்வலகினொடு இதழ் போந்தன.போதரக் கொண்டு போந்து நோக்கினார்க்கு வாய்ப்புடைத்தாயிற்றோர் பொருளதிகாரமாய்க் காட்டிற்று. காட்ட பிரமன் சிந்திப்பான்.அரசன் பொருளதிகாரம் இன்றிக் கவல்கின்றான். என்பது கேட்டுச் செல்லா நின்றது உணர்ந்துநம் பெருமான் அருளிச் செய்தானாகும் எனதன் அகம் புகுதாதே, கோயில் தலைக்கடை சென்று நின்று கடைக்காப்பர்க்கு உணர்த்த கடைக் காப்பர் அரசர்க்கு உணர்த்தஅரசன் புகுதுக எனப் பிரமனைக் கூவசென்று புக்குக் காட்ட ஏற்றுக்கொண்டு நோக்கிப் பொருளதிகாரம் ! இது நம் பெருமான் நம் இடுக்கண் கண்டு அருளிச் செய்தானகற்பாலது ! என்று வணங்கி சங்கத்தாரிடம் அதற்குப் பொருள் கூறு மாறு ஏவினான் 

அகப் பொருள் பற்றிய இலக்கண நூல்களில் தொல்காப்பியத்துக்குப்பிறகு தோன்றிய சிறப்பு மிக்க நூல்  இறையனார் அகப் பொருள். இந்நூலுக்கு உரை பல சங்க காலப் புலவர்கள் எழுதினராம் மாதிரிக்கு ஒன்று.

அம்பலும் அலரும் களவு என்பது இறையனார் களவியலில் உள்ள 22-ம் நூற்பா. இதனை நக்கீரனார் உரை இவ்வாறு விளக்குகிறதாம் 


        அம்பல் என்பது முகிழ்முகிழ்த்தல்,
       
அலர் என்பது சொல் நிகழ்தல்;
       
அம்பல் என்பது சொல் நிகழ்தல்,
       
அலர் என்பது இல் அறிதல்;
       
அம்பல் என்பது இல் அறிதல்,
       
அலர் என்பது அயல் அறிதல்;
       
அம்பல் என்பது அயல் அறிதல்,
       
அலர் என்பது சேரி அறிதல்;
       
அம்பல் என்பது சேரி அறிதல்,
       
அலர் என்பது ஊர் அறிதல்;
       
அம்பல் என்பது ஊர் அறிதல்,
       
அலர் என்பது நாடு அறிதல்;
       
அம்பல் என்பது நாடு அறிதல்,
       
அலர் என்பது தேசம் அறிதல்.

இதையெல்லாம் படிக்கும்போது எனக்குத் தோன்றியதைத்தான்
எனக்குத் தமிழ் தெரியவில்லை என்ற ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தேன். இது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல்தான். இருந்தால் என்ன ? இதனை படிக்கும் பலரும் இந்த முடிவுக்குத்தான் வருவீர்கள் என்று எண்ணுகிறேன். ஆனால் ‘உன்னை வைத்து மற்றவரை எடை போடாதே ‘ என்று இன்னும் பலர் நினைக்கலாம்.

இன்னும் ஒரு சந்தேகம் எழுகிறது. நக்கீரர் எழுதியதாகச் சொல்லப்படும் உரை நடையில், சில வார்த்தைகள் அண்மைக்காலத் தமிழ் போல் தோன்றுகிறது. மூலம் சரியாகக் கிடைக்காமல் பாடபேதமாக பிற்காலச் செர்க்கைஇருக்கலாமோ என்பதுதான் அது.

ஆங்கிலத்தில் சில வார்த்தைகளுக்கு பொருள் தெரியவில்லை என்றால் டிக்‌ஷனரி என்று சொல்லப்படும் அகராதி நோக்கித் தெரிந்து கொள்ள முடிகிறது. அதைப் போல் பரவலாக உபயோகப் பட தமிழில் அகராதி இருக்கிறதா. ? இதுவரை நான் பார்த்ததில்லை. ஒரு வேளை எல்லா வார்த்தைகளையும் அகராதியில் கொண்டு வர முடியாதோ? இல்லையென்றால் உரைகளுக்கே உரை தேடும்படி இருப்பதுதான் தமிழில் தேர்ச்சி பெறுவதன் அடையாளமோ.? சிந்திக்க சிந்திக்க எனக்கு ஒன்று மட்டும் விளங்குகிறது. எனக்கு தமிழ் எழுதப் படிக்க மட்டுமே தெரியும். மொழி அறிவு பெற நான் நிறையப் பாடுபடவேண்டும்.

----------------------------------------------------

 



 

திங்கள், 14 ஜனவரி, 2013

பொங்கும் மங்களம் எங்கும் தங்க.


                         பொங்கும் மங்களம் எங்கும் தங்க.
                         ----------------------------------------------



தையலே தைப் பெண்ணே நீ பிறந்தால் வழி பிறக்குமென
நம்பிக்கையோடு நாங்களும் நட்ட கன்னலும் சென்னெலும்
கதிர் அறுத்து புதுப் பானையில் பொங்கலிட்டுக் குலவையிட்டுக்
குதூகலத்துடன் ஞாயிறுக்கு நன்றி சொல்லி மகிழும் வேளை
பொங்கும் மங்களம் தங்குக எங்கும் என வேண்டி எம் இனிய
பொங்கல் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
----------------------------------------------- 

              

வெள்ளி, 11 ஜனவரி, 2013

விளிம்புகளில் தொடரும் கதை



                 விளிம்புகளில்தொடரும்கதை.
                  -------------------------------------------------------


(ன்  ”வழ்வின் விளிம்பில் “என்றிறுகை எழி இரந்தேன்  
 gmbat1649.blogspot.in/2010/11/blog-post_21.html அ



என்னதான்  எண்ணமாக  வருகிறது..? வாழ்வா  இல்லை  சாவா.? நான்  வாழ  வேண்டும்  என்றால்  சரியான  காரணம்  இருக்க  வேண்டும்  அல்லவா. நான்  போய  விடுவேன்  என்று  எண்ணி, ரயிலடிக்கு  வண்டியேற்ற  வந்திருப்பவர்கள்  போலல்லவா   தெரிகிறார்கள்  இங்கு  கூடியுள்ளவர்கள் .
         " ரயில்  புறப்பட  இன்னும்  இரண்டு  நிமிஷங்கள்  தானிருக்கிறது."



          ரங்கசாமியின்  நேரம்  முடிந்து  விட்டதா.? அவன்  உயிருடன்  வீட்டுக்குத்  திரும்புவானா.  அவன்  நினைப்பதுபோல்  எண்ணத்தின்  சக்தியால்  சாவைத் துரத்துவானா. எண்ணத்துக்கு  சக்தி  கொடுக்க  கடமைச்  சுமைகள்  இல்லாததால்  வலு     இழந்து   மடிவானா...
         அவன்  ஏன்  சாக வேண்டும்..? ஏன்  சாகக்கூடாது.? கேள்விகளுக்கு  விடை  கிடைக்குமா.? கிடைக்காதே.! கிடைக்குமானால்  புத்தன்  வெற்றி  கண்டதாகாதா. ? வெற்றி  கண்டிருந்தால்..... எல்லாம்  வீண்  கேள்விகள்...
         ஒன்று  மட்டும்  புரிந்து  கொள்ள  வேண்டும். வினை  விதைத்தவன்  வினை  அறுப்பான் . தினை  விதைத்தவன்  தினை  அறுப்பான். மரண  பயம்  இல்லாமல்  சாக  வேண்டும் . ரங்கசாமியின்  கொடுப்பினை  என்ன..?
என்று முடித்ிரந்தேன். அன் ொடர்ச்சியாக அல்லு இரண்டாம் பியாகை எடத்ுக் கொள்ளாம் )



ரங்கசாமி அப்போது பிழைத்துக் கொண்டான். ஆனால் இறப்பு என்பது தவிர்க்க முடியாதது அல்லவா. ஒரு நாள் அவன் திடீரென்று வாழ்விலிருந்து பிழைத்துக்
கொண்டான்.அதாவது.இறந்தானா.?

என்னைப் பாருங்களேன். ஏதாவது பேசுங்களேன். தூங்கத்தானே செய்கிறீர்கள். நான் டிஸ்டர்ப் செய்ய மாட்டேன். நன்றாக உறங்குங்கள். “ மாற்றி மாற்றி இதையே கூறிக் கொண்டிருந்தவள் திடீரென்று வெடித்து அழ ஆரம்பித்து விட்டாள்.


அவள்  ஏன் அழ வேண்டும்.?அழுகை என்பதே ஒரு வடிகால்தானே. அழட்டும் நன்றாக அழட்டும். ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ. எல்லோருக்கும் தெரிந்தது தானே. மனித உணர்வுகளுக்கு அழுகையும் அதன் பின் வரும் மறதியும் வரம்தானே. இருந்தாலும் ஏறத்தாழ ஐம்பது வருட தாம்பத்திய வாழ்வில் கை கோத்துக் கூடவே வந்தவர் திடீரென்று இல்லை என்றாகி விட்டால்.......எத்தனை எத்தனை நினைவுகள்.எத்தனை எத்தனை கனவுகள். ஒன்றன்பின் ஒன்றாய் அணிவகுத்து வருகிறதே.

என்ன தைரியம் இவருக்கு.?ஏதொ சம்யுக்தையை குதிரையில் கவர்ந்து போன பிருதிவி ராஜா என்ற நினைப்பு. இருந்தாலும் அவர் சைக்கிளில் ஆரோகணித்து வருவதே கம்பீரமாகக் குதிரையில் வருவதுபோல்தான் இருக்கும். அந்த நாள் மறக்க முடியுமா.? தினமும் நான் போய்வரும் வழியில் எங்கிருந்தாவது என்னைக் காண நிற்கும் அவர் அன்று வீதியில் வழிமறித்து நிறையப் பேச வேண்டும் . இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் இடத்துக்கு வந்து விடு. விவரங்கள் கடிதத்தில்என்று கூறி என் கையில் ஒரு கடிதத்தைத் திணித்துவிட்டு சிட்டாய் பறந்து விட்டார்.


சில காரியங்கள் நடக்கும்போது அவற்றின் முக்கியத்துவமும் பரிமாணமும் புரிவதில்லை.என்ன ஏது என்று தெரியாமலேயே சிறிது நேரம் குழம்பி இருந்தாள். பிறகு ‘ ஐயோ இது தவறு அல்லவாஎன்று கேட்டுக் கொண்டாள். இருந்தாலும் மனசுக்குள்ளே சிறிது மகிழ்ச்சி இருக்கத்தான் செய்தது. இப்போதும் அடிக்கடி அவர் கேட்பார். உனக்கு என் மீது காதல் இருந்ததா? காதல் இருக்கா.? இத்தனை வருஷங்களுக்குப் பின்னும் கேட்கும் கேள்வி அபத்தமாகத் தெரியவில்லையா என்று கேட்டால். Justice is not enough if it is done, but it should appear to be done also. அதுபோல காதலித்தால் மட்டும் போதாது காதலிப்பது தெரியவும் வேண்டும்.என்பார். எதையும் வெளிப்படையாகப் பேசும் குணம். அதுவே அவரின் பலமும், பலகீனமும்.

அந்தக் காலத்தில் காதல் என்றால் என்ன என்றே அறியாதவள்,ஏதோ ஒன்றால் ஈர்க்கப் பட்டு அவரை  சொன்ன இடத்தில் சந்திக்கத் துணிந்து விட்டாள். என்ன பேசுவது.? பேசுவதை விளக்கமாகக் கூறுவதில் தேர்ந்தவர், என்னவெல்லாமோ சொன்னார். ஆனால் அவள் அடிமனதில் இப்படி சந்திப்பது தவறு என்று ஏதோ உறுத்திக் கொண்டே இருந்தது. திருமணத்துக்குப் பெற்றோர் சம்மதம் இல்லையென்றால் யாருக்கும் தெரியாமல் ரெஜிஸ்தர் கலியாணம் செய்து கொள்ளலாம்  என்றபோது தூக்கி வாரிப் போட்டது. ‘அப்படிச் செய்வது தவறுஎன்றுமட்டும் முனகினாள்.அம்மாவிடம் பேசுகிறேன் என்றும் கூறினாள். அம்மா ஒப்புக் கொள்ளவில்லை என்றால் .... அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்றாள்.பிறகு அம்மாவிடம் அவரே பேசியதும் கலியாணம் நடந்ததும் நேற்று நடந்ததுபோல் இருக்கிறது.

திருமண விஷயம் குறித்து சொந்தங்கள் பலரிடம் கூறச் சென்றபோது. திருமணத்துக்கு இசைவு கேட்க வந்தாயா இல்லை சேதி சொல்ல வந்தாயா என்று பலரும் கேட்டனராம். எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்
கொள்ளுங்கள். ஆனால் திருமணத்துக்கு வாழ்த்து கூற அவசியம் வாருங்கள் என்றாராம்.

என்ன இருந்தாலும் நெஞ்சுரம் அதிகம்தான் அவருக்கு. திருமணம் முடிந்து சென்னைக்குப் புதிதாய் குடித்தனம் வைக்கப் போனபோது எந்த ஒரு சாமானமும் வீட்டில் இருக்கவில்லை. முதலில் மண் சட்டி பானையில் தான் சமையல். ஒரு விக் ஸ்டவ். படுக்கப் பாய் தலையணை. வீட்டுக்கு வருபவர்கள் ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள். ஆனால் இதையெல்லாம் வாழ்வின் கஷ்ட காலங்கள் என்று ஒருபோதும் எண்ணியதில்லை. வாழ்வில் இதெல்லாம் மிகவும் சகஜம் என்பதுபோல் ஒரு குணம். எதையுமே சீரியஸாக எடுத்துக் கொள்ளாதவர் அவள் முதலில் உண்டாகி இருப்பதையும் மூன்று மாதங்கள் கழித்துத்தான் மருத்துவரிடம் கூட்டிச் சென்று உறுதிப் படுத்தினார். திருமணம் ஆவதும் கர்ப்பம் தரிப்பதும் சர்வ சாதாரண நிகழ்ச்சி என்று எடுத்துக் கொண்டார். இரண்டாவது மகனை பிரசவிக்க அன்று காலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இருந்த மருத்துவ மனைக்கு நடத்தியே கூட்டிச் சென்ற அரைமணி நேரத்தில் சுகப் பிரசவம் நடந்தது. இதெல்லாம் நம் மேல் அக்கரை இல்லாததாலா, என்று பிற்காலத்தில் கேட்டபோது BLESSED ARE THOSE THAT ARE IGNORANT  என்று கூறுவார்.அப்போது பிரசவ அறையில் தன்னைப் பார்த்த பிறகு இனி வேறு குழந்தை வேண்டாம், உன் வலியை உன் முகத்தில் கண்டேன், இனியும் உன்னைக் கஷ்டப் படுத்தமாட்டேன் என்றார். அதுவே அளவோடு பெற்று இதுவரை நிறைவோடு வாழக் காரணமாயிருந்தது.


ஒரு முறை வாழ்க்கையில் வேறு பெண்களை நினைத்திருக்கிறீர்களா என்று கேட்டபோது ‘ என் மனம் ஒரு ஃபிலிம் நெகடிவ் போன்றது. ஒரு முறைதான் எக்ஸ்போஸ் ஆகும். நீதான் எக்ஸ்போஸான அந்தபடம் “என்பார்.

நான் மட்டும் என்னென்னவோ எண்ணிக் கொண்டு பிதற்றிக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கென்ன ஒரு கவலையுமில்லாமல் போய்ச் சேர்ந்து விட்டீர்களே என்று மீண்டும் அழத்துவங்கி விட்டாள் நான் இற்ந்தால் யாரும் அழக்கூடாது. நான் என் கடமைகளைச் செய்துவிட்டேன். இன்னும் ஜீவித்திருப்பது அடுத்தவருக்கு தொல்லையாய்த்தான் இருக்கும்என்பார்..தனிப்பட்ட முறையில் எந்த தேவையும் எதிர்பார்ப்பும் இல்லாதவர். ஆனால் அவர் செலுத்திய அளவில் பாதி அன்பாவது கிடைப்பதில்லையே என்ற ஏக்கம் எப்போதும் உண்டு. அன்பை வெளிப்படையாகக் காட்டுபவர் எல்லோரும் அதுபோல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்ததில் ஆச்சரியம் இல்லை.


நினைவுகள் போட்டிபோட்டுக் கொண்டு வருகின்றன. சில அந்தரங்கமானவை . வாய்விட்டுக் கதற முடியவில்லை. ‘ரயில் கிளம்ப இன்னும் இரண்டு நிமிஷங்களே உள்ளன ‘ என்று வண்டி ஏற்றிவிட வந்தவர்கள்  இல்லாமல் எதிர்பாராத விதமாய்ப் போய்ச் சேர வேண்டும் என்ற அவர் ஆசை நிறைவேறிவிட்டது. அது ஒரு வகையில் நல்லதுதான். அவரால் அவரது தனித்தன்மையை விட்டு விட்டு எங்கும் இருக்க முடியாது. அது தந்தையர் குணம்போலும். தாயானவள் அனுசரித்துக் கொண்டு போவாள்.உன்னை விட்டு என்னால் எங்கும் இருக்கமுடியாது. உனக்கு முன்னால் நான் போய்ச் சேரவேண்டும் . இல்லை நாம் இருவரும் ஒரே நேரத்தில் போக வேண்டும் என்பாரே. அவர் போய் தான் மட்டும் இன்னும் இருக்கிறோமே என்னும் ஆற்றாமை அலைக்கழிக்க மீண்டும் கதறுகிறாள்.

பெண்கள் வட்டத்தைப் போன்றவர்கள். ஆதி அந்தம் தெரிந்து கொள்வது மிகவும் கடினம். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் பக்குவம் படைத்தவர்கள். ‘ என்னைப்போல் plan your work and work your plan என்று இருப்பவர்கள் அல்லஎன்று ஏதேதோ சொல்வாரே. அவருடைய எந்த குணம் குறை கொண்டிருந்தது என்று சொல்வதே கடினம். ஆங்... அந்த முன் கோபம்தான் நம்முடைய எண்ணங்களையும் சொல்ல விடாமல் தடுக்கும். அதற்காக அன்பு இல்லாதவர் என்றோ ஆணாதிக்கம் கொண்டவர் என்றோ கூற முடியாது.மனசாலும் பெச்சாலும் செய்கையாலும் யாருக்கும் தீங்கு செய்யக் கூடாது என்பாரே.


வாயுவேகம்  மனோவேகம் என்பார்கள். வாயு வேகத்தைவிட மனோவேகம் அதிகம். ஒரு சில வினாடிகள் இருக்குமா, ரங்கசாமி குப்புற வீழ்ந்து.?அவன் போய்ச் சேர்ந்துவிட்டான் என்ற நினைப்பில் எத்தனை எத்தனை எண்ணங்கள்.....ஏதோ அசைவு தெரிகிறதே என்று பார்த்தால்... ரங்கசாமி கண்விழித்துப் பார்த்து “ ஏனம்மா அழுகிறாய். நான்தான் அவனை எட்டி உதைத்து விட்டேனேஎன்று கூறியபடி  சிரிக்கிறான்......!

நான் விடும் மூச்சுக் காற்று , என் ஜீவாத்மா அந்தப் பரமாத்மாவுடன் அந்தகாரத்தில் ஐக்கியமாகு முன்னே சிறிது நேரம் இங்கேயே உலாவி இருக்க வேண்டும். நீ படும் துக்கங்களைத் தாங்க முடியாமல் மீண்டும் என் உடலில் புகுந்து கொண்டிருக்க வேண்டும். நீயில்லாமல் நானில்லை நானில்லாமல் நீயில்லை. வா... என்னோடு நீயும் வா  அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. “ இருங்கள்... இருங்கள் .. நானும் கூட வருகிறேன்..என்று கூறியபடி அவனை அணைக்கிறாள். சரிந்து விழுகிறாள்.

நடந்தது ஏதும் புரியாமல் இவர்களை இந்த கோலத்தில் பார்த்தவர்கள். அவரவர் கற்பனைக்கேற்றபடி கதைக்கிறார்கள்.  
---------------------------------------------------------------  ...
 

 
 
 
 

   
 



செவ்வாய், 8 ஜனவரி, 2013

உரத்த சிந்தனைகள்.


                                    உரத்த சிந்தனைகள்.
                                    ---------------------------



இந்தப் பதிவு உங்களைப் பற்றியோ என்னைப் பற்றியோ அல்ல. நம்மைப் பற்றியது.. நம் நாட்டின் நிலையைப் பற்றியது. நம் சமூகம் குறித்தும் நாம் பின் பற்றும் வாழ்க்கை முறையைப் பற்றியும் சிலமணித் துளிகள் சிந்திக்கக் கோருவது..
ஒரு கொசு கடித்தால் முதலில் நாம் தேடுவது கொசுவத்திச் சுருளோ கொசுவை விரட்ட ஏதாவது repellent- ஓ  தான். நம்மைப் பரிபாலிக்கும் நகர சபையை ஏன் நாம் ஒன்றும் கேட்பதில்லை.?
குழாயில் வரும் தண்ணீரைக் குடிக்க நமக்கு தைரியம் இல்லை. பாட்டில் நீரையோ, அல்லது ஏதாவது சுத்திகரிக்கும் முறையையோதான் நாடுகிறோம். குழாயில் வரும் நீர் குளிக்கவும் துணி துவைக்கவும் மட்டும்தான் பிரயோசனப் படுமா.?குழாயில் குடிக்கவும் சமைக்கவும் நீர் பெறும் உரிமை இல்லையா.?
மின்தடை என்றால் இன்வெர்டர் அல்லது தடையில்லா மின்சாரம் கிடைக்க ஏதாவது ஜெனெரேடரையோ ஏன் நாடவேண்டும். மின் கம்பிகளின் மூலம் மின்சாரம் கிடைக்கப் பெறுவது நமது உரிமை அல்லவா. ?


வாகனங்களில் நல்ல சாலைகளில் பயணிக்க டோல் வரி வசூலிப்பவர்கள், ,குண்டுங் குழியுமான சாலைகளில் பயணிக்க வைப்பதை கேட்க வேண்டாமா.?
வீட்டுவரி வசூலிப்பவர்கள் மிகச் சாதாரணமான அடிப்படை வசதிகள் செய்து தரல் அவசியம்ல்லவா.?
தொலைக் காட்சிகளில் வாய் கிழியப் பேட்டி எடுப்பவர்கள் நடுநிலையில் செய்திகள் தர வேண்டாமா?

சட்டங்களை இயற்றுபவர்கள் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப் பட்டு நடக்க வேண்டாமா?வரி ஏய்ப்பவனும் , கொள்ளை அடிப்பவனும், குடிகாரனும், கற்பழிப்பவனும்  கொலைகாரனும் எப்படி சட்டமன்றத்திலோ, பாராளுமன்றத்திலோ அங்கம் வகிக்கலாம்?
அப்படி நிலை கெட்ட மனிதர்கள் பேசுவதையும் தலைமை வகிப்பதையும் கல்லூரிகளும் மேலாண்மை பயில்விக்கும் கலாசாலைகளும் வாய் பிளந்து கேட்டு கை தட்டி ஏன் ஆரவாரிக்க வேண்டும்?
குற்றம் செய்யும் சாதாரணக் குடிமகனுக்கு சட்டம் துரிதமாக செயல்பட்டு
நீதி வழங்குகிற் மாதிரி பதவியில் இருப்பவருக்கும் பணம் இருப்பவருக்கும் ஏன் விசாரணைகளும் தண்டனைகளும் வழங்குவதில் அசாதாரண கால தாமதம்.?

இப்படி கேள்விகள் கேட்கும் நாம் எப்படி இருக்கிறோம்.? சர்வ சாதாரணமாக விதிகளை மீறுகிறோம். சாலை விதிகளை மீறி ரூ.நூறு கொடுக்கத் தயாராய் இருக்கும் நாம் லஞ்சம் பற்றிப் பேசலாமா.? எந்த ஒரு வேலைக்கும் ஒரு விலை கொடுத்து சாதிப்பதை தயங்காமல் செய்யும் நமக்கு லஞ்சத்தை பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது. பள்ளிகள் வியாபாரகூடமாகி விட்டது என்று கூக்குரல் இடும் நாம் நம் பிள்ளைகளை அங்கு சேர்க்க எந்தவிலையும் கொடுக்கத் தயாராக இருப்பதேனோ. இலவசங்கள் கொடுத்து நம்மை ஏமாற்றும் அரசை நாம் மீண்டும் மீண்டும் அரசு கட்டிலில் அமர்த்துவது ஏனோ.?வாழ்க்கையில் மதிப்பீடுகள் மறைந்து விட்டன என்று குறை கூறும் நாம் அவற்றை மீட்டெடுக்க என்ன செய்கிறோம். சிறு துளி பெரு வெள்ளம் என்பதை சின்னச் சின்ன நல்ல பண்புகளைப் பேணவும் வளர்க்கவும் செய்தால் ஒட்டு மொத்தமாக ஒரு ஒழுங்கான சமுதாயம் மலர வழியாகாதா. ?CHARITY BEGINS AT HOME. என்று நாம் உணர வேண்டாமா..SMALL THINGS MAKE PERFECTION. BUT PERFECTION IS NO SMALL THING. என்று அறிவது அவசியமல்லவா. லஞ்சத்துக்கு எதிராக ஒரு முதியவர் தலைமையில் போராட முன் வந்தவர்கள், அந்தப் போராட்டத்தை ஏன் நிறுத்த வேண்டும். WRONG MEANS WERE CHOSEN TO MEET THE RIGHT ENDS என்று புரிந்து கொண்டோமென்றால் சரியான பாதையை த் தேர்ந்தெடுக்கலாமே. ஒரு பெண் சீரழிக்கப் பட்டாள் என்று தெரிந்தவுடன் பொங்கி எழுந்த இளைய சமுதாயம் VESTED INTEREST  கொண்டவர்கள் போராட்டத்தைக் கையில் எடுப்பதால் விளைந்த நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள வில்லையா.?போராட்டங்கள் தொடர வேண்டும். நம் செயலின் மீது நம்பிக்கை வேண்டும். ஆக, நம் இலக்கு தெரிந்து நாமும் நல்லவர்களாக இருந்து போராடல் அவசியம். WE SHOULD NOT REST TILL THE GOAL IS ACHIEVED.
-------------------------------------------------------- .  .  
 . .